Friday, 7 October 2016

உடலுறுப்பு தானம் - இஸ்லாமியப் பார்வையில்



அக்டோபர் மாதம் 14 ஆம் தேதியை உலக உடல் உறுப்பு தானம் தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது. உடல் உறுப்பு தானத்தை வலியுறுத்தி 2005 ஆம் ஆண்டிலிருந்து இந்த தினம் கொண்டாடப்படுகிறது.

உடல்உறுப்பு தானம் தான் உலகில் ஆகச்சிறந்த தானமாக வலியுறுத்தப்படும் அதே நேரத்தில் உடலுறுப்பு விற்பனையின் கோரமுகத்தையும் சிந்திக்க வேண்டியுள்ளது. ஸ்கார்ட் கார்னி என்ற அமெரிக்கப் பத்திரிக்கையாளர், தி ரெட் மார்க்கெட், என்றொரு நூலை எழுதியுள்ளார். உலகம் முழுவதும் மனித உறுப்புகளின் களவு, விற்பனை, மோசடி குறிப்பாக மூன்றாம் உலக நாடுகளில் வாழும் ஏழை மக்களை ஏமாற்றி அவர்களுடைய உடல் பாகங்களைத் திருடும் இதயம் இல்லா பன்னாட்டு நிறுவன வியாபாரிகளைப் பற்றி விரிவாகப் பேசுகின்றது, தி ரெட் மார்க்கட்.


எல்லாவற்றையும்விட இந்தப் புத்தகம் நமக்குத் தரும் முக்கியமான செய்தி, உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையே தேவையில்லை என்பதுதான். ஒருவர் உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை செய்துகொண்டால், கூடுதலாகச் சில காலம் மட்டுமே வாழ முடியும். ஆனால் அறுவைசிகிச்சைக்குப் பிறகும் அவருக்கு வேறு பிரச்சினைகள் வரலாம். மாறாக, அறுவைசிகிச்சை செய்துகொள்ளாமல் மருந்து, மாத்திரைகளையே தொடரலாம்.


சென்னையைச் சேர்ந்த ஒரு பெண்மணி தன்னுடைய கணவனை சுனாமியில் பறிகொடுத்து விட்டு தன்னுடைய மகளின் வரதட்சணைக்காக 1000 டாலர்கள் பெற்று கிட்னியை விற்றார். அவரால் இன்றுவரை சரிவர வேலை செய்யவியலாமல் தவிக்கிறார். கிட்னியின் சந்தை விலை சுமார் 15,000 டாலருககும் அதிகம். தி ரெட் மார்க்கட் என்ற நூல் உடலுறுப்பின் வியாபரச்சந்தை பற்றிய உண்மைகளை புள்ளிவிபரத்துடன் வெளியிட்டிருக்கும் நிலையில் தான் உடலுறுப்பு தான தினத்தை கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.

உறுப்பு தானங்களின் வகைகள்:
மருத்துவ உலகில் மூன்று விதமாக உறுப்பு தானங்கள் நடைபெறுகின்றன. 1. ஆரோக்கியமாக இருக்கும் ஒருவர் பாதிக்கப்பட்டவருக்கு ஒரு சிறுநீரகம் அல்லது கல்லீரலின் ஒரு பகுதி போன்ற உறுப்புகளைத் தானம் செய்ய முடியும். இரத்த தானமும் செய்யலாம்.  2. இயற்கை மரணமடைந்த ஒருவரின் விழித்திரை, தோல், எலும்பு, இதய வால்வுகள் ஆகியவற்றை கொடையாக அளிக்கலாம்.  தானம் கொடுப்பவரின் ஆயுள் முடிந்து, ஆறு மணி நேரத்திற்குள் கண்கள் எடுக்கப்பட வேண்டும். 3. மூளைச்சாவு அடைந்த  ஒருவரின் சிறுநீரகங்கள் நுரையீரல், குடல், இதயம், கணையம், கல்லீரல்கண்கள் (கார்னியா எனப்படும் விழித்திரை உள்பட 37 உறுப்புக்களையும் திசுக்களையும் தானம் செய்ய முடியும்.  இதயம், கல்லீரல், நுரையீரல் போன்றவை மூளைச்சாவு ஏற்பட்டு உயிர் மட்டும் ஊசலாடிக் கொண்டிருக்கும் நோயாளிகளிடமிருந்து எடுத்தால் மட்டுமே பயன்படும்.


உலகில் உள்ள எல்லா படைப்புகளையும் விட மனிதனை கண்ணியமாகவும் சிறப்புக்குரியவனாகவும் அல்லாஹ் படைத்துள்ளான். மனிதனுக்கு வியாதி ஏற்பட்டால் உலகில் உள்ள அனைத்து படைப்புகளிலிருந்தும் மருந்தை எடுத்துக்கொள்ளலாம். நிர்பந்த நிலையில் இறந்தவற்றையும் இரத்தத்தையும் கூட பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால், மற்ற உயிரினங்களுக்கு மனிதனுடைய எந்தப் பகுதியையும் அனுபவிக்க முடியாது.  இறைநம்பிக்கையாளர்கள்அனைவரும் சகோதரர்கள் என்று குர்ஆன் கூறுகிறது. முஃமின்கள் அனைவரும் ஒரே உடலைப் போல, என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். ஒருவருக்கொருவர் உதவி செய்வது எல்லா தரப்பினரிடமும் பாராட்டத்தக்க செயல். எனினும் உதவி செய்வதற்குரிய வரையறை என்னவென்பதையும் கவனிக்க வேண்டும்.

மூளைச்சாவுக்குப்பின் தானம்?:
நவீன மருத்துவம் மரணத்தை இரண்டாகப் பிரிக்கிறது:
மூச்சு நிற்பது:
ஒருவரின் மூச்சு சுவாசம் நின்ற 15 நிமிடத்திற்குப் பிறகு ஒருவரை பிழைக்க வைக்க முடியாது.


மூளைச்சாவு:
மூளைச்சாவு என்ற நிலையை 1959 ஆண்டு இரண்டு ஃப்ரஞ்ச் மருத்துவர்கள் கண்டுபிடிக்கும் வரை பெரும்பாலும் இதயத்துடிப்பும் சுவாசமும் நின்று போவது மட்டுமே மரணமாக கருதப்பட்டன. ஒரு நோயாளி எவ்விதத் தூண்டலையும் ஏற்றுக்கொள்ளாத பதில் வினையாற்றாத கரேனியல் ரெஃப்லக்ஸஸ் இல்லாத செயற்கை சுவாசக் கருவியை நீக்கிய பின்னர் மூன்று நிமிடங்கள் தன்னியல்பாக சுவாசிக்க முயலாத முழுமையான கோமா நிலையில் இருப்பதே மூளைச்சாவு என்று 1968 ஆம் ஆண்டு வரையறுக்கப்பட்டது. இந்தியாவில் 1994 ஆம் ஆண்டு மூளைச்சாவு சட்டப்பூர்வ மரணமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. 

மூளைச்சாவு முழுச்சாவா?
சட்டப்படி இதற்குப் பிறகு உயிர் பிழைக்க வாய்ப்பே இல்லை, என்பதால் தான் மக்கள் உறுப்பு தானத்துக்கு சம்மதிக்கின்றனர்.  ஆனால் மூளைச்சாவு நிலையை அடைந்தவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்தால் அவர் உயிர் பிழைக்கலாம் எனற மாற்றுக்கருத்துகளும் விவாதிக்கப்படாமல் இலலை.  எது மூளைச்சாவு? என்பதை நிர்ணயிப்பதில் அறிவியல் முன்னேற்றம் அடைந்த நாடுகளுக்கிடையிலேயே கருத்தொற்றுமை இல்லை. பெருமூளை, சிறுமூளை, மூளைத்தண்டு என மூளை முழுவதும் இறந்தால் தான் மூளைச்சாவு என்கிறது அமெரிக்கச் சட்டம். ஆனால், மூளைத்தண்டு இறந்தாலே மூளைச்சாவுதான், என்கிறது இங்கிலாந்தின் சட்டம். இந்தியாவும் இங்கிலாந்தையே பின்பற்றுகிறது. ஏன் இந்த குழப்பம்?

அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் மூனைச்சாவு என்று முடிவு செய்யப்பட்டு உடல் உறுப்புக்களை அகற்ற மருத்துவர்கள் தயாராகும் போது உயிர்பிழைத்து வாழ்ந்தவர்களின் சம்பவங்களும் உண்டு. தானம் என்ற பெயரில் மருத்துவமனைகள் பணம் சம்பாதித்துக் கொண்டிருக்கின்றன. அரசு ஆஸ்பத்திரியில் பெறப்பட்ட இதயத்தை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு வரவேண்டிய அவசியமென்ன? அரசு மருத்துவமனையில் தேவையுள்ளவர்கள் யாருமே இல்லையா?


மூளைச்சாவு அடைந்தவர்களின் இரத்த ஓட்டம் சிறுமாற்றத்துடன் சீராக இருக்கும். மூளையைத் தவிர மற்ற உறுப்புக்கள் சீராக இயங்கிக் கொண்டிருக்கும். எனவே, மலஜலம் வெளியாவது நிற்பதில்லை. உறுப்புக்களை அகற்றும் போது மயக்க மருந்து கொடுக்கப்படுகிறது. இறந்துவிட்டால் எதற்காக மயக்க மருந்து கொடுக்க வேண்டும்?


இப்படி இருக்கும் நிலையில் மூளைச்சாவு என்பதை மரணமாக ஏற்றுக்கொள்ளவே முடியாது.  மூளைச்சாவு மரணமாகாது என்றே ராபிததுல் ஆலமில் இஸ்லாமீ போன்ற சர்வதேச கூட்டமைப்புகள் உட்பட உலகின் பல ஆய்வுக்குழுக்களும் இந்திய இஸ்லாமிக் ஃபிக்ஹ் அகாடமியும் தீர்ப்பு கூறியுள்ளது. அப்படியானால் மூளைச்சாவுக்குப் பின் உறுப்பு தானத்திற்காக உறுப்புக்களை வெட்டி எடுப்பது கொலை செய்வதற்குச் சமமாகிவிடும். அநியாயமாக ஓர் உயிர் கொல்லப்படுவதை குர்ஆனும் நபிமொழியும் பகிரங்கமாக தடைசெய்திருக்கிறது.

எனவே மூளைச்சாவுக்குப் பின் உறுப்பு தானம் என்பது மார்க்கத்தில் அனுமதிக்கப் பட்டதாக ஆக முடியாது. யாரும் தன்னுடைய மூளைச்சாவுக்குப்பின் உறுப்புக்களை எடுத்துக கொள்ளலாம், என்று உயில் - வஸிய்யத்தும் செய்ய முடியாது. அந்த வஸிய்யத் மார்ககத்தின் பார்வையில் நிறைவேற்றப்பட வேண்டிய வஸிய்யத்தாக கருதப்படாது. (நூல்: அஹம் ஃபிக்ஹி ஃபைஸலே)



கண்ணியம் என்பது...:
அடுத்து உயிருடனிருக்கும் போதோ அல்லது இயற்கை மரணத்திற்குப் பிறகோ தானம் செய்வது பற்றி பார்ப்போம். இஸ்லாம் மனிதனை எல்லா வகையிலும் கண்ணியப்படுத்தியிருக்கிறது. அவனை கேவலப்படுத்தும் படியான எந்த காரியத்தையும் மார்க்கம் அனுமதிக்காது. அவனுடைய கண்ணியக் குறைவு என்பது இரண்டு விதத்தில் அமைந்திருக்கும். 1. அவனை உடல் ரீதியாகவோ மன ரீதியாகவோ துன்புறுத்தக்கூடாது. உயிருடன் இருக்கும் போது மட்டுமல்ல. இறந்த பிறகும் அவனை துன்புறுத்தக்கூடாது. மைய்யித்தின் எலும்பை உடைப்பது உயிருள்ளவனுடைய எலும்பை உடைப்பது போலத்தான், என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (அபூதாவூத் - 3209, இப்னுமாஜா - 1616) யுத்த களத்தில் கூட கொல்லப்பட்ட எதிரியின் உடலைஅங்ககீனம் செய்யக்கூடாது, என்று மார்க்கம் உத்தரவிட்டுள்ளது. 2. மனிதனுடைய எந்த பாகத்தையும் பயன்படுத்தக்கூடாது. ஒட்டுமுடி உபயோகிப்பவர்களை நபி (ஸல்) அவர்கள் சபித்துள்ளார்கள். (புகாரீ)


எனினும் ஒட்டுமுடி உபயோகிப்பது அழகுக்காகத் தானே தவிர அவசியத்திற்காக அல்ல. மேலும் மனிதனை கேவலப்படுத்தும் எண்ணத்தில் அவ்வாறு செய்யக்கூடாது, என்பதே மார்க்கத்தின் தேட்டம். எனவே தான் முஃப்தீ கிஃபாயதுல்லாஹ் (ரஹ்) அவர்கள் இழிவுபடுத்தும் எண்ணமின்றி நிர்பந்த நிலையில் மனித பாகங்களை பயன்படுத்துவது கூடும் என்று கூறியுள்ளார்கள். (கிஃபாயதுல் முஃப்தீ- 1/155) தாய்ப்பாலை மருந்துக்காக மற்றவர்கள் உபயோகிப்பதும் மூக்கில் ஊற்றுவதும் கூடும், என்று அல்ஃபதாவல் ஹிந்திய்யாவில் கூறப்பட்டுள்ளது.


இறந்த உடலை துன்புறுத்தக்கூடாது. எனினும், கர்ப்பமுற்ற நிலையில் ஒரு பெண் மரணித்து குழந்தை உயிருடன் இருப்பது தெரிந்தால் வயிற்றைப் பிளந்து குழந்தையை எடுத்துக் கொள்ளலாம். ஏனெனில் உயிருள்ள குழந்தையின் மகத்துவம் இறந்தவரை விட உயர்ந்தது, என்று அல்பஹ்ருர்ராயிக் உட்பட பல ஃபிக்ஹ் சட்ட நூற்களில் (நவீன முறையில் அறுவை சிகிச்சை இல்லாத காலத்திலேயே) கூறப்பட்டுள்ளது. உயிர் போகும் நிலையில் உள்ள ஒருவர் ஒரு இறந்த மனித உடலைத் தவிர வேறெதையும் பெற்றுக்கொள்ள வில்லையானால் அதைச் சாப்பிட்டாவது தன்னுடைய உயிரைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும், என்று ஷாஃபியீ சட்ட நூற்களில் கூறப்பட்டுள்ளது. எனினும் தன்னுடைய உயிருக்கு ஆபத்து ஏற்படும் விதத்தில் மற்றொருவருக்கு உடலுறுப்பை தானம் செய்யக்கூடாது.  இந்த சட்டங்களின் அடிப்படையில் உடலுறுப்பு தானத்திற்கான தீர்வைப் பெற்றுக் கொள்ள முடியும்.


உயிருடனிருக்கும் போது  கிட்னி, கல்லீரல் தானம்:
ஒருவர் இறக்கும் நிலையிலுள்ள மற்றொருவருக்கு தன்னுடைய உடலிலிருந்து ஒரு பகுதியை வெட்டியெடுத்து அவருக்கு (சாப்பிட) கொடுப்பது கூடாது, என்று இமாம் நவவீ (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள். (ரௌழா- 2/551) தனக்கு நஷ்டத்தை ஏற்படுத்தி ஆபத்தில் சிக்கிக் கொண்டு அடுத்தவருக்கு பசியாற்ற வேண்டிய அவசியமில்லை. எனினும் தனக்கு எந்தத் தீங்கும் நேரவில்லையானால் கூடும் என்றே சொல்ல வேண்டும்.


ஒருவருக்கு சிறுநீரகம் செயலிழந்து விட்டது. அவர் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார். யாராவது அவருக்கு கிட்னி கொடுத்தால் உயிர் பிழைத்து விடுவார், என்றும் அதைத் தவிர வேறு வழியில்லை, என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர். மற்றொருவருக்கு இரண்டு கிட்னிகளும் சீராக செயல்படுகின்றன. அவற்றில் ஒன்றை பாதுகாப்பாக ஆப்ரேஷன் மூலம் அகற்றுவதால் இவருடைய உயிருக்கு ஆபத்தோ அல்லது பின்விளைவோ இல்லையானால் இந்த ஆரோக்கியமான நபர் தன்னுடைய ஒரு சிறுநீரகத்தை அந்த நோயாளிக்கு தானமாக கொடுக்கலாம். இந்த கிட்னி தானம் கூடும். விலைக்கு விற்கக் கூடாது, என்று அகில இந்திய இஸ்லாமிக் ஃபிக்ஹ் அகாடமி, தீர்ப்பு கூறியுள்ளது. இந்த நிர்பந்த சூழ்நிலையின்றி, யாருக்காவது கிட்னி தேவைப்படலாம், என்ற யூகத்தில் தானம் செய்யக் கூடாது. (கிதாபுல் ஃபதாவா 6/324- அஹம் ஃபிக்ஹி ஃபைஸலே)


உயிருடனிருப்பவர் கல்லீரலை தானம் செய்தால் அவருக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. சிறிது காலத்தில் அது வளர்ந்து விடும். எனவே, கல்லீரல் தானம் செய்வது கூடும் என்று சமீத்தில் நடந்த இந்திய இஸ்லாமிக் ஃபிக்ஹ் அகாடமியின் செமினாரில் முடிவு செய்யப்பட்டது.


இரத்த தானம்:
இரத்தம் ஹராம் என்று குர்ஆனில் தெளிவாகவே கூறப்பட்டுள்ளது. அது நஜிஸ்- அசுதத்தமானது, என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது. எனவே, சாதாரண நிலையில் அதை அருந்துவதோ அதன்மூலம் சிகிச்சை செய்வதோ கூடாது, என்பதில் சந்தேகமில்லை. எனினும் இரத்தம் ஏற்றுவதைத் தவிர வேறு வழி இல்லை என்கிற பட்சத்தில் நிர்பந்த சூழலில் விலக்கப்பட்டதும் ஆகுமாகிவிடும், என்ற ஷரீஅத் சட்டப்படி இரத்தம் ஏற்றிக்கொள்ளலாம். இமாம் நவவீ (ரஹ்) அவர்கள் ரவ்ளதுத்தாலிபீன் என்ற நூலில் (1/381) நிர்பந்த நிலையில் தன்னுடைய உடலின் ஒரு இடத்தைப் பிளந்து அவ்விடத்தில் இரத்தத்தை வைக்கலாம், என்று கூறியுள்ளார்கள்.

ஃபதாவா ஹிந்திய்யா (4/355) விலும் நோய் குணமாகும் என்று (நம்பத்தகுந்த திறமையான டாக்டர்) உறுதியாகக் கருதினால் இரத்தத்தைக் கொண்டு சிகிச்சை செய்யலாம், என்று கூறபப்பட்டுள்ளது. இரத்தம் கொடுப்பதால் தனக்கு எந்த ஆபத்தும் இல்லாத சூழலில் நோயாளிக்கு இரத்தம் தேவைப்படுகிற நிர்பந்த நிலையில் அதன் மூலம் நோயாளி குணமடைவார், என்பதில் பலமான நம்பிக்கை இருக்கும் போது (நிபந்தனைகளுக்குட்பட்டு) இரத்தம் கொடுத்து சிகிச்சை செய்து கொள்ளலாம். (ஜவாஹிருல் ஃபிக்ஹ் - 5/181 - முஃப்தீ ஷஃபீ ரஹ்)


தாய்ப்பாலை மற்றவர்கள் மருந்துக்காக பயன்படுத்திக் கொள்ளலாம். அவ்வாறே இரத்தத்தையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.இரத்தம் மற்ற உறுப்புக்களைப் போன்று அல்ல. இப்பொழுது இரத்தம் எடுக்கப்பட்டால் உடனே புதிய இரத்தம் உருவாகிவிடும். இப்படி இரத்தத்தை வெளியேற்றுவதால் பாதிப்பு இல்லை, என்பதை விட இரத்தம் கொடுப்பவருக்கு ஆரோக்கியமானது, என்றே கூறப்படுகிறது. எனவே, மற்ற உறுப்புக்கள் தானத்தைப் போல இதைக் கூடாது, என்று சொல்ல வேண்டிய அவசியமில்லை.

விந்தணு மற்றும் கருமுட்டை தானம்:
தன்னுடைய மகள் குழந்தை பெற்றெடுக்க முடியாது என்ற நிலையில் ஒரு தாய் தன்னுடைய கருமுட்டையை தானமாக வழங்குவதும் நடக்கிறது. 20 ஆண்டுகள் முதல் 25 ஆண்டுகள் வரை அந்த கருமுட்டையைப் பாதுகாக்க முடியும். இன்று விந்தணுக்களை சேமிக்கும் வங்கிகளும் உருவாகிவிட்டன. ஆனால் இது போன்ற தானங்களை மார்க்கம் அனுமதிக்காது. ஏனெனில் இதனால் குடும்ப அமைப்பே சீர்குலைந்து விடும். இரத்த உறவும் குழம்பிப் போய்விடும். 

இயற்கை மரணத்திற்குப் பிறகான தானம்:
மரணத்திற்குப் பின் தானம் செய்வதில் பல நிலைகளை ஆராய வேண்டும். முதலாவது: நாம் யாருக்கு தானமாகக் கொடுக்கிறோம்? கிட்னி தானம் செய்யும் போது நோயாளி கண்முன் இருக்கிறார். ஆனால், மரணத்திற்கு முன் எழுதப்படும் உயில் அப்படியில்லை. மரணத்திற்குப் பின் யாருக்காவது போய் சேரும் என்ற யூகத்தில் தான் தானம் நடைபெறுகிறது. இன்று மனித உறுப்புக்காக காத்துக் கொண்டிருப்பவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் என்று கூறுவது காதில் விழுகிறது.

எனினும் சட்டம் என்பது தெளிவாகவும் துல்லியமாகவும் இருக்க வேண்டுமென்பது சட்டவிதி. இரண்டாவது: உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை என்பது (செயற்கை உறுப்பு, மிருக உறுப்பு, தன்னுடைய சொந்த உறுப்பு போன்ற எதுவுமே பொருந்தி வராத) நிர்பந்த நிலையில் தான் கூடும். மிருக உறுப்பு மாற்று சிகிச்சை வெற்றி பெறவில்லை, என்றாலும் அதில் ஆராய்ச்சி தொடர்கிறது.

தவிர மனிதனுடைய திசுவை எடுத்து புத்துறுப்பாக்கம் என்ற முறையில் மனித உறுப்புக்களை உருவாக்கும் முயற்சியும் நடந்து கொண்டிருக்கிறது. காது, மூக்கு போன்ற வெளி உறுப்புக்களில் ஓரளவு வெற்றி கிடைத்துள்ளது. உள் உறுப்புக்கள் ஆராய்ச்சியில் உள்ளது. செயற்கை கணையம் செய்வதில் ஆய்வு நடைபெறுகிறது. சமீபத்தில் முதன்முதலாக சிட்னியில் நான்கு வயது சிறுவனுக்கு செயற்கை கணையம் பொருத்தப்பட்ட தகவல் பத்திரிக்கையில் வெளியானது. இப்படி தன்னுடைய உடலிலிருந்தே புத்துறுப்பாக்க முறையில் உறுப்புகள் தயாராகி விட்டால் மற்றவர்களுடைய உறுப்புக்களை பயன்படுத்துவது ஹராமாகிவிடும். தானம் செய்து பல ஆண்டுகளுக்குப் பிறகு உறுப்புக்களை அகற்றும்போது கூறப்பட்ட நிர்பந்த நிலை இருக்குமா? இருக்காதா? என்பது யூகமே!


மூன்றாவது: மரணத்திற்குப் பின் அகற்றப்படும் மனித உறுப்புக்கள் தேவைப்படுபவருக்கு (வெற்றிகரமாகவும் பின்விளைவின்றியும்) முழுமையாக ஒத்துப் போகுமா? என்பதும் கேள்விக்குறி. எல்லோரும் நினைப்பது போல் உறுப்பு மாற்று சிகிச்சை என்பது அவ்வளவு சாதாரண காரியமல்ல. மாற்று இதயம் பொருத்தப் பட்டவர்களில் 80 சதவீதம் பேர் ஒரு வருடம் தான் வாழ்கின்றனர் என்றும், ஏதோ ஓரிருவர் மடடுமே 15 வருடத்திற்கும் அதிகமாக வாழ்வதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன. சிலருக்கு மாற்று இதயம் ஒத்துவரவே செய்யாது. அல்லது, இரத்தக்குழாய் நோய்கள் போன்ற பயங்கர பின்விளைவுகள் ஏற்படும். உறுப்புக்களை கொடுப்பவருக்கும், பெறுபவருக்கும் இரத்தத்தில் உள்ள ழடுஹ அன்டிஜீன்கள் ஒத்துப்போக வேண்டும்.அப்போது தான் நீண்ட நாட்கள் தானம் தரப்பட்ட உறுப்பு சிறப்பாக செயல்படும். நிர்பந்த நிலையில் பயன்படுத்தப்பட வேண்டிய மனித உறுப்புகள் இது போன்ற பல யூகங்கள் இருக்கும் போது எந்த நிபந்தனையுமின்றி பொதுவாக அனைவரும் ஜீவிய காலத்தில் உறுப்பு தானம் செய்யலாம், என்று எப்படிச் சொல்ல முடியும்? மாற்று உறுப்பு ஏதாவது ஒரு வழியில் கிடைத்தால் மருந்தைப் போல் பயன்படுத்திக் கொள்ளலாம். அதற்காக தானம் செய்ய முடியாது.

கண்தானம்:
இஸ்லாமிய நாடுகளில் கண்தானம் கூடும், என்று ஃபத்வா கொடுக்கப்பட்டிருந்தாலும் இந்தியாவின் சூழ்நிலை குறித்து மார்க்க அறிஞர்களுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கண் தானம் விஷயத்தில் ஃபிக்ஹ் அகாடமி எந்த முடிவும் செய்யாமல் தன்னுடைய முடிவை ஒத்திவைத்திருக்கிறது. இன்று உறுப்பு தானத்தில் தான் முழு மனிதாபிமானமும் புதைந்து கிடப்பது போல் பேசப்படுகிறது.

வாழும் வரை மனிதாபிமானம் செத்துக் கொண்டிருக்கிறது. மனிதன் சாகும் போது மட்டும் மனிதாபிமானம் பற்றிப் பேசுகிறார்கள். தனக்கு தண்ணீர் தேவையிருந்தும் மற்றவருக்கு தண்ணீர் தந்து உதவி தன் உயிரை தியாகம் செய்து வரலாறு படைத்த சமுதாயம் முஸ்லிம் சமுதாயம். அவர்களுக்கு மனிதாபிமானம் பற்றி யாரும் பாடம் நடத்தத் தேவையில்லை.

No comments:

Post a Comment