Monday, 22 August 2016

மத்ரஸாக்கள் தடம் பதிக்க வேண்டும்




இன்று மத்ரஸாக்களில் ஓதுவதற்கு மாணவர்கள் கிடைப்பதில்லை. பழம்பெரும் மத்ரஸாக்களும் கூட மாணவர்களைத் தேடி அலைய வேண்டிய நிர்பந்த நிலையில் இருக்கின்றன. எண்ணிக்கையை ஈடு கட்டுவதற்கு மக்தப் பிரிவு, நாளிரா பிரிவு, கோடைக்கால வகுப்பு, ஸ்கூல் மாணவர்களுக்கு பகுதி நேர வகுப்பு என பல திட்டங்களை தீட்ட வேண்டியிருக்கிறது.

மத்ரஸாக்களின் மாணவர்களுடைய எண்ணிக்கை குறைவதற்கு மக்களின் நவீன கால மனோநிலை ஒரு பெரிய காரணம் என்றால் மத்ரஸாக்களின் உள்கட்டமைப்பையும் ஒரு முக்கியக் காரணமாக எடுத்துக் கொண்டாக வேண்டும். தமிழகத்தில் சிறந்த பேச்சாளர்களுக்குப் பற்றாக்குறை. தரமான பேராசிரியர்களுக்குப் பற்றாக்குறை. தகுதியான இமாம்களுக்குப் பற்றாக்குறை. தடம்பதிக்கும் எழுத்தாளர்களுக்குப் பற்றாக்குறை. பேச்சாளர்களால் ஏன் பேச்சாளர்களை உருவாக்க முடியவில்லை. பேராசிரியர்களால் ஏன் பேராசிரியர்களை உருவாக்க முடியவில்லை. எழுத்தாளர்களால் ஏன் எழுத்தாளர்களை உருவாக்க முடியவில்லை, என்பது தான் விடை தெரியாத (கண்டிப்பாக தெரிந்தாக வேண்டிய) வினாக்களாக இருக்கின்றன. தரமான உலமாக்களை மத்ரஸாக்கள் சமூகத்திற்கு அர்ப்பணிக்க வேண்டுமென்றால் அதற்காக மிகச்சிறந்த திட்டங்களைத் தீட்டியாக வேண்டும்.
இந்தியாவில் மத்ரஸாவின் வரலாறு ஆழமானது. அழுத்தமானது. மத்ரஸா என்பது ஏதோ மார்க்கச் சட்டங்களை அறிந்து கொள்ள வேண்டுமென்பதோ அல்லது ஓதி முடித்த பின் ஏதாவதொரு மார்க்கப் பணி செய்து காலத்தைக் கடத்த வேண்டுமென்பது மட்டுமோ அல்ல.

இவற்றுக்கெல்லாம் மேலாக ஆக உயர்ந்த லட்சியத்தை நோக்கமாகக் கொண்டது தான் மத்ரஸா. குர்ஆன், சுன்னா மற்றும் அது தொடர்பான துறைகளில் மிகப்பெரும் திறமையை வளர்த்துக் கொண்ட  தகுதியுள்ள உலமாக்களை உண்டாக்குவதுதான் மத்ரஸாக்களின் நோக்கம், என்று அல்லாமா முஃப்தீ தகீ உஸ்மானீ தாமத் பரகாதுஹும் அவர்கள் சொல்வார்கள். (தர்ஸெ நிஜாமீ கீ கிதாபெய் கெய்ஸே படாயே)

உண்மையும் அது தான். உலகில் மார்க்கத்தை நிலைநாட்டுவதற்கும் அதைப் பரத்துவதற்கும் அதன் பாதையில் குறுக்கிடும் பிரச்சினைகளுக்கு தீர்வு சொல்வதற்கும் அதை மட்டுமே தங்களுடைய முழுநேரப் பணியாகச் செய்யக்கூடிய தரமும் தர்பியத்தும் நிறைந்த ஒரு பிரிவினர் இருந்து கொண்டே இருக்க வேண்டும். அப்படிப்பட்ட நபர்களை உருவாக்குவது தான் மத்ரஸாக்கள். இந்த லட்சியத்தை அடைவதற்காக மத்ரஸாக்கள் பெருமுயற்சி செய்தாக வேண்டும்.

முதலாவது மாணவர்களின் நேரம் முழுமையாக பயன்பெறுமளவுக்கு ஒழுங்கு படுத்தப்பட வேண்டும். அவர்களுக்குரிய பாட வகுப்புகளில் ஆசிரியர்கள் முழு கவனம் செலுத்த வேண்டும். ஓராண்டில் அவர்களுக்குக் கொடுக்கப் பட வேண்டிய கல்வி போதனைகள் வகுப்புகள் நிறைவாக வழங்கப்பட வேண்டும். பாடநாட்களின் எண்ணிக்கையும் பாடத்தின் அளவும் வகுக்கப்பட வேண்டும். மற்ற மத்ரஸாக்களில் ஓதிவிட்டு இடையில் வருபவர்களை எண்ணிக்கையை மட்டுமே நோக்கமாகக் கொண்டு எந்த விசாரணையும் இல்லாமல் சேர்த்து விடக்கூடாது.

மத்ரஸா விட்டு மத்ரஸா தாவி ஒன்றிருண்டு வருடங்களில் ஸனது - பட்டம் கிடைக்கிறது, என்றால் மத்ரஸாவின் உயர்ந்த நோக்கம் எப்படி நிறேவேற முடியும்? மாணவர்களின் தரமான தர்பியத்திற்கு நல்ல திட்டங்கள் இருக்க வேண்டும்.

மாணவர்களுடைய முழு நேரமும் மத்ரஸாவிடம் ஒப்படைக்கப் படும்போது அவர்களுடைய உணவு, படுக்கை வசதி மட்டுல்ல. அவர்களுடைய தர்பியத் - ஒழுக்க குணநலன்களில் முழுக் கவனம் செலுத்த வேண்டும். ஒழூக்கமின்மை ஏற்படும் போது அதை சீர்செய்வதற்கு முழூமுயற்சி எடுத்தாக வேண்டும். அதற்காக முறையான கடுமையான கட்டுப்பாடுகள் இருக்க வேண்டும். ஒரு மாணவர் இப்பொழுது இப்படி இருந்தாலும் என்றாவது ஒரு நாளைக்கு திருந்திவிடுவார், என்பது எல்லா நிலைகளிலும் ஒத்துவராது.

உடலில் ஏதாவது ஒரு உறுப்பில் பழுது ஏற்பட்டாலும் உயிரைப் பாதுகாப்பதற்கு ஆப்ரேஷன் செய்வது கட்டாயமாகிறுத. எல்லாவற்றையும் விட மேலாக மாணவர்களுக்கு ஆசிரியர்களே மிகச் சிறந்த முன்மாதிரி, என்பதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். ஆசிரியர்களின் உயர்தரமான பேணுதலும் நன்னடத்தையும் மாணவர்களிடத்தில் மிகப்பெரும் மாற்றத்தைக் கொண்டு வரும், என்பதில் சந்தேகமில்லை.

பெரும்பாலான மக்கள் தங்களுடைய பிள்ளைகளுக்கு மார்க்கக் கல்வியுடன் உலகக் கல்வியையும் கற்று டிகிரி பெறுவதையே விரும்புகிறார்கள், என்று கூறுவது காதில் விழுகிறது. அவர்கள் அதற்கான பள்ளிக்கூடங்களை நாட வேண்டும். முஸ்லிம்கள், உலகக்கல்வியையும் மார்க்கக் கல்வியையும் படித்துத் தரக்கூடிய பள்ளிக்கூடங்களை உருவாக்க வேண்டும். மற்ற மதத்தவர்கள் தங்களுடைய பள்ளிக்கூடங்களின் வாயிலாக மதக்கொள்கையையும் ஓசையின்றி மனதில் பதிய வைத்துவிடுகிறார்களே!

முஸ்லிம்கள் ஏன் தங்களுடைய பிள்ளைகளுக்கு அப்படிப்பட்ட இருகல்வியையும் போதிக்கும் பள்ளிக்கூடங்களை உருவாக்கக் கூடாது? மேலே கூறியது போல் மத்ரஸா என்பது மார்க்கத்தைப் படித்து அறிந்து கொள்வதற்கான இடம் மட்டுமல்ல. ஒரு துறையில் எல்லையை அடைந்து முழுநேரத்தை மார்க்கப் பணியில் அர்ப்பணிக்கும் மார்க்க ஸ்பெசலிஸ்ட்களை உருவாக்கும் இடம்.

மருத்துவத்துறையில் தேர்ச்சி பெற்ற டாக்டரிடம் அவர் ஏன் பொறியியல் படிக்கவில்லை, என்று யாராவது கேட்பார்களா? அப்படி படித்தால் அவர் சமூகத்தில் ஒரு மருத்துராக பணியாற்றுவரா? என்ஜீனியராகப் பணியாற்றுவாரா? ஏன்? குழந்தை நல மருத்துவர் பெரியவர்களுக்கான சிகிச்சையைக் கூட செய்வதில்லையே! எனவே, மத்ரஸாக்களில் உலகக் கல்வியைப் படித்துக் கொடுக்க வேண்டுமென்ற கோரிக்கை அடிப்படையிலேயே தவறானது.

மத்ரஸாக்களின் நோக்கத்தைத் தவறாகப் புரிந்து கொண்டதன் விளைவு தான் இது. இருகல்வியையும் ஒன்றாகப் படித்துக் கொடுத்தால் தான் எண்ணிக்கையைத் தக்க வைத்துக் கொள்ள முடியும், என்ற வாதமும் தவறானது. எண்ணிக்கை மட்டுமே நோக்கமல்ல. எல்லா மக்களும்  தங்களுடைய பிள்ளைகள் இரு கல்வியையும் படிக்க வேண்டுமென்று விரும்பினால் அது மத்ரஸாக்களை ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடும்.

ஒட்டுமொத்த மக்களிடமும் இப்படிப்பட்ட ஆர்வம் இருந்தால் அதுவும் சீர்செய்யப் படவேண்டியதே! அப்படியானால், மார்க்க ஸ்பெஷலிஸ்ட்கள் எப்படி உருவாவார்கள்? சமூகத்தில் மருத்துவத்துறை, பொறியியல் துறை போன்ற உலகியல் ரீதியாக எல்லா துறைகளிலும் சிறப்பு வல்லுணர்கள் இருப்பார்கள். மார்க்கத்துறையில் மட்டும் அப்படிப்பட்ட சிறப்பு வல்லுணர்கள் இல்லையானால் அது இந்த சமூகத்தின் மிகப் பெரும் குற்றமாகிவிடாதா?

இருகல்வியையும் படிப்பதால் மேலோட்டமாக மார்க்கம் தெரிந்தவர்கள் வேண்டுமானால் உருவாகலாம். சிறந்த பேராசிரியர்களையோ தரமான மார்க்க ஆய்வாளர்களையோ பெற்றுக் கொள்ள முடியாது. சமூகத்தில் ஏற்படக்கூடிய சிக்கல்களுக்கும் பிரச்சினைகளுக்கும் ஆழமாக ஆய்வு செய்து ஆய்வுப் பூர்வமான உறுதியான தீர்வுகளை எடுத்துச் சொல்பவர்கள் இல்லாமல் போய்விடுவார்கள். சிறப்புநல மருத்துவர்கள் இல்லையானால் எவ்வளவு பெரிய நஷ்டத்தை சமூகம் சந்திக்குமோ அதைவிட கொடுமையான மாபெரும் நஷ்டத்தை இந்த சமூகம் சந்திக்க நேரிடும்.

உலகியல் துறைகளில் உயர்அந்தஸ்தை அடைவதற்கு 12+4 பதினாறு அல்லது அதைவிடவும அதிகமான வருடங்கள் தேவைப்படும் போது மார்க்கத்துறையில் மட்டும் ஏதோ சில வருடங்களில் இருகல்வியையும் சேர்த்து படித்துவிட்டால் மார்க்கத்துறை வல்லுணராகி விடமுடியுமா என்னமத்ரஸாக்களில் குறைகள் இருந்தால் முறையாக அதை சீர்திருத்தம் செய்தாக வேண்டும். அதற்காக மார்க்கத் துறையை பின்தள்ளிவிட்டு சீர்திருத்தம் செய்து விட்டோமென்று யாராவது கருதினால் அதற்கு யாரும் பொறுப்பாக முடியாது. மத்ரஸாக்கள் தடம் பதிக்க வேண்டுமே தவிர தடம் புரண்டு விடக்கூடாது.

No comments:

Post a Comment