இன்று ஜனநாயகத்திற்கு ஆபத்து என்று நீதித் துறையிலிருந்து அபாய ஒலிகள் எழுப்படும் நிலையில் நிர்வகத்துறை முற்றிலுமாக தோற்றுப் போய்விட்டதையே மக்கள் உணர்கிறார்கள். ஜனநாயகம் என்ற பெயரில் சாவாதிகாரம் தான் நடக்கிறதோ என்கிற அச்சம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
இஸ்லாத்தின் இணையற்ற இரண்டாம் ஜனாதிபதி உமர் (ரலி) அவர்களின் ஆட்சி திறந்த புத்தகமாக இருந்தது. இறையாட்சியின் மூலம் மட்டுமே ஒளிவு மறைவற்ற ஆட்சி தரமுடியும். என்பதை அவர்கள் நிரூபித்துக் காட்டினார்கள்.
உமர் (ரலி) அவர்கள் சர்வாதிகார ஆட்சி நடத்தவில்லை. நாட்டு நிர்வாகத்தில் நல்லோர்களிடம் ஆலோசனை செய்வார்கள். ஆலோசனையின்றி அரசாங்கமில்லை, என்பது அவர்களின் பொன்மொழி. ஆனால், சட்டமியற்றும் சர்வ அதிகாரமும் ஏக இறைவனுக்க மட்டுமே, என்பது இஸ்லாமிய அரசியில் சாசனத்தின் அடிப்படை விதி.
நிர்வாகத்தின் முக்கிய முடிவை எடுப்பதற்காக உமர் (ரலி) அவர்கள் ஒரு ஆலோசனைக் குழுவை நியமித்திருந்தார்கள். உஸ்மான் (ரலி) அலீ (ரலி) அப்துர் ரஹமானிப்னு அவ்ஃப் (ரலி) மஆது பின் ஜபல் (ரலி) உபய் பின் கஃப் (ரலி) ஜைதுபின் ஸாபித் (ரலி) போன்றோர். அக்குழுவின் குறிப்பிடத்தக்க உறுப்பினார்கள். இது தவிர மற்றொரு உயர் மட்டக்குழுவையும் அமைத்திருந்தார்கள்.
குர்ஆன், நபிமொழியிலிருந்து ஆய்வு செய்து இறுதி முடிவு எடுக்க வேண்டிய முழுக்க முழுக்க மார்க்க பிரச்சினையாக இருந்தால் மார்க்கவியலில் தனித்துவம் பெற்ற எல்லா நபித் தோழர்களையும் அழைத்து ஆலோசனை செய்து முடிவெடுப்பார்கள்.
உமர் (ரலி) ஆட்சி காலத்தில் இராக் உட்பட பல நாடுகள் வெற்றி கொள்ளப்பட்டன. பொதுவாக போரில் வெற்றி கிடைக்கும் போது கைதிகள் இராணுவ வீரர்களுக்கு அடிமையாக ஆக்கப்பட்டு அவர்களுடைய வாழ்வாதாரத்திற்கான ஏற்பாடு செய்யப்படும். மற்ற கனீமத் பொருட்கள் விதிகளுக்குட்பட்டு போர் வீரர்களுக்கு பங்கிட்டுக் கொடுக்கப்படும். பாரசீக நாடுகள் வெற்றிகொள்ளப்படும் போது ஏராளமான விவசாய நிலங்கள் அரசாங்கத்தின் முன் வந்தன. அத்துடன் நாட்டு மக்களை கணக்கெடுத்துப் பார்க்கும் போது ஒவ்வெரு முஸ்லிமுக்கும மூன்று நபர்கள் என்ற விகிதத்தில் இருந்தனர்.
எனவே, உமர் (ரலி) அவர்களுக்கு இந்த நிலங்களை குடிமக்களிடமே கொடுத்து அவர்களையே விவசாயம் செய்ய அனுமதித்து அதற்கான வரியை மட்டும் அரசு வசூலித்துக் கொண்டால் என்ன? என்ற சிந்தனை ஏற்பட்டது. அந்த வரிப்பணம் பைத்துல் மாலில் சேர்க்கப்படும் போது படை வீரர்களுக்கு மட்டுமல்லாது, எல்லா மக்களுக்கும் பயன் கிடைக்குமே! என்று உமர் (ரலி) அவர்கள் யோசித்தார்கள்.
எனினும், இது மார்க்கவியல் தொடர்பான ஒரு பிரச்சினை. எனவே, தன்னுடைய கருத்தை மக்களிடம் திணிக்க விரும்பவில்லை. நபித்தோழர்களை வரவழைத்து ஆலோசனை செய்ய முடிவு செய்தார்கள். அதற்காக நபித்தோழர்களின் ஓர் ஆய்வரங்கத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
அவ்வரங்கத்தில் விவாதத்தைத் தொடங்கி வைத்த உமர் (ரலி) அவர்கள் என்னுடைய மனவிருப்பத்தை நீங்கள் பின்பற்றியே ஆக வேண்டும், என்று நான் நினைக்கவில்லை. நானும் உங்களில் ஒருவன் தான். அமானிதமாக நான் சுமந்துள்ள உங்களுடைய இந்த ஆட்சிப் பொறுப்பில் நீங்களும் கூட்டாக வேண்டுமென்றே விரும்புகிறேன், என்று கூறி உமர் (ரலி) அவர்கள் தங்களுடைய துவக்க உரையின் மூலம் விவாதத்தை ஆரம்பித்து வைத்தார்கள்.
பல நாட்களாக விவாதம் நடந்தது. அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) பிலால் (ரலி) அவர்கள் போன்ற நபித்தோழர்கள் அந்நிலங்களை படைவீரர்களிடமே ஒப்படைக்க வேண்டுமென்ற கருத்தில் உறுதியாக இருந்தனர். பிலால் (ரலி) அவர்களுடைய விவாதத்தைப் பார்த்துவிட்டு ஒரு நேரத்தில் கலீஃபா உமர் (ரலி) அவர்கள் யாஅல்லாஹ் பிலாலிடமிருந்து எனக்கு நீயே வெற்றியைக் கொடு, என்று துஆ செய்தார்கள்.
நான் இந்த நிலங்களை படைவீரர்களிடம் ஒப்படைத்து விட்டால் பிற்காலத்தில் எதிரிகளை எதிர் கொள்வதற்கு இராணுவத்தை நான் எவ்வாறு தயார் செய்ய முடியும்? அதற்கான நிதிக்கு என்ன ஏற்பாடு செய்ய முடியும்? வெளித்தாக்குதலை விட்டும் நாட்டைப் பாதுகாப்புச் செலவுகளுக்கான நிதியை எப்படி திரட்ட முடியும்? என்று கேள்வி எழுப்பினார்கள். அலி (ரலி) தல்ஹா (ரலி) உஸ்மான் (ரலி) போன்ற நபித்தோழர்கள் உமர் (ரலி) அவர்களுடைய கருத்தை உறுதிப்படுத்தினார்கள். பல நாட்கள் விவாதம் நடந்தது.
இறுதியாக முஹாஜிர்கள் அன்சாரிகள் கலந்து கொண்ட பொதுக்குழுவில் உமர் (ரலி) அவர்கள் இறுதி உரை ஆற்றினார்கள். அதில் போர் நடவடிக்கையில் கிடைத்த கனீமத் பொருட்களில் நம்முடைய காலத்திற்குப் பின்னர் வரும் முஸ்லிம்களுக்கும் பங்கு இருக்கிறது, என்று தெளிவாக உணர்த்தும் அல்ஹஷ்ர் அத்தியாத்தின் வசனத்தை ஓதிக் காட்டினார்கள். இந்த வசனத்தைக் கேட்டவுடன் அனைவரும் நீங்கள் சொல்வது தான் சரி, என்று வரவேற்று அவர்களின் முடிவை ஏகோபித்த முடிவாக ஏற்றுக் கொண்டனர்.
உமர் (ரலி) அவர்கள் தங்களுடைய கையில் முழுமையான அதிகாரம் இருந்தும் கூட தங்களுடைய கருத்தை மக்களிடம் வலுக்கட்டாயமாக திணிக்க விரும்பவில்லை. அதற்காக வெளிப்படை விவாதம் நடத்தினார்கள்.
உமர் (ரலி) அவர்களைப் பார்க்கும் போது மரியாதை கலந்த பயம் இருந்தாலும் விவாத அரங்கு என்று வந்து விட்டால் குடிமக்கள் தங்களுடைய கருத்தை எடுத்து வைப்பதில் முழு தைரியம் இருக்கும் நிலையில் தான் உமர் (ரலி) அவர்கள் ஆட்சி செய்தார்கள். எனவே தான் பிலால் (ரலி) அவர்கள் தங்களுடைய கருத்தியில் உறுதியாக இருந்தார்கள். அதே நேரம் அவர்களின் கருத்தை மோதல் போக்குடனோ அல்லது சர்வாதிகாரத் தன்மையுடனோ எதிர்க்காமல் அல்லாஹ்விடம் துஆ செய்தார்கள்.
நாட்டின் கடைக் குடிமகனுக்கும் ஜனாதிபதியைக் கேள்வி கேட்பதற்கு உரிமை இருந்தது. ஒரு சாதாரண மனிதனும் அவர்களிடம் நேருக்கு நேராக எதிர்த்துக் கேட்ட நிகழ்ச்சிகள் அவர்களின் சரித்திரும் முழுவதும் விரவிக் கிடக்கின்றன. ஆனால், அவ்வாறு கேட்பவர்களை உண்டு இல்லை என்று பண்ணி விடுவது தான் இன்றைய அரசியலின் எதார்த்த நிகழ்வாக உள்ளது.
இதுபோன்ற அற்புதமான சரித்திர நிகழ்வுகளை தற்கால அரசாங்கத்தின் நிலைபாட்டுடன இணைத்துப் பார்க்கும் போது எந்த வகையிலும் இணைப்பைப் பெற்றுக் கொள்ள முடியவில்லை. மலைக்கும் மடுவுக்கும் மத்தியில் உள்ள வித்தியாசத்தை விட மிகப் பெரிய வேறுபாட்டையே உணரமுடிகிறது.
ஃபிரான்ஸைந் சேர்ந்த ஒரு வரலாற்றாசிரியர் இஸ்லாமிய ஆட்சியில் நேர்மையான வரிவிதிப்பு பற்றி இப்படிக் கூறுகிறார்: இஸ்லாமிய வெற்றிகளில் அவர்களின் வரிவிதிப்பு முறைக்கும் நெருங்கிய தொடர்பு இருந்தது. ரோமப் பேரரசுக்கு மக்கள் செலுத்த வேண்டியிருந்த கடுமைய வரித்தொகைள் முஸ்லிம்களின் வெற்றிக்கு பெரிதும் உதவியது. இஸ்லாமியர்களின் தாக்குதலை அரசு தான் எதிர்த்ததே தவிர குடிமக்கள் எதிர்க்கவில்லை. எகிப்திய விவசாயிகள் (யுத்தத்தில்) முஸ்லிம்களுக்கு உதவி செய்தனர். இரக்கமற்ற ரோமர்களை விட உங்களுடைய ஆட்சியை நாங்கள் வரவேற்கிறோம், என்று கூறினர்.
அரசின் பொதுநிதியத்தில் நிதிப் பற்றாக்குறை ஏற்படும் போது மட்டுமே டேக்ஸ் பற்றி பேசமுடியும். தார்த்தரியினர் தாக்குதல் தொடுத்த போது மன்னர் ஸாஹிர் பைப்ரஸ் வரிவிதிப்பு பற்றி மார்க்க அறிஞர்களிடம் ஆலோசனை நடத்தினார். இமாம் நவவீ (ரஹ்) அவர்கள் வரிவிதிப்பை அங்கீகரிப்பதற்கான தீர்ப்பில் கையெழுத்திட மறுத்துவிட்டார்கள். மன்னர் காரணம் கேட்ட போது உங்களிடம் 1000 அடிமைகள் இருக்கின்றனர். அவர்கள் தங்கத்தினால் பின்னப்பட்ட ஆடைகளை அணிகின்றனர். தவிர, 200 அடிமைப் பெண்கள் முழு நகை அலங்காரத்தோடு வலம் வருகின்றனர். அவற்றை பைத்துல்மாலில் சேர்த்த பிறகு நான் மக்களிடம் டேக்ஸ் விதிப்பதற்கு ஃபத்வா கொடுக்கிறேன், என்று கூறிவிட்டார்கள். மன்னர் கோபமுற்று இமாமவர்களை ஊரை விட்டும் வெளியேற்றினார். எனினும், இமாம் நவவீ (ரஹ்) அவர்கள் தங்களின் நிலைபாட்டை மாற்றிக் கொள்ளவில்லை.
மனாருல் ஹுதா - மார்ச் 2018
No comments:
Post a Comment