Friday, 7 October 2016

ஓசோன் படலம் பற்றி இஸ்லாம்




ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 16 ஆம் தேதி உலக ஓசோன் தினமாகக் கொண்டாடப் பட்டு வருகிறது. எனினும், இதன் மூலம் எவ்வளவு லாபம் கிடைத்திருக்கிறது? என்பது கேள்விக்குறியே! இன்று ஓசோன் படலத்துக்கு எவற்றின் மூலமெல்லாம் ஆபத்து ஏற்படுகிறதோ அவற்றில் அதிகமான காரணிகள் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் இருக்கவில்லை.

அப்படிப்பட்ட நவீன சாதனங்கள் கண்டுபிடிக்கப் படவில்லை. எனினும், ஓசோனைப் பாதுகாப்பதற்கான அடிப்படையான வழிகாட்டல்கள் இஸ்லாத்தில் இல்லாமலில்லை. ஓசோன் ஓட்டையின் மூலம் உலகமே துன்பத்திற்குள்ளாகிறது. ஆனால், ஒரு பாதையில் கிடக்கும் தொல்லை தரும் பொருளை அகற்றுவதைக் கூட நபி (ஸல்) அவர்கள் ஈமான் எனும் இறைநம்பிக்கையின் கடைநிலை அந்தஸ்தாக அறிவித்திருக்கிறார்கள், என்றால் ஒட்டுமொத்த உலகின் பாதுகாப்புக்கு சவால் விடும் செயல்களை எப்படி இஸ்லாம் அங்கீகரிக்கும்?!


ஓசோன் படலம் என்பது...
1930-ம் ஆண்டு சிட்னிசாப்மேன் என்பவர் ஓசோனை கண்டறிந்தார். ஓசோன் என்பது மூன்று ஆக்ஸிஜன் அணுக்கள் சேர்ந்ததே ஒரு ஓசோன் துகள் ஆகும். ஓசோன் வாயுவானது படலமாக பூமியிலிருந்து 60 கிலோ மீட்டர் உயரம் வரை பரவி உள்ளது. 20 லிருந்து 25 கி. மீட்டர் வரையிலான உயரம் வரை மிக அடர்த்தியாக உள்ளது. இந்த ஓசோன் படலத்தின் முக்கிய பணி என்ன வென்றால் சூரிய ஒளி கதிர்களில் நம் கண்ணுக்குத் தெரியாத ஒளிக்கதிர்கள் உள்ளது. இத்தகைய ஒளிக் கதிர்களை அகச்சிவப்பு கதிர்கள், புற ஊதாக் கதிர்கள் என பிரிக்கலாம். அகச்சிவப்பு கதிர்கள் சூரியனிடமிருந்து வெப்பத்தை சுமந்து வந்து பூமியை வெப்பம் அடையச் செய்கிறது. புற ஊதாக்கதிர்கள் பூமியில் மனிதர்களுக்கு மட்டுமல்லாது, விலங்கினங்களும் தாவரங்களும் மிகுந்த பாதிப்புகளை ஏற்படுத்துக் கின்றன. இத்தகைய தீமை விளைவிக்கும் புற ஊதா கதிர்களை பூமியை வந்து அடையா வண் ணம் பாதுகாப்பதுதான் ஓசோன் படலத்தின் பணி ஆகும்.


குர்ஆனில் ஓசோன்
சந்திரனில் இதுபோன்ற ஓசோன் படலம் அல்லது வளிமண்டலம், என்று எதுவும் கிடையாது. எனவே, அங்கே சூரியக்கதிர்கள் நேரடியாகத் தாக்கும். நம்மைச்சுற்றி இருக்கும் வளிமண்டலம் தான் விண்ணிலிருந்து ஏற்படும் ஏராளமான ஆபத்துகளிலிருந்து நம்மைப் பாதுகாக்கிறது. நாம் வானத்தை (வளிமண்டலத்தை) பாதுகாக்கப் பட்ட முகடாக ஏற்படுத்தியிருக்கிறோம், என்று குர்ஆன் சொல்லும் (அல்குர்ஆன் -22::32) ஓசோன் படலம் எவ்வாறு பாதிப்புக்குள்ளாகிறது?

உன்னத பணி செய்துக் கொண்டிருக்கும் ஓசோன் படலத்தை நாம் சேதப்படுத்திக் கொண்டிருக்கிறோம். குளிர்சாதனப் பெட்டிகள், குளிரூட்டிகள், புகையிலை தொழிற்சாலைகள, தீயணைப்புக் கருவிகள், வர்ணம் அடிக்கும் தூவிகள், போன்றவற்றில் குளோரோ புளோரா கார்பன் என்னும் வாயு பயன்படுத்தப்படுகிறது. இந்த வாயு வளிமண்டலத்தில் உள்ள ஓசோன் துகள்களை தாக்குகிறது. இதனால் ஓசோன் படலத்தில் துளைகள் ஏற்படுகிறது.

புகை நரக வேதனை
நரகவாசிகள் கருபுகைகளின் நிழலில் கிடப்பார்கள், என்று குர்ஆன் கூறும். (அல்குர்ஆன் - 56:43) கரும்புகை கடுமையான நரக வேதனையாக இருக்கும் போது ஓசோனை ஓட்டை போடுவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. நபி (ஸல்) அவர்களின் காலத்தில் இது போன்ற நவீன சாதனங்கள் இல்லாவிட்டாலும் ஆகாயத்தில் தேவையில்லாமல்  புகை பரப்பும் காரியங்களை நபி (ஸல்) அவர்கள் தடைசெய்திருக்கிறார்கள். தூங்கச் செல்லும் போது விளக்கை அணைக்குமாறு அறிவுறுத்தியிருக்கிறார்கள். பகல் நேரத்தில் விளக்கு எறிப்பதை நபி (ஸல்) அவர்கள் வெறுத்திருக்கிறார்கள். (அல்முஃஜமுல் அவ்ஸத் - 4523)

பட்டாசு வெடிப்பதால் பொருளாதாரம் வீண்விரயம் என்ற விதத்தில அதை மார்க்கம் தடை செய்கிறது, என்றால் அதனால் மறுபுறம் சுற்றுச்சூழல் கெடுகிறது, என்கிற ரீதியிலும் மார்க்கத்தின் பார்வையில் அது தடை செய்யப்பட்டதாகவே கருதப்படுகிறது. எனவே, முஸ்லிம்கள் எக்காரணம் கொண்டும் இது போன்ற கொண்டாட்டங்களில் ஈடுபடக் கூடாது. இறந்து விட்ட சடலத்தின் மூலம் பூமியின் மேல் உள்ளவர்களுக்கு எந்தத் தீங்கும் நேரிடக்கூடாது, என்பதற்காகத் தான் உலகின் முதல் சடலத்தை மண்ணில் புதைப்பதற்கு ஒரு காகத்தை அனுப்பி மனிதனுக்குக் கற்றுக் கொடுத்தான், என்பது குர்ஆன் கூறும் வரலாறு.

தீமைகள்
ஓசோன் படலம் ஒரு விழுக்காடு குறைந்தால் தோல் புற்றுநோய் இரண்டு விழுக்காடு அதிகரிக்கும். உலக சுகாதாரக் கழகத்தின் கண்டுபிடிப்புகளின் படி ஒவ்வொரு ஆண்டும் 20 முதல் 30 லட்சம் பேர் தோல் புற்று நோய்க்கு ஆளாவதாகவும், இதில் 20 விழுக்காடு புற ஊதாககதிர்களின் பாதிப்புகளால் விளைந்தவையே என்றும் தெரிவித்துள்ளது. மேலும் தாவரங்களின் உற்பத்தி திறனும் குறையும். விலங்கினங்கள் அதிக அளவு பாதிக்கப்படும். புற ஊதாக்கதிர்கள் கடலில் பல மைல் தூரம் ஊடுருவிச்சென்று கடல்வாழ் உயிரினங்களில் ஒரு செல் உயிர்களை கொன்று குவிக்கிறது. மண்ணில் நுண்ணுயிர்கள் பாதிப்புக்கு உள்ளாகின்றது.


ஓசோன் தினம்
1987ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16ம் தேதி கனடா நாட்டின் தலைநகரில் ஓசோன் படையை அழிக்கும் ரசாயனங்களுக்கு எதிரான 'மொன்றியல்" உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டதையடுத்து அந்தத் தினமே 1995ம் ஆண்டு முதல் சர்வதேச ஓசோன் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. 1994ம் ஆண்டு டிசம்பர் மாதம் 19ம் தேதி ஐக்கிய நாடுகள் பொது சபையில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சுற்றுச் சூழல் வேகமாக அழிந்து வருகிறது. மலைகள் எல்லாம் கிரானைட் கற்களாக விலை போகின்றன. காடுகள் அழிக்கப்படுகிறது, மரங்கள் மொட்டை அடிக்கப்படுகின்றன. காடுகளில் உள்ள மரங்கள் விறகுகளாகவும் வீட்டு உபயோகப் பொருட்களாகவும் மாறுகின்றன. பெரும்பாலான காடுகள் குடியிருப்புப் பகுதிகளாகவே மாறிவிட்டன.

உலக நிலப்பரப்பில் 6 சதவிகித மட்டுமே வனப்பரப்பு எஞ்சியுள்ளது. நிமிடத்திற்கு 140 ஏக்கர் பரப்பளவில் காடுகள் அழிக்கப்படுவதாகவும்  இந்தியாவில் முதலில் இருந்த காட்டின் அளவு 33 சதவிகிதம். தற்போது, 22 சதவிகிதம் மட்டுமே உள்ளது. இதனை ஈடுசெய்ய 54 கோடி மரங்கள் நட்டால்தான் முடியும். இந்தியாவில் காணப்படும் 17,672 பூக்கும் தாவரங்களில் 5,640 தமிழ் நாட்டில் உள்ளன. கடந்த 50 ஆண்டுகளில் உலக நிலப்பரப்பில் இருந்த 14 சதவிகித காடுகளில் தற்போது 6 சதவிகிதம் மட்டுமே உள்ளது, என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.  ஓசோனை பாதுகாக்க வழிமுறைகள்


ஓசோன் படலம் பாதிக்கப்படுவதை தடுப்பதற்கான வழி முறைகள் பார்ப்போம்.

1995-ம் ஆண்டு ஓசோன் ஆய்விற்காக குரூட்சன் மற்றும் நிகோலஸ் ஆகிய இருவருக்கும் நோபல் பரிசு வழங்கப்பட்டது. இந்த அறிஞர்களின் விருப்பமெல்லாம் இந்த பூவுலகை காக்கும் ஓசோன் படலத்தை காக்க உலகத்திலுள்ள அனைவரும் ஒன்றாக கைகோர்க்கவேண்டும் என்பதுதான்.


கடந்த 50 ஆண்டுகளில் உலக நிலப்பரப்பில் இருந்த 14 சதவிகித காடுகளில் தற்போது 6 சதவிகிதம் மட்டுமே உள்ளது. பூமியில் மூன்றில் ஒரு பங்கு காடுகள் இருக்க வேண்டும் என்பது இயற்கையின் விதி. இவ்வாறு இருந்தால் நமக்கு கிடைக்கும் பயன் அதிகம். இந்தியாவில் 33 சதவிகித அளவுக்கு இருந்த காடுகள் குறைந்து தற்போது 22 சதவிகித காடுகள் மட்டுமே உள்ளன. இந்த 11 சதவிகிதத்தை அடைய வேண்டும் என்றால் 54 கோடி மரங்களை நடவேண்டும். வனத்துறை மட்டுமே இந்தப் பணியை செய்ய முடியாது. எனவே நாமும் ஆளுக்கொரு மரம் நடவேண்டும். 

மரம் நடுவதின் சிறப்பு
மரம் நடுவதற்கான சிறப்புகளை நபி (ஸல்) அவர்கள் நிறைவாகவே போதித்திருக்கிறார்கள். ஒரு முஸ்லிம் மரம் நட்டாலோ அல்லது ஏதாவது விவசாயம் செய்தாலோ அதன் மூலம் யாரவது ஒரு மனிதர் அல்லது ஒரு பறவை அல்லது ஒரு பிராணி சாப்பிடுமேயானால் அவை ஒவ்வொன்றும் மரம் நட்டவருக்கு ஸதகா செய்த நன்மையாக எழுதப்படும், என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி - 2320)


மரக்கன்று நட்ட நபித்தோழர்
மதீனாவில் விவசாயம் செழிப்பாக இருந்தததை யாரும் அறியாமால் இருக்க முடியாது. திராட்சை தோட்டங்களும் பேரீச்சை தோட்டங்களும் மதீனாவில் நிறைந்திருந்ததை சரித்திரம் நெடுக காணமுடியும்.  அவ்வாறே நபித்தோழர்கள் மரக்கன்று நட்ட நிகழ்வுகளையும் நபிமொழிக் கிரந்தங்களில் காணமுடியும். அபூஹுரைரா (ரலி) அவர்கள் ஒரு மரக்ன்று நட்டிக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது நபி (ஸல்) அவர்கள் அபூஹுரைரா (ரலி) வைக் கடந்து சென்றார்கள். என்ன செய்கிறீர்கள்? என்று கேட்டார்கள். அதற்கு அபூஹுரைரா (ரலி) மரக்ன்று நட்டிக் கொண்டிருக்கிறேன், என்று கூறினார்கள். அதனைக் கேட்ட நபியவர்கள் இதனைவிடச் சிறந்த நன்மை நடலைச் சொல்லித் தரட்டுமா? என்று கேட்டுவிட்டு சுபுஹானல்லாஹ் வல்லஹம்துலில்லாஹி வலாயிலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர் என்று கூறுங்கள். ஒவ்வொன்றுக்கும் பகரமாக சுவனத்தில் ஒரு மரம் நடப்படும், என்று கூறினார்கள்.  (இப்னுமாஜா - 3807)


மரத்தை வெட்டாதே!
மக்களுக்கு நிழலும் பழமும் தரும் மரத்தை வெட்டுவதை யாராலும் சகித்துக் கொள்ள முடியாது. அதே மரம் முழு உலகிற்குமான ஓசோன் படலத்தைப் பாதுகாப்பதில் பெரும் பங்கு வகிக்கும் போது அதை வெட்டியழிப்பது கொடுங்குற்றம் தவிர வேறென்ன? இது பற்றி எச்சரித்த நபிமொழிகளையும் பார்க்க முடியும். இலந்தை மரத்தை வெட்டுபவர்கள் தலைகுப்புற நரகில் வீசப்படுவார்கள், என்று நபி (ஸல்) அவர்கள் கடுமையான வார்த்தைகளால் எச்சரித்திருக்கிறார்கள். (பைஹகீ -12105) கடல் நீர் மட்டம் நினைத்ததை விட வேகமாக உயர்ந்து வருகிறதாம். இதனால் 2100ம் ஆண்டு வாக்கில் அமெரிக்காவில் மட்டும் கிட்டத்தட்ட 20 லட்சம் வீடுகள் கடலில் மூழ்கிப் போய் விடும் என்று சமீபத்தில் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

இதில் மேரிலான்ட் மற்றும் விர்ஜீனியாவில் மட்டும் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகள் மூழ்கும் நிலை ஏற்படுமாம். அமெரிக்கா முழுவதும் மொத்தமாக கிட்டத்தட்ட 20 லட்சம் வீடுகள் அடியோடு கடலில் மூழ்கும் அபாயம் ஏற்படுமாம்.


ஊர்களையும், நகரங்களையும், வீடுகளையும் கடல் கபளீகரம் செய்யும் காரணத்தால் பல லட்சம் பேர் இடம் பெயர்ந்து செல்லக் கூடிய நிலையும் ஏற்படுமாம். மேலும் பல கோடி அளவுக்கு பொருட் சேதமும் அமெரிக்காவை ஆட்டிப்படைக்குமாம். கரோலினா, புளோரிடா ஆகியவையும் கடும் பாதிப்பைச் சந்திக்கும் நிலை ஏற்படுமாம். இதில் புளோரிடாவுக்குத்தான் மிகப் பெரிய பாதிப்பு ஏற்படும் என்கிறார்கள். இங்கு கணக்கிடவே முடியாத அளவுக்கு சேதம் இருக்கும் என்கிறார்கள்.


எந்த அளவுக்கு கடல் நீர் மட்டம் உயரும் என்பதை விட அதனால் ஏற்படும் அபாயங்களைத் தவிர்த்து கரை சேருவது எப்படி என்பதுதான் விஞ்ஞானிகளின் பெரும் கவலையாக உள்ளது. மேலும் முன்பு கணித்ததை விட கடல் நீர் மட்ட உயர்வு அதிகமாகவே இருக்கிறதாம். இதற்குக் காரணம், பூமியில் கரியமில வாயுவின் உமிழ்வு தொடர்ந்து அதிகரித்து வருவதே.


இதுகுறித்து கொலம்பியா பல்கலைக்கழகத்தின் மைக்கேல் ஜெரார்ட் கூறுகையில், இது அமெரிக்காவுக்கு மட்டுமான பிரச்சினை இல்லை. உலகம் முழுமைக்குமான பிரச்சினை. சர்வதேச பிரச்சினை. உலகம் முழுவதும் பல கோடி வீடுகள் கடலில் மூழ்கப் போகின்றன. பல கோடிப் பேர் பாதிக்கப்படவுள்ளனர். மிகப் பெரிய குழப்பத்தையும் பூமி சந்திக்கப் போகிறது.


எந்த வேகத்தில் கடல் நீர் மட்டம் உயரும் என்பதை சரியாக கணிக்க முடியாது என்றாலும் கூட அது வேகமாக இருக்கிறது என்பதே உண்மை. நிச்சயம் இதைத் தவிர்க்கவும் முடியாது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இப்போதே திட்டமிடுவதே புத்திசாலித்தனம் என்றார் அவர்.


விஞ்ஞானிகளின் கணிப்புப் படி கடல் நீர் மட்டம் 6 அடி அளவுக்கு உயரும் என்று வைத்துக் கொண்டால் அமெரிக்காவில் 2 சதவீத பகுதி கடலில் மூழ்கிப் போய் விடும். பல லட்சம் கோடி அளவுக்கு பெரும் சேதத்தை சந்திக்கும் அமெரிக்கா. விஞ்ஞானிகள் சொல்வதைப் பார்த்தால் 2100ல் அமெரிக்கா மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த பூமியும் மிகப் பெரிய ஸ்தம்பிப்பை சந்திக்கப் போகிறது என்பது மட்டும் உறுதியாக நம்பலாம். எது எப்படி இருந்தாலும் அல்லாஹ் நாடியது மட்டுமே நடக்கும், என்பது மட்டுமே மகா உண்மை.

No comments:

Post a Comment