Friday, 14 March 2014

கீரனூரி (ரஹ்) அவர்களின் அல்அஃப்லாக் வல்அவ்காத் நூல் அறிமுகம்





கீரனூரி (ரஹ்) அவர்களின் அல்அஃப்லாக் வல்அவ்காத் நூல் அறிமுகம்

அல்லாமா கீரனூரி (ரஹ்) அவர்களுடைய அல் அஃப்லாக் வல்அவ்காத் (வானவியல் மற்றும் தொழுகை நேரங்கள், கிப்லா திசை தொடார்பாக அரபி மொழித் தொகுப்பு) என்ற நூலின் புதிய நான்கம் பதிப்பு புதுப்பொலிவுடன் அல்லாஹ்வின் அளவிலா அருளால் பிப்ரவரி - 2014 ல் வெளியாகியுள்ளது.
தொழுகை நேரம், நோன்பு, கஃபாவை முன்னோக்குவது உட்பட மார்க்கத்தின் ஏராளமான சட்டங்கள் வானவியலோடு இணைந்திருப்பதால் அரேபிய இஸ்லமியக் கல்லூரி மாணவர்கள் நவீன விண்ணியல் கலையை நன்கு அறிய வேண்டும், என்பதற்காகவும் அரபிக் கல்லூரிகளில் போதிக்கப்படுவதற்காகவும் கீரனூரி (ரஹ்) அவர்கள் தங்களுடைய அரிய முயற்சியால் இந்நூலை இயற்றியுள்ளார்கள்.

இந்நூலின் இரண்டு பகுதிகளின் முதற்பகுதியில் நவீன விண்ணியல் விஞ்ஞானத்தின் ஆய்வுகள் பற்றி கூறியுள்ளார்கள். நிதர்சனமான எந்த ஆய்வும் குர்ஆன், ஹதீஸுக்கு முரணாக இருக்கவில்லை, என்பதை நூலாசிரியர் ஆங்காங்கே நிருபித்திருக்கிறார்கள். இந்த பிரபஞ்சம் முதன் முதலில் எப்படி உருவானது? என்பதை குர்ஆன் வசனங்களின் மூலம் நிரூபித்திருக்கிறார்கள். இந்த பிரபஞ்சம் எவ்வளவு விசாலமானது, என்பதும் நாமும் நம்முடைய பங்களாவும் எவ்வளவு சிறியது? என்பதும் இந்த நூலைப் படிக்கும் போது உணரமுடியும்.

சூரியனும் சந்திரனும் தெய்வமாக வணங்கப்பட்டுக் கொண்டிருக்கும் காலத்தில் அவ்விரண்டின் உண்மை நிலையை தெளிவாகவும் விரிவாகவுமம் விளக்கி வைக்கிறது இந்நூல். இது வரை உலகத்தார் பார்த்திடாத சந்திரனின் போட்டோவை இந்நூல் பார்க்க வைக்கிறது. மனிதன் சந்திரனில் கால் வைத்த காலத்தில் இஸ்லாமே தோற்றுவிட்டதாக எதிரிகள் பிரச்சாரம் செய்தனர். சந்திர மண்டலத்துக்கு மனிதன் சென்றது ஒன்றும் இஸ்லாத்திற்கு முரணில்லை, என்பதை குர்ஆன் ஹதீஸின் மூலம் நூற்றுக் கணக்கான பக்கங்கள் கொண்ட நூற்கள் இஸ்லாமிய அறிஞர்களின் மூலம் வெளியாயின.

சந்திர மண்டலத்துக்கு மனிதன் சென்ற வரலாற்றை சுருக்கமாகக் கூறும் இந்நூல் மனிதனுடைய சந்திரப் பயணம் இஸ்லாத்தை உண்மைப்படுத்தியிருப்பதை ஆதாரப்பூர்வமாக கீரனூரி (ரஹ்) அவர்கள் விளக்கியுள்ளார்கள். சூரிய சந்திர கிரகணத்தை தெளிவுபடுத்தும் இந்நூல் இந்த பூமி பற்றிய நாம் அறியாக ஆச்சரியகரமான பல தகவல்களை உள்ளடக்கியுள்ளது.

அல்அவ்காத் எனும் இந்நூலின் இரண்டாம் பகுதியில் தொழுகை நேரக் கணக்கு மிக எளிதாகவும் சுருக்கமான முறையிலும் போதிக்கப்பட்டுள்ளது. உலகின் பல பாகங்களிலிருந்தும் தொழுகையில் கஃபதுல்லாஹ்வை முன்னோக்குவதற்கான ஒவ்வொரு ஊரின் சாய்வு கோணத்தை அறிவதற்கான கணித முறையும் கூறப்பட்டுள்ளது. இது தவிர ஸைன்டிஃபிக் கால்குலேட்டர் மூலம் சுலபமாக தொழுகை நேரத்தை அறியும் முறை பற்றியும் விளக்கப்பட்டுள்ளது.

துல்லியமாக கஃபதுல்லாஹ்வை நோக்கி பள்ளிவாசல்களை அமைப்பதற்காக கிப்லா அமைக்கும் செயல்முறை விளக்கமும் கூறப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் குறிப்பிட்ட தேதியில் குறிப்பிட்ட நேரத்தில் நிழல் கஃபதுல்லாஹ்வை நோக்கி விழும். அது பற்றிய கணிதமுறையும் தெளிவு படுத்தப்பட்டுள்ளது. அந்த முறையில் பல இடங்களில் கிப்லா திசையை நிழல் மூலம் சோதித்துப் பார்க்கபட்டதில் சரியாக இருந்து வந்திருக்கிறது.

ஹஜ்ரத் (ரஹ்) அவர்கள் இந்த நூலை கோர்வை செய்வதற்காக பல ஆண்டுகளை செலவு செய்திருக்கிறார்கள். தங்களுக்கே உரிய பேரார்வத்துடன் பெருமுயற்சி செய்து கோர்வை செய்திருக்கிறார்களள். அதற்காக வெறும் நூல்களை மட்டும் ஆய்வு செய்யவில்லை. கொடைக்கானல், காவலூர் போன்ற விண்ணியல் ஆய்வகங்களுக்கு நேரில் சென்றிருக்கிறார்கள்.

கொடைக்கானலில் அமைந்துள்ள உலகத்தரம் வாய்ந்த சூரியன் ஆய்வகத்திற்கு பலமுறை சென்றிருக்கிறார்கள். மாணவர்களையும் தங்களுடன் அழைத்துச் சென்றிருக்கிறார்கள். அச்சமயத்தில் அந்த அப்சர்வேட்டரியில் பொறுப்பேற்றிருந்த விண்ணியல் ஆய்வாளருடன் கலை சார்ந்த தகவல்களை பறிமாறிக் கொள்வார்கள். மத்ரஸாவில் டெலஸ்கோப் மூலம் ஆகாயத்தைப் பார்வையிட வேண்டுமென்பதில் ஆர்வமாக இருந்தார்கள்.

நூலின் இறுதியில் உலகின் முக்கிய நகரங்கள் இலங்கையிலுள்ள முக்கிய நகரங்கள் இந்தியா மற்றும் இலங்கையிலுள்ள முக்கிய நகரங்கள், தமிழகத்தின் முக்கிய நகரங்கள் ஆகியவற்றின் அட்ச ரேகை, தீர்க்க ரேகைகளுடனும் கிப்லா திசை - தரஜாவுடனும் அச்சிடப்பட்டுள்ளது, இந்நூலின் விசேஷ அம்சமாகும். அனுபவ முதிர்ச்சி வாய்ந்த தமிழகம் மற்றும் ஆலிம்கள் இந்நூலைப் பாராட்டி எழுதியிருப்பதையும் இந்நூலில் பார்க்கலாம்.

தமிழகம் தவிர கேரளா மற்றும் இலங்கையில் உள்ள மத்ரஸாக்களில் பாடநூலகப் பயிற்றுவிக்கப் படுகிறது. மேல்வகுப்பு மாணவர்களுக்கு இந்நூல் பாடநூலாக்கப்பட்டால் அவர்கள் விண்ணியல், தொழுகை நேரக்கணக்கு, கிப்லா அறியுதல் மட்டுமின்றி பொது அறிவிலும் உயர்நிலை அடைய வழி வகுப்பதாக அமையும்.
இந்நூல் அச்சாவதற்கு முன்பு பல ஆண்டுகளாக கையெழுத்துப் பிரதி மூலம் ஹஜ்ரத் அவர்கள் மாணவர்களுக்கு பாடம் நடத்தியிருக்கிறார்கள்.
முதன் முறையாக தாருல் உலூம் யூசுபிய்யாவின் மக்தபாவின் மூலம் 2000 ஆம் ஆண்டு இந்நூல் அச்சாகி வெளியானது. 2007 ஆம் ஆண்டு இரண்டாம் பதிப்பு வெளியானது. லெபனான் பெய்ரூத்திலிருந்து 2010 ஆம் ஆண்டு மூன்றாம் பதிப்பு வெளியானது.

தற்சமயம் 2014 ஆம் அண்டு மக்தபது யூசுபிய்யா அல்அஃப்லாக் வல்அவ்காத்தின் நான்காம் பதிப்பை வெளியிடுவதில் பெருமையடைகிறது. இந்நூலின் மூலம் நிறைவான பலனை நாம் அடைவதற்கு அல்லாஹ் தௌஃபீக் செய்வானாக! இந்நூலை நமக்கு தருவதற்காக இரவையும் பகலையும் அர்ப்பணித்த அல்லாமா கீரனூரி ஹஜ்ரத் (ரஹ்) அவர்களுடைய கப்ரை சுவர்க்கப் பூங்காவாக ஆக்கியருள்வானாக!

No comments:

Post a Comment