Tuesday, 30 April 2013

தஜ்ஜாலிய கலாச்சாரமும் சூரத்துல் கஹ்ஃபும்



தஜ்ஜாலிய கலாச்சாரமும் சூரத்துல் கஹ்ஃபும்
சூரத்துல் கஹ்ஃபுடைய முதல் பத்து வசனங்களை யார் மனனம் செய்கிறாரோ அவர் தஜ்ஜாலை விட்டும் பாதுகாக்கப்படுவார் (அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி), நூல்: முஸ்லிம்)
வெள்ளிக்கிழமை யார் இந்த அத்தியாயத்தை (முழுவதையும்) ஓதுவாரோ அவர் (அடுத்த) எட்டு நாட்கள் வரை எல்லா (வகையான) ஃபித்னா- குழப்பங்களை விட்டும் பாதுகாக்கப்படுவார். (கொள்கை ரீதியான ஃபித்னாவாகிய) தஜ்ஜால் வெளிப்பட்டாலும் அவனிடமிருந்தும் பாதுகாக்கப்படுவார். (அறிவிப்பவர்: அலீ (ரலி) நூல் அல்முக்தாரா - லில் ஹாஃபிழில் ளியாவு முகத்தஸீ - தஃப்ஸீரு இப்னு கஸீர்)
தஜ்ஜாலுடைய கொள்கைக் குழப்பம்:
இந்த அத்தியாயத்திற்கும் தஜ்ஜாலுடைய கொள்கைக் குழப்பங்களிலிருந்து பாதுகாப்பு கிடைப்பதற்கும் மத்தியில் நெருங்கிய தொடர்பு இருப்பதை மேற்கூறப்பட்ட நபி மொழிகளிலின் மூலம் விளங்க முடிகிறது. இந்த சூராவை அர்த்தம் விளங்கி ஓதும் போது தஜ்ஜாலுடைய ஃபித்னாவிலிருந்து எதன் மூலம் பாதுகாப்பு கிடைக்கும் என்பதை அறிந்து கொள்ளலாம். சோதனை பல விதங்களில் வரலாம். வறுமை, பஞ்சம், பசி, பட்டினி ஏற்படலாம். கொடுமையான வியாதிகள் ஏற்படலாம். இவற்றையெல்லாம் கூட சிரமப்பட்டாவது மறுமையின் நன்மைகளை மனதில் வைத்து சகித்துக் கொள்ளலாம். ஆனால் நம்முடைய இறைநம்பிக்கை எனும் கொள்கைக்கு வரும் சோதனை தான் மிக ஆபத்தானது. தஜ்ஜாலுடைய சோதனையின் மூலம் மக்களுடைய ஈமானுக்கே ஆபத்து வந்துவிடும். அதிலிருந்து பாதுகாப்பு கிடைப்பதற்கு குர்ஆனில் நமக்கு ஓர் அத்தியாயம் கிடைத்திருக்கிறது, என்றால் நாம் அதற்காக பெரும்பபடாமல் இருக்க முடியுமா என்ன? தஜ்ஜாலுடைய அந்த கொள்கைக் குழப்பம் என்னவென்று சுருக்கமாக பார்க்கலாம். நபி ஆதம் (அலை) அவர்ளைப் படைத்தது முதல் கியாம நாள் வரை (குழப்பத்தை விளைவிக்கும்) தஜ்ஜாலைவிட ஒரு கொடிய படைப்பு எதுவும் இல்லை, என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: முஸ்லிம்)
தூரம் சுருங்கிவிடும்:
உலகின் இயற்கை சதானங்களின் மீது அவனுக்கு அசாதரணமான சக்தி கிடைத்து விடும். அவனிடம் தூரம் என்பது ஒரு பொருட்டாகவே இருக்காது. அவனுடைய அதிவேகத்தைப் பற்றி நபிமொழிகளில் காற்று மழையை இழுத்துச் செல்வதைப் போன்று (முஸ்லிம்) என்றும் கூறப்பட்டுள்ளது. விமானங்களும் அதிவிரைவு விண்கலங்களும் இருக்கும் இன்றைய உலகில் இதை விளங்குவது சிரமமாக இருக்காது. நபித்தோழர்கள் இவற்றின் மீது ஈமான் கொண்டது தான் மெச்சத் தக்கது.
நாற்பது நாட்களில் எந்த ஊரையும் சென்றடையாமல் விட மாட்டேன் என்று தஜ்ஜால் தன்னைப்பற்றி சொல்லும் தகவலை நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: முஸ்லிம்) ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா என ஒவ்வொருகண்டத்திலும் உள்ள குறிப்பிட்ட ஒரு நாட்டுக்கு மட்டுமோ அல்லது நாடுகளின் தலைநகரங்களுக்கு மட்டுமோ அல்லது பெருநகரங்களுக்கு மட்டுமோ அல்ல. மக்கா, மதீனா தவிர மூலை முடுக்கில் உள்ள அனைத்து குக்கிரமாங்கள் சிற்றூர், பேரூர் உட்பட உலகின் அனைத்து பகுதிகளுக்கும் நாற்பது நாட்களில் தஜ்ஜால் சென்றுவிடுவான்.
அவனுடைய வாகனம் கழுதை என்றும் அந்தக் கழுதையின் அதிவிரைவு பற்றியும் சில அறிவிப்புகளில் கூறப்பட்டுள்ளது. அநேகமாக இதை ஒரு உதாரணத்திற்காக சொல்லப்பட்டிருக்கலாம். இன்று மீன் வடிவத்தில் விமானம் தயாரிக்கப்படுகின்றன. பிற்காலத்தில் கழுதை வடிவத்தில் ஏதும் வாகனம் தயாரிக்கப்படலாம்.
உலகம் முழுவதும் கேட்கும்:
சப்தத்தைக் கேட்கும் விஷயத்திலும் தஜ்ஜாலுக்கு உலகம் சுருக்கிக் கொடுக்கப்ட்டிருக்கும். ஒரு தடவை அலி (ரலி) அவர்கள் தஜ்ஜால் பற்றி பேசிக்கொண்டிருக்கும் போது, தஜ்ஜாலுடைய சப்தம் மேற்கு, கிழக்கு திசைக்கு மத்தியில் உள்ள அத்தனையும் கேட்குமளவுக்கு பலமாக இருக்கும், என்று கூறினார்கள். (கன்ஜுல் உம்மால்) சிகிச்சை விஷயத்திலும் அபரிமிதமான முன்னேற்றத்தை அவன் அடைந்திருப்பான். பிறவிக்குருடையும் குஷ்டரோகத்தையும் குணப்படுத்தும் சக்தியையும் பெற்றிருப்பான். ( கன்ஜுல் உம்மால்)
நீர்வளமும் நில வளமும் அவன் வசம்:
பூமியின் ஆறுகள் அவனுக்கு வசப்படுத்திக் கொடுக்கப்பட்டிருக்கும், என்று நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள். (மஜ்மவுஸ்ஸவாயித்) தண்ணீருடைய முழுக்கட்டுப்பாடும் அவன் வசம் இருக்கும். எனவே, நிலத்தின் விளைச்சலை நிர்வகிப்பதும் அவனுடைய கையில் தான் இருக்கும். அதற்கும் மேலாக மேகத்தை தன் இஷ்டத்திற்கு பயன்படுத்தும் தொழில்நுட்பமும் அவனுக்குத் தெரியும். வானத்திற்கு பெய் என்று அவன் உத்தரவிட்டால் மழை பெய்யும். பூமிக்கு உத்தரவிட்டால் விளையும், என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்) தாவர இனத்தின் மீது மட்டுமல்ல; நிலத்தடிச் சுரங்கங்களில் உள்ள பொக்கிஷங்களை தஜ்ஜால் அசாதாரணமான முறையில் வெளிப்படுத்துவான். பயன் படாத தரிசு நிலத்தை அவன் கடந்து சென்றால் பூமியைப் பார்த்து உன்னுடைய பொக்கிஷங்களை வெளியாக்கு! என்று உத்தரவிடுவான். உடனடியாக அவனுக்குப் பின்னால் அவையனைத்தும் வந்து விடும், என்றும் நபி (ஸல்) அவர்க்ள கூறினார்கள். (முஸ்லிம்)
இறந்தவர்கள் உயிர் பெறுதல்:
தஜ்ஜால் இறந்தவர்களை உயிர்ப்பிப்பான். நல்ல வாலிபர் ஒருவரை அழைத்து வாளால் இரண்டு துண்டாக வெட்டுவான். பிறகு அவனை அழைப்பான். அவன் மீண்டும் உயிர் பெற்று சிரித்தவனாக வருவான், என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்) கொள்கைக் குழப்பத்தை உண்டாக்குவதில் தஜ்ஜால் இத்துடன் முடித்துக்கொள்ளமாட்டான். இறந்துபோன தாய், தந்தையர்கள், சகோதரர்கள் போன்றவர்களுடைய உருவத்தில் ஷைத்தான்களை எழுப்புவான். அவர்கள் தம்முடைய தந்தை மற்றும் சகோதரரிடம் வந்து நான் இன்னார் இல்லையா? என்னைத் தெரியாதா? என்று கேட்பார்கள். தஜ்ஜால் ஒரு கிராமவாசியிடம் சென்று நான் உன்னுடைய தாய், தந்தயர்களை உயிராக்கி எழுப்பி விட்டால் என்னை இறைவன் என்று ஏற்றுக் கொள்வாயா? என்று கேட்பான். அதற்கு கிராமவாசி சரி என்று கூறுவான். தாய், தந்தையின் உருவத்தில் இரண்டு ஷைத்தான்கள் தோன்றுவார்கள். அவ்விருவரும் மகனே! தஜ்ஜால் சொல்வதைக் கேள்! அவன் தான் உன் இரட்சகன் என்று கூறுவார்கள்.  (இப்னுமாஜா) இப்படிப்பட்ட சூழலில் நம்முடைய இறைநம்பிக்கையை பாதுகாப்பது எவ்வளவு கஷ்டமான காரியம் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. தஜ்ஜாலுடைய கொடிய கொள்கைக் குழப்பத்தை விட்டும் அல்லாஹ் நம்மைக் காப்பானாக!
நவீனமயம் கூடாதா?
முனாஜிர் அஹ்ஸன் கீலானி (ரஹ்) அவர்கள் தஜ்ஜாலீ ஃபித்னா கே நுமாயா கத்தோகால் என்ற தங்களுடைய நூலில் இந்த நபிமொழிகளை கூறியபின் இயற்கைச் சக்திகளை அசாதாரணமாக உபயோகிப்பது மனிதனை தஜ்ஜாலாக ஆக்கி விடுமா? என்பது பற்றி ஓர் ஆய்வை மேற்கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய ஆய்வின் சாராம்சம் இது தான்: கண்டிப்பாக அவனை தஜ்ஜாலாக ஆக்கிவிடாது. குர்ஆனுடைய பார்வையில் விஞ்ஞான ரீதியான முன்னேற்றம் வரவேற்கத் தகுந்ததே! நபிமார்களுடைய அற்புதங்கள் பற்றி குர்ஆனில் பரவலாக கூறப்பட்டுள்ளது.  பலதுறைகளில் விஞ்ஞான முன்னேற்றம் ஏற்படுதால் மனிதனுடைய நிலை எப்படி மாறுகிறது? அல்லாஹ்வின் பக்கம் நெருக்கி வைக்கிறதா? தூரமாக்குகிறதா? என்பது தான் முக்கியம். தஜ்ஜால் தன்னுடைய இந்த அபரிமிதமான சக்தியைக் கொண்டு தானும் அல்லஹ்வுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபடுவான். மற்றவர்களையும் அல்லாஹ்வுக்கு எதிரிகளாக ஆக்கிவிடுவான். தஜ்ஜாலுடைய கொள்கைக் குழப்பத்திலிருந்து தற்காத்துக் கொள்வதற்கு பெரிய படிப்பறிவோ விஞ்ஞான அறிவோ தேவையில்லை. உண்மையான இறைநம்பிக்கை மட்டும் இருந்தால் போதும். தஜ்ஜாலை அடையாளம் கண்டு கொள்ளலாம். அவனுடைய இரண்டு கண்களுக்கு மத்தியில் காஃபிர் என்று அறிவிக்கும் மூன்று எழுத்துக்கள் எழுதப்பட்டிருக்கும். அதை எழுதத் தெரிந்தவர், எழுதத் தெரியாதவர் என ஒவ்வொரு இறைநம்பிக்கையாளரும் படித்துக் கொள்வார், என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி) தஜ்ஜாலிடம் பெண்கள்:
தஜ்ஜாலுடைய கழுதைக் கலாச்சாரத்தின் மூலம் உலகமே இறைநிராகரிப்பை நோக்கி சென்றுவிடும். எனவே தான், யாருக்காவது தஜ்ஜாலை சந்திக்கக்கூடிய நிலை ஏற்பட்டுவிட்டால் அவர், அவனை விட்டும் வெகு தூரத்தில் இருந்து கொள்ளட்டும், என்று கூறிவிட்டு அல்லாஹ்வின் மீது ஆணையாக ஒரு மனிதர் தன்னை தான் உண்மையான முஃமின் - முஸ்லிம் தான் (தஜ்ஜால் சொல்வதைக் கேட்க மாட்டேன்) என்று நினைத்துக் கொண்டு தான் அவனிடம் வருவார். ஆனால் அவனிடம் வந்தவுடன் அவன் சொல்வதைக் கேட்க ஆரம்பித்து விடுவார். அதனால் (இஸ்லாத்தைப் பற்றி தேவையில்லாத) சந்தேகங்கள் வர ஆரம்பித்து விடும். (அபூதாவூத்) இந்த நபிமொழியின் மூலம், தஜ்ஜாலுக்கு மற்றவர்களின் சிந்தனையை தவறான வழியில் திசை திருப்பி விடுவதிலும் அபரிமிதமான திறமை இருக்கும் என்று தெரிகிறது. ஆண்களை விட பெண்களும் அதிகமாக அவனுடைய வலையில் சிக்குவார்கள். தஜ்ஜாலிடம் வரக்கூடியவர்களில் அதிகமானோர் பெண்களாக இருப்பார்கள். ஒரு மனிதர், தன்னுடைய தாய், மகள், சகோதரி, மாமி போன்றோர்களை (அவனுடைய தீங்கிலிருந்து காப்பதற்காக) கயிற்றால் கட்டி வைத்திருப்பார், என்றும் நபி (ஸல்) கூறியுள்ளார்கள்.      (முஸ்னத் அஹ்மது)
இது தஜ்ஜாலுடைய காலமா?:
சிலர் அவசரப்பட்டு ஐரோப்பா, மற்றும் அமெரிக்காவின் முன்னேற்றத்தைப் பார்த்துவிட்டு நபிமொழிகளில் அறிவிக்கப்பட்ட தஜ்ஜாலே வந்து விட்டதாக கூறிவிட்டனர். ஆனால் இந்த முடிவு சரியானதல்ல. அதிவிரைவு வாகனங்கள், அலைபேசிகள் போன்ற பல துறைகளில் மேற்கத்திய நாடுகள் பெரும் முன்னேற்றத்தை கண்டிருக்கின்றன, என்பது மட்டுமல்ல; அவற்றின் மூலம் இறைநிராகரிப்பை நோக்கியே செல்கின்றன. தேவாலயங்களில் மக்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. மேற்கத்திய நாடுகள் ஆத்திக நாடுகளாக இருந்தாலும் மதமே இல்லை என்ற சிந்தனையை உருவாக்குவதில் இந்த தொழில்நுட்பங்கள் பெருமளவில் பங்கெடுத்துக் கொள்கின்றன, என்பதை விளங்குவதற்கு ஈமான் மட்டுமே போதும். பெரிய படிப்பறிவு ஒன்றும் தேவையில்லை. இந்த நவீன மயம் தஜ்ஜாலுடைய கழுதைக் கலாச்சாரத்தையே பரவலாக்கிக் கொண்டிருக்கிறது. (அவனுடைய வாகனம் கழுதை என்று கூறப்பட்டிருப்பதால் அவனுடைய கலாச்சாரம் கழுதைக் கலாச்சாரம் என்று சொல்கிறோம்.) நபிமார்களின் போதனைகளை வேண்டாத ஒன்றாக காட்டுகிறது. எவ்வளவு தான் உஷாராக இருப்பவரையும் அந்தக் கலாச்சாரம் இஸ்லாத்தைப் பற்றிய தவறான சந்தேகங்களை உண்டாக்கி விடுகிறது. ஒரு இறைநம்பிக்கையாளன் தஜ்ஜாலிடம் செல்வான். திரும்பி வரும் போது விதவிதமான சந்தேகத்துடன் திரும்பி வருவான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதை இங்கு நினைவுகூரத்தக்கது. எனினும் இன்னும் தஜ்ஜால் வரவில்லை. தஜ்ஜால் வருவதற்குரிய உலகத்தை இன்றைய தஜ்ஜாலிய கலாச்சாரம் உருவாக்கிக் கொண்டிருக்கிறது, என்று சொல்லலாம். தஜ்ஜால் வராவிட்டாலும் அவனுடைய கொள்கைக் குழப்பத்திற்கான சூழல்கள் வெளிப்பட்டுவிட்டன, என்றே சொல்ல வேண்டும். ஏன்? நபி (ஸல்) அவர்களே மஸீஹுத் தஜ்ஜால் வருவதற்கு முன்னால் நிறைய தஜ்ஜால்கள் தோன்றுவார்கள், என்று கூறியிருக்கிறார்களே!  (முஸ்னத் அஹ்மத், முஸ்னத் அபு யஃலா, தப்ரானீ)  அவர்களுக்கும் தஜ்ஜால் என்று பெயர் வைக்கப்பட்டிருப்பதால் கடைசியில் வரும் தஜ்ஜாலுடைய கொள்கைக் குழப்பத்திற்கு முன்மாதிரியாகவே இவர்களுயை குழப்பங்களும் அமையும் என்பதை விளங்க முடிகிறது.
தஜ்ஜால் - சூரத்துல் கஹ்ஃப்:
கஹ்ஃப் அத்தியாயத்தின் மூலம் இந்தக் கொடுமையான கொள்கைக் குழப்பத்திலிருந்து பாதுகாப்பு கிடைக்கிறது, என்றால் இந்த அத்தியாயத்தில் அப்படி என்ன தான் இருக்கிறது? என்று கேட்கத் தோன்றுகிறது. நிறையவே இருக்கிறது. தஜ்ஜாலுடைய தாக்குதலை எதிர்க்கக் கூடிய ஈமானுடைய - இறைநம்பிக்கையின் பலத்தை அதிகரிக்கக் கூடிய ஏராளமான செய்திகள் இந்த அத்தியாயத்தில் கூறப்பட்டுள்ளன. இறைநம்பிக்கைக்கும் காசு, பணம், போன்ற உலகியல் ரீதியான சக்தியின் மீது ஏற்படும் நம்பிக்கைக்கும் மத்தியில் நடக்கும் போராட்டம் தான் தஜ்ஜாலுடைய ஃபித்னாவாகும். இந்த அத்தியாயத்தின் ஆரம்பத்திலிருந்து கடைசி வரை அழிந்து போகக் கூடிய உலக சக்தி எதற்கும் உதவாது, உறுதியான இறைநம்பிக்கையே உண்மையான வெற்றியைத் தேடித்தரும் என்ற கருத்தை வலியுறுத்தக் கூடிய வசனங்களும் சரித்திரங்களும் உதாரணங்களும் போதுமான அளவுக்கு கூறப்பட்டுள்ளன. குகைவாசிகளுக்கு ஒரு பக்கம் அரச மரியாதையுடன் நிம்மதியான வாழ்க்கை. மறுபக்கம் இருண்ட, குறுகிய குகையில் நெருக்கடியான வாழ்க்கை. ஆனால் வெளிப்படையான உலகியல் சுகத்தைத் தேர்ந்தெடுத்தால் அவர்கள் கொண்டிருந்த ஏகத்துவக் கொள்கையை விடவேண்டியிருக்கும். அதே சமயம் வெளிப்படையாக இருண்ட குகையில் நெருக்கடியான வாழ்க்கை வாழ்ந்தாலும் ஈமானைத் தக்கவைத்துக் கொள்ளமுடியும். தஜ்ஜாலுடைய ஃபித்னாவுக்கு ஒப்பான இந்த போராடட்த்தில் குகைவாசிகள் ஈமானுக்கே முதலிடம் கொடுத்தார்கள். அவர்கள் சுகபோக வாழ்க்கையை விட்டு விட்டு கொள்கைக்காக நெருக்கடியான வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்தார்கள். எனவே, அல்லாஹ் அவர்களுக்கு தன்புறத்திலிருந்து நேரடியாக உதவினான். இது போன்ற நிறைய தகவல்கள் இந்த அத்தியாயத்தில் அல்லாஹ் கூறுகிறான். அவற்றை விளங்கி ஓதும் போது மனதில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. அல்லாஹ் தௌஃபீக் செய்யட்டும்.

இஸ்லாமியப் பொருளாதாரம்



இஸ்லாமியப் பொருளாதாரம்

தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ் போன்றவை இஸ்லாத்தின் முக்கியக்கடமைகள். அவ்வாறே வாழ்வியல் சார்ந்த மற்ற துறைகளிலும் இப்படித்தான் செயல்பட வேண்டுமென்று மார்க்கம் வழி காட்டியிருக்கிறது. நபி (ஸல்) அவர்களின் காலம் முதற்கொண்டு பொருளியலையோ குடும்பவியலையோ மார்க்கத்திற்கு அப்பாற்பட்டதாக பார்க்கப்பட்டதில்லை. வியாபார நடைமுறைகளில் எவை கூடும்? எவை கூடாது? என்பது பற்றி நபித்தோழர்கள் நபியவர்களிடம் வந்து விளக்கம் கேட்ட அதிகமான நிகழ்வுகளை ஹதீஸ் கிரந்தங்களில் காணமுடியும். எனினும் அந்நிய ஆக்கிரமிப்புகள் இஸ்லாமிய நாடுகளில் நுழைந்தபின் வெளிப்படையான வணக்கவழிபாடுகள் மட்டுமே மார்க்கம் என்பது போன்ற மாயை தோற்றுவிக்கப் பட்டுவிட்டது. குறிப்பாக பொருளியலுக்கும் மார்க்கத்திற்கும் எந்தத் தொடர்புமில்லை, என்ற சித்தாந்தம் ஆழ்மனதில் பதியவைப்பதற்கு மேற்குலகம் பெருமுயற்சி செய்திருக்கிறது.
இஸ்லாத்தைப் பொறுத்தவரை பொருளாதாரம் என்பது வாழ்வாதாரம் என்பதில் சந்தேகமில்லை. உணவைத் தேடி சந்திர மண்டலத்துக்குச் செல்லத் தேவையில்லை. மக்கள் குடியிருக்கும் இடத்திலேயே - பூமியிலேயே வாழ்வாதாரத்தை அல்லாஹ் ஏற்படுத்திக் கொடுத்ததாகக் குர்ஆன் கூறும். நாம் பூமியில் வாழ்வதற்கு திட்டமாக இடமளித்தோம். அங்கேயே உங்களுக்குத் தேவையான வாழ்க்கைச் சாதனங்களையும் அமைத்துக் கொடுத்தோம். எனினும் நீங்கள் மிக மிகக் குறைவாகவே நன்றி செலுத்துகிறீர்கள்.  (அல்குர்ஆன் - 7:10) தன்னுடைய செல்வத்தை (மற்றவர் பறிப்பதை விட்டும்) பாதுகாக்கும் சமயம் கொல்லப்பட்டால் அவர் ஷஹித் - மார்க்கத்திற்காக தியாகம் செய்த வீரர் என்று நபியவர்கள் கூறினார்கள். ( முஸ்லிம்) தானதர்மம் செய்வது நல்ல காரியம். அதற்காக நாம் ஏமாற்றப்பட்டோ அல்லது நம்முடைய கோழைத்தனத்தாலோ நம்முடைய செல்வம் யாராலும் பறிக்கப்பட்டுவிடக்கூடாது. செல்வத்தை சரியான வழியில் சம்பாதித்தலும் நல்ல வழியில் செலவழித்தலும் அதை ஒரு உயர்ந்த வணக்கமாக்கி விடுகிறது. தான் மற்றவர்களிடம் யாசகம் கேட்காமல் இருப்பதற்காகவும் தன்னுடைய குடும்பத்தினருக்கு சம்பாதிப்பதற்காகவும் அண்டை வீட்டாருக்கு கரிசனம் காட்டுவதற்காகவும் யார்  ஆகுமாக்கப்பட்ட (ஹலாலான) உலகப் பொருட்களை தேடி சம்பாதிக்கிறாரோ அவர் அல்லாஹ்வை கியாம நாளில் முகம் பௌர்ணமியைப் போல இருக்கும் நிலையில் சந்திப்பார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (தப்ரானீ)
இஸ்லாமியப் பொருளாதாரத்தைப் பற்றி சுருக்கமாகச் சொல்வதானால் அது ஹலாலாக இருக்க வேண்டும். அதை ஈட்டும்போது, அதை விட முக்கியமான கடமைகள் பாதிக்கப்படக் கூடாது. ஹராமான வழியில் சம்பாதிக்கக் கூடாது, என்பது மட்டுமல்ல; முக்கியக் கடமைகளை புறந்தள்ளிவிட்டும் ஹலால் சம்பதிக்கக் கூடாது. ஹலாலான வருமானத்தைத் தேடுவது (முக்கிய) கடமைக்குப் பிறகு அவசியமானதாகும், என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: பைஹகீ) இந்த நபிமொழியில் ஆகுமான முறையில் பொருளீட்டுவது பற்றி வலியுறுத்திக் கூறப்பட்டுள்ளது. அதே சமயம் அதை எவ்விதம் செய்ய வேண்டும்? என்பது பற்றியும் தெளிவாக உணர்த்தப்பட்டுள்ளது. தொழுகை, நோன்பு, ஜக்காத், ஹஜ் போன்ற முக்கிய வணக்க வழிபாடுகளே அடிப்படையான கடமைகள். இறை நம்பிக்கை இல்லாமல் எந்த நல்ல அமல்களும் ஏற்றுக்கொள்ளப்படாது என்பதைப் போல் இந்த அடிப்படையான கடமைகள் இல்லாமல் குடும்பவியல், சமூகவியல், அரசியல், பொருளியல் என எந்தத் துறையும் சீர்பெற முடியாது. இறைவழிபாடின்றி இரைத் தேடலில்லை:
இறைவனை நினைவுகூருவதை விட்டும் தொழுகையை நிலைநாட்டுவது மற்றும் ஜகாத் கொடுப்பதை விட்டும் வியாபாரமும் கொடுக்கல வாங்கலும் அவர்களைப் பாராமுகமாக்கி விடாத மனிதர்கள் (இறையில்லங்களில் இறைவனை துதித்துக் கொண்டிருக்கிறார்கள்) அல்குர்ஆன் 24:36) பொருளாதாரத்தை விட அருளாதாரத்த்திற்கு முதலிடமும் முக்கியத்துவமும் கொடுப்பவர்களை இந்த இறைவசனம் வியந்து பாராட்டுகிறது. ஒரு மருத்துவர் கிளினிக் வைத்திருக்கிறார். நோயாளிகள் வரிசையில் காத்திருக்கிறார்கள். தொழுகை நேரமாகி விட்டது. அல்லது அந்தத் தொழுகையின் நேரம் முடியப் போகிறது. இந்நிலையில் நோயாளிகளுக்கு சிகிச்சை செய்வதன் மூலம் மக்கள் சேவையில் தானே ஈடுபட்டிருக்கிறேன். நான் தொழுக்ககுச் சென்று விட்டால் இந்தச் சேவையும் பாதிக்கப்பட்டு விடும். நோயாளிகளும் சிரமப்படுவார்களே! என்று வியாக்கியானம் பேசி தொழுகையை பிற்படுத்துவதை மார்க்கம் அனுமதிக்காது. பொதுசேவையைக் காரணம் காட்டி தொழுகை போன்ற முக்கியக் கடமைகளை ஒதுக்கிட முடியாது.
நம்முடைய வருமானம ஹலாலானதாக இருக்க வேண்டும். அடுத்தவருடைய செல்வம் நமக்கு வருகிறதென்றால் அது வியாரம், கடன், வஸிய்யத், வாரிசுரிமை, அன்பளிப்பு போன்ற முறையான ஒப்பந்தங்களின் அடிப்படையில் வரவேண்டும். இறைநம்பிக்கையாளர்களே! உங்களில் ஒருவர் மற்றொருவரின் பொருளைத் தவறான முறையில் உண்ணாதீர்கள். (பொருளீட்டுவதற்கு) உங்களுக்கிடையில் பரஸ்பர விருப்பத்தின் அடிப்படையில் கொடுக்கல் வாங்கல் இருக்க வேண்டும்... (அல்குர்ஆன்- 4:29) நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ஜத்துல்விதாவின் போது மக்களே! நான் சொல்வதைக் கேளுங்கள் நீங்கள் (நிம்மதியாக) வாழ்வீர்கள். அநியாயம் செய்யாதீர்கள், என்று மூன்று தடவை கூறிவிட்டு உங்களில் யாருடைய செல்வமும் அவருடைய முழுமையான மனதிருப்தியின்றி ஹலால் ஆகாது என்று கூறினார்கள் (முஸ்னத் அஹ்மது - 20714)
அல்லாஹ் மற்றும் அவனுடைய தூதருடைய வழிகாட்டல் படி வாழும்போது நிம்மதியாக வாழ முடியும். தவறான வழியில் சம்பாதித்து தான் வாழ வேண்டுமென்ற அவசியமில்லை. ஹலாலான வழியில் மட்டும் சம்பாதிக்கும் போது அல்லாஹ்வின் உதவியும் கண்டிப்பாக வரும். உரியவருடைய முழு மனதிருப்தி இருந்தால் தான் அந்த பொருள் ஹலால் ஆகும், என்று நபியவர்கள் எச்சரிக்கிறார்கள். இன்று வரதட்சணை மற்றும் சீர்வரிசை பற்றி என்ன சொல்வது? அவற்றையெல்லாம் ஏதோ ஒரு வகையில் பிடுங்கி சாப்பிட்டுவிட்டால் நம்முடைய துஆக்கள் எப்படி ஏற்றுக்கொள்ளப்படும். ஹராமான உணவில் வளர்ந்த சதை நரகத்திற்குப் போகும் என்று இறைத்தூதர் (ஸல்) எச்சரித்திருக்கிறார்களே! அவற்றையெல்லாம் நாம் எந்த அளவுக்கு கவனத்திற்கு கொண்டுவருகிறோம், என்று யோசிக்க வேண்டும். வட்டி, சூதாட்டம், லஞ்ச ஊழல், ஏமாற்று, மோசடி போன்றவை மார்க்கத்தில் மிகமிகக் கடுமையான முறையில் தடை செய்யப்பட்டிருக்கிறது, என்பது எந்த முஸ்லிமுக்குத் தான் தெரியாது. நபியை விமர்சித்ததற்காக அவர்களை எதிர்த்து நாம் போராட்டம் நடத்துகிறோம். ஆனால் வட்டியை விடத் தயாரில்லையானால் அப்படிப்பட்டவர்களுக்கு எதிராக அல்லாஹ்வே போர்ப்பிடகனம் செய்வதாக குர்ஆன் கூறுகிறதே! அல்லாஹ்வுடனும் அவனுடைய தூதருடனும் போர் செய்ய தயாரகுங்கள்! என்று குர்ஆன் அறைகூவல் விடுக்கிறதே! ஆனால் இன்று வட்டியில் பல வகைகளை உண்டாக்கி காசு பண்ணும் சமுதாயத்தைப் பற்றி என்ன சொல்வது? ஹஜ்ஜத்துல்விதாவின் போது மௌட்டீக காலத்து வட்டியனைத்தும் எனது காலடியில் புதைக்கப்பட்டுவிட்டதாக பிரகடனப்படுத்திய வட்டியைத் தான் இந்த சமுதாயம் தோண்டி எடுத்துக்கொண்டிருக்கிறதோ! வட்டியும் அமாவாசையும்:
அல்லாஹ் வட்டியை அழித்து விடுகிறான். தான தர்மங்களை வளரச்செய்கிறான். (அல்குர்ஆன் 2:276) இந்த வசனத்தில் அல்மஹ்க் (அழித்தல்) என்ற வார்த்தை பயன்படுத்தபட்டுள்ளது. ஒரு பொருள் படிப்படியாக குறைவதற்கு மஹ்க் என்று சொல்லப்படும். அமாவாசைக்கும் இதே மூலச்சொல்லிலிருந்து உருவான முஹாக் என்ற வார்த்தையே பயன்படுத்தப்படுகிறது. (தஃப்ஸீருல் கபீர்) அதாவது சந்திரன் முழு நிலாவாக இருக்கும் போது மிகப்பெரிய வட்டமாகத் தோன்றும். ஆனால் ஒரே நாளில் அமாவாசையாகி விடுவதில்லை. ஒவ்வொரு நாளும் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கடைசியில் (அமாவாசையன்று) ஒன்றுமே தெரியாமல் போய்விடுகிறது. அவ்வாறே வட்டியும் பார்வைக்கு வளர்ச்சியாகத் தோன்றும் இறுதியில் மாபெரும் நஷ்டத்தை விளைவித்துவிடும். அதுதான் இன்று நடந்துகொண்டிருக்கிறது. வட்டியின் கோரத்தாண்டவத்தால் உலகின் பொருளாதாரமே சின்னாபின்னமாகி விட்டது. வட்டி வெளிப்படையாக) அதிகமானாலும் இறுதியில் நஷ்டத்தில் தான் முடியும் என்று நபி (ஸல்) அவர்கள் 1400 ஆண்டுகளுக்கு முன்பே சொல்லிவிட்டார்கள். (இப்னுமாஜா) 1930 களில் உலக அளவில் மாபெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. அச்சமயம் பொருளாதார நிபுணர்கள் தங்களின் பொருளாதாரக் கொள்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. சில நிபுணர்கள் வட்டி தான் பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம் என்றும் அது பொருளாதாரத்தையும் உலக நாடுகளுயம் நாசமாக்கிவிடும் என்றும் கருத்து தெரிவித்திருந்தனர். ஒரு மேற்குலக ஆய்வாளர் வட்டியிலிருந்து விடை பெற்றால் தான் பொருளாதாரம் உற்சாகமடையும், எனறு கூறினார். 1933 ஆம் ஆண்டு  ஜனவரி 19 ந்தேதியன்று நியூயார்க்கில் உரை நிகழ்த்திய லாரன்ஸ் பின்ஸ் என்ற சிந்தனையாளர், அரிஸ்ட்டில், கத்தோலிக்க பிஷப்புகள் போன்றோர்களும் யூதர்களின் தௌராத் வேதமும் வட்டிக்கடனை தடை செய்திருக்கிறது, என்று பேசினார். (நூல்: அர்ரிபா வஅதருஹூ)
எனினும் இந்த நிபுணர்களின் கருத்தை உலக நாடுகள் காதில் போட்டுக் கொள்ளவில்லை. அதனால் ஏற்பட்ட மோசமான விளைவை இன்று உலகம் சந்தித்துக் கொண்டிருக்கிறது. 1930 க்குப் பிறகு இப்பொழுது 2009 ல் அமெரிக்க பொருளாதாரத்தில் பெரிய பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது.
அமெரிக்காவின் தேசியப் புலனாய்வு அமைப்பு ராணுவ பொருளாதார துறைகளில் எதிர்காலத்தில் உலகில் உருவாக உள்ள புதிய போக்குகள் குறித்து ஓர் அறிக்கையை 2009 ஆம் ஆண்டு வெளியிட்டது. உலகப்போக்குகள் 2025: உலகம் மாறுகிறது என்ற தலைப்பிட்ட அந்த அறிக்கையில் எதிர்வரும் 15 ஆணடுகளில் அமெரிக்காவின் உலக ஆதிக்கம் மங்கி மறைந்து போகும், என்று கூறுகிறது. 1992 ஆண்டு சோவியத் யூனியன் சிதறுண்டு போனதால் இருதுருவமாக இயங்கிக் கொண்டிருந்த உலகம் ஒரு துருவ உலகமாக மாறியது. இந்தஒரு துருவ உலக மேலாதிக்கத்தால் இன்றைய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக நிகழ்ந்து வந்த இந்த ஆட்டம் முடிவுக்கு வந்து விட்டதாகவும் ஒரு பன்முக உலகு உருவாக இருப்பதாகவும் அந்த ஆய்வறிக்கை கூறியது. (எகனாமிக்ஸ் பத்திரிக்கையிலிருந்து தினமணி 31.02.2009)
அமெரிக்க பொருளாதாரம் வலுவாக இருப்பதாக ஒபாமா கூறினாலும் உண்மை நிலை அவ்வாறல்ல. அமெரிக்க பொருளாதாரம் மீண்டும் முடங்கும் என உடிபேசநளளடியேட ரெனபநவ டிககஉந சி. பி. ஓ. ஆகஸ்ட் 2012 ல் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது. (பூபாளம்.காம்) அமெரிக்க பொருளாதாரம் (வளர்ச்சியடைந்தாலும்) அதன் முந்தைய நிலையை மீண்டும் அடையாதென கனடாவின் மத்திய வங்கியின் ஆளுநர் மார்க் கண்ணி இந்த வருட தொடக்கத்தில் தெரிவித்தார். (நிலவரம்.காம்)  உலகப் பொருளாதாரம் வீழச்சியடைந்ததற்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும் வட்டியின் மீது கட்டியெழுப்பப்பட்ட பேங்க் முறை தான் அடிப்படைக் காரணம். எனவே தான், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், நம்முடைய பேங்க் முறை தோல்வியடைந்து விட்டதென்று ஒரு முறை கூறினார்.
நபி (ஸல்) அவர்கள் செய்த புரட்சி:
யாரும் யாரையும் ஏமாற்றக்கூடாது என்பதற்காக நபி (ஸல்) அவர்கள் கொடுக்கல் வாங்கல் பற்றி சிறந்த போதனைகளை உம்மத்துக்கு வழங்கியிருக்கிறார்கள். தனக்கு பிரியப்படுவதையே தன்னுடைய சகோதரனுக்கும் பிரியப்படாத வரை உங்களில் யாரும் (உண்மையான) முஃமின்- விசுவாசியாக முடியாது என்று கூறி ஏமாற்று வேலை ஈமானுக்கே பங்கம் விளைவித்துவிடும், என்பதை உணர்த்தியுள்ளார்கள். (புகாரி) மார்க்கெட் நிலை பற்றி எதுவும் தெரியாதவனை ஏமாற்றுவது வட்டி என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (பைஹகீ-10706) நபியவர்களின் இது போன்ற உயர்ந்த போதனைகளினால் உலகில் யாரும் நினைத்துக் கூட பார்த்திட முடியாத புரட்சியை நிகழ்த்திக் காட்டினார்கள். ஜரீருப்னு அப்தில்லாஹ் (ரலி) அவர்கள்,  தொழுகையை நிலை நாட்டுவதாகவும் ஜகாத்தை முறையாக கொடுப்பதாகவும் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் நலவை நாடுவதாகவும் நபி (ஸல்) அவர்களிடம் உடன் படிக்கை செய்து கொண்டார்கள். (புகாரி) இப்படியெரு உடன் படிக்கை செய்ததோடு மட்டும் நிற்கவில்லை. வாழ்க்கை முழுவதும் செயல் படுத்தினார்கள்.ஒரு தடவை ஜரீர் (ரலி) அவர்களுடைய அடிமை 300 (திர்ஹமுக்கு) ஒரு குதிரை வாங்கி வந்தார். அந்த குதிரையை பார்த்தவுடன் நேராக வியாபாரியிடம் சென்று உம்முடைய குதிரை 300 ஐ விட அதிக விலைக்கு போகும், என்று கூறி விலையை அதிகப்படுத்தி அதிகப்படுத்தி 800 (திர்ஹம்) கொடுத்தார்கள். (ஃபத்ஹுல் பாரி 1-168) இன்று இது போன்ற நுகர்வோரை கற்பனையில் கூட பார்க்க முடியாது.  அநாதையுடன் நீங்கள் கண்ணியமாய் நடந்து கொள்வதில்லை; மேலும் வறியவருக்கு உணவளிக்க ஒருவரையொருவர் தூண்டுவதுமில்லை. மேலும் வாரிசு சொத்துக்களை எல்லாவற்றையும் சுருட்டி நீங்களே விழுங்கி விடுகிறீர்கள்; செல்வத்தின் மீது அளவு கடந்த மோகம் கொண்டுள்ளீர்கள் (அல்குர்ஆன்-87:17-20) என்று இகழப்பட்ட ஒரு சமுதாயத்திற்கு அனுப்பப்பட்ட நபி (ஸல்) அவர்கள் செய்த மாபெரும் முயற்சியினால் பொருளாதாரத்தை அருளாதாரமாகக் கருதி நேர்மையான வியாபாரம் செய்யக்கூடிய விசுவாசக் கூட்டத்தை உருவாக்கி சாதனை புரிந்தார்கள்.
வியாபாரமும் இஸ்லாமிய வளர்ச்சியும்:
உலகில் பல நாடுகளில் இஸ்லாம் பரவுவதற்கு வியாபாரிகள் காரணமாக இருந்தார்கள் என்றால் இஸ்லாமிய வியாபார போதனைகள் எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் என்பதை சிந்திக்க முடிகிறதா? அரபுலகத்திலிருந்து வரும் வியாபாரிகள் வெறும் வியாபார சரக்குகளை மட்டும் எடுத்து வரவில்லை. நியாயமான பொருளாதார கோட்பாடுகளையும் இஸ்லாத்தின் உயர்ந்த நற்குணங்களையும் தங்களுடன் எடுத்து வந்தார்கள். இன்றைய முஸ்லிம் வியாபாரிகள் இவற்றை கவனத்தில் கொள்வார்களா? இந்தோனேஷியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, மாலத்தீவு, (தென் இந்தியா) இலங்கை, சீனா, அஃப்கானிஸ்தான், பூடான், சோமாலியா போன்ற நாடுகளில் இஸ்லாம் நுழைவதற்கும் பரவுவதற்கும் வியாபாரிகளுக்கு பெரும்பங்குண்டு. (இந்திஷாருல் இஸ்லாம் ஃபீ ஆசியா) இப்படிப்பட்ட வியாபாரிகள் குறித்து தான், நேர்மையான உண்மையான வியாபாரி (மறுமையில்) நபிமார்கள், சித்தீகீன்கள் (உண்மையாளர்கள்) ஷுஹதாக்கள் (தியாகிகள்) ஆகியோருடன் இருப்பார்  என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதீ) 

Friday, 19 April 2013

ஸ்பெயின் - முஸ்லிம்களின் எழுச்சியும் வீழ்ச்சியும்

தொடர்புக்கு 9976926131

ஸ்பெயினுடைய வரலாற்றை ஏன் படிக்க வேண்டும்?





ஸ்பெயினுடைய வரலாற்றை ஏன் படிக்க வேண்டும்?
لقد كان في قصصهم عبرة لاولي الالباب
முற்காலத்தில் வாழ்ந்த மக்களின் வரலாறுகளில் பகுத்தறிவுடையோருக்கு அரிய படிப்பினை உள்ளது....  (12:111) என்று கூறுகிறது குர்ஆன். எனவே தான் இறைவேதத்தில் சரித்திரங்கள் திரும்பத்திரும்ப கூறப்பட்டுள்ளன. வரலாற்றின் மூலம் படிப்பினை பெறுபவர்கள் தான் அறிவாளிகள் என்ற கருத்தை சூசகமாக விளக்கும் இந்த வசனம் சரித்திரத்தை எந்த நோக்கத்தில் படிக்க வேண்டும் என்பதையும் தெளிவுபடுத்துகிறது. நாவல் படிப்பது போல் பொழுது போக்குவதற்காக இல்லாமல் வாழ்க்கையில் தேவையான திருப்பத்தை ஏற்படுத்துவகற்காக படிக்க வேண்டும்.       `உங்களில் இறைநம்பிக்கை கொண்டு நற்செயல் புரிந்தவர்களுக்கு அல்லாஹ் வாக்குறுதி அளிப்பது என்னவெனில் அவர்களை பூமியில் ஆட்சி (அதிகாரத்தை கொடுத்து) பிரதிநிதிகளாக்குவான்; அவர்களுக்கு முன் சென்ற மக்களை பிரதிநிதிகளாக்கியது போன்று! மேலும் அல்லாஹ் அவர்களுக்காக எந்த மார்க்கத்தை விரும்பினானோ அந்த மார்க்கத்தை வலுவாக நிலைநாட்டுவான். மேலும் அவர்களின் அச்சநிலையை அமைதிநிலையாக மாற்றித் தருவான். அவர்கள், என்னையே வணங்குவார்கள். எனக்கு எதையும் இணையாக்க மாட்டார்கள். இதன் பிறகும் எவர்கள் நிராகரித்தார்களோ அவர்களே பாவிகள் ஆவர்` (அல்குர்ஆன் 24;55)
அல்லாஹ்வின் இந்த வாக்குறுதியை வரலாற்றின் ஒவ்வொரு பக்கமும் உண்மைப்படுத்திக் கொண்டிருக்கிறது. ஃபிரான்சுடைய எல்லையிலிருந்து மங்கோலியா வரை முஸ்லிம்களின் பேரரசு முரசு கொட்டிக்கொண்டிருந்தது. பிறுகு என்ன ஆனது? அவர்கள் எங்கே போனார்கள்? சாதனை படைத்தவர்களின் வரலாற்றின் இறுதிப்பக்கங்கள் ஏன் இருட்டாகிவிட்டன? அந்த இறுதிப் பக்கங்கள் தான் இன்றைய சமுதாயம் படிப்பினை பெற வேண்டிய முதன்மைப்பக்கங்கள். நம்முடைய கடந்த கால வரலாற்றையும் தற்போதைய நிலையையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது மலைக்கும் மடுவுக்குமுள்ள வித்தியாசத்தை உணரமுடிகிறது.
வரலாற்றின் நோக்கம்:
சரித்திரத்தை சரித்திரமாக படிக்கவேண்டுமே தவிர நாவலாக படிக்கக்கூடாது. சமுதாயத்தின் எதிர்காலம் கடந்த காலத்தோடு பின்னிப் பிணைந்திருக்கிறது. காலம் என்பது அறுந்து போகமுடியாத ஒரு சங்கிலித்தொடர் நிகழ்காலத்தில், சாதனைகள் பல நிகழ்த்த வேண்டுமென்றால் கடந்த கால வரலாற்றின் மூலம் படிப்பினை பெற்றாக வேண்டும். நம்முடைய சரித்திரத்தை நாம் படிக்கவில்லையானால் நம்முடைய தகுதியையும் திறமையையும் நாம் சரியாக அளவிட முடியாது. `சரித்திரம் பெருமை பட்டுக்கொள்வதற்காக அல்ல; படிப்பினை பெறுவதற்காக` என்பதை நன்றாக மனதில் பதிய வைத்துக்கொள்ளவேண்டும். முஸ்லிம்களின் அரசியல் வரலாற்றில் எடுத்து - ஏற்று நட்பபதற்கும் ஒதுக்கி விலக்குவதற்கும் நிறைய பாடங்களை படிக்கமுடியும். குறிப்பாக ஏறத்தாழ 800 ஆண்டு காலமாக முஸ்லிம்களின் ஆட்சி நடந்த ஸ்பெயினுடைய வரலாற்றின் ஆரம்பம் ஆச்சரியத்திற்குரியதாக இருக்கிறது. நம்மை சந்தோஷப்படுத்துகிறது. `முஸ்லிம் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா! என்று சொல்லவைக்கிறது. பாருங்கள் எங்களுடைய வெற்றி வரலாற்றை! என்று எல்லாரிடமும் பெருமிதம் கொள்ளவைக்கிறது.
உணர்வலைகள்
ஸ்பெயினுடைய வரலாற்றை படிக்கும் போது சில சமயம் உங்களுடைய மனதில் சந்தோஷம் ஏற்படும். முஸ்லிம்கள் இவ்வளவு பெரிய தியாகம் செய்திருக்கிறார்களே! சுல்தான்கள் மக்களை ஆட்சி செய்தால் உலமாக்கள் ஆட்சியாளர்களையே ஆண்டிருக்கிறார்களே! எவ்வித பயமுமின்றி ஜாமிஆ மஸ்ஜிதில் ஜும்ஆ உரையில் ஆட்சியாளர்களின் குறைகளை சுட்டிக்காட்டியிருக்கிறார்களே! நிர்வாகத்தில் இவ்வளவு சிறந்து விளங்கியிருக்கிறார்களே! உலக நாடுகளே ஸ்பெயினைக் கண்டு அஞ்சி நடுங்குகின்றனவே! இவற்றையெல்லாம் படிக்கும் போது ஆனந்தம் பெருகும். ஆனால் நீடிக்காது.  காலம் மாறியது; சூழ்நிலையும் மாறியது; மக்களும் மாறினார்கள்; நிலைமை தலைகீழானது. தாழ்வு மனப்பான்மை மனதை கவ்விக்கொள்கிறது. இபபடியும் நடக்கவேண்டுமா? இந்தத் துயரம் எங்கிருந்து வந்தது? என்று திகிலடையச் செய்கிறது. வெற்றிவாகை சூடிய வாய்மையாளர்கள் எங்கே சென்றார்கள்? முஸ்லிம்களுக்கு இவ்வளவு பெரிய சோதனை எங்கிருந்து எப்படி வந்தது? வரலாற்றின் ஆரம்ப பக்கங்கள் பொன்னெழுத்துக்ககளால் பதிக்கப்பட வேண்டிய அளவுக்கு இருந்த நிலை மாறி இரத்தக் கண்ணீரால் எழுதப்படுமளவுக்கு இறுதிப் பக்கங்கள் இருண்டு போனதற்கு என்ன தான் காரணம்? வரலாறே பதில் சொல்லட்டும்; சரித்திரமே சான்றாகட்டும்.
அறிவின் ஊற்று ஸபெயின்:
ஸ்பெயினில் உலகப்பிரசித்தி பெற்ற உலமாக்கள் தோன்றியிருக்கிறார்கள். அவர்களால் தொகுக்கப்பட்ட ஆயிரக்கணக்கான பக்கங்களில் பல வால்யூம்கள் கொண்ட நூற்கள் உலகம் முழுவதும் உள்ள நூலகங்களை அலங்கரித்துக் கொண்டிருக்கின்றன. தஃப்ஸீருல் குர்துபீ எழுதிய அல்லாமா குர்துபீ (ரஹ்), இப்னு ஹஸம் ளாஹிரீ (ரஹ்) என்று அழைக்கப்படும் தனிப்பெரும் ஆய்வாளர், ஹதீஸ் கலையில் பிரசித்தி பெற்றவரும் ஏராளமான நூற்களை இயற்றியவருமான இப்னு அப்துல் பர் (ரஹ்), முவத்தா மாலிக் என்று பிரபல்லியமாக பேசப்படும் ஹதீஸ் கிரந்தத்தை நேரடியாக இமாம் மாலிக் (ரஹ்) அவர்களிடம் கேட்டு நமக்கு அறிவித்த யஹ்யப்னு யஹ்யல்லய்தீ (ரஹ்), ஐரோப்பிய நாடுகளில் பரவலாக பேசப்படும் இப்னு ருஷ்து மாலிகீ (ரஹ்), தலை சிறந்த வரலாற்றாசிரியர் இப்னு கல்தூன் (ரஹ்) 800 வருட முஸ்லிம்களின் ஆட்சியை முழுமையாக தொகுத்துத் தந்த மக்கிரீ (ரஹ்) போன்ற பிரசித்தி பெற்ற உலமாக்களை கொண்ட நாடு தான் ஸ்பெயின். இவர்களுடைய ஆக்கங்களின் மூலம் நாம் இன்றும் பயன் பெற்றுக் கொண்டிருக்கிறோம். ஸ்பானிய முஸ்லிம்கள் எவ்வளவு மார்க்கப் பற்றுள்ளவர்களாக இருந்தார்கள் என்பதற்கு ஆதாரமாக பின்வரும் தகவலையும் படித்துக் கொள்ளுங்கள்: மதீனாவாசிகள் மார்க்கரீதியாக எந்தக் காரியம் செய்தாலும் அதுவும் இஸ்லாத்தில் உள்ள காரியம் தான். நபியவர்களின் நகரத்தார்கள் செய்கிறார்கள் என்பது மட்டுமே அது மார்க்கத்தில் அங்கீகரிக்கப்பட்டது என்பதற்கு போதுமான ஆதாரம், என்று இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள், ஒரு அடிப்படைச் சட்டத்தைக் கூறியுள்ளார்கள். அதே போன்று ஸ்பெயினுடைய தலைநகராக இருந்த குர்துபா (cordoba) வுடைய (அந்த கால) மக்கள் மார்க்க ரீதியாக செய்யும் காரியங்களும் மார்க்கத்தில் உள்ள காரியம் தான். குர்துபாவாசிகள் செய்கிறார்கள், என்பது மட்டுமே மார்க்கத்தில் அது அங்கீகரிக்கப்பட்ட காரியம் தான் என்பதும் மாலிகீ மத்ஹபினர்களின்  அடிப்படைச் சட்டங்களில் ஒன்று என்றும் வரலாற்றில் எழுதப்பட்டுள்ளதாக அபுல் ஹஸன் அலீ நத்வீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். (நூல்: இஸ்லாம் மே அவ்ரத் கா தரஜா... )
விண்ணியல்:
உலகியல் ரீதியாகவும் திறமையான விஞ்ஞானிகள் ஸ்பெயினில் உருவாகியுள்ளனர். இங்குள்ள யுனிவர்சிடியில் ஐரோப்பிய நாட்டிலிருந்தும் மாணவர்கள் வந்து கல்வி பயின்றிருக்கிறார்கள். விண்ணியலில் புதிய விஞ்ஞானக் கோட்பாட்டை முதன்முதலில் அறிவித்தவர் ஸ்பெயினைச் சார்ந்த முஸ்லிம் விஞ்ஞானி ஜர்காலீ (arzachel) தான் என்பது எத்தனை பேருக்கு தெரியும்? முஸ்லிம்கள் ஸ்பெயினை வெற்றிகொண்ட நாள் முதல் இன்று வரை ஜர்காலியைப் போன்று ஒரு வானவியல் ஆய்வாளரை ஸ்பெயின் தந்திடவில்லை என்று அல்அஃலாம் என்ற நூல் கூறுகிறது. (1-79) பூமி மையக் கொள்கை - அதாவது பூமியைத் தான் சூரியனும் மற்ற கோள்களும் சுற்றிவருகின்றன என்ற கொள்கை தவறானது, சூரிய மையக்கொள்கை - அதாவது பூமியும் மற்ற கோள்களும் சூரியனை சுற்றிவருகின்றன என்ற கொள்கை தான் சரி என்ற புதிய விஞ்ஞானக் கோட்பாட்டை முதன்முதலில் 16 ம் நூற்றாண்டில் வாழ்ந்த கோபர்நிகஸ் தான் அறிவித்தார் என்று மேற்குலகம் கூறிக்கொண்டிருக்கிறது. ஆனால் உண்மையில் 11 ம் நூற்றாண்டில் ஸ்பெயினில் வாழ்ந்த ஜர்காலி அந்தலுஸி என்ற முஸ்லிம் விஞ்ஞானி அந்தக் கொள்கையை அறிவித்துவிட்டார். முஸ்லிம்களின் திறமைகளை இருட்டடிப்பு செய்யும் மேற்குலகம் இதையும் மறைத்து விட்டது. எனினும் உண்மை எப்பொழுதும் உறங்காது என்பதற்கிணங்க 1950 க்குப் பிறகு மேற்குலக ஆய்வாளர்களில் சிலர் புதிய விஞ்ஞானக் கொள்கைக்கு அரேபியர்களே சொந்தக்காரர்கள் என்று ஒப்புக்கொண்டுள்ளனர். கோபர்நிகஸும் அந்தக் கொள்கையை முஸ்லிம்களிடமிருந்து பெற்றுக்கொண்டதாக தம்முடைய நூற்களில் கூறியிருக்கிறார். (அல்அஃப்லாக் வல்அவ்காத்- கீரனூரி (ரஹ்) )
மருத்துவம்:
மருத்துவத் துறையிலும் முஸ்லிம்கள் சிறப்பாக பணியாற்றியுள்ளனர். ஸ்பெயினைச் சார்ந்த அபுல் காஸிம் அல்ஜஹ்ராவீ (alzaharawius) அறுவை சிகிச்சை முறைக்கு வித்திட்டார். அது வரை மருந்து கொடுத்து சிகிச்சை செய்யும் முறை தான் நடப்பில் இருந்தது. அறுவை சிகிச்சை முறையை முதன்முறையாக உருவாக்கியவர் ஜஹ்ராவீ தான். அவர் கிபி பத்தாம் நூற்றாண்டின் மிகப் பெரும் அறுவை சிகிச்சை நிபுணராக (surgeon) விளங்கினார். ஜஹ்ராவீ அரபியில் எழுதிய தஸ்ரீஃப் என்ற நூல் அறுவை சிகிச்சை பற்றி விரிவாக விளக்குகிறது. அந்நூலில் கண் ஆப்ரேஷன், தொண்டை ஆப்ரேஷன், சிறுநீரகக்கல், மூலம் போன்ற வியாதிகளுக்கு செய்யும் ஆப்ரேஷன், வயிற்றில் குழந்தை இறந்து விட்டால் தாயிக்கு ஆபத்து இல்லாமல் குழந்தையை வெளியாக்கும் முறை, நிர்பந்த நிலையில் கருக்கலைப்பு முறை போன்றவை பற்றி இந்நூல் தெளிவக விளக்குகிறது. 18 ம் நூற்றர்ண்டு வரை அறுவை சிகிச்சை பற்றி நூல் எழுதிய மேற்கத்திய ஆய்வாளர்கள் ஜஹ்ராவியுடைய இந்நூலிலிருந்து ஆங்காங்கே மேற்கோள் காட்டியுள்ளனர். பல நூற்றாண்டுகளாக ஐரோப்பாவுடைய எல்லா யூனிவர்சிடிகளின் பாடத்திட்டத்தில் ஜஹ்ராவீயுடைய தஸ்ரீப் என்ற நூல் இடம் பெற்றிருந்தது. ஸ்பெயினில் முஸ்லிம்களின் ஆட்சி பறிக்கப்பட்டு ஐந்து வருடங்கள் ஆன பிறகு (1497 ம் ஆண்டு) இந்நூல் லத்தீன் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது. 1881 ம் ஆண்டு ஒரு பிரெஞ்சு டாக்டர் இந்நூலை பிரெஞ்சு பாஷையில் மொழிபெயர்த்தார். (நூல்- நாம்வர் முஸ்லிம் ஸாயின்ஸ்தான்) இப்படி விண்ணியல் மற்றும் மருத்துவத்துறை உட்பட எல்லா துறைகளிலும் திறமையாளர்கள் ஸ்பெயினில் தோன்றியிருக்கிறார்கள். முழு ஐரோப்பாவும் இருண்டு கிடந்த போது ஸ்பெயின் மின்னிக் கொண்டிருந்தது. மேற்குலகுக்கு நவீன விஞ்ஞானம் இடம் பெயர்ந்ததே ஸ்பெயின் முஸ்லிம்களின் மூலம் தான். அவர்களிடமிருந்து தான் சிறந்த நாகரிகத்தையும் கற்றிருக்கிறார்கள். பீரங்கி உட்பட நவீன ஆயுதங்களையும் கண்டுபிடித்தனர். இன்று ஸ்பெயினில் விவசாயம் மூலம் கிடைக்கும் லாபத்திற்கு முஸ்லிம்கள் தான் காரணம். நிலத்தில் மடடுமல்ல; மலைகளிலும் விவசாயத்தை செழிப்படையச் செய்தனர்.
கொடுமைகள்:
இப்படி எல்லா வகையிலும் ஸ்பெயினுக்கு உதவியாக இருந்த முஸ்லிம்களை எந்த நன்றி விசுவாசமும் இல்லாமல் மதத்தின் பெயரால் கொன்று குவித்துவிட்டனர். லட்சக்கணக்கான முஸ்லிம்களை நெருப்பில் பொசுக்கியும் கொலை செய்தும் ஸ்பானியர்கள் காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொண்டது போல் உலகின் எந்த மூலை முடுக்கிலும் நடந்தது கிடையாது. முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமை நியாயமாக சிந்திக்கக்கூடிய ஒவ்வொரு உள்ளத்ததையும் உலுக்கிவிட்டது. ஸ்பெயின் முஸ்லிம்கள் மூலம் நிறைவான விஞ்ஞான லாபத்தை அடைந்த ஐரோப்பியர்கள் தான் முதன்முதலாக இந்த காட்டுமிராண்டித்தனத்தை கண்டித்தனர். ஸ்பானியர்கள் நிகழ்த்திய கொடுஞ்செயல் முழு சரித்திர காலத்திலும் நடந்திடாத அட்டூழியமும் அழிசசாட்டியமும் நிறைந்த மூர்க்கத்தனமான செயல் என்று பிரஞ்சு அரசியல்வாதி கார்டினால் ரிஷலு (உயசனயேட சஉநடநைர) கடுமையாக சாடியுள்ளார். (மிஹ்னதுல் அரப் ஃபில் அந்தலுஸ்)
ஸ்பெயினுடைய உலமாக்களின் படைப்புகள் மூலம் முழு இஸ்லாமிய உலகமும் பயன் பெற்றுக் கொணடிருக்கிறது. முஸ்லிம் விஞ்ஞானிகளின் ஆய்வுகளின் மூலம் மேற்குலகம் அடைந்த லாபம் ஏராளம். உலமாக்கள் ஆட்சியாளர்களையும் தட்டிக் கேட்கும் அளவுக்கு பலம் பெற்றிருந்தனர். தவறுகளை சுட்டிக்காட்டுவதில் எந்தக்குறைவும் செய்யவில்லை. வரலாற்றை பார்க்கும் பொழுது மக்களும் ஈமானில் உறுதியாக இருந்ததாகவே தெரிகிறது. முஸ்லிம்கள் தோல்வியடைந்த பிறகும் கூட கஷ்டங்களை சகித்துக்கொள்ள தயாராக இருந்தனர். நிர்பந்தமாக கிருத்துவர்களாக ஆக்கப்பட்டாலும் மறைமுகமாக தங்களுடைய ஈமானை பாதுகாத்துக்கொண்டனர். எதிரிகளுக்கு தெரியாமல் தொழுது கொண்டனர்.. தங்களுடைய பிள்ளைகளுக்கு மார்க்கத்தை படித்துக்கொடுத்தனர். வீழ்ச்சி ஏன்?
இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஸ்பெயின் நம் கையை விட்டும் போனதற்கு என்ன காரணமாக இருக்கும? என்ற கேள்விக்கு முஸ்லிம்களின் ஒற்றுமையின்மையும் எதிரிகளின் ஒற்றுமையும் தான் என்பது ஸ்பெயினுடைய வரலாற்றைப் படிப்பவர்கள் பதில் சொல்லிவிட முடியும். இதயத்தை வெடிக்கச் செய்யும் இந்த சரித்திரத்தை படித்துவிட்டு ஸ்பெயினுக்கு இரங்கட்பா பாடுவதோடு நிறுத்திக்கொள்ளாமல் இறைவேதத்தின் கீழ் மார்க்கப்பற்றோடு ஒற்றுமையாக இருப்பதற்கு மகத்தான படிப்பினை பெற்றுக்கொண்டால் இந்த வரலாற்றை படிப்பதில் நமக்கு நன்மைகள் ஆயிரம் கிடைக்கும்.