Saturday, 22 April 2017

உழைப்பும் ஊதியமும்



மே முதல் நாள் தொழிலாளர்கள் தினம்; மார்ச் 8 ஆம் தேதி மகளிர் தினம் போன்றவை, உழைப்புக்கான ஊதியம், ஊதியத்திற்குட்பட்ட உழைப்பு என்ற கொள்கையின் அடிப்படையிலேயே தோன்றியுள்ளன. இந்தத் தொழிலாளர் தினம் முதலாளித்துவ நாடான அமெரிக்காவில் தான் முதன் முதலில் தோன்றியது.

பழங்காலத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு குறிப்பிட்ட பணி நேரம் கிடையாது. முதலாளியாகப் பார்த்து நீ வேலை செய்தது போதும். வீட்டிற்குப் போகலாம். என்று சொல்லும் வரை வேலை செய்ய வேண்டும். அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளில் உள்ள தொழிலாளர்கள் எட்டு மணி நேர வேலையை வலியுறுத்தி 1886 ஆம் ஆண்டு மே மாதம் முதல் தேதி, வேலை நிறுத்தப் போராட்டம் ஒன்றைத் தொடங்கினர். இந்த வேலை நிறுத்தத்தை அமெரிக்க அரசாங்கம் அடக்க முயற்சி செய்தது. இதனால் பல தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

1888 ஆம் ஆண்டில் தொழிலாளர் பேரவை என்ற அமைப்பு எட்டு மணி நேர வேலை உரிமையை முன் வைத்து மே மாதம் முதல் நாளை தொழிலாளர் நல உரிமை தினமாக அறிவித்தது. இதை அமெரிக்கா போன்ற நாடுகள் கடுமையாக எதிர்த்தாலும் தொழிலாளர்களின் இந்த நியாயமான கோரிக்கையை ஏற்றுக் கொள்ளாமல் இருக்க முடியவில்லை. இது தான் மேதினம் வந்த வரலாறு. உழைப;பாளருக்கு உரிமைகள் இருப்பது போல் கடமைகளும் நிறையவே இருக்கின்றன.

எனினும், முதலாளித்துவ சிந்தனையில் ஊறிப்போன உலக நாடுகளில் இன்றும் தொழிலாளர்களின் உரிமைகள் முறைப்படுத்தப்படாமலும் செயல்படுத்தப்படாமலும் இருப்பதே கண்கூடு. இதனால் ஏழை ஏழ்மைக் கடலை நோக்கிச் செல்கிறான். செல்வந்தன் வசதிவாய்ப்புகளில் இமயத்திற்கே சென்று விடுகிறான். இப்படிப்பட்ட செயல்பாட்டை இஸ்லாமும் கண்டிக்கிறது. நேர்மையான ஆட்சியாளர்களும் கண்டித்திருக்கிறார்கள்.

ஒரு தடவை கலீஃபா சுலைமான் பின் அப்துல் மலிக் அவர்கள் மதீனாவுக்கு அரசுப்பயணம் மேற்கொண்டார்கள். அவர்களுடன் இளவரசர் என்ற முறையில் உமர்பின் அப்துல் அஸீஸ் (ரஹ்) அவர்களும் இருந்தார்கள். கலீஃபா அவர்கள் மதீனாவாசிகளுக்கு நன்கு உதவி செய்தார்கள். பிறகு உமர் பின் அப்துல்அஜீஸ் (ரஹ்) அவர்களிடம் என்னுடைய இந்த தாராள மனப்பான்மையை எப்படிப் பார்க்கிறீர்கள்? என்று கேட்டார். நீங்கள் செல்வந்தரை மேலும் செல்வந்தராகவும் ஏழையை மேலும் ஏழையாகவும் ஆக்கியிருக்கிறீர்கள், என்று பதில் கூறினார்கள். (நூல்: அய்யாமெ கிலாஃபதெ ராஷிதா)

ஓர் உழைப்பாளருடைய உரிமைகள், கடமைகள் எப்படி இருக்க வேண்டுமென்பதை இஸ்லாமியப் பார்வையில் சிந்தித்தால் உலகின் ஆகச்சிறந்த வழிகாட்டுதல்களை அதில் பெற்றுக்கொள்ள முடியும். உழைப்பாளருக்கு ஊதியம் நிர்ணயிக்கப்பட வேண்டிய அம்சங்களைக் கூட மார்க்கம் தெளிவு படுத்த்த தவறவில்லை. மௌலானா முஹம்மது ஹாரூன் முஆவியா அவர்கள் தங்களுடைய ஹுகூகுல் இபாத் கீ ஃபிக்ர் கரெய் எனும் நூலில் ஊதியம் தொடர்பாக (சொல்லத்தகுந்த போதுமான அளவு) ஏற்புடைய ஊதியம், முடிவு செய்யப்பட்ட ஊதியம், தாமதமின்றி விரைந்து வழங்கப்படும் ஊதியம்ஆகிய மூன்று முக்கிய அம்சங்களைக் கொண்டதாக இருக்க வேண்டுமென்று கூறியுள்ளார்கள்.  இதே கருத்து இஸ்லாமியப் பொருளியல் தொடர்பான மேலும் பல நூற்களில் கூறப்பட்டுள்ளது.

போதுமான ஊதியம்
ஒரு தொழிலாளிக்கு போதுமான அளவுக்கு ஊதியம் இருக்கும் போது தான் குடும்பப் பிரச்சினை தொடர்பான சிந்தனைகளை விட்டும் ஒதுங்கி முழுமையாகவும் நிறைவாகவும் தன்னுடைய தொழிலில் ஈடுபடமுடியும். வெறும் உடல் உழைப்புக்கும் சிந்தனை உழைப்புக்கும் மத்தியில் பெரிய வேறுபாடு இருக்கவே செய்கிறது. ஒரு விஞ்ஞான ஆய்வின் படி ஒரு மணி நேரம் செய்யப்படும் மூளை தொடர்பான சிந்தனை உழைப்பும் பத்துமணி நேரம் செய்யப்படும் உடல் உழைப்புக்கும் செலவாகும் உடல் சக்தி மற்றும் எனர்ஜி சமமாகவே இருக்கும். எனவே, ஊதியம் நிர்ணயிக்கும் விஷயத்தில் இந்த வித்தியாசத்தை இஸ்லாம் கண்டு கொள்ளாமல் இருக்க முடியாது.

ஒரு சாதாரண ஆசிரியரின் உழைப்புக்கும் ஒரு ஆய்வாளரின் உழைப்புக்கும் மத்தியில் அல்லது ஒரு வாகன டிரைவரின் உழைப்புக்கும் ஒரு விமான பைலட்டின் உழைப்புக்கும் மத்தியில் அல்லது ஒரு படைவீரரின் உழைப்புக்கும் ஒரு படைத்தளபதியின் உழைப்புக்கும் மத்தியில் கண்டிப்பாக பெரிய வேறுபாடு இருக்கவே செய்யும்.

குர்ஆனில் பல வசனங்களில் நல்லமல்களுக்குக் கிடைக்கும் நன்மைகள் விஷயத்தில் வேறுபாடு காட்டப்படுவதை அறிந்து கொள்ள முடிகிறது. அவ்வாறே உலகியல் ரீதியான வேலைகளின் ஊதியத்திலும் பல் படித்தரங்கள் இருப்பதை மறுக்க முடியாது. அதே சமயம் பகலில் குறிப்பிட்ட நேரம் வேலை செய்யும் தொழிலாளிக்கு நடைமுறையில் அவனுடைய குடும்பச் செலவுக்கு ஆகும் செலவைப் பூர்த்தி செய்யும் அளவுக்காவது குறைந்த பட்ச ஊதியம் அமைய வேண்டும், என்பதையும் மறந்து விடக்கூடாது. (நூல்: இஸ்லாம் கீ ஆதிலானா இக்திஸாதீ தஃலீமாத்)
உழைப்பு என்பது வெறும் உடல் உழைப்பு மட்டுமே உழைப்பாகாது. வியாபாரம், தொழில் போன்ற எந்த தொழில் செய்தாலும் அனைத்துமே உழைப்பில் சேரும். மார்க்கச் சட்ட வல்லுணர்கள், கிலாஃபத் எனும் இஸ்லாமிய அரசுப்பணியும் உழைப்பில் சேரும், என்று கூறியுள்ளார்கள். முஸ்லிம்களுக்குப் பலன் தரும் எந்தக் காரியமும் உழைப்பில் சேரும். எனவே தான் முதல் கலீஃபா அபூபக்ர் (ரலி) அவர்கள் நான் முஸ்லிம்களுக்காக உழைக்கிறேன், என்று கூறினார்கள். அபூபக்ர் முஸ்லிம்களுக்காக உழைப்பார். அவருடைய குடும்பத்தார்கள் பொது நிதியத்திலிருந்து சாப்பிடுவார்கள். (நூல்: புகாரி, பயகம்பரெ இஸ்லாம் அவ்ர் புன்யாதீ ஹுகூக்)

இமாம் (ஆட்சியாளர், முதலாளி) போன்றோர், காஜீ - நீதிபதி (மற்றுமுள்ள உழைப்பாளர்களுக்கு) அவர்கள், மக்களிடம் இருக்கும் செல்வத்தை ஆசைக்கண் கொண்டு பார்க்காமல் இருப்பதற்காக அவருக்கும் அவருடைய குடும்பத்தாருக்கும் நிறைவாக இருக்குமளவுக்கு தாராளமாக (ஊதியம்) வழங்கப்பட வேண்டும், என்று ஃபதாவா ஆலம்கீரீஎனும் மார்க்கச் சட்ட நூலில் கூறப்பட்டுள்ளது.  (அல்ஃபதாவல் ஹிந்திய்யா, பதாயிவுஸ்ஸனாயிஃ)

நபித்தோழர்களின் ஊதிய விபரம்
அபூபக்ர் (ரலி) அவர்கள் ஜவுளி வியாபாரம் செய்பவர்களாக இருந்தார்கள். நபி (ஸல்) அவர்களுடைய வஃபாத்திற்குப் பிறகு அவர்கள் கலீஃபாவாக நியமிக்கப் பட்டார்கள். கலீஃபாவான பிறகும் அதே வியாபாரத்தைத் தொடர்ந்தார்கள். கடைவீதிக்குச் செல்லும் வழியில் உமர் (ரலி) அவர்கள் கண்டு, கலீஃபாவிடம் நீங்கள் சந்தைக்குச் சென்றால் அரசாங்கத்தின் பொறுப்புகளை எப்படி கவனிக்க முடியும்?, என்று கேட்டார்கள். அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள், அப்படியானால் (வருமானம் இல்லையானால்)என்னுடைய குடும்பத்தினருக்கு எப்படி நான் உணவளிக்க முடியும்?, என்று கேட்டார்கள். உங்களுக்கு பைத்துல் மாலிலிருந்து குடும்பத்திற்குத் தேவையான செலவினங்களுக்கு ஏற்பாடு செய்யப்படும், என்று கூறினார்கள். முதலில் இரண்டாயிரத்தை சம்பளமாக நிர்ணயித்தார்கள். அப்பொழுது அபூபக்ர் (ரலி) நீங்கள் என்னை வியாபாரத்தை விட்டும் தடுத்து விட்டீர்கள். எனக்கு குடும்பம் இருக்கிறது. எனவே அதிகப்படுத்திக் கொடுங்கள், என்று கேட்டார்கள். பிறகு மேலும் ஐநூறை அதிகப்படுத்தினார்கள். (தாரீகுல் குலஃபா லிஸ்ஸுயூத்தீ)

அப்துல்லாஹிப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் கூஃபாவின் ஆட்சியராகவும் மார்க்கப் பணி செய்பவர்களாகவும் இருந்தார்கள். அவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் நூறு திர்ஹம் ஊதியமாக வழங்கப்பட்டது. இது தவிர பைத்துல் மாலிலிருந்து ஒவ்வொரு நாளும் ஓர் ஆட்டின் நான்கில் ஒரு பகுதி இறைச்சி ரேஷனாக கிடைத்துக் கொண்டிருந்தது. (நூல்: அய்யாமெ கிலாஃபதெ ராஷிதா)

அலி (ரலி) அவர்களுக்கு பைத்துல் மாலிலிருந்து ஒவ்வொரு நாளும் ஒரு தட்டு ஸரீது எனும் உணவு வழங்கப்படும். ஒவ்வொரு மாதமும் ஐநூரு திர்ஹம் வழங்கப்படும். (நூல்: பதாயிவுஸ்ஸனாயிஃ, அல்ஃபதாவல் ஹிந்திய்யா) உமர் பின் அப்துல் அஜீஸ் (ரஹ்) அவர்கள், ஒவ்வொரு கவர்னருக்கும் முன்னூறு தீனார்களை சம்பளமாக நிர்ணயித்திருந்தார்கள். அபூ ஜக்கரிய்யா என்பவர் இது அதிகமான சம்பளமாயிற்றே, என்று விமர்சித்த போது, உமர் பின் அப்துல் அஜீஸ் (ரஹ்) அவர்கள், அவர்கள் எந்த வகையிலும் மோசடி வேலையில் ஈடுபடாமல் பொருளாதார ரீதியாக அவர்கள் நல்ல நிலையில் இருக்க வேண்டுமென்பதே நோக்கம், என்று கூறினார்கள். (நூல்: ரிஷ்வத் ஏக் லஃனத்)

(குறிப்பு: ஒரு வருடம் முழுவதும் இருநூறு திர்ஹம் இருந்தால் ஜகாத் கடமையாகி விடும். ஒரு திர்ஹம் என்பது  ஏறத்தாழ மூன்று கிராம் வெள்ளியாகும். ஒரு தீனார் என்பது ஏறத்தாழ நான்கு கிராம் தங்மாகும்.)


முடிவு செய்யப்பட்ட ஊதியம்
ஊதியம் எவ்வளவு என்பதை ஒப்பந்தத்தில் தெளிவாக உணர்த்தப்பட வேண்டும். இறைநம்பிக்கையாளர்களே ஒப்பந்தங்களை முழுமையாக நிறைவேற்றுங்கள், என்று குர்ஆன் உத்தரவிடுவதின் மூலம் வேலையாள் முதலாளியிடமும் முதலாளி வேலையாளிடமும் செய்யும் ஒவ்வொரு ஒப்பந்தத்தையும் நிறைவேற்ற வேண்டும், என்பதை வலியுறுத்துகிறது.

ஒரு நபரை வேலைக்கு அமர்த்தினால் அவருடைய ஊதியத்தை தெளிவாக தெரிவித்து விடவேண்டுமென்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (பைஹகீ - 11985)

ஊதியத்தை மட்டும் அறிவித்தால் போதாது. உழைப்பின் காலத்தையும் தெளிவாகக் குறிப்பிட வேண்டும். இது எத்தனை நாட்களுக்கான ஊதியம்? ஒரு நாளில் உழைப்பிற்கான கால நேரம் எவ்வளவு? அல்லது எவ்வளவு வேலையை செய்து முடிக்க வேண்டும்? போன்ற அளவீடுகளையும் தெளிவாக நிர்ணயம் செய்ய வேண்டும்.

ஷுஐப் (அலை) அவர்கள், மூஸா (அலை) அவர்களை வேலைக்கு அமர்த்தும் போது வேலை செய்யும் காலம் எட்டு வருடம் என்று தெளிவாக காலஅளவைக் குறிப்பிட்டதை குர்ஆன் கூறிக்காட்டுகிறது. எனவே, ஒரு நாளின் வேலை நேரம் எவ்வளவு என்பதை தெளிவு படுத்த வேண்டும். அந்த நேரத்திற்குள் செய்து முடிக்கும் படியான வேலைகளை மட்டுமே ஒரு நாள் வேலையாக ஒப்படைக்க வேண்டும். குர்ஆனில் (வஜஅல்னன் னஹார மஆஷா)

நாம் பகலை வாழ்வாதாரம் தேடும் நேரமாக ஆக்கியிருக்கிறோம், என்று கூறும் வசனத்தின் மூலம் ஒரு தொழிலாளியின் சராசரி வேலை நேரம் எவ்வளவாக இருக்க வேண்டும்? என்பதை குறிப்பால் உணர்ந்து கொள்ள முடிகிறது. இன்று பரவலாக எட்டு மணி நேர வேலை நடைமுயில் உள்ளது. பகல் நேரம், உழைப்புக்கான நேரம் என்று குறிப்பிடுகிறது. அந்த பகல் நேரத்தில் அவனுக்கான உணவு உட்பட சுய தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கும் அதே பகல் நேரத்தில் தான் நேரம் ஒதுக்க வேண்டும்.

கடந்த வருடத்தின் இறுதியில் மத்தியஅரசு, ரூபாய் நோட்டு தடையை அறிவித்த போது தொடர்ந்து 50 நாட்களும் வங்கி ஊழியர்கள் கடுமையாக உழைத்தார்கள், என பிரதமர் பாராட்டினார். ஆனால் அவர் பாராட்டு தெரிவித்த இருநாட்களில், அந்த 50 நாட்களில் கூடுதல் நேரம் பணியாற்றியதற்காக, 'ஓவர்டைம்சம்பளம் வழங்க வேண்டும் என அரசுக்கு வங்கி ஊழியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்தது. 12 மணி நேரம் வேலை செய்ய நாங்கள் அடிமைகளோ, ரோபோக்களோ அல்ல! 12 மணி நேரம் சிரமப்பட்டு உழைப்பது தான் தேசபக்தி; நாட்டுப்பற்று, என்று யாரோ கூறியது காதில் விழுந்தது. அதற்கும் ஊழியர்கள் பின்வருமாறு பதில் கொடுத்தார்கள்: தேச பக்திக்காகவும், நாட்டின் நலனுக்காகவும் நேரம், காலமின்றி அலுவலகத்தில் வேலை செய்து விட்டு குடும்பத்தை கவனிக்காமல் விட்டு விடமுடியாது இல்லையா? தொடர்ந்து நிலவும் வேலைப் பளுவால்  ஊழியர்களில் பலர் உடல் நலக்கோளாறுகளால் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் மேலும் எங்களால் 12 மணிநேரத்திற்கு அதிகமாக உழைக்கமுடியாது. எனவே வேலை நேரம் 9 மணி நேரமாக குறைக்கப்படவேண்டும், என நாட்டின் சில பகுதியின் வங்கியின் அலுவலர்கள் கோரிக்கை எழுப்பினர்.


உடனடி ஊதியம்
கொடுக்கும் ஊதியத்தையும் உடனடியாகக் கொடுக்க வேண்டுமென்று மார்க்கம் உத்தரவிடுகிறது. உழைப்பாளியின் வியர்வை காய்வதற்கு முன் அவனுடைய கூலியைக் கொடுத்து விடுமாறு நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். (இப்னுமாஜா - 2443)

மூஸா (அலை) அவர்கள் ஷுஐப் (அலை) அவர்களுடைய ஆடுகளுக்கு தண்ணீர் புகட்டினார்கள். இந்தச் செய்தி ஷுஐப் (அலை) அவர்களுக்கு தெரிந்தவுடன் மூஸா (அலை) அவர்களுக்கு தண்ணீர் புகட்டியதற்கான ஊதியத்தை வழங்குவதற்காக தங்களுடைய மகளை அனுப்பி மூஸா (அலை) அவர்களை அழைத்து வரச் செய்தார்கள், என்பது குர்ஆன் கூறும் தகவல். ஓய்வூதியம்


உமர் (ரலி) அவர்கள் சம்பளம் தவிர அலவன்ஸ் கொடுப்பதையும் அறிமுகப்படுத்தினார்கள். பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின் ஓய்வூதியத்தை அறிமுகப்படுத்திய பெருமையும் உமர் (ரலி) அவர்களையே சாரும். ஒரு தடவை வயது முதிர்ந்த கிழவர் பிச்சை கேட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்த உமர் (ரலி) அவர்கள் நீங்கள் ஏன் பிச்சை எடுக்கிறீர்கள்? என்று கேட்டதற்கு நான் அரசுக்கு வரி கட்ட வேண்டும். என்னிடம் பணம் இல்ல், என்று கூறினார். உடனே உமர் (ரலி) அவர்கள் இவருக்கும் இவரைப் போன்றவர்களுக்கும் பொது நிதியத்திலிருந்து உதவித் தொகை வழங்குமாறு உத்தரவிட்டார்கள். பிறகு, இவர்களுடைய வாலிபத்தை அரசு பயன்படுத்திக் கொண்டு வயோதிகத்தில் கண்டு கொள்ளாமல் விட்டு விடுவது நீதியின் ஆட்சிக்கு அழகல்ல, என்று கூறினார்கள்.  (அல்ஃபாரூக்)

No comments:

Post a Comment