Saturday, 7 September 2013

காதியானி மதம்



காதியானி மத்தின் பின்னணி
 அரசியல் சூழல் மாறுவதால் பல சமயங்களில் மார்க்க ரீதியாக பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. இதை சூழ்ச்சியாளர்கள் தவறாகப் பயன்படுத்தி தவறான கொள்கைகளை மக்களிடம் திணிப்பதற்கு முயற்சி செய்கின்றனர். அப்பொழுதெல்லாம் அவற்றை களையெடுப்பதற்கு தகுதியானவர்களை அல்லாஹ் தேர்ந்தெடுத்ததை சரித்திரம் நெடுகிலும் காணமுடியும்.  கி.பி 1857 ஆம் ஆண்டு, முதல் சுதந்திரப் போர் (சிப்பாய் கலகம்) நடந்தது. அதில் முஸ்லிம்களுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. இந்நிலையில் முஸ்லிம்கள் அல்லாஹ்வின் உதவியை எதிர்பார்த்திருந்தனர். ஆங்கிலேயனின் பிடியிலிருந்து நம்மை காப்பதற்கு புதிதாக யாராவது பிறந்து வரமாட்டார்களா? என்ற ஏக்கத்தில் இருந்தனர். இந்நிலைய மிர்ஸா குலாம் அஹ்மது என்பவன் சாதகமாகப் பயன்படுத்திக கொண்டு தன்னை நபி என்று வாதிட ஆரம்பித்து விட்டான்.

மிர்ஸாவின் வரலாற்றுச் சுருக்கம்:
1839 அல்லது 1840 ஆண்டு பஞ்சாபில் உள்ள காதியான் என்ற ஊரில் மிர்ஸா பிறக்கிறார். முறையான மார்க்க அறிவைப் பெறாமலேயே குர்ஆனை ஆய்வு செய்ய ஆரம்பித்தார். தன்னுடைய உஸ்தாதைக் கூட வீட்டு வேலைக்காரன் என்று சொல்பரிடம் என்ன ஞானம் இருக்கப்போகிறது? மிர்ஸா தன்னை ஆரம்பத்திலேயே நபி என்று வாதிடவில்லை. கி.பி. 1879 ஆண்டிலிருந்து பராஹினெ அஹ்மதிய்யா என்ற நூலை தொகுக்க ஆரம்பிக்கிறார். அதில் குர்ஆன் யாராலும அது போன்று கொண்டுவர முடியாத அற்புதம் என்பதையும நபி (ஸல்) அவர்கள் இறைத்தூர் தான் என்பதையும் அறிவுப்பூர்வமான ஆதாரங்களுடன் நிரூபிக்கிறார். அத்துடன் கிருத்துவம், ஆரிய மதத்திற்கு எதிராகவும் எழுதுகிறார்.  இஸ்லாத்தின் உண்மைத்துவத்தை நிலைநாட்டுவதற்காக நான் அல்லாஹ்வின் புறத்திலிருந்து ஏவப்பட்டிருக்கிறேன், என்று இந்நூலில் குறிப்பிடுகிறார். ஐந்து பாகங்கள் கொண்ட விரிவான இந்த நூல் வெளியானதும் தூரநோக்கு சிந்தனை கொண்ட மார்க்க அறிஞர்கள் வெகு சீக்கிரததில் இவர் தன்னை நபி என்று வாதிடுவார் என்று கூறிவிட்டனர். 1886 ஆம் ஆண்டு ஆரியர்களுடன் தான் செய்த விவாதத்தை தொகுத்து ஒரு நூல் வெளியிட்டார். இந்த நூற்களுக்குப் பின் சமூகத்தில் தனக்கு தனி அந்தஸ்து இருப்பதாக உணர்ந்தார். நாம் என்ன சொன்னாலும் ஏற்கும் ஒரு சமுதாயம் உருவானதை உணர்ந்தார். கிருத்தவர்கள், ஆரியர்களுடன் விவாதத்தில் ஈடுபட்டவர் முஸ்லிம்களிடம் விவாதிக்க ஆரம்பித்து விட்டார்.
1890 க்குப் பிறகு தான் எழுதிய நூற்களில் கியாம நாள் நெருங்கும் போது வருவார், என்று வாக்களிக்கப் பட்ட மஸீஹ் (ஈஸா) (அலை) நான் தான் என்று வாதிட்டார். 1900 க்குப் பிறகு எழுதிய நூற்களில் தன்னை ஒரு நபி என்று பகிரங்கமாக அறிவித்தார். மிர்ஸா காலராவால் பாதிக்கப்பட்டு  1908 ஆம் ஆண்டு மே 26 ஆம் தேதி மரணிக்கிறார். மௌலானா ஸனாவுல்லாஹ் (ரஹ்) அவர்கள் மிர்ஸாவை எதிர்ப்பதில் பெரும்பங்கு எடுத்துக் கொண்டார்கள். இதனால் விரக்தியடைந்த மிர்ஸா 1907 ஆம் ஆண்டு ஏப்ரல் 5 ஆம் தேதி ஓர் அறிக்கை வெளியிட்டார். அதில், நான் உண்மையிலேயே பொய்யனாக இருந்தால் அல்லாஹ் என்னை உங்களுடைய ஜீவிய காலத்திலேயே அழித்துவிடுவான். நீங்கள் பொய்யராக இருந்தால் என்னுடைய ஜீவிய காலத்திலேயே உங்களை நாசகார வியாதிகளின் மூலம் அழித்துவிடுவான், என்று கூறியிருந்தார். ஆனால் இந்த அறிக்கை வெளியான மறுவருடமே மிர்ஸா காலராவில் இறந்து விட்டார். ஆனால், மௌலானா ஸனாவுல்லாஹ் (ரஹ்) அவர்கள் அதற்குப் பின் பலவருடங்கள் வாழ்ந்தார்கள். மிர்ஸா ஒரு பொய்யன், என்பதை அல்லாஹ்வே வெளிப்படுத்திவிட்டான். அல்ஹம்துலில்லாஹ். மிர்ஸா குலாம் அஹ்மத் தன்னை நபி என்று வாதிட்டதால் அவனும் முஸ்லிம் அல்ல. அவனை ஏற்றுக் கொள்பவர்களும் முஸ்லிம்களல்ல, என்பது தெளிவாகிவிட்டது. எனினும், அவரிடம் இந்த ஒரு கொள்கை மட்டுமல்ல. அந்தக் கூட்டத்தை முஸ்லிம்களல்ல என்று கூறுவதற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன.

மிர்ஸாவின் கொள்கைகள்:
1. மிர்ஸா தன்னை நபி என்று வாதிட்டார்.
2. ஹள்ரத் ஈஸா (அலை) அவர்கள் தந்தையின்றி அற்புதமான முறையில் பிறந்தார், என்று தெளிவுபடுத்தும் குர்ஆனுடைய கூற்றை மறுக்கிறார்.
3. ஹள்ரத் ஈஸா (அலை) அவர்கள் உயிருடன் வானத்தின்பால் உயர்த்தப்பட்டதையும் உலக முடிவு நாளின் நெருக்கத்தில் உலகிற்கு வருவார்கள், என்பதையும் மறுக்கிறார்.
4. மர்யம் (அலை) அவர்களையும் ஹள்ரத் ஈஸா (அலை) அவர்களையும் விகாரமான தரக்குறைவான வார்த்தைகளால் ஏசுகிறார்.
5. ஹள்ரத் ஈஸா (அலை) அவர்களின் முஃஜிஸா எனும் அற்புதங்களை மறுக்கிறார்.
6. நபி (ஸல்) அவர்களின் ஹதீஸ்களைப் பற்றி தகாத வார்த்தைகளைக் கூறுகிறார்.
7.  الجهاد ماض الى يوم القيامةஜிஹாது கியாம நாள் வரை நடக்கும், என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆனால், மிர்ஸா, ஜிஹாதின் சட்டம் மாற்றப்பட்டுவிட்டது. இனி ஜிஹாது என்பதே இல்லை. ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஜிஹாது செய்வது ஹராம் என்று குறிப்பிட்டார்.
8. தன்னை ஏற்க மறுக்கும் முஸ்லிம்களை காஃபிர்கள் என்றும் விபச்சாரத்தில் பிறந்தவர்கள் என்றும் ஏசுகிறார். இப்படிப் பட்ட கொள்கையுடைய ஒரு நபரும் அவரை ஏற்றுக்கொள்பவர்களும் தங்களை அஹ்மதிய்யா முஸ்லிம்கள் என்று தங்களை அழைத்துக் கொண்டாலும் இஸ்லாத்தை விட்டும் வெளியேறிவர், காஃபிர்கள், என்பதில் இருவேறு கருத்து இருக்க முடியாது. இந்தியா மற்றும் உலக நாட்டு மார்க்க வல்லுணர்கள் இவர்களை காஃபிர்கள் என்று ஃபத்வா எனும் மார்க்கத் தீர்ப்பு வழங்கியுள்ளனர்.

உலமாக்களின் ஃபத்வாக்கள்:
1. கி.பி. 1974 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் (ஹிஜ்ரி - 1394) புனித மக்காவின் ராபிததுல் ஆலமில் இஸ்லாமி - இஸ்லாமிய் உலக கூட்டமைப்பு அஹ்மதிய்யா எனும் காதியானிகள் காஃபிர்களே, என்றும் இஸ்லாமிய வட்டத்தை விட்டும வெளியேறியவர்கள் என்றும் தீர்வு செய்து, நிச்சயமாக காதியானி என்ற மதம் தனது அருவருப்பான நோக்கங்களை மறைத்து இஸ்லாமிய பெயரிலேயே இஸ்லாத்தை அழித்தொழிக்க உருவான மதமாகும், என்று தீர்மானம் நிறைவேற்றியது. அந்த கான்ஃப்ரன்ஸில் ஏறத்தாழ 104 நாடுகளைச் சார்ந்த மார்க்க வல்லுணர்கள் கலந்து கொண்டார்கள். இதனைத் தொடர்ந்து நான்கு மாதங்களுக்குப் பின் 1974 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பாக்கிஸ்தானுடைய பாராளுமன்றத்தில் காதியானிகள் முஸ்லிமல்லாத சிறுபான்மையினர் என்று தீர்மானம் நிறைவேற்ப்பட்டது.
2. 1978 ஆம் ஆண்டு ஜூலை மாதம் கராச்சியில் நடைபெற்ற ஆசிய இஸ்லாமிய மாநாட்டில் காதியானிகள் காஃபிர்கள் என்று தீர்வு செய்யப்பட்டது.
3. 1985 ஆம் ஆண்டு ஜித்தாவின் மஜ்மவுல் ஃபிக்ஹில் இஸ்லாமி எனும் ஃபிக்ஹ் இஸ்லாமியின் கூட்டமைப்பு காதியானிகள் காஃபிர் என்று தீர்ப்பளித்தது.

காதியானி மதத்தினருடன் நம்முடைய அணுகுமுறை:
ராபிததுல் ஆலமில் இஸ்லாமி அறிவுறுத்தும் வழிமுறைகளில் சில:
1. அனைத்து இஸ்லாமிய அமைப்புகளும் தமது பகுதியில் காதியானிகள் பாடசாலைகள், அநாதை இல்லங்கள் மற்றும் எங்கெல்லாம தங்கள் அமைப்புகளை செயல்படுத்துகிறார்களோ அங்கெல்லாம் அவற்றுக்கு தடை ஏற்படுத்த வேண்டும். மேலும் காதியானிகள் பற்றியும் அவர்களின் கொள்கைகளை தெளிவுபடுத்தி மக்கள் காதியானிகளின் சதிவலையில் விழாமல் இருக்க விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
2. இப்பிரிவினர் காஃபிர்கள் என்றும் அவர்கள் இஸ்லாமிய வட்டத்தை விட்டும் வெளியேறியவர்கள் என்றும் பகிரங்கமாக அறிவிப்பு செய்ய வேண்டும்.
3. காதியானி - அஹ்மதிய்யா ஜமாத்தாருடன் கொடுக்கல் வாங்கல் வைக்கக்கூடாது. பொருளாதார, சமூக, கலாச்சார அனைத்து வகையான தொடர்புகளையும் துண்டித்துக் கொள்ளவேண்டும். அவர்களுடன் திருமணபந்தம் வைததுக்கொள்ளக்கூடாது. அவர்களை முஸ்லிம்கள் கப்ருஸ்தானில் அடக்கம் செய்யக்கூடாது. அவர்களை காஃபிர்களாகவே நடத்த வேண்டும். இவை தவிர அவர்கள் அறுக்கும் பிராணிகளின் இறைச்சியை சாப்பிடக்கூடாது. அவர்களுடனான எல்லா உறவையும் துண்டித்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் அவர்கள் காஃபிர்கள் என்பது மட்டுமல்ல. இஸ்லாத்திலிருந்து மதம் மாறிய முர்தத்துகளாவார்கள். அவர்கள் முஸ்லிம்களாக இருந்து காதியானிகளாக மாறினாலும் சரி தலைமுறை தலைமுறையாய் காதியானிகளாக இருந்தாலும் சரி அவர்களுடன் எந்த கொடுக்கல் வாங்கலும் வைத்துக்கொள்ளக் கூடாது. அவர்களுடன் வியாபாரத்தில் கூட்டாகக் கூடாது. நம்முடைய குடும்ப  மற்றும் சமூக வைபவங்களில் அவர்களை அழைக்கக்கூடாது. நாமும் அவர்களுடைய வீட்டுக்கு செல்வதோ அவர்களுடைய திருமணங்களில் கலந்து கொள்வதோ கூடாது. ஏனெனில் இவர்கள் இஸ்லாத்தின் பெயரால் குஃப்ரை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்கள் ஜிந்தீக் - ஆவார்கள். இவர்கள் தௌபா செய்யாத வரை எந்த முஸ்லிமும் தொடர்பு வைத்துக்கொள்ள முடியாது.

இறுதி நபித்துவம்:
நபி (ஸல்) அவர்கள் இறுதி நபி என்பது குர்ஆன், ஹதீஸின் மூலம் தெளிவாக விளங்கப்படும் கொள்கையாகும்.
உங்களுக்காக இன்று உங்களுடைய மார்க்கத்தை பூர்த்தியாக்கி விட்டேன். மேலும் உங்களின் மீது என்னுடைய அருட்கொடையை நிறைவு செய்துவிட்டேன். உங்களுக்காக இஸ்லாத்தை மார்க்க வழிமுறையாக அங்கீகரித்துவிட்டேன்.  (அல்குர்ஆன் 4:3)
நபி (ஸல்) அவர்களுக்குப் பிறகும் நபி வருவார்கள் என்று நம்புவது அல்லாஹ் அருட்கொடையை நிறைவு செய்துவிட்டதாகக் கூறும் இந்த வசனத்தை நிராகரிப்பதாகும்.
முஹம்மது (ஸல் அவர்கள்) உங்களுடைய ஆண்களில் யாருக்கும் தந்தையாகமாட்டார். எனினும் அல்லாஹ்வின் தூதராகவும் நபிமார்களில் இறுதியானவராகவும் இருக்கிறார். அல்லாஹ் யாவற்றையும் அறிந்தவனாக இருக்கிறான். இந்த வசனமும் நபியவர்கள் இறுதி நபி என்பதை தெளிவுபடுத்துகிறது. இந்த வசனத்தில் உள்ள காதமுந்நபிய்யீன் என்ற வார்த்தைக்கு அரபி அகராதிகளின் கருத்துப்படி இறுதி நபி என்ற பொருளே வரும். மிர்ஸா குலாம் அஹ்மது தம்முடைய குடும்பத்தில் கடைசி குழந்தையாக பிறந்தார். எனவே, தன்னை காதமுல் அவ்லாத் குழந்தைகளில் இறுதியானவர், என்று அவரே கூறியுள்ளார். எனவே, இந்த வார்த்தைக்கு இறுதி நபி என்பதை அவரும் ஏற்றாக வேண்டும். குர்ஆனில் பல இடங்களில் உமக்கு முன்னர் இறக்கி வைக்கப்பட்ட வேதம் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் எந்த இடத்திலும் உமக்குப் பின்னர் வரும் நபி என்றோ வேதம் என்றோ கூறப்படவில்லை. இறுதி நபித்துவத்தை வலியுறுத்தும் ஏராளமான ஹதீஸ்கள் உள்ளன.
இஸ்ரவேலர்களை அவர்களுடைய நபிமார்களே நிர்வகித்து கண்காணித்துக் கொள்வார்கள். ஒரு நபி இறந்துவிட்டால் அவருக்குப்பிறகு மற்றொரு நபி வருவார். எனினும் எனக்குப் பின்னால் எந்த நபியும் வரமாட்டார். கலீஃபாக்கள் இருப்பார்கள். அதிமாக இருப்பார்கள்..., என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)
இஸ்ரவேலர்களின் சீர்திருத்தத்திற்காக தொடர்படியாக நபிமார்கள் அனுப்பப்பட்டுக் கொண்டிருந்தார்கள். ஆனால், நபி (ஸல்) அவர்களுடைய உம்மத்தினருக்கு சீர்திருத்தத்திற்காக நபிமார்கள் அனுப்பப்பட மாட்டார்கள், என்பதை இந்த ஹதீஸின் மூலம் அறிய முடிகிறது. நபியவர்கள் எனக்குப் பின்னால் கலீஃபாக்கள் வருவார்கள், என்று கூறியதன் மூலம் நபித்துவத்தின் ஒரு சிறு பகுதி கூட இனி கிடையாது. அது முற்றாக முழுமை பெற்றுவிட்டது, என்பதை விளங்கமுடிகிறது. இவை சில உதாரணங்கள் மட்டுமே! முஃப்தீ ஷஃபீஃ (ரஹ்) அவர்கள் இறுதிநபித்துவத்திற்கு ஆதாரமாக நூற்றுக்கணக்கான இறைவசனங்களையும் நபிமொழிகளையும் தங்களுடைய கத்மெ நுபுவ்வத் என்ற நூலில் கூறியுள்ளார்கள்.
ஆதார நூற்கள்: காதியானிய்யத் முதாலஆ வஜாயிஸா, மஸாயிலே காரியானீ, இஸ்லாம் அவ்ர் மிர்ஸாயிய்யத் கா உசூலீ இக்திலாஃப்,  மிஃயாருல் ஹக்.

No comments:

Post a Comment