மக்களுக்கிடையே ஏற்படக்கூடிய பிணக்குகள் பல ஆறாத வடுக்களை
ஏற்படுத்தி விடுகின்றன,. எத்தனை வேறுபாடுகள் இருந்தாலும் ஒன்றுபட்ட கருத்துக்களை அடிப்படையாக
வைத்து இணங்கி செயல்படும் போது மிகப்பெரும் பலனை பார்க்க முடியும். இப்படியொரு வித்தியாசமான
ஒற்றுமையை - வேற்றுமையில் ஒற்றுமை -காலத்தின் கட்டாயமாக இருக்கிறது. எங்களுடைய கொள்கையும்
உங்களுடைய கொள்கையும் ஒன்று தான். பிறகு ஏன் வேறுபட்டு நிற்கிறீர்கள். வாருங்கள்! ஒன்றிணைந்து
செயல்படலாம், என்று அழைக்கும் போது அந்த அழைப்புப்பணிக்கு அளப்பரிய பலனைப் பார்க்க முடியும்.
அப்படியொரு வழிமுறையை குர்ஆன் சொல்லித்தருகிறது. வேண்டுமானால் பின்வரும் வசனத்தைப்
படித்துக் கொள்ளுங்கள்!
(நபியே) நீர் கூறும்: வேதம் அருளப்பட்டோரே! (யூத மற்றும்
கிருத்தவர்களே!) எங்களுக்கும் உங்களுக்கும் இடையிலுள்ள பொதுவான ஒரு கருத்தின் பக்கம்
வாருங்கள்: அல்லாஹ்வைத் தவிர யாரையும் நாம் வணங்க மாட்டோம். நாம் அவனுடன் எதையும் இணையாக்கவும்
மாட்டோம். நாம் அல்லாஹ்வையன்றி நம்மில் சிலர் சிலரை இறைவனாக ஆக்கிக் கொள்ளவும் கூடாது.
அவர்கள் (இதை ஏற்பதை விட்டும்) பின்வாங்கி விட்டால் திண்ணமாக நாங்கள் முஸ்லிம்கள்
(அல்லாஹ்வுக்கு முழுமையாக கட்டுப்பட்டவர்கள்) என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள்!
என்று (உறுதியாகக்) கூறிவிடுங்கள்! (அல்குர்ஆன்
- 3:64)
எவ்வளவு பெரிய எதிரியாக இருந்தாலும் அவர்கள் ஏற்றுக்கொண்ட
கருத்தை முன்வைத்து அவர்களையும் நேர்வழிக்கு அழைப்பு விடுப்பது தான் குர்ஆன் போதிக்கும்
அழகிய உபதேசம். ஆனால், அந்த குர்ஆனை இறைவேதமாக ஏற்றுக்கொண்ட முஸ்லிம்களே கூட தங்களுக்கிடையே பல பிரிவுகளை
ஏற்படுத்திக் கொண்டு பகைமை உணர்வையும் குரோத உணர்வையும் நீர் ஊற்றி வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
முஸ்லிம்களுக்கிடையே பிளவுகள் ஏற்படும் போதெல்லாம் அதை முறியடித்து இணக்த்தை சுணக்கமின்றி
ஏற்றுக் கொள்ளச் செய்வதற்கு உறுதியான ஒரு தலைமை இல்லாமல் போய்விட்டது. நபி (ஸல்) அவர்கள்
தங்களுடைய தோழர்களுக்கிடையே ஏதாவது ஒரு பிரச்சினை ஏற்பட்டால் உடனடியாகத் தலையிட்டு
பிணக்கின் தலையையே வெட்டிச் சாய்த்துவிடுவார்கள்.
துர்நாற்றம் தரும் பிரிவினை வாதம்:
ஹிஜ்ரி ஐந்து அல்லது ஆறாம் ஆண்டு, நபி (ஸல்) அவர்கள் யுத்தத்திற்கு
சென்றிருந்த போது முரைஸீஃ என்ற உற்றுக்கண் அல்லது கிணற்றுக்கு அருகில் தங்கியிருந்தார்கள்.
யுத்தம் முடிந்து அங்கிருந்து புறப்படுவதற்கு முன்பு ஒரு பிரச்சினை ஏற்பட்டு விட்டது.
அந்த கிணற்றுக்கருகில் ஒரு முஹாஜிருக்கும் (மக்காவிலிருந்து மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்து
வந்தவருக்கும்) ஒரு அன்ஸாரிக்கும் (மக்காவிலிருந்து வந்தவர்களை வரவேற்று உபசரித்த மதீனாவாசிக்கும்)
இடையே ஏற்பட்ட சலசலப்பில் பிரச்சினை பெரிதாக வெடித்துவிடும் நிலை ஏற்பட்டது.
இந்நிலையில் அந்த முஹாஜிர் தோழர் முஹாஜிர்களே! உதவிக்கு
வாருங்கள்!, என்று ஆதரவு திரட்ட மறுபக்கம் நின்ற அந்த அன்ஸாரித் தோழர், அன்ஸாரிகளே! உதவிக்கு வாருங்கள்!
என்று அழைக்க ஆரம்பித்து விட்டார். இதைக் கேட்டவுடன் நபி (ஸல்) அவர்கள் சம்பவ இடத்திற்கு
வந்து இது என்ள மொட்டீக காலத்து கோஷம்?, என்று கேட்டார்கள்.
ஒரு முஹாஜிர் ஓர் அன்ஸாரியைத் தாக்கிவிட்டார், என்று மக்கள் கூறவும் (அதற்கென்ன?)
இதை (இத்தோடு) விட்டுவிடுங்கள்.
ஏனெனில், இப்படி
கோஷமிடுவது துர்நாற்றம் தரக்கூடியது, என்று கூறி பிணக்குகளை இணக்கமாக்கினார்கள். (புகாரி -
4905)
பிறகு கூறினார்கள்: உங்களுடைய சகோதரர் அநியாயக்காரராக
இருந்தாலும் அநீதி இழைக்கப்பட்டவராக இருந்தாலும் அவருக்கு உதவி செய்ய வேண்டும்,
என்று கூறினார்கள்.
அநியாயக்காரரை அவர் செய்யும் அநியாயத்திலிருந்து விலக்கிவிடுவது தான் அவருக்கு செய்யும்
உதவியாகும்.
நீதி, அநீதி என்ற அடிப்படையில் ஒரு பிரச்சினையை அணுகுவது தான் முறையாகும்.
முஸ்லிம், அவர்
முஹாஜிராக இருந்தாலும் அன்சாரியாக இருந்தாலும் எந்த இனத்தைச் சார்ந்தவராக இருந்தாலும்
எந்த குடும்பத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் சரி. அதற்குப் பதிலாக இப்படியொரு கோஷம்
மௌட்டீகமும் மடத்தனமும் தவிர வேறில்லை. அது துர்நாற்றத்தைத் தவிர வேறெதையும் கொண்டுவராது,
என்பதை இதன் மூலம் விளக்கி
வைத்தார்கள். உடனடியாக அவர்களுக்கிடையே இணக்கம் ஏற்பட்டு விட்டது. பாதிக்கப்பட்டவர்,
அன்சாரித் தலைவரின்
பேச்சைக் கேட்டு பெரிய மனம் வைத்து மன்னித்துவிட்டார். (தஃப்ஸீர் மஆரிஃபுல் குர்ஆன்
- 8/449)
முஹாஜிர், அன்சாரி அற்புதமான பதம்:
இந்த நிகழ்ச்சியை உற்று நோக்கினால், அவ்விரு நபர்களின் கோஷத்தில்
வெளிப்படையாக மௌட்டீகம் எதுவும் கலக்க வில்லை. முஹாஜிர், என்பதும் அன்சாரி என்பதும் மிகச் சிறந்த
வார்த்தை. அவை அவர்களுக்கு இஸ்லாம் வழங்கிய பட்டமும் மரியாதையுமாகும். மக்காவில் தங்களுடைய
மார்க்கத்தின்படி முழுமையாக வாழ முடியாத ஒரு நிர்பந்த நிலையில் அங்கிருந்து வெளியேறி
மதீனாவுக்கு வந்து குடியேறியவர்களை குர்ஆன் முஹாஜிர் என்று அழைக்கிறது. அப்படி மதீனாவுக்கு
வந்தவர்களை வரவேற்று மதீனாவில் வாழவைத்தவர்களை அன்ஸாரீ, என்று கூறுகிறது.
அப்படிப்பட்ட உயர்ந்த வார்த்தையைக் கூவி அழைத்ததற்குத்
தான் நபி (ஸல்) அவர்கள் துர்நாற்றம் எடுக்கும் வார்த்தை, என்றும் மௌட்டீக காலத்து வாதம் என்றும்
கடிந்து கொண்டார்கள். ஏன்? என்று சிந்தியுங்கள். நல்ல பெயராக இருந்தாலும் அங்கே நோக்கம்
ஒன்றுபட்ட ஒரு சமூகத்தை கூறு போடுவதற்கு பயன்படுத்தப் பட்டிருக்கிறது. எனவே,
தான், நபி (ஸல்) அவர்கள் இவ்வளவு
கடுமையாக கடிந்து கொண்டார்கள்.
இப்பொழுது நம்முடைய காலத்தின் நிலைகளையும் சிறிது சிந்தித்துப்
பாருங்கள். முஸ்லிம்களுக்கிடையே ஏகப்பட்ட இயக்கங்கள். ஒவ்வொரு இயக்கத்தின் பெயரும்
ஆக உயர்ந்தவை. அவர்களாக அந்தப் பெயரை தங்களுக்கு தேர்ந்தெடுத்துக் கொண்டார்கள். நல்ல
நல்ல பெயர்களை இயக்கத்திற்கு அடையாளமாக வைத்துக்கொண்டு அதே பெயரை வைத்தே முஸ்லிம்களுக்குள்
பல பிரிவினைகளை ஏற்படுத்துவது தான் வேதனையிலும் வேதனை.
பிரச்சினைகளுக்கான வேர்களை விட்டுவிட்டு கிளைகளை வெட்டிக்
கொண்டிருந்தால் எந்தப் பலனும் ஏற்படப் போவதில்லை. நமக்கிடையே கருத்து வேறுபாடுகள் இருந்தாலும்
ஒன்றுபட்ட கருத்துக்களின் அடிப்டையில் கை கோர்த்து நின்றால் நாம் தான் பலமிக்க சமுதாயமாக
மட்டுமல்ல, சாதனை படைக்கும் சமுதாயமாகவும் மாறுவோம். எதிர் வரும் தேர்தலை ஒன்றுபட்டு நின்று
எதிர் கொண்டால் நாட்டு மக்களுக்கு நன்மைகள் பல செய்ய முடியும், என்பதை மறந்து விடக்கூடாது.
மறுத்தும் விட முடியாது. சொந்த நாட்டின் முன்னேற்றத்திற்காக பாடுபடவேண்டும்,
என்பது மார்க்கம் சொல்லித்
தந்த அறிவுரை.
மற்றவர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தாத விதத்தில் நாம் வாழும்
நாட்டின் அமைதிக்காகவும் வளர்ச்சிக்காகவும் தங்களால் இயன்ற வரை பாடுபடுவதில் இந்நாட்டு
முஸ்லிம்களுக்கும் சமபங்கு உண்டு. மக்கா காஃபிர்களின் தாங்க முடியாத தொல்லைகளால் நபி
(ஸல்) அவர்கள் தோழர்களை அபீஸீனியாவுக்கு ஹிஜ்ரத் செல்வதற்கு அனுமதி வழங்கினார்கள்.
முஸ்லிம்கள் அங்கிருக்கும் சமயம் அந்நாட்டை எதிர்த்து எதிரியொருவன் தாக்குதல் தொடுத்தான்.
அபிஸீனியப் படை அதை எதிர்கொள்ளத் தயாராகிறது. இந்நிலையில் நாமும் இந்நாட்டுப் படைகளுடன்
இணைந்து போரிடுவதா இல்லையா? என்பது குறித்து அங்கிருந்த நபித்தோழர்கள் கூடி ஆலோசனை செய்தனர்.
இறுதியில் சுபைர் (ரலி) அவர்களைப் போர்க்களத்திற்கு அனுப்பி வைப்பதென்றும் எதிரிகளை
தோற்கடிக்க மேலும் படை தேவைப்பட்டால் முஸ்லிம்களை அனுப்பி வைப்பதென்றும் முடிவு செய்யப்பட்டது.
அபிஸீனியப்படை வெற்றி பெறுவதற்காக முஸ்லிம்கள் துஆ செய்து
கொண்டிருந்தனர். இறுதியாக அபிசீனிய மன்னர் நஜ்ஜாஷீ வெற்றி பெற்ற செய்தியை சுபைர் (ரலி)
அவர்கள் முஸ்லிம்களுக்கு கொண்டுவந்தார்கள்.
(ஸீரத்துந்நபீ) தஞ்சம் புகுந்த நாட்டிற்காகக் கூட முஸ்லிம்கள் இப்படி உதவி செய்திருக்கிறார்களென்றால்
சொந்த நாட்டிற்காக, நாட்டு நலனுக்காக தங்களையே அர்ப்பணித்து செயல்பட மாட்டார்களா என்ன?! இன்று வரை அப்படி செயல்பட்டது
தான் உண்மை வரலாறு.
ஒற்றுமை பற்றி குர்ஆன்:
மேலும் நீங்கள் யாவரும் (ஒன்று சேர்ந்து) அல்லாஹ்வுடைய
(வேதமாகிய) கயிற்றைப் பலமாக பற்றிப்பிடித்துக் கொள்ளுங்கள். (உங்களுக்குள் கருத்து
வேறுபட்டு) நீங்கள் பிரிந்து விடவேண்டாம்...... (அல்குர்ஆன் - 3:103)
குர்ஆனுடைய தலைமையில் ஒன்று படவேண்டும். குர்ஆனை விட்டுவிட்டால்
பிளவு தான் ஏற்படும். நீங்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படிந்து நடங்கள்.
மேலும் உங்களுக்குள் பிணங்கிக் கொள்ளாதீர்கள். அவ்வாறாயின் நீங்கள் தைரியத்தை இழந்து
வடுவீர்கள். மேலும் உங்கள் வலிமை குன்றிவிடும். ஆகவே, நீங்கள் (துன்பங்களை சகித்துக் கொண்டு)
பொறுமையாக இருங்கள். நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையோர்களுடன் இருக்கிறான். (அல்குர்ஆன்
- 8:46)
தோல்வியின் காரணம்:
ஷெய்குல் ஹிந்த் மௌலானா மஹ்மூதுல் ஹஸன் (ரஹ்) அவர்கள்
சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு நான்கு ஆண்டுகள் மால்டா சிறையில் அடைக்கப்பட்டார்கள். பிறகு விடுதலை பெற்று வந்தபின் ஒரு நாள் இஷா தொழுகைக்குப்
பிறகு தாருல் உலூம் தேவ்பந்த வந்தார்கள். அச்சமயம் ஏராளமான உலமாக்கள் கூடினார்கள்.
ஷைகுல் ஹிந்த் (ரஹ்) அவர்கள் கூடியிருந்த உலமாக்களிடம் உரையாற்றினார்கள். அப்பொழுது
நான் மால்டா சிறையில் இரண்டு படிப்பினைகளைப் பெற்றேன், என்று கூறிவிட்டு சொன்னார்கள். முஸ்லிம்கள்
எல்லாத் துறைகளிலும் அழிவைச் சந்திக்க இரு காரணங்கள் என் சிந்தனையில் பட்டது. ஒன்று:
குர்ஆன் படி செயல்படாமல் இருப்பது. இரண்டாவது: முஸ்லிம்கள் தங்களுககு மத்தியில் பிளவுபட்டுக்
கிடப்பது. குர்ஆன் படி செயல்படுவதை விட்டுவிட்டதால் தான் இச்சமுதாயம் வேறுபட்டுக் கிடக்கிறது,
என்பது முற்றிலும் உண்மை. (மார்ச் - 2016)