அல்லாஹ் படைத்த நாட்களில், நேரங்களில் சில நாட்கள் அல்லது சில நேரங்கள் சிறப்புக்குரியதாக மார்க்கரீதியாக அறிவிக்கப் பட்டிருக்கிறது. அதே சமயம் எந்த நாளையும அல்லது எந்த நேரத்தையும் குறித்து அது அனைவருக்கும் கெட்டநேரம் என்றோ கெட்டநாள் என்றோ நம்புவது மார்க்கத்தில் அறியப்படாத ஒன்றாகும். மக்களிடம் இருக்கும் நடைமுறைகள் அவை மார்க்க நடைமுறைக்கு உட்பட்டதா? அல்லது அப்பாற்பட்டதா? என்பதை ஆராய்ந்து நல்லதை எடுத்தும் அல்லதை அகற்றியும் நடந்து கொள்வது தான் சரியானதாகும்.
மக்களிடம் இருக்கும் அனைத்து பழக்கங்களையும் பாரம்பரியம் என்ற பெயரில் குர்ஆன், ஹதீஸில் ஆதாரத்தை தேடிப்பிடித்து தொடர்பில்லாத ஆதாரங்களின் மூலம் வலுக்கட்டாயமாக நியாயப் படுத்த வேண்டிய அவசியம் ஒன்றுமில்லை. உலகில் முஜத்தித் - சீர்திருத்தவாதி என்று அறியப்படும் நல்லவர்களின் முன்னோர்களின் நடைமுறை அப்படியிருக்கவில்லை, என்பதை சரித்திரம் படிப்பவர்கள் அறியாமல் இருக்க முடியாது.
ஸஃபர் மாதத்தில் வரக்கூடிய கடைசி புதன்கிழமை தொடர்பாக தமிழ்பேசும் தமிழ்மக்களிடம் மட்டுமல்ல, தமிழகத்தைத் தாண்டியும் வித்தியாசமான கொள்கை இருந்து வருகிறது. ஒரு சிலர் ஒடுக்கத்துப் புதனை சந்தோஷமான நாளாக கொண்டாடுகின்றனர். அன்றைய தினம் பூங்காக்களுக்கும் சுற்றுலாத் தளங்களுககும் செல்வதை வழமையாகக் கொண்டிருக்கின்றனர். பச்சைப் புற்களை மிதிப்பதை நன்மையான காரியமாகக் கருதுகின்றனர். அந்த புதன் கிழமையில் தான் நபி (ஸல்) அவர்கள் நோயிலிருந்து சுகம் பெற்றார்கள். வெளியில் சென்றார்கள், என்று அவர்களுடைய இந்த நடைமுறைக்குக் காரணம் கூறுகின்றனர்.
உண்மையிலேயே அப்படியிருந்தாலும் கூட இவர்களுடைய இந்தச் செயல்களுக்கு ஆதாரமாக ஆகமுடியாது. ஆனால், நபி (ஸல்) அவர்கள் கடைசிப் புதன் கிழமை சுகம் பெற்றார்கள், என்பதற்கான எந்த ஆதாரமும் கிடையாது. அதற்கு மாற்றமாக அந்த தினத்தில் தான் நோய்வாய்ப் பட்டார்கள், என்பதற்கான சரித்ர ஆதாரங்கள் இருக்கின்றன.
ஒடுக்கத்துப் புதனில் மகிழ்ச்சிகரமாக வெளியே சென்று சுற்றுலாத்தளங்களில் நேரத்தைச் செலவிட்டுக் கொண்டாட வேண்டுமென்பது யூதர்களின் கலாச்சாரம் என்பதற்கான ஆதாரங்களும் காணக்கிடைக்கின்றன. நபி (ஸல்) அவர்களுக்கு வியாதி ஏற்பட்டதால் யூதர்களுக்கு சந்தோஷமாக இருந்தது. அந்த மகிழ்ச்சிக் கொண்டாட்டம் விபரமறியா இந்தியர்(முஸ்லிம்)களிடமும் தொற்றிக்கொண்டது, என்று ரஷீத் அஹ்மத் கங்கோஹி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
சூரிய வருடத்தின் கடைசிப் புதன்கிழமை ஈரானில் நூற்றாண்டுகளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. (தாயிரா மஆரிஃப் இஸ்லாமிய்யா - பஞ்சாப் 1/19) கடைசிப்புதன் கிழமையின் சடங்குகள் யூதர்கள் மற்றும் ஈரானிய நெருப்பு வணங்கிகளின் கலாச்சாரமாக இருந்து அது இந்தியாவிலும் நுழைந்துவிட்டது, என்று தாயிரா மஆரிஃபெ இஸ்லாமிய்யா (பஞ்சாப்) வில் கூறப்பட்டுள்ளது. (இஸ்லாமீ மஹினோங் கே ஃபஸாயில்)
மற்றும் சிலர் அந்த நாளை துக்க நாளாகவும் பீடைபிடித்த நாளாகவும் அபசகுணம் கொண்ட நாளாகவும் கருதுகின்றனர். ஒடுக்கத்துப் புதனன்று தாவீஸ் எழுதி கரைத்துக் குடிக்கின்றனர். அந்த நாளில் நபி (ஸல்) அவர்கள் நோயுற்றார்கள், என்பதை தங்களுடைய நம்பிக்கைக்கு காரணமாகக் கொண்டுள்ளனர். ஆனால், நபி (ஸல்) அவர்களுக்குப் பிறகு நபித்தோழர்களும் அவர்களைப் பின்பற்றி வந்த நல்லவர்களும் இப்படிப்பட்ட நம்பிக்கை கொண்டவர்களாக இருந்ததைப் பார்க்க முடியவில்லை.
நோய் உண்டாவது பாவமன்னிப்புக்காகவும் அந்தஸ்து உயர்வுக்காகவும் இருக்கும் என்பது தான் நபிமொழிகளிலிருந்து நமக்குக் கிடைக்கும் தகவலாகும். நபி (ஸல்) அவர்கள் பாவமற்றவர்கள், என்பதால் அவர்களுடைய அந்தஸ்து உயர்வதற்கான காரணமாகத் தான் அதைப் பார்க்க வேண்டும்.
அப்துல்லாஹிப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். நான் நபி (ஸல்) அவர்களுக்கு வியாதி ஏற்பட்ட சமயம் சென்றேன். சென்றார்கள். என்னுடைய கையால் தொட்டுப்பார்த்து விட்டு அல்லாஹ்வின் தூதர் அவர்களே! தாங்களுக்கு கடுமையான காய்ச்சல் அடிக்கிறது, என்று கூறினேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், உங்களில் இருவருக்கு ஏற்படும் காய்ச்சல் எனக்கு (ஒருவருக்கு) ஏற்பட்டிருக்கிறது, என்று கூறினார்கள். அப்படியானால் தாங்களுக்கு இருமடங்கு கூலி கிடைக்குமே! , என்று கூறினேன். நபி (ஸல்) அவர்களும் ஆம், என்று கூறிவிட்டு முஸ்லிமுக்கு வியாதி ஏற்பட்டால் மரம் இலைகளை உதிர்த்துவிடுவது போல் அல்லாஹ் அவருடைய பாவத்தை நீக்கிவிடுகிறான், என்று கூறினார்கள். (நூல்: முஸ்லிம் - 6724)
வியாதியின் சமயத்தில் நபி (ஸல்) அவர்களிடம் நபித்தோழர்கள் நேரடியாக நடந்து கொண்டவிதம் இது தான். இப்படிப்பட்ட நிலையில் நபி (ஸல்) அவர்களுக்கு வியாதி ஏற்பட்ட கிழமையை கெட்ட சகுணமாகக் கருதுவதும் மார்க்கத்திற்கு முரணான நம்பிக்கைகளை கொண்டிருப்பதும் எப்படி ஏற்புடையதாக ஆக முடியும்?
உண்மையில் ஸஃபர் மாதத்தை துர்க்குறியாகக் கருதுவது அய்யாமுல் ஜாஹிலிய்யா எனும் மௌட்டீக காலத்து அனுஷ்டானமாகும. எனவே தான், நபி (ஸல்) அவர்கள் லா ஸஃபர் - ஸபர் மாதத்தை (அபசகுணமாகக் கருதுவது) ஏற்புடையல்ல, என்று எச்சரித்துள்ளார்கள்
புதன் கிழமை தீங்குள்ள துர்பாக்கியமான நாளாகும், என்ற ஒரு நபிமொழியையும் ஸஃபர் மாதத்தின் ஒடுக்கத்துப் புதனுக்கு ஆதாரமாகச் சொல்லப்படுகிறது. அப்படியானால் ஒவ்வொரு புதன்கிழமையும் கெட்ட நாளாகவும் அபசகுணமாகவும் கருதப்பட வேண்டும். அப்படி யாரும் கருதிட முடியாது.
எல்லாவற்றையும் விட மேலாக ஒரு நாள் கெட்ட நாள் என்று நம்புவது அகீதா எனும் நம்பிக்கை சார்ந்த விஷயமாகும். அப்படிப்பட்ட தகவலுக்கு உறுதியான ஆதாரம் இருக்க வேண்டும். ஆனால், இந்த நபிமொழியின் அறிவிப்பாளர் வரிசையைக் கவனித்து முற்றிலும் பலகீனமான அறிவிப்பாகும். இமாம் ஸகாவீ (ரஹ்) அவர்கள் இது எந்த அடிப்படையுமில்லாத (மிகவும் பலகீனமான) அறிவிப்பாகும், என்றும் இந்தக் கிழமையின் சிறப்பு மற்றும் இகழ்வு தொடர்பாக வரும் அனைத்து நபிமொழிகளும் பலகீனமானதாகும், என்றும் கூறியுள்ளார்கள். (நூல்: அல்லுஃலுவுல் மர்ஸூஃ ஃபீமா லா அஸ்ல லஹு)
ஒரு குறிப்பிட்ட கிழமையை துர்க்குறியானது, அபசகுணமானது, என்று கருதுவது மார்க்கத்தின் அடிப்படைக்கே முரணானதாகும். அல்லாஹ் படைத்த எந்த நேரத்தையும் கெட்ட நேரம் என்று சொல்வதற்கு மார்க்கம் யாருக்கம் அதிகாரம் கொடுக்க வில்லை. எந்த நேரமும் கெட்ட நேரமில்லை.
ஒருவர் தீமையிலும் பாவத்திலும் கழிக்கும் நேரம் தான் அவருக்குப் பாதகமானதாக தண்டனையைப் பெற்றுத் தருவதாக அமையும். எனவேதான், இறைத்தண்டனை இறங்கும் நாளை துர்குறியான நாள், என்று குர்ஆன் குறிப்பிடுகிறது. தொடரான துர்ப்பாக்கியமுள்ள நாளில் அவர்களுக்கு எதிராக கடும் புயல் காற்றை அனுப்பி வைத்தோம் (அல்குர்ஆன் - 54:19) என்று ஆது சமூகத்தார்களுக்கு வேதனை இறக்கப்பட்ட நாள் பற்றி அல்லாஹ் கூறுவான்.
இதற்கு பொதுவாக, அந்த நாள் துர்ப்பாக்கியமுள்ள நாள் என்று எடுத்துக் கொள்ள முடியாது. யாருக்கு வேதனை இறங்கியதோ அவர்களுக்குத் தான் துர்ப்பாக்கியமும் தண்டனையும் வந்து சேரும். அதே தினம் ஹூத் (அலை) மற்றும் அவர்களை நபியாக ஏற்றுக்கொண்ட இறைநம்பிக்கையாளர்களுக்கு நற்பாக்கியமுள்ள நாளாகவும நிம்மதியும் மகிழ்ச்சியும் தரும் நாளாகவே இருந்தது. ஏனெனில் எதிரிகள் அந்த தினத்தில் தான் அழிக்கப்பட்டார்கள். ஹுத் (அலை) மற்றும் முஃமின்களுக்கு இந்த நாள் நாற்பாக்கியமுள்ளதாக இருந்தது, என்ற கருத்தை இமாம் குர்துபீ (ரஹ்) அவர்கள் தங்களுடைய தஃப்ஸீரில் குறிப்பிட்டுள்ளார்கள்.
வேதனை இறங்கிய நாள் உலகமக்கள் அனைவருக்கும் ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு வாரமும் அது கெட்ட நாளாகவும் அபசகுணமாகவும கருதப்பட வேண்டுமென்றால் யுகமுடிவு நாள் வரை எந்த நாளும் யாருக்கும் நல்ல நாளாக இருக்க முடியாது. ஏனெனில், குர்ஆன் மற்றொரு இடத்தில் அந்த சமூகத்தாருக்கு ஏழு இரவுகளும் எட்டு பகலும் வேதனை இறங்கியதாகக் கூறும். (69:7) அப்படியானால், வாரத்தின் எந்த நாளும் நல்ல நாள் இல்லை, என்று சொல்ல முடியுமா?
அல்லாமா ஆலூஸீ (ரஹ்) அவர்களும் நீ சரித்திரத்தைப் புரட்டிப் பார்த்தால் எல்லா நாட்களிலும் மாபெரும் சம்பவங்கள் (நல்லதும் கெட்டதுமாக) நடந்திருப்பதைப் பார்க்க முடியும். வேறெதையும் நீ பார்க்க வேண்டாம். ஆது சமூகத்தாரின் தண்டனைச் சம்பவமே போதுமான ஆதாரமாகும். வாரத்தின் எல்லா நாட்களிலும் வேதனை இறங்கியதாக குர்ஆனில் சொல்லப்பட்டுள்ளது. அப்படியானால் தண்டனை இறங்கிய நாள் தான் துர்பாக்கியம் என்றால் துர்பாக்கியம் இல்லாத நாள் என்று எந்த நாள் இருக்கிறது? என்பதை உனக்குச் சொல்லமுடியுமா? என்று கேட்கிறார்கள். (நூல்: ரூஹுல் மஆனீ)
யார் சுபுஹ் தொழுகைக்காகச் செல்கிறாரோ அவர் ஈமானுடைய கொடியுடன் செல்கிறார். யார் அதிகாயில் கடைவீதிக்குச் செல்கிறாரோ அவர் ஷைத்னுடைய கொடியை ஏந்திச் செல்கிறார், என்று நபி (ஸல்) அவர்கள் கூறிய ஹதீஸையும் இங்கு நினைவுகூரத் தகுந்ததாகும். அவருடைய அமலைக் கொண்டு தான் நல்ல விளைவும் கெட்ட விளைவும் ஏற்படுகிறது, என்பது நபிமொழி சொல்லித் தரும் பாடம். சுபுஹ் தொழுதால் அந்த நாள் முழூவதும் அவர் ஈமானுடைய கொடியின் கீழ் இருக்கிறார். அப்படி சுபுஹ் தொழாமல் வியாபாரத்திற்குச் சென்றுவிட்டால் வியாபாரம் ஹலாலாக இருந்தாலும் சுபுஹ் தொழுயை விட்டதால் அவருடன் அந்த தீங்கும் துர்பாக்கியமும் இருந்து கொண்டே இருக்கும்.
எனவே, ஒரு குறிப்பிட்ட கிழமையையோ குறிப்பிட்ட மாதத்தையோ பீடை பிடித்ததாக நம்பிக்கைக் கொள்வது மார்க்கத்தின் அஸ்திவாரத்தையே தகர்த்துவிடும். உண்மையில் புதன் கிழமை புதன் கோளின் ஆதிக்கத்தில் வந்து அது துர்பாக்கியமான நாளாகி விடும், என்று சொல்வது ஜோஷியக்காரர்களும் நட்சத்திர கணக்கர்களும் சொல்லக்கூடிய கருத்தாகும், என்று ஃபைளுல்கதீர் ஷரஹ் ஜாமியிஸ்ஸகீர் என்ற நூலில் கூறப்பட்டுள்ளது. இப்படியொரு நம்பிக்கைக்கும் இஸ்லாத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
இல்லையானால் புதன் கிழமை பற்றி நபிமொழிகளில் பல நற்செய்திகளையும் காணமுடியும். நபி (ஸல்) அவர்கள் மஸ்ஜிதுல் ஃபத்ஹில், திங்கள், செவ்வாய், புதன் ஆகிய மூன்று நாட்களாக துஆ செய்தார்கள். ஆனால், மூன்றாவது நாளாகிய புதன்கிழமையில் தான் (இரண்டு தொழுகைக்கிடையே) துஆ ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்த ஹதீஸை அறிவிக்கும் நபித்தோழராகிய ஜாபிர் (ரலி) அவர்கள் எப்பொழுது ஏதாவது கஷ்டம் ஏற்பட்டாலும் புதன்கிழமையைத் தேர்ந்தெடுத்து குறிப்பிட்ட அந்த நேரத்தில் துஆ செய்பவர்களாக இருந்தார்கள். அந்த துஆ ஏற்றுக்கொள்ளப்படும், என்றும் கூறுகிறார்கள். (நூல்: அல்அதபுல் முஃப்ரத் -புகாரி (ரஹ்))
அஸ்ஸலாமு அலைக்கும்
ReplyDeleteஷைகு பரீதுத்தீன் கஞ்சே ஷஹர்(ரஹ்) வானிலிருந்து பீடை இறங்குவதாக கனவு கண்டார்களாமே