இஸ்லாமிய பொருளியல் படிப்போம்!
மார்ச் மாதத்துடன் நிதியாண்டு முடிவடைந்து ஏப்ரலில் புதிய
நிதியாண்டு உதயமாகும். வியாபாரிகள் ஏப்ரலில் புதுக்கணக்கு ஆரம்பிப்பார்கள். கடந்த வருடத்தை
விட இவ்வருடம் பொருளாதாரம் வளர்ச்சி காண வேண்டுமே! என்ற எண்ணம் ஒவ்வொருவரின் உள்ளத்திலும்
குடிகொண்டிருக்கும். வாழ்வாதாரம்:
பொருளாதாரமே ஒரு நாட்டின் முதுகெழும்பு. இஸ்லாத்தைப் பொறுத்தவரை
பொருளாதாரம் என்பது வாழ்வாதாரம் என்பதில் சந்தேகமில்லை. உணவைத் தேடி சந்திர மண்டலத்துக்குச்
செல்லத் தேவையில்லை. மக்கள் குடியிருக்கும் இடத்திலேயே - பூமியிலேயே வாழ்வாதாரத்தை
ஏற்படுத்திக் கொடுத்ததாகக் குர்ஆன் கூறும். நாம் பூமியில் முழு அதிகாரத்துடன் உங்களை
வாழச் செய்தோம். அங்கேயே உங்களுக்குத் தேவையான வாழ்க்கைச் சாதனங்களையும் அமைத்துக்
கொடுத்தோம். எனினும் நீங்கள் மிக மிகக் குறைவாகவே நன்றி செலுத்துகிறீர்கள். (அல்குர்ஆன் - 7:10) ஒரு நேரத்தில் செல்வம் வெறுக்கத் தக்கதாக
கருதப்பட்டது. ஆனால் இன்று அது இறை நம்பிக்கையாளனின் கேடயம். எனவே, யாரிடமாவது காசு, பணம் ஏதாவது இருந்தால் அதை
பேணிப் பாதுகாத்து முறையாகப் பயன்படுத்தி சரி செய்து கொள்ளட்டும். ஒரு மனிதனுக்கு ஏதாவது
தேவை ஏற்பட்டுவிட்டால் முதன்முதலில் அந்த தேவைக்காக அவன் மார்க்கத்தை செலவு செய்து
விடும் (விட்டுவிடும்) காலமாக இருக்கிறது, என்று சுஃப்யானு தௌரி (ரஹ்) அவர்கள் கூறினார்கள். (மிஷ்காத்)
செல்வம் - கஃபா:
உலகின் முதல் ஆலயமாகிய கஃபத்துல்லாஹ்வை மக்களின் வாழ்க்கையை
நிலைநிறுத்தும் கேந்திரமாக அல்லாஹ் வருணிக்கிறான். அதே வார்த்தையைக் கொண்டு பொருளாதாரத்தையும்
வருணிக்கிறான். உங்களுடைய வாழ்க்கைத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான கேந்திரமாக
அல்லாஹ் உங்களுக்கு வழங்கியுள்ள பொருள்களை விவரமறியாதவர் (அனாதை)களிடம் ஒப்படைக்காதீர்கள்...
(அல்குர்ஆன்- 4:5) அல்லாஹ் கண்ணியமிக்க கஃபதுல்லாஹ்வை மக்களுக்கு (வாழ்க்கை சாதனமாக) கேந்திரமாக அமைத்தான்.
(அல்குர்ஆன்- 5:97)
இஸ்லாத்தின் ஆரம்பகாலத்தில் இரவுத்தொழுகை கட்டயாமாக்கப்பட்டிருந்தது.
பின்னர் அந்தச் சட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. அதற்கு பல்வேறு காரணங்களைக் கூறும்
அல்குர்ஆன் பொருளீட்டுவதற்காக பூமியில் அலைந்து திரிந்து பயணம் செய்வதையும் ஒரு காரணமாக
கூறுகிறது. வேறு சிலர் அல்லாஹ்வின் அருளைத் தேடி (வியாபாரத்திற்காக) பூமியில் பயணம்
செய்கிறார்கள் (அல்குர்ஆன்- 73:20)
செல்வத்தை சரியான வழியில் சம்பாதித்தலும் நல்ல வழியில்
செலவழித்தலும் அதை ஒரு உயர்ந்த வணக்கமாக்கி விடுகிறது. தான் மற்றவர்களிடம் யாசகம் கேட்காமல்
இருப்பதற்காகவும் தன்னுடைய குடும்பத்தினருக்கு சம்பாதிப்பதற்காகவும் அண்டை வீட்டாருக்கு
கரிசனம் காட்டுவதற்காகவும் யார் ஆகுமாக்கப்பட்ட
(ஹலாலான) உலகப் பொருட்களை தேடி சம்பாதிக்கிறாரோ அவர் அல்லாஹ்வை கியாம நாளில் முகம்
பௌர்ணமியைப் போல இருக்கும் நிலையில் சந்திப்பார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(தப்ரானீ)
பொருளீட்டுவது கடமை:
மார்க்கத்தில் ஹலாலான செல்வத்திற்கு இவ்வளவு முக்கியத்துவம்
கொடுக்கப்பட்டிருந்தாலும் அதை எப்படித் தேடவேண்டுமென்பதற்கும் ஷரீஅத் சில விதிமுறைகளை
வைத்திருக்கிறது. ஹலாலான வருமானத்தைத் தேடுவது (முக்கிய) கடமைக்குப் பிறகு அவசியமான
கடமையாகும், என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: பைஹகீ) இந்த நபிமொழியில் ஆகுமான முறையில்
பொருளீட்டுவது கட்டாயக் கடமை என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. அதே சமயம் அது எப்பொழுது
கடமையாகும்? என்பதும் தெளிவாக உணர்த்தப்பட்டுள்ளது. தொழுகை, நோன்பு, ஜக்காத், ஹஜ் போன்ற முக்கிய வணக்க வழிபாடுகளே
அடிப்படையான கடமைகள். இறை நம்பிக்கை இல்லாமல் எந்த நல்ல அமல்களும் ஏற்றுக்கொள்ளப்படாது
என்பதைப் போல் இந்த அடிப்படையான கடமைகள் இல்லாமல் குடும்பவியல், சமூகவியல், அரசியல், பொருளியல் என எந்தத் துறையும்
சீர்பெற முடியாது. இறைவழிபாடின்றி இரைத் தேடலில்லை:
இந்தக் கருத்தையே பின்வரும் இறைவசனம் உணர்த்துகிறது: இப்படி
சில (நல்ல) மனிதர்கள் இருக்கிறார்கள். இறைவனை நினைவுகூருவதை விட்டும் தொழுகையை நிலைநாட்டுவது
மற்றும் ஜகாத் கொடுப்பதை விட்டும் வியாபாரமும் கொடுக்கல் வாங்கலும் அவர்களைப் பாராமுகமாக்கி
விடுவதில்லை... (அல்குர்ஆன்- 24:37) நபித்தோழர்களின் நடைமுறையையே இந்த வசனம் விவரிக்கிறது.
அவர்கள் பாங்கு சப்தம் கேட்கும் போது வியாபார ஒப்பந்தத்தின் எந்த நிலையில் இருந்தாலும்
தங்களுடைய எந்தத் தொழிலில் ஈடுபட்டிருந்தாலும் அதை அப்படியப்படியே விட்டுவிட்டு பள்ளியை
நோக்கி விரைந்து சென்று விடுவார்கள். ஹைய்ய அலல் ஃபலாஹ்ஃ! வெற்றியின் பக்கம் வாருங்கள்!
என்று அழைத்து தொழுகையில் தான் வெற்றி இருக்கிறது என்று அல்லாஹ் கூறும்போது பள்ளிக்கு
வரவில்லையானால் என்னுடைய வியாபாரத்தில் தொழிலில் தான் வெற்றி இருக்கிறது என்று நாம்
முடிவு செய்து விட்டோமா? ஒரு மருத்துவர் கிளினிக் வைத்திருக்கிறார். நோயாளிகள் வரிசையில்
காத்திருக்கிறார்கள். தொழுகை நேரமாகி விட்டது. அல்லது அந்தத் தொழுகையின் நேரம் முடியப்
போகிறது. இந்நிலையில் நோயாளிகளுக்கு சிகிச்சை செய்வதன் மூலம் மக்கள் சேவையில் தானே
ஈடுபட்டிருக்கிறேன். நான் தொழுக்ககுச் சென்று விட்டால் இந்தச் சேவையும் பாதிக்கப்பட்டு
விடும். நோயாளிகளும் சிரமப்படுவார்களே! என்று வியாக்கியானம் பேசி தொழுகையை பிற்படுத்துவதை
மார்க்கம் அனுமதிக்காது. தொழிலில் மும்முரமாக ஈடுபட்டிருப்பதால் ஜக்காத் கணக்கு பார்ப்பதற்கும்
அதை நிறைவேற்றுவதற்கும் நேரம் கிடைக்காமல் போய்விடக்கூடாது. கட்டாயம் செய்ய வேண்டிய முக்கியக் கடமைகளை நிறைவேற்றிய
பிறகு தான் சம்பாதிக்கும் கடமை வருகிறது. ஹலாலான வருமானத்தை ஈட்டுவதில் ஈடுபட்டிருக்கும்
போது இடையிடையே வரும் மற்ற கடமைகளையும் புறந்தள்ளி விடக்கூடாது. நம்முடைய சம்பாத்தியம்
நமக்கு அவ்வப்போது தேவைப்படும் மார்க்கச் சட்டங்களைப் படிப்பதற்குத் தடையாக இருக்கக்கூடாது.
பிள்ளைகளை மார்க்கப் பற்றுடன் வளர்ப்பதற்குத் தடையாக இருக்கக் கூடாது. இது போன்ற முக்கியக்
கடமைகளை நிறைவேற்றிவிட்டுத் தான் சம்பாதிப்பது என்ற கடமையை நினைத்துப் பார்க்க வேண்டும்.
வட்டி, சூதாட்டம்,
லஞ்சம், ஊழல் போன்ற அநியாயமாக மக்களின்
பணத்தைப் பறிக்கும் அனைத்து ஒப்பந்தங்களும் இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டிருக்கிறது.
வட்டியினால் தான் பொருளாதாரம் மந்தமடைகிறது என்று நிபுணர்கள் கூறிய பிறகும் உலகின்
பொருளாதாரமே வட்டியின் மீது தான் நிறுத்தப்பட்டுள்ளது. இன்று லட்சக்கணக்கான மக்கள்
தங்களின் சிந்தனையையும் நேரத்தையும் வீணாக்கி ரசித்துப் பார்க்கப் படக் கூடிய விளையாட்டும்
சூதாட்டமாகவே இருக்கிறது. இன்றைய அரசியல் ஊழலில் சிக்கித் தவிக்கிறது. தேர்தலில் வாக்களிப்பது உட்பட குடிமக்களின் உரிமைகள் லஞ்சம் கொடுத்து பறிக்கப்படுகிறது.
படிப்பது கடமை:
மேற்கூறப்பட்டவை ஹராம் - கூடாது என்பது எல்லா முஸ்லிம்களுக்கும்
தெரியும். ஒவ்வொரு முஸ்லிமும் இஸ்லாமியக் கல்வி கற்பது கட்டாயம் என்று நபி (ஸல்) அவர்கள்
கூறினார்கள். (இப்னுமாஜா) எல்லா சட்டங்களையும் எல்லாரும் கற்பது சாத்தியமானதல்ல. எனவே
யாருக்கு எந்த நேரத்தில் எது தொடர்பான கல்வி தேவைப்படுகிறதோ அது பற்றிய சட்டங்களை கற்பது
அவரின் மீது கட்டாயமாகிறது. செல்வந்தராக இருந்தால் ஜகாத் பற்றிய சட்டம் படிப்பது கட்டாயம்.
எதைச் சாப்பிடலாம்? எதைச் சாப்பிடக்கூடாது? என்பதைப் பற்றி அறிவதும் கட்டாயம். திருமணம் முடிப்பதாக இருந்தால்
அது பற்றிய சட்டங்களை படிப்பதும் மனைவியின் உரிமைகள் எவையென்று கணவனும் கணவனின் உரிமைகள்
எவையென மனைவியும் அறிவது கட்டாயம். விவசாயி
அது தொடர்பான மார்க்கச் சட்டங்களைப் படிப்பது கட்டாயம். அதேபோல் வியாபாரி வியாபார சட்டங்களை
அறிவது கட்டாயம்.
பொருளியல் கல்வி:
ஒவ்வொரு முஸ்லிமும் எந்த கொடுக்கல் வாங்கலிம் ஈடுபடலாம்?
எதில் ஈடுபடக்கூடாது?
என்பதைத் தெளிவாக அறிந்திருக்க
வேண்டும். எதில் வியாபாரம் செய்யலாம்? எந்த வியாபாரம் கூடாது? என்பது பற்றி தனி நேரம் ஒதுக்கி படிக்க
வேண்டும். இன்று ஒவ்வொரு துறைக்கும் உலகியல் ரீதியாக பல வருடங்கள் படிக்கிறார்கள்.
வியாபாரம் தொடர்பாக மட்டுமே பல வருடங்கள் செலவு செய்து படிக்கிறார்கள். ஆனால் வியாபாரம்
குறித்த மார்க்க சட்டங்கள் பற்றி படிப்பதற்கு எவ்வளவு காலம் ஒதுக்கப்படுகிறது?
என்பதை கவனத்தில் கொள்ள
வேண்டும். சட்டமறியாதவர் சந்தைக்கு வரவேண்டாம்:
கொடுக்கல் வாங்கலில் ஈடுபடும் ஒவ்வொரு முஸ்லிமும் எந்த
ஒப்பந்தம் கூடும்? எது கூடாது? என்பது பற்றி படித்திருக்க வேண்டும். மார்க்கச் சட்டங்கள் தெரிந்தவர் மட்டுமே நம்முடைய
கடைவீதிகளில் விற்றல் வாங்கலில் ஈடுபடவேண்டும், என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(நூல்: கன்ஜுல் உம்மால் - 9865) வியாபாரம் தொடர்பான சட்டங்களை மனப்பாடம் செய்யாத வரை யாரும்
வியாபாரத்தில் ஈடுபடக்கூடாது, என்று ஃபகீஹ் அபுல்லய்த் (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள். முற்காலத்தில்
வியாபாரிகள் தங்களுடைய வியாபாரத்திற்காக நீண்ட பயணம் செய்வார்கள். ஆனால் அவர்களுக்கு
இஸ்லாமிய வியாபார சட்டங்கள் எதுவும் தெரியாது. எனவே, வியாபாரத்தின் போது மார்க்கச் சட்ட
ஆலோசனை பெறுவதற்காக பிரயாணத்தில் தங்களுடன் ஃபகீஹ் - மார்க்கச் சட்ட வல்லுணர்களையும்
உடன் அழைத்துச் செல்வார்கள். ஹலாலை - ஆகுமானதைச் சாப்பிடுவதும் குடிப்பதும் ஷரீஅத்தின்
அடிப்படைச் சட்டமாக இருப்பதால் பேணுதல் மிக்க
வியாபாரிகள் இப்படி உலமாக்களை பயணத்தில் அழைத்துச் செல்வது கட்டாயம் என்று
ஃபதாவா பஜாஜிய்யா வில் கூறப்பட்டுள்ளது. சட்டத்திற்குட்பட்ட எவரும் எந்த கொடுக்கல்
வாங்கலிலும் அதில் அல்லாஹ்வின் சட்டம் என்ன? என்பது பற்றி அறியாமல் ஈடுபடக்கூடாது
என்று இமாம் ஷாஃபியீ (ரஹ்) அவர்கள் அர்ரிஸாலா என்ற நூலில் கூறியுள்ளார்கள். (நூல்:
காமியாப் திஜாரத் கா ராஜ்)
நவீனமயமாகிவிட்ட வியாபாரம்:
கியாம நாள் வருவதற்கு முன் (உலகில்) வியாபாரம் பரவலாகி
விடும். ஒரு பெண் கணவனுக்கு வியாபாரத்தில் உதவியாக இருப்பாள், என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(நூல்: முஸ்னது அஹ்மது) வியாபாரச் சந்தைகள் ஒன்றுக்கொன்று நெருக்கமாகாத வரை கியாமத்
நிகழாது, என்றும்
நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (நூல்: முஸ்லிம்) இன்று வியாபாரம் மிகப் பெரிய
அளவில் முன்னேறியுள்ளது. ஷேர் மார்க்கெட், கமாடிட்டி மார்க்கெட், நிஃப்டி, ஃபோரக்ஸ், ஆன்லைன் வியாபாரம் என வியாபார வலை
பரவலாக விரிந்துள்ளது. இவற்றில் பெரும்பாலானவற்றை ஒரே வார்த்தையில் கூடும் என்றோ கூடாது
என்றோ சொல்ல முடியாது. எனினும் முஃப்தீ ஷஃபீஃ (ரஹ்) அவர்கள் இது பற்றி கூறும் போது
இன்று புதிது புதிதாக தோன்றும் வியாபார நடைமுறைகளைப் பற்றி விரிவாக எழுதி உலமாக்களிடம்
அது பற்றிய தீர்ப்பு கேட்டால் அவற்றில் பெரும்பாலான கூடாத வியாபார நடைமுறைகளை லேசான
மாற்றம் செய்துவிட்டால் அவற்றை கூடும் என்று சொல்லிவிடலாம். எனினும் யாருக்கும் ஹலால்
பற்றிய சிந்தனையே இல்லாவிட்டால் அதற்கெப்படி தீர்வு கிடைக்கப்போகிறது? என்று கூறுகிறார்கள். (நூல்:
ஜவாஹிருல் ஃபிக்ஹ் 2-356)
ஆன்லைன் வியாபாரம்:
ஆன்லைனில் வியாபாரம் செய்யலாமா? என்று கேட்டால் ஒன்று வெளிநாட்டில்
உள்ள ஒரு பொருளை இணையதளம் மூலம் வாங்குவது என்று சொல்லலாம். அதற்குரிய விலையைக் கொடுத்து
அந்தப் பொருளை நம் வீட்டுக்கு வரவைத்து பெற்றுக் கொள்ளலாம். இது இஸ்லாமிய விற்பனை
(ஏற்பு, ஒப்புதல்
போன்ற) நிபந்தனைகளுக்குட்பட்டு இருந்தால் கூடும் என்று சொல்லலாம். ஆனால் இன்று ஆன்லைன்
வியாபாரம் என்று பரவலாக பேசப்படுகிற கமாடிட்டி மார்க்கெட் எந்த வகையிலும் ஷரீஅத்துடைய
விற்பனை ஒப்பந்தத்துக்கு ஒத்துப்போவதில்லை. தன்னிடம் இல்லாத சரக்கை விற்க வேண்டாம் என்று
நபி (ஸல்) அவர்கள் தடை செய்திருக்கிறார்கள். இந்த ஒரு சட்டத்தின் படி செயல்படாததால்
தான் ஆன்லைன் வியாபாரத்தின் மூலம் இன்று தங்கம், பருப்பு போன்ற அத்தியாவசியப் பொருட்களின்
தாருமாறான விலையேற்றம் கண்டிருக்கிறது. ஒரு கிலோ தங்கம் வாங்கியவர் அது தன் கையில்
வராமலேயே மறு விற்பனை செய்து லாபம் பார்த்திருப்பார். உலகில் இருக்கும் தங்கத்தின்
அளவை விட கூடுதலாக ஆன்லைனில் தங்க விற்பனை நடந்திருக்கும். விளையாத பொருளுக்கான விலைவாசி
விண்ணுக்கே உயர்ந்து கொண்டே செல்கிறது. இந்தியாவின் பருப்புத் தேவை ஆண்டுக்கு 3 கோடி டன். ஆனால் 2005
-2006 நேரத்தில் ஒரு
ஆண்டில் மட்டுமே ஆன்லைன் வர்த்தகத்தில் 6 கோடி டன்னுக்கு விற்பனை ஆனது. உண்மையில் அந்த காலக்கட்டத்தில்
ஆன்லைன் வர்த்தகம் மூலமாக வெறும் ஆறாயிரம் டன் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டிருந்தது.
மீதி? வெறுமனே
இண்டர்நெட்டில் ஒப்பந்தங்கள் மூலமாக இல்லாத சரக்கை மாற்றி மாற்றி விற்றுக் கொண்டிருந்தார்கள்.
(நூல்; சைபர்
க்ரைம்)
பொருளாதாரத்தை விட அருளாதாரமே உயர்வானது என்பது எப்பொழுதும்
மனதில் இருக்க வேண்டும். மக்களிடம் இப்படியும் ஒரு காலம் வரும்: அந்நேரத்தில் இறைநம்பிக்கையாளன்
தான் பெற்றுக்கொண்ட பணம் ஹலாலா? ஹராமா? (அனுமதிக்கப்பட்டதா? விலக்கப்பட்டதா?) என்பது பற்றி பொருட்படுத்த மாட்டான்
என்பது நபிமொழி. (நூல்: அஹ்மது- 6872)
No comments:
Post a Comment