Sunday, 8 May 2016

ஒருமித்த கருத்தில் ஒன்றுபடுவோம்!




முஸ்லிம் பெர்ஸனல்லா பற்றி பலவாறாக நாட்டில் தொடர்ந்து சர்ச்சை நடந்து கொண்டிருக்கிறது. வழக்கறிஞர்கள் பொதுசிவில் சட்டத்தை வலியுறுத்தி கருத்து தெரிவிக்கின்றனர். நீதிமன்றங்கள் அதை அமுல்படுத்தக்கோரி ஆலோசனைகளை முன்வைத்துக் கொண்டிருக்கின்றன.

 இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் திருச்சியில் நடந்த தஃப்ஹிமூஷ் ஷரீஆ என்ற கருத்தரங்கம் முக்கியத்துவம் பெறுகிறது. இந்திய இஸ்லாமிக் ஃபிக்ஹ் அகாடமியின் செயலாளரும் ஹைதராபாத் ஜாமிஆ அல்மஃஹதுல் ஆலியின் நிறுவனருமான அல்லாமா காலித் ஸைஃபுல்லாஹ் ரஹ்மானீ அவர்கள் பெர்ஸனல்லா பற்றி மிகச் சிறந்த ஆய்வுரை நிகழ்த்தினார்கள். குறிப்பாக பலதாரமணம் பற்றி இஸ்லாத்தின் நிலைபாட்டை மற்ற மற்ற மதங்களுடன் ஒப்பீடு செய்து தெளிவான விளக்கம் கொடுத்தார்கள். அத்துடன் பலதாரமணம் தேவைக்குத் தோதுவாக வழங்கப்பட்ட அனுமதி தானே தவிர இஸ்லாம் அதை ஆர்வமூட்டி வலியுறுத்தவில்லை.


 யுத்த காலங்களில் லட்சக்கணக்கில் ஆண்கள் உயிரிழப்பதால் பல நாடுகளில் விதவைகளின் எண்ணிக்கை அதிமாகிக் கொண்டே இருப்பதின் புள்ளிவிவரங்களையும் பட்டியலிட்டார்கள். அதற்கும் மேலாக பலதாரமணத்தை அங்கீகரிக்க வில்லையானால் அல்லது பெண்களுக்கும் பல ஆண்களை திருமணம் செய்வதற்கு அனுமதி வழங்கினால் ஏற்படும் மோசமான பின்விளைவுகளையும் கலச்சார சீரழிவையும் பற்றி எடுத்துரைத்தார்கள். 


இஸ்லாமிய குடும்பவியல் சட்டங்கள் ஆகச்சிறந்தவை, என்பது இன்றைய உலகின் மோசமான கலாச்சார சீர்கேட்டை சீர்தூக்கிப் பார்த்தால் எளிதாக விளங்கிவிடும். அமெரிக்காவைச் சார்ந்த ஒரு பெண்மணி சிறுவயதிலேயே தன்னுடைய ஆண் குழந்தையைத் தத்து கொடுத்துள்ளார். முப்பத்திரண்டு வயதான அந்த மகனைக் கண்டபோது அவர்மீது காதல்வயப்பட்டு பழகியதோடு மட்டும் நிற்கவில்லை. தகாத உறவும் முடிந்த நிலையில் அந்த மகனையே திருமணம் செய்யப்போவதாக ஓர் அசிங்கமான அறிவிப்பையும் வெளியிட்டிருப்பது, கடந்த ஏப்ரல் மாதப் பத்திரிக்கைச் செய்தி.


கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பாக வியட்நாம் பெண் ஒருவருக்கு வெவ்வேறு ஆண்கள் மூலம் ஒரே நேரத்தில் கருத்தரித்து இரட்டை குழந்தைகளுக்கு தாய் ஆன சரித்திரம் மருத்துவ உலகில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது, என்ற தகவல் கடந்த மார்ச் மாத பத்திரிக்கைச் செய்தி. ஆனால், அந்த இரண்டு குழந்தைகளுக்கும் இடையே இமாலய வித்தியாசம் இருந்தது. பிறகு டிஎன்ஏ பரிசோதனை மூலம் ஒரு குழந்தை மட்டுமே அவளுடைய கணவருக்கு பிறந்தது, என்றும் மற்றொரு குழந்தை தவறான உறவு மூலம் வேறொரு ஆணுக்கு பிறந்தது, என்று உறுதி செய்யப்பட்டது. 


இத்தகைய சம்பவங்கள் உலகில் மிக மிக அபூர்வமாக நடைபெறக் கூடியது, என மருத்துவ நிபுணர்கள் ஆச்சர்யம் தெரிவித்துள்ளனர். பெண்கள், பல ஆண்களைத் திருமணம் செய்தால் என்ன? என்று வாதிடுபவர்கள் இந்நிகழ்வின் மோசமான பின்விளைவை சிந்தித்துப் பார்க்க வேண்டும். 


ஒரு பெண் பல ஆணுடன் உறவு கொண்டதால் இரண்டு வருடம் வரை அந்தக் குழந்தையின் தந்தை அல்லாத ஒரு நபரை தந்தையாக கருதப்பட்டிருக்கிறது. இரத்த உறவு இங்கே எவ்வளவு கேலிக்கூத்தாக ஆக்கப்பட்டிருக்கிறது, பாருங்களேன். கலாச்சார சீரழிவின் மொத்த உருவமாக இருக்கும் மேற்குலகுக்கு இது சர்வ சாதாரணமாக இருக்கலாம். ஆனால், இஸ்லாமியப் பார்வையில் இரத்த உறவு என்பது மிக முக்கியமானது. அவர்களில் யாராவது இறந்திருந்தால் அவர்களுடைய சொத்துக்களை பங்கீடு செய்வதில் எவ்வளவு மோசமான தவறுகள் நிகழ்ந்திருக்கும்?! 


இது போன்ற மோசமான விகாரமான பின்விளைவுகளை முன்வைத்துத் தான் ஒரு பெண், பல ஆண்களை திருமணம் செய்யக்கூடாது, என்று முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது.  இரத்த உறவு மிகமிக முக்கியமானது, என்பதால் ஒரு திருமண உறவின் மூலம் பிறந்த குழந்தைகளை டிஎன்ஏ பரிசோதனை மூலம் உறவுமுறையை மார்க்கத்தின் பார்வையில் மாற்றியமைக்கவும் முடியாது. அல்லாமா காலித் ஃபுல்லாஹ் ரஹ்மானீ அவர்கள் பலதாரமணம் தொடர்பாக விரிவான ஆய்வுரை நிகழ்த்திய பின் முஸ்லிம் தனியார் சட்டத்தின் ஒரு பகுதி தான பலதாரமாணம். 


இது போன்று எட்டு உட்பிரிவுகள் இருக்கின்றன. பெர்ஸனல்லாவின் கீழ் அந்த எட்டு தலைப்புகளும் தெளிவாக விவாதிக்கப் படவேண்டுமென்றால் காலை எட்டு மணியிலிருந்து இரவு பத்து மணி வரை பெர்ஸனல்லா தொடர்பாக மட்டுமே ஒரு கருத்தரங்கத்திற்கான ஏற்பாட்டை தமிழகத்தில் செய்ய வேண்டும், என்று கேட்டுக்கொண்டார்கள். 


உண்மையிலேயே பொது சிவில் சட்டம் தொடர்பான விவாதம் என்பது அவ்வளவு முக்கியமானது. நம்முடைய குடும்பவியல் என்பது நம்முடைய ஈமானுடன் தொடர்புடையது. முஸ்லிம் தனியார் சட்டத்தை நாம் விட்டுவிட்டால் நம்முடைய குடும்ப உறவும் சீரழிந்து விடும். அதன் மூலம் தந்தையில்லாத பிள்ளைகள் அதிகரித்துவிடுவார்கள். வாரிசுரிமைச் சட்டத்திற்கு பங்கம் ஏற்பட்டால் நம்முடைய பொருளாதாரம் முற்றிலும் ஹராமானதாகவும் சீர்குலைந்தும் போய்விடும். 



இது விஷயத்தில் முஸ்லிம்களும் அவர்களை வழிநடத்தும் மார்க்க அறிஞர்களும் முழுவிழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். இஸ்லாமிய சமுதாயம் தங்களுக்கிடையே சின்னச்சின்ன பிரச்சினைகளில் சண்டையிட்டுக் கொண்டு எதிரிகளின் பார்வையில் நாம் பலகீனமாகிப் போகாமல் இருப்பதற்கு மேற்கூறப்பட்ட யோசனையைச் செயல் படுத்துவதற்குத் தயாராக வேண்டும். 


நம்முடைய கருத்து வேறுபாடுகள் நமக்குள்ளேயே இருக்கட்டும். நமக்கு மத்தியில் ஒருமித்த கருத்துகொண்ட ஈமான் எனும் இறைநம்பிக்கையுடன் தொடர்புள்ள பெர்ஸனல்லா போன்ற விஷயத்தில் ஒன்றுபட்டு களமிறங்கி செயலாற்றினால் இந்தியாவில் ஸ்பெயினுடைய வரலாறு எழுதப்படுவதைத் தடுத்து நிறுத்த முடியும்.



எந்நூறு ஆண்டு காலம் முஸ்லிம்கள் ஆட்சி செய்த ஸ்பெயினில், வாழ்வதென்றால் கிருத்வனாக மட்டுமே வாழ வேண்டும், என்ற நிர்பந்தத்திற்கு ஆளான போது முஃப்தி உபைதுல்லாஹ் அஹ்மதுல் மக்ரிபீ அவர்கள் கி.பி. 1503 ஆம் ஆண்டு ஒரு வித்தியாசமான ஃபத்வாவை வெளியிட்டார். 


அதாவது, நிர்பந்த நிலையில் முஸ்லிம்கள் சர்ச்சுகளில் வைக்கப் பட்டிருக்கும் இயேசு மேரியுடைய சிலைகளுக்கு முன்னால் (மனதில் ஈமானை வைத்துக் கொண்டு) ஸஜ்தா செய்து கொள்ளலாம். சாராயம் குடித்துக் கொள்ளலாம். (சுகூத்தெ பக்தாத் ஸே.... ஸ்பெயின் - முஸ்லிம்களின் எழுச்சியும் வீழ்ச்சியும். பக்- 137) இந்நிலை இந்தியாவில் ஏற்படாமல் இருப்பதற்கு ஒட்டுமொத்த முஸ்லிம்களின் ஒற்றுமையும் களப்பணியும் அவசியம்.

No comments:

Post a Comment