கடந்த வருடம் மதுவிலக்கை வலியுறுத்தி பலமுனைப் போரட்டம்
நடந்ததை யாரும் மறந்திருக்க முடியாது. அப்பொழுதெல்லம் அரசியல் கட்சிகள் அதை வைத்தே
அரசியல் நடத்திக் கொண்டிருந்தன. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை அமல்படுத்த தீவிர
நடவடிக்கை எடுக்கப்படும், போன்ற வாக்குறுதிகளும்
மனதில் இருக்கின்றன.
அந்த வகையில் தமிழகத்தில் இந்தத் தேர்தலின் மிகப் பெரிய
அஸ்திரம் மதுவிலக்கு, என்று சொன்னால் மிகையாகாது. அவ்வாறே இந்தத் தேர்தலில் போட்டி போட்டுக்கொண்டு மதுவிலக்கு
திட்டத்தை தேர்தல் அறிக்கையில் அரசியல் கட்சிகள் அறிவித்துள்ளன.
தேர்தல் அறிக்கையில்
வெளியிடுவதோடு நிறுத்திக் கொள்ளாமல், இன்று வரை மதுவிலக்கை அமுல்படுத்த
முடியாமல் போனதற்கான தடைகற்கள் யாவை? அந்தத் தடைகளைத் தகர்த்தெறிந்து அரசின் வருமானத்திற்கான
மாற்று வழிமுறைகளையும் வரிசைப் படுத்தி மது விலக்கை நடைமுறைப் படுத்துவதற்கான தீட்டப்பட்ட
திட்டங்கள் என்னென்ன? என்பது பற்றியும் தெளிவாக வெளியிட வேண்டும்.
வெறும் வார்த்தை ஜாலங்கள் மட்டும் இல்லாமல் பரிபூரண மதுவிலக்கா?
படிப்படியான மதுவிலக்கா?
இரண்டில் எது என்றாலும்
ஆட்சிக்கு வந்தபின் எந்தத் தேதியிலிருந்து மதுவிலக்கு அமல்படுத்தப்படும்? இவற்றுக்கான மாற்று வருவாய்
திட்டங்கள் என்ன? டாஸ்மாக் பணியாளர்களுக்கு மாற்று வேலைவாய்ப்புத் திட்டங்கள் என்ன? குடிநோயாளிகளுக்கான மறு வாழ்வு
திட்டங்கள் என்ன? என்று விரிவான செயல் திட்டங்களை உறுதியுடன் அறிவிக்க வேண்டும்.
பிரச்சார மேடைகளில் அவற்றை மக்களுக்கு முன்பாக தெளிவு
படுத்த வேண்டும். ஒவ்வொரு கட்சிக்கும், யாரும் தன்னுடைய கூட்டணியை கூறுபோட்டு விடக்கூடாதே,
என்ற அச்சத்தில் வினாடியை
கழித்துக் கொண்டிருக்கும் நிலையில் இந்தத் திட்டங்களைப் பற்றி யோசிப்பதெற்கெல்லாம்
எங்கே நேரம் இருக்கப் போகிறது? என்று கேட்பது காதில் விழுகிறது.
ஒரு மாநிலத்தை ஐந்து வருடம் ஆள்வதற்கான தெளிவான திட்டங்களையும்
ஏற்படும் பிரச்சினைகளையும் அதற்கான தீர்வுகளையும் முறையாக பட்டியலிட்டு செயல்திட்டங்களை
மக்கள் முன் வைத்து வாக்கு சேகரிப்பதை விட எதிரிகளை தாக்குவது மட்டுமே தேர்தல் பிரச்சாரமாகிவிட்ட
காலம் இது.
மது விற்பனையும் தமிழகமும்:
நாடு சுதந்திரம் பெறும் முன், அரசின் வருவாயை அதிகப்படுத்த,
சாராயம் மற்றும் கள்ளுக்
கடைகளை ஆங்கிலேயர்கள் திறந்தனர். காந்தி தலைமையில் பெரும் எதிர்ப்பு கிளம்பியதால்,
40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு,
மது அருந்த அரசு,
அனுமதி கொடுத்தது;
அவர்கள் மட்டுமே குடிக்க
வேண்டும். குறிப்பிட்ட சில இடங்களில் மட்டுமே, மதுக் கடைகள் இருந்தன.
ராஜாஜி தலைமையில், 1937ல், சென்னை மாகாண அரசு அமைந்ததும்,
மதுவிலக்கை அமல்படுத்தினார்.
இது, 1939ல்,
அவரது அரசு கலைக்கப்பட்டதும்
முடிவுக்கு வந்தது.
தேர்தல் மூலம், ராஜாஜி முதல்வராக தேர்வு செய்யப்பட்ட
பின், 1952ல்,
மீண்டும் மதுவிலக்கை
அமல்படுத்தினார். வருவாய் இழப்பை ஈடுசெய்ய, 1 சதவீதம் கூடுதலாக விற்பனை வரி விதித்தார்.
1971ல் முதல்வராக இருந்த கருணாநிதி மதுக் கடைகளை திறந்தார். 1974ல் அவரே மதுவிலக்கை
அமல்படுத்தினார்.
1984ல், முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர்., கள்ளுக் கடை மற்றும் சாராயக் கடைகளை
திறந்தார். 1987 ஜனவரி, 1ம் தேதி முதல், இந்தியாவில் தயாரிக்கப்படும்,
அயல்நாட்டு மதுபான கடைகளை
எம்.ஜி.ஆர்., திறந்தார். இந்த கடைகளை தனியார் ஏலம் எடுத்து நடத்தினர்.1991ல், வந்த அரசு, மதுவிலக்கை அமல்படுத்தியது.
2001ல் அதே அரசு மதுவிலக்கை ரத்து செய்தது.
15 சதவீத வாக்குவங்கி
தமிழகத்தின் வாக்காளர்கள் எண்ணிக்கை 5.79 கோடி. பெண் வாக்காளர்கள்
எண்ணிக்கை 2.91 கோடி. தமிழகத்தில் ஏதோ ஓர் அளவில் மதுப்பழக்கத்திற்கு ஆளான குடிநோயாளிகளின்
எண்ணிக்கை சுமார் 2 கோடி. குடிநோயாளிகளில் கணிசமானோர் தாங்கள் முழுமையாக விரும்பி மது
அருந்துவதில்லை.
குடிநோயாளிகள் மது அருந்துவதை அவர்களின் குடும்பத்தினர்
அனைவருமே விரும்புவதில்லை. இவர்கள் அனைவரும் மதுவிலக்கு எப்போது வரும்? யார் கொண்டு வருவார்கள்?
என்று காத்திருக்கிறார்கள்.
இதன்படி பார்த்தால் மதுவிலக்கின் வாக்கு வங்கி மட்டும் சுமார் 15 சதவீதத்துக்கும் அதிகம்,
என்று கூறுகிறது,
ஒரு புள்ளிவிவரம்.
ஏன்? மது அருந்தாதவர்களும் மதுவிலக்கை ஆதரிக்கத் தானே செய்வார்கள்.
அப்படிப் பார்த்தால் மதுவிலக்கை எதிர்ப்பவர்கள், அதன்மூலம் வருமானம் தேடும் அரசியல்வாதிகளும்
தொழிலதிபர்களும் தவிர வேறு யாரும் இருக்க மாட்டார்கள்.
ஏன் தெரியுமா? மாநிலத்தின்
மது விற்பனையின் மூலம் வரும் லாபம் அசுர வளர்ச்சியைக் கண்டிருக்கிறது. தமிழக வருவாயில்
டாஸ்மாக் 2002-03 ஆம் ஆணடு 3,800 கோடியில் தொடங்கிய வருமானம் வருடத்திற்கு 2 சதவீத வளர்ச்சியில் பயணித்து 2012-13ஆமு ஆண்டு 21,000 கோடியாக வளர்ச்சி அடைந்து நின்றது.
தற்சமயம் அதைவிடவும் பல ஆயிரம் கோடி அதிகரித்துவிட்டது.
இப்படியெல்லாம் கணக்கிட்டுப் பார்த்தால் ஓர் அரசு, ஆளும் ஐந்து ஆண்டுகளில் ஒரு லட்சம்
கோடிக்கும அதிகமான வருமானத்தை ஈட்டிக் கொள்கிறது. இந்த லாபத்தை வைத்து இலவச தொலைகாட்சி
,மின்விசிறி,
மிக்ஸி, கிரைண்டர் போன்றவற்றை வழங்கி
வாக்காளர்களின் போதை தெளிய விடாமல் பார்த்துக் கொள்கிறார்கள், அரசியல் வாதிகள்.
தமிழகத்தின் மக்கள் தொகை 72,147,030. இவ்வளவு பெரிய மக்கள்
தொகையில் சொற்பமான சதவிகித மக்கள் மட்டுமே பயன்படுத்தும் மதுவினால் இவ்வளவு வருமானம்
எனில் 100 சதவிகித மக்களும் பயன்படுத்தும் பொருட்களைத் தேர்ந்துடுத்து தமிழக அரசு டாஸ்மாக்
போல் விற்பனை செய்யும் பட்சத்தில் மதுவினால் ஏற்படும் வருவாய் இழப்பினை ஈடுகட்ட முடியாதா
என்ன?
தற்போது, தென் மாநில முதல்வர்களுக்கு முன்னோடியாக, கேரள முதல்வர், மதுவிலக்கை அமல்படுத்த நடவடிக்கை
மேற்கொண்டுள்ளார். படிப்படியாக மதுக் கடைகளின் எண்ணிக்கை குறைக்கப்படுகிறது. இப்படிப்பட்ட
சூழலில் பதவியேற்கும அரசு மதுவிலக்கை படிப்படியாக அமுல்படுத்தி மது இல்லாத மாநிலமாக
தமிழ்நாடு உருவெடுத்தால் அது மாபெரும் சாதனையாகக் கருதப்படும், என்பதில் சந்தேகமில்லை.
மதுவும் இஸ்லாமும்:
இஸ்லாம் மதுவைச் சாதாரணமாகத் தடை செய்யவில்லை. மதுவின்
சிந்தனையே இல்லாமல் வாழும் விதத்தில் இஸ்லாத்தின் போதனைகள் அமைந்துள்ளன. இது தொடர்பாக
வரும் இறை வசனங்கள் மதுவின் விகாரத்தை மனதில் அழுத்தமாகப் பதிய வைக்கின்றன. ஈமான் கொண்ட
இறைவிசுவாசிகளே திட்டமாக மது, சூதாட்டம், பலிப்பீடங்கள், குறிபார்க்கும் அம்புகள் ஆகியவை அருவருக்கத்தக்க ஷைத்தானின்
செயல்களாகும். எனவே, அவற்றைத் தவிர்த்துக்கொள்ளுங்கள். இதன் மூலம் நீங்கள் வெற்றி பெறலாம். (அல்குர்ஆன்
5:90) அல்லாஹ் மதுவை இணைவைப்புடன் இணைத்து
கூறுகிறான், என்றால் அது எவ்வளவு பெரிய கொடிய குற்றமாக இருக்கும்?!
மது ஈமானின் எதிரி:
இறைவிசுவாசியாக இருக்கும் நிலையில் யாரும் மது அருந்த
மாட்டார், என்று
நபி (ஸல்) அவர்கள் கூறி (புகாரி, முஸ்லிம்) மதுவும் ஈமானும் - இறைநம்பிக்கையும் ஒன்று சேரமுடியாது,
என்று எச்சரித்திருப்பது
சாதாரணமானதல்ல. இன்று முஸ்லிம்களிடத்தில் எந்த அளவுக்கு மது பரவலாகிவிட்டது,
என்பது சொல்லித் தெரிய
வேண்டிய ஒன்றல்ல. தொடர்ந்து மது அருந்திய நிலையில் மரணிப்பவன் ஒரு சிலைவணங்கியைப் போல்
அல்லாஹ்வைச் சந்திப்பான், என்றும் (அஹ்மது)
அல்லாஹ்வையும் மறுமையையும் நம்பியவர் மது அருந்த வேண்டாம்.
அல்லாஹ்வையும் மறுமையையும் நம்பியவர் மது அருந்தும் சபையில் இருக்கவும் வேண்டாம் என்றும்
நபி (ஸல்) அவர்கள் எச்சரித்திருக்கிறார்கள். (தப்ரானீ)
போதையூட்டக்கூடிய ஒவ்வொரு பொருளும் விலக்கப்பட்டதே! (முஸ்லிம்,
அஹ்மது) எதை அதிகமாகக்
குடித்தால் போதை ஏற்படுமோ அதைக் குறைவாகக் குடிப்பதும் ஹராம் தான், (அஹ்மது, அபூதாவூத்) என்று நபி (ஸல்)
அவர்கள் கூறினார்கள்.
சாராயத்தின் சிந்தனையே ஏற்படக்கூடாது, என்பதற்காக ஆரம்பத்தில் சாராயத்திற்காக
பயன்படுத்தப்படும் பாத்திரங்களையும் உபயோகிக்கக் கூடாது, என்று நபியவர்கள் தடை செய்தார்கள். இஸ்லாம் சாரயம் குடிப்பதைத் தண்டனைக்குரிய குற்றமாகக் கருதுகிறது. சாரயம் குடிப்பது
மட்டுமல்ல. அதைத் தயாரிப்பவன் அதைக் குடிக்கக் கொடுப்பவன், அதை எடுத்துச்செல்பவன், அவனிடமிருந்து பெற்றுக்கொள்பவன்,
அதை விற்பவன்,
வாங்குபவன்,
என சாராயம் தொடர்பான
பலரையும் நபி (ஸல்) அவர்கள் சபித்திருக்கிறார்கள். (திர்மிதீ)
மனிதன் மதுவுடனான எல்லாத் தொடர்புகளையும் துண்டித்துக்
கொள்ள வேண்டும், என்றே மார்க்கம் விரும்புகிறது.
ஹலால் பீர்:
இன்று வாலிபர்களில் சிலர் பீர் சாப்பிடுவதில் என்ன தவறு
இருக்கிறது? அதில் போதை இல்லையே என்றெல்லாம் பேசி ஹலால் பீர் என்றும் கூட முத்திரை குத்தி விட்டனர்.
ஆனால், மதுவைப்
பெயர் மாற்றி அதை ஹலாலாக்கி குடிக்கும் காலமும் வரும், என்று நபி (ஸல்) அவர்களின் முன்னறிவிப்பு
முற்றிலும் பொருத்தமானது, என்ற நம்பிக்கைக்கு வலு சேர்க்கிறது, இந்த வாதம்.
எதை அதிகமாக சாப்பிட்டால் போதை வருமோ அதை குறைவாகச் சாப்பிடுவது
ஹராம் தான், என்பதை நபிமொழிகளின் மூலம் அறியமுடிகிறது. போதை குறைவாக இருக்கும் போது அடிக்கடி
மதுவருந்தி பழகியவர்களுக்கு அதன் மூலம் போதை ஏற்படவில்லை, என்பதற்காக அதில் போதைப் பொருளே இல்லை,
என்று முடிவு செய்துவிட
முடியுமா என்ன? கோதுமை, பார்லி போன்ற தானியங்களை லேசாக முளைவிட வைத்து அதில் இருக்கும் ஸ்டார்ச்சை எடுத்து
புளிக்கச் செய்து பீர் தயாரிப்பார்கள்.
நான்கு முதல் எட்டு சதவீதம் ஆல்கஹால் இதில் உள்ளது. பிராந்தியில்
நாற்பது சதவீதம் முதல் அறுபது சதவீதம் போதை தரும் ஆல்கஹால் இருக்கிறது. ரம்மில் 37
முதல் 55 சதவீதம் வரை ஆல்கஹால் உள்ளது. விஸ்கியில் 40 சதவீதம் வரை ஆல்கஹால் உள்ளது.
ஒயினில 8 முதல் 16 சதவீதம் ஆல்கஹால் உள்ளது. பீரிலும் ஆல்கஹால் இருக்கும் போது அதை
ஹலால் என்று சொல்வதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?
உற்சாகத்திற்காக மது:
யமன் நாட்டிலிருந்து வந்த ஒரு நபித்தோழர் ஒருவர் நாங்கள்
குளிர்ப்பிரதேசத்தில் வாழ்கிறோம். அங்கு கடுமையாக உழைக்கவும் வேண்டியிருக்கிறது. இந்நிலையில்
நாங்கள் (கோதுமையிலிருந்து தயாராகும்) ஒரு பானத்தைக் குடித்து எங்களுடைய கடுமையான வேலைகளுக்கும்
எங்களுடைய நாட்டின் குளிருக்கும் உற்சாகத்தைப்
பெற்றுக்கொள்கிறோம், (இது கூடுமா?) என்று கேட்டார். அதற்கு நபியவர்கள், அது போதையூட்டக்கூடிய பானமா? என்று கேட்டார்கள். ஆம் என்று பதில்
கூறவே அப்படியானால் அதை விட்டும் ஒதுங்கிக்கொள்ளுங்கள், என்று கூறினார்கள். (அபூதாவூத்)
இன்றும் கடுமையான உழைப்புக்கு மது அவசியம் என்றும் களைப்பைத்
தீர்ப்பதற்கு மது அருந்துகிறோம், என்றும் சொல்பவர்கள் இந்த செய்தியைக் காதில் போட்டுக்கொள்ளட்டும்.
மது அருந்தாமல் வாகனம் ஓட்டுவது சாத்தியமில்லை, என்று சொல்பவர்களுக்கு இந்த நபிமொழி
போதுமானதாக இல்லையானால் தண்டனைதான் ஒரே வழி.