பள்ளிவாசல் என்றால் கண்டிப்பாக கடிகாரம் இல்லாமல் இருக்க முடியாது. ஒரு காரியத்தைக் குறித்த நேரத்தில் செய்து முடிக்க வேண்டுமென்ற பாடத்தை பள்ளிவாசல் போன்று எந்தத் தளமும் கற்றுத்தர முடியாது. உலகின் எந்த நிகழ்ச்சி நிரலாக இருந்தாலும் திட்டமிடப்பட்ட நேரத்தில் ஆரம்பிப்பது மிகவும் குறைவு அல்லது இல்லையென்றே சொல்ல வேண்டும்.
நிகழ்ச்சி துவங்கும், என்று அறிவிக்கப் பட்டிருக்கும் நேரத்தை விட அரை மணிநேரம் அல்லது ஒரு மணி நேரம் கூட சில சமயம் தாமதமாக ஆரம்பிக்கலாம். மிகவும் பேணுதலாக இருந்து குறித்த நேரத்தில் ஆரம்பிக்க வேண்டுமென்று பெருமுயற்சி எடுத்தாலும் ஒன்றிரண்டு நிமிடங்களாவது தாமதமாவது தவிர்க்க முடியாததாகி விடும்.
பள்ளிவாசலின் நிகழ்ச்சி நிரல்
இவற்றுக்கெல்லாம் வித்தியாசமாக வினாடி கூட தாமதமில்லாமல் துல்லியமாக குறித்த நேரத்தில் நிகழ்வை ஆரம்பிக்கப் படும் ஒரே இடம் பள்ளிவாசல் என்று சொன்னால் அது மிகையாகாது. தொழுகைக்கான இகாமத் சொல்வதற்கு குறிக்கப்பட்ட நேரத்திற்கு ஒரு நிமிடத்திற்கு முன்பாகவே முஅத்தின் டிஜிட்டல் கடிகாரத்தை கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டே இருப்பார். அந்த ஒரு நிமிடம் முடிந்தவுடன் உடனடியாக இகாமத் சொல்ல ஆரம்பித்து விடுவார்.
இதன்மூலம் பெருமிதம் கொள்வதில் தவறேதும் இருக்க முடியாது. அதே சமயம், கடிகாரம் காட்டக் கூடிய நேரம் மிகச் சரியானதா? என்பதில எப்பொழுதும் கவனம் இருக்க வேண்டும். இல்லையானால், தொழுகைக்காக சொல்லப்படும் அதான் சிலசமயம் முன்பின் ஆகிவிடும். அதன்மூலம் மக்களின் நோன்பும் கூட கேள்விக்குறியாகிவிடும்.
கடிகாரத்தின் மீது நம்பிக்கை
கடிகாரம் காட்டும் நேரத்தை வணக்க வழிபாடுகள் விஷயத்தில் அப்படியே நம்பி விடமுடியாது. என்ன தான் உயர்ரக கடிகாரமாக இருந்தாலும் தவறாகக் காட்டுவதற்கு சாத்தியம் உண்டு. எனவே தான் முஃப்தீ ஷஃபீஃ (ரஹ்) அவர்கள், கடிகாரங்களின் மீது இவ்வளவு உறுதியான நம்பிக்கை வைப்பது உயர்தரமான இறைக்கடமையை ஆபத்துக்குள்ளாக்குவதற்கு அசட்டுத் துணிச்சல் கொண்டதாகவே கருதப்படும், என்று கூறுகிறார்கள். (ஜவாஹிருல் ஃபிக்ஹ்)
அதனால் தான் தொழுகை நேரத்திற்காக கணக்கிடப்படும் கணக்குகளில் வரும் விடையை விட அதான் சொல்வதற்கு சில நிமிடங்கள் கூட்டியோ ஸஹரை முடிப்பதற்கு சில நிமிடங்கள் குறைத்தோ தான் தொழுகை நேர அட்டவணைகள் பரவலாக அச்சிடப்படும். ஏதாவது தொழுகை நேர அட்டவணை அந்த முறைப்படி அச்சடிக்கப்பட வில்லையானால் அதைத் திருத்தி அமைத்துக் கொள்வதும் அவசியமாகி விடுகிறது. பிள்ளைகளை பள்ளிக்கூடத்திற்கு அனுப்புவதற்காகவோ நாம் அலுவலகத்திற்கு செல்வதற்காகவோ வீட்டுக் கடிகாரத்தையோ சில நிமிடங்கள் அதிகப்படுத்தி வைத்துக் கொள்வதில்லையா?
முன் பின்னாக நேரம் காட்டும் கடிகாரம்
ஒரே ஊரில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களின் கடிகாரங்களும் ஒரே நேரத்தைக் காட்டுவதில்லை. சில நிமிடங்கள் முன் பின்னாகவே காட்டுகின்றன. டிஜிட்டல் கடிகாரங்கள், நாம் சரியான நேரத்தை கணக்கிட்டு வைத்தாலும் நாட்கள் செல்லச்செல்ல சில நிமிடங்கள் முன்பின்னாக காட்டிவிடுவதை நாம் பல தடவை அனுபவப் பூர்வமாக பார்த்திருக்க முடியும்.
இரண்டு மூன்று நிமிடங்கள் தானே! அதனால் என்ன ஆகிவிடப் போகிறது.? என்று சர்வ சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. இது ஒன்றும் நம் வீட்டுக் கடிகாரம் கிடையாது. நம்முடைய தொழுகை மற்றும் நோன்பு போன்ற முக்கியமான கடமையை நிறைவேற்றுவதற்கான பள்ளிவாசல் கடிகாரம்.
தாமதமாக ஓடினால்....?
கடிகாரம் இரண்டு மூன்று நிமிடங்கள் தாமதமாக ஓடினால் கூட தொழுகையின் நேரம் வந்த பின் தாமதமாக பாங்கு சொல்வதும் தாமதமாக நோன்பு திறப்பதும் ஏற்படும். இது கூட பரவாயில்லை. ஆனால், கடிகாரம் தாமதமாக ஓடுவதால், ஸஹர் முடிந்து இரண்டு மூன்று நிமிடங்களுக்குப் பிறகும் மக்கள் சாப்பிட்டுக் கொண்டிருப்பார்கள். அதிலும் குறிப்பாக சிலர் அல்ல, பலர் விடாப்பிடியாக பாங்கு சொல்லும் வரை சாப்பிட்டுக் கொண்டிருப்ர்கள்.
அவர்களுக்கு குர்ஆன், ஹதீஸுடைய ஆதாரங்களெல்லாம் கூட கிடைத்து விடும். ஆனால், நபி (ஸல்) அவர்களுடைய காலத்தில் இந்த கடிகாரத்தைப் பார்த்து பாங்கு சொல்லப்படவில்ல, என்பதை அவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். இப்படிப்பட்ட சூழலில் அந்த கடிகாரத்தின் படி பாங்கு சொல்லும் வரை சாப்பிடுவாதால் கடமையான நோன்பு பாழாகிவிடும் என்பதில் என்ன சந்தேகம்?
கூடுதலாக ஓடினால்....?
இதற்கு மாற்றமாக கடிகாரம் இரண்டு மூன்று நிமிடங்கள் கூடுதலாக ஓடினால் தொழுகையின் நேரம் வருவதற்கு முன்பே பள்ளிகளில் பாங்கு சொல்லப்பட்டு விடும். நோன்பு திறப்பதற்கான அறிவிப்பும் இரண்டு மூன்று நிமிடங்களுக்கு முன்பாக செய்யப்பட்டு விடும். அந்த சமயத்தில் நோன்பு திறந்தவர்களுக்கு அவர்களுடைய நோன்பு நிறைவேறிவிட்டது, என்பதற்கு யார் உத்தரவாதம் கொடுக்க முடியும்?
இதை நாம் வெறும் கற்பனையாகச் சொல்ல வில்லை. பல பகுதிகளில் இந்நிலையைக் கண்கூடாகவே கண்டிருக்கிறோம். ரமளான் மாதத்திலும் இதுபோன்ற கடமையான நோன்புக்கு ஆபத்து ஏற்படும் நிலை ஏற்பட்டிருக்கிறது. ஒரே ஊரில் தொழுகை நேரம் ஒரே மாதிரியாக இருந்தும் ஒன்றிரண்டு நிமிடங்கள் முன்பின்னாக பாங்கு சொல்லப்படுகிறதே, அது ஏன் என்பதை நாம் சிந்திக்க வேண்டாமா?
கடிகாரத்தை எப்படி சரி செய்வது?
இதற்கான தீர்வு தான் என்ன? கடிகாரத்தை குறைந்தது வாரத்திற்கு ஒரு முறையாவது சரி செய்ய வேண்டும். கடிகாரத்தைச் சரி செய்ய குறிப்பிட்ட மொபைல் நெட்வொர்க்கைப் பயன்படுத்துவது உண்டு. வேறு வழிகளிலும் சரி செய்யலாம். ஒரு கடிகாரத்தைப் பார்த்து இன்னொரு கடிகாரத்தைச் சரி செய்யும் நடைமுறையும் நம்மில் இருக்கிறது. ஆனால், இது சரியான வழி அல்ல. என்னுடைய கைக்கடிகாரத்தின் நேரம் துல்லியமானது, என்று கூறி இதன் படியே சரி செய்ய வேண்டுமென்று பலர் வாதம் செய்யலாம்.
எனினும், நம்முடைய நாட்டின் நேரத்தைத் துல்லியமாகக் கணக்கிடும் ஒரு முறை உள்ளது. அதன்படி சரி செய்து கொண்டால் கடிகாரத்தின் நேரம் சரியானதாக ஆகிவிடும். www.timeanddate.com/worldclock/india (Current local time in india ) என்ற தளத்திற்குச் சென்று நம்முடைய கடிகாரத்தை சரி செய்து கொண்டால் துல்லியமான நேரத்தை அறிந்து கொள்ள முடியும். இந்தத் தளத்திற்குச் சென்றால் இந்தியாவின் அன்றைய தேதி மற்றும் இந்தியாவின் திட்ட நேரத்தை டிஜிட்டல் முறையிலும் துல்லியமாகக் கொடுக்கப் பட்டிருக்கும்.
ரமளானில் மட்டுமல்ல, வருடம் முழூவதும் குறைந்தது, வாரத்திற்கு ஒரு முறையாவது எல்லா பள்ளிவாசல்களிலும் இம்முறையில் நேரத்தை சரி செய்து கொள்ள வேண்டும். அப்படி தொடர்ந்து செய்து வந்தால் கடிகாரத் தவற்றை திருத்திக் கொள்ள முடியும். நீண்ட இடைவெளிக்குப் பின் கடிகாரத்தை நம்முடைய கைக்கடிகாரத்தின் மூலம் சரி செய்யும் போது கூட தவறான ஓட்டத்தைப் புரிந்து கொள்ள முடியும்.
தவிர்க்கப் படவேண்டிய சந்தேகம்
கடிகாரத்தை வினாடி தவறாமல் சரி செய்து கொண்டால் தான் நம்முடைய தொழுகையையும் நோன்பையும் பாதுகாக்க முடியும். இதில் ஏற்படக்கூடிய சந்தேகத்தைச் சரி செய்வதை நபி (ஸல்) அவர்களின் கூற்றின் மூலமும் நடைமுறைகளின் மூலமும் அறிந்து கொள்ள முடியும். உனக்கு சந்தேகமூட்டக் கூடிய விஷயங்களை விட்டுவிட்டு சந்தேகத்தை உண்டாக்காதவற்றை எடுத்துக்கொள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஸன் பின் அலி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்: திர்மிதீ- 2442)
நபி (ஸல்) காலத்தில்....
நபி (ஸல்) அவர்கள் காலத்திலும் தொழுகை நேரத்தில் எவ்வித சந்தேகமும் ஏற்படாமல் இருப்பதற்காக பேணுதலுக்கான எல்லா ஏற்பாடுகளையும் நபியவர்கள் செய்தார்கள். ஒரு தடவை பிலால் (ரலி) அவர்கள் சுபுஹ் நேரம் வருவதற்கு முன்னால் பாங்கு சொல்லிவிட்டார். உடனடியாக நபி (ஸல்) அவர்கள், (அல்லாஹ்வின்) அடியார் தூங்கி விட்டார். (பாங்கு தவறாக சொல்லிவிட்டார்) என்று மக்களுக்கு அறிவிப்பு செய்ய வைத்தார்கள்.(திர்மிதீ)
அதன் பிறகு பாங்கு சொல்பவர்கள் விஷயத்தில் சிறிய மாற்றம் செய்தார்கள். அதாவது அதுவரை தஹஜ்ஜுத் (ஸஹர்) நேரத்தில் அப்துல்லாஹிப்னு உம்மி மக்தூம் (ரலி) அவர்களும் சுபுஹுக்கு பிலால் (ரலி) அவர்களும் பாங்கு சொல்லிக் கொண்டிருந்தார்கள். மேற்கூறப்பட்ட தவறு நடந்த பின் பணி நேரமாற்றம் செய்து இப்னு உம்மி மக்தூம் (ரலி) அவர்களை சுபுஹுக்கு பாங்கு சொல்ல உத்தரவிட்டார்கள்.
இந்த நபித்தோழருக்கு கண் பார்வை கிடையாதே!. ஃபஜ்ர் அதிகாலை வெளிச்சத்தை இவர் எப்படி பார்த்து பாங்கு சொல்வார்?, என்ற கேள்வி எழலாம். ஆனால், பார்வையில்லாத நபரை நியமித்தால் தான் இந்த தவற்றை முழுமையாக திருத்த முடியும். ஏனெனில். மக்கள் இவருக்கு சுபுஹ் நேரமாகி விட்டது. சுபுஹ் நேரமாகி விட்டது, என்று சொல்லும் வரை பாங்கு சொல்லமாட்டார். (நூல்: புகாரி- 582, பைஹகீ)
தொழுகை நேரத்தில் எந்தத் தவறும் நிகழ்ந்து விடக்கூடாது என்பதற்கு நபி (ஸல்) அவர்கள் அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள். தனி நபருடைய பார்வையில் தவறு நிகழ்வதால் உடனடியாக ஆளை மாற்றினார்கள். இப்னு உம்மி மக்தூம் (ரலி) அவர்களுக்கு பார்வை இல்லாததால் தனிநபருக்கு ஏற்படும் தவறு நிகழாது. மக்களில் பலர் அதிகாலை வெளிச்சத்தை பார்த்து சொன்ன பின்னரே அவர் பாங்கு சொல்வார்.
நேரடியாக வானத்தைப் பார்த்து பாங்கு சொல்வதிலேயே நபி (ஸல்) அவர்கள் இவ்வளவு கவனம் செலுத்தியிருக்கிறார்களென்றால் இன்று நாம் வானத்தைப் பார்ப்பதில்லை. கணக்கு போடுகிறோம். கடிகாரத்தைப் பார்க்கிறோம். முஅத்தின் என்ற ஒரு நபரின் மீது நம்பிக்கை வைக்கிறோம். இப்படிப்பட்ட சூழலில், நம்முடைய கடிகாரம் துல்லியமாக சரியான நேரத்தைக் காட்டுகிறதா? என்பதில் எவ்வளவும் கவனம் செலுத்த வேண்டியிருக்கும்? என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.
No comments:
Post a Comment