Monday, 18 June 2018

மார்க்கக் கல்விக்கு தேவை, மனிதவளம்!


கல்வியறிவு மனித இனத்திற்கே உரிய சிறப்பம்சமாகும். கல்வியறிவு மனிதனை சமுதாயத்தில் தலை நிமிர்ந்து நிற்கச் செய்யும். கல்வியறிவு பெற்ற மனிதனை சமூகமே போற்றும். எழுத்தறிவும் படிப்பறிவும் இல்லாதவனை இந்த உலகம் எள்ளி நகையாடும். 

எழுத்தும் படிப்பும்
இஸ்லாமியப் பார்வையில் எழுத்தும் படிப்பும் மிகவும் இன்றியமையாதது. எழுதுகோல் என்ற பெயரில் குர்ஆனில் ஓர் அத்தியாயமே இறக்கயருளப் பட்டிருக்கிறது. குர்ஆன் எழுதுகோலின் மீது சத்தியம் செய்து சத்தியத்தை நிலைநாட்டுகிறது. 

பத்ரு யுத்தத்ததில் கைதிகளாகப் பிடிக்கப்பட்ட எதிரிகளில் யாருக்கு பிணைத்தொகை கொடுத்து விடுதலை பெற முடியவில்லையோ அவர்களிடம் முஸ்லிம் சிறுவர்களுக்கு கல்வியறிவு போதிக்க வேண்டும், என்று பணிக்கப்பட்டது. 

மார்க்கரீதியாகவும் எழுத்தும் படிப்பும் மிகப்பெரும் லாபத்தைப் பெற்றுத் தரும். யாரிடமாவது கடன் வாங்கினால் அதை எழுதி வைத்துக் கொள்வது மரபு. இறைநம்பிக்கை கொண்டோரே! ஒரு குறிப்பிட்ட தவணையை நிர்ணயித்து நீங்கள் உங்களுக்கு மத்தியில் கடன் கொடுக்கல் வாங்கல் மேற்கொண்டால் அதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள். (அல்குர்ஆன் - 2: 282) 

இந்த வசனத்தில் நீங்கள் ஒருவருக்கொருவன் கடன் ஒப்பந்தம் செய்தால் கடனுடைய அளவையும் தவணையையும் எழுதி வைத்துக் கொள்ளுமாறு உத்தரவிடப் பட்டிருக்கிறது. அந்த வசனத்தின் தொடரில் எழுதப்படிக்கும் ஆற்றலை யாருக்கு அல்லாஹ் வழங்கியுள்ளானோ அவர் அதனை எழுத மறுக்கக் கூடாது, என்று கூறி எழுதத் தெரிந்தவரிடம் கடனைப் பற்றிய விபரத்தை எழுதிக் கொடுக்குமாறு கேட்கப்பட்டால் அவர் எழுதித்தர மாட்டேன், என்று மறுத்துவிட வேண்டாம். அந்த எழுத்துத் திறமை அல்லலாஹ் அவருக்கு வழங்கிய உயர்தரமான அருட்கொடை என்பதை உணர்த்துகிறது. 

இஸ்லாமிய சரித்திரத்தில், வஹியை எழுதுபவர்கள் என்ற தனி பட்டியல் உண்டு. எழுத்துத் திறமையைக் கொண்டு குர்ஆனையும் எழுதிப் பாதுகாகத்துக் கொள்ள முடியும். ஹதீஸையும் எழுதிப் பாதுகாத்துக் கொள்ள முடியும். நபித்தோழர்களும் பின்னர் வந்த நல்லோர்களும் ஹதீஸை எழுதிப் பாதுகாத்தனர். எழுத்து என்பது தட்டச்சு உட்பட அதன் எல்லா வடிவங்களையும் எடுத்துக் கொள்ளும். 

துறை சார்ந்த கல்வி
உலகின் படைப்புகளைப் பற்றி சிந்திப்பது மார்க்கத்தின் பார்வையில் உயர்ந்த வழிபாடு, என்ற அந்தஸ்தைப் பெறுகிறது. விண்ணியல், மண்ணியல், தாவரவியல், உயிரியல், இயற்பியல் போன்ற துறைகளில் தேர்ச்சி பெற்றவர்களின் மூலம் அல்லாஹ்வுடைய படைப்புகளை மிக ஆழமாக சிந்திக்க முடியும். வானம் பூமியைப் பற்றி அவர்கள் சிந்திக்க மாட்டார்களா? இரவு பகலைப் பற்றி சிந்திக்க மாட்டார்களா? என்று பல விதங்களில் படைப்புகளைப் பற்றிய சிந்தனையை குர்ஆன் வலியுறுத்தாமலில்லை.  

தொழில் கல்வி
மருத்துவம், பொறியியல், விவசாயம் போன்ற பல கலைகளைக் கற்று மக்களுக்கு அருமையான சேவைகளைச் செய்ய முடியும். மருத்துவமின்றி உலகம் இயங்க முடியாது. விவசாயமின்றி உலகம் இயங்க முடியாது. தங்குவதற்கான வீடுகள், உணவு வகைகள், ஆடை வகைகள் போன்றவை இல்லாமல் உலகம் இயங்குவது கடினம். ஆட்சியராக நீதிபதியாக இருந்து மக்களுக்கு சேவையாற்ற முடியும். இதையெல்லாம் இஸ்லாம் நிராகரிக்காது. மக்களுக்குப் பணி செய்வதற்காக இந்தக் கலைகளைக் கற்பதும் கூட்டுக் கடமை எனும் ஃபர்ளெ கிஃபாயா, என்று சொல்ல வேண்டும். 

சீரான சிந்தனை
ஆனால், இன்று இது போன்ற துறைகளும் கலைகளும் பெரும் வருமானத்தை ஈட்ட வேண்டுமென்ற நோக்கத்திலேயே கற்றுத்தரவும் படுகிறது. கற்கவும் படுகிறது. அந்தக் கல்வியைப் பயின்றால் எதிர்காலத்தில் பிரகாசமான வாய்ப்பு இருக்கிறது. இந்தத் துறையில் எதிர்காலத்தில் எடுபடாமல் போய்விடும், போன்ற யோசனைகள் காதுகளில் விழுந்து கொண்டே இருக்கும். 

ஓத வைத்தால் உருப்படியான வருமானம் கிடையாது, படிக்க வைத்தால் கை நிறைய சம்பாதிக்கலாம். என்கிற மனோநிலை மட்டுமே உருவாக்கப் பட்டிருக்கிறது. இது ஃபர்ளெ கிஃபாயா. இதில் சமூக சேவை செய்ய முடியும். உலகின் இயக்கத்திற்கு என்னனுடைய பங்களிப்பும் இருக்கிறது, என்ற சிந்தனையெல்லாம் வருவது மிகவும் அரிது. ஏன்? இந்தக் கல்வியைக் கற்றுக் கொடுக்கும் கல்வி நிலையங்களே தொழில் மயமாகி நீண்ட காலம் கடந்து விட்டது. 

சிறப்பு நிபுணர்
எல்லாத் துறையிலும் எல்லோராலும் தடம் பதிக்க முடியாது. எல்லாத் துறையிலும் ஒவ்வொரு நபரும் திறமையாக வளர முடியாது. அது சாத்தியமும் இல்லை. நடைமுறையும் அதை உறுதிப் படுத்துகிறது. அனைவரும் ஐஏஎஸ் படிக்க முடியாது. எல்லாரும் இன்ஜீனியராக இருக்க முடியாது. அனைவரும் மருத்துவராக இருக்க முடியாது. 

மருத்துவர்களிலும் கூட உடலின் ஒவ்வொரு பகுதிக்கும் தனித்தனி ஸ்பெஷலிஸ்ட் உண்டு. யாருக்கு எந்தத் துறை வருகிறதோ அந்தத் துறையில் தடம் பதிக்க முயல வேண்டும். இந்நிலையில் உலகக் கல்வியிலும் மார்க்கக் கல்வியிலும் சமமாக தடம் பதிக்க வேண்டுமென்று சொல்லப்படுவதை எப்படி ஏற்றுக் கொள்வதென்று தெரிய வில்லை. 

ஒரு வக்கீலுக்கு மருத்துவம் பார்க்கத் தெரியுமா? ஒரு மருத்துவருக்கு நீதிமன்றத்தில் வாதாடத் தெரியுமா? ஒரு வியாபாரிக்கு வீடு கட்டத் தெரியுமா? ஒரு விண்ணியல் விஞ்ஞானிக்கு விவசாயம் செய்யத் தெரியுமா? ஒரு துறையில் ஸ்பெஷலிஸ்டாக இருப்பவர் மற்றொரு துறையிலும் அதே அளவுக்கு திறமையாக இருக்க முடியாது, என்பது நிதர்சனம். 

ஆலிம் அதிகாரி
ஓர் ஆலிம் ஐஏஎஸ் அதிகாரியாக இருக்க வேண்டும். நீதிபதியாக இருக்க வேண்டும். மருத்துவமும் படிக்க வேண்டும். ஓர் ஆலிம் டிகிரி பெற்றவராக இருக்க வேண்டும். இன்னபிற தொழிற்கல்வி பயின்றவராக இருக்க வேண்டும், என்ற வாதம் சரியாக இருக்குமேயானால் ஆலிம் என்பதற்கான இலக்கணத்தை வரையறுத்தாக வேண்டும். மார்க்கத்துறையில் நிபுணத்துவம் பெற்ற ஒருவர் மற்ற துறைகளில் தடம் பதிப்பது சாத்தியமற்றது, என்பது சிறுபிள்ளைக்கும் விளங்கும். அப்படியனால் உலகியில் துறையில் ஆலிம் தேர்ந்திருக்கிறாரென்றால் ஏதோ மார்க்கம் படித்தவராக இருக்க முடியுமே தவிர மார்க்க வல்லுணராக இருக்க முடியாது. 

கட்டாயக் கல்வி
மார்க்கத்தைப் படிப்பது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் கட்டாயக் கடமை. ஏழு வயது பையனுக்கு தொழுகைக் கல்வியைக் கற்றுக் கொடுப்பது பெற்றோரின் கடமை. வயதுக்கு வந்த ஒரு வாலிபர் தன்மீது அல்லாஹ்வின் கட்டளைகள் எவை எவை? என்பதை கண்டிப்பாக அறிந்திருக்க வேண்டும். குளிப்பு கடமையானால் என்னுடைய கடமையான குளிப்பை எப்படி குளிக்க வேண்டும், என்பதைத் தெரியாமல் அவர் ஒரு முழுமையான முஸ்லிமாக ஆக முடியாது. 

15 வயது வாலிபர் ரமளானை அடைந்தால் நோன்பின் சட்டங்களை அவர் படித்திருப்பது கட்டாயக் கடமை. அவருக்கு சிறு வயதிலேயே பொருளாதாரமும் நிறைவாக இருந்தால் ஜகாத் கொடுக்க வேண்டும். ஜகாத் தொடர்பான கல்வியும் கட்டயாக் கல்வியாகி விடும். திருமணம் செய்பவர் நிகாஹ் தொடர்பான கல்வியை கண்டிப்பாக படிக்க வேண்டும். வியாபாரம் செய்பவர் இஸ்லாம் தொடர்பான வியாபாரக் கல்வியை கற்றிருக்க வேண்டும். இவற்றைப் படிக்காவிட்டால் அவர் குற்றவாளியின் பட்டியலில் சேர்ந்து விடுவார். 

எனவே தான் நபி (ஸல்) அவர்கள் தலபுல் இல்மி ஃபரீளதுன் அலா குல்லி முஸ்லிம் - (இஸ்லாமியக்) கல்வியைத் தேடுவது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கட்டாயக் கடமை, என்று கூறினார்கள். 

இருகல்வியும் தேவை
பள்ளிக்கூடங்களில் பிள்ளைகளைப் படிக்க வைக்கும் பெற்றோர்கள் மேற்கூறப்பட்ட கல்வியையும் கற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும். தனியாக மக்தப் வழிக் கல்வி மூலம் கற்றுக் கொடுக்கலாம். அல்லது கிருத்தவர்கள் பள்ளிக்கூடங்கள் நடத்துவது போல் முஸ்லிம்களும் பள்ளிக்கூடங்கள் பரவலாகவும் தனித்தன்மையுடனும் நடத்த வேண்டும். 

அங்கு ஒரு முஸ்லிம் அறிந்திருக்க வேண்டிய மார்க்கச் சட்டங்களையும் முறையாகக் கற்றுக் கொடுக்க வேண்டும். மார்க்கக் கல்வியையும் இணைத்து போதிக்கக் கூடிய பள்ளிக்கூடங்கள், கல்லூரிகளை முஸ்லிம்கள் பரவலாக ஆரம்பித்து சிறப்பாக நடத்த வேண்டும். அதன் மூலம் பிள்ளைகள் உலகக் கல்வியையும் கற்றுக் கொள்வார்கள். அறிந்திருக்க வேண்டிய மார்க்கச் சட்டங்களையும் அறிந்து கொள்வார்கள்.

மார்க்கத்துறை
உலகியல் துறைகளுக்கு தனித்தனியாக விரும்பி படிப்பதற்கு மனித வளம் இருக்கும் போது மார்க்கவியலுக்கு மட்டும் ஏன் அப்படியொரு மனித வளம் இருக்கக் கூடாது. மருத்துவ நிபுணர்களுக்கு ஊரில் பஞ்சமில்லை. பொறியியல் வல்லுணர்களுக்கு பஞ்சமில்லை. இன்னும் எத்துணை துறைகள் இருக்கிறதோ அவற்றில் எந்தத் துறைக்கும் பஞ்சமில்லை. 

ஆனால், மார்க்கவியல் நிபுணர்கள் தேவையான அளவுக்கு இருக்கிறார்களா? என்பதை ஆழ்ந்து சிந்திக்க வேண்டும். பேச்சாற்றலையும் எழுத்தாற்றலையும் வளர்த்துக் கொள்வது மட்டுமே மார்க்கச் சட்ட வல்லுணர்களுக்கான இலக்கணமாக இருக்க முடியாது. மக்களுடைய பிரச்சினைகளுக்கான தீர்வுகளை உடனுக்குடன் சரியான முறையில் தீர்த்து வைப்பதற்கான சட்டவல்லுணர்கள் கொண்ட மனத வளம் இன்று முஸ்லிம் மக்கள் தொகைக்கு ஈடாக இருக்கிறதா? என்பதே கேள்வி. 

மனிதவளம் தேவை
மார்க்கக் கல்வியில் ஒரு வகை, மேலே கூறப்பட்டது போல் அனைத்து முஸ்லிம்களும் கற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயக் கல்வி. மற்றொரு வகை, மார்க்கவியல் தொடர்பான அனைத்துப் பகுதிகளையும் முழுமையாகக் கற்று சமுதாயத்தை இஸ்லாமிய வாழ்க்கையை விட்டும் சிறிதும் அடிபிறழாமல் இஸ்லாமியப் பாதையில் நடத்துவதற்கான கல்வி. மனித வாழ்க்கையின் எல்லா துறைகள் தொடர்பாகவும் இஸ்லாமிய வழிகாட்டல் என்ன? என்பதற்கான சட்டங்களையும் விளக்கங்களையும் கற்றுத் தேர்ந்து எப்பொழுதும் தயார் நிலையில் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தயாராக இருக்க வேண்டும். இதற்கான மனித வளம் நம்மிடம் குறைவு என்றே சொல்ல வேண்டும். 

இப்படிப்பட்ட நிலையை உண்டாக்குவதற்கு மத்ரஸா - அரபிக் கல்லூரிகள், சமுதாயம் ஆகிய இரு தரப்பும் தங்களைத் தயார் படுத்திக் கொள்ள வேண்டும். சமுதாயத்தில் ஒரு பிரிவினர் ஒவ்வொரு ஊரிலும் மார்க்கவியல் மட்டுமே படிக்கக்கூடிய நிலையை சமுதாயம் உருவாக்க வேண்டும். ஒவ்வொரு ஊரிலும் தேவையான அளவு மனித வளத்தை மார்க்கத்துறையில் மட்டுமே ஈடுபடுத்த வேண்டும். அவர்கள், நம்முடைய முன்னோர்களைப் போன்று மாபெரும் மார்க்கச் சட்ட வல்லுணர்களாக உருவெடுக்க வேண்டும். மார்க்கப்பணி செய்வதே அவர்களுடைய ஆயுள் பணியாக இருக்க வேண்டும். 

மத்ரஸாக்களின் பணி
மத்ரஸாக்களும் தங்களுடைய உள்கட்டமைப்பை முறைப்படுத்த வேண்டும். எண்ணிக்கை மட்டுமே குறிக்கோளாக இருக்கக் கூடாது. இதில் நாம் மத்ரஸாக்களை குறை கூறிட முடியாது. அதற்கான முழுக் காரணத்தை சமூகத்தின் அனைத்துப் பிரிவினர்களும் ஏற்றாக வேண்டும், என்பது இங்கு சொல்லித் தெரிய வேண்டிய ஒன்றல்ல. 

மாணவர்களுக்கு சட்டங்களை மட்டும் சொல்லிக் கொடுக்கக் கூடாது. திறமையை வளர்க்க வேண்டும். சட்டங்களை சொல்லிக் கொடுப்பதற்கு மட்டும் என்றால் அதற்கு இவ்வளவு பெரிய ஏற்பாட்டில் மத்ரஸாக்கள் தேவையில்லை. தமிழ் நூற்களை வாங்கிக் கொடுத்து அவரவர்களுடைய வீட்டிலேயே இருந்து படிக்கச் சொல்லிவிடலாம். அல்லது, அதற்கான பயிலரங்குகளின் மூலம் அறியச் செய்து விடலாம். 

மார்க்கவியல் மாணவர்களுக்கு சட்டங்களைப் படித்துக் கொடுப்பதுடன், தனித்திறமையை உருவாக்க வேண்டியது மத்ரஸாக்களின் பொறுப்பாகும். அரபி இலக்கணம், இலக்கியம், அரபி மொழியியல் குர்ஆன் விரிவுரை, ஹதீஸ் விளக்கவுரை உட்பட எல்லா பிரச்சினைகள் தொடர்பான சட்டங்களையும் ஏழாண்டு காலத்தில் கற்றுக் கொள்வதும் கற்றுக் கொடுப்பதும் நடைமுறை சாத்தியமற்றது. 

ஓர் ஆலிமுக்கு பிரச்சினைக்கான தீர்வு என்ன? என்று தெரியாமல் இருப்பதோ அல்லது நினைவில் இல்லாமல் இருப்பதோ தவறும் அல்ல. குறையும் அல்ல. அந்தப் பிரச்சினைக்கான தீர்வைத் தேடி முயற்சித்து தெரிந்து கொள்வதற்கான திறமை இல்லாமல் போவது தான் தவறும் குறையும். மக்கள் ஒரு சந்தேகத்தைக் கேட்கும் போது அதற்கான தீர்வு எங்கு கிடைக்கும்? எந்த வகையில் முயற்சித்தால் பெற்றுக் கொள்ள முடியும்? மார்க்க நூற்களில் எந்த நூலில் எந்த இடத்தில் தேடினால் அதற்கான தீர்வைப் பெற்றுக் கொள்ள முடியும்? என்பதை அறிந்திருக்க வேண்டும். 

அரபி அல்லது உர்தூ மொழிகளில் இருக்கக்கூடிய நூற்களை ஆய்வு செய்து முடிவு செய்வதற்கான மொழியறிவும் அடிப்படைச் சட்ட அறிவும் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட திறமையுயும் வலிமையையும் தான் மத்ரஸாக்கள் உருவாக்கிக் கொடுக்கின்றன. இதற்காகத்தான் மத்ரஸாக்கள் இயங்குகின்றனவே தவிர சில மார்க்கச் சட்டங்களைப் படித்துக் கொடுப்பதற்காக அல்ல. ஆனால், அப்படிப்பட்ட மார்க்க அறிஞர்கள் இன்று சமுதாயத்தில் தேவையான அளவுக்கு இருக்கிறார்களா? என்பதை யோசிக்க வேண்டும். பரீட்சையில் பாஸ் ஆகுவது பெரிய விஷயமல்ல. வளர வேண்டிய திறமை வளர்ந்திருக்கிறதா? என்பது தான் கேள்வி. யாராவது சொல்லக் கேட்டு மனதில் பதிய வைத்து பரீட்சை பேப்பரில் எழுதி விட முடியும். ஆனால், அவற்றை அவரே தேடிப்பெற்று விளங்கிக் கொள்ள முடியுமா? 

இதுபோன்ற முழுமையான திறமையை வளர்த்து விடுவதற்காகத் தான் மத்ரஸாக்கள் பாடுபடுகின்றன. அந்நிலையில் நூறு சதவீத வளர்ச்சியை அடைவதற்கு சமுதாயமும் மத்ரஸாக்களும் இணைந்து பல உள்கட்டமைப்புகளுடன் பாடுபட்டாக வேண்டும். இல்லையானால், மக்களின் மார்க்க வாழ்க்கைக்குத் தேவையான மார்க்க வல்லுணர்களின் மனித வளம் பற்றாக்குறை என்கிற குறை நீங்குவதற்கு வாய்ப்பில்லை. 

மார்க்கக் கல்வியை மட்டும் படித்து அதையே ஆயுள் பணியாகச் செய்தால் அவர்கள் பொருளாதார ரீதியாக சொந்தக் காலில் நிற்க முடியாதே! உலகியலையும் சேர்த்து படித்தால் தானே அவர் மார்க்கக் கல்வியின் மூலம் சம்பாதிக்க மாட்டார். தன்மானத்துடன் வாழ முடியும், என்று கேட்கலாம். சமுதாயத்தின் இஸ்லாமிய வாழ்க்கைக்கு தங்களுடைய ஆயுளை அர்பணிப்பவர்களுக்காக சமுதாயம் தங்களை அர்ப்பணிக்கத் தயாராக இல்லையானால், மக்களுக்கு தங்களுடைய சிறப்பான மறுமை வாழ்க்கையின் மீது அக்கரையில்லை, என்று தான் சொல்ல நேரிடும்.