Monday, 21 March 2016

தேர்தல் வருது




சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் இச்சூழலில் அரசியல்வாதிகளும் மக்களும் தேர்தலுக்கான முன் தயாரிப்பில் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், தேர்தல் வரலாற்றைப் புரட்டிப் பார்க்கும் போது அது, ஐந்தாண்டுக்கு ஒருமுறை வரும் திருவிழா போன்று தான் பார்க்கப்படுகிறது.

யார் ஆட்சிக்கு வந்தாலும் ஒரு மனநிறைவு ஏற்படும்படியான ஓர் ஆட்சி நடந்ததாக அனைத்துத் தரப்பு மக்களிடமும் ஒப்புதல் பெறமுடியவில்லை. வழமை போல் இப்பொழுதும் தேர்தல் ஜுரம் ஆரம்பித்து விட்டது. அரசியல் கட்சிகள், கூட்டணி குறித்து கூடிப் பேசி வருகின்றன. நேற்று முளைத்த கட்சியாக இருந்தாலும் நாங்கள் தான் ஆட்சிக்கு வருவோம், என்ற கோஷம். எல். கே. ஜி வகுப்பில் சீட் கிடைப்பது முதல் சட்டமன்றத்தில் சீட் கிடைக்கும் வரை எல்லாவற்றுக்கும் பணமூட்டை அத்தியாவசியமாகி விடுகிறது.

மக்களும் அரசியல்வாதியின் மனோநிலையைப் புரிந்து கொண்டு விட்டனர். தேர்தல் நெருங்கும் போது தான் போராட்ட அறிவிப்புகள் பத்திரிக்கைகளில் பக்கம் பக்கமாக வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ஏனெனில், இப்பொழுது கேட்டால் தான் வாக்குவங்கியின் ஆயுதத்தை வைத்துக் கொண்டு கோரிக்கைகளை பெற்றுக் கொள்ள முடியும். மற்றபடி எஸ்மா, டெஸ்மா பற்றிய பயத்திலிருந்தும் முழு நிம்மதி கிடைக்கும்.

அரசு ஊழியர்கள் போராட்டம், ஆசிரியர்கள் போராட்டம், மீனவர்கள் போராட்டம், அவினாசி- அத்திக்கடவு திட்டத்தை நிறைவேற்றக் கோரி உண்ணாவிரதப் போராட்டம் என்று போராட்டத்தின் பட்டியல் நீண்டு கொண்டிருக்கிறது. மதுவிலக்கு முழுமையாக உறுதியாக அமுல்படுத்தப்பட வேண்டுமென்ற கோரிக்கை பலமாக வந்து கொண்டிருக்கும்போது டாஸ்மாக் ஊழியர்களும் போராட்டத்தில் குதிக்கின்றனர். தேர்தல் நெருங்கும் போது தான், நம்முடைய கோரிக்கைகளை தைரியமாக கேட்டுப் பெற்றுக் கொள்ள வேண்டிய நிர்பந்தநிலை இருப்பது வேதனைக்குரியது தான். அதே சமயம், எந்த சங்கமும் இல்லாமல் தங்களுடைய கோரிக்கைகளை வைப்பதற்குக் கூட ஓர் இடம் கிடைக்காமல் தவித்துக் கொண்டிருக்கும் ஒரு பிரிவினரும் நாட்டில் இல்லாமல் இல்லை.

அரசு ஐந்து வருடமாக என்ன செய்தது? என்பது பற்றி ஆழமாக யோசிப்பதற்கு மக்களுக்கு அவகாசம் கிடைப்பதில்லை. கடந்த காலத்தில் நடந்தவை என்னவென்பதை மக்கள் ஞாபகத்திலும் வைப்பதில்லை. நம்முடைய ஊடகங்கள் எதையாவது ஊதிப் பெரிதாக்கினால் அது மட்டும் அப்போதைக்கு சில நாட்களுக்கு மட்டும் பரவலாக பேசப்படும். பிறகு அதுவும் மறந்து போகும். சுனாமியும் பூகம்பமும் மழை வெள்ளமும் பாதிக்கப் பட்டவர்கள் தாமதமாகவும் மற்றவர்கள் மிக சீக்கிரமாகவும் மறந்து விடும்போது மற்ற பிரச்சினைகளைப் பற்றி என்ன சொல்ல வேண்டியிருக்கிறது?

கடைசியாக, தேர்தல் தேதி அறிவித்த பின் அரசியல் கட்சிகளின் அனல் பறக்கும் பிரச்சார மேடையாக தமிழகம் மாறிவிடும். ஆளும் கட்சியினர் ஏற்கனவே தயாரித்து வைக்கப்பட்டிருக்கும் தங்களுடைய சாதனைப் பட்டியலை வெளியிடுவார்கள். எதிர்கட்சியினர் அதற்கு மேடைதோறும் பதில் கொடுப்பார்கள். நடுவில் மக்கள் சிக்கிக் கொள்வார்கள். ஒவ்வொரு அரசியல் கட்சியும் நாங்கள் ஆட்சிக்கு வந்தால்... என்று நிபந்தைனையிட்டு வாக்குறுதிகளை அள்ளி வீசுவார்கள். இலவச அறிவிப்புகளுக்கு பஞ்சமிருக்காது.

அவற்றை நாம் நேரடியாகவோ ஊடகங்களின் மூலமோ அறிந்து கொள்கிறோம். ஊடகங்கள் அவற்றை மிகைப்படுத்தியும் கூட மக்களுக்கு காட்டலாம். இவற்றையெல்லாம் பார்த்து விட்டு மக்கள் வாக்குச் சாவடிக்கு சென்று மனதில் பட்ட முடிவை பதிவு செய்கிறார்கள். எனினும் வாக்குப்பதிவு இவ்வளவு அவசரகதியில் முடிந்துவிடக் கூடாது.

ஒவ்வொரு தனிநபரும் ஒரு அரசியல்வாதியாக செயல்பட வேண்டும். ஐந்து வருடத்தின் நிலைகளை உன்னிப்பாக கவனித்து அவ்வப்போது அவற்றை பதிவு செய்து வைக்க வேண்டும். நம் வீட்டு திருமணத்திற்காக நாம் தனியாக யோசிப்தில்லையா? ஏன்? காலையில் என்ன நாஷ்டா என்பதை முடிவு செய்வதற்குக் கூட எவ்வளவோ யோசிக்கிறோம். நாம் குடிக்கும் தேனீருக்காக டீக்கடையை தேர்ந்தெடுப்பதற்கு யோசிக்கும் அளவுக்காவது அரசைத் தேர்ந்தெடுப்பதற்காக நாம் சுயமாக யோசிக்கிறோமா? இருக்கும் அரசியல்வாதிகளில் நல்ல முறையில் அரசை முன்னெடுத்துச் செல்வதற்கான தகுதிகளை ஆராய்ந்து முடிவெடுப்பது அவசியமில்லையா? இப்பவும் தேர்தல் வருது. நன்கு யோசித்து மக்கள் ஒன்றுபட்டு எல்லா தரப்பு மக்களும் மனநிறைவு பெறும்படியான ஒரு அரசைத் தேர்ந்தெடுப்பதற்கு காலஅவகாசம் இருக்கிறது. திட்டமிடுவார்களா?

இஸ்லாமிய அரசு, முறைப்படி தேர்ந்தெடுக்கப் பட்டுவிட்டால் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்பதற்கு நிறைய வழிகாட்டல்களை மார்க்கம் சொல்லித் தருகிறது. அவற்றில், ஒரு நபிமொழியை மட்டும் இங்கு தருகிறேன். ஒரு மனிதர் வெறும் உலக நோக்கத்திற்காக மட்டும் ஆட்சியாளரிடம் உடன்படிக்கை செய்கிறார். தான் நினைப்பதை அந்த இமாம் (ஆட்சியாளர்) நிறைவேற்றிவிட்டால் அவருக்கு முழுமையாக கட்டுப்படுகிறார். அப்படி தன்னுடைய தேவைகளை நிறைவேற்றவில்லையானால் அந்த அரசுக்கு கட்டுப்பட  மாட்டார். இப்படிப்பட்ட நபரை மறுமை நாளில் அல்லாஹ் பார்க்கவும் மாட்டான்; பரிசுத்தப் படுத்தவும் மாட்டான்; அவரிடம் பேசவும் மாட்டான், என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: நஸயீ)

அதவாது அவன் மீது படைத்தவனுடைய கோபம் முழுமையாக வெளிப்படும், என்று பொருள். ஆட்சியாளருக்கு கட்டுப்படுவதை இஸ்லாம் கட்டாயமாக்குகிறது. தன்னுடைய நோக்கத்தில் மட்டும் கவனமாக இருந்து விடக்கூடாது. ஆட்சியாளர் அனைத்துத் தரப்பு மக்களைப் பற்றியும் யோசிக்க வேண்டும். மற்றவர்கள் என்ன ஆனாலும் பரவாயில்லை. என்னுடைய நோக்கம் நிறைவேண்டுமென்பதில் மட்டும் குறியாக இருக்கக் கூடாது. அதே சமயம், ஆட்சியாளரும் நல்லாட்சி தருவதில் முழுக்கவனம் செலுத்த வேண்டும். மக்களுடைய பணியாளாக தன்னை நாவால் மட்டும் அல்ல. மனதாலும் உறுதி கொள் வேண்டும். அதன் பிறகு தான் மக்களுடைய முழுமையான ஒத்துழைப்பை எதிர்பார்க்க வேண்டும்.
மார்ச் 2016

No comments:

Post a Comment