கணவன், மனைவிக்கு மத்தியில் பிரிவினை ஏற்பட்டுவிட்டாலும் பிள்ளைகளுடைய நலன் எவ்விதத்திலும் பாதித்து விடக்கூடாது, என்பதில் இஸ்லாம் மிகவும் அக்கறை காட்டுகிறது. ஆனால், பிள்ளையைப் பெற்றவர்களும் இரு வீட்டாரும் இஸ்லாம் கூறும் வழிகாட்டல்களை புறம் தள்ளிவிடுவதால் பிள்ளைகளுடைய எதிர்காலம் கேள்விக்குரியதாகி விடுகிறது.
நம்முடைய கற்பனையையும் சிந்தனைகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு மார்க்கம் சொல்லும் நெறிமுறைகளில் தான் பிள்ளைகளுடைய முன்னேற்றமும் வளர்ச்சியும் இருக்கிறது, என்பதில் முழூ நம்பிக்கை இருக்க வேண்டும். இன்று தங்களை தீன்தார் - மார்க்கப் பற்றுள்ளவர்கள், என்று சொல்லிக் கொள்வோரும் கூட குழந்தை வளர்ப்பு விஷயத்தில் மார்க்கத்தின் வழிகாட்டல்களைவிட தங்களுடைய சுயநலத்திற்கே முதலிடம் கொடுக்கின்றனர்.
குழந்தை யாருக்குச் சொந்தம்?
கணவன் மனைவிக்கு மத்தியில் பிரிவினை ஏற்பட்டுவிட்டால், குழந்தை யாருக்குச் சொந்தம்? என்று சிலர் கேட்கின்றனர். ஆனால், இந்தக் கேள்வியே தவறு. ஏனெனில், குழந்தை சொந்தமாக்கிக் கொள்ளத் தக்க சந்தைச் சரக்கு அல்ல, குழந்தை. அந்தக் குழந்தை யாருக்கும் அடிமையுமில்லை.
எனவே, அக்குழந்தையை தாய் அல்லது தந்தை என யாரும் சொந்தம் கொண்டாட முடியாது. ஒருவர் மட்டும் அக்குழந்தையின் மீது ஏகபோக உரிமை கொண்டாடி மற்றொருவரை அக்குழந்தையை விட்டும் முற்றாக விலக்கி விடுவதற்கு யாருக்கும் அதிகாரமில்லை. மார்க்கம் கொடுக்காத அதிகாரத்தை தாங்களாக சர்வாதிகாரமாக எடுத்துக் கொண்டுவிட்டு தங்களை எப்படி முஸ்லிம் என்று சொல்லிக் கொள்கிறார்கள்?
தாய்,தந்தையரின் திருமண உறவு முறிந்து விடுமேயானால் குழந்தைகளின் வளர்ப்பு நிலைகள் பற்றி தெளிவு படுத்துவதற்காகவே அல்ஹளானா - குழந்தையைப் பராமரித்தல், என்றொரு தலைப்பில் எல்லா மார்க்கச் சட்ட நூற்களிலும் மிகுந்த முக்கியத்துவத்துடன் அதற்கான விரிவான சட்டங்கள் தொகுப்பட்டிருக்கின்றன. ஹதீஸ் கிரந்தங்களில் அந்தத் தலைப்பில் அவை தொடர்பான நபிமொழிகள் கூறப்பட்டிருக்கும். மார்க்கம் இவ்வளவு அக்கறையுடன் சட்டநுணுக்கங்களை தெளிவு படுத்தும் போது மக்கள் அதுபற்றி கண்டுகொள்ளாமல் தங்களுடைய முடிவை மட்டுமே இறுதி முடிவாக உறுதி செய்துவிட்டால் மார்க்க வழிகாட்டல்களும் சட்ட நூற்களும் எதற்குத் தான் இருக்கினறன?!
ஹளானா என்றால்...
குழ்ந்தைக்கு எந்தத் தொல்லையும் ஏற்படாமல் பாதுகாத்து குழந்தைக்குத் தேவையான உணவு தண்ணீர் கொடுப்பது, உடல், உடையைச் சுத்தம் செய்வது, ஆடை அணிவிப்பது, எண்ணெய் தேய்ப்பது, தூங்க வைப்பது, விழிக்கச் செய்வது போன்ற குழந்தைக்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்து பராமரிப்பதே ஹளானா ஆகும்.
ஒரு குழந்தை இந்தக் காரியங்களை தானாகச் செய்யும் வரை இந்தப் பராமரிப்பு அவசியமாகும். ஆண்குழந்தையாக இருந்தால் பொதுவாக ஏழுவயதில் அதற்கான தகுதியை அடைந்து விடுவான், என்று சட்ட வல்லுணர்கள் கூறுவார்கள். நபி (ஸல்) அவர்கள் ஏழு வயதாகி விட்டால் தொழுமாறு உத்தரவிட வேண்டுமென்று கூறியுள்ளார்கள்.
அப்படியானால், பையன் அந்த வயதில் தானே உளூ செய்வதற்கான தகுதியை பெற்றிடுவான், என்பதை சூசகமாக விளங்கிக் கொள்ள முடியும். பெண்குழந்தையாக இருந்தால் வயதுக்கு வரும் வரை தாயிடம் வளரலாம். இமாம் முஹம்மது (ரஹ்) அவர்கள் ஒன்பது வயது வரை மட்டுமே தாயிடம் வளர வேண்டும், என்று கூறுகிறார்கள். ஹனஃபி மத்ஹபில் கால சூழ்நிலை கெட்டுவிட்டதின் காரணமாக இமாம் முஹம்மது (ரஹ்) அவர்களின் கருத்தின் படியே ஃபத்வா கொடுக்கப் படவேண்டும். (ரத்துல் முஹ்தார்)
தாயாருக்கு முதலிடம்:
மேற்கூறப்பட்ட ஹளானா தொடர்பான காரியங்களை ஓர் ஆணை விட ஒரு பெண்ணே சிறப்பாகச் செய்ய முடியும், என்பதை யாரும் மறுக்க முடியாது. பெற்ற தாயாருக்கு குழந்தையின் மீது இருக்கும் பிரியத்தையும் இரக்கத்தையும் வேறு யாரிடமும் பார்க்க முடியாது.
எனவே, ஆரம்ப வயதுகளில் ஆண் குழந்தையாக இருந்தாலும் பெண்குழந்தையாக இருந்தாலும் பிள்ளையின் தாயே பராமரிக்கும் உரிமையைப் பெறுவாள். தாய் மரணித்துவிட்டால் தாயாரின் தாயாருக்கு அந்த உரிமை கிடைக்கும். நபி (ஸல்) அவர்களிடம் ஒரு பெண்மணி வந்து அல்லாஹ்வின் தூதர் அவர்களே! என்னுடைய மகனுக்கு என்னுடைய வயிறு பாத்திரமாகவும் என்னுடைய மார்பு தண்ணீர் பையாகவும் என்னுடைய மடி வசிப்பிடமாகவும் இருந்தது. அவருடைய தந்தை எனக்கு தலாக் கொடுத்து விட்டார். இப்பொழுது என்னிடமிருந்து மகனை பறித்துவிட நாடுகிறார், என்று சொன்னார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் நீ மறுமணம் செய்து கொள்ளாத வரை நீயே உன்னுடைய மக (னை பராமரிப்பதற்)கு மிகவும் உரிமையுள்ளவன், என்று கூறினார்கள். (அபூதாவூத் - 2278)
ஏழு வயதுக்குப் பிறகு பையனுக்கு கல்வி மற்றும் ஒழுக்கம் கற்பித்தல் அவசியமாகிறது. கல்வி மற்றும் ஒழுக்கத்தைக் கொண்டு தான் ஒரு மனிதருடைய மரியாதையும் மாண்பும் உயர்கிறது. கல்வி போதனைக்கான ஏற்பாடுகளை தாயை விட தந்தையே சிறப்பாகச் செய்ய முடியும். எனவே, அந்தப் பருவத்தில் குழந்தை தந்தையிடம் வளர்வதே மிகவும் பொருத்தமானதாக இருக்கும். அத்துடன் குழந்தை பெரிதாக வளர்ந்து வந்த பிறகு நற்குணத்துடன் வளர்ந்தால்
அதன் பெருமையும் சிறப்பும் தந்தையையே வந்தடையும். கெட்ட குணத்துடன் வளர்ந்து விட்டால் அதன் இழிவும் கேவலமும் தந்தையையே சாரும். எனவே தான் ஷாஃபியீ மத்ஹபில் பையன் ஏழு வயதைக் கடந்த பிறகு தாய், தந்தை இவர்களில் யாரை பையன் தேர்ந்தெடுக்கிறானோ அவரிடம் வளர்வான், என்று கூறப்பட்டாலும் அங்கும் கூட இந்த ஒழுக்க போதனைகள் விஷயத்தில் தந்தைக்கு முக்கியத்துவம் கொடுக்கப் பட்டிருக்கிறது.
ஏனெனில், பையன் ஏழு வயதிற்குப் பிறகு தாயிடம் வளர்வதைத் தேர்ந்தெடுத்துக் கொண்டால் கூட இரவு நேரங்களில் தான் தாயிடம் இருக்க வேண்டும். கல்வி, ஒழுக்கப் போதனைநேரமான பகல் நேரத்தில் பையனை தந்தையிடமே ஒப்படைக்க வேண்டுமென்று கூறப்பட்டுள்ளது. ஆனால், இன்று இந்தச் சட்டங்களை யார் கண்டு கொள்கிறார்கள். அதைச் செயல்படுத்துவதற்கு யார் முன் வருகிறார்கள்?
பையன் தாயிடம் வளர்வதையே விரும்பினாலும் கூட மார்க்க போதனைகளைக் கற்றுக் கொடுப்பதற்காகவும் உலகியல் ரீதியான அறிவையும் அனுபவத்தையும் போதிபதற்காகவும் பகல் நேரத்தில் பையன் தந்தையிடம் வளர்வதே பொருத்தமானது. பராமரிப்பவர் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் அவர் பாவியாக இருக்கக் கூடாது.
மது அருந்தும் பழக்கமுள்ளவராகவோ திருட்டு, விபச்சாரம் மற்றும் ஹராமான காரியங்களை பகிரங்கமாகச் செய்பவராக இருக்கக் கூடாது. அவருடைய பாவத்தின் மூலம் குழந்தை வீணாகிப் போய்விடுமளவுக்கு குற்றம் புரிபவராக இருந்தால் அவர் பராமரிக்கும் பொறுப்பை இழந்து விடுவார்.
ராஃபிஃ பின் ஸினான் (ரலி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள். ஆனால், அவருடைய மனைவி இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டார். அவர்களுக்கு ஒரு மகள் இருந்தாள். அவருடைய மனைவி நபி(ஸல்) அவர்களிடம் வந்து என்னுடைய மகள் இப்பொழுது தான் பால்குடி நிறுத்தப் பட்டிருக்கிறாள், என்று கூறினாள். ராஃபிஃ (ரலி) அவர்கள் அவள் என்னுடைய மகள், என்று கூறி இருவரும் அக்குழந்தைக்கு உரிமை கோரினார்கள். நபி (ஸல்) குழந்தையின் தாயை ஒரு ஓரத்திலும் தந்தையை ஒரு ஓரத்திலும் உட்கார வைத்து விட்டு குழந்தையை இருவருக்கும் மத்தியில் உட்காரச் சொன்னார்கள். பின்னர், இருவரையும் குழந்தையை அழைக்குமாறு பணித்தார்கள். இருவரும் பிள்ளையை அழைத்தார்கள். குழந்தை தாயின் பக்கம் சாய்ந்தது. நபி (ஸல்) அவர்கள் யா அல்லாஹ் இந்த குழந்தைக்கு நேர்வழி காட்டு, என்று துஆ செய்தார்கள். உடனே அக்குழந்தை தந்தையின் பக்கம் சாய்ந்தது. தந்தை அக்குழந்தையை எடுத்துக் கொண்டார். (அபூதாவூத் - 2246)
அவருக்கு கடுமையாக வியாதி இருக்கிறது. அதனால் குழந்தையைக் கவனிப்பதில் கவனம் செலுத்த முடியாது. அல்லது அந்த வியாதியின் மூலம் அக்குழந்தைக்கும் பாதிப்பு ஏற்படும், என்றிருந்தாலும் பராமரிப்பு உரிமையை இழந்து விடுவார்.
பார்க்கும் உரிமை:
பொதுவாக இன்று குழந்தையை தாய் வளர்த்தால் தந்தையிடமோ தந்தை வளர்த்தால் தாயிடமோ குழந்தையைக் காட்டுவதில்லை. அவர்களுடைய பார்வை குழந்தை மீது படாமலே வளர்க்கின்றனர்.
தங்களை மார்க்கப் பற்றுள்ளவர்கள் என்று சொல்பவர்களும் இதற்கு விதிவிலக்கல்ல. மார்க்கம் ஒருவருக்குக் கொடுத்த உரிமையை பறித்துக் கொள்வதற்கு நமக்கு என்ன அருகதை இருக்கிறது. குழந்தை தாயிடம் இருந்தாலும் தந்தையிடம் இருந்தாலும் தன்னுடைய பிள்ளையை தாயோ தந்தையோ பார்ப்பதற்கும் சந்திப்பதற்கும் முழு சுதந்திரமும் உரிமையும் உண்டு, என்பதே மார்க்கத்தின் நிலைபாடு.
தாய், தந்தையார்களில் யாராவது நோய்வாய் பட்டுவிட்டால் குழந்தை யாரிடம் வளர்ந்தாலும் அவர்களை நோய்நலம் விசாரிப்பதற்கு குழந்தையை அனுமதிக்க வேண்டும். கணவன் மனைவிக்கு மத்தியில் பிரிவு ஏற்பட்டாலும் குழந்தையைப் பொறுத்தவரை தாய் தாய்மையின் உறவையோ தந்தை, தகப்பனின் உரிமைமையோ இழந்து விட மாட்டார்கள். தாய், தந்தை உறவை யாராலும் பிரிக்கவும் முடியாது. மாற்றவும் முடியாது.
ஒரு தாய், தந்தையின் பார்வை பட்டுவிடாமல் வளர்த்து தந்தை பாசம் என்னவென்றே தெரியாமலாக்கி தந்தை யாரென்றே தெரியமலாக்கி வளர்ப்பதை மார்க்கம் அங்கீகரிக்கவில்லை.
தாய், தந்தை, பிள்ளை உறவு கடைசி வரை தொடரவே செய்யும். திருமணப் பதிவேட்டில் தந்தையுடன் தொடர்பு இல்லை என்பதற்காக உண்மையான தந்தையின் பெயரைப் பதியாமல் வளர்ப்புத் தந்தையின் பெயரை தந்தையின் பெயராகப் பதிவதை மார்க்கம் அனுமதிக்காது. தந்தை இல்லாத ஒருவரை தந்தையாகக் கூறுவது இஸ்லாத்தின் பார்வையின் பெருங்குற்றம்.
தாய், தந்தை, பிள்ளைகளில் யார் இறந்து விட்டாலும் ஒருவர் மூலம் மற்றவருக்கு சட்டப்படியாக சொத்திலும் பங்கு கிடைக்கும். மகனைத் தந்தையை விட்டும் பிரித்துவிட்டாலும் தந்தையின் மூலம் மகனுக்கும் மகனின் மூலம் தந்தைக்கும் சொத்து கிடைக்காமல் போகாது. நாமாக கற்பனை செய்து கொள்வதை சரியென்று செயல்படுத்துவதை நிறுத்தவில்லையானால் இந்தச் சமூகத்தின் எதிர்காலம் எப்படியிருக்குமென்று சொல்ல முடியாது.
No comments:
Post a Comment