Saturday, 31 May 2014

நோன்பில் இஸ்லாம் செய்த சீர்திருத்தங்கள்



இஸ்லாத்திற்கும் மற்ற மதங்களுக்கும் மத்தியில் நோன்பு விஷயத்தில் பல வேறுபாடுகள் இருக்கின்றன. 

1. இஸ்லாத்திற்கு முன்னர் இருந்த மற்ற மதங்களில் நோன்பு ஆண், பெண் என எல்லா மக்களுக்கும் கடமையாக்கப் பட்டிருக்கவில்லை. மத போதகர்கள், அல்லது குறிப்பிட்ட பிரிவினர், அல்லது பெண்கள் போன்றவர்கள் மீது மட்டுமே கடமையாக இருந்தது. ஆனால் இதற்கு முற்றிலும் மாற்றமாக எந்த வேறுபாடுமின்றி அனைவரின் மீது நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. உங்களில் யார் ரமளான் மாதத்தை அடைகிறாரோ அவர் அம்மாதத்தில் நோன்பு நோற்கட்டும் என்று குர்ஆன் கூறுகிறது. (2-185)


2. பொதுவாக மற்ற மதங்களில் சூரியக்கணக்கின் படியே நோன்பு நோற்கப்படும். எனவே, பருவ கால மாற்றம் எதுவும் இருக்காது. ஒரு நாட்டில் நீண்ட பகல் கொண்ட கோடை காலமாக இருந்தால் எல்லா வருடத்திலும் நோன்பு கஷ்டமாகவே இருக்கும். ஒரு நாட்டில் குளிர் காலத்தில் நோன்பு அமைந்து விட்டால் அவர்களுக்கு எல்லா வருடத்திலும் நோன்பு எளிதாகவே இருக்கும். இஸ்லாத்தில் சந்திர கணக்கின் படி மார்க்கச் சட்டங்கள் அமைந்திருப்பதால் எல்லா வருடமும் எல்லா நாட்டவருக்கும் கோடை அல்லது குளிர் காலத்திலேயே தொடார்ந்து வராது. பருவ காலம் மாறி மாறி வரும். இதனால் குறிப்பிட்ட சமுதாயத்தினருக்கு நோன்பு சிரமமாக தெரியாது.


3. மற்ற மதங்களில் மனிதனுடைய நிர்பந்த நிலைகள் கவனிக்கப்பட்டிருக்காது. யூத மதத்தில், ஏதாவது காரணத்தினால் நோன்பு வைக்கவில்லையானால் அவன் இரண்டு துண்டாகி விடுவான். ஒருவன் யூதன் இóல்லை. ஆனாலும் அவன் யூதர்கள் இருக்கும் பகுதிக்கு பயணம் மேற்கொண்டால் அந்த பிரயாணியும் நோன்பு வைக்க வேண்டும்.

 ஆனால் இஸ்லாத்தில், நோன்பு வைக்க முடியாத அளவுக்கு வயது முதிர்ந்தவர்கள், சிறுவர்கள் சட்டத்திலிருந்து விதிவிலக்கானவர்கள். நோயாளி, பயணி, கர்ப்பிணி, குழந்தைக்கு பால் குடிப்பாட்டுபவள் போன்றவர்கள் நோன்பை விட்டு விட்டு மற்ற காலங்களில் நோற்றுக் கொள்ளலாம். குறிப்பிட்ட சில நாட்களில் (தான் நோன்பு நோற்பது கடமையாக்கப் பட்டுள்ளது.) அதே சமயம் அந்நாளில் உங்களில் யாரேனும் நோயாளியாகவோ பயணத்திலோ இருந்தால் (அவர் அந்நாட்களில் நோன்பு நோற்கவில்லையானால்) மற்ற நாட்களில் கணக்கிட்டு நோற்றுக்கொள்ள வேண்டும். நோன்பு நோற்க சக்தி பெற்றிருக்கவில்லையானால் அவர்கள் மீது ஃபித்யா (பரிகாரம்) கடமையாகின்றது. அது ஒரு ஏழைக்கு உணவளிப்பதாகும்.  என்று குர்ஆன் கூறுகிறது. (2-184)              


4. மற்ற மதங்களில் நோன்பு காலங்கள் மற்றும் முறைகளில் பெரிய ஏற்றத்தாழ்வுகள் இருந்தன. ஒன்று நாற்பது நாற்பது நாட்கள் பட்டினி கிடக்க வேண்டும். அல்லது தானியம், இறைச்சி தவிர மற்ற பழங்கள் போன்றவற்றை சாப்பிட்டுக்கொள்ளலாம். ஜைனர்களிடம் ஒவ்வொரு நோன்பும் பல வாரங்கள் நீடிக்கும். 

யூதர்களிடம் முழு 24 மணி நேரமும் நோன்பு நோற்க வேண்டும். இதிலும் இஸ்லாம் நடுநிலையைக் கையாண்டது. 

ஒரு மாதம் காலையிலிருந்து சூரியன் மறையும் வரை மட்டுமே நோன்பு நோற்க வேண்டும். ஆனால் இந்த குறுகிய காலத்தில் எதுவும் சாப்பிடவோ குடிக்கவோ கூடாது. பிறகு நீங்கள் இரவு வரை நோன்பை பூர்த்தி செய்யுங்கள், என்று கூறுகிறது குர்ஆன். (2-187)


5. யுதர்களிடம், நோன்பு திறக்கும் போது எவ்வளவு சாப்பிட முடியுமோ சாப்பிட்டுக் கொள்ளலாம். அதன் பிறகு சாப்பிட முடியாது. அப்பொழுதே அடுத்த நோன்பு ஆரம்பமாகிவிடும். அரேபியர்களிடம் இரவு தூங்குவதற்கு முன் சாப்பிட்டுக் கொள்ளலாம். தூங்கிவிட்டால் பிறகு எழுந்து சாப்பிடக்கூடாது என்ற நடைமுறை இருந்தது. இஸ்லாத்தின் ஆரம்ப காலத்திலும் இந்தச் சட்டம் அமுலில் இருந்தது. ஒரு நபித்தோழருடைய வீட்டில் சாப்பாடு ரெடியாகவில்லை. மனைவி சமைத்துக் ாெகண்டிருந்தார். அதை எதிர்பார்த்த நிலையிலேயே அவர் தூங்கிவிட்டார். மனைவி சமைத்த பின் உணவை எடுத்து வந்த போது இவர் தூங்கிவிட்டிருந்தார். அதே நிலையில் மறுநாள் நோன்பு வைத்தார். அவருக்கு மயக்கம் ஏற்பட்டு விட்டது. அப்பொழுது, இன்னும் ஃபஜ்ர் - விடியற்காலையில் வெள்ளை நூலையும் கறுப்பு நூலையும் பிரித்தறிய முடியும் வரை, நீங்கள் உண்ணுங்கள். பருகுங்கள்.... (அல்குர்ஆன் 2-187) என்ற வசனம் இறங்கியது.     
                                                                                                                                                                                         6. ஜாஹிலிய்யா - மௌட்டீக காலத்தில் நோன்பு காலத்தில் இரவு நேரத்திலும் மனைவியுடன் உடலுறவு கொள்ள மாட்டார்கள். ஒரு மாத காலம் வரை இப்படியொரு சட்டமியற்றுவது எல்லோருக்கும் எளிதாக இருக்காது. மனிதனைப் படைத்த அல்லாஹ் அவனுடைய தன்மைகளை நன்குணர்ந்தவனாகவே இருக்கிறான். எனவே அவன் இயற்றும் எந்த சட்டமும் எடுத்து நடக்க முடியாததாகவோ மனித இயல்புக்கு ஒவ்வாததாகவோ சத்தியமாக இருக்க முடியாது. மௌட்டீக காலத்தின் இந்த நடைமுறை கண்டிப்பாக யுக முடிவு நாள் வரை வர இருக்கும் சந்ததிகளுக்கு சிரமமாகி விடக்கூடாது, என்பதற்காக அந்த சட்டத்தை அல்லாஹ் மாற்றினான். ஜாஹிலிய்யாவுக்கு முரணாக அல்லாஹ்வுடைய சட்டம் எவ்வளவு எளிதானது என்பதையும் குர்ஆனுடைய வழிகாட்டல் இந்த சமுதாயத்திற்கு எவ்வளவு அவசியம் என்பதையும் புரிய வைப்பதற்காக அதற்குக் தோதுவாக சில நிகழ்வுகளை நடக்கச் செய்து அதற்குரிய தீர்வைக் வஹீ மூலம் கொடுக்கிறான்.
உமர் (ரலி) அவர்கள் ஒரு தடவை நபி (ஸல்) அவர்களிடம் இரவு நேரத்தில் பேசி விட்டு வீட்டிற்கு வந்தார்கள். மனைவி தூங்கிவிட்டாள். உமர் (ரலி) அவர்கள் உடலுறவு கொள்ள நாடினார்கள். மனைவியோ நான் தூங்கி விட்டேன், என்று கூறினார். (உமர் (ரலி) அவர்கள் மனைவி தூங்க வில்லை. நமக்காகத் தான் இப்படி சொல்கிறாள், என்று நினைத்துக் கொண்டு) நீ தூங்க வில்லை என்று கூறி விட்டு உடலுறவு கொண்டுவிட்டார்கள். இதே போன்று கஃபுப்பனு மாலிக் (ரலி) அவர்களும் செய்து விட்டார்கள். காலையில் நபி (ஸல்) அவர்களிடம் நடந்த கதையைக் கூறி எனக்கு ஏதாவது சலுகை இருக்கிறதா? என்று கேட்டார்கள். அதற்கு நபியவர்கள் உமரே! இது உங்களுக்கு தகுதியான காரியம் இல்லையே! என்று கண்டித்தார்கள். உமர் (ரலி) அவர்கள் வீட்டுக்கு சென்ற பின் மீண்டும் அழைத்து அவர்களுக்கு சாதகமாக இறங்கிய வசனத்தை அறிவித்தார்கள். (தஃப்ஸீருத் தபரீ) அந்த வசனம் வருமாறு: நோன்பு கால இரவில் நீங்கள் உங்கள் மனைவியருடன் கூடுவது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டு விட்டது. அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும் நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கிறார்கள். நீங்கள் உங்களுக்கே வஞ்சனை செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை அல்லாஹ் அறிந்திருக்கிறான். எனினும் உங்கள் பாவமன்னிப்புக் கோரியதை ஏற்றான். உங்களை மன்னித்துவிட்டான். இனி நீங்கள் இரவில் அவர்களுடன் கூடுங்கள்! ... (2:187)
இந்த வசனத்தின் தொடரில் ஃபஜ்ர் வரை சாப்பிடுங்கள்; குடியுங்கள் என்றும் சொல்லப்பட்டுள்ளது. அது கைஸுப்னு ஸிர்மா (ரலி) அவாகள் விஷயத்தில் இறங்கியது. எனினும் மனைவியுடன் கூடுவது பற்றி முதலில் கூறிவிட்டு சாப்பிடுவது பற்றி பின்னர் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் மனிதனுடைய வயிற்றுப் பசியை விட உடற்பசியின் முக்கியத்துவத்தை குர்ஆன் உணர்த்துகிறது, என்று கூறுகிறார் அல்லாமா ஷஃராவீ. நூல்: அல்ஃபிக்ஹூல் இஸ்லாமியுல் முயஸ்ஸர் 2-852))
                                                                                                                             7. யாராவது மறந்து சாப்பிட்டாலோ குடித்தாலோ நோன்பு முறியாது. அவருக்கு அல்லாஹ் தான் உணவளித்திருக்கிறான், என்று நபி (ஸல்)அவர்கள் கூறியுள்ளார்கள். திர்மிதீ- எண்: 654)
                                                                                                                      8. நோன்பாளியின் சுய விருப்பமின்றியே தற்செயலாக நோன்புக்கு முரணான காரியம் நிகழ்ந்து விட்டாலும் நோன்பு முறியாது. யாருக்காவது வாந்தி வந்துவிட்டாலோ தூக்கத்தில் ஸ்கலிதம் ஆகிவிட்டாலோ நோன்பு முறியாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூதாவூத்- 2028)
                                                                                                                9. யூதர்களுடைய அதிகமான நோன்புகள் துக்கம் அனுஷ்டிப்பதாகவே இருக்கும். எனவே, அவர்கள் நோன்பு நேரத்தில் தங்களை அலங்கரித்துக் கொள்ளமாட்டார்கள். முகத்தை கழுவ மாட்டார்க்ள.  ஆனால் இஸ்லாத்தில் நோன்பு நோற்ற நிலையில் தலைக்கு எண்ணெய் தேய்ப்பதோ சுர்மா போடுவதோ நறுமணம் பூசுவதோ குற்றமான காரியமல்ல. முகத்தை கழுவிக் கொள்வதற்கோ மிஸ்வாக் செய்வதற்கோ தடையில்லை. நோன்பு அல்லாஹ்வுக்கு மட்டுமே தெரியும் வணக்கமாகும். துக்கம் அனுஷ்டிப்பதன் மூலம் அந்த நோக்கம் தப்பிவிடும்.
                                                    இடைச் செருகலை விட்டும் பாதுகாக்கப்பட்ட நோன்பு
 நஃப்ஸை உடலை இச்சைகளை விட்டும் தடுத்து முடிந்த வரை சிரமம் கொடுத்து பயிற்றுவிப்பது தான் நோன்பு, என்று விளங்கப்படுவதால் ஒவ்வொருவரும் எந்த அளவுக்கு கஷ்டப்பட்டு பசித்திருந்து எல்லா வகையான சுகத்தையும் தியாகம் செய்து நோன்பு நோற்பாரோ அந்த அளவுக்கு அல்லாஹ்வுடைய பொருத்தம் அதிகமாக கிடைக்கும், என்ற சிந்தனை ஏற்பட வாய்ப்பு  இருககிறது, என்பது மட்டுமல்ல ஏற்கனவே இருந்த மற்ற மதங்களில் அது தான் நடந்தது. அந்த சிந்தனை தான் அவர்களை துறவறம் மேற்கொள்ளச் செய்தது. நோன்பின் நேரத்தை தாங்களாக அதிகரிக்கச் செய்தது. சில சமயம் தொடர்ந்து நோன்பு வைப்பார்கள். முஸ்லிம்களும் அவ்வப்போது இந்த சிந்தனையினால் கவரப்படவே செய்கிறார்கள். இரவு ஒரு மணி இரண்டு மணிக்கு ஸஹர் செய்வது தான் சிறந்தது என்று கருதுபவர்களும் நம்மில் பலர் இருக்கின்றனர்.
அல்லாஹ் நோன்பின் கடமை பற்றிக் கூறிய பின் உடனடியாக அல்லாஹ் உங்களுக்கு இலகுவானதைத் தான் நாடுகிறான். அவன் உங்களுக்கு கஷ்டத்தை விரும்பவில்லை, என்று கூறிவிட்டான். நபி (ஸல்) அவர்களும் மார்க்கம் அனுமதிக்காத விதத்தில் மக்கள் தங்களை கஷ்டப்படுத்திக் கொள்ளக் கூடாது என்பதற்காக அருமையான வழிகாட்டுதலைத் தந்திருக்கிறார்கள். ஸஹர் உணவைத் தாமதமாக சாப்பிடவேண்டுமென்றும் நேரம் வந்தவுடன் சீக்கிரமாக நோன்பு திறக்க வேண்டும் என்றும் வலியுறுத்தக் கூடிய பல நபிமொழிக உள்ளன. ஹகீமுல் இஸ்லாம் மௌலானா ஷாஹ் வலியுல்லாஹ் முஹத்தித் தஹ்லவீ (ரஹ்) அவர்கள் இந்த விஷயத்தை மிகத் தெளிவாக எழுதுகிறார்கள். நோன்பு நாட்களின் எண்ணிக்கையிலும் நோன்பு வைப்பதின் நேரத்திலும் கூடுதல் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் மார்க்கம் தெளிவாக இருக்கிறது (ஹூஜ்ஜதுல்லாஹ்) நேரத்தை கூட்டக்கூடாது என்பதற்காகவே ஸஹர், இஃப்தார் இல்லாமல் தொடர் நோன்பு வைக்கக்கூடாது என்பதிலும், ஸஹரைத் தாமதப்படுத்துதல், இஃப்தாரை துரிதப்படுத்துதல் போன்ற காரியங்களிலும் மார்க்கம் ஆர்வமூட்டுகிறது. நபியவர்கள் ஸஹர் உணவு உண்பதை பல வழிகளில் வலியுறுத்தியுள்ளார்கள். ஸஹர் சாப்பிடுங்கள். ஏனெனில் ஸஹர் செய்வதில் பரக்கத் இருக்கிறது, என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (புகாரி - 1789) நம்முடைய நோன்புக்கும் வேதக்காரர்களுடைய நோன்புக்கும் மத்தியில் உள்ள வித்தியாசம் ஸஹர் சாப்பிடுவது தான் என்றும் கூறியுள்ளார்கள். (முஸ்லிம் - 1836)
 ரமளான் மாதத்தில் மட்டுமே கடமையான நோன்பு. அந்த நாட்களில் யாரும் அதிகப்படுத்திவிடக்கூடாது என்பதிலும் ஷரீஅத் அதிக கவனம் செலுத்தியிருக்கிறது. யவ்முஷ்ஷக் அதாவது ஷஃபான் மாதம் 29 ம் நாள் மாலை பிறை பார்த்ததாக உறுதியான தகவல் ஏதும் வரவில்லை. ரமளான் என்று முடிவாகவுமில்லை. அந்நிலையில் மறுநாள் நோன்பு வைக்கக்கூடாது என்று நபியவர்கள் தடை செய்திருக்கிறார்கள். ரமளானுக்கு முன் ஒரு நாள் அல்லது இரண்டு நாள் என நோன்பு வைக்கக் கூடாது, என்றும் நபியவர்கள் எச்சரித்திருக்கிறார்கள். ஏனெனில் அந்த நாளில் நோன்பு நோற்க அனுமதித்தால் பின்னர் வரும் சமுதாயம் ரமளானோடு அந்த நாளையும் சேர்த்து கடமையான நோன்பு போல ஆக்கி விடுவார்கள். அவ்வாறே ரமளான் முடிந்தவுடன் நோன்பையும் முடித்துக் கொள்ள வேண்டும். பெருநாள் அன்று நோன்பு வைப்பதை மார்க்கம் ஹராமாக்கியுள்ளது.
                                      இஃப்தார் விருந்து:
நோன்பு திறப்பது ஒரு வணக்கம். அது வேடிக்கையாக்கப் பட்டுவிடக் கூடாது. இன்று பொதுவாக இஃப்தார் விருந்து என்ற பெயரில் ஒரு விழாவே நடத்தப் படுகிறது. அதில் வசதி படைத்தவர்கள், முஸ்லிமல்லாத அரசியல் வாதிகள் என ஆடம்பரமாக ஒரு நிகழ்ச்சி நடக்கும். பெருமை, பகட்டுக்காக நோன்பு திறக்கும் நிகழ்வு நடந்தால் நன்மையைத் தேடித் தர வேண்டிய அந்த காரியம் நம்மை எங்கோ கொண்டு போய் சேர்த்துவிடும். வணக்க வழிபாடுகள் அரசியலாக்கப் பட்டுவிடக் கூடாது. 
எனினும் அல்லாமா காலித் ஸைஃபுல்லாஹ் ரஹ்மானீ அவர்கள், நோன்பு திறப்பதற்கு முஸ்லிமல்லாதவர்களை அழைப்பதில் எந்தத் தவறுமில்லை, என்று கூறியுள்ளார்கள். (நூல்: கிதாபுல் ஃபதாவா- 3/439) நோன்பு திறப்பது ஒரு வணக்கம். மாலை நேரத்தில் முஸ்லிம்கள் நோன்பு திறப்பதற்காக சிறியவர் பெரியவர், செல்வந்தர், ஏழை போன்ற  வேறுபாடு இல்லாமல் ஒன்று கூடுகின்றனர். இது துஆவுடைய நேரமாக இருக்கிறது. இப்படி நோன்பு திறக்கும் நிகழ்வு கூட உள்ளத்தை ஈர்க்கக்கூடியதாக இருக்கிறது.
இது போன்ற சமயத்தில் முஸ்லிமல்லாதவர்களையும் இஃப்தார் சமயத்தில் அழைப்பு கொடுக்க வேண்டும். முஸ்லிம்கள் அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டு வணக்கத்தை பூர்த்தி செய்வதை அவர்களும் காண வேண்டும். இது போன்ற சமயங்களில் உணவு பரிமாறப்படுவதோடு நிறுத்திக் கொள்ளக்கூடாது. மனதிற்கும் விருந்தளிக்க வேண்டும். அந்த நேரத்தில் மார்க்கத்தின் நல்ல பல விஷயங்களை அவர்களுடைய காதில் போடுவதற்கு முயற்சிக்க வேண்டும். நோன்பு திறப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பே அவர்கள் அழைக்கப்பட வேண்டும். அச்சமயத்தில், இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகளான ஏகத்துவம், நபித்துவம், மறுமையின் சிந்தனை, நோன்பின் உன்னதமான நோக்கங்கள் மற்றும் குர்ஆனைப் பற்றிய அறிமுகம், அதனுடைய உண்மைத்துவம், இன்று வரை அந்த குர்ஆன் அப்படியே பாதுகாக்கப் பட்டிருப்பதற்கான வரலாற்றுச் சான்றுகள் போன்றவற்றை கோர்வையாகச் சொல்ல வேண்டும். இவ்விதமாக இந்த இடம் வெறும் சாப்பிடும் தலமாக மட்டும் இல்லாமல் அல்லாஹ்வின் பக்கம் அவர்களை அழைப்பு விடுப்பதற்கும் நேர்வழியை அவர்கள் அடைந்து கொள்வதற்கும் இஃப்தார் விருந்து ஒரு காரணமாக அமைந்து விடும் என்று கூறுகிறார் காலித் ஸைஃபுல்லாஹ் ரஹ்மானீ அவர்கள். (நூல்: ஷம்அஃ ஃபரோஜான் - 2/77) ஆனால் இன்று இதே போன்றதொரு முறையில் இஃப்தார் விருந்து நடைபெறுகிறதா? என்பதை யோசிக்க வேண்டும்.

No comments:

Post a Comment