கடந்த மாதம் சென்னை மற்றும் கடலூரின் பேரிடர் நிகழ்வுகளை
சரித்திரம் என்றும் மறக்க முடியாது. இரு நகரை மட்டுமல்ல, முழு தமிழகத்தையும் ஒரு உலுக்கு உலுக்கிவிட்டது.
இந்த வெள்ளத்தால் வசதி படைத்தவர்கள் ஓரிரு நாளில் வீதிக்கு வந்து விட்டார்கள். ஆயிரம்
பேருக்கு வயிறு நிறைய உணவளிப்பதற்கு சக்தியிருந்தும் தம்முடைய பிள்ளைகளுக்குக் கூட
உணவளிக்க முடியாத துயர நிலைக்கு ஆளாயினர். ஆன்மீக ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும்
இந்த பேரழிவுக்கான காரணங்கள் கண்டறியப்பட்டு அவை களையப் படவேண்டுமென்பதில் யாருக்கும்
மாற்றுக் கருத்து இருக்க முடியாது. இங்கே ஒரு விஷயத்தை நினைவு கூர்ந்தாக வேண்டும்.
வெள்ள நிவாரணப்பணியில் மதங்களுக்கு அப்பாற்பட்டு ஒட்டுமொத்த
சமூகமும் களமிறங்கினாலும் முஸ்லிம்களின் பொருளுதவியும உடலுழைப்பும் உலக மீடியாக்களால்
மெச்சத்தக்க வகையில் இருந்தது, என்பது யாவரும்அறிந்த!. சில இஸ்லாமிய இயக்கத்தினர் தங்களுடைய
அடையாளப் பனியனுடனும் சீருடையுடனும் களமிறங்கினாலும் அமைப்பு சாராத ஏராளமான முஸ்லிம்கள்
எந்த அடையாளமுமின்றி விளம்பரமுமின்றி வாரி வழங்கினார்கள்; வெள்ளத்தை வடித்தெடுத்தார்கள்,
என்பதை யாரும் மறுக்க
முடியாது.
முன்னரே அறிவித்து விட்டு செய்யப்படும் உதவிகளுக்கும்
எதிர்பாராமல் ஏற்படும் பேரவுகளின் போது உதவி செய்வதற்கும் பெரிய வித்தியாசம் உண்டு.
முன்பே திட்டமிட்டு வசூல் செய்து நிதி திரட்டி உதவி செய்வதற்கும் போர்க்கால நடவடிக்கையின்போது
பிரதிபலன் நாடாமல் இறைப்பொருத்தத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு உடனடியாக கையிலிருக்கும்
பணத்தை களத்திற்கு கொண்டுவருவதற்கும் களமிறங்கி மீட்புப் பணியில் ஈடுபடுவதற்கும் மத்தியில்
பெரிய வித்தியாசம் உண்டு. இந்தப் பணிகளில் முஸ்லிம்கள் முன்னனியில் இருந்தார்கள். சுனாமியின் போதும்,
தானே புயலின் போதும்
இப்போதைய பேரழிவின் போதும் முஸ்லிம்கள் தான் உடனடியாக களத்தில் குதித்தனர். அதுவும்
சாதி, மதம் கடந்து
அனைத்துத் தரப்பினருக்கும் உதவுபவர்களாக இருந்தார்கள், என்பதை மாற்றார்களே ஏற்றுக்கொள்கிறார்கள்.
இதற்குக் காரணம் அவர்களுடைய இறைநம்பிக்கையைத் தவிர வேறெதையும்
சொல்ல முடியாது. எந்த உலகியல் லாபத்திற்காகவும் அரசியல் லாபத்திற்காகவும் இந்த உதவிகளை
உண்மையான முஸ்லிம் செய்ய மாட்டான். சர்வதேச அளவில் முஸ்லிம்கள் தீவிரவாதிகள் போல் சித்தரிக்கப்படுகிறார்கள்.
உண்மை அதுவல்ல, என்பதை இது போன்ற இயற்கைப் பேரிடர்கள் உணர்த்துகின்றன. ஆனாலும் காலம் கடந்தபின்
இதையெல்லாம் மறந்து விட்டு சர்வதேச மீடியாக்கள் முஸ்லிம்களின் மீது அதே குற்றச்சாட்டை
சுமத்தத்தான் போகிறது. எனினும் முஸ்லிம்கள் இதுபோன்ற மலிவான அரசியலுக்காகவெல்லாம் நிவாரணப்
பணியில் ஈடுபடுவதில்லை. எது எப்படியிருந்தாலும் நடுநிலையாளர்கள் இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள்
பற்றி நல்ல சிந்தனை தான் என்றும் கொண்டிருப்பார்கள்.
முஸ்லிம்கள் இதுபோன்ற நிவாரணப் பணிகளிலும் மீட்புப்பணியிலும்
ஆர்வமாக பங்கெடுப்பதற்குக் காரணம் அவர்களுடைய இறைத்தூதர் நபி (ஸல்) அவர்களின் அழகிய
முன்மாதிரியும் அருமையான போதனைகளும் தான் காரணம், என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
இதற்கு சரித்திரமே சான்று.
நிவாரணத் தொகை வழங்கிய வள்ளல் நபி:
நபி (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து மதீனாவுக்கு ஹிஜ்ரத்
செய்து சென்ற பிறகு மக்காவில் ஒரு நேரம் பஞ்சம் ஏற்பட்டது. அப்பொழுது நபி (ஸல்) அவர்களுக்கு
அம்மக்களின் மீது இரக்கம் ஏற்பட்டது. அவர்களின் துயர் துடைப்பதற்காக 500 தங்கக் காசுகளை மக்காவுக்கு
நிவாரணத் தொகையாக அனுப்பி வைத்தார்கள். மக்கா காஃபிர்கள் முஸ்லிம்களுக்கு எவ்வளவு கடுந்துயரத்தைக்
கொடுத்தார்கள்? என்பது பற்றி சரித்திரம் படித்தவர்கள் அறியாமல் இருக்க முடியாது.
தொழும்போது ஒட்டகக் குடல்களை தூக்கி போட்டார்கள். கல்லாலும்
சொல்லாலும் அடித்தார்கள். மூன்று வருட காலமாக சாப்பாடு, தண்ணீர் கொடுக்காமல் ஊர்விலக்கம் செய்து
வைத்தார்கள். குழந்தைகளின் கதறலில் கூட இரக்கமில்லாமல் நடந்து கொண்டார்கள். கடைசியாக
ஊரை விட்டும் வெளியேற வேண்டிய நிர்பந்தத்தையும் ஏற்படுத்தி விட்டார்கள். எனினும்,
இப்பொழுது அந்த மக்களுக்குத்
தான் பஞச்மும் வறுமையும் ஏற்பட்டிருக்கிறது. நபி (ஸல்) அவர்கஅந்த பஞ்சம் பீடித்த மக்களைப்
பார்த்து இவர்களுக்கு இதுவும் வேணும். இனியும் வேணும், என்று சொல்லவில்லை.
அந்த மக்களின் மீது இரக்கம் வந்தது. ஐநூறு தங்கக் காசுகளை
அனுப்பி வைத்தார்கள். (கரீபோங்கா வாலீ) இதேபோன்று இன்று இந்த வெள்ளத்தில் மாற்றுமதத்தவர்கள்
பாதிக்கப் பட்டிருந்தாலும் அவர்களுக்கும் முஸ்லிம்கள் உதவி செய்தார்கள். முஸ்லிம்களுக்கு
எதிராக செயல்படக் கூடிய ஒரு கூட்டம் அவர்களை தீவிரவாதியாக சித்தரிக்கும் ஒரு கூட்டம்
நாட்டில் இருந்தாலும் நாட்டு மக்கள் அனைவரையும குறை கூறிவிட முடியாது.
முஸ்லிம்களின் உதவிகளை பெற்றுக் கொண்ட மாற்று மதத்தவர்களும்
மனதார வாழ்த்தினார்கள். இக்கட்டான பிரசவ சமயத்திலும் முஸ்லிம்களின் உதவியினால் குழந்தைக்கு
சேதாரமின்றி அழகான பெண்குழந்தை பெற்றெடுத்ததும் தங்களுக்கு உதவிய ஒரு முஸ்லிமான ஆணுடைய
பெயரை வைப்பதற்கு ஒரு தம்பதியினர் முன்வந்திருக்கிறார்கள், என்றால் அவர்கள் எப்படிப்பட்ட ஆபத்தில்
சிக்கியிருந்திருப்பார்கள்? என்பதை உணர முடிகிறது. முஸ்லிம்கள் இவ்வாறு தங்களின் பக்கம்
ஈர்ப்பதற்காக அரசியல் நோக்கத்தில் தான் இவ்வாறு செய்கிறார்கள், என்று சிலர் கூறுகின்றனர்.
எனினும், இது
போன்ற விமர்சனம் எல்லா காலத்திலும் ஏற்பட்டிருக்கிறது. அதை கண்டுகொள்ளத் தேவையில்லை.
நபி (ஸல்) அவர்கள் மக்காவுக்கு நிவாரணத் தொகையை அனுப்பி வைத்த சமயத்திலும் கூட அதுவரை
இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளாத அபூஸுஃப்யான் முஹம்மத்
(ஸல்) மக்காவுடைய ஏழைகளையும் வாலிபர்களையும் ஏமாற்றி நமக்கு எதிராக நிறுத்த நினைக்கிறார்,
என்று கூறினார்.
பாவிகளாயினும் கருணை கொண்ட காருண்ய
நபி
மாற்று மதத்ததைச் சார்ந்தவர்கள் பாவமான காரியத்தைச் செய்தால்
கூட அவர்கள், வாழ்வாதாரத்திற்காக சிரமப்படும் போது அதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுப்பதையே மார்க்கம்
விரும்புகிறது. ஒருதடவை, ஸாரா என்ற பெண்மணி மக்காவிலிருந்து மதீனாவுக்கு வந்தார். அவரிடம்
நபியவர்கள் நீ ஹ்ஜ்ரத் செய்து வந்திருக்கிறாயா? என்று கேட்டார்கள்.
அதற்கு அந்தப் பெண்மணி, இல்லை என்று பதிலளித்தார். அப்படியானால்
நீ முஸ்லிமாகி - இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு வந்திருக்கிறாயா? என்று கேட்டார்கள். அதற்கும் அப்பெண்மண
இல்லையென்றே பதிலளித்தார். பிறகெதற்கு இங்கு வந்தாய்? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்க,
நீங்கள் தான் மக்காவின்
உயர்குலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தீர்கள். இப்பொழுது மதீனாவுக்கு வந்து விட்டீர்கள்.
என்னுடைய வாழ்வாதாரம் உங்களின் மூலம் கிடைத்தது. மக்காவுடைய பெரும்பெரும் தலைவர்கள்
பத்ரு யுத்தத்தில் கொல்லப்பட்டு விட்டனர். இப்பொழுது என்னுடைய வாழ்க்கை கேள்விக்குறியாவி
விட்டது. எனவே, என்னுடைய கடுமையான வறுமையின் காரணமாக உங்களிடம் உதவி தேடி இங்கு வந்திருக்கிறேன்,
என்று கூறினார்.
உடனே நபி (ஸல்) அவர்கள் நீ தான் மக்காவில் சிறந்த பாடகியாச்சே!
(உனக்காக செலவு செய்யும்) வாலிபர்கள், எங்கு சென்றார்கள்? என்று கேட்டதற்கு பத்ரு யுத்தத்திற்குப்
பிறகு (மகிழ்சிகரமான விழாக்கள் ஏதும் நடப்பதில்லை. எனவே) என்னை யாரும் அழைப்பதில்லை,
என்று கூறினார். இப்படி
வறிய நிலையில் வந்த அந்த பெண்மணிக்கு தம்மால் இயன்ற உதவியைச் செய்தார்கள், என்பது மட்டுமல்ல. மக்காவிலுள்ள
அப்துல் முத்தலிபுடைய குடும்பத்தினருக்கு இந்த பெண்மணிக்கு உதவுமாறு ஆர்வமூட்டினார்கள்.
(தஃப்ஸீரு குர்துபீ, மஆரிஃபுல் குர்ஆன் - 8/399)
எதிரிகளாயினும் உதவிய ஏந்தல் நபி
(ஸல்):
து(சு)மாமா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் நற்குணத்தைப்
பார்த்து விரும்பியே இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்கள். அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட
பின் உம்ரா செய்வதற்காக அனுமதி கேட்டார்கள. நபியவர்கள் அனுமதி வழங்கினார்கள். சுமாமா
(ரலி) அவர்களும் மக்காவுக்கு சென்றார்கள். மக்கா குரைஷிகள் இவரைப் பார்த்ததும் சுமாமாவே
நீங்கள் மதம் மாறிவிட்டீரா? என்று கேட்டனர். அதற்கு அவர்கள், இல்லை. நான் முஹம்மது (ஸல்) அவர்களுடன்
இணைந்து முஸ்லிமாகி விட்டேன், என்று கூறினார். அத்துடன் இனி வரும் காலத்தில் யாமாமாவிலிருந்து
ஒரு தானியம் கூட மக்காவுக்கு வராது. நபி (ஸல்) அவர்கள் அனுமதி வழங்கினாலே தவிர உங்களுக்கு
தானியம் ஏற்றுமதி செய்யப்பட மாட்டாது, என்றும் கூறிவிட்டார்கள்.
யமாமாவுக்கு சென்று தானிய ஏற்றுமதியை நிறுத்தி விட்டார்கள்.
இதனால் மக்காவாசிகள் கடும் சிரமத்திற்கு ஆளானார்கள். யமாமாவிலிருந்து தானியத்தை அனுப்பிவைக்கும்படி
கடிதம் எழுதுமாறு தங்களுடைய குடும்ப உறவை முன்வைத்து நபி (ஸல்) அவர்களுக்கு மக்காவாசிகள்
கடிதம் எழுதினார்கள் நபி (ஸல்) அவர்களும் அவ்வாறே செய்தார்கள். (அர்ரஹிகுல் மக்தூம்)
முஸ்லிம்களாக இல்லாவிட்டாலும் அவர்களுடைய வாழ்வாதாரம் நசுங்கி வேதனைப் படும் சமுதாயத்திற்கு உதவிக்கரம்
நீட்டுவதென்பது உயர்ந்த மனிதாபிமானத்தின் எடுத்துக்காட்டு. அதை இஸ்லாம் ஏற்றுக்கொள்ளாமல்
இருக்க முடியாது. நபி (ஸல்) அவர்களும் நபித்தோழர்களும் அவ்வாறு நடந்து காட்டியிருக்கிறார்கள்.
அதே வழியில் தான் இன்றைய முஸ்லிம்களும் பொதுப்பணித்துறையில் தங்களால் இயன்ற உதவிகளைச்
செய்கிறார்கள்.
பொருளாதார உதவிகளைச் செய்வது மட்டும் நல்ல காரியமல்ல.
அதற்காக ஓடியாடி உழைப்பதும் நிதி திரட்டுவதும் மற்றவர்களை உதவுமாறு தூண்டுவதும் நல்ல
காரியம் தான். எனவே தான், குர்ஆனில் பல இடங்களில் ஏழைகளுக்கு உணவளிப்பதற்காக யாரையும்
ஆர்வமூட்டாமல் இருந்தவர்கள் கண்டிக்கப் பட்டிருக்கிறார்கள். நரகவாசிகளிடம் உங்களை நரகில்
தள்ளியது எது? என்று கேட்கப்படும் போது நாங்கள் தொழக்கூடியவர்களாகவோ ஏழைகளுக்கு உணவளிப்பவர்களாவோ
இருக்கவில்லை, என்று பதில் கூறுவார்கள். (அல்குர்ஆன்-74; 42-44)
விதவைகளுக்காகவும் ஏழைகளுக்காகவும் ஓடியாடி உழைத்து முயற்சிப்பவர்
அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்தவரைப் போல என்றும இரவில் நின்று வணங்கி பகலில் நோன்பு
நோற்பவர் போல என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி) பஞ்ச காலத்தில் உணவுப்பொருட்களை பகிர்ந்து சாப்பிடுவது
தான் மார்க்கம் சொல்லித் தரும் அழகிய பண்பாடு.
ஒரு தடவை நபி (ஸல்) இரண்டு நபருக்கான உணவு மூன்று நபர்களுக்குப்
போதுமாகிவிடும். மூன்று நபர்களுககான உணவு நான்கு நபர்களுக்கு போதுமாகி விடும்,
என்றும் கூறினார்கள்.
(புகாரி) ஆரம்ப காலத்தில் குர்பானி இறைச்சியை மூன்று நாட்களுக்கு மேல் சேமித்து வைக்கக்கூடாது,
என்று நபி (ஸல்) அவர்கள்
தடை விதித்திருந்தார்கள். அதற்கான காரணத்தை அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறும் போது
மக்களுக்கு பஞ்சம் ஏற்பட்டு பசித்திருந்த காலத்தில் வசதியுள்ளவர்கள் வறியவர்களுக்கு
உணவளிக்க வேண்டுமென்பதற்காகத் தான் நபி (ஸல்) அவர்கள் அவ்வாறு தடை விதித்திருந்தார்கள்,
என்று கூறினார்கள்.
(புகாரி)
சமுதாயத்திலுள்ள ஏழைகளுக்கு போதுமான அளவுக்கு தனவந்தர்களின்
செல்வத்திலிருந்து வழங்க வேண்டுமென்பதை அல்லாஹ் கடமையாக்கியுள்ளான். செல்வந்தர்கள்
கொடுக்காமல் தடுத்து வைத்திருப்பதாலேயே ஏழைகள் பட்டினியாகக் கிடக்கிறார்கள். ஆடையின்றி
சிரமத்திற்குள்ளாகிறார்கள். எனவே, கியாமத் நாளில் அல்லாஹ் அவர்களிடம் விசாரித்து தண்டனை வழங்க
முடியும், என்று
அலி (ரலி) அவர்கள் கூறினார்கள். (பைஹகீ)
எனவே, ஒரு ஊரில் வசதியானவர்கள் இருக்க வறுமையின் காரணமாக யாராவது பட்டினியால்
இறந்து விட்டால் அந்த ஊருடைய வசதியானவர்கள் அனைவரும் அல்லாஹ்விடம் பதில் சொல்லியாக
வேண்டும். இது போன்ற நல்ல நல்ல போதனைகள் தான்,
முஸ்லிம்களை பேரிடர்
சமயத்தில் வாழ்வாதாரத்தை வாரி வழங்குவதற்கும் களப்பணி ஆற்றுவதற்கும் காரணமாக அமைந்திருக்கிறது.
இஸ்லாத்தின் உண்மையான நேர்மையான போதனைகளை விளங்கி இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள முன்வந்தால்
அது போன்ற லாபம் வேறெதுவும் இருக்க முடியாது.
ஜனவரி - 2016
MashaAllah. Jazakallah hazrath. Very usefull to me
ReplyDelete