விருந்தோம்பல் இஸ்லாத்தில் மிகவும் நன்மைக்குரிய காரியம். நபி (ஸல்) அவர்கள் நபியாக
அனுப்பப் படுவதற்கு முன்பே மௌட்டீக காலத்திலும் அரபு மக்களிடம் விருந்து உபசரிக்கும்
நல்ல பண்பாடு இருந்தது, என்று வரலாற்றாசிரியாகள்
கூறுவர். அப்துல்லாஹிப்னு ஸலாம் (ரலி) அவர்கள் முதலில் யூதராக இருந்து பின்னர் இஸ்லாத்தைத்
தழுவினார்கள். நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்த போது அப்துல்லாஹிப்னு ஸலாம் (ரலி)
அவர்கள் நபியவர்களை காண்பதற்காக வந்தார்கள். நான் நபி (ஸல்) அவர்களின் முகத்தைப் பார்த்தவுடன்
இது பொய்யருடைய முகமல்ல, என்று விளங்கிக் கொண்டேன், என்று கூறுகிறார்கள். நபி (ஸல்) அவர்கள் பேசியதில் முதல் பேச்சு, ஸலாமைப் பரப்புங்கள். உண்ண உணவளியுங்கள். மக்கள் நித்திரையில்
இருக்கும் போது தொழுங்கள். (அப்படியானால்)
நீங்கள் நிம்மதியாக சுவனத்தில் நுழைவீர்கள், என்கிற உத்தரவுகள்
தான், என்று அப்துல்லாஹிப்னு ஸலாம் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.
(நூல்: திர்மிதீ)
விருந்தும் விரயமும்
விருந்தோம்பல் மிக நல்ல காரியம், என்பது தவறாக விளங்கப்பட்டு
விடக்கூடாது. திருமணத்தில் விருந்துகளில் பல லட்சங்கள் செலவாகுவதும் அவற்றில் பெரும்பாலானவை
பெண்வீட்டார் மட்டுமே செய்ய வேண்டும் என்பதும் மார்க்க ரீதியாக நல்ல காரியம் அல்ல, என்பது மட்டுமல்ல. தடை செய்யப்பட்டதும் கூட. சாப்பாட்டுக்காக
செலவு செய்யப்படும் பணம் ஹலாலாக சம்பாதிக்கப் பட்டிருந்தாலும் கூட விரக்தியிலும் கடன்
பட்டும் வேறு வழியின்றி பல சிரமங்களுக்கு மத்தியில் வெறுப்புடன் நடத்தப்படும் விருந்துகளில்
கலந்து கொண்டு சாப்பிடுவதால் அந்த உணவு ஹலாலா? ஹராமா? என்கிற சிந்தனை ஏற்பட்டுவிடும். எந்த மனிதருடைய செல்வமும் அவருடைய
முழு மனதிருப்தியின்றி மற்றவர்களுக்கு ஹலால் ஆகாது, என்ற நபிமொழி எப்பொழுதும்
நினைவில் இருக்க வேண்டும். ஹலால், ஹராம் பற்றி எந்த சிந்தனையும்
இல்லையானால் அது போன்று மாபெரும் நஷ்டம் வேறெதுவும் இருக்க முடியாது.
நம்முடைய நடைமுறையில் உள்ள விருந்து வகைகளை கட்டாயம் சீர்த்திருத்தம் செய்யப் பட்டாக வேண்டும். இன்று தண்ணீருக்குப் பஞ்சம். பொருளாதார
நஷ்டம். அரசின் ஏகப்பட்ட வரிவிதிப்புகள் இவையனைத்தும் சேர்ந்து மக்களை ஒரு பெரும் பொருளாதார
நெருக்கடியில் சிக்க வைத்துள்ளது. இப்பொழுது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியிலிருந்து
வெளியேறுவதற்கு சிக்கனத்தை மாபெரும் ஆயுதமாக எடுத்துக் கொண்டாக வேண்டிய கட்டாயத்தில்
மக்கள் இருக்கின்றனர்.
வலீமா என்பது....
திருமண விருந்தில் வலீமா விருந்து தான் சுன்னத்தான விருந்தாகும். அந்த விருந்தைக்கூட
நபி (ஸல்) அவர்கள் மிகவும் எளிமையாகவே நடத்தியிருக்கிறார்கள். சில சமயம் பயணத்தில்
இருக்கும் போது தோழர்களிடம் இருக்கும் உணவுப் பொருட்களை ஒன்று சேர்த்து அதை எல்லாரும்
சேர்ந்து சாப்பிடுவார்கள். அதுவே கூட வலீமாக விருந்தாகி விடும். ஆயிஷா (ரலி) அவர்களை
நபி (ஸல்) அவர்கள் நிகாஹ் செய்த போது பால் தான் வலீமாவுடைய இடத்தில் இருந்தது. என்பதும்
சரித்திரத்தில் காணக்கிடைக்கிறது.
ஜைனப் (ரலி) அவர்களை நபி (ஸல்) அவாகள் நிகாஹ் செய்யும் போது ரொட்டியும் இறைச்சியுமாக
வலீமா விருந்து வைத்தார்கள். நபியவர்கள் வலீமாவிலேயே இது தான் கூடுதலான விருந்து என்ற
செய்தியும் சரித்திரத்தில் காணக்கிடைக்கிறது. அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள்
திருமணம் செய்யும் போது ஒரு ஆட்டை அறுத்தாவது வலீமா விருந்து வையுங்கள், என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். எனவே வலீமா விருந்து என்பது
நாம் நினைப்பது போன்று ஆயிரக்கணக்கான நபர்களை அழைத்து விருந்து கொடுக்க வேண்டுமென்று
கிடையாது. நல்ல வசதியுள்ளவர்கள். பெருமை, பகட்டு ஆடம்பரம்
இல்லாமல் நல்ல எண்ணத்தில் ஏழைகள், வறியவர்கள் உட்பட அதிகமானோருக்கு
விருந்து கொடுத்தால் தவறு இல்லை தான். ஆனால், இன்று நடக்கும்
எல்லா விருந்துகளும் அப்படித்தான் நடக்கிறது, என்று சொல்லிவிட
முடியாது.
பெண் வீட்டார் விருந்து?
நாம் மேலே குறிப்பிட்ட வலீமா விருந்து என்பது மாப்பிள்ளை வீட்டார் வைக்க வேண்டிய
விருந்தாகும். பெண்வீட்டார் விருந்து வைப்பது சுன்னத்தோ வாஜிபோ கிடையாது. ஆனால், இன்றைய நிலையைப் பார்த்தால் பெண்வீட்டார் தான் அதிகமான விருந்து
வைககம் நிலைக்கு ஆளாகிறார்கள். திருமணத்திற்கு
முன்பும் திருமணத்தின் போதும் மட்டுமல்ல. திருமணத்திற்குப் பிறகும் குழந்தை பெறும்
காலத்திலும் வகை வகையான பெயர்களில் விருந்து வகைகளை ஏற்பாடு செய்யும் நிர்பந்தம் பெண்வீட்டாருக்கு
உண்டு.
ஏழாம் நாள் சடங்கு
குழந்தை பிறந்து ஏழாம் நாள் செய்ய வேண்டிய சுன்னத்தான கரியங்கள் நிறைய உண்டு. ஆனால், அவற்றைச் செய்வது மிகவும் குறைவு. அதே சமயம் ஒவ்வொரு ஊரிலும்
அவரவர்களுடைய ஊர் வழக்கின் படி ஏதாவது சடங்குகளைச் செய்வார்கள். பிற்ந்த ஏழாம் நாள்
தலை முடி எடுக்க வேண்டும். பெயர் வைக்க வேண்டும். அகீகா கொடுக்க வேண்டும். முடிந்தால்
கத்னாவும் செய்து விடலாம். ஆனால், இந்த காரியங்கள் யாருடைய
நினைவிலும் வராது. சுன்த்தான நடைமுறைகளை காற்றில் பறக்க விட்டுவிட்டு நாம் பழகிவிட்ட
சடங்குகளும் விருந்துகளும் தான் தடபுடலாக நடந்து கொண்டிருக்கும். அந்தச் செலவுக்கும்
பெண்வீட்டார் தான் பொறுப்பாக வேண்டும்.
அகீகாவுடைய செலவு உட்பட குழந்தையின் எல்லாச் செலவுகளுக்கும் குழந்தையின் தந்தை
தான் பொறுப்பாக வேண்டும், என்பதை சொல்வோரும் இல்லை.
கேட்போரும் இல்லை. அதற்கான விழிப்புணர்வு மிகமிகக் குறைவு என்றே சொல்ல வேண்டும். யாராவது
சொன்னால் கூட அதையும் தவறான கண்ணோட்டத்தில் தான் பார்க்கின்றனர். இதைச் சொல்பவர்களுக்கு
ஏதோ உள்நோக்கம் இருக்குமோ என்று சிந்திக்க ஆரம்பித்துவிடுவார்கள். நாம் ஏற்றுக் கொண்டிருக்கிற
இஸ்லாத்தின் கலாச்சார நடைமுறைகள் என்னவென்பதை அறிய முற்படுவதில்லை. மார்க்க நடைமுறைகள் நடத்தப்படாவிட்டாலும் பரவாயில்லை.
தங்களுடைய சடங்கு சம்பிரதாயங்களுக்கு எந்தப் பங்கமும் வந்து விடாமல் பார்த்துக் கொள்கின்றனர்.
குமர் காரியத்திற்கு வசூல்!?
பல சமயங்களில் குமர் காரியத்திற்காக வசூல் செய்வதற்காக வரிசையில் நிற்பவர்களைப் பார்த்திருப்போம். நம்முடைய சமுதாயப் பிரமுகர்களும்
இவர் குமர் காரியத்திற்காக வந்திருக்கிறார். தாராளமாக உதவி செய்யுங்கள், என்று பகிரங்க அறிவிப்பும் செய்வார்கள். ஆனால் மார்க்க நடைமுறைப்படி
குமர் காரியத்திற்காக அப்படியென்ன பெரிதாக வசூல் செய்ய வேண்டியிருககிறது? என்பதை யாரும் யோசிப்பதில்லை. ஒரு பெண் பெண்ணாக இருக்கிறாள், என்பதைத் தவிர திருமணத்திற்கு அவளிடம் வேறென்ன தகுதி தேவை இருக்கிறது?
அடுக்கடுக்காக நகை போடுவதும் சீர்வரிசை செய்வதும் வரதட்சணை கொடுப்பதும் வகைவகையான
விருந்து வைப்பதும் மார்க்கம் கட்டாயமாக்காத அனுமதிக்காத அனுஷ்டானங்கள் இல்லையா? குமர் காரியத்திற்கு உதவி செய்யுமாறு அறிவிப்பு செய்யும் நாம்
அப்படியொரு வசூலே கிடையாது, என்பதை உணர்த்தி சமூகத்தின்
இந்தப் பொருளாதார அனாச்சாரங்களை தடுப்பதற்காக ஒரு அடியாவது நாம் முன்னெடுத்து வைத்திருக்கிறோமா? என்பதை யோசிக்க வேண்டும். குமர் காரியத்திற்காக வசூல் என்கிற
நிலை சமூகத்தில் நாமாக ஏற்படுத்தி வைத்திருக்கும் கேவலமான கலாச்சாரம், என்பதை உணர்ந்தாக வேண்டும்.
குமரன் காரியத்திற்கான வசூல்
திருமணச் செலவுக்கான எல்லாப் பொறுப்பும் மணமகனுக்குத் தான் இருக்கிறது. அவனுக்கு
வசதி இல்லையானால் சம்பாதிக்க வேண்டும். தேவைப்பட்டால் யாரிடமாவது உதவி பெற்றுக்கொள்ளலாம்.
திருமணத்திற்கு வசூல் என்றால் அது குமர் காரியத்திற்காக இருக்கக் கூடாது. தேவைப்பட்டால்
அது குமரனுக்கு - மாப்பிள்ளைக்கான திருமணச் செலவுக்கான வசூலாக இருக்லாம். எங்காவது
மாப்பிள்ளை தன்திருமணச் செலலவுக்கு வசூல் செய்வதைப் பார்த்திருப்பீர்களா? அதற்காக நான் வசூல் செய்ய வேண்டுமென்று சொல்ல வரவில்லை. வேறு
வழி இல்லையென்றால் சமுதாயத்தின் உதவியை ஒரு மணமகன் - மாப்பிள்ளை நாடுவது தவறில்லை.
நபி (ஸல்) அவர்களின் காலத்தில் யாராவது ஆண்கள், நான் திருமணம் முடிக்கப்
போகிறேன், என்றால் நீங்கள் என்ன வைத்திருக்கிறீர்கள், என்று கேட்பது தான் நடைமுறை. ஏனெனில், அவர்தான் மஹர் கொடுக்க வேண்டும். வலீமா விருந்து வைக்க வேண்டும்.
சில சமயம் நபித்தோழர்களில் சிலர் திருமணம் செய்வதற்கான வசதி இல்லை, என்று கூறிய போது நபி (ஸல்) அவர்கள் அவருடைய திருமணச்செலவுக்கான
பொருளாதாரத் தேவையை நபித்தோழர்களிடம் வசூல் செய்து கொடுத்த நிகழ்வையும் சரித்திரத்தில்
காண முடியும். ஆனால், இது கேட்பதற்கு ஆச்சரியமாக
இருக்கும். உண்மை அது தான்.
ஒரு தடவை நபி(ஸல்) அவர்கள் ரபீஆ (ரலி) அவ்களிடம் திருமணம் முடித்துக் கொள்ளலாமே
என்று கூறினார்கள். அதற்கவர்கள் பல தடவை மறுத்துவிட்டு கடைசியாக, அல்லாஹ்வின் தூதர் அவர்களே தாங்கள் உத்தரவிட்டால் செய்கிறேன், என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்களும் இன்ன குடும்பத்தாரிடம்
சென்று நான் சொன்னதாகச் சொல்லி பெண் கேளுங்கள், என்று கூறி அனுப்பினார்கள்.
ரபீஆ (ரலி) அவர்களும் சென்று கேட்டார்கள். அந்தக் குடும்பத்தினர் நபி (ஸல்) அவர்கள்
அனுப்பி வைத்த தூதரை வரவேற்று திருமணம் முடித்து வைத்தார்கள்.
எனினும் ரபீஆ (ரலி) அவர்கள் கவலை தோய்ந்த முகத்துடன் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார்கள்.
நபியவர்கள் காரணம் கேட்டதற்கு, அல்லாஹ்வின் தூதர் அவர்களே, என்னிடம் எந்த ஆதாரமும் கேட்காமல் நான் சொல்வதை அப்படியே நம்பி
எனக்கு திருமணம் முடித்து வைத்துவிட்டார்கள். ஆனால், எனக்கு மஹர் கொடுப்பதற்கான
எந்த வசதியும் இல்லையே, என்று வேதனைப் பட்டார்கள்.
உடனே நபி (ஸல்) அவர்கள் அவருடைய கோத்திரத்தைச் சார்ந்தவர்களிடம், இவருக்கு மஹர் கொடுப்பதற்காக பேரீத்தம்பழக் கொட்டை அளவுக்கு
தங்கத்தைச் சேர்த்து (வசூல் செய்து) வாருங்கள், என்று கூறினார்கள்.
அவ்வாறே அவர்கள் மஹரை சேர்த்துக் கொண்டு வந்தார்கள். ரபீஆ (ரலி) அவர்களும் கொண்டு போய்
கொடுத்தார்கள். பெண்வீட்டார், இதுகூட மிக அதிகம் தான்
என்று கூறி பெருந்தன்மையுடன் ஏற்றுக் கொண்டார்கள். (இன்று அந்த பெருந்தன்மை மாப்பிள்ளை
வீட்டாரிடம் கூட இருப்பதில்லை)
பிறகும் ரபீஆ (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் கவலை தோய்ந்த முகத்துடன் வந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் காரணம் கேட்ட போது பெண்வீட்டார்
மிகவும் மகிழ்ச்சியாகவும் கண்ணியத்துடனும் நடந்து கொண்டனர். நான் கொடுத்த குறைந்த மஹரையும்
பெருந்தன்மையுடன் ஏற்றுக் கொண்டனர். எனினும், எனக்கு வலீமா விருந்து
வைப்பதற்கான வசதி இல்லையே, என்று வருந்தினார்கள். உடனே
நபி (ஸல்) அவர்கள் அவருடைய அஸ்லம் கோத்திரத்தாரிடம் வலீமாவுக்காக (வசூல் செய்து) ஒரு
ஆட்டை கொண்டு வருமாறு உத்தரவிட்டார்கள். அவர்களும் அவ்வாறே செய்தார்கள். (சரித்திரம்
இதைவிடவும் நீண்டது. இங்கே சுருக்கம் மட்டுமே கூறப்பட்டுள்ளது.) (முஸ்னத் அஹ்மத் -16627)
இங்கே ஒரு ஆணுக்காக - மணமகனுக்காக (குமர் காரியத்திற்க அல்ல) குமரனுக்காக வசூல்
செய்யப்பட்டிருக்கிறது. இதுதான் எதார்த்தமானதும் கூட. எனினும், நாம் எல்லாவற்றையுமே தலைகீழாக்கி விட்டோம். மார்க்க நடைமுறைகளை
மறந்து விட்டோம். பொருளாதார ரீதியாக பெரிய நஷ்டத்தைச் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். இந்நாட்டில் அரசுக்கு சார்பானவர்களின் மூலம் இந்த
சமுதாயம் பெரும் வேதனையையும் நஷ்டங்களையும் சந்தித்துக் கொண்டிருக்கிறது. இனிமேலும்
நாம் விழித்துக் கொள்ள வில்லையானால் விளைவு எப்படி இருக்குமென்று தெரியாது. அல்லாஹ்
பாதுகாப்பானாக!
யூசுபிய்யயா ராஷித் - செப்டம்பர் 2017
No comments:
Post a Comment