Friday, 9 January 2015

ஏசுநாதரின் சிலை உடைக்கப்பட்டபோது...



நம் உயிர், பொருள், மனைவி, மக்கள், குடும்பம் என எல்லாவற்றையும் விட மேலானவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள். நபியின் மீது பற்றும் அன்பும் இன்றி நம்மை ஈமான் - இறைநம்பிக்கையாளர்கள் என்று சொல்லிக்கொள்ளவே முடியாது. நபியைக் கேவலப்படுத்துபவர்கள் முஸ்லிமாக இருக்கவே முடியாது. அப்படிப்பட்டவர்களை வெறுக்காதவர்களும் உண்மை முஸ்லிமாக முடியாது.

நபியவர்களின் வாழ்க்கை திறந்த புத்தகமாக இருந்தது. அகிலத்திற்கே அழகிய முன்மாதிரியாக இருந்ததுஎன்பதை நபி (ஸல்) யின் வரலாற்றை நேர்மையாக வாசித்தவர்கள் விளங்கிக் கொள்வார்கள்.  இஸ்லாத்தின் எதிரிகள் காலம் காலமாக நபியவர்களை அவமதிப்பதில் பல யுக்திகளைக் கையாண்டு வந்திருக்கிறார்கள். நபியவர்களின் காலத்தில் ஆயுதத்தின் மூலம் இஸ்லாத்தை வீழ்த்த முடியாத போது அவர்கள் நபி(ஸல்) மற்றும் நபியைச் சார்ந்தவர்களுடைய நற்குணத்தின் மீது தாக்குதல் தொடுக்கும் ஆயுதத்தைத் தான் கையிலெடுத்தார்கள்.

இன்று வரை அவ்வப்போது ஏதாவது அவமரியாதை அவலத்தை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார்கள். அதன் வெளிப்பாடு தான் சமீபத்தில் பரப்பப்பட்ட திரைப்படம். ஆனால், ஒரு மதத்தைச் சார்ந்தவர்கள் தங்களுடைய உயிரினும் மேலாக மதிக்கும் ஒரு நபரை எப்படி வேண்டுமானாலும் சித்தரிக்கலாம். அது கருத்துச் சுதந்திரம் என்று பேசி அயோக்கியத் தனமான ஆபாசத்திற்கு மேற்குலகம் வக்காலத்து வாங்கிக் கொண்டிருந்தால் அது உலக நிம்மதியின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலுக்குச் சமம்.

ஒரு பக்கம் நபியவர்களைப் பற்றி தூற்றப்பட்டால் மறுபக்கம் கலிமா சொல்லி இஸ்லாத்தை ஏற்றுக்கொள்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இது போன்ற எந்த தாக்குதலையும் இஸ்லாம் வெற்றிகரமாக சமாளித்து கொண்டு வந்திருக்கிறது. இப்படிப்பட்ட தாக்குதல் இஸ்லாமிய வளர்ச்சிக்கு சாதமாக அமைந்ததே சரித்திரம்.

இது போன்ற சமயங்களில் நம்முடைய நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய நற்பண்புகளை மக்களிடம் பரவலாக்க வேண்டும். எழுத்து மற்றும் பேச்சின் மூலம் வெளிப்படுத்துவதை விட நம்முடைய செயல்பாட்டின் மூலம் உலகுக்கு பகிரங்கப்படுத்த வேண்டும். நபியவர்கள் மற்றும் நபித்தோழர்களின் நன்னடத்தை பற்றிய செய்திகளை மாற்றுமதத்தவர்களுக்கும் விளங்க வைக்க வேண்டும்.

அந்தந்த சமயத்தில் ஏதாவது ஒரு முறையில் நம்முடைய எதிர்ப்பை வெளிப்படுத்துவதோடு மட்டும் நம்முடைய பொறுப்பு முடிந்து விடாது. இஸ்லாமிய ஆட்சி காலத்தில் முஸ்லிமல்லாதவர்களுக்கு முழு மதசுதந்திரம் கொடுக்கப்பட்டிருந்தது. அவர்களுடைய மதவிஷயங்களில் முஸ்லிம்கள் தலையிட்டு ஏதாவது தொல்லை கொடுத்தால் அதற்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்ட நிகழ்வுகளை வரலாறு நெடுகிலும் காணமுடியும்.

முஸ்லிம்கள் விஷயத்தில் மேற்குலகம் இன்று எவ்வாறு நடந்துகொண்டிருக்கிறது? என்பதை மனதில் வைத்துக் கொண்டு இஸ்லாமிய ஆட்சியாளர்கள் கிருத்தவர்கள் விஷயத்தில் எவ்வாறு நடந்து கொண்டார்கள்? என்பதைப் படித்துப பாருங்கள்!

எகிப்தில் அம்ருப்னுல் ஆஸ் (ரலி) அவர்கள் கிருத்தவர்களின் மதரீதியான மனவேதனையை துடைத்தெடுப்பதில் எவ்விதத்தில் ஆர்வம் காட்டியிருக்கிறார்கள், என்பதை இந்த நிகழ்ச்சியின் மூலம் நன்கு விளங்கும்.   அம்ருப்னுல் ஆஸ் (ரலி) அவர்கள் வெற்றி கொண்ட எகிப்தில் கிருத்தவர்களும் இருந்தார்கள். அவர்கள் யாரும் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று நிர்பந்திக்கப் படவில்லை.

கிருத்தவர்கள் தங்களுடைய வீதியில் ஏசுநாதரின் சிலையை வைத்திருந்தார்கள். இஸ்லாத்தில் சிலைவணக்கம் கூடாது, என்றாலும் அவர்களுக்கு முழு மத சுதந்திரம் வழங்கப்பட்டிருந்தது. ஒரு நாள் அவர்களுடைய அந்த சிலை தாக்கப்பட்டிருந்தது. சிலையின் மூக்குப்பகுதி உடைக்கப்பட்டிருந்தது. இதைக் கண்ட கிருத்தவர்கள் ஆத்திரமடைந்தனர்.

கண்டிப்பாக இஸ்லாமிய இராணவத்தினர் யாராவது தான் இதை செய்திருக்க வேண்டும். அவர்கள் தான் சிலைவணக்கத்திற்கு எதிரானவர்கள், என்று கூறி இந்தத் தகவலை ஊர் முழுவதும் பரப்பினர். மாலை நேரத்திற்குள் எல்லா பகுதிக்கும் செய்தி பரவிவிட்டது. இதற்கு கண்டிப்பாக பலிவாங்க வேண்டும், என்ற நோக்கத்துடன் கிருத்தவர்களுடைய ஒரு குழு பேராயரின் தலைமையில் எகிப்தின் ஆட்சியர் அம்ருப்னுல் ஆஸ் (ரலி) அவர்களிடம் சென்றனர்.

அம்ர் (ரலி) அவர்கள் தூதுக்குழுவினரை வரவேற்று கண்ணியப்படுத்தி வந்த நோக்கம் பற்றி விசாரித்தார்கள். சிலை உடைத்த சம்பவத்தைக் கூறி இதை ஒரு முஸ்லிம் வீரர் தான் செய்திருக்க வேண்டுமென்று கூறினர். அம்ருபினுல் ஆஸ் (ரலி) அவர்களும் அதை ஏற்றுக்கொண்டார்கள்.

நீங்கள் ஏசுவின் மீது தெய்வபக்தி கொண்டிருப்பதால் உங்களில் யாரும் அப்படி செய்திருக்க மாட்டார்கள். இஸ்லாத்தில் சிலை வணக்கம் கூடாது, என்பதால் எங்களில் யாராவது ஒரு நபர் தான் செய்திருக்க வேண்டும், என்று ஒப்புக்கொண்டார்கள்.

பிறகு, நீங்கள் அந்தச் சிலையை சரி செய்து கொள்ளுங்கள். அதற்கான செலவை நான் பொறுப்பேற்றுக்கொள்கிறேன். என்றும் கூறினார்கள். ஆனால், உடைந்த மூக்கு எங்களிடம் இல்லை. அப்படியே இருந்தாலும் அதை வைத்து சரிசெய்வது சாத்தியமில்லை. நாங்கள் ஏசுவை கடவுளின் குமாரனாக நம்பியிருக்கிறோம். இப்படிபபட்ட விஷயத்தில் சில பைசாக்களை வாங்கிக்கொண்டு எப்படி பொறுமையாக இருக்க முடியும்?, என்று கேட்டார்கள்.

எகிப்தின் ஆட்சியர், அப்படியானால் என்ன செய்யலாம்? என்று கேட்டார்கள். அப்போது கிருத்தவர்கள் முஸ்லிம்களின் மதப்பற்றைப் பற்றி சிறிதும் யோசிக்காமல் நீங்கள் முஹம்மது (ஸல்) உடைய சிலையை வைத்தால் நாங்களும் அதே போன்று..... என்று சொல்ல ஆரம்பித்தார்கள்.

இந்த வாசகத்தைக் கேட்டவுடன் அம்ருப்னுல் ஆஸுடைய முகம் சிவந்துவிட்டது. கோபத்தில் வாளை எடுக்க நாடினார்கள். அந்த இடத்தில் வேறு யாராவது இருந்திருந்தால் அடுத்த வினாடி வந்திருந்த குழுவினரின் தலைகள் உருண்டிருக்கும்.

எனினும் தங்களை கட்டுப்படுத்திக்கொண்டார்கள். சினத்தை அடக்கிக் கொண்டார்கள். கோபத்தின் வேகத்தில் அங்குமிங்கும் நடந்து கெண்டிருந்தார்கள். கிருத்தவர்கள் இன்று, முதல் தடவையாக ஆட்சியாளரின் கோபத்தப் பார்க்கிறார்கள்.

சிறிது நேரத்திற்குப் பின் அம்ருப்னுல் ஆஸ் (ரலி) அவர்கள் நீங்கள் நாகரிகமற்றவர்களாக இருக்கிறீர்கள். நபியை அவமரியாதை செய்கிறீர்கள். உங்களை கொன்று விடவேண்டுமென்றே உள்ளம் நாடுகிறது. நாங்கள் எங்களுடைய நபியின் மீது எவ்வளவு அன்பு வைத்திருக்கிறோம்? என்று உங்களுக்குத் தெரியாது.

எங்களுடைய பிள்ளைகள் எங்களுக்கு முன்னால் துண்டு துண்டாக வெட்டப்பட்டு கிடக்கலாம். எங்களுடைய சொத்துக்களெல்லாம் சூறையாடப்படலாம். ஏன் எங்களையே கூட துண்டு துண்டாக வெட்டபட்டாலும் பரவாயில்லை. இவற்றையெல்லாம் கூட சகித்துக் கொள்ளலாம். ஆனால் எங்களின் உயிரினும் மேலான எங்கள் நபி (ஸல்) அவர்களை இழிவுபடுத்தும் விதமாக ஒரு சிறு வார்த்தையைக் கூட எங்களால் தாங்கிக் கொள்ளமுடியாது.

நீங்கள் இப்படிப் பேசி எங்களுடைய உள்ளத்தை தாங்கமுடியாத துயரத்தில் ஆழ்த்திவிட்டீர்கள். இஸ்லாத்தில் சிலை வணக்கம் கூடாது, என்பது உங்களுக்குத் தெரியாதா? நாங்கள் சிலையை மாரியாதைக்குரிய பொருளாக கருதுவதுமில்லை. நாங்கள் சிலைகளை செய்வதுமில்லை. விற்பதுமில்லை.

நபியவர்களுக்கு சிலை வடிப்பது பற்றி எங்களுடைய கற்பனையில் கூட வரமுடியாது. உங்களுடைய இந்த வேண்டுகோள் வீணானது. இப்பொழுது உங்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கே நீங்கள் தகுதியற்றவர்களாகி விட்டீர்கள். எனினும் நான் உங்களை புறக்கணிக்கவில்லை. இது தவிர ஏதாவது நல்ல யோசனை இருந்தால் சொல்லுங்கள்.

உங்களுடைய மனதும் திருப்தியடைய வேண்டும். நீங்கள் கண்ணியமாகக் கருதும் ஏசுநாதரின் சிலை உடைக்கப் பட்டிருபபதால் உங்களுடைய மனம் வேதனைப்பட்டிருக்கும். நபி (ஸல்) அவர்களுக்கு சிலை வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை விட எங்களில் யாராவது ஒருவருடைய மூக்கை கூட நீங்கள் வெட்டிக்கொள்ளலாம், என்று அம்ருப்னுல் ஆஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள். இதைக் கேட்டுவிட்டு தூதுக்குழவினர் உங்களை வேதனைப் படுத்தியதற்காக நாங்கள் கைசேதப்படுகிறோம்.

நீங்கள் நபியின் மீது இவ்வளவு பிரியம் வைத்திருப்பீர்கள், என்று நாங்கள் நினைக்கவில்லை. இல்லையானால் நாங்கள் இப்படி அவமரியாதையாக எதையும் பேசியிருக்க மாட்டோம். என்று கூறிவிட்டு நீங்கள் கூறியது போலவே முஸ்லிம்களில் யாராவது ஒருவரின் மூக்கை நாங்கள் வெட்டிக் கொள்கிறோம். அதற்காக மக்களை ஓரிடத்தில் ஒன்று திரட்டுங்கள். எல்லாருக்கும் முன்னால் இது நடக்க வேண்டும் என்று கூறினார்கள்.

(ஒரு சிலை உடைப்புக்காக படைப்புகளில் சிறந்த ஒரு மனிதரின் மூக்கை உடைக்க வேண்டும், என்று கோருகின்றனர். எனினும் மதஉணர்வுக்கு மரியாதை கொடுத்து இந்த கோரிக்கையை முஸ்லிம்கள் ஏற்றுக்கொண்டனர்.) மறுநாள் ஆயிரக்கணக்கான மக்கள் ஒரு மைதானத்தில் திரண்டனர். அங்கு இஸ்லாமிய இராணுவமும் இருந்தது. ஆனால் அவர்கள் யாருக்கும் எதற்காக இங்கு அழைக்கப் பட்டிருக்கிறோம், என்று தெரியாது.

கடைசியில் அம்ருப்னுல் ஆஸ் (ரலி) அவர்கள் ஒரு குதிரையில் வநந்து இறங்கினார்கள். பாதிரியும் அங்கு வந்து சேர்ந்தார். மக்களுக்கு முன்னால் அம்ருப்னுல் ஆஸ் (ரலி) அவர்கள் நின்று நாம் ஏன் இங்கு கூடியிருக்கிறோம்? என்று தெரியுமா, என்று கேட்டுவிட்டு வீதியில் வைக்கப்பட்டிருந்த ஏசுநாதரின் சிலை உடைக்கப்பட்டிருக்கிறது. இதனால் மனவேதனையடைந்த கிருத்தவர்கள் தங்கள் சார்பாக ஒரு குழுவை என்னிடம் அனுப்பிவைத்தனர். அவர்கள் கிருத்தவர்கள் யாரும் அச்சிலையை உடைக்கமாட்டார்கள். இந்த வேலையை ஒரு முஸ்லிம் தான் செய்திருக்க வேண்டும், என்று கூறினர்.

நானும் அவர்களுடைய வாதத்தை ஏற்றுக்கொண்டாக வேண்டும். ஏனெனில் கிருத்தவர்கள் ஏசுநாதரின் சிலையை கண்ணியப்படுத்துபவர்கள். எனவே, அவர்கள் அப்படிச் செய்திருக்க முடியாது. முஸ்லிம்களில் யாராவது தான் உடைத்திருக்க வேண்டும். இஸ்லாத்தில் சிலை வணக்கம் கூடாது. அதில் நம்பிக்கையும் இருக்கக் கூடாது. சிலை வடிப்பதோ அதை விற்பதோ இஸ்லாத்தில் விலக்கப்பட்டிருந்தாலும் மாற்று மதத்தவர்களின் மதநம்பிக்கையை நாம் புண்படுத்தி அவர்களுடைய மனவேதனைக்கு காரணமாககக் கூடாது, என்றும் நமக்கு கட்டளையிட்ப பட்டிருக்கிறது.

எனவே, அவர்களுடைய இந்த மனவேதனைக்கு பலிவாங்குவதற்காக நம்மில் யாராவது ஒருவரின் மூக்கை அவர்கள் அறுத்துக் கொள்ளலாம், என்று முடிவாகியிருக்கிறது, என்று கூறிவிட்டு அம்ருப்னுல் ஆஸ் (ரலி) அவர்கள் தலைமைப் பாதிரியிடம் நான் தான் ராணுவத் தளபதியாக இருககிறேன். இந்நகரத்திற்கு ஆட்சியாளராக இருக்கிறேன்.

இந்நகர மக்களுக்கு பாதுகாப்பு கொடுத்து பத்திரத்தில் நான் தான் எழுதிக்கொடுத்திருக்கிறேன். எனவே மக்களுக்கு ஏதாவது கஷ்டம் நேர்ந்தாலும் அதற்கு நான் தான் முழுப் பொறுப்பு. எனவே, என்னுடைய மூக்கை வெட்டிக்கொள்ளுங்கள், என்று கூறி வாளை உருவி பாதிரியிடம் கொடுத்தார்கள்.

மக்கள் திகைத்துப் போய் நின்றனர். இதைக் கண்ட ஒரு ராணுவ தளபதி, ஏன் எங்களில் ஒருவருடைய மூக்கு வெட்டப்படக்கூடாது? என்று கேட்டார். அவருக்கு பதில் சொல்வதற்கு முன் இஸ்லாமியப் படையின் ஒவ்வொரு வீரரும் முன்வந்தனர். ஆனால் அம்ருபினுல் ஆஸ் (ரலி) அனைவரையும் கண்டித்தார்கள். யாரும் இங்கு வரவேண்டாம், என்று உத்தரவிட்டார்கள். இப்படிப்பட்ட இக்கட்டான சூழலில் ஒரு ராணுவ வீரர் கூட்டத்திலிருந்து ஓடி வந்தார்.

தன்னுடன் உடைந்த ஒரு மூக்கையும் கொண்டு வந்தார். நான் தான் உடைத்தேன். என்னுடைய மூக்கை வெட்டுங்கள், என்று கூறினார். இதை எதிர்பார்க்காத நகர மக்கள் திகைத்துப் போய் நின்றனர். உடனே பாதிரி வாளை அம்ருப்னுல் ஆஸ் (ரலி) அவர்களிடம் கொடுத்து விட்டு நீங்கள் கிருத்துவ மதத்துக்கு முழுமையான முன்மாதிரி. நீதம், நேர்மையின் மறுஉருவமாக இருக்கிறீர்கள். யாருடைய மதத்தை நீங்கள் பரப்பிக் கொண்டிருக்கிறீர்களோ அவர் எவ்வளவு பரிசுத்தமான புனிதாராக இருப்பார்!

அந்த மனிதர் (நபி ஸல்) அவர்களுடைய காலத்தில் நான் இருந்திருந்தால் அவர்களுடைய பாதங்களை கழுவிக் குடித்திருப்பேன். ஈஸா (அலை) அவர்களுடைய சிலையை உடைப்பது தவறு தான். ஆனால் அந்த தவற்றுக்காக உங்களிடம் பலிவாங்குவது மிகப்பெரும் அநியாயம். நான் பேராயர் என்ற அடிப்படையில் மக்களின் சார்பாக உங்களை மன்னித்துவிட்டேன். உங்களுடைய ஆட்சி கியாமத் நாள் வரை இருக்கட்டும், என்று கூறினார்.

பாதிரியின் இந்த உரை மக்களுடைய மனதையும் தட்டியெழுப்பியது. பிறகு தலைமைப் பாதிரி முன்வந்து அம்ருப்னுல் ஆஸ் (ரலி) அவர்களுடைய கரத்தைப் பிடித்து இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்கள். இதைப் பார்த்து விட்டு கிருத்தவர்களில் அதிகமானோர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டனர். மற்றவர்கள் தங்களுடைய வீடுகளுக்கு திரும்பிச் சென்றனர்.
நூல்: குஸ்தாகெ ரஸூல் கீ சஸா பஜபானெ சைய்யித்னா முஹம்மத் முஸ்தஃபா (ஸல்)

No comments:

Post a Comment