நபி (ஸல்) அவர்களுடைய அருமையான வாழ்க்கை வரலாற்றை முழுமையாக அறிய வேண்டும். நபியவர்களின் வாழ்க்கையில் நடந்த சோதனைகளும் அவர்கள் நிகழ்த்திய சாதனைகளும் சாதாரணமானவையல்ல. நபி (ஸல்) அவர்களுடைய வரலாற்றை நாம் ஏன் படிக்க வேண்டும்? யாருடைய வரலாற்றைப் படிப்பதாக இருந்தாலும் அதற்கான காரணம் இருக்கும். அவ்வாறே நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கையைப் படிப்பதற்கு ஒரு காரணமல்ல ஓராயிரம் காரணங்கள் உண்டு.
நபி (ஸல்) அவர்கள் கூறுவார்கள்: ஒருவருக்கு அவருடைய தந்தையை விடவும் பிள்ளையை விடவும் அனைத்து மக்களை விடவும் நான் அதிக பிரியமுள்ளவனாக ஆகும் வரை உங்களில் யாரும் உண்மையான முஃமினாக ஆக முடியாது. ஒருவர் யாரையாவது விரும்புகிறாரென்றால் அவருடைய ஒவ்வொரு அங்க அசைவையும் கவனிப்பார்.
அவர் எப்படி பேசுகிறார்? எப்படி சிரிக்கிறார்? எப்படி உடை உடுத்துகிறார்? எப்படி நடக்கிறார்? எப்படி? எப்படி? எப்படி? என ஒவ்வொன்றையும் கவனிப்பார். தானும் அவரைப் போன்று பேச வேண்டும். அவரைப் போன்று சிரிக்க வேண்டும். அவரைப் போன்று உடை உடுத்த வேண்டும். அவரைப் போன்று நடக்க வேண்டும், என்று முயற்சிப்பார், என்பது மட்டுமல்ல, அதற்காக எதையும் இழப்பதற்குத் தயாராக இருப்பார்.
இது முஹப்பத்தின் - பிரியத்தின் வெளிப்பாடு. அப்பொழது தான் அவர் ரசிகன் என்ற பட்டியலில் இடம் பிடிக்க முடியும். இங்கே நபி (ஸல்) அவர்களை நாம் பிரியப்பட வேண்டும். நபி (ஸல்) அவர்களின் ரசிகனாக ஆக வேண்டும். அதற்கு மிக முக்கியத் தேவை நாம் அவர்களுடைய சரித்திரத்தை படிக்க வேண்டும். அப்பொழுது தான் அவர்களுடைய வாழ்க்கை நடைமுறைகளை நாம் அறிந்து கொள்ள முடியும்.
நபி (ஸல்) அவர்களின் மீது பிரியம் இருக்கிறது, என்கிற நம்முடைய வாதத்தில் நாம் உண்மையாளராக வேண்டுமென்றால், நம்முடைய வாழ்க்கையின் ஒவ்வொரு அசைவிலும் நம் உயிரினும் மேலான நபி (ஸல்) அவர்களைப் பின்பற்ற வேண்டும். நம்முடைய நடைமுறை வாழ்க்கையில் அதிகமாக நபி (ஸல்) அவர்களின் நடைமுறைகள் பேசப்பட வேண்டும்.
வினாடிக்கு வினாடி எங்கள் நாயகம் (ஸல்) அவர்கள் இப்படிச் செய்வார்கள், என்பது நம்முடைய வழமையாக மாற வேண்டும். அவர்கள் கொண்டு வந்த தீனுக்காக எதையும் அர்ப்பணிக்கத் தயாராக இருக்க வேண்டும். நபி (ஸல்) அவர்களை மட்டுமல்ல, நபியுடன் சார்ந்திருக்கக் கூடிய அனைவரையும் பிரியப்பட வேண்டும். இது தான் நபி (ஸல்) அவர்களின் மீது நாம் கொண்டிருக்கும் அன்பின் வெளிப்பாடு. உங்களுக்கு அல்லாஹ்வுடைய தூதரிடத்தில் அழகிய முன்மாதிரி இருக்கிறது, என்று குர்ஆன் சொல்லும். நபி (ஸல்) அவர்களுடைய வரலாற்றைப் படிப்பது வாஜிப் - கட்டாயம் என்று அல்லாமா இப்னுல்கைய்யும் (ரஹ்) அவர்கள் கூறுவார்கள். (முஹாளராதெ ஸீரத்)
ஸீரத்துந்நபீ படிப்போம்
என்னுடைய தந்தை, எங்களுக்கு இஸ்லாத்தின் (வெற்றி) யுத்த வரலாற்றைக் கறறுக் கொடுப்பார்கள். மேலும், என்னுடைய மகனே! இது உங்களுடைய முன்னோர்களின் சிறப்புக்குரிய (சரித்திரமாகும்.) அதைப் பற்றி பேசுவதை நிறுத்தி (அந்த சரித்திரத்தை) வீணாக்கி விடாதீர்கள், என்று ஸஃது பின் அபீவக்காஸ் (ரலி) அவர்களுடைய மகன் முஹம்மது பின் ஸஃது (ரஹ்) அவர்கள் அவர்கள் கூறுகிறார்கள்.
குர்ஆனுடைய அத்தியாயத்தை கற்றுக் கொடுப்பது போல் நாங்கள் (இஸ்லாத்தின்) யுத்த வரலாற்றைக் கற்றுக் கொடுப்போம், என்று ஜைனுல் ஆபிதீன் அலிய்யுப்னுல் ஹுஸைன் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். (முஹம்மதுர் ரஸுலுல்லாஹ், இஸ்லாமீ மதாரிஸ்)
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் மக்களுக்கு ஒவ்வொரு நாளும் மார்க்கம் தொடர்பான தகவல்களை பாடமாக நடத்துவார்கள். ஒரு நாள் ஃபிக்ஹ் எனும் மார்க்கச் சட்டங்கள் தவிர வேறெதுவும் சொல்ல மாட்டார்கள். இன்னொரு நாள் தஃப்ஸீர் தவிர வேறெதுவும் சொல்ல மாட்டார்கள். ஒரு நாள் இஸ்லாமிய யுத்தங்கள் (நபி ஸல் அவர்களுடைய வரலாற்றை மட்டுமே விவரிப்பார்கள். ஒரு நாள் கவிதை மற்றொரு நாள் அரபுகளின் வரலாறு பற்றி மட்டுமே பேசுவார்கள், என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுடைய மாணவர் உபைதுல்லாஹ் பின் அப்தில்லா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள. (தபகாது இப்னு ஸஃத், இஸ்லாமீ மதாரிஸ்)
நபி (ஸல்) அவர்களின் வராலாற்றைப் படிப்பதிலும் படித்துக் கொடுப்பதிலும் இவ்வளவு ஆர்வம் காட்டியுள்ளார்கள். இது மட்டுமல்ல. அரசாங்க ரீதியாகவும் இதற்கான ஏற்பாடுகள் செய்யப் பட்டிருக்கின்றன. இஸ்லாமிய அரசாங்கத்தின் வேலை வெறும் உலகியல் ரீதியான நிர்வாத்தை மட்டும் முறைப்படுத்துவதல்ல. மார்க்க ரீதியான சேவைகளும் மக்களிடம் போய்ச் சேர வைக்க வேண்டும். உமருப்னு அப்துல் அஜீஸ் (ரஹ்) அவர்கள் தங்களுடைய குறுகிய கால ஆட்சி காலத்திலும் நிறைய சீர்த்திருத்தப் பணிகளைச் செய்திருக்கிறார்கள்.
அவற்றில் ஒன்று மக்களுக்குத் தேவையான மார்க்க அறிவைக் கொடுப்பதற்கான ஏற்பாடுகளையும் செய்தார்கள். நபி (ஸல்) அவர்களின் (யுத்த) வரலாற்றையும் நபித்தோழர்களின் சிறப்புகளையும் பற்றி டெமாஸ்கசுடைய ஜாமிஆ மஸ்ஜிதில் வைத்து விளக்கம் கொடுப்பதற்காக ஏற்பாடு செய்து அதற்காக கதாதா (ரலி) அவர்களுடைய பேரர் ஆஸிம் பின் உமர் (ரஹ்) அவர்களை நியமித்தார்கள். (தஹ்தீபுத் தஹ்தீப், இஸ்லாமீ மதாரிஸ் - முஃப்தீ முஹம்மது ஷுஐபுல்லாஹ் கான் ஸாஹிப்)
வரலாற்றுப் பாக்கியம்
நபி (ஸல்) அவர்களைப் பற்றி அவர்களுடைய சரித்திரம் லட்சக் கணக்கான பக்கங்களில் எழுதப்பட்டுள்ளது. முஸ்லிம்கள் மட்டுமல்ல முல்லிம் அல்லாதவர்களும் - இஸ்லாத்தின எதிரிகளும் நபியின் வரலாற்றை எழுதி வைத்திருக்கின்றனர். ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தின் அரபு மொழிப் பேராசிரியரான மார்காலிஸ் என்பவர் அண்ணலாரின் வாழ்வைப் பற்றி விஷம் தோய்ந்த நச்சு மையினால் எழுதினார். அவர் ஒவ்வொரு நிகழ்வையும் தவறான கண்ணோட்டத்தில் அணுகி கீழ்த்தரமான முடிவையே முன்வைக்கிறார். அவரும் தன்னுடைய முன்னுரையில் ர் உண்மையை ஒப்புக் கொள்கிறார்:
முஹம்மதுவின் வரலாற்றை எழுதியோரின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. அது ஒரு போதும் முடிவடையாது. அதில் இடம்பிடிப்பது உண்மையிலேயே கௌரவத்தை உயர்த்தும் செயல். குதுபாதெ மதராஸ் -பக் 61. அல்லாமா ஸைய்யிது சுலைமான் நத்வீ (ரஹ்)
நபி (ஸல்) அவர்களுடைய ஒவ்வொரு நிலையைப் பற்றியும் ஆய்வு செய்து நூற்கள் எழுதியுள்ளனர். நபி (ஸல்) அவர்கள் தங்களுடைய மனைவிமார்களுக்கு கட்டிக் கொடுத்த வீடுகளைப் பற்றி ஆய்வு செய்து புயூத்துந்நபி - நபியின் வீடுகள், என்ற ஒரு நூலை ஓர் ஆய்வாளர் எழுதினார். (முஹாளராதெ ஸீரத்)
காலித் முஹம்மத் காலித் என்ற ஆசிரியர் அஷ்ரது அய்யாமின் ஃபீ ஹயாத்திர் ரஸுல் - நபி (ஸல்) அவர்களுடைய வாழ்க்கையின் பத்து நாட்கள், என்ற பெயரில் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கையில் நடந்த முக்கியமான நிகழ்வுகளை 190 பக்கங்களில் கோர்வை செய்துள்ளார். நபி (ஸல்) அவர்களுக்கு பாலூட்டியவர்களின் சரித்திரத்தை ரஸுலெ அக்ரம் (ஸல்) கீ ரளாயீ மா - கண்ணியமிகு நபி (ஸல்) அவர்களுக்கு பால்கொடுத்த தாய்மார்கள் என்ற பெயரில் உர்தூ மொழியில் ஏறத்தாழ 170 பக்கங்களில் டாக்டர் முஹம்மது யாஸீன் தொகுத்துள்ளார். நபி (ஸல்) அவர்களின் வரலாற்றை பல விதங்களில் தொகுப்பாளர்கள் தொகுத்துள்ளனர். ஹாதியெ ஆலம் - உலகின் வழிகாட்டி என்ற பெயரில் கிதாபில் வரும் எழுத்துக்களில் ஒரு நுக்தா - புள்ளி கூட வராத விதத்தில் ஏறத்தாழ 400 பக்கங்களில் முஹம்மது வலீ ராஸீ தொகுத்துள்ளார்.
அஸ்மாவுர்ரிஜால்
நபி (ஸல்) அவர்களுடைய வரலாறு மட்டுமல்ல. அந்த வரலாற்றை உலகுக்கு அறிவித்துத் தந்த நபித்தோழர்கள், தாபியீன்கள், மற்றும் அவர்களுக்குப் பின் வந்தவர்களின் வரலாறுகளும் இன்று எழுத்து வடிவில் பாதுகாக்கப்பட்டிருக்கிறது. இதற்கு அஸ்மாவுர் ரிஜால் கலை என்று சொல்லப்படும். வரலாற்றுத் தகவல்கள் அனைத்தும் எழுத்து வடிவம் பெற்றபோது அறிவிப்பாளர்கள் அனைவரின் பெயர்களும் குறிப்புகளும் அவர்களுடைய வாழ்க்கை வரலாறும் பழக்க வழக்கங்களும் ஒழுக்கமும் நடத்தைகளும் பற்றிய தகவல்களும் எழுத்து வடிவில் பதிவு செய்யப்பட்டுவிட்டன.
இவ்வாறு தொகுக்கப் பட்டோரின் எண்ணிக்கை மட்டும் ஒரு லட்சத்தைத் தாண்டுகிறது. முஸ்லிம்கள் உருவாக்கிய அஸ்மாவுர்ரிஜால் (அறிவிப்பாளர்களின் அறிமுகக்கலை) எனும் கலை போன்றதொரு அறிவுக்கலையை இன்று உலகில் வாழும் எந்த சமூகமும் கண்டறிந்ததில்லை. அக்கலை மூலம் இன்றைய உலகம் கிட்டத்தட்ட ஐந்து லட்சம் மனிதர்களைப் பற்றி அறிந்து கொள்ள முடிகிறது, என்று நபி (ஸல்) அவர்களை விமர்சனம் செய்வதற்காகவே எழுதிய ஐரோப்பிய ஆய்வாளர்களும் ஒப்புக்கொள்கின்றனர். குதுபாதெ மதராஸ் - அல்லாமா ஸைய்யிது சுலைமான் நத்வீ (ரஹ்)
No comments:
Post a Comment