Monday, 9 December 2013

ஸஃபர் மாதம் - ஒரு வரலாற்றுப் பார்வை



ஸஃபர் மாதம் தொடர்பாக மௌட்டீக காலம் முதற்கொண்டு பல மூடநம்பிக்கைகள் இருந்ததை வரலாற்றில் காண முடியும். ஸஃபர் அது வயிற்றுப் புழு. மனிதனுடைய வயிற்றில் இருந்து அவனை கொன்று விடுகிறது. அவனுக்குரிய மரண நேரம் வருவதற்கு முன்பே இறந்து விடுகிறான், என்று நம்பினர். ஸஃபர் மாதத்தையே பீடை மாதமாக கருதினர். (அவ்னுல் மஃபூத்)


ஸஃபர் மாதத்தை பீடை மாதமாக கருதப்பட்டது.  மௌட்டீக காலத்தில் இந்த மாதத்திற்கு ஸஃபருல் கைர் - நல்ல ஸஃபர் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. அவர்கள் நல்லது என்று நம்பியதால் நல்லதாகவோ கெட்டது என்று நம்பியதால் கெட்டதாகவோ ஆகப்போவதில்லை, என்பதே நம்முடைய நம்பிக்கை. (அத்தியரா)  


ஸஃபர் மாதம் முஹர்ரம் மாதத்திற்கு அடுத்து வருகிறது. முஹர்ரம் யுத்தம் ஹராமாக்கப்பட்ட மாதம். எனவே அதற்கு அடுத்து வரும் ஸஃபர் மாதத்தில் அதிமான யுத்தங்களும் குழப்பங்களும் நடக்கும் என்று நம்பினர். (நபிய்யுர் ரஹ்மா)


எனினும் சரித்திரத்தைப் புரட்டிப் பார்த்தால் இஸ்லாத்தை மேலோங்கச் செய்யும் புரட்சிகரமான பல நிகழ்வுகளை வரலாறு நெடுகிலும் காணமுடியும். நபி (ஸல்) அவர்கள் பிறந்த மாதம் எது? என்பதில் பல்வேறு கருத்துக்கள் கூறப்பட்டிருக்கின்றன. ஒரு கருத்தின் படி அது ஸஃபர் மாதம் என்றும் கூறப்பட்டுள்ளது.  (மௌசூஅதுத் திஃபாஃ அன் ரஸூலில்லாஹ் ஸல்)


ஹதீஸ் கலை வல்லுணர் இமாம் தப்ரானீ (ரஹ்) அவர்கள் ஸஃபர் மாதத்தில் தான் பிறந்தார்கள். (ஸியரு அஃலாமின் நுபலா)


நபிப்பட்டம் கிடைத்து 14 ஆம் ஆண்டு 26 ஆம் தேதியன்று (கி.பி. 622, செப்டம்பர் - 12) நபி (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து (மதீனாவுக்கு) புறப்படுவத்றகு முன் அவர்களை கொலை செய்வது பற்றி எதிரிகள் ஆலோசனை நடத்தினர். (நவூது பில்லாஹ்) குரைஷிகளின் பாராளுமன்றமாகிய தாருந்நத்வாவில் இதற்கான கூட்டம் நடந்தது. ஷைத்தான் இந்த கூட்டத்தொடருக்கு தலைவனாக இருந்தான். எல்லா குடும்பத்தாரும் ஒன்று சேர்ந்து கொலை நடவடிக்கையில் ஈடுபட வேண்டும், என்ற கருத்தை ஏற்று அப்படியே முடிவு செய்தான். மறுநாள் பிறை 27 ஆன்று நபியவர்கள் புறப்பட்டார்கள். ஆனால் எதிரிகளின் இந்த திட்டம் பலிக்க வில்லை. அல்லாஹ் நபி (ஸல்) அவர்களை எவ்வித ஆபத்துமின்றி காப்பாற்றிவிட்டான்.


உலக சரித்திரத்தில் தடம் பதித்த இந்த ஹிஜ்ராவுடைய நிகழ்வு இந்த ஸஃபர் மாதத்தில் தான் ஆரம்பமானது. (அர்ரஹிகுல் மக்தூம்) 


நபியவர்கள் கலந்து கொண்ட முதல் ஜிஹாது:
ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டு ஸஃபர் மாதத்தில் தான் அப்வா அல்லது வத்தான் யுத்தத்திற்காக நபியவர்கள் புறப்பட்டார்கள். குறைஷிகளின் வியாபாரக் கூட்டம் ஷாமிலிருந்து வந்து கொண்டிருந்தது. அவர்களை எதிர்கொள்வதற்காக நபியவர்கள் 60 முஹாஜிரீன்களுடன் சென்றார்கள். இதில் அன்ஸாரிகள் யாரும் கலந்து கொள்ளவில்லை. இதுவே நபியவர்கள் கலந்து கொண்ட முதல் ஜிஹாதாகும். சண்டை எதுவும் நடக்கவில்லை. எதிரிகள் தப்பித்துவிட்டனர். எனினும் இந்த பயணத்தில் பனூளம்ரா என்ற கோத்திரத்தாருடன் நபியவர்கள் அமைதி ஒப்பந்தம் செய்து கொண்டார்கள்.


ஹிஜ்ரி 7 ஆம் ஆண்டு ஸஃபர் மாதம் வாதில் குரா யுத்தம் நடந்தது. கைபர் யுத்தம் முடிந்து திரும்பும் போது இவர்களுடைய கோட்டை முற்றுகையிடப்பட்டது. இங்கும் இஸ்லாத்தை அழிக்க முற்பட்டுக் கொண்டிருந்த யூதர்கள் இருந்தனர். நான்கு நாள் முற்றுகைக்குப் பின் முஸ்லிம்களுக்கு வெற்றி கிடைத்தது.


யுத்தத்திற்கான அனுமதி:
எந்த காரியமாக இருந்தாலும் அல்லாஹ்வின் அனுமதியுடன் தான் முஸ்லிம்கள் செய்ய முடியும். முஸ்லிகளை எதிர்க்கும் எதிரிகளுடன் யுத்தம் செய்வதற்கும் அல்லாஹ்வின் அனுமதி தேவை.


ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டு ஸஃபர் மாதம் 12 ஆம் தேதியன்று இறைநிராகரிப்பாளர்களுடன் யுத்தம் செய்வதற்கு அனுமதி வழங்கும் இறைவசனம் இறங்கியது. எவர்களுக்கு எதிராக போர் புரியப்படுகிறதோ அவர்களுக்கு (யுத்தம் செய்ய) அனுமதியளிக்கப் பட்டுவிட்டது.ஏனெனில் அவர்கள்கொடுமைப் படுத்தப் பட்டிருக்கிறார்கள். திண்ணமாக அல்லாஹ் அவர்களுக்கு உதவி செய்ய ஆற்றல் பெற்றவனாக இருக்கிறான். (22:39)

இதுவே யுத்தம் செய்வதற்கு அனுமதி வழங்கும் முதல் வசனமாகும். இதற்கு முன்பு யுத்தம் செய்யக்கூடாது, என்ற கருத்து கொண்ட 72 வசனங்கள் இறங்கியிருந்தன.


திருமணம்:
ஹிஜ்ரி 5 ஆம் ஆண்டு ஸஃபர் மாதம் (கி.பி 626 ஜுன்) ஜைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களை நபி (ஸல்) அவர்கள் திருமணம் முடித்தார்கள். (முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்)


ஹிஜ்ரி 7 ஆம் ஆண்டு ஸஃபர் மாதம் நபி (ஸல்) அவர்கள்  ஸஃபிய்யா (ரலி) அவர்களை திருமணம் செய்து கொண்டார்கள். கைபர் யுத்தத்தில ஸபிய்யா கைதியாக பிடிக்கப்பட்டார். தலைவரின் மகளாக இருந்ததால் யூதர்கள் மணமகிழ்ந்து இஸ்லாத்தை தழுவலாம் அல்லது முஸ்லிம்களுடன் நட்புறவுடன் நடந்து கொள்ளலாம், என்பதற்காக திருமணம் செய்து கொண்டார்கள்.


நபி (ஸல்) அவர்களின் மகளார் ஃபாத்திமா (ரலி) அவர்களுக்கும் அலீ (ரலி) அவர்களுக்கும் திருமணம் நடந்ததும் ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டு ஸஃபர் மாதத்தில் தான். அப்பொழுது பாத்திமா (ரலி) அவர்களுக்கு வயது 19. அலீ (ரலி) அவர்களுக்கு 24 வயது.


ஸரிய்யது ரஜீஃ:
அளல், காரா ஆகிய இரு கோத்திரத்தார் வேண்டிக்கொண்டதற்கிணங்க மார்க்கத்தை படித்துக் கொடுப்பதற்காக நபி (ஸல்) அவர்கள் பத்து தோழர்களை ஹிஜ்ரி மூன்றாம் ஆண்டு ஸஃபர் மாதம் அனுப்பி வைத்தார்கள். போகும் வழியில் ரஜீஃ என்ற இடத்தில் எதிரிகள் 200 பேர் வழிமறித்து சூழ்ந்து கொண்டனர். இவர்கள் தப்பிப்பதற்கு வழி இல்லாமல் எதிரிகளின் சூழ்ச்சியில் சிக்கிக்கொண்டனர். அவர்களில் எட்டு பேரை அங்கேயே ஷஹிதாக்கி விட்டனர். குபைப் (ரலி) ஜைத் (ரலி) ஆகிய இருவரையும் மக்காவுக்கு அழைத்துச் சென்று எதிரியின் கைகளில் விற்றுவிட்டனர். அவர்கள் அங்கே சில காலம் கைதியாக வைக்கப்பட்டனர். ஹிஜ்ரி நான்காம் ஆண்டு ஸஃபர் மாதத்தில் கொன்றுவிட்டனர்.


இஸ்லாம்:
யமாமாவின் அதிபதி துமாமா பின் உஸால் (ரலி) (ثمامة بن اثال)அவர்கள் ஹிஜ்ரி ஆறாம் ஆண்டு முஹர்ரம் அல்லது ஸஃபர் மாதத்தில் தான் இஸ்லாத்தைத் தழுவினார்கள். துமாமா ஒரு படைநடவடிக்கையில் கைதியாக பிடிக்கப் பட்டார். அவர் மதீனாவுக்கு கொண்டு வரப்பட்டு மஸ்ஜிதுந்நபவீயின் தூணில் கட்டிவைக்கப்பட்டார். நபி (ஸல்) அவர்கள் அவரை அவிழ்த்து விடுமாறு உத்தரவிட்டார்கள். துமாமா (ரலி) அவர்கள் விடுதலையாகிச் சென்று குளித்துவிட்டு மீண்டும் நபியவர்களிடம் வந்து கலிமா சொல்லி இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள்.


ஹிஜ்ரி 7 ஆம் ஆண்டு முஹர்ரம் ஸஃபர் மாதத்திற்கிடையில் ஏமனிலிருந்து (دوس) தூஸ் கபீலாவினர் நபியவர்களிடம் வந்தார்கள். அபூஹுரைரா (ரலி) அவர்களும் துஃபைல் பின் அம்ர் (ரலி) அவர்களும் இதே கோத்திரத்தைச் சேர்ந்தவர்களே! இந்த சந்திப்பின் மூலம் 70 அல்லது 80 தூஸ் குடும்பத்தைச் சார்ந்த 400 பேர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டனர்.


ஹிஜ்ரி 8 ஆம் ஆண்டு ஸஃபர் மாதம் அம்ர் பின் ஆஸ் (ரலி) காலித் பின் வலீத் (ரலி) உதுமான் பின் அபீதல்ஹா (ரலி) ஆகியோர் மதீனா வந்து நபியவர்களின் கரம் பிடித்து இஸ்லாத்தைத் தழுவினர்.


ஹிஜ்ரி 9 ஆம் ஆண்டு ஸஃபர் மாதத்தில் ஏமனில் இருந்து பனு உத்ரா என்ற கோத்திரத்தைச் சார்ந்த 12 பேர் கொண்ட ஒரு குழு வந்தது. இக்குழுவினர் அனைவரும் நபியவர்களை சந்தித்து இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு திரும்பினர். (நூல்: முஃமின்கே மாஹோஸால்)

No comments:

Post a Comment