இஸ்லாமியப் பொருளாதாரம்
தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ் போன்றவை இஸ்லாத்தின் முக்கியக்கடமைகள். அவ்வாறே வாழ்வியல்
சார்ந்த மற்ற துறைகளிலும் இப்படித்தான் செயல்பட வேண்டுமென்று மார்க்கம் வழி காட்டியிருக்கிறது.
நபி (ஸல்) அவர்களின் காலம் முதற்கொண்டு பொருளியலையோ குடும்பவியலையோ மார்க்கத்திற்கு
அப்பாற்பட்டதாக பார்க்கப்பட்டதில்லை. வியாபார நடைமுறைகளில் எவை கூடும்? எவை கூடாது? என்பது பற்றி நபித்தோழர்கள்
நபியவர்களிடம் வந்து விளக்கம் கேட்ட அதிகமான நிகழ்வுகளை ஹதீஸ் கிரந்தங்களில் காணமுடியும்.
எனினும் அந்நிய ஆக்கிரமிப்புகள் இஸ்லாமிய நாடுகளில் நுழைந்தபின் வெளிப்படையான வணக்கவழிபாடுகள்
மட்டுமே மார்க்கம் என்பது போன்ற மாயை தோற்றுவிக்கப் பட்டுவிட்டது. குறிப்பாக பொருளியலுக்கும்
மார்க்கத்திற்கும் எந்தத் தொடர்புமில்லை, என்ற சித்தாந்தம் ஆழ்மனதில் பதியவைப்பதற்கு மேற்குலகம்
பெருமுயற்சி செய்திருக்கிறது.
இஸ்லாத்தைப் பொறுத்தவரை பொருளாதாரம் என்பது வாழ்வாதாரம்
என்பதில் சந்தேகமில்லை. உணவைத் தேடி சந்திர மண்டலத்துக்குச் செல்லத் தேவையில்லை. மக்கள்
குடியிருக்கும் இடத்திலேயே - பூமியிலேயே வாழ்வாதாரத்தை அல்லாஹ் ஏற்படுத்திக் கொடுத்ததாகக்
குர்ஆன் கூறும். நாம் பூமியில் வாழ்வதற்கு திட்டமாக இடமளித்தோம். அங்கேயே உங்களுக்குத்
தேவையான வாழ்க்கைச் சாதனங்களையும் அமைத்துக் கொடுத்தோம். எனினும் நீங்கள் மிக மிகக்
குறைவாகவே நன்றி செலுத்துகிறீர்கள். (அல்குர்ஆன்
- 7:10) தன்னுடைய
செல்வத்தை (மற்றவர் பறிப்பதை விட்டும்) பாதுகாக்கும் சமயம் கொல்லப்பட்டால் அவர் ஷஹித்
- மார்க்கத்திற்காக தியாகம் செய்த வீரர் என்று நபியவர்கள் கூறினார்கள். ( முஸ்லிம்)
தானதர்மம் செய்வது நல்ல காரியம். அதற்காக நாம் ஏமாற்றப்பட்டோ அல்லது நம்முடைய கோழைத்தனத்தாலோ
நம்முடைய செல்வம் யாராலும் பறிக்கப்பட்டுவிடக்கூடாது. செல்வத்தை சரியான வழியில் சம்பாதித்தலும்
நல்ல வழியில் செலவழித்தலும் அதை ஒரு உயர்ந்த வணக்கமாக்கி விடுகிறது. தான் மற்றவர்களிடம்
யாசகம் கேட்காமல் இருப்பதற்காகவும் தன்னுடைய குடும்பத்தினருக்கு சம்பாதிப்பதற்காகவும்
அண்டை வீட்டாருக்கு கரிசனம் காட்டுவதற்காகவும் யார் ஆகுமாக்கப்பட்ட (ஹலாலான) உலகப் பொருட்களை தேடி சம்பாதிக்கிறாரோ
அவர் அல்லாஹ்வை கியாம நாளில் முகம் பௌர்ணமியைப் போல இருக்கும் நிலையில் சந்திப்பார்
என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (தப்ரானீ)
இஸ்லாமியப் பொருளாதாரத்தைப் பற்றி சுருக்கமாகச் சொல்வதானால்
அது ஹலாலாக இருக்க வேண்டும். அதை ஈட்டும்போது, அதை விட முக்கியமான கடமைகள் பாதிக்கப்படக்
கூடாது. ஹராமான வழியில் சம்பாதிக்கக் கூடாது, என்பது மட்டுமல்ல; முக்கியக் கடமைகளை புறந்தள்ளிவிட்டும்
ஹலால் சம்பதிக்கக் கூடாது. ஹலாலான வருமானத்தைத் தேடுவது (முக்கிய) கடமைக்குப் பிறகு
அவசியமானதாகும், என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: பைஹகீ) இந்த நபிமொழியில் ஆகுமான முறையில்
பொருளீட்டுவது பற்றி வலியுறுத்திக் கூறப்பட்டுள்ளது. அதே சமயம் அதை எவ்விதம் செய்ய
வேண்டும்? என்பது
பற்றியும் தெளிவாக உணர்த்தப்பட்டுள்ளது. தொழுகை, நோன்பு, ஜக்காத், ஹஜ் போன்ற முக்கிய வணக்க வழிபாடுகளே
அடிப்படையான கடமைகள். இறை நம்பிக்கை இல்லாமல் எந்த நல்ல அமல்களும் ஏற்றுக்கொள்ளப்படாது
என்பதைப் போல் இந்த அடிப்படையான கடமைகள் இல்லாமல் குடும்பவியல், சமூகவியல், அரசியல், பொருளியல் என எந்தத் துறையும்
சீர்பெற முடியாது. இறைவழிபாடின்றி இரைத் தேடலில்லை:
இறைவனை நினைவுகூருவதை விட்டும் தொழுகையை நிலைநாட்டுவது
மற்றும் ஜகாத் கொடுப்பதை விட்டும் வியாபாரமும் கொடுக்கல வாங்கலும் அவர்களைப் பாராமுகமாக்கி
விடாத மனிதர்கள் (இறையில்லங்களில் இறைவனை துதித்துக் கொண்டிருக்கிறார்கள்) அல்குர்ஆன்
24:36) பொருளாதாரத்தை
விட அருளாதாரத்த்திற்கு முதலிடமும் முக்கியத்துவமும் கொடுப்பவர்களை இந்த இறைவசனம் வியந்து
பாராட்டுகிறது. ஒரு மருத்துவர் கிளினிக் வைத்திருக்கிறார். நோயாளிகள் வரிசையில் காத்திருக்கிறார்கள்.
தொழுகை நேரமாகி விட்டது. அல்லது அந்தத் தொழுகையின் நேரம் முடியப் போகிறது. இந்நிலையில்
நோயாளிகளுக்கு சிகிச்சை செய்வதன் மூலம் மக்கள் சேவையில் தானே ஈடுபட்டிருக்கிறேன். நான்
தொழுக்ககுச் சென்று விட்டால் இந்தச் சேவையும் பாதிக்கப்பட்டு விடும். நோயாளிகளும் சிரமப்படுவார்களே!
என்று வியாக்கியானம் பேசி தொழுகையை பிற்படுத்துவதை மார்க்கம் அனுமதிக்காது. பொதுசேவையைக்
காரணம் காட்டி தொழுகை போன்ற முக்கியக் கடமைகளை ஒதுக்கிட முடியாது.
நம்முடைய வருமானம ஹலாலானதாக இருக்க வேண்டும். அடுத்தவருடைய
செல்வம் நமக்கு வருகிறதென்றால் அது வியாரம், கடன், வஸிய்யத், வாரிசுரிமை, அன்பளிப்பு போன்ற முறையான
ஒப்பந்தங்களின் அடிப்படையில் வரவேண்டும். இறைநம்பிக்கையாளர்களே! உங்களில் ஒருவர் மற்றொருவரின்
பொருளைத் தவறான முறையில் உண்ணாதீர்கள். (பொருளீட்டுவதற்கு) உங்களுக்கிடையில் பரஸ்பர
விருப்பத்தின் அடிப்படையில் கொடுக்கல் வாங்கல் இருக்க வேண்டும்... (அல்குர்ஆன்- 4:29)
நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ஜத்துல்விதாவின்
போது மக்களே! நான் சொல்வதைக் கேளுங்கள் நீங்கள் (நிம்மதியாக) வாழ்வீர்கள். அநியாயம்
செய்யாதீர்கள், என்று மூன்று தடவை கூறிவிட்டு உங்களில் யாருடைய செல்வமும் அவருடைய முழுமையான மனதிருப்தியின்றி
ஹலால் ஆகாது என்று கூறினார்கள் (முஸ்னத் அஹ்மது - 20714)
அல்லாஹ் மற்றும் அவனுடைய தூதருடைய வழிகாட்டல் படி வாழும்போது
நிம்மதியாக வாழ முடியும். தவறான வழியில் சம்பாதித்து தான் வாழ வேண்டுமென்ற அவசியமில்லை.
ஹலாலான வழியில் மட்டும் சம்பாதிக்கும் போது அல்லாஹ்வின் உதவியும் கண்டிப்பாக வரும்.
உரியவருடைய முழு மனதிருப்தி இருந்தால் தான் அந்த பொருள் ஹலால் ஆகும், என்று நபியவர்கள் எச்சரிக்கிறார்கள்.
இன்று வரதட்சணை மற்றும் சீர்வரிசை பற்றி என்ன சொல்வது? அவற்றையெல்லாம் ஏதோ ஒரு வகையில் பிடுங்கி
சாப்பிட்டுவிட்டால் நம்முடைய துஆக்கள் எப்படி ஏற்றுக்கொள்ளப்படும். ஹராமான உணவில் வளர்ந்த
சதை நரகத்திற்குப் போகும் என்று இறைத்தூதர் (ஸல்) எச்சரித்திருக்கிறார்களே! அவற்றையெல்லாம்
நாம் எந்த அளவுக்கு கவனத்திற்கு கொண்டுவருகிறோம், என்று யோசிக்க வேண்டும். வட்டி,
சூதாட்டம், லஞ்ச ஊழல், ஏமாற்று, மோசடி போன்றவை மார்க்கத்தில்
மிகமிகக் கடுமையான முறையில் தடை செய்யப்பட்டிருக்கிறது, என்பது எந்த முஸ்லிமுக்குத் தான் தெரியாது.
நபியை விமர்சித்ததற்காக அவர்களை எதிர்த்து நாம் போராட்டம் நடத்துகிறோம். ஆனால் வட்டியை
விடத் தயாரில்லையானால் அப்படிப்பட்டவர்களுக்கு எதிராக அல்லாஹ்வே போர்ப்பிடகனம் செய்வதாக
குர்ஆன் கூறுகிறதே! அல்லாஹ்வுடனும் அவனுடைய தூதருடனும் போர் செய்ய தயாரகுங்கள்! என்று
குர்ஆன் அறைகூவல் விடுக்கிறதே! ஆனால் இன்று வட்டியில் பல வகைகளை உண்டாக்கி காசு பண்ணும்
சமுதாயத்தைப் பற்றி என்ன சொல்வது? ஹஜ்ஜத்துல்விதாவின் போது மௌட்டீக காலத்து வட்டியனைத்தும் எனது
காலடியில் புதைக்கப்பட்டுவிட்டதாக பிரகடனப்படுத்திய வட்டியைத் தான் இந்த சமுதாயம் தோண்டி
எடுத்துக்கொண்டிருக்கிறதோ! வட்டியும் அமாவாசையும்:
அல்லாஹ் வட்டியை அழித்து விடுகிறான். தான தர்மங்களை வளரச்செய்கிறான்.
(அல்குர்ஆன் 2:276) இந்த வசனத்தில் அல்மஹ்க் (அழித்தல்) என்ற வார்த்தை பயன்படுத்தபட்டுள்ளது. ஒரு பொருள்
படிப்படியாக குறைவதற்கு மஹ்க் என்று சொல்லப்படும். அமாவாசைக்கும் இதே மூலச்சொல்லிலிருந்து
உருவான முஹாக் என்ற வார்த்தையே பயன்படுத்தப்படுகிறது. (தஃப்ஸீருல் கபீர்) அதாவது சந்திரன்
முழு நிலாவாக இருக்கும் போது மிகப்பெரிய வட்டமாகத் தோன்றும். ஆனால் ஒரே நாளில் அமாவாசையாகி
விடுவதில்லை. ஒவ்வொரு நாளும் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கடைசியில் (அமாவாசையன்று) ஒன்றுமே
தெரியாமல் போய்விடுகிறது. அவ்வாறே வட்டியும் பார்வைக்கு வளர்ச்சியாகத் தோன்றும் இறுதியில்
மாபெரும் நஷ்டத்தை விளைவித்துவிடும். அதுதான் இன்று நடந்துகொண்டிருக்கிறது. வட்டியின்
கோரத்தாண்டவத்தால் உலகின் பொருளாதாரமே சின்னாபின்னமாகி விட்டது. வட்டி வெளிப்படையாக)
அதிகமானாலும் இறுதியில் நஷ்டத்தில் தான் முடியும் என்று நபி (ஸல்) அவர்கள் 1400 ஆண்டுகளுக்கு முன்பே சொல்லிவிட்டார்கள்.
(இப்னுமாஜா) 1930 களில் உலக அளவில் மாபெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. அச்சமயம் பொருளாதார
நிபுணர்கள் தங்களின் பொருளாதாரக் கொள்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.
சில நிபுணர்கள் வட்டி தான் பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம் என்றும் அது பொருளாதாரத்தையும்
உலக நாடுகளுயம் நாசமாக்கிவிடும் என்றும் கருத்து தெரிவித்திருந்தனர். ஒரு மேற்குலக
ஆய்வாளர் வட்டியிலிருந்து விடை பெற்றால் தான் பொருளாதாரம் உற்சாகமடையும், எனறு கூறினார். 1933 ஆம் ஆண்டு ஜனவரி 19 ந்தேதியன்று நியூயார்க்கில் உரை நிகழ்த்திய
லாரன்ஸ் பின்ஸ் என்ற சிந்தனையாளர், அரிஸ்ட்டில், கத்தோலிக்க பிஷப்புகள் போன்றோர்களும் யூதர்களின் தௌராத்
வேதமும் வட்டிக்கடனை தடை செய்திருக்கிறது, என்று பேசினார். (நூல்: அர்ரிபா வஅதருஹூ)
எனினும் இந்த நிபுணர்களின் கருத்தை உலக நாடுகள் காதில்
போட்டுக் கொள்ளவில்லை. அதனால் ஏற்பட்ட மோசமான விளைவை இன்று உலகம் சந்தித்துக் கொண்டிருக்கிறது.
1930 க்குப்
பிறகு இப்பொழுது 2009 ல் அமெரிக்க பொருளாதாரத்தில் பெரிய பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது.
அமெரிக்காவின் தேசியப் புலனாய்வு அமைப்பு ராணுவ பொருளாதார
துறைகளில் எதிர்காலத்தில் உலகில் உருவாக உள்ள புதிய போக்குகள் குறித்து ஓர் அறிக்கையை
2009 ஆம் ஆண்டு
வெளியிட்டது. உலகப்போக்குகள் 2025: உலகம் மாறுகிறது என்ற தலைப்பிட்ட அந்த அறிக்கையில் எதிர்வரும்
15 ஆணடுகளில்
அமெரிக்காவின் உலக ஆதிக்கம் மங்கி மறைந்து போகும், என்று கூறுகிறது. 1992 ஆண்டு சோவியத் யூனியன் சிதறுண்டு
போனதால் இருதுருவமாக இயங்கிக் கொண்டிருந்த உலகம் ஒரு துருவ உலகமாக மாறியது. இந்தஒரு
துருவ உலக மேலாதிக்கத்தால் இன்றைய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக நிகழ்ந்து வந்த
இந்த ஆட்டம் முடிவுக்கு வந்து விட்டதாகவும் ஒரு பன்முக உலகு உருவாக இருப்பதாகவும் அந்த
ஆய்வறிக்கை கூறியது. (எகனாமிக்ஸ் பத்திரிக்கையிலிருந்து தினமணி 31.02.2009)
அமெரிக்க பொருளாதாரம் வலுவாக இருப்பதாக ஒபாமா கூறினாலும்
உண்மை நிலை அவ்வாறல்ல. அமெரிக்க பொருளாதாரம் மீண்டும் முடங்கும் என உடிபேசநளளடியேட
ரெனபநவ டிககஉந சி. பி. ஓ. ஆகஸ்ட் 2012 ல் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது. (பூபாளம்.காம்)
அமெரிக்க பொருளாதாரம் (வளர்ச்சியடைந்தாலும்) அதன் முந்தைய நிலையை மீண்டும் அடையாதென
கனடாவின் மத்திய வங்கியின் ஆளுநர் மார்க் கண்ணி இந்த வருட தொடக்கத்தில் தெரிவித்தார்.
(நிலவரம்.காம்) உலகப் பொருளாதாரம் வீழச்சியடைந்ததற்கு
பல காரணங்கள் கூறப்பட்டாலும் வட்டியின் மீது கட்டியெழுப்பப்பட்ட பேங்க் முறை தான் அடிப்படைக்
காரணம். எனவே தான், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், நம்முடைய பேங்க் முறை தோல்வியடைந்து விட்டதென்று ஒரு முறை
கூறினார்.
நபி (ஸல்) அவர்கள் செய்த புரட்சி:
யாரும் யாரையும் ஏமாற்றக்கூடாது என்பதற்காக நபி (ஸல்)
அவர்கள் கொடுக்கல் வாங்கல் பற்றி சிறந்த போதனைகளை உம்மத்துக்கு வழங்கியிருக்கிறார்கள்.
தனக்கு பிரியப்படுவதையே தன்னுடைய சகோதரனுக்கும் பிரியப்படாத வரை உங்களில் யாரும் (உண்மையான)
முஃமின்- விசுவாசியாக முடியாது என்று கூறி ஏமாற்று வேலை ஈமானுக்கே பங்கம் விளைவித்துவிடும்,
என்பதை உணர்த்தியுள்ளார்கள்.
(புகாரி) மார்க்கெட் நிலை பற்றி எதுவும் தெரியாதவனை ஏமாற்றுவது வட்டி என்று நபி (ஸல்)
அவர்கள் கூறினார்கள். (பைஹகீ-10706) நபியவர்களின் இது போன்ற உயர்ந்த போதனைகளினால் உலகில் யாரும்
நினைத்துக் கூட பார்த்திட முடியாத புரட்சியை நிகழ்த்திக் காட்டினார்கள். ஜரீருப்னு
அப்தில்லாஹ் (ரலி) அவர்கள், தொழுகையை நிலை நாட்டுவதாகவும்
ஜகாத்தை முறையாக கொடுப்பதாகவும் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் நலவை நாடுவதாகவும் நபி (ஸல்)
அவர்களிடம் உடன் படிக்கை செய்து கொண்டார்கள். (புகாரி) இப்படியெரு உடன் படிக்கை செய்ததோடு
மட்டும் நிற்கவில்லை. வாழ்க்கை முழுவதும் செயல் படுத்தினார்கள்.ஒரு தடவை ஜரீர் (ரலி)
அவர்களுடைய அடிமை 300 (திர்ஹமுக்கு) ஒரு குதிரை வாங்கி வந்தார். அந்த குதிரையை பார்த்தவுடன் நேராக வியாபாரியிடம்
சென்று உம்முடைய குதிரை 300 ஐ விட அதிக விலைக்கு போகும், என்று கூறி விலையை அதிகப்படுத்தி அதிகப்படுத்தி
800 (திர்ஹம்)
கொடுத்தார்கள். (ஃபத்ஹுல் பாரி 1-168) இன்று இது போன்ற நுகர்வோரை கற்பனையில் கூட பார்க்க முடியாது. அநாதையுடன் நீங்கள் கண்ணியமாய் நடந்து கொள்வதில்லை;
மேலும் வறியவருக்கு
உணவளிக்க ஒருவரையொருவர் தூண்டுவதுமில்லை. மேலும் வாரிசு சொத்துக்களை எல்லாவற்றையும்
சுருட்டி நீங்களே விழுங்கி விடுகிறீர்கள்; செல்வத்தின் மீது அளவு கடந்த மோகம் கொண்டுள்ளீர்கள் (அல்குர்ஆன்-87:17-20)
என்று இகழப்பட்ட ஒரு
சமுதாயத்திற்கு அனுப்பப்பட்ட நபி (ஸல்) அவர்கள் செய்த மாபெரும் முயற்சியினால் பொருளாதாரத்தை
அருளாதாரமாகக் கருதி நேர்மையான வியாபாரம் செய்யக்கூடிய விசுவாசக் கூட்டத்தை உருவாக்கி
சாதனை புரிந்தார்கள்.
வியாபாரமும் இஸ்லாமிய வளர்ச்சியும்:
உலகில் பல நாடுகளில் இஸ்லாம் பரவுவதற்கு வியாபாரிகள் காரணமாக
இருந்தார்கள் என்றால் இஸ்லாமிய வியாபார போதனைகள் எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும்
என்பதை சிந்திக்க முடிகிறதா? அரபுலகத்திலிருந்து வரும் வியாபாரிகள் வெறும் வியாபார சரக்குகளை
மட்டும் எடுத்து வரவில்லை. நியாயமான பொருளாதார கோட்பாடுகளையும் இஸ்லாத்தின் உயர்ந்த
நற்குணங்களையும் தங்களுடன் எடுத்து வந்தார்கள். இன்றைய முஸ்லிம் வியாபாரிகள் இவற்றை
கவனத்தில் கொள்வார்களா? இந்தோனேஷியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, மாலத்தீவு, (தென் இந்தியா) இலங்கை,
சீனா, அஃப்கானிஸ்தான், பூடான், சோமாலியா போன்ற நாடுகளில்
இஸ்லாம் நுழைவதற்கும் பரவுவதற்கும் வியாபாரிகளுக்கு பெரும்பங்குண்டு. (இந்திஷாருல்
இஸ்லாம் ஃபீ ஆசியா) இப்படிப்பட்ட வியாபாரிகள் குறித்து தான், நேர்மையான உண்மையான வியாபாரி
(மறுமையில்) நபிமார்கள், சித்தீகீன்கள் (உண்மையாளர்கள்) ஷுஹதாக்கள் (தியாகிகள்) ஆகியோருடன்
இருப்பார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(திர்மிதீ)
Lets awaken to get rid of "Interest" Jazakallah Hairen!
ReplyDeleteAnsar