வல்லுறவில் ஈடுபட்டவர் மக்களால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவங்கள் நிறைய இருந்தாலும், ஒரு வல்லுறவுக்கொலைக்கு மரண தண்டனை தரப்பட்டிருப்பது, இந்திய நீதிமன்ற வரலாற்றில் இதுவே முதல்முறை.
2012 டிசம்பர் 16 ஆம் தேதி, தில்லி துணை மருத்துவ மாணவி நிர்பயா (ஊடகம் சூட்டிய பெயர்) கூட்டுவல்லுறவுக் கொலை வழக்கில் தொடர்புடைய நான்கு பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. இதை நீதியின் தண்டனை என்பதைக் காட்டிலும் பெருந்திரள் விருப்பம் என்றே சொல்ல வேண்டும்.
இந்த வழக்கின் குற்றவாளிகள் 6 பேரில் ஒருவர் சிறையில் தனக்குத்தானே தூக்கு தண்டனை விதித்துக்கொண்டார். தற்போது நான்கு பேருக்கு தில்லி விரைவு நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்துள்ளது. ஒருவர் பதினேழரை வயதுள்ள இளம் குற்றவாளி என்பதால் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை மட்டுமே விதித்தது சிறார் நீதிமன்றம்.
இந்த நான்கு பேரும் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தாலும்கூட பெருந்திரள் உளவியல் சாந்தமடைந்திருக்கும். சமூக எதிர்ப்பே இருந்திருக்காது. இந்த தண்டனைக்கு எதிராக யாரும் குரல் எழுப்ப மாட்டார்கள் என்பது உறுதி. குற்றவாளிகளின் வழக்குரைஞர்கள் மட்டுமே இந்தத் தூக்கு தண்டனை மிக அதிகம் என்று கூறுவார்கள். இந்த சமூகம், அது வழக்குரைஞரின் வேலை என்றே கருதும். தூக்கு தண்டனைக்கு எதிரான அமைப்புகள் கூட இப்போதைக்கு, பெருந்திரள் சாபத்துக்கு ஆளாக விரும்பாமல், அமைதி காக்கும்!
கற்பழிப்பு வழக்கில் விரைந்து தீர்ப்பு அளிப்பதோடு, அதிகபட்சமாக ஆயுள் தண்டனை அளித்தலை நீதிபதி வர்மா கமிஷன் பரிந்துரைத்திருந்தது. பாலியல் வன்முறையில் ஈடுபடும் சிறப்புக் காவல் படையினருக்கும் இதே தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் இது போன்ற வழக்குகளைப் பதிவு செய்ய மறுக்கும் காவல்துறை அதிகாரிகள் மீது துறை நடவடிக்கை எடுக்காமல், குற்ற வழக்காகவே கருதி விசாரிக்க வேண்டும் என்றும்கூடப் பரிந்துரை செய்திருந்தது.
அதிகபட்ச தண்டனையாக ஆயுள் தண்டனையே போதுமானது என்று வர்மா கமிஷன் பரிந்துரைத்த போதிலும், அரிய தருணங்களில் தூக்கு தண்டனை விதிக்கலாம் என்று மத்திய அமைச்சரவை தனது அவசரச்சட்டத்தில் குறிப்பிட்டது. பெருந்திரள் மனவெழுச்சியைக் கருதி இந்த அவசரச் சட்டம் நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டபோது யாரும் இந்த மரண தண்டனையை விமர்சனம் செய்யவில்லை. சட்டம் நிறைவேறியது. தற்போது நீதிமன்றமும், இந்த வழக்கை அரியதான ஒன்றாகக் கருதி, தூக்கு தண்டனை விதித்திருக்கிறது.
வர்மா கமிஷன் பரிந்துரைப்படி இவர்களுக்கு, "இறக்கும்வரை சிறையில் இருக்க வேண்டும்' என்று தண்டனை விதிக்கப்பட்டிருந்தால், பெருந்திரள் கோபத்துக்கும், விமர்சனங்களுக்கும் நீதிமன்றம் ஆளாகியிருக்கும். இனிமேல், நாடு முழுவதும் இதேபோன்ற வல்லுறவு வழக்குகளில் தூக்கு தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்ற குரல் உரக்க ஒலிக்கும்.
"இவ்வாறு பெருந்திரள் விமர்சனங்களுக்காக தீர்ப்புகள் அமைவது சரியாக இருக்குமா? தூக்கு தண்டனையால் வல்லுறவுக் குற்றங்கள் குறைந்துவிடுமா?' என்று கேள்வி எழுப்பக்கூட ஒருவரும் முன்வர மாட்டார்கள்.
பாலியல் குற்றங்கள் உணர்ச்சி சார்ந்தவை. உணர்வெழுச்சியால் மட்டுமே நடைபெறுபவை. இதற்கான காரணிகளை கட்டுப்படுத்தாமல், தூக்கு தண்டனையால் மட்டுமே குற்றங்களைக் கட்டுப்படுத்திவிட முடியுமா?
நாடு முழுவதும் தற்போது வல்லுறவு வழக்கில் ஈடுபடுவோரில் பாதிக்கும் மேற்பட்டோர் இளம் சிறார்களாக இருப்பது அதிகரித்துவருகிறது. காரணம் என்ன?
ஊடகம், சமூக வலைதளங்களில் காமக்கிளர்ச்சி தரும் படங்கள், காட்சிப்பதிவுகள், கட்டுப்படுத்தப்படாமல், அனைத்து வயதினரும் திறந்து பார்க்கும் விதத்தில் இருக்கின்றன. திரைப்படங்கள் காதல் தீயை வளர்க்கின்றன. வளர்இளம் சிறார்கள் அசாதாரண பாலியல் தூண்டுதலுக்கு ஆளாக்கப்படுகிறார்கள். புதுப்புது சேனல்கள் பார்வையாளர்களை ஈர்க்க, அழகான பெண்களையே வேலைக்கு அமர்த்துகின்றன. ஆடைகளையும் தீர்மானிக்கின்றன. இதனை எந்தப் பெண்ணியவாதியும் எதிர்ப்பதாகத் தெரியவில்லை. காசு கொடுத்தால் எந்த விளம்பரத்தையும் ஒளிபரப்ப முடியும். அரசு எந்தத் தணிக்கையும் இல்லாமல் அவற்றை அனுமதிக்கிறது. மதுவுக்கும் வயது ஒரு தடையில்லை.
இந்தக் காரணிகளைக் கட்டுப்படுத்தாதவரை, தூக்குதண்டனையால் மட்டுமே பாலியல் குற்றங்களையோ, வல்லுறவு நிகழ்வுகளையோ கட்டுப்படுத்திவிட முடியாது. உணர்வுபூர்வமாக மட்டுமே சிந்திக்காமல், அறிவுபூர்வமாகவும் அணுகினால் இது புரியும்.
கொலை செய்தவனைப் போலவே, கொலை செய்யத் தூண்டியவனுக்கும் அதே தண்டனையை சட்டம் பரிந்துரைக்கிறது. என்னசெய்ய, ஊடகங்களையோ, அரசையோ தண்டிக்க முடியாதே...
நன்றி: தினமணி தலையங்கம்- 14 செப்- 2013
No comments:
Post a Comment