இன்று சமுதாயத்தில் கவனம் செலுத்தப்பட வேண்டிய நிறைய பிரச்சினைகள் உள்ளன. ஒரு பக்கம் இந்திய முஸ்லிம்கள் அரசியல் ரீதியாக சந்திக்கும் பல பிரச்சினைகள் அணிவகுக்கும் போது மறுபக்கம் சமூக ரீதியாகவும் பல பிரச்சினைகள் புரையோடிக் கிடக்கின்றன.
அரசியல் ரீதியான பிரச்சினைகள், அதிகார வர்க்கத்தினர் மூலம் முஸ்லிம்களுக்கு எதிரான வாழ்வுரிமைப் பிரச்சனை முதற்கொண்டு மதவுரிமைப் பிரச்சினை வரை அனைத்துப் பிரச்சினைகளும் நமக்கு வெளியே இருந்து தோன்றுகின்றன.
ஆனால், நம்முடைய சமூகப் பிரச்சினைகள், மார்க்கத்திற்கு முரணான பல நடைமுறைகள் முஸ்லிம்களிடம் இருந்து வருவது நமக்குள்ளிருந்தே தோன்றுகின்றன. நீண்ட காலமாக தலைமுறை தலைமுறையாக இஸ்லாத்தில் இருக்கும் சமூகத்தால் ஏன் அவற்றை மாற்றிக் கொள்ள முடியவில்லை, என்பது தான் விடை காணப்பட வேண்டிய கேள்வி.
கருத்து வேறுபாடுள்ள பிரச்சினைகளை ஒருபக்கம் ஒதுக்கி வைத்துவிட்டாலும் குர்ஆனிலும் ஹதீஸிலும் தெள்ளத் தெளிவாக சொல்லப் பட்டுள்ள சட்டங்களுக்கும் உத்தரவுகளுக்கும் மாற்றமான நடைமுறைகள் பகிரங்கமாக சமூகத்தில் உலா வந்து கொண்டிருப்பதும் அதை எந்நிலையிலும் மாற்றிக் கொள்ள முடியாது, என்ற மனோநிலையை உருவாக்கி வைத்திருப்பதும் தான் ஏனென்று தெரியவில்லை.
வணக்கவியல்
தொழுகை தொடர்பான முழுமையான அறிவு கூட இல்லாமலேயே காலத்தைக் கடத்திக் கொண்டிருப்பவர்கள் தங்களுடைய பொருளாதாரத்திற்கான அறிவைத் தேடுவதற்கு பல வருடங்கள் செலவு செய்தவர்கள் அருளாதாரத்தைத் தேடுவதற்காக தொழுகை பற்றித் தெரிவதற்கும் மார்க்கத்தின் கடமைகள் பற்றித் தெரிவதற்கும் முறையான திட்டமிடல் ஏதாவது உண்டா? என்பதை தேடித்தான் பார்க்க வேண்டும். கடமையான குளிப்பின் சரியான முறை கூட அறியாமலேயே வருடங்கள் பல கடந்து விடுவதை எப்படித் தான் ஜீரணிக்க முடிகிறது? என்பது புரியவில்லை.
குடும்பவியல்
கணவனும் மனைவியும் பல வருடம் படித்த பட்டதாரிகளாக இருந்தும் குடும்ப வாழ்க்கையை இருவரும் எப்படி முன்னெடுத்துச் செல்ல வேண்டும்? என்பது பற்றி படிப்பதற்கு இன்னும் எல்.கே.ஜி யில் கூட அட்மிஷன் போடவில்லை, என்பது எவ்வளவு வேதனையான வேடிக்கை. அதையும் தாண்டி அந்த பட்டதாரிகளின் பட்டங்களே வாழ்க்கை வட்டங்களை வெட்டிவிட்டு (தலாக்கில்) பிரிந்து விடுகிற பரிதாப நிலைக்கு எப்படித் தான் நாம் முடிவு கட்டப்போகிறோம்?
திருமணங்களுக்காக செய்யப்படக் கூடிய ஆடம்பரங்களும் பொருளாதாரத் தகுதி விளம்பரங்களும் இந்த சமூகத்திலிருந்து ஒழிக்கப்பட வேண்டுமென்பதை யார் தான் மறுக்கப் போகிறார்கள். ஆனால், தடுத்து நிறுத்தத் தான் முடியவில்லை. இதற்கான மறுமை விசாரணையில் நம்மைத் தற்காத்துக் கொள்வாக வாதாடுவதற்கு என்ன தயாரிப்புகள் தான் நம்மிடம் இருக்கிறது?
பொருளியல்
மதரஸாக்களில் சிரமப்பட்டு பயில்வதும் பயிற்றுவிப்பதும் வியாபாரச் சட்டங்களும் வாரிசுரிமைச் சட்டங்களும் தான். ஆனால், சமூகமோ பொருளாதாரத்தை மார்க்கத்தை விட்டும் தனிமைப் படுத்தித் தான் பார்க்கிறது. வாரிசுரிமை பற்றி கேட்கவே தேவையில்லை. அவரவர் வழக்கப்படி வாரிசு சொத்துக்களை பிரித்துக் கொண்டுவிட்டு அப்படிச் செய்வதுதான் முறை என்று வாதிடுபவர்கள் பலர். பல சமயம் சொத்துக்களை பிரிக்காமல் நீண்ட காலம் அப்படியே விட்டுவிடுகின்றனர். அதனால், பிற்காலத்தில் வரும் வாரிசுகளுக்கு கிடைக்கும் பாகங்கள் ஹலாலா? ஹராமா? என்பதை அறிவதில் கூட பெரும் சிரமங்களை ஏற்படுத்தி விடுகிறது.
சமூகவியல்
சமுதாயத்தில் ஏழ்மையும் வறுமையும் பசியும் பட்டினியும் தாண்டவமாடும் நிலை ஒருபகக்கம். தீராத வியாதிகளில் சிக்கிக் கொண்டு எந்தப் பொருளாதார வசதியும் இல்லாமல் தத்தளிக்கும் நிலை மறுபக்கம். ஆனால், தொடர்படியாக பல ஹஜ், உம்ராக்களை செய்வதை மட்டுமே மார்க்கமாகக் கருதுவது மட்டுமல்ல, அது பற்றி ஏதாவது பேசுபவர்களைக் கூட மாபெரும் வழிகேடனாகச் சித்தரிப்பதும் தான் சிந்திக்க வேண்டிய சோதனை.
ஜகாத்தை முறைப்படுத்தி நேர்மையாகப் பங்கீடு செய்யப்பட்டால் பொருளாதார ரீதியாக மாபெரும் சவாலைச் சாதித்து விடமுடியும், ஆனால், இன்று பைத்துல்மால் என்ற பெயரில் மார்க்கத்தின் விதிமுறைகளையே தகாத்தெறியப் படுவதைப் பார்த்தால் யாரும் வசூல் செய்ய வேண்டாம், ஜகாத் என்ற கடமை நிறைவேறினால் போதும், என்று கெஞ்ச வேண்டிய நிலைதான் உள்ளது.
ஒழுக்கவியல்
வாலிபர்களின் பேச்சுக் கலாச்சாராம் எவ்வளவு மோசமாகிவிட்டது? என்பது நாம் அறிந்த ஒன்று. வாலிபர்கள் என்ன, பத்து வயதுப் பையனுடைய நாவிலிருந்தும் கூட மிக மோசமான, அசிங்கமான வார்த்தைகள் வெளிப்படுவதைப் பார்க்கிறோம். மொபைல் தவிர்க்க முடியாததாக இருந்தாலும இளைய சமுதாயத்திடம் எவ்வளவு மோசமான கலாச்சாரத்தை வளர்த்து விட்டிருக்கிறது?, என்பதை யார் தான் மறுக்க முடியும்!
இன்று மனித வாழ்க்கையில் மிகப்பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது, என்பதை யாரும் மறுக்க முடியாது. மின்சாரம், தொலைபேசி, அலைபேசி, இணையம் என அடுக்கிக் கொண்டே போகலாம். ஒரு காலத்தில் இவை இல்லாமலும் வாழ்க்கை கழிந்து கொண்டு தான் இருந்தது. ஆனால், மின்சாரம், தொலைபேசி, இணையம், அலைபேசி இல்லாதகாலத்தில்ஒருவிதமானமனஅமைதியுடனும், நல்லொழுக்கத்துடனும் நம் முன்னோர்கள் வயதில் முதிர்ச்சியடைந்த பருவத்தைப் போல் குழந்தைப் பருவத்திலும் வாலிபப் பருவத்திலும் வாழ்ந்து மறைந்தனர்.
ஆனால், இன்று சகல வசதிகளும் இருந்தும் மனநிம்மதியும் மனமகிழ்ச்சியும் தான் எந்த விலை கொடுத்தாலும் கிடைப்பதில்லை. முப்பது, நாற்பது வருடங்களுக்கு முன்பு இருந்த எளிமையான இனிமையான விளையாட்டுக்கள் இன்று எங்கும் பார்க்க முடியாது. இணையமும், அலைபேசியும் இணைந்து இன்றைய இளைய சமுதாயத்தை தம் ஆளுமையால் அடிமைப்படுத்தி வைத்திருக்கின்றன, என்பது மட்டும் உண்மை.
புளூவேல்விளையாட்டு
இந்த இணையம், இளைய தலைமுறையின் சிந்தனையை மட்டும் சிதைக்கவில்லை. வருங்கால சமுதாயத்தின் உயிரையே உறிஞ்சிக் கொண்டிருப்பது தான் வேதனையின் உச்சம். ரஷ்யாவிலிருந்து கொண்டு இணையத்தில் புகுத்தப்பட்ட புளூவேல் என்றொரு விளையாட்டை இணையத்திலிருந்து இறக்குமதி செய்து உலக நாடுகளுக்குள் ஊடுருவிக் கொண்டிருக்கும் போது இந்தியாவையும் தன்னுடன் இணைத்துக் கொண்டது என்பது மட்டுமல்ல, தமிழகத்தில் தலைகாட்டி ஒரு கல்லூரி மாணவனுடைய உயிரை பலிவாங்கியது, என்பது வேதனையான செய்தி.
விளையாட்டாக ஆரம்பித்து நகர்ந்து செல்லும் ஒவ்வொரு நகர்விலும் தன்னை இழந்து அதற்கு அடிமையாகி திமிங்கலத்தை விட்டு திமிர முடியாமல் அது கைகாட்டும் திசைக்கெல்லாம் கைகட்டி , வாய் கட்டி தன்னை முழுமையாக மூழ்கடித்து இறுதியில் தன்னிடம் இருந்த மூச்சையும் மூட்டை கட்டிவிடுகின்றனர். நம்முடைய பிள்ளைகளை முடிந்த அளவிற்கு அலைபேசியின் பயன்பாட்டை விட்டும் விலக்கி வைக்க வேண்டும். நல்ல செய்திகள் ஆயிரம் இருப்பினும், கெட்டுப் போகக்கூடிய வழிகள் இணையத்தில் கொட்டிக் கிடக்கிறது.
மார்க்கவியல்
இன்றும் மதரஸாக்களில் போதிய அளவுக்கு மாணவர்களின் எண்ணிக்கை இல்லை, என்பது தான் நிதர்சனம். அதே சமயம் கடந்த பத்து வருடங்களுக்கு முன்பிருந்த நிலை மெதுமெதுவாக மாற்றத்தை நோக்கிச் செல்கிறது, என்பதையும் மறுக்க முடியாது. இருக்க வேண்டிய எண்ணிக்கை இல்லையென்றாலும் ஒரு சிறு மாற்றத்தைக் கண்டிப்பாக பார்க்க முடிகிறது.
அதற்கு தமிழகத்தில் பரவலாகவும வெற்றிகரமாகவும் நடந்து கொண்டிருக்கும் மக்தபுகளும் ஒரு காரணம், என்றால் அது மிகையாகாது. மக்தப் பாடசாலைகளின் மூலம் சமூகத்தில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வரமுடியும், என்பது வரலாற்று உண்மை மட்டுல்ல, நடப்பு உண்மையும் கூட. சிறு வயதிலிருந்தே இஸ்லாமிய சிந்தனையை உறுதியாக மனதில் பதிய வைப்பதற்கு மக்தபுகள் தான் பயன்படும், என்பதை யாரும் மறுக்க முடியாது.
எனவே, நம்முடைய பிள்ளைகளுக்கு பள்ளிக் கல்வியை மட்டுமே இருபத்தினான்கு மணி நேரமும் போதித்துக் கொண்டிருக்காமல் பிறந்தவுடன் இறைநம்பிக்கை தொடர்பான மார்க்க சிந்தனையை பதியவைப்பதற்கான போதனைகளைத் தரும் மார்க்கத்தின் கல்வியையும் கட்டாயக்கல்வியாக ஆக்கி எல்.கே.ஜி யிலிருந்தே அதற்கும் நேரம் ஒதுக் வேண்டும்.
பத்தாம் வகுப்பு மதிப்பெண் எவ்வளவு? என்று ஆர்வமாக கேட்கும் சமுதாயத்தில் பத்தாம் வகுப்பு மாணவனுக்கு குர்ஆன் ஓதத்தெரியாதே, என்பதை நினைத்து சிறிதும் வருத்தம் வராதது, இந்த சமூகத்தின் மாபெரும் வெட்கக்கேடு இல்லையா?
No comments:
Post a Comment