2013 ஆம் ஆண்டு முடிந்து 2014 ஆம் ஆண்டு துவங்கி இருக்கிறது.
அநேகமாக இதை வாசித்துக் கொண்டிருக்கும் போது
2014 ஆம் ஆண்டை
சுவாசித்துக் கொண்டிருப்பீர்கள். இந்த ஆண்டில் அனைவருடைய பார்வையும் அரசியலின் பக்கமே
திரும்பியிருக்கும். அரசியல் வாதிகளுக்கு, குறைந்த பட்சம் 40 சீட்டுகளை வைத்துக்கொண்டாவது பெரும்பான்மையை
நிரூபித்து பிரதமராக முடியுமா? என்ற கற்பனை. மக்களுக்கோ ஐந்து வருடமாக காணாமல் போனவர் (எம்.
பீ) களைப் பற்றி பல விளம்பரங்களைக் கொடுத்தும் கிடைக்கவில்லை. எப்படியும் இந்த ஆண்டு
கண்டிப்பாக கிடைத்து விடுவார்கள், என்ற நம்பிக்கை.
ஒவ்வொரு முறையும் தேர்தல் வருகிறது. போகிறது. ஆனால்,
நேர்மையான நிம்மதியான
ஆட்சி மட்டும் கேள்விக்குறியாகவே இருக்கிறது. தேர்தல் என்பது ஒரு திருவிழாவாகி விடுகிறது.
மக்களுக்கு கொண்டாட்டம். ஐந்து வருடத்திற்கு தேவையானவற்றை இந்த ஒரு வருடத்தில் சம்பாதித்து
விடவேண்டும், என்ற வைராக்கியம். அரசியல்வாதிகள் வெற்றி பெற்ற பிறகு எதையும் தரமாட்டார்கள். எனவே,
இப்பொழுது யார் எவ்வளவு
பணம் கொடுத்தாலும் பெற்றுக்கொள்ள வேண்டும். ஏனெனில் அது ஐந்து வருடமாக ஊழலியும் லஞ்சத்திலும்
சம்பாதித்த பணமாச்சே! (இங்கு நான் ஷரீஅத் சட்டம் பற்றி எழுதவில்லை)
தேர்தல் சமயத்தில் அரசியல்வாதிகள் வாக்குறுதிகளை அள்ளி
வீசுவார்கள். அவற்றை நிறைவேற்ற வேண்டுமென்ற உணர்வு உப்புக்குக் கூட இருக்காது. அதிலும்
இன்று இலவசங்களைக் காட்டி வாக்கு வங்கியை நிரப்புவது ஃபேஷனாகி விட்டது.
மக்கள் இலவசங்களை எதிர்பார்க்கவில்லை. கண்ணியமான வேலை
வாய்ப்பையும் நிறைவான ஊதியத்தையும் ஒவ்வொரு குடிமகனும் பெறுவதற்கு இந்த அரசு ஏற்பாடு
செய்துவிட்டால் அதுவே போதுமானது. தானும் தன்னுடைய குடும்பமும் வயிறு நிரம்ப சாப்பிடுவது
மட்டுமே இன்று மனிதனுடைய தேவையல்ல. அதே போன்று இரண்டு மடங்கு அளவுக்கு மற்ற தேவைகளில்
செலவாகிறது.
தங்களுடைய பெயரை விளம்பரம்படுத்தி பல இலவசங்களைக் கொடுப்பதற்குப்
பதிலாக முதலில் தரமான கல்வியையும் தரமான சிகிச்சையையும் இலவசமாக வழங்கட்டும். அரசு
கொடுக்கும் லேப்டாப், விற்று லாபம் சம்பாதிப்பதற்கும் தவறான முறையில் பயன்படுத்துவற்கும் தான் பெரும்பாலும்
பயன்படுகிறது.
மருத்துவக் கல்லூரிகளில் படிக்கும் காலமெல்லாம் தூங்கிவிட்டு
பணம் கொடுத்து பட்டம் வாங்கிவிட்டு பிறகு நோயாளிகளை வைத்து பாடம் படிக்கும் மருத்துவர்கள்
இன்று அதிகம்.
நடந்து முடிந்த நான்கு மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகளால்
ஆட்சியாளர்களை பயம் பற்றிக் கொண்டிருக்கிறது. புதிதாக வளர்ந்து வரும் கட்சிகள் பரம்பரைக்
கட்சிகனை களங்க வைத்திருக்கின்றன. தேசத் தலைநகரின் முடிவைப் பார்க்கும் போது மக்கள்
நல்ல மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள், என்பது புரிகிறது.
ஆனால் அதைத் தருவதற்கு இவ்வளவு பெரிய நாட்டில் ஆள் கிடைக்காமல் போவது தான் கைசேதம்.
புதிதாக அரசியலுக்கு வருபவர்களும் ஆரம்பத்தில் தங்களை
பெரிய சாதனையாளர்களாகக் காட்டிக் கொள்கிறார்கள். ஆனால் காலப்போக்கில் அவர்களும் பத்தோடு
பதினொன்றாகி விடுவது தான் வாடிக்கை.
பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப் பட்டதால் மட்டுமே அவர்
பிரதமராகி விடமுடியாது. ஆனால் சில ஊடகங்கள் திரும்பத் திரும்ப பிரதமர் வேட்பாளர்,
பிரதமர் வேட்பாளர் என்று
பக்கத்திற்கு நூறு முறை எழுதுவதைப் பார்த்தால் அச்சுப்பிழையில் வேட்பாளர் என்ற வார்த்தை
விடுபட்டுப் போய்விடும் போலிருக்கிறது.
வாக்கு வங்கிக் கணக்கை உயர்த்துவதற்கு எப்படி திட்டம்
போடுவதென்று தெரியாமல் எதை எதையோ யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். தான் டீக்கடை நடத்தியதால்
தேனீர் வியாபாரிகளை சிறப்பு விருந்தினர்களாக்கி பிரச்சார பொதுக்கூட்டத்தில் அவர்களுக்கு
தனி இடம் ஒதுக்கி (தேனீர் வழங்கி) அவர்களின் வாக்குகளைப் பெறமுடியுமா என்று யோசிக்கிறார்கள்.
இன்னொரு புறம் ஆட்சியில் இருப்பவர்கள் ஓரினச் சேர்க்கையாளர்களின்
வாக்குகளும் நமக்கு தப்பிவிடக் கூடாது, என்ற பேராசையில் அவர்களுக்கு சாதகமாக தேசியக் கட்சியின்
தலைவி, உச்சநீதிமன்றத்
தீர்ப்பு வேதனையளிப்பதாகவும், தீர்ப்பால் பாதிக்கப்பட்டவர்களின் அடிப்படை உரிமையை நிலைநாட்ட
நாடாளுமன்றம் தயங்கக்கூடாது என்று கருத்து தெரிவித்திருப்பதாக பத்திரிக்கைச் செய்தி.
இந்நிலை மாறவேண்டுமென்றே மக்கள் விரும்புகிறார்கள். எது எப்படி இருந்தாலும் இந்த ஆண்டில்
மக்களுக்கு நிம்மதியான பயமில்லாத ஆட்சி அமைய வேண்டும், என்பதே முக்கிய இலக்கு. மத சார்பற்ற
நாட்டில் எந்த மதவாதிகளும் தலை தூக்கிவிடக்கூடாது. மத துவேஷங்களும் ஊழலும் இல்லாத
நீதமான ஆட்சி அமையட்டும். புத்தாண்டின் வரவு நல்வரவாகட்டும்!
No comments:
Post a Comment