சரித்திரம் படிப்போம்! சாதனை படைப்போம்!!
வரலாற்றுக் கலை பழமையானது. உலகின் முதல் கலை வரலாற்றுக்
கலை தான் என்று சொன்னாலும் மிகையாது. ஏனெனில் நடந்த நிகழ்வுகளை கோர்வை செய்வது தான்
வரலாறு. எனவே, உலகம் உருவானதுடன் வரலாற்றுக் கலையும் ஆரம்பமாகிறது.
வரலாறு படிப்பதென்பது மார்க்கத்திற்கு தொடர்பில்லாத உலகம்
தொடர்பான காரியமாக மட்டும் எண்ணிவிடக்கூடாது. இஸ்லாமிய வரலாறு அவ்வளவு சாதாரணமானதல்ல.
எனவே தான் இமாம் ஜுஹ்ரீ (ரஹ்) அவர்கள் நபி (ஸல்) அவர்களுடைய யுத்தங்கள் தொடர்பான வரலாற்றுக்
கலை பற்றி பேசும்போது அது இம்மை மற்றும் மறுமைக்கான கல்வி, என்று கூறினார்கள். (முக்தஸரு தாரீகி
திமஷ்க்) வரலாற்றின் நோக்கம்:
சரித்திரத்தை சரித்திரமாக படிக்கவேண்டுமே தவிர நாவலாக
படிக்கக்கூடாது. சமுதாயத்தின் எதிர்காலம் கடந்த காலத்தோடு பின்னிப் பிணைந்திருக்கிறது.
காலம் என்பது அறுந்து போகமுடியாத ஒரு சங்கிலித்தொடர். நிகழ்காலத்தில், சாதனைகள் பல நிகழ்த்த வேண்டுமென்றால்
கடந்த கால வரலாற்றின் மூலம் படிப்பினை பெற்றாக வேண்டும். நம்முடைய சரித்திரத்தை நாம்
படிக்கவில்லையானால் நம்முடைய தகுதியையும் திறமையையும் நாம் சரியாக அளவிட முடியாது.
`சரித்திரம்
பெருமை பட்டுக்கொள்வதற்காக அல்ல; படிப்பினை பெறுவதற்காக` என்பதை நன்றாக மனதில் பதிய வைத்துக்கொள்ளவேண்டும்.
இஸ்லாமிய வரலாற்றின் ஒவ்வொரு வரியும் வைர எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை. அது
மனித வாழ்க்கையின் உயர்வை உண்மையாக்கும் உரைகல். இஸ்லாமிய சரித்திரத்தைப் பற்றி மட்டும்
தெரிந்து கொள்ளக்கூடாது. இஸ்லாத்திற்கு மாற்றமான கொள்கைகளையும் அதன் சரித்திர நிகழ்வுகளையும்
நன்றாக அறிந்திருக்க வேண்டும். அப்பொழுது தான் ஒவ்வொரு காலத்திலும் தோன்றக்கூடிய இஸ்லாத்திற்கு
எதிரான சூழ்ச்சிகளை எதிர்கொள்ள முடியும். எனவே தான், உமர் (ரலி) அவர்கள் ஒருவர் இஸ்லாத்தில்
வளர்ந்து இஸ்லாமிய சரித்திரம் மற்றும் அதன் கொள்கைகள் பற்றி நன்கு அறிந்திருநது ஜாஹிலிய்யா
எனும் மௌட்டீக காலத்து நிலைபற்றி அறியவில்லையானால் அவர் இஸ்லாத்தை படிப்படியாக அலைக்கழித்துவிடுவார்,
என்று எச்சரித்தார்கள்.
(மாதா கஸிரல் ஆலம் .....) அப்துல்லாஹிப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் தங்களுடைய மாணவர்களுக்கு
மார்க்கத்தைப் போதிப்பதற்காக சிறப்பானதொரு பாடத்திட்டத்தை வகுத்திருந்தார்கள். அவர்கள்
ஒரு நாள் மார்க்கச் சட்டங்கள் பற்றி மட்டுமே போதிப்பார்கள். ஒரு நாள் குர்ஆன் விளக்கவுரை
மட்டுமே நடத்துவார்கள். ஒரு நாளை இஸ்லாமிய வரலாறுப் பாடத்துக்காக மட்டும் ஒதுக்குவார்கள்.
ஒரு நாள் அரபுக்கவிதைகள் பற்றி விளக்கம் கொடுப்பார்கள். ஒரு நாள் அரேபியர்களின் பழங்காலத்து
வரலாற்றை போதிப்பார்கள். இப்னுஅப்பாஸ் (ரலி) அவர்கள் வரலாற்றுக்கு அதிக முக்கியத்துவம்
கொடுத்திருக்கிறார்கள். இஸ்லாமிய வரலாற்றை மட்டும் போதிக்கவில்லை. மௌட்டீக காலத்து
அரேபிய வரலாற்றையும் போதித்திருக்கிறார்கள். இன்று பாலஸ்தீனம், இஸ்ரேல், பைத்துல் முகத்தஸ் போன்ற வார்த்தைகள்
சமூக வளைதளங்களின் மூலம் ஆண்கள், பெண்களுக்கிடையே பரவலாக அறியப் பட்டிருக்கின்றன. எனினும்,
பைத்துல் முகத்தஸ்
- ஜெருஸத்தின் ஆரம்பகால, தற்கால வரலாற்றை நிறைவாக அறிந்து கொள்ளாத வரை மத்திய கிழக்கு
பிரச்சினையில் நிறைவான முடிவான வெற்றி பெறுவதென்பது சாத்தியமில்லை, என்றே சொல்ல வேண்டும். தேசிய
வரலாற்று தினம்:
ஆரம்பத்தில் வரலாற்றை அறிவதற்காக பாடத்திட்டத்தில் வரலாற்றுக்கலை
அறிமுகப்படுத்தப் படவில்லை. யாராவது சரித்திரம் தெரிய வேண்டுமென்றால் அந்தக் கலை சார்ந்த
நூற்களைத் தேர்ந்தெடுத்து தாங்களே படித்து தெரிந்து கொள்வார்கள். முஸ்லிம்கள் தான்
தங்களுடைய ஆட்சிகாலத்தில் இஸ்லாமிய வரலாற்றை தனிப்பாடமாக தயாரித்து பாடத்திட்டத்தில்
சேர்த்தார்கள். ஏனெனில் நபி (ஸல்) அவர்களுடைய வாழ்க்கை வரலாறு மற்றும் நபித்தோழர்களின்
வரலாற்றின் மீது தான் இஸ்லாத்தின் அடிக்கல் நாட்டப் பட்டிருக்கிறது. (ஹிந்துஸ்தான்
மே முஸல்மானோங்கா நிஜாமெ தஃலீமோ தர்பியத்)
இன்று முஸ்லிம்கள் தங்களுடைய வரலாற்றை படித்து பாதுகாப்பதில்
படிப்பினை பெறுவதில் எந்த அளவுக்கு அக்கரை செலுத்துகிறார்களோ தெரியவில்லை. எனினும், அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 24 ஆம் தேதியை தேசிய வரலாற்று
தினமாகக் கொண்டாடப்படுகிறது. இன்று லட்சக்கணக்கான முஸ்லிம்கள் மக்காவில் கூடி இபுறாஹிம்
(அலை) அவர்களுடைய குடுபம்பத்தினரின் தியாக வரலாற்றைத் தானே நினைவுகூருகிறார்கள். இஸ்லாம் இதுபோன்ற தினங்களை அங்கீகரிக்குமேயானால்
அந்நாட்களை சர்வதேச வரலாற்று தினங்கள் என்று கூடச் சொல்லலாம். நபி (ஸல்) அவர்களுடைய மற்றும் நபித்தோழர்களின் வரலறு
மக்களுக்கு மத்தியில் பரவலாக பேசப்பட்டாலும் நபி (ஸல்) அவர்களுடைய பெயர் கூடத் தெரியாத
பெயர்தாங்கி முஸ்லிம்களும் இருக்கத் தான் செய்கிறார்கள். நபித்தோழர்களின் காலத்துக்கு
பிந்தைய இஸ்லாமிய வரலாறு பேசப்படுவதென்பது அரிதாகவே காணப்படுகிறது. முற்காலத்தில் வாழ்ந்த
மக்களின் வரலாறுகளில் பகுத்தறிவுடையோருக்கு அரிய படிப்பினை உள்ளது.... (12:111) என்று கூறுகிறது குர்ஆன். எனவே தான்
இறைவேதத்தில் சரித்திரங்கள் திரும்பத்திரும்ப கூறப்பட்டுள்ளன. வரலாற்றின் மூலம் படிப்பினை
பெறுபவர்கள் தான் அறிவாளிகள் என்ற கருத்தை சூசகமாக விளக்கும் இந்த வசனம் சரித்திரத்தை
எந்த நோக்கத்தில் படிக்க வேண்டும் என்பதையும் தெளிவுபடுத்துகிறது. நாவல் படிப்பது போல்
பொழுது போக்குவதற்காக இல்லாமல் வாழ்க்கையில் தேவையான திருப்பத்தை ஏற்படுத்துவகற்காக
படிக்க வேண்டும். `உங்களில் இறைநம்பிக்கை கொண்டு
நற்செயல் புரிந்தவர்களுக்கு அல்லாஹ் வாக்குறுதி அளிப்பது என்னவெனில் அவர்களை பூமியில்
ஆட்சி (அதிகாரத்தை கொடுத்து) பிரதிநிதிகளாக்குவான்; அவர்களுக்கு முன் சென்ற மக்களை பிரதிநிதிகளாக்கியது
போன்று! மேலும் அல்லாஹ் அவர்களுக்காக எந்த மார்க்கத்தை விரும்பினானோ அந்த மார்க்கத்தை
வலுவாக நிலைநாட்டுவான். மேலும் அவர்களின் அச்சநிலையை அமைதிநிலையாக மாற்றித் தருவான்.
அவர்கள், என்னையே
வணங்குவார்கள். எனக்கு எதையும் இணையாக்க மாட்டார்கள். இதன் பிறகும் எவர்கள் நிராகரித்தார்களோ
அவர்களே பாவிகள் ஆவர்` (அல்குர்ஆன் 24;55)
அல்லாஹ்வின் இந்த வாக்குறுதியை வரலாற்றின் ஒவ்வொரு பக்கமும்
உண்மைப்படுத்திக் கொண்டிருக்கிறது. ஃபிரான்சுடைய எல்லையிலிருந்து மங்கோலியா வரை முஸ்லிம்களின்
பேரரசு முரசு கொட்டிக்கொண்டிருந்தது. பிறுகு என்ன ஆனது? அவர்கள் எங்கே போனார்கள்? சாதனை படைத்தவர்களின் வரலாற்றின்
இறுதிப்பக்கங்கள் ஏன் இருட்டாகிவிட்டன? அந்த இறுதிப் பக்கங்கள் தான் இன்றைய சமுதாயம் படிப்பினை
பெற வேண்டிய முதன்மைப்பக்கங்கள். நம்முடைய கடந்த கால வரலாற்றையும் தற்போதைய நிலையையும்
ஒப்பிட்டுப் பார்க்கும்போது மலைக்கும் மடுவுக்குமுள்ள வித்தியாசத்தை உணரமுடிகிறது.
நபித் தோழர்கள் வரலாற்றுத் துறைக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள். பிள்ளைகளுக்கு
குர்ஆனைக் கற்றுக்கொடுப்பது போல் சரித்திர நிகழ்வுகளை மனதில் பதிய வைத்திருக்கிறார்கள.
என்னுடைய தந்தை எனக்கு இஸ்லாமிய சரித்திரத்தில் யுத்த நிகழ்வுகளை கற்றுகொடுத்துவிட்டு
மகனே! இது உங்களுடைய மூதாதையர்களின் சிறப்புக்குரிய அம்சங்களாகும். அவற்றை நினைவுகூராமல்
விட்டுவிடுவதின் மூலம் வீணாக்கிவிடாதீர்கள், என்று கூறுவார்கள், என்று ஸஃதுபின் அபீவக்காஸ்
(ரலி) அவர்களுடைய மகனுடைய மகன் (பேரர்) இஸ்மாயீல் பின் முஹம்மது (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
(முஹம்மதுர்ரஸுலுல்லாஹ்)
குர்ஆனுடைய அத்தியாயத்தை கற்றுக் கொள்வது போல் நாங்கள்
நபி (ஸல்) அவர்களுடைய யுத்த வரலாற்றைக் கற்றுக்கொள்வோம், என்று ஜைனுல் ஆபிதீன் பின் ஹுஸைன்
(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். (அல்பிதாயா வந்நிஹாயா)
மஸ்ஜிதில் வரலாற்று வகுப்பு:
உமருப்னு அப்தில் அஜீஸ் (ரஹ்) அவர்களுடைய ஆட்சி காலத்தில்
டெமாஸ்கசுடைய மஸ்ஜிதில் வரலாற்றுப் பாடத்துக்காக ஏற்பாடு செய்து அதற்குத் தகுதியான
வரலாற்று ஆசிரியரையும் நியமித்தார்கள், என்பது வரலாறு. கதாதா பின் நுஃமான் (ரலி) அவர்களுடைய பேரர்
ஆஸிம் பின் உமர் (ரஹ்) அவர்கள் நபி மொழிகளை அறிவிப்பது போல் வரலாற்றுத் துறையிலும்
தேர்ந்திருந்தார்கள். மஸ்ஜிதில் இஸ்லாமிய சரித்திரத்தையும் நபித்தோழர்களின் சிறப்புக்களையும்
மக்களுக்கு விளக்கி வைக்குமாறு ஆஸிம் (ரஹ்) அவர்களுக்கு உமர் பின் அப்துல் அஜீஸ் (ரஹ்)
அவர்கள் கட்டளையிட்டார்கள். (தஹ்தீபுத்தஹ்தீப்)
இன்று நபித்தோழர்களின் வரலாறு முறையாக தெரியாததால் இஸ்லாமிய
இளைய தலைமுறை பல வழிகெட்ட கூட்டங்களில் இணைந்து விடுகிறது. பெயர்தாங்கி முஸ்லிம்களே
கூட நபித்தோழர்களின் வரலாற்றில் ஏகப்பட்ட இடைச்செருகல்களை சேர்த்து வைத்திருப்பதால்
நபித்தோழர்களின் மீதே தவறான எண்ணத்தை உண்டாக்கி விடுகிறது.நபிமொழிகள் திரட்டப்பட்ட
அருமையான வரலாற்றை நிறைவாக சமுதாயம் அறிந்திருந்தால் ஹதீஸை மறுக்கும் வழிகேட்டிலிருந்து
மிக எளிதாக பாதுகாப்பு பெறமுடியும். நம்முடைய
சரித்திரம் சாதாரணமானதல்ல. ஒரு நேரத்தில் விஞ்ஞானம் அறிய வேண்டுமென்றால் அரபி படித்தாக
வேண்டிய நிர்பந்தம் இருந்தது. பாதிரிமார்கள் கிருத்தவர்களை அரபி கற்றுக்கொள்ளும்படி
தூண்டுவார்கள். ஒரு காலத்தில் இன்றைய அமெரிக்காவைப் போன்று பக்தாத் தான் உலகச் சந்தையாக
செயல்பட்டது. பக்தாதுடைய நாணயம் அங்கீகரிக்கப்பட்ட நாணயமாகத் திகழ்ந்தது. உலகின் உற்பத்திப்
பொருட்களுக்கு பக்தாதின் சந்தை தான் விலை நிர்ணயம் செய்யும். இன்று ஒரு பக்கம் அந்த
நிலை மாறிவிட்டதென்றால் மறுபக்கம் முஸ்லிம்களின் உண்மையான வரலாறு மறைக்கப்பட்டும் மாற்றப்பட்டும்
இருக்கிறது. இந்திய முஸ்லிம் ஆட்சியாளர்கள் பற்றியும் இந்திய முஸ்லிம்கள் இந்நாட்டிற்காக
செய்த தியாகம் பற்றியும் உண்மைக்கு மாறான தகவல்கள் உலாவருவதே இதற்கு போதுமான சான்று.
எனினும் இஸ்லாமிய வரலாற்றாசிரியர்கள் தங்களுடைய படைப்புகளில் நேர்மையை கையாண்டிருக்கிறார்கள்.
மாற்றுமதத்தவர்களாக இருந்தாலும் அப்படியே பதிவு செய்திருக்கிறார்கள். யூனானீ மருத்துவத்துறையில்
முஸ்லிம்கள் பல புதிய முறைகளைக் கொண்டுவந்தனர். தங்களுடைய ஆய்வு முடிவுகளையும் அதில்
சேர்த்தனர். எனினும் முஸ்லிம்கள் வரலாற்றைத் திரிக்க முயற்சிக்க வில்லை. யூனானீ மருத்துவம் என்ற பெயரில் கூட எந்த மாற்றமும்
செய்யவில்லை. அந்த அளவுக்கு நேர்மையாக நடந்து கொண்டார்கள். மர்ராகேஷைச் சார்ந்த அல்லாமா
முஹ்யுத்தீன் அபூ முஹம்து அவர்கள் அல்முஃஜப் ஃபீ அக்பாரில் மக்ரிப் என்ற ஒரு வரலாற்று
நூலை கோர்வை செய்துள்ளார்கள். அதில் ஸ்பெயினுடைய வரலாற்றைத் தொகுத்துள்ளார்கள். அந்த
நூலில் முஸ்லிம்களுக்கு பாதகமான பின்வரும் நிகழ்வையும் மறைக்காமல் பதிவு செய்துள்ளார்கள்.
ஒரு தடவை முஸ்லிம்களுக்கும் கிருத்தவர்களுக்கும் மத்தியில் யுத்தம் நடந்த போது கிருத்தவர்கள்
முற்றுகையிடப்பட்டார்கள். தண்ணீர் செல்லும் பாதை கூட அடைக்கப்பட்டு விட்டது. தண்ணீர்
கிடைக்காமல் பலர் இறக்க ஆரம்பித்தனர். இந்நிலையில் கிருத்துவர்கள் ஒன்று கூடி பிரார்த்திக்க
ஆரம்பித்தனர். (எதிர்பாராவிதமாக) திடீரென மழை பொழிந்தது. அதன் பிறகு எதிரிகள் பலம்
பெற்றுவிட்டனர். வேறு வழியின்றி அமீருல் முஃமினீர் அபூ யஃகூப் முற்றுகையை விலக்கிக்
கொள்ளவேண்டிய கட்டாயமாகிவிட்டது. (ஹிந்துஸ்தான்
மே முஸல்மானோங்கா நிஜாமெ தஃலீமோ தர்பியத்)
No comments:
Post a Comment