விருந்தோம்பல், மார்க்கத்தில் வலியுறுத்தப்பட்ட வரவேற்கத்தக்க அம்சம் என்பதில் சந்தேகமில்லை. ஸலாமைப் பரப்புங்கள்; (மக்களுக்கு) உணவு உண்ணக் கொடுங்கள். மக்களெல்லாம் தூங்கிக் கொண்டிருக்கும் நிலையில் இரவில் தொழுங்கள். நீங்கள் நிம்மதியுடன் சுவனத்திற்கு செல்வீர்கள், என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (திர்மிதீ - 2485)
அதே சமயம் அந்த விருந்து வைபவங்கள் மார்க்கம் அனுமதித்த முறையிலும் அல்லாஹ்வின் வரம்புக்குட்பட்டும் சரியான நோக்கத்திலும் அமைந்திருந்தால் தான் நன்மைக்குரியதாகும். இன்று மக்களிடம் விருந்து வைபவங்கள் நிறையவே நடைபெறுகின்றன. திருமணத்தின் போது மட்டுமே பல வகையான விருந்துகள் நடைபெறுகின்றன.
விருந்து என்பது உயர்தரமான நன்மைகளைப் பெற்றுத் தரவண்டுமென்ற எண்ணங்கள் எந்த அளவுக்கு இருக்கிறது, என்பதை தேடித்தான் பார்க்க வேண்டும். ஊர்ப்பழக்கம், வேறு வழியில்லாமை, நிர்பந்தம், நாம் போய் சாப்பிட்டிருக்கிறோம், போன்ற பல காரணங்கள் நம்முடைய விருந்துகளை விரிவாக்கி விடுகின்றன. கடன் கொண்டாவது செய்தாக வேண்டுமென்ற நிலையை ஏற்படுத்தி விடுகிறது. அல்லது, நான் என்னுடைய தகுதிக்குத் தக்கவாறு விருந்து உபசரிக்க வேண்டும், என்ற பெருமையையும் பகட்டையும் ஏற்படுத்திவிடுகிறது.
நல்ல நோக்கமும் நல்லவர்களுக்கு உதவ வேண்டும், என்ற இலக்கும் காணாமல் போய்விடுகிறது. நம்முடைய விருந்துகளின் மூலம் நிம்மதியாக சுவனத்தில் நுழையக் கூடியவர்களாக மாறுவதற்கான வழியைத் தேடியாக வேண்டும். திருமண நிகழ்வில் வலீமா விருந்தின் முக்கியத்துவத்தைப் பற்றி யாரும் அறியாமல் இருக்க முடியாது. வலீமா விருந்து வைப்பது மிகமுக்கியமான சுன்னதெ முஅக்கதாவாகும். நல்ல நிய்யத்தின் மூலம் விருந்தும் கூட உயர்ந்த நன்மைகளைப் பெற்றுத் தரும் வணக்கவழிபாடாக மாறிவிடுகிறது. வலீமா விருந்து தொடர்பாக ஏராளமான ஹதீஸ்கள் வந்துள்ளன.
நபிமொழிகளில் வலீமா
அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் தனக்கு திருமணமான செய்தியைக் கூறிய போது ஓர் ஆட்டின் மூலமாவது வலீமா கொடுங்கள், என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி) வலீமா விருந்து அவசியமும் சுன்னத்துமாகும், என்று கூறினார்கள். (முஃஜமுல் அவஸத் - 3948)
அலீ (ரலி) அவர்கள் ஃபாத்திமா (ரலி) அவர்களை நபி (ஸல்) அவர்களிடம் பெண் பேசிய போது நபி (ஸல்) அவர்கள் திருமணத்திற்கு வலீமா அவசியமாகும், என்று கூறினார்கள். ஸஃது (ரலி) அவர்கள் என்னிடம் ஓர் ஆடு இருக்கிறது, என்று கூறினார்கள். மற்றும் சில அன்ஸாரித் தோழர்கள் தானியங்களைக் கொண்டு வந்தனர். (நூல்: முஸ்னத் அஹ்மத் - 23085)
நபி (ஸல்) உடைய வலீமா
நபி (ஸல்) அவர்களுடைய திருமணங்களில் வலீமா விருந்தும் நடைபெறும். எனினும், ஜைனப் (ரலி) அவர்களை திருமணம் செய்யும் போதே தவிர மற்ற திருமணங்களில் பெரிய அளவில் வலீமா வைத்ததாக சரித்திரத்தில் காண முடியவில்லை.
நபி (ஸல்) அவர்கள் சில சமயம் தங்களுடைய திருமணத்தின் போது இரண்டு முத்து கோதுமை ரொட்டி மட்டுமே (ஏறத்தாழ 1.200 கி.கிராம் கோதுமை) வலீமா கொடுத்தார்கள். (புகாரி -5172) ஹாஃபிள் இபனு ஹஜர் (ரஹ்) அவர்கள் இந்த வலீமா உம்மு ஸலமாவை திருமணம் செய்யும் போது நடந்தாக இருக்கும் என்பதே பொருத்தமாக இருக்கும் என்று கூறியுள்ளார்கள். (ஃபத்ஹுல்பாரி)
நபி (ஸல்) அவர்கள் ஸஃபிய்யா (ரலி) அவர்களை திருமணம் செய்யும் போது பயணத்தில் இருந்தார்கள். வலீமா வைக்கும் நோக்கத்தில் நபி (ஸல்) அவர்கள் தங்களுடைய தோழர்களிடம் அதிகப்படியான உணவுப் பொருள் இருந்தால் கொண்டு வாருங்கள்! என்று அறிவிப்பு செய்தார்கள். சிலர் தங்களிடமிருந்த மேல்மிச்சமன பேரீத்தம்பழத்தைக் கொண்டு வந்தார்கள். சிலர் மாவைக் கொண்டு வந்தார்கள். அதுவே அந்த திருமணத்தின் வலீமாவாக இருந்தது. (முஸ்லிம் - 3574)
இங்கு நபி (ஸல்) அவர்கள் மற்றவர்களின் உதவியின் மூலமாக வலீமா விருந்தை மிகவும் சாதாரணமாக நடத்தியிருக்கிறார்கள். ஒரு மணமகன் வலீமாவின் சுன்னத்தான காரியத்தை நிறைவேற்றுவதற்காக மிகமிக நெருக்கமான உறவினர்கள் மற்றும் நண்பர்களின் உதவியைப் பெற்றுக்கொள்வதில் தவறேதுமில்லை, என்பதையும் விளங்க முடிகிறது. இந்த வலீமாவில் ஏழைகளுக்கான நல்ல முன்உதாரணம் உள்ளது.
வலீமா விருந்து என்பது...
விருந்து என்றால் பிரியாணியும் நெய்ச்சோறும் விதவிதமான உணவு வகைகளும் இருந்தாக வேண்டிய கட்டாயமில்லை. நல்ல எண்ணத்தில் பெருமை பகட்டில்லாமல் விருந்தாளிகளை நன்கு உபசரிப்பதிலும் குற்றமேதுமில்லை. யாருக்கும் எந்த நிர்பந்த நிலையும் ஏற்பட்டு விடக்கூடாது, என்பதே முழுமுதல் நோக்கம். ரொட்டியும் இறைச்சியும் இல்லாமாலும் நபி (ஸல்) அவர்களுடைய வலீமா விருந்தை நாம் கண்டிருக்கிறோம், என்று அனஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். (அல்பைஹகீ - 14897)
அன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் திருமணத்தின் போது எனக்காக ஒட்டகமும் அறுக்கப்பட வில்லை. ஆடும் அறுக்கப்படவில்லை. ஸ`ஃது பின் உப்பாதா (ரலி) அவர்கள் ஒரு கோப்பை (உணவு அல்லது பால்) அனுப்பினார்கள், என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள். (முஸ்னத் அஹ்மது - 25810)
ஆயிஷா (ரலி) அவர்களின் வலீமா மிகவும சாதாரணமான முறையில் நடைபெற்றது. நபி (ஸல்) அவர்களின் மிகப் பெரிய வலீமா என்பது ஜைனப் (ரலி) அவர்களை நிகாஹ் செய்யும் போது ரொட்டியும் இறைச்சியுமாக விருந்து வைத்தது தான். ஷாஃபியி மத்ஹபின் சட்ட நூலகிய இஆனதுத் தாலிபீன் (3/357) - ல் எந்த உணவை வலீமாவாகக் கொடுத்தாலும் சுன்னத் நிறைவேறிவிடும். அது குடிபானமாக இருந்தாலும சரியே! என்று கூறப்பட்டுள்ளது.
வலீமா விருந்து யார் வைக்க வேண்டும்?
வலீமா விருந்து வைப்பது மணமகனின் பொறுப்பு என்றே சட்ட வல்லுணர்கள் கூறுகின்றனர். நபி (ஸல்) அவர்களும் அப்துர்ரஹ்மானிப்னு அவ்ஃப் (ரலி) அவர்களிடமே வலீமா விருந்து வைக்குமாறு பணித்தார்கள். நபி (ஸல்) அவர்களும் தங்களுடைய திருமணத்திற்குப் பிறகு தாங்களே வலீமா வைத்தார்கள். அலீ (ரலி) அவர்களும் தங்களுடைய திருமணத்தின் போது தாங்களே வலீமா வைத்ததாக புகாரி (2089)மற்றும் முஸ்லிமுடைய (5242) அறிவிப்பில் காணப்படுகிறது.
ஷாபியீ ஃபிக்ஹ் நூலாகிய ஃபத்ஹுல் முயீனில் வயதுக்கு வந்த கணவர் தன்னுடைய திருமணத்தின் போது வலீமா வைப்பது சுன்னதெ முஅக்கதா வாகும், என்று கூறப்பட்டுள்ளது. அதே சமயம் மணமகளின் தந்தை தன்னுடைய முழு மனவிருப்பத்துடனும் மணமகனுடைய அனுமதியுடனும் வலீமா வைத்து விட்டாலும் வலீமாவின் சுன்னத் நிறைவேறிவிடும். (இஆனதுத் தாலிபீன் 3/357)
அவ்வாறே மணமகன் வலீமா வைக்கும்போது மணமகள் வீட்டார் சார்பாக அதிகப்படியான நபர்கள் சாப்பிட வரும் போது அதற்கான பணத்தை மணமகன் வீட்டாருக்கு கொடுத்துவிட்டாலும் தவறில்லை. (நஃபாயிஸுல் ஃபிக்ஹ்)
வலீமாவின் நேரம்
நபி (ஸல்) அவர்களின் நடைமுறையின் மூலம் கணவன், மனைவியின் தனிமைக்குப் பிறகே வலீமா கொடுக்க வேண்டுமென்பதை அறிய முடிகிறது. ஸஃபிய்யா (ரலி) அவர்களுடன் நபி (ஸல்) அவர்கள் திருமணம் செய்த போது தனிமையில் இருந்த பிறகே நான் வலீமாவுக்காக முஸ்லிம்களை அழைத்தேன், என்று அனஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். (புகாரி - 4213)
ஜைனப் (ரலி) அவர்களை நிகாஹ் செய்யும் போதும் கணவன் மனைவி தனிமைக்குப் பிறகே மாலை நேரத்தில் வலீமாவுக்காக அழைப்பு கொடுத்தார்கள். (புகாரி - 5466 - ஃபத்ஹுல் பாரி)
இமாம் பைஹகீ போன்றவர்கள் நபி (ஸல்) இந்த நிகாஹில் தனிமைக்கு முன்பே வலீமா விருந்து வைத்து விட்டதாகவும் கூறியுள்ளனர். கணவன் மனைவு உறவுக்குப் பிறகு வலீமா விருந்து வைப்பது சுன்னத்தும் சிறந்ததுமாகும். எனினும், திருமணம் முடிந்த உடன் வலீமா வைத்து விட்டாலும் சுன்னத் நிறைவேறிவிடும். (ஃபத்ஹுல் முயீன்)
திருமணத்தை பகிரங்கப்படுத்துவதற்காக வலீமா விருந்து வைப்பது ஒரு முக்கியமான சுன்னத். அவ்வாறே அதன் நேரம் கணவன் மனைவி உறவுக்குப் பிறகாகும். எனவே, திருமணம் முடித்தவுடன் வலீமா வைத்து விட்டால் அதன் மூலம் வலீமாவின் சுன்னத் நிறைவேறி விடும. எனினும், நேரத்திற்கான சுன்னத் நிறைவேறாமல் போய்விடும். இதற்கு உதாரணமாக மிஸ்வாக்கின் சுன்னத்தைச் சொல்லலாம். மிஸ்வாக் செய்யும் போது பல் துலக்குவது ஒரு சுன்னத். நபி (ஸல்) அவர்கள் பயன்படுத்திய குச்சியை பயன் படுத்துவது மற்றொரு சுன்னத். அந்த குச்சியைப் பயன்படுத்த வில்லையானாலும் பல் துலக்குதல் என்ற சுன்னத் நிறைவேறிவிடும். (ஃபதாவா உஸ்மானீ - 2/303)
வலீமாவில் வீண்விரயம் அறவே கூடாது. தன்னுடைய பெருமையை நிலை நாட்டுவதற்காக வலீமாவை காரணமாக்ககிக் கொள்ளக்கூடாது. நபித்தோழர்கள் தங்களுடைய பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைத்த்திருக்கிறார்கள். எனினும், யாரும் பிரம்மாண்டமான முறையில் விருந்து வைபவம் நடத்தியதாக சரித்திரத்தில் பார்க்க முடியவில்லை. நபி (ஸல்) அவர்களுக்குக் கூட தெரியாமல் திருமணம் நடந்த நிகழ்வுகளும் உண்டு. விருந்து வைபவத்தில் ஏழைகளும் வறியவர்களும் கவனிக்கப்பட வேண்டும். ஏழைகளைத் தவிர்த்து செல்வந்தர்களை மட்டுமே அழைத்து விருந்து வைப்பது உணவில் மிகக் கெட்டது, என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி - 5177)
விருந்துகள் தெரியும்! ஆனால் வலீமா?
மகிழ்ச்சிகரமான சமயங்களில் அழைக்கப்படும் விருந்துக்கு வலீமா என்று சொல்லப்படும் என்றாலும் நபி (ஸல்) அவர்கள் எந்த நிகாஹிலும் வலீமா விருந்தை விட்டுவிட்டதாக நான் அறியவில்லை. மேலும் அது தவிர வேறு எந்த சமயத்திலும் வலீமா வைத்ததாகவும் நான் அறியவில்லை. என்று கூறும் இமாம் ஷாஃபியீ (ரஹ்) அவர்கள் வலீமா விருந்து வைக்காவிட்டால் அவன் குற்றவாளியாகிவிடுவான். மற்ற விருந்து வைக்காவிட்டால் அவன் குற்றவாளியாகி விடுவான் என்று எனக்குப் படவில்லை, என்று கூறுகிறார்கள். (அல்உம்மு)
வலீமாவைப் பற்றி மார்க்கத்தில் இவ்வளவு வலியுறுத்திக் கூறப்பட்டுள்ளது. இமாம் ஷாஃபியீ (ரஹ்) அவர்கள் நிகாஹில் வலீமா இல்லையென்றால் அவன் பாவியாகிவிடலாம், என்றும் கூறியுள்ளார்கள். வலீமாவை மார்க்கத்தில் சுன்னத்தெ முஅக்கதா என்று கூற்பட்டுள்ளது. ஆனால், இன்று சில பகுதிகளில் திருமணத்தின் பெயரால் ஏகப்பட்ட விருந்துகள் அறிமுகப்படுத்தப் பட்டிருக்கின்றன.
ஆனால், வலீமா என்ற பெயர் அறிமுகப்படுத்தப் படவில்லை, என்பதை வேதனையோடு ஏற்றுக் கொண்டாக வேண்டும். வலீமா என்ற வார்த்தையே புதிதாக கேள்விப் படுவது போல் இருந்தால் நபிமொழிகளில் வலீமா பற்றி வருகிற ஏராளமான செய்திகளை எப்பொழுது அறிந்து கொள்ள முடியும்? பிறகெப்படி வலீமா விருந்து வைப்பது என் மீதுள்ள முக்கியமான மார்க்கரீதியான பொறுப்பு என்பதை உணர்ந்து கொள்ள முடியும்? ஹதீஸில் வந்த பெயர்களை அறிமுகப்படுத்துவது இஸ்லாமியக் கலாச்சாரம் இல்லையா? இஷா தொழுகை பற்றி நபி (ஸல்) அவர்கள் சொல்லும் போது அதமா தொழுகை (இருட்டுத் தொழுகை) என்று நடைமுறையில் இருந்த பெயரை சொல்ல வேண்டாம். இஷா தொழுகை என்றே சொல்ல வேண்டும், என்று கூறினார்கள்.
No comments:
Post a Comment