இன்று எதற்கு நேரம் கிடைக்கிறதோ இல்லையோ நடைப் பயிற்சி
(வாக்கிங்) க்கு தனியாக நேரம் ஒதுக்கியாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. சாப்பிடாவிட்டால்
ஏற்படும் வியாதிகளை விட அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் வியாதிகள் தான் இன்று அதிகம்.
பல ஊர்களில் நடைப்பயிற்சிக்கென சங்கங்கள் உள்ளன. அதற்கென தனித்தனிப் பாதைகள் உள்ளன.
அவர்களுக்கு நடப்பதைத் தவிர வேறு எந்த வேலையுமே கிடையாது என்பது அந்த பாதைகளில் போய்
பார்த்தவர்களுக்கு தெரிந்திருக்கும். தனித்தனியே நடப்பவர்கள் பலர் இருந்தால் மனைவி
மக்களுடன் குடும்ப சகிதம் நடப்பவர்களையும் பார்க்க முடியும். நம்முடைய நடைமுறை வாழ்க்கை
இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையை உண்டாக்கியிருக்கிறது. அப்படி நடக்க வில்லையானால்
நம்முடைய ஆரோக்கியத்தை தக்கவைத்துக்கொள்ள முடியாது. நாம் நடப்பதை குறை சொல்ல வரவில்லை.
அச்சமயத்தில் மார்க்க ரீதியான கடமைகளை மனதில் பதியவைப்பதே நமது நோக்கம்.
இது தவிர பொழுதுபோக்கு அம்சங்களும் மக்களிடம் நிறையவே
உள்ளன. குறுகிய தூர, நீண்ட தூர சுற்றுலா செல்லலாம். நகரின் சுற்றுவட்டாரத்தில் உள்ள பொருட்காட்சிக்கு
செல்லலாம். வேடிக்கை பார்ப்பதற்காகவே கடை வீதிக்கு செல்லலாம். மக்கள் தங்களுக்கு மத்தியில்
குறிப்பாக வாலிபர்கள் கூடி நின்று பேசுவதற்கு ஏதாவது ஒரு இடத்தை தெரிவு செய்யலாம்.
பெரும்பாலும் தங்களுடைய நேரத்தை விரயமாக்குவதற்காக அந்த இடத்தை பயன்படுத்துவார்கள்.
ஆகுமாகாத காட்சிகளையோ பேச்சுக்களையோ பற்றி இங்கு அறவே பேசவில்லை. அவை மார்க்கத்தில்
தடை செய்யப்பட்டிருந்தால் கண்டிப்பாக அதை விட்டும் விலக வேண்டும்.
ஷரீஅத்தில் அனுமதிக்கப்பட்ட நடைமுறைகளுக்காக நாம் வீட்டை
விட்டு வெளியே வந்தால் மீண்டும் வீடு திரும்பும் வரை எப்படி நடந்து கொள்ள வேண்டும்
என்பது பற்றி மார்க்கம் சிறப்பான வழிகாட்டுதலைத் தந்திருக்கிறது.
நபியவர்களின் காலத்திலும் மக்கள் பாதையில் கூடி நின்று
பேசுபவர்களாக இருந்தார்கள். அவர்களுடைய வீடுகளின் அளவும் அமைப்பும் தற்கால கட்டிடங்களைப்
போல விசாலமாகவும் நவீனமயமாகவும் இருக்கவில்லை. தங்களுடைய தேவைகளைக் கூட சிரமத்துடன்
பூர்த்தி செய்யும் நிலையில் தான் அவர்களுடைய வீடுகள் இருந்தன. மக்கள் கூடிப் பேசுமளவுக்கு
வீடுகளில் எங்கே இடம் கிடைக்கப் போகிறது? எனவே, அவ்வப்போது பாதைகளில் ஆங்காங்கே நின்று பேசுவது நபித்தோழர்களின்
வழக்கமாக இருந்தது.
நடைபாதைகளில் கூட வேண்டாம்:
நபி (ஸல்) அவர்கள் பாதைகளில் (கூடி) அமர்வதை விட்டும்
உங்களை எச்சரிக்கிறேன், என்று கூறி பாதைகளில் நின்று பேசுவதை தடுத்தார்கள். நபித்தோழர்களும்
(வேறு வழி இல்லை என்பதால்) அல்லாஹ்வின் தூதர் அவர்களே! நாங்கள் ஒரு இடத்தில் கூடிப்
பேச வேண்டிய கட்டாயம் எங்களுக்கு இருக்கிறது, என்று கூறி தங்களுடைய நிர்பந்தத்தை
வெளிப்படுத்தினார்கள். நிர்பந்த சூழ்நியிைலும் சகித்துக் கொள்ள முடியாத சிரமத்தை தரக்கூடிய
மார்க்கமல்ல இஸ்லாம். அப்படி உங்களுக்கு அவசியம் பாதைகளில் கூடிப்பேச வேண்டிய நிர்பந்தம்
ஏற்பட்டால் பேசிக்கொள்ளூங்கள்! அதே சமயம் பாதையின் விதிகளையும் கடமைகளையும் முழுமையாக
நிறைவேற்றுங்கள். அவற்றை மதித்து நடங்கள்! என்று கூறினார்கள். நல்ல காரியங்களில் அதீத
ஆர்வம் கொண்ட நபித்தோழர்கள் உடனடியாக அல்லாஹ்வின் தூதர் அவர்களே, பாதையின் விதிகள் என்னவென்று
கேட்டனர்.
பாதை விதிகள்:
1. (பார்க்கத் தகாத இடங்களை விட்டும்)
பார்வையைத் தாழ்த்திக் கொள்வது.
2. (மற்றவர்களுக்கு) தொந்தரவு கொடுப்பதை
விட்டும் தவிர்ந்து கொள்வது.
3. ஸலாமுக்கு பதில் சொல்வது.
4. நல்லதை ஏவி தீமையைத் தடுப்பது.
5. வழிதவறியவருக்கு சரியான பாதையை அறிவித்துக்
கொடுப்பது.
6. அநீதி இழைக்கப்பட்டவருக்கு உதவி செய்வது
என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரி, முஸலிம், அபூதாவூத்)
நபியவர்கள் இயற்றிய இந்த பாதை விதிகளை சுருக்கமாகச் சொன்னால்
மற்றவர்களுக்கு உதவி செய்வதும் தொல்லை கொடுக்காமல் இருப்பதும் தான். ஆனால் இன்று உதவி
செய்வது ஒரு புறம் இருக்கட்டும். தொல்லை தராமல் இருந்தாலாவது பரவாயில்லை என்றே தோன்றுகிறது.
(பார்க்கத் தகாத இடங்களை விட்டும்) பார்வையைத் தாழ்த்திக் கொள்ள வேண்டுமென்றும் மற்றவர்களுக்கு
தொல்லை கொடுப்பதை விட்டும் தவிர்ந்து கொள்ள வேண்டுமென்றும் கூறினார்கள். ஆனால் இன்று
அவற்றை பார்ப்பதற்காகவும் மற்றவர்களை கேலி கிண்டல் செய்து தொல்லை தருவதற்காகவும் மட்டுமே
ஒரு கூட்டம் வெளியே சுற்றிக் கொண்டிருக்கிறது.
பாதைவிதி மீறலுக்கு தண்டனை:
நபி லூத் (அலை) அவர்களுடைய சமுதாயத்தினரின் அழிவுக்குக்
காரணமாக இருந்த குற்றங்களில் இந்த பாதை விதிகளை மீறியதைப் பற்றியும் குர்ஆன் கூறுகிறது.
நீங்கள் (பெண்களை விட்டு) ஆண்களிடம் (மோகங்கொண்டவர்களாக வருகிறீர்களா? (இத்தீய செயலைக் கொண்டு பிரயாணிகளை)
வழி மறிக்கவும் செய்கிறீர்கள் (மக்கள் நிறைந்த) உங்கள் சபையிலும் வெறுக்கத் தக்க காரியங்களை
செய்யவருகிறீர்கள். (அல்குர்ஆன்- 29:29) அவர்கள் செய்த வெறுக்கத் தக்க காரியங்கள் நிறையவே உள்ளன.
பாதைகளில் செல்வோரின் மீது கற்களை எறிவது, அவர்களை கேலி செய்வது போன்ற காரியங்களும் இந்த வசனத்தின்
விரிவுரைகளில் கூறப்பட்டுள்ளன.
தீயவழி காட்டும் சுவரொட்டிகள்:
நல்லதை ஏவி தீமையைத் தடுப்பதும் ஒரு முக்கிய காரியம்.
பாதையில் செல்வோரை தொழுகை உட்பட மார்க்கத்தின் வணக்க வழிபாடுகளின் பக்கமும் மற்ற நல்லொழுக்கங்களின்
பக்கமும் அழைக்க வேண்டும். தன்னுடைய தேவைக்காக வெளியே செல்லும் போது சமூகத்தின் நற்காரியங்களின்
பால் கவனம் செலுத்த வேண்டுமென்ற இஸ்லாத்தின் போதனை எவ்வளவு மகா உயர்ந்தது? அதே போல் பாதைகளிலும் பொது
இடங்களில் நடக்கும் தீய காரியங்களைத் தடுக்கவும் வேண்டும். ஆனால் இன்று அப்படிப்பட்ட
சூழலே இல்லை. மாற்றமாக தீய காரியங்களுக்குத் தான் அழைப்பு விடுக்கப்படுகின்றன. சுவரொட்டிகள்
கூட விபச்சாரத்திற்கு அழைப்பு விடுத்துக் கொண்டிருக்கின்றன.
வழி தவறியவர்களுக்கு சரியான பாதையை அறிவித்துக் கொடுப்பதையும்
பாதை விதிகளில் கூறப்பட்டிருப்பது ஆழ்ந்து கவனிக்கத்தக்கது. அவரவர்களுக்கு இந்நிலை
ஏற்பட்டால் தான் அதன் முக்கியத்துவம் விளங்கும். முன் பின் சென்றிராத ஒரு ஊருக்கு நாம்
சென்று விட்டால் நம்முடைய நோக்கம் நிறைவேற எத்திசையில் செல்வதென்றே தெரியாத ஒரு நேரத்தில்
முறையாக பாதை காட்டக்கூடிய ஒரு நபர் கிடைத்து விட்டால் எவ்வளவு சந்தோஷமாக இருக்கும்?
இது செய்வதற்கு இலகுவான
காரியம். இதன் மூலம் மிகப் பெரிய நன்மை கிடைக்கிறதென்றால் சாதாரண விஷயமா என்ன?
பேருந்தில் பயணம் செய்து
கொண்டிருக்கும் போது அறிமுகமில்லாத ஒரு நபர், ஊருக்கு புதிதாக வந்தவர் குறிப்பிட்ட
பஸ் நிறுத்தத்தின் பெயரைச் சொல்லி அந்த இடம் வந்தால் சொல்லுங்கள் என்று கூறுகிறார்.
நமக்கு அது மிகவும் சாதாரண காரியம் தான். ஆனால் அந்த இடம் வந்தவுடன் அவருக்கு சொல்லிவிட்டால்
அவர் எவ்வளவு சந்தோஷப்படுவார். ஒழுங்கான வழிகாட்டுதல் கிடைக்காவிட்டால் எவ்வளவு சிரமப்படுவார்.
இப்படி சின்னச்சின்ன காரியங்களில் கூட மார்க்கம் நன்மையைக் கொடுத்திருப்பது அல்லாஹ்
அடியார்களின் மீது கொண்ட அன்பையே எடுத்துரைக்கிறது.
ஸலாமுக்கு பதில் சொல்வது:
ஸலாமுக்கு பதில் சொல்வதும் பாதை விதிகளின் முக்கிய அம்சம்.
நாம் எவ்வளவு தான் முக்கியமான வேலைக்காக அவசரமாக சென்று கொண்டிருந்தாலும் ஸலாம் சொல்லப்பட்டுவிட்டால்
அதற்கு பதில் சொல்வது கட்டாயம். பெரும்பாலும் நம்மை நாடி எதிர்கொண்டு வரக்கூடியவர்
சொல்லும் ஸலாத்திற்கு யாரும் பதில் சொல்லாமல் இருப்பதில்லை. எனினும் சாலைகளில் அவரவர்களின்
வேலைகளுக்காக செல்லக்கூடியவர்கள் சொல்லும் ஸலாத்திற்கு பதில் சொல்வது பல தடவை விடுபட்டுப்
போய்விடுகிறது. இந்த நபி மொழியில் ஸலாத்திற்கு பதில் சொல்வதையும் பாதை விதிகளில் சேர்த்துக்
கூறி எந்நிலையில் யார் ஸலாம் சொன்னாலும் அதற்கு பதிலளிப்பதின் முக்கியத்துவத்தை உணர்த்தியிருக்கிறார்கள்.
ஸலாமைப் பரப்புவோம்:
பதில் ஸலாம் மட்டுமல்ல; நமக்கு எதிரில் வருபவர் அறிமுகமான
நபராக இருந்தாலும் அறிமுகமில்லாத நபராக இருந்தாலும் நாமாகவே அவருக்கு ஸலாம் சொல்வதைப்
பற்றியும் மார்க்கம் பல விதங்களில் வலியுறுத்தியிருக்கிறது. (மக்களுக்கு மத்தியில்)
ஸலாத்தைப் பரப்புங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். ஸலாமின் மூலம் அமைதியுைம்
சாந்தியுைம் பாதுகாப்பையும் பரவலாக்கச் சொல்கிறது மார்க்கம். குட் மார்னிங்,
குட் ஈவ்னிங் போன்ற
வார்த்தைகளை விட ஸலாமுடைய வார்த்தையில் நல்ல அர்த்தமும் இஸ்லாமிய கலாச்சாரமும் அடங்கியிருக்கிறது.
நபி (ஸல்) அவர்கள் அனஸ் (ரலி) அவர்களிடம் “நீர் உம்முடைய குடும்பத்தினரிடம் வந்தால் அவர்களுக்கு
ஸலாம் சொல்லுங்கள்! அது உங்களுக்கும் உங்களுடைய வீட்டாருக்கும் பரக்கத்தாக அமையும்”
என்று கூறினார்கள்.
(நூல்: திர்மிதீ) வீட்டில் பரக்கத் கிடைப்பதற்காக மக்கள் என்னென்னவோ செய்கிறார்கள்.
ஆனால் நபியவர்கள் கற்றுத் தந்த பரக்கத்திற்கான இந்த இலகுவான வழியை எத்தனை பேர் கடைபிடிக்கிறார்கள்.
இதைப் படிக்கக்கூடிய ஒவ்வொரு நபரும் அதை அமலில் கொண்டு வந்துவிட்டாலே மிகப் பெரிய பலன்
கிடைத்துவிடும். அல்லாஹ் தௌஃபீக் செய்வானாக!
இன்று நடைப்பயிற்சிக்காக மட்டுமே வீட்டை விட்டும் வெளியேற
வேண்டிய நிர்பந்தம் இருக்கிறது. எந்தத் தேவையும் இல்லாமல் பொழுது போக்குவதற்காக மட்டுமே
கடைவீதிகளில் சுற்றுபவர்களும் இருக்கிறார்கள். ஆனால் நபித்தோழர்களின் நடைமுறைகள் நமக்கு
எல்லா விதத்திலும் சிறந்த வழிகாட்டியாக இருப்பதை நினைத்து நாம் பெருமை பட்டுக்கொள்ள
வேண்டும். அவர்கள் ஸலாம் சொல்வதற்காகவே கடைவீதிக்கு செல்பவர்களாக இருந்தார்கள். இப்னு
உமர் (ரலி) அவர்கள் தம்முடைய தோழரை அழைத்துக் கொண்டு கடைவீதிக்கு செல்வார்கள். வழியில்
சந்திக்கும் அனைவரிடமும் ஸலாம் கூறுவார்கள். ஒரு நாள் இப்னு உமர் (ரலி) அவர்கள் தம்முடைய
தோழரை கடைவீதிக்கு செல்வதற்காக அழைத்தார்கள். அதற்கவர் நீங்கள் கடைவீதியில் எந்த பொருளையும்
வாங்குவதுமில்லை. விலைபேசுவதுமில்லை. பிறகெதற்கு அங்கு செல்ல வேண்டும். இங்கேயே அமர்ந்து
பேசலாம், என்று
கூறினார். அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள் கடைவீதிக்கு சென்றால் நாம் சந்கிக்கக்கூடிய
ஒவ்வொரு நபருக்கும் ஸலாம் சொல்லலாமே! அதற்காகவே கடைவீதிக்கு செல்கிறோம் என்று கூறினார்க்ள.
(நூல்: முவத்தாஇமாம் மாலிக்) கதாதா பின் நுஃமான் (ரலி) அவர்களும் மக்களிடம் ஸலாம் சொல்வதில்
பேரார்வம் கொண்டவர்களாக இருந்தார்கள். சிறுபிள்ளைகளை ஒன்றுகூட்டி அவர்களிடம் ஸலாத்தின்
சிறப்புகளைப் பற்றி பேசுபவர்களாக இருந்தார்கள். இன்று கிருத்தவப் பள்ளிக்கூடங்களில்
கல்வி பயிலக்கூடிய சிறுவர், சிறுமியர்களிடம் இந்த ஸலாம் சொல்லக்கூடிய நடைமுறையை உண்டாக்குவதில்
அதிக கவனம் செலுத்த வேண்டும்.
Masha Allah!
ReplyDelete