Sunday, 25 December 2016

இஸ்லாம் முன்வந்து வழங்கிய உரிமைகள்


 
எந்த ஒரு போராட்டமும் நடத்தப்படாமலேயே பெண்களுக்கான முழு உரிமைகளையும் இஸ்லாம் வழங்கியிருக்கிறது, என்பது மட்டுமே இஸ்லாத்தின் உண்மைத்துவத்திற்கு போதுமான ஆதாரமாகும். உலகின் முக்கிய மதங்கள் என்று கருதப்படக்கூடிய மதங்களில் கூட பெண்ணை பாவத்தின் ஆணிவேராகவே கருதப்படுகிறது. சுவனத்தில் ஆதம் (அலை) ஹவ்வா (அலை) ஆகிய இருவரையும தங்க வைத்தபோது ஒரு குறிப்பிட்ட மரத்தைச் சுட்டிக்காட்டி இதன் பக்கத்தில் கூட போக வேண்டாமென்று அல்லாஹ் கூறினான்.

எனினும், ஷைத்தானுடைய ஊசலாட்டத்தின் மூலம் அவ்விருவரும் அந்தக் கனியை உண்டுவிட்டார்கள். இந்தத் தவறு நடந்தது பெண்ணின் தூண்டுதலினால் தான் நடந்தது. எனவே, எல்லா பாவங்களுக்கும் பெண்தான் அடிப்படைக் காரணம் என்ற ஐதீகம் உருவாக்கப்பட்டது. ஆனால், ஆதம் (அலை) அவர்களுடைய சரித்திரம் குர்ஆனில் பல இடங்களில் கூறப்பட்டுள்ளது. எனினும், எந்த இடத்திலும் பெண்னை கேவலப்படுத்தும் விதமாக ஒரு வார்த்தை கூட சொல்லப்படவில்லை. ஆணுடைய பொறுப்பை உணர்த்தும் விதமாக சில இடங்களில் ஆதம் (அலை) அவர்களை மட்டும் குறிக்கும் விதமாக ஒருமையில் வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கும். மற்ற இடங்களில் அந்த சம்பவத்தின் நிலைபாட்டை விளக்கும் போது இருமையைக் குறிக்கும் வாசகமே பயன்படுத்தப் பட்டிருக்கிறது.

அதாவது ஆதம், ஹவ்வா (அலை) ஆகிய இருவருக்கும் சுவனத்தில் தங்கும்படியும் நாடிய விதத்தில் சாப்பிடும்படியும் இருவரும் குறிப்பிட்ட மரத்தை நெருங்க வேண்டாமென்றும் கூறப்பட்டிருக்காது. எனினும் அவ்விருவரும் சாப்பிட்டு விட்டார்கள். அவ்விருவருடைய மறைவிடமும் திற்நதுவிட்டது. அவ்விருவரும் இலைகளைக் கொண்டும் உடலை மறைத்தார்கள், என்று இருமையாகவே கூறப்பட்டுள்ளது. அல்லாஹ்வுடைய எச்சரிக்கையும் இருவரையும் நோக்கியே வந்தது. நான் உங்கள் இருவரையும் அந்த மரத்திறகு நெருங்க வேண்டாமென்று தடை செய்யவில்லையா? நிச்சயமாக ஷைத்தான் உங்களிருவருக்கும் பகிரங்க விரோதி என்றும் சொல்லவில்லையா?

அது மட்டுமல்ல. தவற்றை உணர்ந்து அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கேட்கும் போது கூட அவ்விருவரும் இரட்சகனிடம் பாவமன்னிப்பு தேடினார்கள், என்று குர்ஆன் கூறுகிறது. குர்ஆனில் எந்த இடத்திலும் பெண்ணைக் கேவலப்படுத்தும் விதமாக வாசகங்கள் அமையவில்லை. குற்றம் தொடர்பாக கூறுவதாக இருந்தாலும் கூட ஆணையும் பெண்ணையும் சமமாகவே இஸ்லாம் பார்க்கிறது.

எனவேதான் தண்டனை தொடர்பான வசனங்களில் திருடக்கூடிய ஆண் திருடக்கூடிய பெண், விபச்சாரம் செய்யும் பெண், விபச்சாரம் செய்யும் ஆண் என்று இருஇனத்தாரையும் தனித்தனியாகக் கூறி இருவருக்கும சமமான தண்டனையே குர்ஆனில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. மனிதர்கள் செய்யும் நற்காரியங்களுக்கு ஆண், பெண் வேறுபாடின்றி சமமாகவே நற்கூலி வழங்கப்படுகிறது. நற்காரியத்தை ஆண் செய்தால் மட்டுமே நன்மை என்று அறிவிக்கப்படவில்லை.

ஆணாயினும்  பண்ணாயினும் எவர் இறைநம்பிக்கை கொண்டவராக இருக்கும் நிலையில் நற்செயல் புரிகிறாரோ அவரை (இவ்வுலகிலும்) தூய - மணமான வாழ்வு வாழச்செய்வோம். (மறுமையிலும்) அவர்கள் புரிந்த நற்காரியங்களில் மிகச்சிறந்தவற்றுக்கு (ஏற்ப) கூலி வழங்குவோம். (அல்குர்ஆன் - 16:97)

உங்களில், ஆண், பெண் யாருடைய நற்செயலையும் வீணாக்க மாட்டேன், என்றும் குர்ஆன் கூறுகிறது. (3:195)

நன்மை வழங்கும் விஷயத்தில் ஆண்களையும் பெண்களையும் தனித்தனியாகக் கூட சில இடங்களில் குர்ஆன் எடுத்துரைக்கும். உதாரணமாக, நிச்சயமாக முஸ்லிமான ஆண்கள், முஸ்லிமான பெண்கள், இறைநம்பிக்கை கொண்ட ஆண்கள், இறைநம்பிக்கை கொண்ட பெண்கள், பொறுமையுள்ள ஆண்கள், பொறுமையுள்ள பெண்கள், தானதர்மம் புரியும் ஆண்கள், தானதர்மம் புரியும் பெண்கள், நோன்பு நோற்கும் ஆண்கள், நோன்பு நோற்கும் பெண்கள், தங்களுடைய மறைவிடங்களைப் பாதுகாக்கும் ஆண்கள், மறைவிடங்களைப் பாதுகாக்கும் பெண்கள், அல்லாஹ்வை அதிகம் நினைவுகூரும் ஆண்கள், அல்லாஹ்வை அதிகம் நினைவுகூரும் பெண்கள் ஆகியோருக்கு அல்லாஹ் மன்னிப்பையும் மகத்தான நற்கூலியையும் தயார் செய்து வைத்துள்ளான். (அல்குர்ஆன் - 33:35)

பெண்களுக்கு வாழ்வுரிமை வழங்கியது இஸ்லாத்தின் மிகப்பெரும் சாதனையாகும். ஏனெனில், உலகின் பல மதங்களில் பெண்களை ஒரு மனித இனமாகக் கூடப் போற்றப்படவில்லை.

நபி (ஸல்) அவர்கள் பிறந்த பிறகுகி.பி. 586 ஆம் ஆண்டு ஃபிரான்ஸில் பெண்களின் நிலை பற்றி விவாதிப்பதற்காக கூட்டப்பட்ட ஒரு கூட்டத்தில் நீண்ட  விவாதங்களுக்குப் பின் பெண்ணும் மனித இனம் தான். எனினும் அவள் ஆண்களுக்கு ஊழியம் செய்வதற்காக படைக்கப்பட்டிருக்கிறாள், என்று தீர்மானித்தார்கள். (மஆரிஃபுல் குர்ஆன் - 1/197)

ஆனால், குர்ஆன் விந்துத்துளியிலிருந்தே ஆணும் பெண்ணும் படைக்கப் பட்ட சமத்துவக் கொள்கையை பல இடங்களில் எடுத்துக் கூறும். ஹிந்து மதத்தில் கணவர் இறந்து விட்டால் அவரது பிணத்தோடு மனைவியையும் சேர்த்து உயிரோடு உடன்கட்டை ஏற்றி பொசுக்கி விடுவது, மதத்தின் அங்கமாக கருதப்பட்டது. உலகில் இன்றைய இஸ்லாம் தோன்றுவதற்கு முன் ஒட்டுமொத்த பாகப்பிரிவினை முறைகளும் முறையற்றதாகவே இருந்தன.

அய்யாமுல் ஜாஹிலிய்யா எனும் மௌட்டீக காலத்தில் சொத்துரிமை கொண்டாடுவதற்கு பலமுள்ள ஆணாக இருப்பது மட்டுமே தகுதியாக கருதப்பட்டது. எனவே யுத்தத்தில் பங்குகொள்ளுமளவுக்கு பலம் வாய்ந்த வாலிபர்களுக்கே எல்லா சொத்துக்களும் கிடைக்கும். பெண்களுக்கோ சிறுவர்கள் மற்றும் வயது முதிர்ந்தவர்களுக்கோ அறவே சொத்து கிடைக்காது.

யூதர்கள் தௌராத் எனும் உண்மையான இறைவேதத்தை இருட்டடிப்பு செய்துவிட்டனர். இப்பொழுதிருக்கும் கையாடல் செய்யப்பட்ட அவர்களுடைய வேதத்தின் படி ஆணுக்கு மட்டுமே சொத்து கிடைக்கும் என்பதே அவர்களுடைய மதச்சட்டம். எனவே இறந்தவருடைய தாயாருக்கோ அல்லது மகளுக்கோ மனைவிக்கோ சகோதரிக்கோ யாருக்கும் சொத்து கிடைக்காது. வேடிக்கை என்னவென்றால் அவர்களில் ஒரு பெண் இறந்துவிட்டால் அவளுடைய கணவருக்கு சொத்து கிடைக்கும். ஆனால் கணவர் இறந்து விட்டால் மனைவிக்கு சொத்து கிடைக்காது.

ரோமன் சட்டம் நியாயத்தின் அடிப்படையில் இயற்றப்பட்ட சட்டம் என மேற்குலகம் பெருமையாக பேசிக்கொள்கிறது. ஆனால் அந்தச் சட்டத்தின் படி திருமணமான பெண்களுக்கு அவர்களுடைய தந்தையின் சொத்திலிருந்து பங்கு கிடைக்காது என்று கூறப்பட்டுள்ளது. ஆண்களுக்கு எந்நிலையிலும் சொத்து கிடைக்கும். அவன் முறையான திருமண உறவின் மூலம் பிறந்திருந்தாலும் சரி, அல்லது விபச்சாரத்தின் மூலம் பிறந்திருந்தாலும் சரி.

ஹிந்து மதத்தின் அசல் வேதத்தில் கூறப்பட்டுள்ள வாரிசுரிமைச் சட்டப்படி பெண்களுக்கு அறவே சொத்து கிடைக்காது என்பது மட்டுமல்ல. ஆண்களிலும் கூட மூத்த மகனைத்தவிர வேறு எந்த மகனுக்கும் சொத்துரிமை கிடையாது. தாய், தந்தையரின் எல்லா சொத்துக்களையும் மூத்த மகனே பெற்றுக்கொள்ள வேண்டும், என்று மனுஸ்மிருதியில் கூறப்பட்டுள்ளது. (நூல்- தக்ஸீமெ மீராத்(ச்) - மௌலானா அய்யூப் நத்வீ)

இஸ்லாத்தில் ஆணுக்கு எவ்வாறு சொத்தில் பங்கு இருக்கிறதோ அவ்வாறே பெண்ணுக்கும் பங்கு இருப்பதாக குர்ஆன் கூறும். (மரணத்திற்குப் பின்) தாய் தந்தையரும் நெருங்கிய உறவினரும் விட்டுச்சென்ற சொத்தில் ஆண்களுக்கும் பங்கு உண்டு. (அவ்வாறே) தாய் தந்தையரும் நெருங்கிய உறவினரும் விட்டுச்சென்ற சொத்தில் பெண்களுக்கும் பங்கு உண்டு. அசசொத்து குறைவாகவோ அதிகமாகவோ இருந்தாலும் சரியே! (இது) அல்லாஹ்வால் நிர்ணயிக்கப்ட்ட பங்காகும். (அல்குர்ஆன் - 4:7)

பெண்ணுக்குக் கிடைத்த சொத்தில் அவளுக்கு முழு உரிமை உண்டு. அதை அவள் சுயமாக செலவு செய்ய அதிகாரம் பெறுகிறாள். அவளுடைய உரிமையில் கணவனுக்கு எந்த அதிகாரமும் இல்லை. அவளாக விரும்பி கணவனுக்கு ஏதாவது கொடுத்தால் பெற்றுக் கொள்ளலாம். இல்லையானால், அதை அனுபவிப்பதற்கு கணவனுக்கு உரிமையில்லை. அதே சமயம், எல்லா சொத்துக்களும் மனைவிக்கு இருந்தாலும் கணவனே அவளுடைய செலவினங்களுக்குப் பொறுப்பேற்க வேண்டும்.

ஒருவன் திருமணம் முடித்து விட்டால் அவனுடைய மனைவியின் சொத்துக்களில் கணவனும் கூட்டாளியாக ஆகிவிடுவான், என்பது தான் ஐரோப்பாவில் நீண்ட காலச் சட்டமாக இருந்தது. (நூல்: வலைஸத்தகரு கல்உன்ஸா)ஆனால், குர்ஆன் 1400 வருடங்களுக்கு முன்பே அண்கள் அவர்கள் சம்பாதித்ததற்கேற்ப பங்கு உண்டு. பெண்கள் அவர்கள் சம்பாதித்ததற்கேற்ப பங்கு உண்டு, என்று பிரகடனப்படுத்திவிட்டது. (4:32)

Monday, 7 November 2016

ஒடுக்கத்துப் புதன்



அல்லாஹ் படைத்த நாட்களில், நேரங்களில் சில நாட்கள் அல்லது சில நேரங்கள் சிறப்புக்குரியதாக மார்க்கரீதியாக அறிவிக்கப் பட்டிருக்கிறது. அதே சமயம் எந்த நாளையும அல்லது எந்த நேரத்தையும் குறித்து அது அனைவருக்கும் கெட்டநேரம் என்றோ கெட்டநாள் என்றோ நம்புவது மார்க்கத்தில் அறியப்படாத ஒன்றாகும். மக்களிடம் இருக்கும் நடைமுறைகள் அவை மார்க்க நடைமுறைக்கு உட்பட்டதா? அல்லது அப்பாற்பட்டதா? என்பதை ஆராய்ந்து நல்லதை எடுத்தும் அல்லதை அகற்றியும் நடந்து கொள்வது தான் சரியானதாகும்.

மக்களிடம் இருக்கும் அனைத்து பழக்கங்களையும் பாரம்பரியம் என்ற பெயரில் குர்ஆன், ஹதீஸில் ஆதாரத்தை தேடிப்பிடித்து தொடர்பில்லாத ஆதாரங்களின் மூலம் வலுக்கட்டாயமாக நியாயப் படுத்த வேண்டிய அவசியம் ஒன்றுமில்லை. உலகில் முஜத்தித் - சீர்திருத்தவாதி என்று அறியப்படும் நல்லவர்களின் முன்னோர்களின் நடைமுறை அப்படியிருக்கவில்லை, என்பதை சரித்திரம் படிப்பவர்கள் அறியாமல் இருக்க முடியாது.

ஸஃபர் மாதத்தில் வரக்கூடிய கடைசி புதன்கிழமை தொடர்பாக தமிழ்பேசும் தமிழ்மக்களிடம் மட்டுமல்ல, தமிழகத்தைத் தாண்டியும் வித்தியாசமான கொள்கை இருந்து வருகிறது. ஒரு சிலர் ஒடுக்கத்துப் புதனை சந்தோஷமான நாளாக கொண்டாடுகின்றனர். அன்றைய தினம் பூங்காக்களுக்கும் சுற்றுலாத் தளங்களுககும் செல்வதை வழமையாகக் கொண்டிருக்கின்றனர். பச்சைப் புற்களை மிதிப்பதை நன்மையான காரியமாகக் கருதுகின்றனர். அந்த புதன் கிழமையில் தான் நபி (ஸல்) அவர்கள் நோயிலிருந்து சுகம் பெற்றார்கள். வெளியில் சென்றார்கள், என்று அவர்களுடைய இந்த நடைமுறைக்குக் காரணம் கூறுகின்றனர்.

உண்மையிலேயே அப்படியிருந்தாலும் கூட இவர்களுடைய இந்தச் செயல்களுக்கு ஆதாரமாக ஆகமுடியாது. ஆனால், நபி (ஸல்) அவர்கள் கடைசிப் புதன் கிழமை சுகம் பெற்றார்கள், என்பதற்கான எந்த ஆதாரமும் கிடையாது. அதற்கு மாற்றமாக அந்த தினத்தில் தான் நோய்வாய்ப் பட்டார்கள், என்பதற்கான சரித்ர ஆதாரங்கள் இருக்கின்றன.

ஒடுக்கத்துப் புதனில் மகிழ்ச்சிகரமாக வெளியே சென்று சுற்றுலாத்தளங்களில் நேரத்தைச் செலவிட்டுக் கொண்டாட வேண்டுமென்பது யூதர்களின் கலாச்சாரம் என்பதற்கான ஆதாரங்களும் காணக்கிடைக்கின்றன. நபி (ஸல்) அவர்களுக்கு வியாதி ஏற்பட்டதால் யூதர்களுக்கு சந்தோஷமாக இருந்தது. அந்த மகிழ்ச்சிக் கொண்டாட்டம் விபரமறியா இந்தியர்(முஸ்லிம்)களிடமும் தொற்றிக்கொண்டது, என்று ரஷீத் அஹ்மத் கங்கோஹி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

சூரிய வருடத்தின் கடைசிப் புதன்கிழமை ஈரானில் நூற்றாண்டுகளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. (தாயிரா மஆரிஃப் இஸ்லாமிய்யா - பஞ்சாப் 1/19) கடைசிப்புதன் கிழமையின் சடங்குகள் யூதர்கள் மற்றும் ஈரானிய நெருப்பு வணங்கிகளின் கலாச்சாரமாக இருந்து அது இந்தியாவிலும் நுழைந்துவிட்டது, என்று தாயிரா மஆரிஃபெ இஸ்லாமிய்யா (பஞ்சாப்) வில் கூறப்பட்டுள்ளது. (இஸ்லாமீ மஹினோங் கே ஃபஸாயில்)


மற்றும் சிலர் அந்த நாளை துக்க நாளாகவும் பீடைபிடித்த நாளாகவும் அபசகுணம் கொண்ட நாளாகவும் கருதுகின்றனர். ஒடுக்கத்துப் புதனன்று தாவீஸ் எழுதி கரைத்துக் குடிக்கின்றனர். அந்த நாளில் நபி (ஸல்) அவர்கள் நோயுற்றார்கள், என்பதை தங்களுடைய நம்பிக்கைக்கு காரணமாகக் கொண்டுள்ளனர். ஆனால், நபி (ஸல்) அவர்களுக்குப் பிறகு நபித்தோழர்களும் அவர்களைப் பின்பற்றி வந்த நல்லவர்களும் இப்படிப்பட்ட நம்பிக்கை கொண்டவர்களாக இருந்ததைப் பார்க்க முடியவில்லை.

நோய் உண்டாவது பாவமன்னிப்புக்காகவும் அந்தஸ்து உயர்வுக்காகவும் இருக்கும் என்பது தான் நபிமொழிகளிலிருந்து நமக்குக் கிடைக்கும் தகவலாகும். நபி (ஸல்) அவர்கள் பாவமற்றவர்கள், என்பதால் அவர்களுடைய அந்தஸ்து உயர்வதற்கான காரணமாகத் தான் அதைப் பார்க்க வேண்டும்.

அப்துல்லாஹிப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். நான் நபி (ஸல்) அவர்களுக்கு வியாதி ஏற்பட்ட சமயம் சென்றேன். சென்றார்கள். என்னுடைய கையால் தொட்டுப்பார்த்து விட்டு அல்லாஹ்வின் தூதர் அவர்களே! தாங்களுக்கு கடுமையான காய்ச்சல் அடிக்கிறது, என்று கூறினேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், உங்களில் இருவருக்கு ஏற்படும் காய்ச்சல் எனக்கு (ஒருவருக்கு) ஏற்பட்டிருக்கிறது, என்று கூறினார்கள். அப்படியானால் தாங்களுக்கு இருமடங்கு கூலி கிடைக்குமே! , என்று கூறினேன். நபி (ஸல்) அவர்களும் ஆம், என்று கூறிவிட்டு முஸ்லிமுக்கு வியாதி ஏற்பட்டால் மரம் இலைகளை உதிர்த்துவிடுவது போல் அல்லாஹ் அவருடைய பாவத்தை நீக்கிவிடுகிறான், என்று கூறினார்கள். (நூல்: முஸ்லிம்6724)

வியாதியின் சமயத்தில் நபி (ஸல்) அவர்களிடம் நபித்தோழர்கள் நேரடியாக நடந்து கொண்டவிதம் இது தான். இப்படிப்பட்ட நிலையில் நபி (ஸல்) அவர்களுக்கு வியாதி ஏற்பட்ட கிழமையை கெட்ட சகுணமாகக் கருதுவதும் மார்க்கத்திற்கு முரணான நம்பிக்கைகளை கொண்டிருப்பதும் எப்படி ஏற்புடையதாக ஆக முடியும்?

உண்மையில் ஸஃபர் மாதத்தை துர்க்குறியாகக் கருதுவது அய்யாமுல் ஜாஹிலிய்யா எனும் மௌட்டீக காலத்து அனுஷ்டானமாகும. எனவே தான், நபி (ஸல்) அவர்கள் லா ஸஃபர் - ஸபர் மாதத்தை (அபசகுணமாகக் கருதுவது) ஏற்புடையல்ல, என்று எச்சரித்துள்ளார்கள்

புதன் கிழமை தீங்குள்ள துர்பாக்கியமான நாளாகும், என்ற ஒரு நபிமொழியையும் ஸஃபர் மாதத்தின் ஒடுக்கத்துப் புதனுக்கு ஆதாரமாகச் சொல்லப்படுகிறது. அப்படியானால் ஒவ்வொரு புதன்கிழமையும் கெட்ட நாளாகவும் அபசகுணமாகவும் கருதப்பட வேண்டும். அப்படி யாரும் கருதிட முடியாது.

எல்லாவற்றையும் விட மேலாக ஒரு நாள் கெட்ட நாள் என்று நம்புவது அகீதா எனும் நம்பிக்கை சார்ந்த விஷயமாகும். அப்படிப்பட்ட தகவலுக்கு உறுதியான ஆதாரம் இருக்க வேண்டும். ஆனால், இந்த நபிமொழியின் அறிவிப்பாளர் வரிசையைக் கவனித்து முற்றிலும் பலகீனமான அறிவிப்பாகும். இமாம் ஸகாவீ (ரஹ்) அவர்கள் இது எந்த அடிப்படையுமில்லாத (மிகவும் பலகீனமான) அறிவிப்பாகும், என்றும் இந்தக் கிழமையின் சிறப்பு மற்றும் இகழ்வு தொடர்பாக வரும் அனைத்து நபிமொழிகளும் பலகீனமானதாகும், என்றும் கூறியுள்ளார்கள். (நூல்: அல்லுஃலுவுல் மர்ஸூஃ ஃபீமா லா அஸ்ல லஹு)


ஒரு குறிப்பிட்ட கிழமையை துர்க்குறியானது, அபசகுணமானது, என்று கருதுவது மார்க்கத்தின் அடிப்படைக்கே முரணானதாகும். அல்லாஹ் படைத்த எந்த நேரத்தையும் கெட்ட நேரம் என்று சொல்வதற்கு மார்க்கம் யாருக்கம் அதிகாரம் கொடுக்க வில்லை. எந்த நேரமும் கெட்ட நேரமில்லை.

ஒருவர் தீமையிலும் பாவத்திலும் கழிக்கும் நேரம் தான் அவருக்குப் பாதகமானதாக தண்டனையைப் பெற்றுத் தருவதாக அமையும். எனவேதான், இறைத்தண்டனை இறங்கும் நாளை துர்குறியான நாள், என்று குர்ஆன் குறிப்பிடுகிறது. தொடரான துர்ப்பாக்கியமுள்ள நாளில் அவர்களுக்கு எதிராக கடும் புயல் காற்றை அனுப்பி வைத்தோம் (அல்குர்ஆன் - 54:19) என்று ஆது சமூகத்தார்களுக்கு வேதனை இறக்கப்பட்ட நாள் பற்றி அல்லாஹ் கூறுவான்.

இதற்கு பொதுவாக, அந்த நாள் துர்ப்பாக்கியமுள்ள நாள் என்று எடுத்துக் கொள்ள முடியாது. யாருக்கு வேதனை இறங்கியதோ அவர்களுக்குத் தான் துர்ப்பாக்கியமும் தண்டனையும் வந்து சேரும். அதே தினம் ஹூத் (அலை) மற்றும் அவர்களை நபியாக ஏற்றுக்கொண்ட இறைநம்பிக்கையாளர்களுக்கு நற்பாக்கியமுள்ள நாளாகவும நிம்மதியும் மகிழ்ச்சியும் தரும் நாளாகவே இருந்தது. ஏனெனில் எதிரிகள் அந்த தினத்தில் தான் அழிக்கப்பட்டார்கள். ஹுத் (அலை) மற்றும் முஃமின்களுக்கு இந்த நாள் நாற்பாக்கியமுள்ளதாக இருந்தது, என்ற கருத்தை இமாம் குர்துபீ (ரஹ்) அவர்கள் தங்களுடைய தஃப்ஸீரில் குறிப்பிட்டுள்ளார்கள்.

வேதனை இறங்கிய நாள் உலகமக்கள் அனைவருக்கும் ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு வாரமும் அது கெட்ட நாளாகவும் அபசகுணமாகவும கருதப்பட வேண்டுமென்றால் யுகமுடிவு நாள் வரை எந்த நாளும் யாருக்கும் நல்ல நாளாக இருக்க முடியாது. ஏனெனில், குர்ஆன் மற்றொரு இடத்தில் அந்த சமூகத்தாருக்கு ஏழு இரவுகளும் எட்டு பகலும் வேதனை இறங்கியதாகக் கூறும். (69:7) அப்படியானால், வாரத்தின் எந்த நாளும் நல்ல நாள் இல்லை, என்று சொல்ல முடியுமா?

அல்லாமா ஆலூஸீ (ரஹ்) அவர்களும்  நீ சரித்திரத்தைப் புரட்டிப் பார்த்தால் எல்லா நாட்களிலும் மாபெரும் சம்பவங்கள் (நல்லதும் கெட்டதுமாக) நடந்திருப்பதைப் பார்க்க முடியும். வேறெதையும் நீ பார்க்க வேண்டாம். ஆது சமூகத்தாரின் தண்டனைச் சம்பவமே போதுமான ஆதாரமாகும். வாரத்தின் எல்லா நாட்களிலும் வேதனை இறங்கியதாக குர்ஆனில் சொல்லப்பட்டுள்ளது. அப்படியானால் தண்டனை இறங்கிய நாள் தான் துர்பாக்கியம் என்றால் துர்பாக்கியம் இல்லாத நாள் என்று எந்த நாள் இருக்கிறது? என்பதை உனக்குச் சொல்லமுடியுமா? என்று கேட்கிறார்கள். (நூல்: ரூஹுல் மஆனீ)

யார் சுபுஹ் தொழுகைக்காகச் செல்கிறாரோ அவர் ஈமானுடைய கொடியுடன் செல்கிறார். யார் அதிகாயில் கடைவீதிக்குச் செல்கிறாரோ அவர் ஷைத்னுடைய கொடியை ஏந்திச் செல்கிறார், என்று நபி (ஸல்) அவர்கள் கூறிய ஹதீஸையும் இங்கு நினைவுகூரத் தகுந்ததாகும். அவருடைய அமலைக் கொண்டு தான் நல்ல விளைவும் கெட்ட விளைவும் ஏற்படுகிறது, என்பது நபிமொழி சொல்லித் தரும் பாடம். சுபுஹ் தொழுதால் அந்த நாள் முழூவதும் அவர் ஈமானுடைய கொடியின் கீழ் இருக்கிறார். அப்படி சுபுஹ் தொழாமல் வியாபாரத்திற்குச் சென்றுவிட்டால் வியாபாரம் ஹலாலாக இருந்தாலும் சுபுஹ் தொழுயை விட்டதால் அவருடன் அந்த தீங்கும் துர்பாக்கியமும் இருந்து கொண்டே இருக்கும்.

எனவே, ஒரு குறிப்பிட்ட கிழமையையோ குறிப்பிட்ட மாதத்தையோ பீடை பிடித்ததாக நம்பிக்கைக் கொள்வது மார்க்கத்தின் அஸ்திவாரத்தையே தகர்த்துவிடும். உண்மையில் புதன் கிழமை புதன் கோளின் ஆதிக்கத்தில் வந்து அது துர்பாக்கியமான நாளாகி விடும், என்று சொல்வது ஜோஷியக்காரர்களும் நட்சத்திர கணக்கர்களும் சொல்லக்கூடிய கருத்தாகும், என்று ஃபைளுல்கதீர் ஷரஹ் ஜாமியிஸ்ஸகீர் என்ற நூலில் கூறப்பட்டுள்ளது. இப்படியொரு நம்பிக்கைக்கும் இஸ்லாத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.


இல்லையானால் புதன் கிழமை பற்றி நபிமொழிகளில் பல நற்செய்திகளையும் காணமுடியும். நபி (ஸல்) அவர்கள் மஸ்ஜிதுல் ஃபத்ஹில், திங்கள், செவ்வாய், புதன் ஆகிய மூன்று நாட்களாக துஆ செய்தார்கள். ஆனால், மூன்றாவது நாளாகிய புதன்கிழமையில் தான் (இரண்டு தொழுகைக்கிடையே) துஆ ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்த ஹதீஸை அறிவிக்கும் நபித்தோழராகிய ஜாபிர் (ரலி) அவர்கள் எப்பொழுது ஏதாவது கஷ்டம் ஏற்பட்டாலும் புதன்கிழமையைத் தேர்ந்தெடுத்து குறிப்பிட்ட அந்த நேரத்தில் துஆ செய்பவர்களாக இருந்தார்கள். அந்த துஆ ஏற்றுக்கொள்ளப்படும், என்றும் கூறுகிறார்கள். (நூல்: அல்அதபுல் முஃப்ரத் -புகாரி (ரஹ்))