*இஸ்லாமியக் கல்வியின் கல்வியாண்டு ஆரம்பமாகவிருக்கும் இந்நேரத்தில் மக்களிடம் குர்ஆன், சுன்னாவின் ஆக்கப்பூர்வமான அறிவும் அமலும் எந்த அளவுக்கு இருக்கிறது? என்பதைப் பற்றி சிந்திக்க வேண்டிய அதே சமயம் இஸ்லாமியக் கல்வியை போதிக்கக் கூடிய கலாசாலைகளும் அங்கிருந்து வெளியேறுபவர்களின் தரங்களைப் பற்றியும் அதிகம் சிந்திக்க வேணடிய கட்டாயத்தில் இருக்கிறோம்.*
மத்ரஸாக்களின் கல்வி போதனைக்கு உலக அளவில் ஏற்படக்கூடிய தடைகளும் எதிர்ப்புகளும் ஒரு புறம் இருந்தாலும் சமூகத்திற்குள்ளே மார்க்கத்தை முழுமையாக கற்றுத் தேர்ந்தவர்கள் பரவலாக இருக்க வேண்டும், என்ற சிந்தனை எந்த அளவுக்கு இருக்கிறது? என்பதையும் யோசிக்க வேண்டும்.
*ஏழு வருடத்திற்குள்ளே மார்க்கத்தையும் முழுமையாக படித்துவிட வேண்டும். பல டிகிரிகளையும் முடித்த பட்டதாரியாகவும் மத்ரஸாவிலிருந்து வெளியாக வேண்டுமென்று நினைத்தால் விளம்பரத்திற்கு வேண்டுமானால் அது பொருத்தமாக இருக்குமே தவிர நடைமுறை சாத்தியமில்லை, என்பதே நிதர்சன உண்மை.*
*ஏழு வருடமும் மார்க்கக் கல்வியை மட்டுமே போதித்தாலும் கூட திறமையான தகுதியான மார்க்கக் கல்வியாளரை உருவாக்குவது அவ்வளவு சாதாரண காரியமல்ல, என்பது சம்பந்தப் பட்டவர்களின் உள்மனம் கண்டிப்பாக சாட்சி சொல்லும், என்பதில் எந்த சந்தேதமுமில்லை.*
*கல்லூரிக் கல்வியுடன் மார்க்கத்தையும் தேவையான அளவுக்கு கற்றுக்கொடுக்கக் கூடிய பள்ளிக்கூடங்களையும் கல்லூரிகளையும் அதிகமாகவும் திறமையாகவும் சமூகம் கட்டாயம் நடத்த வேண்டும். இல்லையானால் நிறைய படித்திருந்தும் குளிப்பின் கடமை கூட தெரியாத அவல நிலை ஏற்படலாம். அவ்வப்போது சுத்தம், தொழுகை, நோன்பு போன்றவற்றின் சட்டங்களை கட்டாயம் திந்திருக்க வேண்டுமென்பது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கட்டாயமாகும். (அப்படிப்பட்ட அவ்வப்போது அவசியம் அறிந்திருக்க வேண்டிய) கல்வியைத் தேடுவது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கட்டாயக் கடமை, என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள்.*
*நல்ல கல்வி கிடைக்கிறது, என்பதற்காக ஓரிறைக் கொள்கைக்கு வேட்டு வைக்கக் கூடிய மற்ற பள்ளிக் கூடங்களில் பிள்ளைகளைச் சேர்த்து நிரந்தரப் பிரச்சினையை ஏற்படுத்திக் கொள்கிறார்கள்.*
*இந்நிலையில் மார்க்கவியல் சார்ந்து போதிக்கும் கல்விக்கூடங்கள் பெருமளவில் நிறுவப்படுவது அவசியமாகிறது.*
*அதே சமயம் மார்க்கக் கல்வி என்பதை ஒரு குறிப்பிட்ட வருடத்திற்குள் அல்லது ஒரு குறிப்பிட்ட வரம்பிற்குள் இருப்பதாக நாம் நினைத்துக் கொள்வது நம்முடய மாபெரும் சிந்தனைக் கோளாறு, என்றே சொல்ல வேண்டும்.*
ஷரீஆ கல்வியில் பல கலைகள் இருக்கின்றன. தஃப்ஸீர், தஃப்ஸீர் செய்வதற்கான அடிப்படை விதிகள் அடங்கிய உசூலுத்தஃப்ஸீர், குர்ஆனை முறையாக ஓதுவதற்கு உறுதுணையாக இருக்கும் தஜ்வீதுக்கலை, இஸ்லாத்தின் சரியான உண்மையான அகீதா எனும் கொள்கையியல்,
ஹதீஸ், நபிமொழிகளின் வார்த்தைகளுக்கு மொழியியல் மற்றும் மார்க்கவியல் விளக்கம் சொல்வதற்கான இல்மு திராயதில் ஹதீஸ், நபிமொழிகளை அறிவிக்கும் அறிவிப்பாளர் வரிசைகள் தொடர்பான இல்மு ரிவாயதில் ஹதீஸ், அதிலும் நபிமொழி அறிவிப்பாளர்களின் அறிமுக வரலாற்றை விளக்கும் இல்மு அஸ்மாயிர் ரிஜால், அறிவிப்பாளர் வரிசையின் பல படித்தரங்களை ஆய்வு செய்து ஒவ்வொரு நபிமொழியின் நம்பகத்தன்மையை நிர்ணயிக்கும் இல்மு திராஸதில் அஸானீத்,
மனதை சுத்தப்படுத்தும் தஸவ்வுஃப், மக்களின் வாழ்வியல் மற்றும் வணக்கவியல் தொடர்பான சட்டப்பிரச்சினை பற்றி அலசும் இல்முல்ஃபிக்ஹ், ஃபிக்ஹ் சட்டங்களை தொகுத்தெடுக்கும் வழிமுறைகளை வகுத்துக் கொடுக்கும் இல்மு உசூலில் ஃபிக்ஹ்,
சர்வதேச மற்றும் தேசிய அளவில் தொகுக்கப்படும் மார்க்க நூற்களின் மொழிகளான அரபி மற்றும் உர்தூ போன்ற மொழியறிவு, அரபி இலக்கண இலக்கியத்தை சொல்லித்தரும் மன்திக், மஆனீ, நஹ்வு, ஸர்ஃப், மற்றும் லுகா போன்ற அரபி மொழியைக் கற்றுத்தரும் மொழிச்சட்டவியல்,
தொழுகை நேரங்கள் அறிதல், கிப்லா அமைத்தல் மற்றும் தலைப்பிறைத் தொடர்பான தகவல்களை சொல்லித்தரும் இல்முல் ஃபலக் எனும் விண்ணியல்,
ஒருவர் இறந்த பின் சொத்துக்களை பங்கீடு செய்வதற்கான நடைமுறை அனுபவ உதாரணங்களின் மூலம் பயிற்சி கொடுக்கும் இல்முல் ஃபராயிள்,1440 ஆண்டுகள் மட்டுமல்ல ஆதம் நபி முதல் இன்று வரையிலான இஸ்லாமிய மற்றும் இந்திய வரலாற்றுத் துறை, அரபி, உர்தூ நூற்களை சுயமாக வாசித்து பயிற்சி பெறும் முதாலாஆ எனும் நூலாய்வு போன்ற எண்ணற்ற கலைகளை இந்த குறிப்பிட்ட ஆண்டுகளில் கற்றுத் தேர வேண்டும்.
*இந்த அனைத்துக் கலைகளிலும் குறிப்பிட்ட வருடங்களில் கண்டிப்பாக முழுமை அடைய முடியாது. ஒவ்வொரு துறையிலும் ஏதோ சில குறிப்பிட்ட நூற்களை மட்டுமே கற்றுக் கொடுக்க முடியும்.*
மத்ஹபுகளை மறுக்கும் கைரு முகல்லிதீன்கள் உருவாகும் வரை ஹதீஸ் அறிவிப்பாளர் வரிசை தொடர்பான துறைகளில் மத்ரஸாக்களில் கூட அந்த அளவுக்கு விழிப்புணர்வு இல்லை, என்று தான் சொல்ல வேண்டும். ஃபிக்ஹுடைய சட்டங்களில் சில கிதாபுகள் மட்டுமே படித்து விட்டு வெளியேறும் போது சமூகத்தில் ஏற்படும் அனைத்து பிரச்சினைகளுக்கும் உடனடியாக தீர்வு சொல்வது என்பது அவ்வளவு எளிதான காரியமன்று.
வரலாற்றுத் துறையை எடுத்துக் கொண்டால் மிகவும் விரிவானது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய வரலாறு, அதையடுத்து நபித்தோழர்கள், தாபியீன்கள், நல்லோர்கள், பின்னர் வந்த இஸ்லாமிய ஆட்சியாளர்கள் வரலாறு, நபிமார்களின் வரலாறு, உலக நாடுகளில் இஸ்லாம் பரவிய வரலாறு, இன்றைய இஸ்லாமிய வளர்ச்சி வரலாறு, இஸ்லாமிய ஆட்சி உலகில் பரவிய வரலாறு, இஸ்லாமிய சமூகம் சாதித்த சாதனைகள் வரலாறு, சமூகம் சந்தித்த சோதனைகள் வரலாறு, யுத்த வரலாறு, இஸ்லாமிய அரசியல் கட்டமைப்பு வரலாறு என வரலாற்றுத் துறை விரிந்து கொண்டே செல்லும்.
*ஆனால், இவையனைத்தையும் முறையாகவும் முழுமையாகவும் சொல்லிக் கொடுப்பதற்கான அவகாசம் கிடையாது. இதற்கிடையே பட்டப்படிப்புகளையும் சேர்த்துக் கொண்டால் ஆலிமிய்யத்தின் தரம் எந்நிலையில் இருக்கும்? என்பதை புரிந்து கொள்ள முடியும்.*
எழுத்தாற்றலும் பேச்சாற்றலும் இருப்பது மட்டுமே திறமையான அறிஞருக்கு அடையாளம், என்பதை யாரும் ஏற்க மாட்டார்கள்.
இஸ்லாமிய வரலாற்றுத்துறை தொடர்பாக முழுத் தகவல்களையும் விரல் நுனியில் வைத்திருப்பவர்கள் தமிழகத்தில் எத்தனை பேர் இருப்பார்கள்?மார்க்கச் சட்ட விஷயத்தில் எக்கேள்விக்கும் உடனடியாக தீர்வு காண்பவர்கள் எத்தனை பேர் இருப்பார்கள்?
*ஹதீஸ் துறையில் இல்மு ரிவாயதில் ஹதீஸ், இல்மு திராயதில் ஹதீஸ், இல்மு அஸ்மாயிர்ரிஜால், இல்முல் அஸானீத், உட்பட நபிமொழியின் அனைத்துத் துறைகளிலும் கரை கண்டவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்?*
*அப்படி யாருமே இல்லை, என்று சொல்ல வரவில்லை.*
*ஆனால், மார்க்கவியல் தொடர்பான தஃப்ஸீர், ஹதீஸ், ஃபிக்ஹ், தஜ்வீத், கிராஅத், அகீதா, என ஒவ்வொரு துறையிலும் முழுமையாக தேர்ச்சி அடைந்த ஒரு குழு ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு காலத்திலும் இருக்க வேண்டாமா? அதிலும் ஒரு குழு தஃப்ஸீரில் மட்டுமே ஆய்வு செய்பவர்களாக இருக்க வேண்டும். மற்றொரு குழு ஹதீஸில் மட்டும் ஃபிக்ஹில் மட்டும் தஜ்வீதில் மட்டும் இப்படி ஒவ்வொரு துறையிலும் தடம் பதிக்கக் கூடிய தனித்தனிக் குழு இருக்க வேண்டாமா? அப்படியில்லையானால் உங்களில் ஒரு பிரிவினர் மார்க்கத்தை விளங்குவதற்கு தயாராக வேண்டாமா? என்று ஆர்வமூட்டக்கூடிய உத்தரவிடக்கூடிய குர்ஆன் வசனத்திற்கு என்ன தான் பொருளாகும்?!*
*மருத்துவத்துறை விவசாயத்துறை போன்ற ஒவ்வொரு துறைசார்ந்த வல்லுணர்கள் ஒவ்வொரு ஊரிலும் இருக்கும் போது மார்க்கக்கல்விக்காககே தங்களை அர்ப்பணிக்கக்கூடிய தனித்தனி குழுக்கள் ஒவ்வொரு ஊரிலும் உருவாவதற்கு நாம் எப்பொழுது தான் முயற்சி செய்யப் போகிறோம்!*
*(தலையங்கம்,* *யூசுஃபிய்யா ராஷித் மாதஇதழ் ஜூன் 2019)*
No comments:
Post a Comment