வட்டியைப்போன்று சூதாட்டமும் முதலாளித்துவத்தின் ஒரு முக்கிய
அம்சம். முற்காலத்தில் மக்கள் தனிப்பட்ட முறையில் தான் சூதாட்டத்தில் ஈடுபடுவர். ஆனால்
இன்று அதற்கென கம்பெனிகள் உருவாகிவிட்டன. சில நபர்களின் வட்டத்திற்குள் இருந்த சூதாட்டம்
இன்று சர்வதேச ஆட்டமாகிவிட்டது. லாட்டரியோடு சூதாட்டம் முடிந்திடாமல் இன்ஷுரன்ஸ்,
ஷேர்மார்க்கட் என அதனுடைய
நெட்வொர்க் விசாலமாகிக் கொண்டிருக்கிறது. விளையாட்டு வீரர்கள் தங்களுக்கு மத்தியில்
சூதாடுவது ஒரு புறமிருக்க இரசிகர்களும் பந்தயத்தில் குதிக்கின்றனர். இதனால் சிறுவர்களின்
உள்ளத்திலிருந்து அதன்மீதிருக்க வேண்டிய வெறுப்பு வேரறுக்கப்பட்டுவிட்டது. குர்ஆன்,
ஹதீஸில் மதுவைப்போல
சூதுவும் கடுமையான முறையில் எச்சரிக்கப்பட்டிருக்கிறது. ஈமான் கொண்ட இறைவிசுவாசிகளே
திட்டமாக மது, சூதாட்டம், பலிப்பீடங்கள், குறிபார்க்கும் அம்புகள் ஆகியவை அருவருக்கத்தக்க ஷைத்தானின் செயல்களாகும். எனவே,
அவற்றைத் தவிர்த்துக்கொள்ளுங்கள்.
இதன் மூலம் நீங்கள் வெற்றி பெறலாம். (அல்குர்ஆன் 5:90) அல்லாஹ் சூதாட்டத்தை இணைவைப்புடன்
இணைத்து கூறுகிறான், என்றால் அது எவ்வளவு பெரிய கொடிய குற்றமாக இருக்கும்?! ஆனால் இன்று அது ஒரு குற்றமாகவே கருதப்படாமல்
பொழுதுபோக்கு அம்சமாக ஆக்கப்பட்டிருப்பது தான் கைசேதம்.
நினைத்தாலே குற்றம்:
தன்னுடைய நண்பனிடம் வா! சூதாடலாம் என்று கூறினால் அவன்
தர்மம் செய்யட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்) சூதாடவில்லை. அதன்
பக்கம் அழைத்த குற்றத்திற்கே தர்மத்தின் மூலம் பரிகாரம் தேடவேண்டுமென்று நபியவர்கள்
கூறுகிறார்கள். ஆடுபுலியாட்டம் ஆடுபவன் அல்லாஹ் மற்றும் இறைத்தூதருக்கு மாறுசெய்துவிட்டான்,
என்று நபி (ஸல்) அவர்கள்
எச்சரித்தார்கள். (அபூதாவூத் -4940) ஒரு தடவை உஸ்மான் (ரலி)அவர்கள் மிம்பரின் மீது நின்றுகொண்டு
மக்களே! ஆடுபுலியாட்டம் (சூது) ஆடுவதை விட்டுவிடுங்கள். ஏனெனில் உங்களில் சிலருடைய
வீடுகளில் ஆடுபுலியாட்டப் பலகை இருப்பதாக எனக்கு தகவல் வந்துள்ளது. எனவே, யார்யாரிடத்தில் அந்தப் பலகை
இருக்கிறதோ அவர் அதை எரித்துவிடட்டும். அல்லது உடைத்துவிடட்டும், என்று கூறினார்கள். மற்றொருமுறை
மிம்பரிலிருந்தவாறே கூறினார்கள். மக்களே! ஆடுபுலியாட்டம் விஷயத்தில் ஏற்கனவே நான் எச்சரித்துவிட்டேன்.
பிறகும் அதை நீங்கள் எறியவில்லை. எனவே, நான், விறகுகளை சேகரித்து யார்யாருடைய வீட்டில் அந்தப்பலகை இருக்கிறதோ
அந்த வீடுகளை நெருப்பு வைக்க திட்டமிட்டுள்ளேன், என்று கூறினார்கள். (கன்ஜுல் உம்மால்)
இன்று பிள்ளைகளுக்கு பள்ளிக்கூட விடுமுறை காலங்களில் விளையாடுவதற்காக கேரம் போர்ட்
வாங்கிக்கொடுக்கிறார்கள். அதனால் மார்க்கத்திற்கோ உடலுக்கோ எந்த லாபமும் இருப்பதில்லை.
தொழுகை நேரமும் ஞாபகத்தில் வருவதில்லை. வீடியோ கேம் பற்றிச் சொல்லத் தேவையில்லை. மௌட்டீக காலத்தில் பணத்தை வைத்து மட்டும் சூதாடமாட்டார்கள்.
மனைவி மக்களையும் வைத்து சூதாடுவார்கள். வெற்றிபெறுபவர் தோற்றவருடைய பணத்தையும் குடும்பத்தையும்
எடுத்துக்கொள்வார், என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். (தஃப்ஸீருத் தப்ரீ)
சூது என்பது.... :
ஒரு காரியம் நடக்கவும் செய்யலாம், நடக்காமலும் போகலாம். இப்படிப்பட்ட
காரியம் நடந்தால் உனக்கு இவ்வளவு பணம் நான் தருவேன். நடக்கவில்லையானால் நீ தரவேண்டும்,
என்று கூறுவதற்குப்
பெயர் சூதாட்டம். விளையாட்டில் ஒரு குறிப்பிட்ட அணி வெற்றி பெற்றால் பணம் என்று பந்தயம்
கட்டுவது போல் . அல்லது ஒரு தரப்பில் உறுதியாக பணம் கொடுப்பது. மறு தரப்பிலிருந்து
அந்தப் பணம் நமக்கு கிடைக்காமலும் போகலாம் அல்லது அதைவிட அதிப்படியான பணத்தை கிடைக்கச்
செய்யலாம். ஜெனரல் இன்ஷுரன்ஸ், லாட்டரியைப் போல. வெற்றி, தோல்வியின் போது ஒரு தரப்பு மட்டும்
பணம் தருவதாகக் கூறினால் அது சூதாட்டமாக ஆகாது.
விளம்பரப் பரிசுகள்:
நாம் கொடுத்த பணத்திற்குச் சமமான பகரம் கிடைத்துவிட்டாலும்
சூதாட்டமாக ஆகாது. இன்று அதிகமான வியாபாரிகள் தங்களுடைய தயாரிப்புகளை விளம்பரப்படுத்துவதற்காக
அந்தப் பொருளுடன் ஏதாவது குறிப்பிட்ட எண்கள் கொண்ட ஒரு கூப்பனையும் கொடுப்பார்கள். பிறகு குலுக்கல் முறையில் ஒரு நம்பர்
தெரிவு செய்யப்பட்டு அந்த கூப்பன் வைத்திருப்பவருக்கு அன்பளிப்புகளை வழங்குவர். இம்முறையில்
விற்கப்பட்ட அந்தப் பொருள் மார்க்கட் விலைக்கே விற்கப்பட்டிருந்தால் நம்முடைய பணத்திற்கான
முழுப் பகரமும் கிடைத்துவிட்டது. அதற்குப்பிறகு குலுக்கலில் கிடைப்பது வியாபாரியின்
புறத்திலிருந்து அன்பளிப்பாகிவிடும். (இஸ்லாம் அவ்ர் ஜதீத் மஆஷீ மஸாயில் - 3/359)
சுற்றுலாத்தளங்களில் சூதாடடம்:
சுற்றுலாத் தளங்களிலும் பொருட்காட்சிகளிலும் பெற்றோர்கள்
தங்களுடைய பிள்ளைகளை சூதாட்டத்தில் ஈடுபடுத்துகிறார்கள். அதை ஒரு விளையாட்டாகவும் யோகத்தை
சோதிப்பதாகவும் நினைத்துக் கொள்கிறார்கள். குறிப்பிட்ட கட்டணத்தை செலுத்திவிட்டு சிறுவர்கள்
அந்த விளையாட்டில் ஈடுபடுவார்கள். உதாரணமாக ஒரு பந்தை உருட்டி விடவேண்டும். அது குறிப்பிட்ட
இடத்தில் விழுந்தால் அதற்குரிய பரிசுப்பொருட்கள் கிடைக்கும். அப்படி விழவில்லையானால்
எதுவுமே கிடைக்காது. நாம் கட்டிய கட்டணம் எந்த லாபமுமின்றி போய்விடும். இது போன்ற ஏராளமான
சூதாட்ட விளையாட்டுக்களை சுற்றுலாத் தளங்களில் பார்க்கலாம். இணைவைப்புக் குற்றத்துடன்
இணைத்த கூறப்பட்டிருக்கும் சூதாட்டத்தை முஸ்லிம் பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளில்
உள்ளத்தில் பதிய வைத்தால் அந்தப் பிள்ளைகள் எந்தமாதிரியான சிந்தனையுடன் வளருவார்கள்? மௌட்டீக காலத்தில் அநியாயமான முறையில் நடைபெறக்கூடிய நிறைய வியாபார
நடைமுறைகள் இருந்தன. அவற்றையெல்லாம் நபியவர்கள் தடை செய்து விட்டார்கள். உதாரணமாக,
வியாபாரி ஒரு கல்லைக்
கொடுத்து இதை எறியுங்கள்! அது எந்த ஆடையில் விழுகிறதோ அந்த ஆடை பத்து திர்ஹத்திற்குப்
பகரமாக உங்களுக்கு சொந்தமாகிவிடும், என்று கூறுவார். நபி (ஸல்) அவர்கள் இந்தக் கல்எறிந்து
நடக்கும் விற்பனையைத் தடை செய்தார்கள். ஒரு ஆடையைத் தொட்டுவிட்டாலே அந்த ஆடையை வாங்கிவிட்டதாக
கருதப்படும். இந்த முறையையும் நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். (முஸ்லிம்) யாருடைய
பணமும் அவருடைய மனதிருப்தியின்றி நியாயமான முறையில் கொடுக்கல் வாங்கல் நடந்தாலே தவிர
ஹலால் ஆகாது. கூட்டு வியாபாரத்தில் லாப நஷ்டம் மார்க்கத்தின் வழிகாட்டலுக்கு முரணாக
குலுக்கல் முறையில் அதாவது குலுக்கலில் யார் பெயர் வருகிறதோ அவர் தான் அந்த மாதத்தின்
லாப நஷ்டத்திற்கு முழு பொறுப்பு என்று முடிவு செய்தால் இதுவும் சூதாட்டமே!
ஒட்டக இறைச்சி சூதாட்டம்:
மௌட்டீக காலத்தில் சூதாட்டத்தில் பலமுறைகள் நடைமுறையில்
இருந்தன. அவற்றில் ஒன்று ஒட்டக இறைச்சி சூதாட்டம். ஒரு ஒட்டகத்தை அறுப்பார்கள். அவற்றை
சமமாகப் பங்கிடாமல் ஏற்றத்தாழ்வாக பல பிரிவுகாளகப் பிரிப்பார்கள். அதாவது பல அம்புகளில்
குறிப்பிட்ட எண்களை எழுதி பிறகு ஒவ்வொருவருடைய பெயரில் ஒரு அம்பை எடுப்பார்கள். அதில்
எந்த அளவு குறிக்கப்பட்டிருக்கிறதோ அந்த அளவு அந்தந்த நபர்களுக்குக் கிடைக்கும். இதில்
சமத்துவம் இருக்காது, என்பது மட்டுமல்ல; சில அம்புகளில் எதுவுமே எழுதப்பட்டிருக்காது. யாருடைய பெயரில் அந்த அம்பு வந்ததோ
அவருக்கு ஒட்டகத்தில் பங்கு கிடையாது, என்பது மட்டுமல்ல; அந்த ஒட்டகத்துக்குரிய விலையையும்
அவர் தான் கொடுக்க வேண்டும். தொழுகை நோன்பு போன்ற வணக்க வழிபாடுகள் மட்டுமே மார்க்கமல்ல.
ஜாஹிலிய்யாவின் எல்லா சடங்குகளையும் முற்றாக தவிர்க்க வேண்டும். ஜாஹிலிய்யாவின் எல்லா
சடங்குகளையும் என் கால்களுக்கடியில் புதைக்கப்பட்டுவிட்டன, என்று நபி (ஸல்) அவர்க்ள ஹஜ்ஜத்துல்
விதாவின் போது கூறி இந்த இறைமார்க்கத்தை நிறைவாக்கித் தந்துவிட்டார்கள். ஆனால் இன்று நபியவர்கள் காலடியில் தங்களுடைய காலடியில் புதைத்தவற்றை
தோண்டித்தோண்டி எடுத்து ருசி பார்த்துக் கொண்டிருப்பது எவ்வகையில் நியாயம்? இன்று நண்பர்கள் நான்கைந்து பேர் ஒன்று சேர்ந்து ஹோட்டலுக்குச்
சென்று சாப்பிட்ட பின் குலுக்கல் முறையில் பெயரைத் தெரிவு செய்வார்கள். யாருடைய பெயர்
வருகிறதோ அவர் தான் பில் கட்ட வேண்டும். ஒவ்வொரு முறை ஹோட்டலுக்குச் செல்லும் போதும்
இதே முறை தான். இதனால் ஒருவரே திரும்பத் திரும்ப பணம் செலவு செய்ய நேரிடலாம். இது போன்ற
சூதாட்டங்களில் வாலிபர்கள் விளையாட்டாக ஈடுபடுகிறார்கள். இதை அவர்களாக விரும்பி செய்தாலும்
ஹராம் தான். சோம்பேறித்தனமாக அடுத்தவனுடைய பணத்தில் சாப்பிடுவதை இஸ்லாம் விரும்பவில்லை.
இதனால் பல நேரங்களில் தங்களுக்கு மத்தியில் விரோதத்தையும் குரோதத்தையும் ஏற்படுத்தி
விடுகிறது. மது மற்றும் சூதாட்டத்தின் மூலம் உங்களுக்கிடையில் பகைமையையும் வெறுப்பையும்
ஏற்படுத்தி அல்லாஹ்வை நினைவுகூர்வதிலிருந்தும் தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்துவிடவே
ஷைத்தான் விரும்புகிறான். இப்பொழுதாவது (இவற்றிலிருந்து) விலகிக்கொள்வீர்களா?
என்று குர்ஆன் கேட்கிறது.
குலுக்கல் சீட்டு:
சுமார் ஜம்பது பேர் சேர்ந்து மாதத்திற்கு நூறு ரூபாய்
கட்டுகின்றனர். ஒவ்வொரு மாதமும் குலுக்கல் நடைபெறும். அதில் யாருடைய பேர் வருகிறதோ
அவருக்கு அனைத்து பணத்தையும் வழங்கப்படும். அவரும் தொடந்து பணம் கட்டவேண்டும். அனைவருக்கும்
அவரவர் கட்டிய பணம் கூடுதல் குறைவின்றி கிடைத்துவிடும். இது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டது
தான். இதில் மற்றவர்களுக்கு கடன் கொடுத்து உதவக்கூடிய நல்ல பண்பும் இருக்கிறது. குலுக்கலில்
பெயர் வந்து பணத்தைப் பெற்றுக்கொண்ட பின் அவர் பணம் கட்டத்தேவையில்லை, என்றிருந்தால் அது கூடாது.
(ஜுவா அவ்ர் ஜுயே கீ முரவ்வஜா ஷக்லே)
ரியல் எஸ்டேட்:
நிலம், வீடு வாங்கி விற்பது தவறில்லை. ஆனால் இன்று ரியல் எஸ்டேட்டிலும்
சூதாட்டம் ஊடுருவியுள்ளது. உதாரணமாக ஒரு நில விற்பனையாளர் கவர்ச்சிகரமான திட்டமொன்றை
அறிமுகப்படுத்துகிறார். அதாவது ஒரு நிலத்தின் விலை இரண்டு லட்சம் ரூபாய். ஆனால் இதன்
விலையை ஒரே நேரத்தில கொடுக்கத் தேவையில்லை. ஒவ்வொரு மாதமும் ஐநூறு ரூபாய் வீதம் கொடுக்க
வேண்டும். இந்தத் திட்டத்தில் சேர்ந்தவர்களுடைய பெயர்களுக்கு குலுக்கல் நடத்தப்படும்.
குலுக்கலில் யார் பெயர் வருகிறதோ அவருக்கு அந்த மாதமே நிலம் கொடுக்கப்பட்டுவிடும்.
பிறகு அவர் பணம் கட்ட வேண்டிய தேவையுமில்லை. இந்நிலையில் முதல் மாதத்தில் யார் பெயர்
வருகிறதோ அவருக்கு இரண்டு லட்சம் விலை கொண்ட நிலம் வெறும் ஐநூறு ரூபாயில் கிடைத்து
விடுகிறது. இரண்டாவது மாதத்தில் ஆயிரம் ரூபாயில் கிடைத்துவிடுகிறது. இது மார்க்கத்தில
அனுமதிக்கப்பட்டதல்ல. ஏனெனில் இங்கு நிலத்தின் விலை எவ்வளவு? என்பது தெளிவாக்கப்படவில்லை.
விற்பனை ஒப்பந்தத்தில் வாங்கப்படும் பொருளின் விலை தெளிவாக அறிவிக்கப் பட்டிருக்க வேண்டும்.
இங்கு விலை தெளிவாக குறிப்பிடப்படவில்லை. இது போன்ற ஒரு பிரச்சினைக்கு ஃபதாவா மஹ்மூதிய்யாவில்
இதே காரணத்தைக் கொண்டு கூடாது என்று தீர்வு கூறப்பட்டுள்ளது. மேலும், இதை சூதாட்டம் என்றும் வட்டி
என்றும் சொல்லமுடியும், என்றும் கூறப்பட்டுள்ளது. (16/435)
இன்ஷுரன்ஸ்:
ஜெனரல் இன்சூரன்ஸில் நாம் மாதந்தோறும் பிரீமியம் செலுத்திக்
கொண்டிருக்க வேண்டும். அந்தப் பொருளுக்கு விபத்து ஏதும் நடந்தால் அதற்குரிய இழப்பீட்டை
காப்பீட்டு நிறுவனம் கொடுத்துவிடும். அப்படி விபத்து ஏதும் நடக்க வில்லையானால் நாம்
கட்டிய பிரிமியத் தொகை எதுவும் நமக்குக் கிடைக்காது. இந்த ஒப்பந்தத்தில் ஒரு தரப்பினர்
பிரிமியம் செலுத்துவது உறுதி செய்யப்படுகிறது. ஆனால் மற்றொரு புறத்தில் பகரம் கிடைப்பது
உறுதி செய்யப்பட வில்லை. விபத்து நடந்தால் என்ற நிபந்தனை விதிக்கப்படுகிறது. அது நடக்குமா?
நடக்காதா? என்பது தெரியாது. மார்க்கத்தின்
பார்வையில் எந்த ஒரு ஒப்பந்தமும் தெளிவாக இருக்க வேண்டும். இல்லையானால் அது ஏமாற்று
வேலையாகவே கருதப்படும். விபத்து நடக்கவில்லையானால் நம்முடைய பணமும் சேர்ந்து மூழ்கி
விடும். இப்படிப்பட்ட சூதாட்ட ஒப்பந்தத்தை மார்க்கம் ஒருபோதும் அனுமதிக்காது. இன்று
வாகனங்கள் வாங்கினால் மோட்டார் வாகனச் சட்டப்படி இன்ஷுர் செய்யாமல் சாலையில் ஓட்டவே
முடியாது. இது போன்று சட்டரீதியான நிர்பந்தம் இருக்கும் பட்சத்தில் இன்ஷுர் செய்து
கொள்ளலாம். இது போன்ற சமயத்தில் பாதிப்பு ஏற்படும் போது நாம் செலுத்திய பிரீமியத் தொகையை
விட நிறுவனம் கொடுக்கும் அதிகப்படியான தொகையை, அனுபவித்துக் கொள்ள அனுமதி கிடையாது.
(நூல்:இஸ்லாம் அவ்ர் ஜதீத் மஆஷீ மஸாயில்- 3/317)
Very useful Information at right time!
ReplyDelete