Friday, 9 January 2015

நபித்துவப் பணியில் திருமணத்தின் பங்கு



நபி (ஸல்) அவர்கள் இவ்வுலகை விட்டுப் பிரிந்து ஏறத்தாழ 1420 வருடங்களுக்கும் மேலாக ஆன பிறகும் கூட அண்ணலார் கொண்டு வந்த சத்திய மார்க்கம் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து கொண்டுதானிருக்கிறது. திறந்த புத்தகமாயிருந்த நபியவர்களுடைய வாழ்க்கையின் ஒவ்வொரு வரியும் இந்த அகிலத்தையே ஆட்கொண்டிருக்கிறது. எனினும் சத்தியத்தை நுகரும் சக்தியைக் கூட இழந்து தவிப்பவர்கள் எப்படியாவது தீனுல் இஸ்லாத்தை வாயால் ஊதி அனைத்துவிட துடியாய் துடிக்கிறார்கள்.

கடலில் சேற்றை வீசுவதால் கடல்நீர் அசுத்தமாகிவிடுமா என்ன? அந்தச் சேற்றையும் கூட சுத்தமாக்கிவிடாதா? சூரியனுக்கு திரை கட்டி வெளிச்சத்தை மறைத்துவிட முடியுமா என்ன? அந்தத் திரையே எறிந்து போய்விடாதா? இன்று மேற்குலகம் மட்டுமல்ல; நம்முடைய சொந்த மண்ணிலும் கூட மேற்குலகின் சிந்தனை விரவிக் கிடக்கிறது.

நபியவர்களின் வாழ்க்கையை கேவலமாக சித்தரிப்பதற்கு தமிழ் இணையதளங்களும் யூத சிந்தனைக்கு சளைத்ததல்ல, என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கின்றன. இது போன்ற சமயங்களில் நபியவர்களின் அப்பழுக்கற்ற வாழ்க்கையை வரி விடாமல் படித்துணர்வது முஸ்லிம்களின் மீது காலத்தின் கட்டாயமாகிவிடுகிறது.

நபி (ஸல்) அவர்களுடைய ஒவ்வொரு நடைமுறையும் இறையறிவிப்பின் (வஹியின்) படியே அமைந்திருக்கும், என்பதும் அவர்களுடைய சொல், செயல், அங்கீகாரம் அனைத்தும் சத்தியமானவை என்பதும் ஒவ்வொரு முஸ்லிமுடைய நம்பிக்கை. நபியவர்களின் பிரியமான மனைவிமார்களைப் பிரிந்து விடுவதற்கு உத்தரவிட்டாலும் நபியவர்கள் அதையும் செயல்படுத்திக் காட்டுவார்கள், என்பது குர்ஆனைப் படித்தவர்களுக்குத் தெரியும். நான் என்னுடைய எந்த மனைவியையும் அல்லாஹ்விடமிருந்து வஹி வராமல் திருமணம் முடித்ததில்லை, என்று கூறும் இறைத்தூதர் இன்று விமர்சிக்கப்படுவது இறைவிசுவாசிகளின் உள்ளத்தை சல்லடையாக்காமல் விடுவதில்லை.

குறிப்பாக ஜைனப் (ரலி) அவர்களை திருமணம் முடித்த நிகழ்வை அக்காலத்து நயவஞ்சகர்கள் தான் கேவலமாக விமர்சித்தார்களென்றால் இக்காலத்து கயவர்களும் அதே கதையை மீண்டும் கையிலெடுக்கிறார்கள்.
சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் மட்டுமே கொள்கையாகக் கொண்டவர்களுக்கு நேர்மையான சட்டங்களும் நடைமுறைகளும் நக்கலாகத்தான் தெரியும். வளர்ப்பு மகன் சொந்த மகனாக ஆகமுடியாது என்பது ஒன்றும் விளக்கி வைக்க வேண்டிய பாடமல்ல.

தான் பெற்றெடுக்காத பிள்ளையை தன்னுடைய மகன் என்று சொல்வதும் அவனுக்கு வாரிசுரிமையில் பங்குண்டு என்று புலம்புவதும் வளர்ப்பு மகனுடைய மனைவியை (விவாகரத்தான பிறகு) தான் திருமணம் முடித்துக் கொள்ளக்கூடாது, என்று சொல்வதும் வேடிக்கையாக இல்லையா? ஆனாலும் தவறான சடங்குகளிலேயே மூழ்கிக் கிடப்பவர்களால் இந்த உண்மையை விளங்கிக் கொள்ள முடியவில்லை. வளர்ப்பு மகன் சொந்த மகனாக ஆக முடியாது, என்று இஸ்லாம் ஓங்கி ஒலித்த போது மௌட்டீக காலத்து சிந்தனையால் சகித்துக் கொள்ள முடியவில்லை.

வளர்ப்பு மகனின் மனைவியை (விவாகரத்துக்குப் பின்) திருமணம் முடிப்பது என்பது விபச்சாரத்தை விடக் கொடுமையாக கற்பனை செய்து கொண்டிருந்த சமுதாயத்தில் அந்த நம்பிக்கையை மாற்றுவதென்பது அவ்வளவு சாதாரணமான காரியமல்ல. ஒருவருக்குப் பிறந்த குழந்தையை பெறாத மற்றொரு நபருடன் சேர்த்து அவருடைய பிள்ளை தான் எனறு கூறுவது எவ்வளவு கேவலமானது? ஆனால் இந்த உண்மையைக் கூட விளங்கிக் கொள்ள முடியாத அளவுக்கு அவர்களுடைய புத்தி மழுங்கிப் போயிருந்தது. இந்நிலையில் இந்தக் கொள்கையை எழுத்தளவிலோ வாயளவிலோ சொன்னால் மட்டும் போதாது, செயலளவிலும் நடைமுறைப் படுத்திக் காட்டி மனதில் ஆழமாகப் பதிந்திருந்த அந்தத் தவறான கொள்கையை வேரோடு பிடுங்கி எறிவதற்காக அல்லாஹ், நபியவர்களுக்கே அப்படியொரு திருமணத்தை நடத்தி வைத்தான்.


நபி (ஸல்) அவர்களின் வளர்ப்பு மகனாகிய ஜைது (ரலி) அவர்களை ஆரம்பத்தில் ஜைத் பின் முஹம்மது (முஹம்மது (ஸல்) அவர்களின் மகன் ஜைத்) என்று தான் மக்கள் அழைத்தார்கள. வளர்ப்பு மகன் சொந்த மகனாக முடியாது என்பதால் அப்படி அழைக்கக் கூடாது, என்று குர்ஆன் தடைவிதித்தது. சும்மா பேச்சுக்குக் கூட பொய் பேசக்கூடாது, என்பது இஸ்லாத்தின் இனிய கொள்கை.

ஜைது பின் ஹாரிஸா (ரலி) அவர்களுக்கும் ஜைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களுக்கும் திருமணம் நடந்தது. எனினும் இருவருடைய குடும்ப சூழல் மாறுபட்டிருந்ததால் திருமண உறவு நீடிக்க முடியவில்லை. கடைசியாக ஜைத் (ரலி) அவர்கள் தலாக் கொடுத்து விட்டார்கள்.

ஜைத் (ரலி) அவர்கள் நபியவர்களின் வளர்ப்பு மகன். இப்பொழுது ஜைனப் தலாக்காகி விட்டதால் மௌட்டீக காலத்தில் புரையோடிக் கிடந்த மடத்தனமான மூடநம்பிக்ககையை முறியடிப்பதற்கு இதுவே நல்ல சந்தர்ப்பம். (இத்ற்காகவே இப்படியொரு சந்தர்ப்பந்தை அல்லாஹ் ஏற்படுத்தி வைத்தான், என்றே சொல்ல வேண்டும்) நபியவர்களின் மனதில் தம்முடைய வனர்ப்பு மகன் தலாக் விட்ட பெண்ணை நாம் திருமணம் செய்தால் மடமையின் உச்சகட்டத்தில் இருக்கும் இந்த சமுதாயம் எப்படியெப்படியெல்லாம் விமர்சிப்பபார்கள்? என்ற எண்ணமும் மனதின் ஓரத்தில் ஓடத்தான் செய்தது. எனினும் இதற்குப் பிறகு நபி வரப்போவதில்லை.

இந்த நபியே இக்காரியத்தை அமுல்படுத்த வில்லையானால் உம்மத்தினரிலல் வேறு யாருக்கும் அதைச் செயல்படுத்திக் காட்டுவதற்கு துணிச்சல் ஏற்படாது. தன்னுடைய வளர்ப்பு மகன் மணமுடித்த பெண்ணை, தானே திருமணம் செய்து கொள்வதை சமூகம் அந்த அளவுக்குக் கேவலமாகக் கருதியது. எனவே நபி (ஸல்) அவர்கள் ஜைனப் (ரலி) அவர்களை மணமுடிக்க வில்லையானால் உம்மத்தினருக்கு மிகப்பெரும் சிரமமாகி விடும்.

எனவே, அல்லாஹ், நாமே ஜைனபை உமக்கு மணமுடித்து வைத்துவிட்டோம், என்று கூறிவிட்டான். நபியவர்களுக்கு அல்லாஹ் நிகாஹ் செய்து வைத்தது, காம இச்சையைப் பூர்த்தி செய்வதற்காக அல்ல; அப்படி செய்யவில்லையானால் யுகமுடிவு நாள் வரை வரும் முஸ்லிம்கள் அந்த மூடநம்பிக்கையை முறியடிப்பதில் வெற்றி பெறாமல் போய்விடக்கூடாது, என்பதற்காகவும் நபி தம்முடைய இறைத் தூதை உலகில் முழுமையாக சேர்ப்பிப்பதற்காகவும் தான் என்ற கருத்தை அல்லாஹ் பின்வருமாறு தன் திருமறையில் கூறுகிறான்:

....... ஜைத் அவளிடம் தேவையைப் பூர்த்தி செய்துகொண்டபின் நாம் (தலாக் விடப்பட்ட) அவளை உமக்கு மணமுடித்துக் கொடுத்தோம். இறைநம்பிக்கை கொண்டவர்கள் தங்களுடைய வளர்ப்புப் பிள்ளைகள் தம் மனைவிமார்களிடத்தில் தம் தேவையை நிறைவேற்றி விடும்போது அவர்களை (தாங்களே திருமணம் செய்து கொள்ளும்) விவகாரத்தில் எவ்விதமான சிரமமும் (இடையூறும்) இருக்கக் கூடாது என்பதற்காக. மேலும் அல்லாஹ்வின் கட்டளை செயல்படுத்தப் படவேண்டியதாகவே இருக்கிறது.

மேலும் நபிக்காக அல்லாஹ் நிர்ணயித்துள்ள ஒன்றில் (அது ஜைனபை நிகாஹ் முடிப்பதாகட்டும். அல்லது அது போன்ற மற்ற தூதுத்துவப் பணியை நிறைவேற்றுவதாக இருக்கட்டும். அவற்றை செய்வதில்) நபியின் மீது எந்த குற்றமோ (தடையோ) இல்லை. முன்பு சென்றுவிட்டவர் (களாகிய நபிமார்)கள் விஷயத்திலும் இதுவே அல்லாஹ்வின் நடைமுறையாக இருந்திருக்கிறது.

அல்லாஹ்வின் கட்டளை திட்டவட்டமாக தீர்வு செய்யபபட்டதாக இருக்கிறது. அவர்கள் (நபிமார்கள்) எத்தகையோரென்றால் இறைத் தூதுச்செய்திகளை (மக்களிடம்) கொண்டு போய் சேர்க்கிறார்கள். மேலும் அவனையே அஞ்சுகிறார்கள். அல்லாஹ்வைத் தவிர மற்ற எவரையும் அவர்கள் பயப்படமாட்டார்கள். மேலும் கணக்குக் கேட்பதற்கு அல்லாஹ்வே போதுமானவன். உங்களுடைய ஆண்களில் எவருக்கும் முஹம்மத் தந்தையாக இருக்கவில்லை. எனினும் அவர் அல்லாஹ்வின் தூதராகவும் இறுதி நபியாகவும் இருக்கிறார். அல்லாஹ் ஒவ்ன்றைப் பற்றியும் நன்கறிந்தவனாக இருக்கிறான். (33:37-40)

நேரடியாக அல்லாஹ்வே நாம் தான் ஜைனபை (ரலி) நபிக்கு திருமணம் முடித்து வைத்தோம், என்று கூறுவதன் மூலம் இது இறைத்தூதர் செய்ய வேண்டிய பணி, அப்படி செய்ய வில்லையானால் இறுதி நபியின் இறைப்பணியில் ஏதும் குறை ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவே இந்தத் திருமணம் நடந்ததாகத் தெரிகிறது. அல்லாஹ்வை (கடவுளைப்) பற்றி அடிப்படை அறிவு கூட இல்லாதவர்களிடம் விவாதம் செய்து பலனில்லை. நபியவர்கள் செய்த அனைத்து திருமணங்களின் ஒட்டு மொத்த நோக்கமே நபித்துவச் செய்திகளை மக்களிடம் கொண்டுபோய் சேர்ப்பதில் எந்தத் தடையோ சிரமமோ ஏற்பட்டுவிடக்கூடாது, என்பது தான். மனைவிமார்களின் மூலம் மார்க்கம் தொடர்பான ஏராளமான தகவல்களை ஹதீஸ் கிரந்தங்களில் காண முடியும். நபியவர்களின் குடும்ப வாழ்க்கை மற்றும் வீட்டில் இருக்கும் போது வரும் வஹி அறிவிப்புகளை மனைவிமார்களால் தான் வெளிக்கொணர முடியும். மனைவியர்களின் மார்க்கப்பணி:

அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் மட்டும் 2210 நபி மொழிகளை அறிவித்துள்ளார்கள். புகாரி, முஸ்லிமில் மட்டும் 174 ஹதீஸ்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அன்னையவர்கள் அறிவிக்கும் ஹதீஸ்களில் பல மற்ற நபித்தோழர்கள் அறிவிக்கும் நபிமொழிகளை விட்டும் வித்தியாசமானதாக இருக்கும். நபியவர்கள் கூறும் ஹதீஸ்களில் ஏற்படும் சந்தேகங்களுக்கு உடனுக்குடன் விளக்கம் கேட்டு விரிவுரை தேவையில்லாத அளவுக்கு நபிமொழிகளை இந்த உம்மதிற்கு தந்துள்ளார்கள்.

உதாரணமாக, ஒரு தடவை நபி (ஸல்) அவர்கள், யாருக்காவது இரண்டு குழந்தைகள் சிறுவயதிலேயே இறந்து விட்டால் அவரை அல்லாஹ் சுவனம் நுழையச் செய்வான், என்று கூறினார்கள். உடனே ஆயிஷா (ரலி) ஒருவருக்கு ஒரு குழந்தை இறந்து விட்டால்? என்று கேட்டார்கள். இதைக் கேட்டு சந்தோஷப்பட்ட நபி (ஸல்) அவர்கள், (சமுதாயத்தின் மீதுள்ள பாசத்தால் அவ்வப்போது தேவையான நல்ல விஷயங்களைக் கேட்டு விளங்கிக் கொள்வதற்கு) பாக்கியம் கொடுக்கப்பட்டவளே!

ஒரு குழந்தை இறந்து விட்டாலும் சுவர்க்கம் கிடைக்கும், என்று கூறினார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள் அத்தோடு நிறுத்திக் கொள்ளவில்லை. ஒருவருக்கு எந்தக் குழந்தையும் இறக்க வில்லையானால் அவருடைய நிலை என்ன? என்று கேட்டார்கள். அவர்களுக்கு நான் இருக்கிறேன். (சிபாரிசு செய்வேன்) என்னுடைய இழப்பைப் போன்று எனது உம்மத்தினர் வேறெதைக் கொண்டும் சோதிக்கப் படவில்லை என்று நபி (ஸல்) கூறினார்கள். (திர்மிதீ- 982)
ஆயிஷா (ரலி) அவர்கள் வெறும் வார்த்தையை மட்டும் அறிவிக்கவில்லை. நபிவயவர்களின் வஃபாத்திற்குப் பின் அபூபக்ர் (ரலி), உமர் (ரலி), உஸ்மான் (ரலி) ஆகியோருடைய ஆட்சி காலத்தில் தங்களுடைய மரணம் வரையிலும் ஃபத்வா (மார்க்கத் தீர்ப்பு) கொடுப்பதில் தனித்துவம் பெற்றிருந்தார்கள்,, என்று காஸிம் பின் முஹம்மது (ரஹ்) கூறினார்கள் (அஜ்வாஜுந்நபி)

நபித்தோழர்களிலேயே மாபெரும் மார்க்கச் சட்டக் கலை வல்லுணர் ஆயிஷா (ரலி) அவர்கள் தான் என்று இமாம் தஹபீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். நபித்தோழர்களுக்கு மத்தியில் எந்த பிரச்சனை ஏற்பட்டாலும் அதைப்பற்றி அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்டால் கண்டிப்பாக அதைப்பற்றி விளக்கத்தை நாங்கள் அவர்களிடம் பெற்றுக் கொண்டோம், என்று அபூமூஸல் அஷ்அரீ (ரலி) கூறினார்கள்.

வரலாற்றுப் பார்வை:
நபியவர்கள் முதன் முதலாக கதீஜா (ரலி) அவர்களை மணமுடித்தார்கள். அப்போது கதீஜா (ரலி) அவர்களின் வயது 40. அத்துடன் விதவையாகவும் இருந்தார்கள். நபிப்பட்டம் கிடைப்பதற்கு முன்பு செய்த திருமணம் கூட காமவெறிக்கு அப்பாற்பட்டதாக இருக்கும் போது அதற்குப் பிறகு செய்த திருமணங்களைப் பற்றி என்ன பேசவேண்டியிருக்கிறது? கதீஜா (ரலி) அவர்களின் மூலம் இஸ்லாத்திற்கு மிகப்பெரிய உதவி கிடைத்தது. ஸௌதா (ரலி) அவர்களின் கணவர் இறந்துவிட்டார்.

அவரை நபியவர்கள் மணமுடிக்காவிட்டால் இணைவைப்பாளர்களிடம் போய் சேர வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டிருக்கும். பத்ர் யுத்தத்தில் தம்முடைய கணவர் இறந்த பின் ஹஃப்ஸா (ரலி) அவர்களை அவரது தந்தை உமர் (ரலி) அவர்கள் உஸ்மான் (ரலி) அவர்களிடம் முடித்துக் கொள்ளும்படி வேண்டினார்கள். அவ்வாறே அபூபக்ர் (ரலி) அவர்களிடமும் வேண்டினார்கள். எனினும் இருவரும் ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் ஏற்பட்ட மனவேதனையை உமர் (ரலி) அவர்கள் நபியவர்களிடம் கூறினார்கள். அவ்விருவரையும் விட சிறந்தவர் விரைவில் ஹஃப்ஸாவை மணமுடித்துக் கொள்வார், என்று கூறி உமர் (ரலி) அவர்களை சந்தோஷப்படுத்தினார்கள்.

ஒரு யுத்தத்தில் கைதியாக பிடிக்கப்ட்ட ஜுவைரியா (ரலி) அவர்களை நபியவர்கள் உரிமை விட்டு தாமே மணமுடித்துக்கொண்டார்கள். இந்த திருமணத்தின் மூலம் இஸ்லாத்திற்கு மிகப்பெரிய லாபம் கிடைத்தது. அந்த குடும்பத்தைச் சார்ந்த எல்லா கைதிகளையும் நபித்தோழர்கள் உரிமை விட்டுவிட்டனர். அவர்கள் அனைவரும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டனர். நூற்றுக்கணக்கான குடும்பம் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற்றது. அபூஸலமா (ரலி) அவர்கள் உஹது யுத்தத்தில் ஏற்பட்ட காயத்தில் மரணித்த போது அனாதைப் பிள்ளைகளை விட்டுச் சென்றுவிட்டார்கள். அவருடைய விதவை மனைவி உம்முஸலமா (ரலி) வை நபியவர்கள் மணமுடித்து அனாதைகளை நல்ல விதத்தில் பராமரிக்கும் முறையை செயல் படுத்திக் காட்டினார்கள்.


அபூசுஃப்யான் (ரலி) இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதற்கு முன் முஸ்லிம்களின் மிகப்பெரும் விரோதியாக செயல்பட்டார். அவருடைய மகள் உம்முஹபீபா (ரலி) வும் அவருடைய கணவரும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டனர். இந்நிலையில் அவ்விருவரும் (ஹபஷா) வுக்கு ஹிஜ்ரத் செய்தனர். அங்கே அவருடைய கணவர் இஸ்லாத்தை விட்டும் வெளியேறிவிட்டார். உம்முஹபீபா (ரலி) அவர்கள் தங்களுடைய ஈமானை பாதுகாத்துக் கொண்டார்கள். இப்பொழுது முஸ்லிமல்லாத கணவருடன் வாழ வேண்டும். அல்லது இஸ்லாத்தின் எதிரியாக இருந்த தந்தை அபூசுஃப்யானிடம் செல்ல வேண்டும். இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையிலிருந்து உம்முஹபீபாவைப் பாதுகாப்பதற்காக நபியவர்களே திருமணம் செய்து கொண்டார்கள். இந்த திருமணத்திற்குப் பிறகு எதிரியாக இருந்த அபூசுஃப்யானுடைய மனதில் நல்ல மாற்றம் ஏற்பட்டது.

இப்படி நபியவர்களின் ஒவ்வொரு திருமணத்தின் பின்னணியிலும் இஸ்லாத்தின் லாபமே மறைந்திருக்கும். எனினும் காழ்ப்புணர்ச்சியில் விஷத்தைக் கக்குபவர்கள் பற்றி நாம் கவலைப் படத் தேவையில்லை. இன்ஷாஅல்லாஹ் அவர்களுக்கும் விரைவில் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ள அல்லாஹ் தௌஃபீக் செய்யட்டும், என்று துஆ செய்வோம்.

No comments:

Post a Comment