Wednesday, 21 January 2015

சுவனப்பிரவேசத்தைத் தடுக்கும் கடன்




கடன் இல்லாமல் வாழ்க்கை இல்லை, என்ற அளவுக்கு மக்களின் நிலை மாறிவிட்டது. தொழில் தேடுபவர்களுக்கும் கடன் தேவை. தொழில் நிறுவனங்களுக்கும் கடன் தேவை. கடன் கொடுப்பதற்கு வங்கிகள் தயாராக இருக்கின்றன. ஆனால், வாங்கிய கடனை திருப்பிச் செலுத்துவதில் பெரும் சிக்கலே உருவாகிவிடுகிநது. வங்கித் துறை முழுவதையும் இன்று ஆட்டிப்படைக்கும் மிகப்பெரிய அரக்கன் இந்த வாராக்கடன் தான். பொருளாதார வளர்ச்சியை தடுத்து நிறுத்தும் அளவுக்கு இந்த வாராக்கடன் வளர்ச்சியடைந்துள்ளது. வாராக்கடன்:
சென்னையில் 6-5-2014 அன்று, பொதுத்துறை வங்கிகளில் வாராக்கடன் தொகை ரூ 5 இலட்சத்து ஐம்பதாயிரம் கோடியாக அதிகரித்துவிட்டது, என்று அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது. கடந்த 2008 ஆம் ஆண்டு மார்ச் வரை ரூ 39 ஆயிரம் கோடியாக இருந்த வாராக்கடன் தொகை, 2013 ஆம்  ஆண்டில் ரூ 5 இலட்சத்து 50 ஆயிரம் கோடிக்கு மேல் சென்றுவிட்டது. வங்கிக்கடனை திருப்பிச்செலுத்தாதவர்களின் பட்டியலில் 406 பெரும் தொழில் நிறுவனங்கள் இருப்பது தான் ஆச்சரியம். (தி இந்து - மே.7 - 2014)
வங்கிகள் மட்டுமல்ல. தனிநபர்களிடத்தில் வாங்கிய கடன்களை திருப்பிச் செலுத்தாதவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. பெரிய தொழில் நிறுவனங்கள் இழுத்தடிப்பது போல் கடனை திருப்பிக்கொடுக்க வசதியுள்ளவர்களும் இழுத்தடிக்கிறார்கள், என்பதே பரவலான விமர்சனம். கடன் வழங்குவதற்கு நிறைய சிறப்புகள் உள்ளன. அவ்வாறே கடன் கொடுத்த பிறகு கடனை வசூலிப்பதிலும் நலினமாக நடந்து கொள்ளவேண்டும், என்பதையும் மார்க்கம் வலியுறுத்துகிறது. இரண்டு தடவை கடன் கொடுத்தால் ஒரு தடவை தர்மம் செய்த நன்மை கிடைக்கும், என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (இப்னுமாஜா) கொடுத்த கடனை திரும்பப் பெறுவதில் நலினமாக நடந்து கொள்பவனை அல்லாஹ் சுவனத்தில் நுழைவிப்பான், என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நஸயீ) ஆனால் இன்று வாங்கிய கடனை முறையாகத் திருப்பித் தராமல் ஒவ்வொரு முறையும் தவணை கேட்டு வருடக்கணக்கில் இழுத்தடிப்பது பலருக்கு வாடிக்கையாகிவிட்டது. ஆனால், அவர்களுடைய வாழ்க்கையின் நடைமுறைகளைப் பார்த்தால் அந்த அளவுக்கு சிரமப்படுவதாகத் தெரியவில்லை. கடன் கொடுப்பதிலும் சிரமப்படுப்படுபவர்களுக்கு அதிகப்படியான தவணை கொடுப்பதிலும் நபி (ஸல்) அவர்கள் ஆர்வமூட்டியிருப்பதைப் போல் கடன் வாங்கிவிட்டு கண்டுகொள்ளாமல் இருப்பவர்கள் பற்றியும் நபி (ஸல்) அவர்கள் கடுமையாக எச்சரித்துள்ளார்கள், என்பதை இவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். கடன் வாங்கலாமா?:
நபி (ஸல்) அவர்களும் நபித்தோழர்களும் கடன் வாங்கியிருக்கிறார்கள். பாராட்டத்தக்க முறையில் அக்கடனை திருப்பிச் செலுத்தியிருக்கிறார்கள். உமர் (ரலி) அவர்கள் கலீஃபாவாக இருக்கும் போது அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களிடம் கடன் வாங்கியிருக்கிறார்கள். (அல்அம்வால் லிஅபீ உபைத்)
அதற்காக எதற்கெடுத்தாலும் கடன் வாங்கிக் கொண்டிருக்கக்கூடாது. நபி (ஸல்) அவர்கள் தங்களுடைய தொழுகையில் யா அல்லாஹ் நான் உன்னிடம் பாவத்திலிருந்தும் கடனிலிருந்தும் பாதுகாவல் தேடுகிறேன், என்று துஆ செய்வார்கள். ஒருவர், அல்லாஹ்வின் தூதரே! கடனிலிருந்து இந்தஅளவு அதிகமாக பாதுகாவல் தேடுகிறீர்களே? என்று கேட்டபோது நபி (ஸல்) அவர்கள், ஒரு மனிதன் கடனாளியாகிவிட்டால் பேசினால் பொய் பேசுவான். வாக்குறுதியளித்தால் மாறுசெய்வான், என்று கூறினார்கள். (புகாரி)
கடன் கொடுத்தவர் கடனைக் கேட்டால் பல தடவை பொய்யான காரணத்தை சொல்ல வேண்டியதேற்படும். ஒரு மாதத்தில் தருகிறேன், என்று சொல்லியே பல மாதங்களுக்கு இழுத்தடித்து வாக்குறுதியை மீற வேண்டியதேற்படும். ஒரு கடன் முனாஃபிக் எனும் நயவஞ்சகனுடைய தன்மைகளை ஏற்படுத்திவிடுவது எவ்வளவு ஆபத்தானது! ஒரு தடவை நபி (ஸல்) அவர்கள் உங்களை நீங்களே தற்கொலை செய்து கொள்ளாதீர்கள்! என்று கூறினார்கள். அப்பொழுது எங்களை தற்கொலை செய்வது எப்படி? என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் கடன் என்று பதிலளித்தார்கள். (முஸ்தத்ரக் லில்ஹாகிம் - 2216)
இன்று இந்த நபிமொழியை கண்கூடாகக் காண்கிறோம். கடன் வாங்கிவிட்டு அதைத் திருப்பிக் கொடுக்க வழியின்றி ஏராளமானோர் தற்கொலை செய்து கொள்ளும் செய்திகளை அன்றாடம் ஊடகங்களின் வாயிலாக அறிந்துகொண்டிருக்கிறோம். உங்களை கடன் வாங்கும் விஷயத்தில் எச்சரிக்கிறேன். ஏனெனில் அதன் ஆரம்பம் கவலையாக இருக்கும். அதன் இறுதி முடிவு ஒன்றுமில்லாமல் போண்டியாகிவிடுவதாகும்., என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முவத்தா மாலிக் - 1262) இன்று வட்டிக்குக் கடன் வாங்கி வட்டியும் கட்டமுடியாமல் கடனையும் அடைக்க முடியாமல் தங்களுடைய சொத்துக்களையெல்லாம் இழந்தவர்கள் ஏராளம். கடன் வாங்குவதற்கான நிபந்தனைகள்:
1. வாழ்க்கயை சீராக நடத்த முடியாத நிர்பந்த சூழ்நிலையில் தான் கடன் வாங்க வேண்டும். கியாம நாளில் ஒருமனிதரிடம் நீ கடன் வாங்கி மக்களுடைய உரிமைகளை ஏன் வீணாக்கிவிட்டாய் என்று கேட்கப்படும். அதற்கவர் நான் சாப்பிடுவதற்கோ குடிப்பதற்கோ வாங்கி வீணாக்கவில்லை. எனினும், நெருப்பு பிடித்து அல்லது திருட்டு போய் அல்லது (வியாபார) நஷ்டமாகி கஷ்டத்திற்குள்ளாகி விட்டதால் தான் வாங்கினேன், என்று சொல்வார். அதற்கு அல்லாஹ் இன்று அந்தக் கடனை நான் நிறைவேற்றுவதற்கு மிகவும் கடமைப் பட்டவனாக இருக்கிறேன், என்று கூறுவான். (முஸ்னத் அஹ்மத் - 1708)
விரும்பத்தகாத நோக்கத்திற்காக ஒருவர் கடன் வாங்கியிருக்கவில்லையானால் அவர் அந்தக் கடனை நிறைவேற்றும் வரை அல்லாஹ் அவருடன் இருக்கிறான், என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (இப்னுமாஜா - 2409)
2. கடனைத் திருப்பிக் கொடுக்க வேண்டுமென்ற உறுதியான எண்ணம் இருக்க வேண்டும். யார் திருப்பிக் கொடுக்கும் எண்ணத்தில் கடன் பெறுகிறாரோ அல்லாஹ் அந்தக்கடனை நிறைவேற்றச் செய்துவிடுவான். யார் மக்களின் செல்வத்தை அழிக்கும் எண்ணத்தில் கடன் பெறுகிறாரோ அவரை அல்லாஹ் அழிவுக்குள்ளாக்கி விடுகிறான், என்று நபி (ஸல்) கூறினார்கள். (புகாரி - 2212)
கடனை நிறைவேற்றும் எண்ணமில்லாமலேயே கடன் வாங்கிவிட்டு அதை திருப்பிக் கொடுக்காத நிலையில் ஒருவன் இறந்துவிட்டால் அவன் திருடன் என்ற நிலையில் அல்லாஹ்வைச் சந்திப்பான், என்றும் நபி (ஸல்) அவர்கள் எச்சரித்தார்கள். (மஜ்மவுஜவாயித்) 3. வாங்கிய கடனை இழுத்தடிக்காமல் உரிய நேரத்தில் திருப்பிக் கொடுப்பதற்கான சக்தியும் சாத்தியமும் இருக்க வேண்டும். கடனை நிறைவேற்றுவதற்கான எந்த வழியும் தெரியாமல் கடன் வாங்கக் கூடாது. நமக்கு தேவை இருப்பது என்பது உண்மை தான். அதற்காக அடுத்தவருடைய செல்வத்தை அவரை ஏமாற்றி நாம் சாப்பிடுவதை எவ்வாறு அனுமதிக்க முடியும்? நிறைவேற்றுவதற்கான வசதி வாய்ப்பு இல்லாமல் கடன் சுமையை நம்பிக்கையுடன் சுமந்து கொள்ள பிரியப்பட மாட்டேன், என்று இப்னு அபீமூஸல் அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறினார்கள். (முக்னீ - இப்னு குதாமா)

பெருங்குற்றம்:
வசதியிருந்தும் கடனை உரிய நேரத்தில் கொடுக்காமல் இழுத்தடிப்பது அநியாயம், என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி). கடனை நிறைவேற்றாமல் மரணித்தவன் அவன் திருடனாக இருக்கும் நிலையில் தான் அல்லாஹ்வைச் சந்திப்பான்.  ஒரு தீனார் அல்லது ஒரு திர்ஹம் கடன் இருக்கும் நிலையில் ஒருவன் மரணித்து விட்டால் அவனுடைய நன்மைகளின் மூலமாகவே அக்கடனுக்கு பகரம் வழங்கப்படும். ஏனெனில் மறுமையில் தீனார், திர்ஹம் என்பதே கிடையாது, என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (இப்னுமாஜா -2405)  ஒருவருடைய கடன் அவருடைய நன்மைகளையும் தின்று விடும். யுத்தகளத்தில் போரிட்டு ஷஹாதத் எனும் வீரமரணம் அடைந்தாலும் கூட அவர் சுவர்க்கம் செல்வதற்கு அந்தக்கடன் தடையாக இருக்கும், என்பதும் ஹதீஸின் வாயிலாக அறியமுடிகிறது. எனவே தான் நபி (ஸல்) அவர்கள் கடன் வாங்கிவிட்டு நிறைவேற்றாமல் மரணித்தவருக்கு தொழ வைக்க மறுத்துவிட்டார்கள். உங்களுடைய தோழருக்கு நீங்களே தொழுது கொள்ளுங்கள், என்று கூறிவிட்டார்கள். நிறைவேற்றப்படாத கடன நபி (ஸல்) அவர்களின் துஆவைவிட்டும் தடுப்பதும் இஸ்லாத்திற்காக இரத்தம் சிந்தி மரணித்த பின்பும் சுவனத்தில் நுழைவதற்கு அந்தக் கடன் வந்து குறுக்கே நிறுபதும் சாதாரணமான விஷயமல்ல. எனவேதான், நபி (ஸல்) அவர்கள் ஒரு தடவை தங்களுடைய தலையை வானத்தின் பக்கமாக உயர்த்தி நெற்றியில் கை வைத்த வண்ணமாக சுப்ஹானல்லாஹ்! எவ்வளவு கடுமையான (தகவல்) இறங்கிவிட்டது! என்று கைசேதப்பட்டுக் கூறினார்கள். நபியவர்களின் நிலையைப் பார்த்து விட்டு நாங்கள் பயந்து போனோம். அதற்கு விளக்கம் கேட்பதற்குக் கூட தைரியம் வரவில்லை. மறுநாள் தான் நாங்கள் அதற்கு விளக்கம் கேட்டோம், என்று நபித்தோழர்கள் கூறினார்கள். அப்பொழுது நபி(ஸல்) அவர்கள், என்னுடைய உயிர் எவன் கைவசமுள்ளதோ அவன் மீது ஆணையாக ஒரு மனிதரின் மீது கடன் இருக்கும் நிலையில் அவர்  அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டு பிறகு உயிர் கொடுக்கப்பட்டு மீண்டும கொல்லப்பட்டு பிறகு உயிர் கொடுக்கப்பட்டு மீண்டும் கொல்லப்பட்டாலும் அவருடைய கடனை நிறைவேற்றப்படாத வரை அவர் சுவனத்தில் நுழைய மாட்டார், என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நஸயீ- 4605)

தண்டனை:
கடன் கொடுத்தவர் வசதியில்லாதவரிடத்தில் நலினமாக நடந்து கொள்ள வேண்டுமென்பது போல் வசதியிருந்தும் கடனை நிறைவேற்றாதவர் தண்டிக்கப்படவும் வேண்டும். 1. அவருடைய சாட்சி ஏற்றுக்கொள்ளப் படாத அளவுக்கு அவரை ஃபாஸிக் எனும் பாவி - நேர்மையற்றவரின் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டும். 2. அவருடைய கண்ணியத்திற்கு மானம் மரியாதைக்கு பங்கம் விளைவிக்கலாம்
3. சிறைப்பிடிக்கலாம். 4. வெளியூர் பயணம் செல்வதை முடக்கலாம். (கர்ள் அவர் உஸ்கீ ஷரயீ ஹைஸிய்யத்) வசதியுள்ளவர் கடனைத் தள்ளிப்போடுவது அவருடைய மானம் மரியாதையைக் குலைப்பதையும் அவருக்கு தண்டனை வழங்குவதையும் ஆகுமாக்கிவிடும், என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூதாவூத்-3144) அவரை கடுமையாக ஏசலாம். மற்றவர்களிடத்தில் முறையீடு செய்யலாம். அவரை அநியாயக் காரன் என்று சொல்லாம். அவனைத் தண்டிப்பது என்பது சிறையில் அடைத்து தண்டிக்க வேண்டுமென்பதை ஹாஃபிழ் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள். (ஃபத்ஹுல் பாரீ) இமாம் ஷஅபீ (ரஹ்) அவர்கள், கடன் விஷயத்தில் சிறையில் அடைப்பது (அவனுக்கு தொல்லை கொடுப்பதாகாது. அது தான்) வாழ்க்கை. (அது மற்றவர்களுடைய நிம்மதியான வாழ்க்கையை உறுதிப்படுத்தும்) என்று கூறினார்கள். முஸன்னஃப் அப்துர் ரஜ்ஜாக் - 15312) முஆத் (ரலி) அவர்களுக்கு கடன் இருந்ததினால் நபி (ஸல்) அவர்கள் அவருடைய செல்வத்தை உபயோகிப்பதை தடை செய்து அந்தக் கடனை நிறைவேற்றுதற்காக அந்த பொருட்களை விற்றார்கள், (தாரகுத்னீ -4607)
சொத்து பங்கீட்டுக்கு முன்:
ஒருவர் கடன் வாங்கிய நிலையில் மரணித்துவிட்டால் அவருடைய சொத்துக்களை பங்கீடு செய்வதற்கு முன் அந்தக் கடனை நிறைவேற்றவேண்டும், என்பது குர்ஆனுடைய சட்டம். கடனை நிறைவேற்றிய பின் சொத்து மீதமிருந்தால் தான் வாரிசுகளுக்கு சொத்து கிடைக்கும். ஆனால் இன்று ஜனாஸா தொழுகை நடத்தும் போது யாருக்காவது கடன் திருப்பித் தர வேண்டியிருந்தால் பெற்றுக் கொள்ளுங்கள், என்ற அறிவிப்பும் கூட வெறும் சம்பிரதாயமாகிவிட்டது. உதவி:
கடன் வாங்கி நிறைவேற்றமுடியாதவர்களுக்கு ஜகாத்தின் மூலம் உதவி செய்யலாம். அல்லாஹ் குர்ஆனில் ஜகாத் யாருக்கு வழங்க வேண்டுமென்ற பட்டியலில் கடனாளிகளையும் கூறியுள்ளான். நபி (ஸல்) அவர்களுடைய காலத்தில் ஒருவர் கடன் வாங்கி நிறைவேற்ற முடியாத நிலை ஏற்பட்ட போது மக்களிடம் அவருக்காக தர்மம் செய்யுங்கள், என்று கூறினார்கள். (முஸ்லிம்) இஸ்லாமிய அரசாங்கம் இருந்தால் பைத்துல் மாலிலிருந்தும் கடனாளிகளுக்கு உதவி செய்யலாம். முஃமின்களிலிருந்து யாராவது மரணித்து அவர் கடனை விட்டுச் சென்றால் அதை நிறைவேற்றுவதற்கு பொறுப்பெடுத்துக் கொள்கிறேன். செல்வத்தை விட்டுச் சென்றால் அவருடைய வாரிசுகளுக்கு சேரும், என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். எனவே, கடனாளிகளுக்கு உதவி செய்வதும் இஸ்லாமிய அரசாங்கத்தின் பொறுப்பாகும்.

Friday, 9 January 2015

ராசி பலன் - இஸ்லாமியப்பார்வையில்



புத்தாண்டு பிறந்த உடன் விதவிதமான காலண்டர்கள் வர ஆரம்பித்துவிடும். அவை நாட்காட்டி என்ற விதத்தில் பலன்கொடுக்கக்கூடியது தான். ஆனால் அது ராசி பலனோடு வருவதுதான் முஸ்லிம்களின் நம்பிக்கையை கெடுத்துவிடுகிறது. எல்லா கணக்குகளுக்கும் சாப்ட்வேர் இருப்பது போல் ராகுகாலத்திற்கும் சாப்ட்வேர் இருக்கிறது.

குறிப்பிட்ட தேதியை கொடுத்துவிட்டால் அந்நாளின் ராகுகாலம் பற்றிய தகவல்களை கொடுத்துவிடும். ராகுகாலம், ராசிபலன், எண்கணிதம், போன்றவற்றின் மீது முஸ்லிம்களுக்கு நம்பிக்கை இருக்கக்கூடாது. அவர்கள் அல்லாஹ் ஒருவனை மட்டுமே சர்வ வல்லமை படைத்தவனாக நம்பியிருக்கிறார்கள். அந்த சக்தி சூரியன், சந்திரன், நட்சத்திரம் உட்பட எதற்கும் கிடையாது.
பிறவிஎண்:
ஒன்று முதல் ஒன்பது தேதிகளில் பிறந்தவர்களுக்கு அந்தந்த எண்களே பிறவி எண்ணாகும். இரட்டைப்படை தேதிகளில் பிறந்தவர்களுக்கு தேதி எண்களின் கூட்டுத்தொகை பிறவி எண்ணாகும். இதன் மூலம் ஒருவரது பண்பு நலன்கள், விருப்பு வெறுப்பு , கல்வி, தொழில், லட்சியம் போன்றவை தீர்மானிக்கப்படுகின்றனவாம். விதி எண் என்பது பிறந்த தேதி, மாதம், வருடம் ஆகியவற்றின் கூட்டுத் தொகையாகும். இதைக்கொண்டு வாழ்வின் சம்பவங்கள், முன்னேற்றம், கூட்டுலாபங்கள் போன்றவற்றை கணிக்கலாம், என்று கூறப்படுகிறது. முஸ்லிம்கள் இப்படி நம்புவதும் ராகுகாலம் பார்த்து தங்களுடைய காரியங்களை நடத்துவதும் அவர்களின் ஈமானை- இறைநம்பிக்கையை பறித்துவிடும்.

வான் படைப்புகள் எதற்காக?:
1. சூரியன், சந்திரன், நட்சத்திரம் போன்றவற்றை அல்லாஹ் படைத்திருப்பதின் நோக்கம் மகா உயர்வானது. திண்ணமாக இரவு பகல் மாறி மாறி வருவதிலும் வானங்கள் மற்றும் பூமியில் அல்லாஹ் படைத்திருப்பவற்றிலும் (தவறான நோக்கிலிருந்தும் நடத்தையிலிருந்தும்) தவிர்ந்து கொள்ள விரும்பும் மக்களுக்கு பல சான்றுகள் உள்ளன. (அல்குர்ஆன் - 10:6)

படைப்புகளைக் கொண்டு படைத்தவனை விளங்க முயற்சிக்க வேண்டுமே தவிர அவற்றின் வெளிப்படையான பலன்களைக் கண்டு அவற்றையே வணங்கும் பொருளாக ஆக்கிக்கொள்ளக்கூடாது. காலம் காட்டியாக:

2. இறைநம்பிக்கை தொடர்பான முக்கிய நோக்கத்திற்கு அடுத்த படியாக வாழ்க்கையின் முக்கிய தேவைகளை அவற்றின் மூலம் மனிதன் பெற்றுக்கொள்வதையும் அல்லாஹ் நோக்கமாக ஆக்கியுள்ளான். அவன சூரியனை வெளிச்சம் தரக்கூடியதாக அமைத்தான். சந்திரனுக்கு ஒளியைக் கொடுத்தான். மேலும் (வளர்ந்து தேயும்) படியாக பல நிலைகளை சந்திரனுக்கு நிர்ணயம் செய்தான். இவற்றின் மூலம் ஆண்டுகளின் எண்ணிக்கையையும் கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காக! இவற்றையெல்லாம் அல்லாஹ் சத்தியத்துடனேயே தவிர படைக்கவில்லை. அறிவுடைய மக்களுக்கு அவனே சான்றுகளை தெளிவாக விளக்குகிறான். (அல்குர்ஆன்-10:5)

நாம் இரவையும் பகலையும் இரு சான்றுகாளாக ஆக்கியுள்ளோம். இரவு எனும் சான்றினை ஒளியற்றதாக ஆக்கினோம். பகல் எனும் சான்றினை நன்கு ஒளி தரக்கூடியதாக ஆக்கினோம். இதன் மூலம் நீங்கள் உங்கள் இரட்சகனின் அருட்கொடையைத் தேடவேண்டும்; மேலும் மாதங்கள், ஆண்டுகளின் எண்ணிக்கையையும் கணக்கையும் நீங்கள் அறிந்துகொள்ள வேண்டுமென்பதற்காக! ... (அல்குர்ஆன்- 17:12)  


 (வளர்ந்தும் தேயந்தும் வரும்) பிறைகள் பற்றி நபியே உங்களிடம் அவர்கள் கேட்கிறார்கள். நீர் கூறுவீராக! அவை மக்களுக்கு காலங்காட்டியாகவும் ஹஜ்ஜுடைய நாட்களை அறிவிப்பையாகவும் இருக்கின்றன... (அல்குர்ஆன்- 2:189)

இந்த இறைவசங்களின் மூலம் வான் படைப்புகளின் அதிகப்படியான நோக்கத்தையும் பயன்பாடுகளையும் விளக்குகிறான். அவை நமக்கு காலங்காட்டியாக பயன்படுகின்றன. சூரியன் மூலம் பகல் இரவு உண்டாகிறது. இதன் மூலம் நாட்கணக்கை அறிந்து கொள்ளமுடிகிறது. பூமி சூரியனை சுற்றி வருவதன் மூலம் வருடக்கணக்கை அறிந்து கொள்ளமுடிகிறது.  நான்கு பருவகாலங்களும் மாறிமாறி வருகின்றன. சந்திரன் பிறை, வளர்பிறை, பௌர்ணமி, தேய்பிறைகளாக தோற்றமளிப்பதன் மூலம் மக்கள் மாதங்களை முறையாக கணக்கிடமுடிகிறது. சந்திர வருடமே:

சந்திர வருடம், சூரியவருடம் இவ்விரண்டில் மார்க்கக்கடமைகளுக்கு சந்திர வருடத்தையே எடுத்துக் கொள்ளவேண்டும். மாதக்கணக்கிற்கு எளிதான வழி சந்திரனை அடிப்படையாக வைப்ப்து தான். ஏனெனில் 29 அல்லது 30 நாட்களில் அதனுடைய சுற்று முடிந்துவிடுகிறது. பிறைகளின் மாற்றங்களை வைத்து எளிதாக மாதத்தை கணக்கிட்டுக் கொள்ளமுடியும். சூரியன் அவ்வாறு மாற்றமைடைவதாக தோன்றுவதில்லை.

பாமரனுக்கு சூரியன் மூலம் மாதத்தையோ வருடததையோ அறிந்துகொள்வது சிரமம். (வருடத்திற்கு) மாதங்களின் எண்ணிக்கை 12 என்று குர்ஆன் தெளிவாக சொல்லிவிட்டது. எனவே, நோன்பு, ஜகாத், ஹஜ் போன்ற வணக்கங்கள் இத்தா போன்ற மாதம் தொடர்பான கடமைகளும் சந்திர (பிறை) மாதத்தின் அடிப்படையிலேயே நிறைவேற்றப்படவேண்டும். ஆரம்பகாலத்தில் சந்திர கணக்கு தான் நடைமுறையில் இருந்தது. தீபாவளி (ஐப்பசி மாதத்தின் அமாவாசை) போன்ற மற்ற மத பண்டிகைகள் கூட சந்திரக்கணக்கை அடிபடையாக வைத்து தான் கொண்டாடப்படுகிறது.

3. சூரியன், சந்திரன் மூலம் வாழ்க்கைக்கு தேவையான வெப்பமும் வெளிச்சமும் கிடைக்கிறது. இந்த நோக்கமும் மேற்கூறப்பட்ட வசனங்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இவை தவிர மற்ற பயன்களும் இருக்கின்றன. தற்கால விஞ்ஞானத்தின் மூலம் அவை அவ்வப்போது கண்டுபிடிக்கப்படுகின்றன. சந்திரன் அதிக பிரகாசமாக இருக்கும் போது (பௌர்ணமி) பழங்களில் சார் வேகமாக அதிகமாகிறது. மற்ற காலங்களில் அதன் வேகம் குறைந்துவிடுகிறது. இது ஒரு ஆய்வுத் தகவல் (நூல்: அஷ்ஷம்சு வல்கமரு பிஹுஸ்பான்)

அவ்வாறே சந்திரன் மூலம் கடல் அலைகளிலும் அல்லாஹ் மாற்றத்தை ஏற்படுத்துகிறான். சூரியன் சந்திரன் பூமி இம்மூன்றும் நேர்கோட்டில் வரும்போது அதாவது பவுர்ணமி சமயத்திலும் அமாவாசை (மாத ஆரம்பத்திலும்) ஈர்ப்பு விசை காரணமாக கடல் அலைகள் மிக உயரமாக எழும். அந்நேரத்தின் முக்கியத்துவம் கருதி `முழுமையாக மலர்ந்து விடும் (பவுர்ணமி) சந்திரன் மீது சத்தியமாக!` என்று அல்லாஹ் குர்ஆனில் சத்தியமிட்டுக் கூறுகிறான். (84:18) நூல்: அல்மன்ஹஜுல் ஈமானீ லித்திராஸாதில் கௌனிய்யா.

4. விண்ணில் நட்சத்திரங்கள் ஜொலித்துக் கொண்டிருப்பதை யாரும் பார்க்காமல் இருக்கமுடியாது. அவையும் அல்லாஹ்வின் வல்லமையை உணர்த்தக்கூடிய மாபெரும் அத்தாட்சிகள். நட்சத்திரங்கள் அவனுடைய கட்டளையைக் கொண்டு கட்டுபடுத்தப்பட்டிருக்கின்றன. (அல்குர்ஆன்- 16:12)

அவை மனிதனுக்காக வசப்படுத்தப்பட்டிருக்கின்றன. அவையனைத்தும் மனிதனுக்காக படைக்கப் பட்டவை தானே தவிர அவற்றை வணங்குவதற்காக படைக்கப்படவில்லை. அல்லாஹ்வுக்குரிய எந்த சக்தியும் அவற்றுக்கு இல்லை. அல்லாஹ் அவற்றின் மூலம் மனிதர்களுக்கு பல பயன்பாடுகளை வைத்திருக்கிறான்.

5. நட்சத்திரங்களின் மூலமாகவும் மக்கள் நேரான வழியினை அடைந்து கொள்கிறார்கள். (அல்குர்ஆன்-16:16) மக்கள் பயணத்தில் இருக்கும் போது மலைகள் மரங்கள் இன்று நாட்டப்பட்டிருக்கும் அடையாளப்பலகைகள் பாதைகளை அறிவித்துக் காட்டுவது போல் நட்சத்திரங்களின் மூலமும் திசைகளை - பாதைகளை அறிந்துகொள்ளலாம். இன்று வரை கடல் பயணத்திற்கு திசையை அறிவிப்பதில் ரொம்ப உதவியாக இருப்பது நட்சத்திரங்கள் தான்.

வானத்தில் ஆங்காங்கே நட்சத்திரம் சிதறிக்கிடப்பது போல் தோன்றினாலும் அவை வருடத்தின் அந்தந்த நாட்களில் அதே குறிப்பிட்ட இடத்தில் தான் இருக்கின்றன என்பது கவனித்து பார்ப்பவர்களுக்கு விளங்கும். எல்லா நட்சத்திரங்களும் உதயமாகி மறைவதாக தோன்றும். ஆனால் துருவத்தில் இருக்கும் நட்சத்திரம் ஒரே இடத்தில் தான் இருக்கும். வட துருவத்தில் இருக்கும் நட்சத்திரத்திரத்தை நோக்கியே காந்தமுல் நிற்கும். இதன் மூலம் வடதிசையை கண்டுகொள்ளமுடிகிறது. கிப்லா திசை தெரியவில்லையானால் நட்சத்திரங்களின் மூலம் திசையை அறிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும் என்று ஃபிக்ஹ் நூற்களில் கூறப்பட்டுள்ளது.

நம்முடைய பகுதிகளில் சில குறிப்பிட்ட மாதங்களில் மூன்று நட்சத்திரங்கள் வரிசையாக ஏறத்தாழ கிப்லாவை நோக்கி இருப்பதை காணமுடியும். இதுபோல் மற்ற சில நட்சத்திரங்களைக் கொண்டும் திசையை அறிந்து கொள்ளமுடியும். மேலே கூறப்பட்ட எல்லா பயன்பாடுகளும் எல்லோராலும் விளங்கிக் கொள்ளமுடியும். இவற்றின் மூலம் இறைவனுக்கு இணைவைக்கக்கூடிய நிலை உண்டாகாது.

வான்படைப்புகளுக்கு சுயமாக எந்த சக்தியும் இல்லை. அவற்றை அல்லாஹ்வே இயக்குகிறான். உலகில் நடக்கும் நல்லது கெட்டது அனைத்தும் அல்லாஹ்வின் நாட்டப்படியே நடக்கிறது. ஆனால் நட்சத்திரங்களின் மீது நம்பிக்கை பெருகியதால் இப்றாகீம் (அலை) அவர்களுடைய காலத்தில் அவற்றுக்கும் சிலைகள் வைத்து வணங்கினார்கள். (நூல்: அஷ்ஷம்சு வல்கமரு பிஹுஸ்பான்)  நபியவர்கள் அதை எதிர்த்து போராடிய நிகழ்ச்சி குர்ஆனில் தெளிவாக கூறப்பட்டுள்ளது.

ஜோடிப்பொருத்தம்:
களா கத்ரைப்பற்றி பேசப்பட்டால் (அது பற்றி வாதம் செய்யாமல்) தவிர்ந்து கொள்ளுங்கள்! நட்சத்திரம் பற்றி பேசப்பட்டால் தவிர்ந்து கொள்ளுங்கள்! என்னுடைய தோழர்கள் பற்றி (தவறாக) பேசப்பட்டால் வாய்மூடிக்கொள்ளுங்கள்! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். கடலிலும் திடலிலும் பாதை அறிந்து கொள்வதற்குத் தேவையான அளவுக்கு நட்சத்திரத்தை பற்றி கற்றுக்கொள்ளுங்கள். பிறகு அது பற்றி வேறெதையும் கற்றுக்கொள்ளாமல் ஒதுங்கிக்கொள்ளுங்கள், என்று உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள். (தப்ஸீரு மஆரிபில் குர்ஆன்7-451)

இன்று இந்த நட்சத்திரக்கணக்கில் நம்மவர்களும் நம்பிக்கை வைத்திருக்கின்றனர். திருமணத்திற்கு முன் ராசி பலன் மூலம் ஜோடிப்ருத்தம் பார்ப்பதில் முனைப்பு காட்டுகின்றனர். மார்க்கம் சொல்லித்தரும் பொருத்தம் பற்றி யோசிப்பதில்லை. நல்லநேரம்:
நம்மிடம் நடைமுறையில் உள்ள காலண்டர்களும் நாம் உபயோகிக்கும் கிழமை மற்றும் மாதத்தின் பெயர்களும் இணைவைப்பைத் தழுவியே அமைந்துள்ளன. சூரியன் சந்திரன் மற்றும் கோள்களின் பெயர்களையே கிழமைகளுக்கு வைக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு கோளுக்கும் குறிப்பிட்ட நாட்களின் மீது ஆதிக்கம் இருக்கிறது என்ற நம்பிக்கையில் ஞாயிறு முதல் சனி வரை உள்ள கிழமைகளுக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளன. செவ்வாய் கிழமையையும் சனிக்கிழமையையும் மற்றவர்கள் கெட்டநாளாக நினைப்பது போல் முஸ்லிம்களும் நினைக்கிறார்கள்.  காலத்தின் மீதோ வேறு எந்த பொருளின் மீதோ அல்லாஹ்வின் ஆதிக்கத்தை தவிர நட்சத்திரத்திற்கோ கோள்களுக்கோ அணுவளவும் ஆதிக்கம் கிடையாது என்பது தான் நமது நம்பிக்கை. சித்திரை மாதத்தில் ஆண்குழந்தை பிறந்தால் பேராபத்து வரும் என்ற நம்பிக்கையும் ஷரீஅத்திற்கு முரணானது. அதற்காக சிலர் ஆடி மாதத்தில் திருமணம் செய்வதை தவிர்த்து விடுகின்றனர். உலகில் கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பவர்கள் அனைவரும் சித்திரையில் பிறந்தவர்களா என்ன?

காலத்தை திட்டாதீர்கள் என்று நபி (ஸல்) எச்சரித்திருக்கிறார்கள். அல்லாஹ் படைத்த நாட்களில் எந்த நாளும் கெட்ட நாளல்ல. எந்த நேரமும் கேட்ட நேரமல்ல. அல்லாஹ்வுடைய கட்டளைக்கு முரணாக நடப்பதன் மூலம் வரும் முஸீபத்துக்கெல்லாம் காலத்தை காரணம் காட்டமுடியாது. (நன்மையோ தீமையோ) அல்லாஹ் எங்களுக்காக விதித்தவற்றைத் தவிர வேறெதுவும் எங்களை அடையாது. அவன் தான் எங்களின் பாதுகாவலன் - உதவியாளன். இறைநம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை வைக்கட்டும் என்று நபியே நீர் கூறுவீராக! என்ற இறைவசனம் (9:51) ஒரு முஸ்லிமுக்கு போதுமானது.                       

நபித்துவப் பணியில் திருமணத்தின் பங்கு



நபி (ஸல்) அவர்கள் இவ்வுலகை விட்டுப் பிரிந்து ஏறத்தாழ 1420 வருடங்களுக்கும் மேலாக ஆன பிறகும் கூட அண்ணலார் கொண்டு வந்த சத்திய மார்க்கம் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து கொண்டுதானிருக்கிறது. திறந்த புத்தகமாயிருந்த நபியவர்களுடைய வாழ்க்கையின் ஒவ்வொரு வரியும் இந்த அகிலத்தையே ஆட்கொண்டிருக்கிறது. எனினும் சத்தியத்தை நுகரும் சக்தியைக் கூட இழந்து தவிப்பவர்கள் எப்படியாவது தீனுல் இஸ்லாத்தை வாயால் ஊதி அனைத்துவிட துடியாய் துடிக்கிறார்கள்.

கடலில் சேற்றை வீசுவதால் கடல்நீர் அசுத்தமாகிவிடுமா என்ன? அந்தச் சேற்றையும் கூட சுத்தமாக்கிவிடாதா? சூரியனுக்கு திரை கட்டி வெளிச்சத்தை மறைத்துவிட முடியுமா என்ன? அந்தத் திரையே எறிந்து போய்விடாதா? இன்று மேற்குலகம் மட்டுமல்ல; நம்முடைய சொந்த மண்ணிலும் கூட மேற்குலகின் சிந்தனை விரவிக் கிடக்கிறது.

நபியவர்களின் வாழ்க்கையை கேவலமாக சித்தரிப்பதற்கு தமிழ் இணையதளங்களும் யூத சிந்தனைக்கு சளைத்ததல்ல, என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கின்றன. இது போன்ற சமயங்களில் நபியவர்களின் அப்பழுக்கற்ற வாழ்க்கையை வரி விடாமல் படித்துணர்வது முஸ்லிம்களின் மீது காலத்தின் கட்டாயமாகிவிடுகிறது.

நபி (ஸல்) அவர்களுடைய ஒவ்வொரு நடைமுறையும் இறையறிவிப்பின் (வஹியின்) படியே அமைந்திருக்கும், என்பதும் அவர்களுடைய சொல், செயல், அங்கீகாரம் அனைத்தும் சத்தியமானவை என்பதும் ஒவ்வொரு முஸ்லிமுடைய நம்பிக்கை. நபியவர்களின் பிரியமான மனைவிமார்களைப் பிரிந்து விடுவதற்கு உத்தரவிட்டாலும் நபியவர்கள் அதையும் செயல்படுத்திக் காட்டுவார்கள், என்பது குர்ஆனைப் படித்தவர்களுக்குத் தெரியும். நான் என்னுடைய எந்த மனைவியையும் அல்லாஹ்விடமிருந்து வஹி வராமல் திருமணம் முடித்ததில்லை, என்று கூறும் இறைத்தூதர் இன்று விமர்சிக்கப்படுவது இறைவிசுவாசிகளின் உள்ளத்தை சல்லடையாக்காமல் விடுவதில்லை.

குறிப்பாக ஜைனப் (ரலி) அவர்களை திருமணம் முடித்த நிகழ்வை அக்காலத்து நயவஞ்சகர்கள் தான் கேவலமாக விமர்சித்தார்களென்றால் இக்காலத்து கயவர்களும் அதே கதையை மீண்டும் கையிலெடுக்கிறார்கள்.
சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் மட்டுமே கொள்கையாகக் கொண்டவர்களுக்கு நேர்மையான சட்டங்களும் நடைமுறைகளும் நக்கலாகத்தான் தெரியும். வளர்ப்பு மகன் சொந்த மகனாக ஆகமுடியாது என்பது ஒன்றும் விளக்கி வைக்க வேண்டிய பாடமல்ல.

தான் பெற்றெடுக்காத பிள்ளையை தன்னுடைய மகன் என்று சொல்வதும் அவனுக்கு வாரிசுரிமையில் பங்குண்டு என்று புலம்புவதும் வளர்ப்பு மகனுடைய மனைவியை (விவாகரத்தான பிறகு) தான் திருமணம் முடித்துக் கொள்ளக்கூடாது, என்று சொல்வதும் வேடிக்கையாக இல்லையா? ஆனாலும் தவறான சடங்குகளிலேயே மூழ்கிக் கிடப்பவர்களால் இந்த உண்மையை விளங்கிக் கொள்ள முடியவில்லை. வளர்ப்பு மகன் சொந்த மகனாக ஆக முடியாது, என்று இஸ்லாம் ஓங்கி ஒலித்த போது மௌட்டீக காலத்து சிந்தனையால் சகித்துக் கொள்ள முடியவில்லை.

வளர்ப்பு மகனின் மனைவியை (விவாகரத்துக்குப் பின்) திருமணம் முடிப்பது என்பது விபச்சாரத்தை விடக் கொடுமையாக கற்பனை செய்து கொண்டிருந்த சமுதாயத்தில் அந்த நம்பிக்கையை மாற்றுவதென்பது அவ்வளவு சாதாரணமான காரியமல்ல. ஒருவருக்குப் பிறந்த குழந்தையை பெறாத மற்றொரு நபருடன் சேர்த்து அவருடைய பிள்ளை தான் எனறு கூறுவது எவ்வளவு கேவலமானது? ஆனால் இந்த உண்மையைக் கூட விளங்கிக் கொள்ள முடியாத அளவுக்கு அவர்களுடைய புத்தி மழுங்கிப் போயிருந்தது. இந்நிலையில் இந்தக் கொள்கையை எழுத்தளவிலோ வாயளவிலோ சொன்னால் மட்டும் போதாது, செயலளவிலும் நடைமுறைப் படுத்திக் காட்டி மனதில் ஆழமாகப் பதிந்திருந்த அந்தத் தவறான கொள்கையை வேரோடு பிடுங்கி எறிவதற்காக அல்லாஹ், நபியவர்களுக்கே அப்படியொரு திருமணத்தை நடத்தி வைத்தான்.


நபி (ஸல்) அவர்களின் வளர்ப்பு மகனாகிய ஜைது (ரலி) அவர்களை ஆரம்பத்தில் ஜைத் பின் முஹம்மது (முஹம்மது (ஸல்) அவர்களின் மகன் ஜைத்) என்று தான் மக்கள் அழைத்தார்கள. வளர்ப்பு மகன் சொந்த மகனாக முடியாது என்பதால் அப்படி அழைக்கக் கூடாது, என்று குர்ஆன் தடைவிதித்தது. சும்மா பேச்சுக்குக் கூட பொய் பேசக்கூடாது, என்பது இஸ்லாத்தின் இனிய கொள்கை.

ஜைது பின் ஹாரிஸா (ரலி) அவர்களுக்கும் ஜைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களுக்கும் திருமணம் நடந்தது. எனினும் இருவருடைய குடும்ப சூழல் மாறுபட்டிருந்ததால் திருமண உறவு நீடிக்க முடியவில்லை. கடைசியாக ஜைத் (ரலி) அவர்கள் தலாக் கொடுத்து விட்டார்கள்.

ஜைத் (ரலி) அவர்கள் நபியவர்களின் வளர்ப்பு மகன். இப்பொழுது ஜைனப் தலாக்காகி விட்டதால் மௌட்டீக காலத்தில் புரையோடிக் கிடந்த மடத்தனமான மூடநம்பிக்ககையை முறியடிப்பதற்கு இதுவே நல்ல சந்தர்ப்பம். (இத்ற்காகவே இப்படியொரு சந்தர்ப்பந்தை அல்லாஹ் ஏற்படுத்தி வைத்தான், என்றே சொல்ல வேண்டும்) நபியவர்களின் மனதில் தம்முடைய வனர்ப்பு மகன் தலாக் விட்ட பெண்ணை நாம் திருமணம் செய்தால் மடமையின் உச்சகட்டத்தில் இருக்கும் இந்த சமுதாயம் எப்படியெப்படியெல்லாம் விமர்சிப்பபார்கள்? என்ற எண்ணமும் மனதின் ஓரத்தில் ஓடத்தான் செய்தது. எனினும் இதற்குப் பிறகு நபி வரப்போவதில்லை.

இந்த நபியே இக்காரியத்தை அமுல்படுத்த வில்லையானால் உம்மத்தினரிலல் வேறு யாருக்கும் அதைச் செயல்படுத்திக் காட்டுவதற்கு துணிச்சல் ஏற்படாது. தன்னுடைய வளர்ப்பு மகன் மணமுடித்த பெண்ணை, தானே திருமணம் செய்து கொள்வதை சமூகம் அந்த அளவுக்குக் கேவலமாகக் கருதியது. எனவே நபி (ஸல்) அவர்கள் ஜைனப் (ரலி) அவர்களை மணமுடிக்க வில்லையானால் உம்மத்தினருக்கு மிகப்பெரும் சிரமமாகி விடும்.

எனவே, அல்லாஹ், நாமே ஜைனபை உமக்கு மணமுடித்து வைத்துவிட்டோம், என்று கூறிவிட்டான். நபியவர்களுக்கு அல்லாஹ் நிகாஹ் செய்து வைத்தது, காம இச்சையைப் பூர்த்தி செய்வதற்காக அல்ல; அப்படி செய்யவில்லையானால் யுகமுடிவு நாள் வரை வரும் முஸ்லிம்கள் அந்த மூடநம்பிக்கையை முறியடிப்பதில் வெற்றி பெறாமல் போய்விடக்கூடாது, என்பதற்காகவும் நபி தம்முடைய இறைத் தூதை உலகில் முழுமையாக சேர்ப்பிப்பதற்காகவும் தான் என்ற கருத்தை அல்லாஹ் பின்வருமாறு தன் திருமறையில் கூறுகிறான்:

....... ஜைத் அவளிடம் தேவையைப் பூர்த்தி செய்துகொண்டபின் நாம் (தலாக் விடப்பட்ட) அவளை உமக்கு மணமுடித்துக் கொடுத்தோம். இறைநம்பிக்கை கொண்டவர்கள் தங்களுடைய வளர்ப்புப் பிள்ளைகள் தம் மனைவிமார்களிடத்தில் தம் தேவையை நிறைவேற்றி விடும்போது அவர்களை (தாங்களே திருமணம் செய்து கொள்ளும்) விவகாரத்தில் எவ்விதமான சிரமமும் (இடையூறும்) இருக்கக் கூடாது என்பதற்காக. மேலும் அல்லாஹ்வின் கட்டளை செயல்படுத்தப் படவேண்டியதாகவே இருக்கிறது.

மேலும் நபிக்காக அல்லாஹ் நிர்ணயித்துள்ள ஒன்றில் (அது ஜைனபை நிகாஹ் முடிப்பதாகட்டும். அல்லது அது போன்ற மற்ற தூதுத்துவப் பணியை நிறைவேற்றுவதாக இருக்கட்டும். அவற்றை செய்வதில்) நபியின் மீது எந்த குற்றமோ (தடையோ) இல்லை. முன்பு சென்றுவிட்டவர் (களாகிய நபிமார்)கள் விஷயத்திலும் இதுவே அல்லாஹ்வின் நடைமுறையாக இருந்திருக்கிறது.

அல்லாஹ்வின் கட்டளை திட்டவட்டமாக தீர்வு செய்யபபட்டதாக இருக்கிறது. அவர்கள் (நபிமார்கள்) எத்தகையோரென்றால் இறைத் தூதுச்செய்திகளை (மக்களிடம்) கொண்டு போய் சேர்க்கிறார்கள். மேலும் அவனையே அஞ்சுகிறார்கள். அல்லாஹ்வைத் தவிர மற்ற எவரையும் அவர்கள் பயப்படமாட்டார்கள். மேலும் கணக்குக் கேட்பதற்கு அல்லாஹ்வே போதுமானவன். உங்களுடைய ஆண்களில் எவருக்கும் முஹம்மத் தந்தையாக இருக்கவில்லை. எனினும் அவர் அல்லாஹ்வின் தூதராகவும் இறுதி நபியாகவும் இருக்கிறார். அல்லாஹ் ஒவ்ன்றைப் பற்றியும் நன்கறிந்தவனாக இருக்கிறான். (33:37-40)

நேரடியாக அல்லாஹ்வே நாம் தான் ஜைனபை (ரலி) நபிக்கு திருமணம் முடித்து வைத்தோம், என்று கூறுவதன் மூலம் இது இறைத்தூதர் செய்ய வேண்டிய பணி, அப்படி செய்ய வில்லையானால் இறுதி நபியின் இறைப்பணியில் ஏதும் குறை ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவே இந்தத் திருமணம் நடந்ததாகத் தெரிகிறது. அல்லாஹ்வை (கடவுளைப்) பற்றி அடிப்படை அறிவு கூட இல்லாதவர்களிடம் விவாதம் செய்து பலனில்லை. நபியவர்கள் செய்த அனைத்து திருமணங்களின் ஒட்டு மொத்த நோக்கமே நபித்துவச் செய்திகளை மக்களிடம் கொண்டுபோய் சேர்ப்பதில் எந்தத் தடையோ சிரமமோ ஏற்பட்டுவிடக்கூடாது, என்பது தான். மனைவிமார்களின் மூலம் மார்க்கம் தொடர்பான ஏராளமான தகவல்களை ஹதீஸ் கிரந்தங்களில் காண முடியும். நபியவர்களின் குடும்ப வாழ்க்கை மற்றும் வீட்டில் இருக்கும் போது வரும் வஹி அறிவிப்புகளை மனைவிமார்களால் தான் வெளிக்கொணர முடியும். மனைவியர்களின் மார்க்கப்பணி:

அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் மட்டும் 2210 நபி மொழிகளை அறிவித்துள்ளார்கள். புகாரி, முஸ்லிமில் மட்டும் 174 ஹதீஸ்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அன்னையவர்கள் அறிவிக்கும் ஹதீஸ்களில் பல மற்ற நபித்தோழர்கள் அறிவிக்கும் நபிமொழிகளை விட்டும் வித்தியாசமானதாக இருக்கும். நபியவர்கள் கூறும் ஹதீஸ்களில் ஏற்படும் சந்தேகங்களுக்கு உடனுக்குடன் விளக்கம் கேட்டு விரிவுரை தேவையில்லாத அளவுக்கு நபிமொழிகளை இந்த உம்மதிற்கு தந்துள்ளார்கள்.

உதாரணமாக, ஒரு தடவை நபி (ஸல்) அவர்கள், யாருக்காவது இரண்டு குழந்தைகள் சிறுவயதிலேயே இறந்து விட்டால் அவரை அல்லாஹ் சுவனம் நுழையச் செய்வான், என்று கூறினார்கள். உடனே ஆயிஷா (ரலி) ஒருவருக்கு ஒரு குழந்தை இறந்து விட்டால்? என்று கேட்டார்கள். இதைக் கேட்டு சந்தோஷப்பட்ட நபி (ஸல்) அவர்கள், (சமுதாயத்தின் மீதுள்ள பாசத்தால் அவ்வப்போது தேவையான நல்ல விஷயங்களைக் கேட்டு விளங்கிக் கொள்வதற்கு) பாக்கியம் கொடுக்கப்பட்டவளே!

ஒரு குழந்தை இறந்து விட்டாலும் சுவர்க்கம் கிடைக்கும், என்று கூறினார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள் அத்தோடு நிறுத்திக் கொள்ளவில்லை. ஒருவருக்கு எந்தக் குழந்தையும் இறக்க வில்லையானால் அவருடைய நிலை என்ன? என்று கேட்டார்கள். அவர்களுக்கு நான் இருக்கிறேன். (சிபாரிசு செய்வேன்) என்னுடைய இழப்பைப் போன்று எனது உம்மத்தினர் வேறெதைக் கொண்டும் சோதிக்கப் படவில்லை என்று நபி (ஸல்) கூறினார்கள். (திர்மிதீ- 982)
ஆயிஷா (ரலி) அவர்கள் வெறும் வார்த்தையை மட்டும் அறிவிக்கவில்லை. நபிவயவர்களின் வஃபாத்திற்குப் பின் அபூபக்ர் (ரலி), உமர் (ரலி), உஸ்மான் (ரலி) ஆகியோருடைய ஆட்சி காலத்தில் தங்களுடைய மரணம் வரையிலும் ஃபத்வா (மார்க்கத் தீர்ப்பு) கொடுப்பதில் தனித்துவம் பெற்றிருந்தார்கள்,, என்று காஸிம் பின் முஹம்மது (ரஹ்) கூறினார்கள் (அஜ்வாஜுந்நபி)

நபித்தோழர்களிலேயே மாபெரும் மார்க்கச் சட்டக் கலை வல்லுணர் ஆயிஷா (ரலி) அவர்கள் தான் என்று இமாம் தஹபீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். நபித்தோழர்களுக்கு மத்தியில் எந்த பிரச்சனை ஏற்பட்டாலும் அதைப்பற்றி அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்டால் கண்டிப்பாக அதைப்பற்றி விளக்கத்தை நாங்கள் அவர்களிடம் பெற்றுக் கொண்டோம், என்று அபூமூஸல் அஷ்அரீ (ரலி) கூறினார்கள்.

வரலாற்றுப் பார்வை:
நபியவர்கள் முதன் முதலாக கதீஜா (ரலி) அவர்களை மணமுடித்தார்கள். அப்போது கதீஜா (ரலி) அவர்களின் வயது 40. அத்துடன் விதவையாகவும் இருந்தார்கள். நபிப்பட்டம் கிடைப்பதற்கு முன்பு செய்த திருமணம் கூட காமவெறிக்கு அப்பாற்பட்டதாக இருக்கும் போது அதற்குப் பிறகு செய்த திருமணங்களைப் பற்றி என்ன பேசவேண்டியிருக்கிறது? கதீஜா (ரலி) அவர்களின் மூலம் இஸ்லாத்திற்கு மிகப்பெரிய உதவி கிடைத்தது. ஸௌதா (ரலி) அவர்களின் கணவர் இறந்துவிட்டார்.

அவரை நபியவர்கள் மணமுடிக்காவிட்டால் இணைவைப்பாளர்களிடம் போய் சேர வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டிருக்கும். பத்ர் யுத்தத்தில் தம்முடைய கணவர் இறந்த பின் ஹஃப்ஸா (ரலி) அவர்களை அவரது தந்தை உமர் (ரலி) அவர்கள் உஸ்மான் (ரலி) அவர்களிடம் முடித்துக் கொள்ளும்படி வேண்டினார்கள். அவ்வாறே அபூபக்ர் (ரலி) அவர்களிடமும் வேண்டினார்கள். எனினும் இருவரும் ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் ஏற்பட்ட மனவேதனையை உமர் (ரலி) அவர்கள் நபியவர்களிடம் கூறினார்கள். அவ்விருவரையும் விட சிறந்தவர் விரைவில் ஹஃப்ஸாவை மணமுடித்துக் கொள்வார், என்று கூறி உமர் (ரலி) அவர்களை சந்தோஷப்படுத்தினார்கள்.

ஒரு யுத்தத்தில் கைதியாக பிடிக்கப்ட்ட ஜுவைரியா (ரலி) அவர்களை நபியவர்கள் உரிமை விட்டு தாமே மணமுடித்துக்கொண்டார்கள். இந்த திருமணத்தின் மூலம் இஸ்லாத்திற்கு மிகப்பெரிய லாபம் கிடைத்தது. அந்த குடும்பத்தைச் சார்ந்த எல்லா கைதிகளையும் நபித்தோழர்கள் உரிமை விட்டுவிட்டனர். அவர்கள் அனைவரும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டனர். நூற்றுக்கணக்கான குடும்பம் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற்றது. அபூஸலமா (ரலி) அவர்கள் உஹது யுத்தத்தில் ஏற்பட்ட காயத்தில் மரணித்த போது அனாதைப் பிள்ளைகளை விட்டுச் சென்றுவிட்டார்கள். அவருடைய விதவை மனைவி உம்முஸலமா (ரலி) வை நபியவர்கள் மணமுடித்து அனாதைகளை நல்ல விதத்தில் பராமரிக்கும் முறையை செயல் படுத்திக் காட்டினார்கள்.


அபூசுஃப்யான் (ரலி) இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதற்கு முன் முஸ்லிம்களின் மிகப்பெரும் விரோதியாக செயல்பட்டார். அவருடைய மகள் உம்முஹபீபா (ரலி) வும் அவருடைய கணவரும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டனர். இந்நிலையில் அவ்விருவரும் (ஹபஷா) வுக்கு ஹிஜ்ரத் செய்தனர். அங்கே அவருடைய கணவர் இஸ்லாத்தை விட்டும் வெளியேறிவிட்டார். உம்முஹபீபா (ரலி) அவர்கள் தங்களுடைய ஈமானை பாதுகாத்துக் கொண்டார்கள். இப்பொழுது முஸ்லிமல்லாத கணவருடன் வாழ வேண்டும். அல்லது இஸ்லாத்தின் எதிரியாக இருந்த தந்தை அபூசுஃப்யானிடம் செல்ல வேண்டும். இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையிலிருந்து உம்முஹபீபாவைப் பாதுகாப்பதற்காக நபியவர்களே திருமணம் செய்து கொண்டார்கள். இந்த திருமணத்திற்குப் பிறகு எதிரியாக இருந்த அபூசுஃப்யானுடைய மனதில் நல்ல மாற்றம் ஏற்பட்டது.

இப்படி நபியவர்களின் ஒவ்வொரு திருமணத்தின் பின்னணியிலும் இஸ்லாத்தின் லாபமே மறைந்திருக்கும். எனினும் காழ்ப்புணர்ச்சியில் விஷத்தைக் கக்குபவர்கள் பற்றி நாம் கவலைப் படத் தேவையில்லை. இன்ஷாஅல்லாஹ் அவர்களுக்கும் விரைவில் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ள அல்லாஹ் தௌஃபீக் செய்யட்டும், என்று துஆ செய்வோம்.