என்றுமில்லாத அளவுக்கு இன்று உலகின் நிலைபாடு முற்றிலும்
மாறியுள்ளது. இறையியல், இயற்பியல், தொழில் துறை, அரசியல், பொருளியல், விஞ்ஞானம், மருத்துவம், ஊடகம், தனிமனித சூழல், சமூக சூழல், குடும்ப சூழல் என அனைத்துத்
துறைகளும் ஆகப் பெரும் வளர்ச்சி கண்டு வளர்ச்சிக்கும் வளர்ச்சி தேடிக்கொண்டிருக்கிறது,
உலகம். நவீன உலகம்,
நவீன கண்டுபிடிப்பு,
நவீன வாகனம்,
நவீன பிரச்சினை,
நவீன தீர்வு என எல்லாவற்றிலும்
நவீனம் என்ற வார்த்தை இரண்டறக் கலந்துவிட்டது.
இப்படிப்பட்ட நவீன உலகில் பழங்காலத்து கொள்கைகளோ மதங்களோ
ஈடுகொடுக்க முடியாது. எனவே, அரசியல் வேறு; மதம் வேறு, விஞ்ஞானம் வேறு; மதம் வேறு, உலகியல் வேறு; இறையியல் வேறு, என்று பாகுபடுத்திப் பார்க்கப்படும்
இந்த உலகில் மதங்கள் தங்களுடைய இருப்பை நிலைப்படுத்திக் கொளவதற்கு நவீனத்துடன் போட்டி
போட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றன.
ஆனால், இஸ்லாம் இதற்கு விதிவிலக்கானது, என்பது சொல்லித் தெரிய வேண்டிய
ஒன்றல்ல. பிரச்சினைகள் என்பது முடிவில்லாதவை. ஒரு வரம்புக்குட்பட்டவையல்ல. ஒவ்வொரு
நாளும் புதிது புதிதாக பல பிரச்சினைகள் தீர்வுக்காக அணி வகுத்து நிற்கின்றன. எனினும்
குர்ஆனும் ஹதீஸும் வார்த்தைகளளவில் வரம்புக்குற்பட்டவை. குர்ஆனில் உள்ள இறைவசனங்களும்
ஹதீஸ் கிரந்தங்களில் தொகுக்கப்பட்டுள்ள நபிமொழிகளும் மட்டும் தான் நம்முன் உள்ளன. எனினும்
அவற்றின் உட்கருத்துக்கள் ஆழமானவை. யுக முடிவு நாள்வரை தோன்றும் அனைத்து நவீன பிரச்சினைகளுக்கும்
தங்குதடையின்றி தீர்வுகளை அள்ளித் தந்து கொண்டிருக்கும் திறன் படைத்தவை.
பிரச்சினைகளின் தீர்வு அல்குர்ஆன்:
ஹாரிஸ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நான் மஸ்ஜிதில் கடந்து
சென்றேன். அப்பொழுது மக்கள் (தவறான தேவையில்லாத) பேச்சுக்களை பேசிக்கொண்டிருந்தார்கள்.
நான் அலீ (ரலி) அவர்களிடம் அமீருல் முஃமினீன் அவர்களே! மக்கள் (குர்ஆன் மற்றும் திக்ருகளை
விட்டுவிட்டு சத்தியத்திற்குத் தொடர்பில்லாத கதைகளையும் தேவையில்லாத) பேச்சுக்ளளை(யும்)
பேசிக்கொண்டிருக்கிறார்கள், என்று கூறினேன். அதற்கு அவர்கள் அப்படியா செய்கிறார்கள்,
என்று கேட்டார்கள்.
நானும் ஆம் என்றேன். அலீ (ரலி) அவர்கள், மிக விரைவில் (மிகப்பெரும்) ஃபித்னா - குழப்பம் ஏற்பட
இருக்கிறது, என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அதற்கு நான் அல்லாஹ்வின் தூதர் அவர்களே அப்படியானால்
அதிலிருந்து மீள்வதற்கான தீர்வு என்ன? என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு
பதிலளித்தார்கள்:
(அதற்கான தீர்வு) அல்லாஹ்வுடைய வேதம் தான். அதில்,
உங்களுக்கு முன்பு நடந்த
தகவல்களும் உங்களுக்குப் பிறகு நடக்கப் போகும் செய்திகளும் உங்களுக்கு மத்தியில் ஏற்படும்
பிரச்சினைகளுக்குத் தீர்வும் இருக்கிறது..... திர்மிதீ - 2906
எனவே, எப்படிப்பட்ட பிரச்சிகைனகள் வந்தாலும் அவை பொருளாதார ரீதியாக
இருந்தாலும் சரி குடும்பவியல் ரிதியாக இருந்தாலும் சரி, சமூகம் தொடர்பாக இருந்தாலும் சரி,
தனி மனிதன் தொடர்பாக
இருந்தாலும் சரி அரசியல் தொடர்பானதாக இருந்தாலும் சரி ஆன்மீகம் பற்றியதாக இருந்தாலும்
சரி அனைத்து வகையான பிரச்சினைகளுக்கும் குர்ஆன் மூலம் தெளிவான தீர்வு காணமுடியும்,
என்பதை சந்தேகத்திற்கிடமின்றி
சொல்ல முடியும்.
நவீன பிரச்சினைகளுக்கு தீர்வுகளை மதங்களின் இடிபாடுகளுக்கிடையே
தேட முடியுமா? என்று சவால் விடப்படும் இந்நாளில் இல்லை; இனிய இஸ்லாத்தின் அழகிய அரண்மனைக்குள்
அமுதம் கொட்டும் அழகான தீர்வுகளை அள்ளித் தரமுடியும், என்று மார்தட்டிச் சொல்லும் துணிச்சல்
முஸ்லிம்களுக்கு மட்டுமே உண்டென்றால் அது மிகையல்ல. ஏன் நவீன சிந்தனை கூட இஸ்லாம் இட்ட
பிச்சை என்று சொன்னாலும் மிகையாகாது.
சூரியனையும் சந்திரனையும் நட்சத்திரங்களையும் வணங்கிக்
கொண்டிருந்த காலத்தில் அவற்றை சிந்தித்துணர்ந்து படைத்த அல்லாஹ்வின் வல்லமையை புரிந்து
கொள்ளுமாறு உபதேசித்தது குர்ஆன் தானே! பேருந்துக்கு முன்னால் நின்று கொண்டு அதற்கும்
ஒரு கும்பிடு போட்டு விட்டு பேருந்தை இயக்க ஆரம்பிப்பவர்களைப் பார்த்ததில்லையா?
குலதெய்வம் முதற்கொண்டு
செய்யும் தொழிலையும் தெய்வமாகக் கருதி சிந்தனைச் சக்திக்கு அணை கட்டிக் கொண்டிருக்கும்
காலத்தில் அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள் இல்லை, என்று சொல்லும் மார்க்கம் இஸ்லாம்
அல்லவா?
நவீனத்தை ஏன் ஏற்கக்கூடாது?:
இஸ்லாம் நவீனத்தை விரும்பாது, என்று சில நவீன விரும்பிகள் நம்பலாம்.
ஆனால், புதியதை
விரும்புவததென்பது மனினுடைய இயல்பு என்பதை யார் தான் மறுக்க முடியும். நவீனத்தை விரும்பவில்லையானால்
மனிதன் கற்காலத்திலிருந்து தற்காலத்திற்கு மாறியிருக்க முடியாது. குதிரையையும் ஒட்டகத்தையும்
விட்டுவிட்டு விண்வெளிக் கப்பலிலும் விண்கலங்களிலும் பயணித்திருக்க முடியாது. மண்விளக்குகளில்
வெளிச்சம் தேடிக் கொண்டிருந்தவர்கள் மின் விளக்குகளில் மினுமினுக்க முடியாது. கையில்
கிடைத்த அனைத்தும் ஆயுதம் என்ற நிலையிலிருந்து அணு ஆயுதம் வரை முன்னேறியிருக்க முடியாது.
அப்படியானால் நவீனத்தை விரும்புவது மனித இயல்பு. இஸ்லாம்
ஒருபோதும் அதன் குறுக்கே நிற்காது. ஒரு கண்டுபிடிப்பையோ அல்லது நடைமுறையையோ அது புதியது
என்பதற்காக மட்டும் இஸ்லாம் அதைத் தடை செய்யாது. பல சமயங்களில் அதை வரவேற்கவும் செய்யும்.
அதற்கு முக்கியத்துவமும் கொடுத்திருக்கும்.
அகழ் யுத்தம்:
நபி (ஸல்) அவர்களுடைய காலத்தில் அரபகத்திற்கு வெளியிலிருந்து
வந்த பல நடைமுறைகளை நபி (ஸல்) அவர்கள் அங்கீகரித்திருக்கிறார்கள். இஸ்லாமிய வரலாற்றில்
கந்தக் - அகழ் யுத்தம் மிகவும் பிரபல்யமானது. முழு அரபுலகமும் திரண்டு வந்து மதீனாவை
முற்றுகையிட்டது. இன்றோடு இஸ்லாத்திற்கு சமாதி கட்டி விட வேண்டுமென்ற திட்டத்தில் எதிரிகள்
மதீனாவை முறறுகையிட்டார்கள்.
இந்நிலையில் நபி (ஸல்) அவர்கள் தங்களுடைய தோழர்களிடம்
ஆலோசனை செய்தார்கள். அப்போது ஸல்மான் ஃபாரிஸீ (ரலி) அவர்கள் தங்களுடைய நாட்டில் உள்ள
நடைமுறையைக் கூறினார்கள். அதாவது, நமக்கும் எதிரிகளுக்கும் மத்தியில் மிகப்பெரும் அகழ் தோண்ட வேண்டும்.
இதனால் எதிரிகள் அதைத் தாண்டி வந்து நம்மைத் தாக்க முடியாமல் போகும். நபி (ஸல்) அவர்கள்
இந்த யோசனையை அப்படியே ஏற்றுக் கொண்டார்கள். இது பாரசீகர்களின் பழக்கமாச்சே! என்ற காரணம்
கூறி அந்த யோசனையை மறுக்கவில்லை. எதிரிகள் இந்த திட்டத்தைக் கண்டு திகைத்துப் போய்
நின்றார்கள். அல்லாஹ்வின் மீது சத்தியமாக இது ஒரு சூழ்ச்சி. இப்படிப் பட்ட சூழ்ச்சியை
அரேபியர்கள் ஒரு போதும் தேர்ந்தெடுத்தது கிடையாது, என்று கூறினார்கள். (அஸ்ஸீரதுந் நபவிய்யா
லிப்னி கதீர்)
ஆனால், அரேபியர்கள், அரேபிய போர்த் தந்திரத்தை மட்டும் தான் கையாள வேண்டும்,
என்று இஸ்லாம் வலியுறுத்தவில்லை.
அரேபியன் என்ற தேவையற்ற தேசப்பற்று கொண்ட எதிரிகள் வேண்டுமானால் அதைத் தவறாகப் பார்க்கலாம்.
ஆனால், நபி
(ஸல்) அவர்களுடைய மனதில் அகழ் தோண்டும் திட்டத்தை சரியானதாகவே அல்லாஹ் காட்டிக் கொடுத்தான்.
இஸ்லாமியக் கொள்கைகளுக்கு முரணாக இல்லாதவரை மாற்றார்களின் நல்ல திட்டங்களை நாம் ஏன்
எடுத்துக் கொள்ளக் கூடாது?
நிதியமைச்சகம்:
ஏறத்தாழ ஹிஜ்ரி 15 ஆம் ஆண்டு உமர் (ரலி) அவர்கள்,
அபூஹுரைரா (ரலி) அவர்களை
பஹ்ரைனுக்கு அதிகாரியாக நியமித்தார்கள். அவர்கள் வருட இறுதியில் ஐந்து லட்சம் (திர்ஹத்தைக்)
கொண்டு வந்தார்கள். கலீஃபா அவர்கள் ஆலோசனைக் குழுவைக் கூட்டி பஹ்ரைனிலிருந்து பெரும்
தொகை வந்துள்ளது. இதை என்ன செய்யலாம்? என்று ஆலோசனை கேட்டார்கள்.
அலி (ரலி) அவர்கள் அந்தந்த வருடத்தில் அவற்றை செலவு செய்து
விடவேண்டும். கஜானாவில் வைக்கக் கூடாது என்று கூறினார்கள். உஸ்மான் (ரலி) அவர்கள் அதற்கு
மாற்றமான கருத்தைத் தெரிவித்தார்கள். அப்போது அங்கிருந்த வலீத் பின் ஹிஷாம் அவர்கள்,
சிரியா தேசத்து மன்னர்களிடம்
நிதிக்காக தனித் துறை இயங்கியதை நான் கண்டிருக்கிறேன், என்று கூறினார். உமர் (ரலி) அவர்கள்
இந்த கருத்தை வரவேற்று பைத்துல்மால் எனும் நிதியமைச்சகத்திற்கு அடித்தளமிட்டார்கள்.
நவீன ஆயுதங்கள்:
நபி (ஸல்) அவர்கள் போர்க்களத்தில் நவீன ஆயுதங்களைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
கைபர் வெற்றியின் போது ஸஃப் என்ற கோட்டை முஸ்லிம்களிடம் வீழ்ந்தது. அந்தக் கோட்டையின்
சுரங்கக் கிடங்கில் சோதனையிட்ட போது அங்கே ஏராளமான போராயுதங்களும் தற்காலத்து துப்பாக்கி
மற்றும் பீரங்கி போன்ற ஆயுதங்களும் கிடைத்தன.
யூதர்கள், அந்த ஆயுதம் தயாரிக்கும் தொழில் நுட்பத்தை ரோமர்களிடமிருந்து
கற்றுக் கொண்டார்கள். நபி (ஸல்) அவர்கள் இந்த நவீன ஆயுதங்கள் ரோமர்களின் தயாரிப்பு,
என்று கூறி அவற்றை நிராகரிக்கவில்லை.
தாயிஃப் நகரத்தை நபி (ஸல்) அவர்கள் முற்றுகையிட்ட போது அவர்களுடைய எதிர்ப்பை எவ்வாறு
எதிர்கொள்வது என்பது பற்றி தோழர்களிடம் ஆலோசனை செய்தார்கள்.
ஸல்மான் ஃபாரிஸீ (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் அவர்களே
இது போன்ற சமயத்தில் நாங்கள் பாரசீக நாட்டில் மன்ஜனீக் எனும் கல் எறியும் ஆயுதத்தை
பயன்படுத்துவோம். எதிரிகளும் எங்களுக்கு எதிராக அதைப் பயன்படுத்துவார்கள். கோட்டையை
வீழ்த்துவதற்கு நாமும் அவ்வாறு செயல்படலாமே, என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள்
அந்த ஐடியாவை அங்கீகரித்தவர்களாக ஸல்மான் ஃபாரிஸீ (ரலி) அவர்களையே அந்த துப்பாக்கி
போன்ற இயந்திரத்தை தயாரிக்கும் படி கூறினார்கள். (அல்மகாஸீ லில்வாகிதீ)
நவீன தொழில் நுட்பம்:
நபி (ஸல்) அவர்கள் அத்துடன் நிறுத்திக் கொள்ள வில்லை.
நவீன ஆயுதங்களைத் தயாரிக்கும் தொழில் நுட்பத்தை நபித்தோழர்கள் கற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகளையும்
நபி (ஸல்) அவர்கள் செய்தார்கள் என்பது அதைவிட முக்கியமானது. உர்வதுப்னு மஸ்வூத் (ரலி)
கைலான் பின் ஸலமா (ரலி) ஆகிய இரு நபித் தோழர்களும் தாயிஃப் நகர முற்றுகையிலும் ஹுனைன்
யுத்தத்திலும் கலந்து கொள்ளவில்லை. ஏனெனில் அவ்விருவர்களும் யமன் தேசத்தில் ஜுரஷ் என்ற
நகரத்திற்கு தப்பாபா, மன்ஜனீக் - துப்பாக்கி, பீரங்கி போன்ற ஆயுதங்களின் தொழில் நுட்பத்தைக் கற்றுக்கொள்வதற்காக
சென்றிருந்தார்கள். (அல்பிதாயா வந்நிஹாயா)
நூஹ் (அலை) அவர்களுக்கு கப்பல் கட்டும்படி உத்தரவிட்டான்.
அந்த கப்பலில் எல்லா உயிரனங்களின் ஒரு ஜோடியையும் ஏற்றிக்கொள்ளும்படியும் உத்தரவிட்டான்.
அப்படியானால் அந்தக் கப்பல் எவ்வளவு பெரிதாக இருந்திருக்கும் என்பதை கற்பனை செய்ய முடிகிறதா?
இஸ்லாம் இது போன்ற நவீன
கண்டுபிடிப்புகளை அறிந்து கொள்வதற்கும் மார்க்கம் அனுமதித்த முறையில் அவற்றைப் பயன்படுத்துவதற்கும்
ஆர்வமூட்டுகிறதே தவிர தடுக்கவில்லை. ஆனாலும் அல்லாஹ்வுக்கு இணைவைக்கும் சிந்தனையில்
ஊறிப்போனவர்கள் ஏதாவது ஒரு புதிய சக்தியைக் கண்டால் அதையும் வணங்க ஆரம்பித்து விடுகின்றனர்.
நூஹ் நபியின் கப்பல் ஒதுங்கிய இடத்தில் கப்பல் ஆலயம் என்ற பெயரில் ஓர் ஆலயத்தையே எழுப்பி
விட்டனர். கி. பி. எட்டாம் நூற்றாண்டு வரை அந்த ஆலயம் இருந்ததாக வரலாறு. (கஸஸுல் குர்ஆன்)
No comments:
Post a Comment