Saturday, 25 May 2013

தீமைகளின் திறவுகோல் மது



மதுவின் தீங்கு எவ்வளவு கொடியது என்பதை கண்கூடாகக் கண்ட பிறகும் கூட அதை விலக்கிக் கொள்வதற்கு உலகம் முன்வருவதாகத் தெரியவில்லை. மதுவின் மூலமாகத் தான் எல்லா குற்றங்களும் நடக்கின்றன. சாராயத்தில் ஒரு பக்கம் பொருளாதார இலாபம் கிடைக்கிறதென்றால் மறுபக்கம் ஒட்டுமொத்த சமூகத்திற்கும் ஏற்படும் இழப்பு, விபச்சாரம் செய்து எய்ட்ஸை வாங்கிக்கொள்வது போலத்தான். இன்று நடக்கும் ஒவ்வொரு பெரிய பெரிய குற்றத்திற்கும் வெளிப்படையாகவோ மறைமுகமாகவோ மதுவும் ஒரு முக்கிய காரணமாகவே இருக்கும். இன்று நடக்கும் சாலை விபத்துகளுக்கு முக்கியக் காரணம் மதுவும் ஒன்று. இன்று அவ்வப்போது நடக்கும் சோதனைகளில் மது குடித்துவிட்டு ஓட்டும் விமானிகளும் சிக்குகின்றனர். 
மதுவும் சாலை விபத்தும்:
சாலை நெட்வொர்க், சாலை மேம்பாடு மற்றும் பராமரிப்பு குறித்த ஆய்வுகள் செய்யக்கூடிய சர்வதேச சாலை கூட்டமைப்பு (ஐ. ஆர். எஃப்) என்ற தனியார் அமைப்பு தற்போது இந்தியாவில் அதிகரித்து வரும் சாலை விபத்துகள் குறித்த ஓர் ஆய்வினை மேற்கொண்டுள்ளது. இது குறித்து இதன் தலைவர் கே. கே. கபிலா கூறியுள்ளதவாது: 2001 - 2003 ஆம் ஆண்டில் நிகழ்ந்த சாலை விபத்துக்களை 1999 - 2000 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது ரூ 50 ஆயிரம் கோடி அளவுக்கு இழப்பீடு ஏற்பட்டுள்ளது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மூன்று சதவீதமாகும். ஆனால் 12 ஆண்டுகளில் இது இரண்டு மடங்காக அதாவது ரூ 1 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த 2010 ஆம் ஆண்டு தேசிய குற்ற ஆவணக்காப்பகத்தின் அறிக்கையின் மூலம் சாலை விபத்துக்களால் ஒரு லட்சத்து முப்பதாயிரம் பேர் பலியாகியுள்ளதாகத் தெரிகிறது. இதற்கான முக்கியக்காரணங்களில் மது குடித்து விட்டு வாகனம் ஓட்டுவதும் ஒன்று, என்று அவர் கூறினார். (பள்ளிவாசல் டுடே - பிப் 26 - மார்ச் - 3; 2012.) இன்று மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் அபராதம் மற்றும் சிறைத்தண்டனை பற்றிய சட்டத்திருத்தம் ஓரளவுக்கு மனஆறுதலைத் தந்தாலும் மது விலக்கை முழுமையாக அமுல்படுத்தாத வரை மக்களின் உயிருக்கோ உடமைக்கோ மானம் மரியாதைக்கோ முழு உத்தரவாதம் வழங்கமுடியாது.
ஒருபக்கம் சட்டத்திருத்தம் நடைபெறுகிறது. மற்றொரு புறம் மதுபான விற்பனை இலக்கை அடைய டாஸ்மாக் நிர்வாகம் தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த 2010-11 ல் முந்தைய ஆண்டைவிட கடந்த ஆண்டு வருவாய் வளர்ச்சி 19.74 சதவீதம் அதிகரித்தது. ஆனால் இந்த ஆண்டு (2011-12) இது வரை  அது போன்ற வளர்ச்சி ஏற்படவில்லை. எனவே இம் (மார்ச்) மாத்துக்குள் எதிர்பார்த்த இலக்கை அடைய நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. (தினமலர் - 5.3.2012) அதிகப்படியான மதுவை விற்பனை செய்யாவிட்டால் வேலையிழக்க நேரிடும் என்றும் எச்சரிக்கப்பட்டிருக்கிறது. மது சமுதாயத்திற்கு அவ்வளவு தேவையான சரக்கைப் போல் அறிமுகப்படுத்தும் அரசு தேர்தல் சமயங்களில் மட்டும் ஏன் மதுக்கடைகளை மூட உத்தரவிடுகிறது? மற்ற காலங்களில் அடிதடியில் ஈடுபட்டு சண்டையிட்டுக்கொள்வதை அரசே அதரிக்கிறதா?   
20 ஆண்டுகளில் 20000 மரணம்:
மேற்கத்திய நாடுகளில் அதிகரித்து வரும் மதுப்பழக்கத்தினால் ஏற்படப் போகும் அதிர்ச்சிகரமான தாக்கத்தைப் பற்றி லண்டனின் புகழ்பெற்ற கல்லீரல் மருத்துவர் ஷேரோன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அடுத்த இருபது ஆண்டுகளில் லண்டனில் மட்டும் மதுவின் காரணமாக ஏற்படக்கூடிய கல்லீரல் பாதிப்பினால் சுமார் 7000 பேர் மரணிப்பர். சுமார் 14000 பேர் குடியினால் ஏற்படக்கூடிய இதய நோய், கேன்ஸர், விபத்துகள், வன்முறைகள் மற்றும் தற்கொலை மூலம் மரணிப்பர், என்று அவர் கூறியுள்ளார். மேலும் கடந்த எட்டு ஆண்டுகளில் 1, 20, 000 பேர் மதுவினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளுக்காக மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே லண்டனின் மருத்துவர்கள் மக்களின் வாழ்க்கையைப் பாதுகாக்க வேண்டுமென்றால் மது மற்றும் போதைப் பொருள்களின் விலையை உயர்த்தி, அவற்றை மக்கள் வாங்கமுடியாமல் செய்யவேண்டுமென அரசுக்கு கோரிக்கை வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வளவும் நடந்த பிறகும் மதுவை ஒழிக்க வேண்டும், என்று சொல்வதற்கு யாருக்கும் தைரியம் வரவில்லை. என்னை ஒரு மணி நேரத்திற்கு இந்தியாவில் சர்வாதிகாரியாக நியமித்தால், நான் செய்யும் முதல் காரியம் கள், சாரயக் கடைகள் அனைத்தையும் நஷ்ட ஈடு தராமலேயே மூடிவிடுவேன், என்று கூறினார் காந்தி. (நூல்: மருத்துவ இதயம் பேசுகிறது) அவர் இன்று இருந்திருந்தால் என்ன செய்திருப்பாரோ?!     
குற்றங்களை ஈன்றெடுக்கும் மது:
கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற குற்றங்கள் ஒருபுறம். குடிகாரர்கள் உடல் வியாதி, தற்கொலை போன்றவற்றின் காரணமாக தங்களுக்குத் தாங்களே தீங்கிழைத்துக்கொள்வது மறுபுறம். சாராயம், மானக்கேடான ஒழுக்கக்கேடான எல்லா காரியங்களுக்கும் தாய், எல்லா பாவங்களிலும் மகாக்கொடியது. எவன் சாராயத்தைக் குடித்தானோ அவன் தொழுகையை விட்டுவிடுவான். தன்னுடைய தாய், சின்னம்மா, மாமி ஆகியோருடன் தவறாக நடந்து கொள்வான், என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (தப்ரானீ கபீர்) மதுவை விட்டும் தவர்ந்துகொள்ளுங்கள்! ஏனெனில் அதுதான் எல்லா தீங்குக்கும் திறவுகோல் என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஹாகிம்)
மதுவும் கொலையும்:
இன்று எந்த குற்றம் நடக்காமல் இருக்கிறது? சிறு வயதிலேயே கொலைவெறியுடன் வளர்கிறார்களே! இதெல்லாம் எப்படி? 13 வயது சிறுவர்கள் இரண்டு பேர் திருடி பணம் சம்பாதித்தனர். கையில் பணம் வந்தவுடன் மது அருந்தும் ஆசை ஏற்பட்டது. பிறகு, திருட்டும் குடியும் தொடர்கதையாகிவிட்டது. வயதோ 13. இந்நிலையில் ஒரு பையனின் பெற்றோருக்கு தகவல் தெரிந்து கண்டித்திருக்கிறார்கள். எனவே, அவன் நான் இனி திருடமாட்டேன், என்று தன் நண்பனிடம் கூறியுள்ளான். எனினும் மற்றொருவன் இதை ஏற்றுக்கொள்ளவில்லை. அவனை வற்புறுத்தி அழைத்து குடிக்க வைத்தான். பிறகு திருட அழைத்தான். அவன் மறுக்கவே அவனை உதைத்து கழுத்தை நெறித்து கொன்றுவிட்டான். இது சமீபத்தில் வெளியான தமிழக பத்திரிக்கைச் செய்தி. (மாலை மலர் 16-02-2012) சிறுவயதிலேயே மதுவைக் குடித்துவிட்டு கொலை செய்யும் தைரியம் பிறந்துவிடுகிறது.  மதுவைக் குடித்துவிட்டு இரவு நேரங்களில் வாகனங்களுக்கு நெருப்பு வைப்பதையும் விளையாட்டாக செய்து கொண்டு திரிபவர்களும் ஏராளம். மது குடிப்பதற்கு பணம் இல்லாததால் குழந்தைகளைத் திருடும் குடிகாரர்களைப் பற்றியும் அவ்வப்போது நாளிதழ்களில் வாசிக்கிறோம். 
மதுவும் ஒழுக்கக் கேடும்:
இது போன்ற குற்றங்களில் ஈடுபடுவதற்கு அரசின் சாராய விற்பனை இளைஞர்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கிறது. டாஸ்மாக் இல்லையானால் கள்ளச்சாரயத்தின் மூலம் உயரிழப்பு ஏற்படுகிறது, போன்ற வாதமெல்லாம் கதைக்குதவாது. அதை தடுப்பதற்கு வேண்டிய ஏற்பாடுகளை நிர்வாகம் யோசிக்கலாம். அப்படியே உயிரிழப்புகள் ஏற்பட்டாலும் இன்று மதுவின் மூலம் நடக்கும் குற்றங்களும் கொடுமைகளும் சகித்துக் கொள்ளமுடியாதவை. உயிரிழப்பு அவனோடு முடிந்து போய்விடும். ஆனால், இன்று ஒட்டுமொத்த சமூகமும் பாதிக்கப்பட்டிருக்கிறது. குடிகாரர்களுக்கு மட்டும் இழப்பு ஏற்படுவதில்லை. அவரைச் சார்ந்த அனைவரும் பாதிக்கப்படுகின்றனர். பத்து வயது பிள்ளையை பக்கத்தில் வைத்துக்கொண்டே தாயும் தந்தையும் மது அருந்திவிட்டு போதையில் சாலையில் ஒரு புறம் கிடக்க, பிள்ளை மட்டும் என்ன செய்வதென்று தெரியாமல் அழுது கொண்டிருக்க... இது போன்ற உள்ளத்தை அதிரச் செய்யும் நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கிறது. விபச்சார விடுதிகளுக்கு மது தான் உற்சாகமூட்டும் பானமாகத் திகழ்கிறது. முன்பெல்லாம் அன்றாட வேலை முடிந்து போகும் போது ஆண்கள் தான் மது அருந்திவிட்டு வீட்டுக்குச் செல்வார்கள். இப்போது பெண்களும் ஆண்களோடு சோந்து அந்த பாதையில் போய்க் கொண்டிருக்கிறார்கள். இளம் பெண்களும் மது அருந்துவதை அன்றாட வேலையாக ஆக்கிவிட்டனர். சமீபத்தில் தமிழகத் தலைநகரில் ஐந்து ஆண்கள் மது அருந்தி விட்டு இளம் வயது பெண்ணுக்கும் மதுவைக் கொடுத்து கற்பழித்த சம்பவம் நடந்திருக்கிறது. (தினமலர் - 10-12-2012) இது போன்ற சம்பங்கள் இன்று சகஜமாகிவிட்டன. இன்று நிச்சயதார்த்தம், கல்யாண முடிவு, விவாகரத்து முடிவுகள் போன்றவை பார்களிலும் எடுக்கப்படுகிறது. பிறந்த நாள் பார்ட்டி, விவாகரத்து பார்ட்டி, குழந்தை பிறந்த பார்ட்டி என்று எல்லாவற்றுக்கும் மது விருந்து வைக்கிறார்கள். (தினத்தந்தி) அந்த அளவுக்கு மது மக்களுடன் ஒட்டிவிட்டது.
மதுவும் இஸ்லாமும்:
இஸ்லாம் மதுவைச் சாதாரணமாகத் தடை செய்யவில்லை. மதுவின் சிந்தனையே இல்லாமல் வாழும் விதத்தில் இஸ்லாத்தின் போதனைகள் அமைந்துள்ளன. இது தொடர்பாக வரும் இறை வசனங்கள் மதுவின் விகாரத்தை மனதில் அழுத்தமாகப் பதிய வைக்கின்றன. ஈமான் கொண்ட இறைவிசுவாசிகளே திட்டமாக மது, சூதாட்டம், பலிப்பீடங்கள், குறிபார்க்கும் அம்புகள் ஆகியவை அருவருக்கத்தக்க ஷைத்தானின் செயல்களாகும். எனவே, அவற்றைத் தவிர்த்துக்கொள்ளுங்கள். இதன் மூலம் நீங்கள் வெற்றி பெறலாம். (அல்குர்ஆன் 5:90) அல்லாஹ் மதுவை  இணைவைப்புடன் இணைத்து கூறுகிறான், என்றால் அது எவ்வளவு பெரிய கொடிய குற்றமாக இருக்கும்?!
மது ஈமானின் எதிரி:
இறைவிசுவாசியாக இருக்கும் நிலையில் யாரும் மது அருந்த மாட்டார், என்று நபி (ஸல்) அவர்கள் கூறி (புகாரி, முஸ்லிம்) மதுவும் ஈமானும் ஒன்று சேரமுடியாது, என்று எச்சரித்திருப்பது சாதாரணமானதல்ல. இன்று முஸ்லிம்களிடத்தில் எந்த அளவுக்கு மது பரவலாகிவிட்டது, என்பது சொல்லித் தெரிய வேண்டிய ஒன்றல்ல. தொடர்ந்து மது அருந்திய நிலையில் மரணிப்பவன் ஒரு சிலைவணங்கியைப் போல் அல்லாஹ்வைச் சந்திப்பான், என்றும் (அஹ்மது) அல்லாஹ்வையும் மறுமையையும் நம்பியவர் மது அருந்த வேண்டாம். அல்லாஹ்வையும் மறுமையையும் நம்பியவர் மது அருந்தும் சபையில் இருக்கவும் வேண்டாம் என்றும் நபியவர்கள் எச்சரித்திருக்கிறார்கள். (தப்ரானீ)      போதையூட்டக்கூடிய ஒவ்வொரு பொருளும் விலக்கப்பட்டதே! (முஸ்லிம், அஹ்மது) எதை அதிகமாகக் குடித்தால் போதை ஏற்படுமோ அதைக் குறைவாகக் குடிப்பதும் ஹராம் தான், (அஹ்மது, அபூதாவூத்) என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். சாராயத்தின் சிந்தனையே ஏற்படக்கூடாது, என்பதற்காக ஆரம்பத்தில் சாராயத்திற்காக பயன்படுத்தப்படும் பாத்திரங்களையும் உபயோகிக்கக் கூடாது, என்று நபியவர்கள் தடை செய்தார்கள்.   இஸ்லாம் சாரயம் குடிப்பதைத்  தண்டனைக்குரிய குற்றமாகக் கருதுகிறது. சாரயம் குடிப்பது மட்டுமல்ல. அதைத் தயாரிப்பவன் அதைக் குடிக்கக் கொடுப்பவன், அதை எடுத்துச்செல்பவன், அவனிடமிருந்து பெற்றுக்கொள்பவன், அதை விற்பவன், வாங்குபவன், என சாராயம் தொடர்பான பலரையும் நபி (ஸல்) அவர்கள் சபித்திருக்கிறார்கள். (திர்மிதீ) மனிதன் மதுவுடனான எல்லாத் தொடர்புகளையும் துண்டித்துக் கொள்ள வேண்டும், என்றே மார்க்கம் விரும்புகிறது.
உற்சாகத்திற்காக மது:
யமன் நாட்டிலிருந்து வந்த ஒரு நபித்தோழர் ஒருவர் நாங்கள் குளிர்ப்பிரதேசத்தில் வாழ்கிறோம். அங்கு கடுமையாக உழைக்கவும் வேண்டியிருக்கிறது. இந்நிலையில் நாங்கள் (கோதுமையிலிருந்து தயாராகும்) ஒரு பானத்தைக் குடித்து எங்களுடைய கடுமையான வேலைகளுக்கும் எங்களுடைய நாட்டின் குளிருக்கும்  உற்சாகத்தைப் பெற்றுக்கொள்கிறோம், (இது கூடுமா?) என்று கேட்டார். அதற்கு நபியவர்கள், அது போதையூட்டக்கூடிய பானமா? என்று கேட்டார்கள். ஆம் என்று பதில் கூறவே அப்படியானால் அதை விட்டும் ஒதுங்கிக்கொள்ளுங்கள், என்று கூறினார்கள். (அபூதாவூத்) இன்றும் கடுமையான உழைப்புக்கு மது அவசியம் என்றும் களைப்பைத் தீர்ப்பதற்கு மது அருந்துகிறோம், என்றும் சொல்பவர்கள் இந்த செய்தியைக் காதில் போட்டுக்கொள்ளட்டும். மது அருந்தாமல் வாகனம் ஓட்டுவது சாத்தியமில்லை, என்று சொல்பவர்களுக்கு இந்த நபிமொழி போதுமானதாக இல்லையானால் தண்டனைதான் ஒரே வழி.
தோல்வியுற்ற வல்லரசு:
உலகின் வல்லரசாகிய அமெரிக்காவும் மதுவிலக்கை அமுல்படுத்துவதில் தோல்வி கண்டுவிட்டது. மது விலக்கை அறிவித்துவிட்டு அதை நடைமுறைப்படுத்துவதற்காக கோடிக்கணக்கான டாலர்களைச் செலவு செய்தது. கோடிக்கணக்கான பக்கங்களில் நூற்கள் எழுதப்பட்டன. இவையனைத்தையும் செய்த பிறகும் அந்நாடு அதில் வெற்றிபெற முடியவில்லை. மது விலக்கை திரும்பப் பெற்றுக்கொண்டுவிட்டது. இன்று மதுவின் தீமைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டிருப்பது போல் இதற்கு முன்பு எப்போதும் ஆய்வு செய்யப்பட்டதில்லை. இன்று அதன் தீங்கு பற்றி அறியப்பட்டிருப்பது போல் இதற்கு முன்பு எப்போதும் அறியப்பட்டதில்லை. அப்படியிருந்தும் மதுவை ஒழிக்க முடியவில்லை. ஆனால், இஸ்லாம் மது ஒழிப்புக்காக கோடிக்கணக்கில் செலவு செய்யவுமில்லை. கோடிக்கணக்கான பக்கங்கள் எழுதவுமில்லை. சில இறைவசனங்களும் சில நபி மொழிகளும் இது வரை உலக சரித்திரத்தில் நடந்திடாத ஒரு புரட்சியை நிகழ்த்திக் காட்டிவிட்டன. மது குடித்து பழகிவிட்டேன். விடமுடியவில்லை, போன்ற காரணங்களெல்லாம் ஏற்கத்தக்கதல்ல. அரேபியர்களைப் போல மதுப்பிரியர்கள் யாரும் இருக்க முடியாது. அரபியில் மதுவை அறிவிக்கும்  நூறு வார்த்தைகள் உள்ளன. தான் இறந்த பிறகும் தன்னுடன் மதுவையும் சேர்த்து அடக்கப்பட வேண்டும், என்று மரணசாஸனம் எழுதுபவர்களும் இருந்தனர். (நூல்: அல்கம்ரு தாவுன் வலைஸத் பிதாயின்)
சரித்திர சாதனை:
சாராயத்(துடன் வாழ்வ)தை விட மிகப்பிரியமான ஒரு வாழ்க்கை அரபுகளுக்கு இருக்கமுடியாது, என்ற நிலையில் சாராயம் ஹராமாக்கப்பட்டது. தடை செய்யப்பட்டவற்றில் சாராயத்தை விட அவர்களுக்கு எதுவும் மிகக் கடினமாக இருந்ததில்லை, என்று இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். ஆனால் மது ஹராமாக்கப்பட்ட வசனம் இறங்கியவுடன் மதீனாவின் வீதிகளில் சாராய ஆறு ஓட ஆரமப்பித்தது. சிலர் அதன் பாத்திரங்களை மண்ணைக் கலந்து தேய்த்து கழுவினார்கள். இன்னும் சிலர் அந்த பாத்திரங்களை உடைத்துவிட்டார்கள். பிறகு நீண்ட காலத்திற்கு மழை பெய்யும் பொழுதெல்லாம் வீதியில் மதுவின் துர்நாற்றம் வீசும். (தஃப்ஸீரெ ஹக்கீ)  சாராயம் ஹராமக்கப்பட்ட பின் எங்களில் சிலர் (சாராயத்தை விட்டும் முழுமையாக விலகுவதற்காக) உளூ செய்து கொண்டோம். சிலர் குளித்துக் கொண்டோம். உம்முசுலைம் (ரலி) அவர்களிடம் நறுமணம் வாங்கி பூசிக்கொண்டோம், என்று அனஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். (முஸ்னது அஹ்மது) நபித்தோழர்கள் சாராயத்தை விலக்கிக் கொள்வதில் இவ்வளவு உறுதியுடன் செயல்பட்டுள்ளார்கள். இது தான் உலக சாதனை. எனினும், இன்று நாம் இதை பெருமையாகப் பேசிக்கொண்டிருந்தால் மட்டும் போதாது. அந்த சாதனை வரலாற்றிற்கு சொந்தக்காரர்கள் மீண்டும் உடைக்கப்பட்ட மதுப் பாத்திரங்களை பொறுக்கிக் கொண்டிருக்கிறார்கள். மதுக்கிண்ணங்களை தேடி அலைவதில் முஸ்லிம்களும் மற்றவர்களுடன் போட்டி போட்டுக்கொண்டிருக்கிறார்கள். இந்நிலை மாறவேண்டும். முஸ்லிம்கள் உலகுக்கு முன்மாதிரியாகத் திகழவேண்டும்.                      

Tuesday, 21 May 2013

நன்றி! நன்றி!! நன்றி!!!

நன்றி! நன்றி!! நன்றி!!!
18. 5. 2013 சனிக்கிழமை அன்று யூசுபிய்யா அரபிக் கல்லூரியில் யூசுபிகளின் சந்தித்தல் சிந்தித்தல் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு நிகழ்ச்சியை வெற்றி பெறச்செய்த அனைத்து யூசுஃபிகளுக்கும் மற்றும் கலந்துகொண்ட அனைவருக்கும்) நன்றி. அத்துடன் இந்த நிகழ்ச்சி வெற்றி பெறுவதற்காக உள்நாட்டிலிருந்தும் வெளிநாட்டிலிருந்தும் துஆ செய்த இனிய உள்ளங்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். ஜஸாகுமுல்லாஹு கைரா.
நிர்பந்த காரணங்களால் கலந்து கொள்ள முடியாதவர்களைத் தவிர அனைத்து யூசுஃபிகளும் இதில் கலந்துகொண்டது அனைவருக்கும் மனநிறைவைத் தந்தது. காலை ஃபஜ்ர் முதல் இரவு ஒன்பது மணிவரை நிகழ்ச்சி நடைபெற்றது. எங்களின் ஆசான் அல்லாமா கீரனூரி (ரஹ்) அவர்களின் மறைவிற்குப் பிறகு நடைபெறும் முதல் நிகழ்ச்சியாக இது அமையப்பெற்றதால் ஹள்ரத் அவர்களின் வழிகாட்டல்களையும் ஹள்ரத் அவர்களுடன் தங்களுக்குக் கிடைத்த அனுபவங்களையும் மன நெகிழ்வுடன் யூசுபிகள் பரிமாறிக்கொண்டது, அனைவரையும் கண்கலங்கச் செய்தது. நிகழ்ச்சி நிரலில் அறிவித்த படி கருந்தரங்கம் இந்நிகழ்ச்சியில் முக்கிய அம்சமாக இருந்தது. யூசுஃபிகள் செய்ய வேண்டிய ஆக்கப்பூர்வமான சேவைகளைப் பற்றி பலரும் நல்ல பல கருத்துக்களை முன்வைத்தனர்.  நிகழ்வின் இறுதியில் யூசுபிய்யாவின் முதீர் - ஹள்ரத் அவர்கள் உருக்கமான முறையில் ஏறத்தாழ அரை மணி நேரம் உரையாற்றி துஆ செய்து யூசுபிகளை மனமகிழ்வுடன் வழியனுப்பி வைத்தார்கள்.

Saturday, 11 May 2013

யூசுஃபிகளின் சத்தித்த சிந்தித்தல் - நிகழ்ச்சி நிரல்



தாருல் உலூம் யூசுபிய்யா அரபிக்கல்லூரி,
பேகம்பூர், திண்டுக்கல் - 2.

அல்லாஹ் அளவிலா அருள் புரிவானாக!
அன்பிற்குரிய மௌலவி ............................ ................... ......... யூசுபி அவர்களுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) நலமறிய ஆவல். அப்னாயெ யூசுபிய்யா சத்தித்தல்- சிந்தித்தல் கலந்தாய்வுக் கூட்டத்தின் அழைப்பிதழ் கிடைக்கப் பெற்றிருப்பீர்கள். 18. 05. 2013 அன்று ஃபஜ்ர் முதல் இரவு 8.30 மணி வரை நிகழ்ச்சி நடைபெறும், என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

நிகழச்சி நிரல்
முதல் அமர்வு: சுபுஹ் தொழுகைக்குப் பின்
நிகழ்ச்சியின் நோக்கம் பற்றி தெளிவுரை, யூசுபிகளை அறிமுகப்படுத்தும் படிவம் பூர்த்தி செய்தல்

இரண்டாம் அமர்வு: கருத்தரங்கம் - 9.30 முதல் 1.45 வரை

கருத்துரை: 1 தலாக், குலஃ, ஃபஸ்க் பற்றி ஓர் ஆய்வு
(இவை பற்றி சிறு அறிமுகம் - எந்தச் சூழ்நிலையில் எந்த முறையில் இவற்றைப் பயன்படுத்த வேண்டும்? இது பற்றி மார்க்க வழிகாட்டலும் மக்களின் அலட்சியமும்)

கருத்துரை: 2 நம்பகமான ஹதீஸ்களை நம்ப மறுக்கும் நவீன வாதிகள்!
(நபிமொழியின் நம்பகத்தன்மைக்கான அளவுகோல் என்ன? வரம்புக்குட்பட்ட மனித அறிவுக்கு இறைத்தூதரின் இனிய செய்திகள் இணங்கிப் போக வேண்டுமா? இந்த சிந்தனையால் விளையும் தீமைகள்)

கருத்துரை: 3 வட்டியில்லா உலகம் காண்போம்!
(இஸ்லாமியப் பொருளாதாரத்தில் வட்டியின் நிலை. இன்றைய சிக்கல்களும் நிர்பந்தங்களும்- தற்காலிகத் தீர்வும் நிரந்தரத் தீர்வும்)

கருத்துரை: 4 வெள்ளி மேடையில் வென்று காட்டுவோம்!
(உலமாக்களின் ஜும்ஆ உரை எப்படி அமைய வேண்டும்? தலைப்புகளை எந்த அடிப்படையில் தேர்ந்தெடுப்பது? தகவல்கள் தேடலும் கோர்வையும் எப்படி அமைய வேண்டும்? நவீன தகவல் ஊடகங்களின் பயன்பாடு பற்றி,       மக்களின் மனோநிலையும் மார்க்கத்தின் மனோநிலையையும் இணங்கச் செய்வது பற்றி)

கருத்துரை: 5 ஃபிக்ஹ் இஸ்லாமியின் வரலாறும் இன்றைய தேவையும்
(நபி (ஸல்) அவர்களின் காலம் முதல் ஃபிக்ஹ் இஸ்லாமியின் வரலாற்றுச் சுருக்கம் - மத்ஹபு மறுப்பாளர்களின் புதிய தோற்றமும், தற்கால மஸாயில்களுக்கு தீர்வு காண்பதற்கான முறையும் - கூட்டாய்வுக்கான ஏற்பாடு)
யூசுபிகளின் அறிமுகம் 1.00 முதல் 1.45 வரை
ழுஹர் தொழுகை, மதிய உணவு


மூன்றாம் அமர்வு: அஸர் முதல் மக்ரிப் வரை
யூசுபிகள் செய்ய வேண்டிய சமுதாய சேவை பற்றி கலந்தாய்வு

நான்காம் அமர்வு: மக்ரிப் முதல் இஷா வரை

கருத்துரை: 6 மதரஸா கல்வியின் அவசியமும்
(மதரஸாக்களின் அவசியமும் மார்க்கக் கல்வியின் முக்கியத்துவமும்)

நிறைவுரையும் துஆவும்
குறிப்பு:
17.05.2013 வெள்ளிக்கிழமை இரவே வந்து விடுவது நல்லது.
வரும் தகவலை முன்னரே தெரியப்படுத்தவும்
இரண்டு பாஸ்போர்ட் அளவு போட்டோ கொண்டுவரவும்
இரத்தப் பிரிவு பற்றிய தகவல் (ப்ளட் குரூப்) கொண்டு வரவும்