Friday, 7 October 2016

தேடப்பட வேண்டிய தலைப்பிறை





நோன்பு, பெருநாள், ஜகாத், ஹஜ், இத்தா போன்ற காலம் தொடர்பான அனைத்து மார்க்கச் சட்டங்களுக்கும் சந்திர மாதம் மற்றும் வருடம் தான் அடிப்படையாகக் கொள்ளப்பட  வேண்டும். தலைப்பிறை மூலம் தான் சந்திர மாதத்தின் துவக்கம் உறுதி செய்யப்பட வேண்டும்.

ஆண்டுக்கு ஒருமுறை ஜகாத் என்பது ஆங்கில மாதத்தின் அடிப்படையிலல்ல. சந்திர மாதத்தின் அடிப்படையில் தான் நிறைவேற்ற வேண்டும். அப்படி யாராவது தொடர்ந்து ஆங்கில மாதத்தின் அடிப்படையில் கொடுத்து வந்தால் 32 வருடங்களுக்குப் பிறகு ஒரு வருடம் ஜகாத் கொடுக்காத குற்றத்திற்கு ஆளாக நேரிடும். ஏனெனில் 32 சூரிய ஆண்டுகள் முடிந்தால் 33 சந்திர ஆண்டுகள் முடிந்திருக்கும்.

மார்க்கத்தின் பார்வையில் பதினைந்து வயதாகி விட்டால் அவரின் மீது மார்க்கத்தின் கடமைகள் கட்டாயமாகிவிடும். அவர் வயது வந்தவராகக் கருதப்படுவார். அந்த பதினைந்து வயது என்பதும் சூரிய ஆண்டின் கணக்கில் அல்ல, சந்திர ஆண்டின் படிதான் கணக்கிட வேண்டும். இதன்படி ஆங்கில வருடத்தின் பதினைந்து ஆண்டுகள் முடிவதற்கு 165 நாட்களுக்கு (ஐந்தரை மாதங்களுக்கு) முன்பாக சந்திர ஆண்டின் படி பதினைந்து வயதாகிவிடும். பிறந்தநாள் கொண்டாட்டம் என்பதே மார்க்கத்தில் சொல்லப்படாத ஒன்று. அதையும் கூட 11 நாட்கள் தாமதமாக முடியும், சூரியஆண்டின் கணக்கின் படி தான் கொண்டாடுகின்றனர்.

சந்திர ஆண்டு சூரிய ஆண்டை விட 11 நாட்களுக்கு முன்பாகவே முடிந்துவிடும். தங்களுடைய குழந்தைக்கு ஒர் ஆண்டு  பூர்த்தியாகி 11 நாட்களுக்குப் பிறகு தான் ஒரு வயது நிறைவடைந்ததாக பெற்றோர்கள் கருதிக் கொண்டிருக்கின்றனர். இன்று (மார்க்கத்தில் இல்லாத) பிறந்த நாளைக் கொண்டாடும் எத்தனை பேருக்கு தங்களுடைய பிறந்த நாளை சந்திர ஆண்டின் கணக்கின்படி சரியாகச் சொல்லத் தெரியும்?!


இந்நிலையில் ஒவ்வொரு மாதமும் தலைப்பிறையைச் சரியாக அறிந்து கொள்வது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது? என்பதை அறிந்து கொள்ள முடிகிறதா? ரமளான், இரு பெருநாட்கள் ஆகிய சமயத்தில் மட்டுமே தலைப்பிறை பற்றி பரவலாகப் பேசப்படுகிறது. மற்ற மாதங்களில் அதுபற்றி யாரும் கண்டு கொள்வதில்லை.
அடுத்த வருடம் பிரச்சினை வரும்போது அதுபற்றி பரபரப்பாகப் பேசப்படுகிறது. கடந்த வருடம் நோன்புப் பெருநாள் அண்டை நாடுகளான இலங்கை மற்றும் பாக்கிஸ்தானில் நம்மை விட ஒரு நாள் முன்பாகவே பிறைபார்த்து கொண்டாடப் பட்டுவிட்டது.

அவ்வாறே கடந்த ஹஜ்ஜுப் பெருநாளும் இலங்கையில் பிறை பார்க்கப் பட்டு நம்மைவிட ஒரு நாள் முன்பே கொண்டாடப் பட்டுவிட்டது. இலங்கை நமக்கு கிழக்கே இருக்கும் நாடாகும். கிழக்குப் பகுதியில் பிறை தென்பட்டால் மேற்குப் பகுதியில் இருப்பவர்கள் ஏற்று அமல் செய்ய வேண்டுமென்று நம்முடைய ஃபிக்ஹ் (சட்ட) நூற்களில் கூறப்பட்டுள்ளது. ஏனெனில், கிழக்கில் பிறை பார்க்கப்பட்டால் மேற்கில் கண்டிப்பாக பிறை தென்பட்டிருக்க வேண்டுமென்பதே இயல்பு. இலங்கையில் ஒவ்வொரு மாதமும் கரையோரப் பகுதிகள் உட்பட நாட்டின் பல பாகங்களில்  பிறை பார்ப்பதற்கான பொறுப்பாளர்கள் நியமிக்கப் படுகிறார்கள். அதற்கான ஏற்பாடுகளும் நினைவூட்டல்களும் அறிவிப்புகளும் ஒவ்வொரு மாதமும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

கடந்த ஷவ்வால் மாதத்தில் நியூமூனுக்கும் மறுநாள் சூரியன் மறைவுக்கும் மத்தியில் 26 மணி நேரம் வித்தியாசம் இருந்தது. அன்று சூரியன் மறைவுக்கும் சந்திரன் மறைவுக்கும் மத்தியில் ஏறத்தாழ 50 நிமிடங்கள் வித்தியாசம் இருந்தது. விண்ணியல் ரீதியாக பிறை வெற்றுக்கண்ணுக்குத் தெரிவதற்கான சாத்தியம் பிரகாசமாக இருப்பதாகவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனாலும்இலங்கையில் பிறை பார்க்கப் பட்டிருக்கிறது. தமிழகத்தில் தென்படவில்லை.

அவ்வாறே கடந்த துல்ஹஜ் மாதத்தில், நியூமூனுக்கும் மறுநாள் சூரியன் மறைவுக்கும் மத்தியில் ஏறத்தாழ 28 மணி நேரம் வித்தியாசம் இருந்துள்ளது. அன்று சூரியன் மறைவுக்கும் சந்திரன் மறைவுக்கும் மத்தியில் ஏறத்தாழ 45 நிமிடங்கள் வித்தியாசம் இருந்துள்ளது. விண்ணியல் ரீதியாகவும் பிறை வெற்றுக்கண்ணுக்குத் தெரிவதற்கான சாத்தியம் பிரகாசமாக இருப்பதாகவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனாலும்இலங்கையில் பிறை பார்க்கப் பட்டிருக்கிறது. தமிழகத்தில் தென்படவில்லை.

பிறை தென்படாமல் போவதற்கு மேகமூட்டம் ஒன்று மட்டுமே காரணமாக இருந்தால் அதை நாம் ஒன்றும் செய்ய முடியாது. அதே சமயம், நம்முடைய பகுதிகளில் பிறை பார்ப்பதில் மக்கள் எந்த அளவுக்கு கவனம் செலுத்துகிறார்கள்? என்பதை யோசிக்க வேண்டும். அவ்வாறே ஒவ்வொரு மாதத்தலும் பிறை பார்ப்பதில் முக்கியத்துவம் காட்டப்படுகிறதா? என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.    

பொதுவாக (ரமளான், ஷவ்வால், துல்ஹஜ் ஆகிய மாதங்களில் மட்டும்) தலைப்பிறை பற்றி முடிவு செய்யும் போது நமக்கு அறிமுகமானவர்களிடம் போன் செய்து பிறைத் தகவல் பற்றி கேட்கிறோம். மற்றவர்களும் நம்மிடம் கேட்கிறார்கள். இதில் கேட்கப்படுபவர்கள் யாரும் பிறை பார்ப்தற்கான பொறுப்பாளர்களாக நியமிக்கப் பட்டவர்கள் அல்ல. ஏதாவது தகவல் வந்தால் அதன்படி முடிவு செய்து விடுகிறோம்.

ஒவ்வொரு மாதமும் பெருநகரங்களில் மட்டுமல்ல, ஒவ்வொரு கிராமத்திலும் குறிப்பாக மேற்குக் கரையோரங்களில் - கடற்கரைப் பகுதிகளில் குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட இடத்தில் பிறை பார்ப்பதற்கு நியமிக்கப்பட்ட பொறுப்பாளர்கள் முன்னரே சென்று அதிமுக்கியத்துவம் கொடுத்து பிறை தென்படும் இடத்தைக் கூர்ந்து கவனிக்க வேண்டும். இப்படி தமிழகம் முழுவதும் பொறுப்பாளர்கள் ஒவ்வொரு மாதமும் பிறைபார்த்து அதற்கான தகவல்களை உடனுக்குடன் பகிர்ந்து கொள்ளும் போது (தகவல் தொழில் நுட்பம் வளர்ந்த இந்த காலத்தில்) பரவலாக ஏற்படும் பிறைக் குழப்பத்தை ஓரளவு தவிர்த்துக் கொள்ள முடியும்.

ஆனால், நடைமுறையில் கடற்கரைப் பகுதிகளில் சென்று ஒவ்வொரு மாதமும் பிறை பார்ப்பதில் அதிக கவனம் செலுத்தப் படுவதில்லை. ஏன்? இருந்த இடத்தில் இருந்து கொண்டு கூட அதில் கவனம் செலுத்துவது மிகவும் குறைவு என்றே சொல்ல வேண்டும். இப்படி தலைப்பிறை பார்ப்பதில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமென்று வலியுறுத்துபவர்களைக் கூட வேடிக்கையாகப் பார்ப்பது தான் காலசூழ்நிலை.

நாம் இருந்த இடத்திலேயே உயரமான கட்டிடங்களின் மேல் நின்று பிறை பார்ப்பதாக இருந்தால் கூட அதற்குரிய நேரத்தில் உடனடியாக அங்கு சென்றாக வேண்டும். சொல்லப்போனால் இரு குழுவாகப் பிரிந்து ஒரு குழுவினர் மக்ரிப் பாங்கு சொல்லப்படும் நேரத்திலிருந்து வானத்தைக் கவனிக்க வேண்டும். மற்றொரு குழு தொழுதுவிட்டு வந்தபின் அவர்கள் பிறை பார்க்கும் பொறுப்பை எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில், மேற்கு நோக்கி மறையச் சென்று கொண்டிருக்கும் சந்திரன் (தலைப்பிறை) ஏதோ ஒரு நேரத்தில் தென்பட்டுவிட்டு பிறகு அடியில் இருக்கும் மேகத்திற்குள் மறைந்து விடலாம். அது தென்பட்டுக் கொண்டிருக்கும் அந்த நேரத்தில் நாம் பார்க்காவிட்டால் பிறகு வானத்தில் பிறை இருந்தும் மேகத்திற்குள் போய்விட்டதால் நாம் பார்க்க முடியாமல் போய்விடும்.

ஆனால், இன்று நாம் பாங்கு சொல்லி மக்ரிப் தொழுது முடித்துவிட்டு அதற்குப் பிறகு சுன்னத்தும் தொழூது முடித்த பிறகு தான் பிறை பார்க்க முற்படுகிறோம். உதாரணமாக, திண்டுக்கல்லில் செப்டம்பர் இரண்டாம் தேதி (துல்ஹஜ் மாதத்திற்கான பிறை பார்க்கப் படும் நாளன்று) சூரியன் மறைவு நேரம், மாலை 6 மணி 27 நிமிடங்களாகும். ஆனால், 6:35 மணிக்குத்தான் மக்ரிப் பாங்கு சொல்லப்படும். இந்நிலையில் பாங்கு முடிந்து ஃபர்ளு சுன்னத் தொழுகை முடிய ஏறத்தாழ 6:50 லிருந்து 6:55 வரை ஆகிவிடும். 6 மணி 27 நிமிடத்திலிருந்து பார்க்க வேண்டிய பிறையை ஏறத்தாழ 25 நிமிடங்களுக்குப் பிறகு தான் நாம் பார்க்க முற்படுகிறோம். அன்றைய தினம் சந்திரன் (தலைப்பிறை) மறையும் நேரம் இரவு 7 மணி 12 நிமிடங்களாகும்.  7:12 மணிக்கு மறையப்போகும் பிறையை 6:55 க்குப் பிறகு அதுவும் கடற்கரையில் அல்ல, மொட்டை மாடியில் நின்று கொண்டு வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தால் எப்படி பிறை கண்ணுக்குத் தெரியும்?! அந்தப் பிறையோ நம் கண்ணுக்குப் புலப்படாத விதத்தில் அடிவானத்தில் இறங்கியிருக்கும்.

No comments:

Post a Comment