Monday, 8 April 2013

முஸ்லிம்களின் அடையாளம் தாடி



முஸ்லிம்களின் அடையாளம் தாடி
பள்ளிவாசல் கேட்டை மூடுவதோடு மார்க்க சட்டங்களையும் மூடிவிடமுடியாது. வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும் வழிகாட்டும் மார்க்கம் தான் இஸ்லாம். உடல் அமைப்பும் உடை அமைப்பும் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதையும் ஷரீஅத் நிர்ணயித்திருக்கிறது. ஏன்? மயிர் கூட மார்க்க வரம்பிற்குட்பட்டது தான். தாடியை அதிகமாக்க வேண்டும். மீசையை குறைக்க வேண்டும். இதுவும் இறைமார்க்கத்தின் போதனை என்பதை யாரும அறியாமல் இருக்க முடியாது. தாடி முஸ்லிம்களின் அடையாளச்சின்னம். தாடி வைத்தவர்களை மீடியாக்கள் தீவிரவாதிகளாக சித்தரிக்கிறது என்றால் அந்த மோசடிக்கு முழுக்காரணமும் முஸ்லிம்கள் தான். பாங்கு சொல்பவரையோ தொழுபவரையோ ஹஜ் செய்பவரையோ தீவிரவாதி என்று யாராவது சொல்கிறார்களா? இன்று முஸ்லிம்கள் தாடியை தங்களுடைய மத அடையாளமாகவே காட்டவில்லை. தாடியுடன் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் லை செய்ய முடியவில்லையானால் அதற்கும் நாம் தான் காரணம். சீக்கியர்கள் தாடி வைக்கவில்லையா?   அடையாளச்சின்னம்:
தாடி பற்றி மார்க்கத்தின் போதனைகளை சிந்தித்துப் பார்த்தால் அது நாம் நினைப்பது போல  அவ்வளவு சாதாரணமான கடமையில்லை, என்பது விளங்கும். தாடியை அதிகப்படுத்துங்கள்; மீசையை குறையுங்கள் இணைவைப்பவர்களுக்கு மாறு செய்யுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி) மற்றொரு அறிவிப்பில் நெருப்பு வணங்கிகளுக்கு மாறு செய்யுங்கள், என்றும் வந்துள்ளது. (முஸ்லிம்) ஒரு நெருப்புவணங்கி தாடியில்லாமல் பெரிய மீசையுடன் வந்தார். இது என்ன என்று  அவரிடம் நபியவர்கள் கேட்டார்கள். எங்கள் மார்க்கத்தில் இப்படித்தான் என்று அவர் கூறினார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் தாடியை அதிகப்படுத்துவதும மீசையை குறைப்பதும் தான் எங்கள் மார்க்கம் என்று கூறினார்கள். (நூல்: முஸன்னப் இப்னு அபீஷைபா) நபியவர்களின் தாடிமுடி அதிகமானதாக இருந்ததென்று ஜாபிருப்னு ஸமுரா (ரலி) அறிவிக்கிறார்கள். (முஸ்லிம்) நபி (ஸல்) அவர்கள் தாடியை முஸ்லிம்களின்  கலாச்சாரமாக அடையாளச் சின்னமாக ஆக்கியுள்ளார்கள். நாம் யாரை பின்பற்றுகிறோம்:
நபி (ஸல்) அவர்களிடம் பாரசீக நாட்டுத்தூதர்கள் இருவர் வந்தனர். அவர்கள் தாடியை ஷேவ் பண்ணியிருந்தார்கள். மீசையை பெரிதாக வளர்த்திருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் அவ்விருவரையும் பார்ப்பதை கூட வெறுத்தார்கள். நாசமா போங்க! உங்களை யார் இப்படி செய்ய சொன்னது? என்று கோபமாக கேட்டார்கள். அவ்விருவரும் இது எங்களுடைய அரசருடைய கட்டளை, என்று கூறினர். இதைக் கேட்டவுடன் நபி (ஸல்) அவர்கள் எனினும் என்னுடைய இரட்சகன் தாடியை அதிகப்படுத்தும்படியும் மீசையை குறைக்கும்படியும் கட்டளையிட்டுள்ளான், என்று கூறினார்கள். (நூல்: அல்பிதாயா வந்நிஹாயா) தாடி வைக்காத பாரசீகர்களைப் பார்த்தே வெறுத்திருக்கிறார்கள். கோபப் பட்டிருக்கிறார்கள். நம்மை எப்படி பார்ப்பார்கள்? எங்களுக்கும் நபியின் மீது முஹ்ப்பத் இருக்கிறது என்ற வாதத்தில் மட்டும் குறைச்சலில்லை.  பாரசீக மன்னன் கிஸ்ராவுடைய கட்டளைக்கு அடிபணிகிறோமா? அல்லாஹ்வுடைய கட்டளையை ஏற்கிறோமா? என்பதை அவரவர் முடிவு செய்து கொள்ளட்டும்.
நல்லோர்களின் அடையாளம்:
எல்லா நபிமார்களும் தாடி வைத்திருக்கிறார்கள். பத்து விஷயங்கள் படைப்பிலேயே இருக்கும் நற்குணங்களாகும். (எல்லா நபிமார்களின் வழிமுறையாகும்.) என்று நபி (ஸல்) அவர்கள் கூறினாகள். அவற்றில் உள்ளவை தான் தாடியை அதிகரிப்பதும் மீசையை குறைப்பதும். (முஸ்லிம்) ஹாரூண் (அலை) அவர்களுக்கு தாடி இருந்ததை குர்ஆன் மூலம அறியமுடிகிறது.  இதற்கு நேர்முரணாக பத்து வகையான கெட்ட காரியங்களை செய்ததால் தான் லூத் (அலை) அவர்களின் சமுதாயம் அழிக்கப்பட்டார்கள், என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். தாடியை வெட்டுவதும் மீசையை நீளமாக வளர்ப்பதும் அவற்றில் இரண்டு. (நூல்: கன்ஜுல் உம்மால்-13014). ஹதீஸ்களில் வரும் எச்சரிக்கைகளைத் தொடர்ந்து ஃபிக்ஹ் - சட்ட நூட்களிலும் தாடியை வலியுறுத்தப்பட்டுள்ளது. முப்தி ஷஃபீ (ரஹ்) அவர்கள் நான்கு மத்ஹபுகளுடைய பிக்ஹ் நூற்களிலிருந்தும் `தாடியை ஷேவ் செய்வது ஹராம்` என்பதற்கான வாசகங்களை எடுத்தெழுதியுள்ளார்கள். (ஜவாஹிருல் ஃபிக்ஹ்)   
எது அழகு?
எது அழகு? என்பதை மார்க்கம் தான் தீர்வு செய்யமுடியும்? மேற்குலக சிந்தனை மூலம் மூளைச்சலவை செய்யப்பட்ட அறிவைக்கொண்டு எதையும் முடிவு செய்யமுடியாது. ஒரு கொள்கைவாதி யார் என்ன சொன்னாலும் அதை கண்டுகொள்ளமாட்டான். ஆணுக்கு அழகே தாடி தான். அந்த அழகை ரசிப்பதற்கும் ருசிப்பதற்கும் ஈமானிய சிந்தனை தேவை. ஒரு மனிதர் ஒரு ஊருக்கு சென்றார். அந்த ஊரில் எல்லோருக்கும் ஆறு விரல் இருந்தது. இவருக்கு மட்டும் ஐந்து விரல் இருந்தது. அவர்கள் அனைவரும் சேர்ந்து ஐந்து விரல் நபரை பார்த்து கேலிசெய்தனர். இதனால் இவர் வெட்கப்படுவாரா என்ன? அதே போல் தான் தாடியும். யார் என்ன சொல்வார்கள்? ஊர் உலகம் என்ன சொல்லும்? என்று நினைத்து மார்க்கத்தை விட்டுவிடுவது நல்லோர்களின் நடைமுறையல்ல. அபூதாலிபின் நடைமுறை. நபி (ஸல்) அவர்கள் சிறிய தந்தை அபூதாலிபுக்கு இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுமாறு தஃவத் கொடுத்த போது `சாகும்போது மூதாதையரின் மதத்தை விட்டுவிட்டானே!` என்று ஊரார் குறை பேசுவார்களே என்று கருதி முஸ்லிமாக மறுத்துவிட்டார். ஊர் உலகம் என்ன சொல்லும்? என்று யோசித்தால் அதை விட நரக வேதனை பரவாயில்லை என்று கருதுவதாகத்தான் பொருள். யார் என்ன சொன்னாலும் எனக்கு மார்க்கம் தான் பெரிது என்று நினைப்பது தான் நபித்தோழர்களின் வழிமுறை. ஹுதைபா (ரலி) அவர்கள் பயணத்தில் இருந்தார்கள். அப்பொழுது  ஒரு தடவை சாப்பிடும் போது உணவு கீழே விழுந்துவிட்டது. உடனே ஹுதைபா (ரலி) அவர்கள் சுன்னத்தான முறைப்படி அதை எடுத்து சுத்தம் செய்து சாப்பிட்டார்க்ள். பக்கத்திலிருந்தவர் நீங்கள் அப்படி செய்யாதீர்கள். அதை வெளிநாட்டுக் காரர்கள் கேவலமாக பார்ப்பார்கள், என்று கூறினார். உடனே ஹுதைபா (ரலி) அவர்கள் இந்த மடையர்களுக்காக எனக்குப்பிரியமான ஹபீப் (ஸல்) அவர்களுடைய சுன்னத்தை விட்டுவிடுவேனா? என்று கோபமாக கேட்டார்கள். இது உண்மையான பிரியத்தின் வெளிப்பாடு.  சினிமா கலாச்சாரம் இஸ்லாமிய சமூகத்தில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தி வைத்திருக்கிறது. நாம் பேசக்கூடிய ஒவ்வொரு பேச்சும் கேள்வியும் நமக்கும் மார்க்கத்திற்கும் மத்தியில் உள்ள நெருக்கத்தை வெளிச்சமாக்கிவிடும். வாலிப வயதில் தாடி வைத்தால் காதலில் தோல்வியா? என்று கேட்பது நமக்கும் இஸ்லாத்திற்கும் எந்த தொடர்புமில்லை என்பதை வெளிப்படுத்திவிடும்.  வயதானவர் தான் தாடி வைக்க வேண்டும், என்பதும் தவறான கருத்து.  ஷரீஅத் சட்டத்திற்கு 15 வயது தான் வரம்பு. இன்று வயதானவர்களிலும் தாடியை சுத்தமாக ஷேவ் செய்து கொள்பவர்களும் உண்டு. `பகிரங்கப் படுத்துபவர்கனை விட என்னுடைய உம்மத்தினர் அனைவரும் மன்னிக்கப்பட்டு விடுவார்கள்` என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி-5608) சுத்தமாக தாடியை எடுத்துவிட்டு நகர்வலம் வருபவர்கள் எப்போதுமே பகிரங்கமாக பாவம் செய்து கொண்டிருக்கிறார்கள்.
தாடியை கேளி செய்வது ஷிர்க்:
தாடி வைக்காதவர்கள் நாம் தவறு செய்கிறோம் என்ற உணர்வு இருந்தால் எப்பொழுதாவது தௌபா செய்ய தௌஃபீக் கிடைக்கும். அவ்வாறின்றி தாடி வைத்திருப்பவர்களை கேவலமாக பார்த்தால் அல்லது அவரை அதை வைத்து ஏளனம் செய்தால் அவருடைய ஈமானே பறி போய்விடும். ஆனால் இன்று சர்வ சாதாரணமாக தாடிக்காரன் தொப்பிக்காரன் என்று சொல்லப்படுகிறது. உயர்தரமான இஸ்லாமிய பண்பாடு முஸ்லிம்களாலேயே எள்ளி நகையாடப்படுகிறது என்றால் எவ்வளவு பரிதாபத்திற்குரியது?!  அவர்களுக்கு மத்தியில் ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு உங்களை தீர்வு செய்யக்கூடியவராக்கி பிறகு நீங்கள் என்ன முடிவு செய்தாலும் அதைப்பற்றி மனதில் சிறிதளவு கூட சங்கடமின்றி அதை அப்படியே ஏற்றுக்கொள்ளும் வரை உம்முடைய இரட்சகனின் மீது ஆணையாக அவர்கள் ஈமான் கொண்டவர்களாக ஆகமாட்டார்கள், என்று குர்ஆன் ஈமானுக்கு வரையறை கூறியிருக்கிறது. (4:65) மார்க்கத்தின் எந்த காரியத்தையும் இது ஏன் கடமையாக்கப்பட்டது என்று குறை கூறினால் அவருடைய ஈமானே ஆட்டங்கண்டுவிடும். இமாம் ஜஃபர் ஸாதிக் (ரலி) அவர்கள் இந்த வசனத்திற்கு பின்வருமாறு விளக்கம் கூறினார்கள்: ஒருவர் அல்லாஹ்வை வணங்குகிறார். தொழுகிறார். நோன்பு வைக்கிறார். ஹஜ் செய்கிறார். ஜகாத்தும் கொடுக்கிறார். (ஆக மார்க்கத்தின் எல்லா கடமைகளையும் செவ்வனே செயல்படுத்துகிறார்.) ஆனால் நபி (ஸல்) அவர்கள் செய்த ஏதாவது ஒரு காரியத்தை நபி இதை ஏன் செய்தார்கள்? செய்யாமல் இருந்திருக்கலாமே! அல்லது நபியவர்களுடைய ஏதாவது உத்தரவை செயல்பாட்டை பற்றி மனதில் சங்கடமாக கருதினால் தொழுகை, நோன்பு போன்ற எல்லா அமல்களும் இருக்க அவர் முஷ்ரிக் - இணைவைப்பாளராகி விடுகிறார். (நூல்: தஃப்ஸீர் ரூஹுல் மஆனீ) ஸாதிக் (ரலி) அவர்களுடைய இந்த கருத்தை படிக்கும் போது ஒவ்வொரு தற்கால முஸ்லிமுடைய மூச்சும் நின்றுதான் வரும். அழகிய முன்மாதிரி:
`அல்லாஹ்வுடைய தூதரிடத்திலே உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கிறது` என்று குர்ஆன் கூறிய பிறகு நபி (ஸல்) அவாக்ளின் வாழ்க்கை நெறிமுறைகளில் தான் நிறைவும் அழகும் நிரப்பமாக தெரிய வேண்டும். அதற்கு முரணான வேறெதையும் அழகாக கருதக்கூடாது.   நபியின் நடைமுறையை அப்படியே செயல்படுத்துவது தான் முஸ்லிம்களின் வேலை. ஒரு தடவை நபி (ஸல்) அவர்கள் ஒரு தோழருடைய கையிலிருந்து தங்கமோதிரத்தை கழட்டி எறிந்துவிட்டு ஒரு மனிதன் நெருப்புக் கங்கு என்று விளங்கியே அதை கையில் வைத்திருக்க முடியுமா? என்று எச்சரித்து விட்டு சென்றுவிட்டார்கள். அப்பொழுது ஒரு மனிதர் அந்த மோதிரத்தை எடுத்து ( கையில் அணியாவிட்டாலும்) வேறு எதற்காவது உபயோகிக்கலாமே! என்று கூறினார். நாமாக இருந்திருந்தால் இது போன்ற இடங்களில் நம்மைப் போன்ற சட்டவல்லுணர்கள் யாரும் இல்லை எனுமளவுக்கு சட்டம் பேசி உலக லாபத்தை அடைய முற்பட்டிருப்போம். ஆனால் அந்த நபித்தோழர் உடனடியாக, நபி (ஸல்) அவர்கள் தூக்கி எறிந்த ஒரு பொருளை நான் ஒருபோதும் எடுக்கமாட்டேன், என்று சொல்லிவிட்டார்கள். (முஸ்லிம்) நபி (ஸல்) அவர்கள் ஒரு மனிதரிடம் `லுங்கியை உயர்த்திக் கட்டுங்கள்` என்று கூறினார்கள். அதற்கவர் இது ஒரு சாதாரண ஆடை தானே (தூசி படிந்து அழுக்கானால் பரவாயில்லை) என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் அவரிடம் கேட்ட ஒரே கேள்வி `என்னிடம் உமக்கு முன்மாதிரி இல்லையா?` என்பதுதான். (ஷமாயில் திர்மிதீ) உலக லாபம் இருக்கிறதா? நமக்கு தேவையா? என்று பார்ப்பதை விட நபியவர்கள் செய்திருக்கிறார்களா? என்று மட்டும் பார்த்தால் போதும்.    இப்படியும் நடக்குமா?
நபியின் செயல்பாடுகளையும் உத்தரவுகளையும் தலை மேல் ஏற்று செயல்படுத்த வேண்டியவை. அப்படியே அவற்றை செயல்படுத்த முடியவில்லையானால் மார்க்கத்தின் கடமையை நம்மால் செயல்படுத்த முடியவில்லையே என்று மனம் வருந்தவேண்டும். தான் செய்வது தான் சரி, தாடியெல்லாம் எதற்கு வைக்க வேண்டும்? என்று கேட்டாலோ தாடி வைப்பது தவறு, கேவலமானது என்று கருதினால் அவர் இஸ்லாத்தை விட்டும் வெளியேறி விடுவார். அல்லாஹ் பாதுகாக்கட்டும்! இப்படிப்பட்ட ஒரு காலம் வரும் என்றும் நபி (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.ஒரு தடவை தோழர்களைப் பார்த்து உங்களில் வாலிபர்கள் பாவிகளாகி பெண்கள் எல்லை மீறிவிட்டால் நிலைமை எப்படி இருக்கும்? என்று கேட்டார்கள். அதற்கு தோழர்கள் யாரஸூலல்லாஹ் அப்படியும் நடக்குமா? என்று மூக்கில் விரல் வைத்தார்கள். நபி (ஸல்) அவர்கள் அதுவும் நடக்கும். அதற்கு மேலும் நடக்கும், என்று சொல்லிவிட்டு நீங்கள் நல்லவற்றை ஏவாமலும் தீயவற்றை தடுக்காமலும் இருப்பீர்களே அப்பொழுது உங்களின் நிலை என்னவாகும்? என்று கேட்டார்கள். தோழர்கள் ஆச்சரியப்பட்டு அப்படியுமா நடக்கப்போகிறது? என்று கேட்டார்கள். அதற்கு நபியவர்கள் அதுவும் நடக்கும். அதைவிடக் கொடுமையும் நடக்கும். என்று கூறிவிட்டு நீங்கள் பாவங்களை- கெட்டகாரியத்தை நன்மையாகவும் நன்மை பயக்கும் காரியத்தை கெட்டதாகவும் கருதும் காலத்தில் உங்களின் நிலை என்னவாகும்? என்று கேட்டார்கள். (நூல்:அஜ்ஜுஹ்துவர்ரகாயிக் லிப்னில்முபாரக்-1357) ஏறத்தாழ இன்றைய நிலை அப்படித்தான் இருக்கிறது.
நபி (ஸல்) அவர்களுடைய வார்த்தைக்குப்பின் யாருடைய வார்த்தையும் தேவையில்லை. எதற்கெடுத்தாலும் மேற்குலகின்பால் சாய்பவர்களுடைய காதில் இந்த வார்த்தைகளும் விழட்டும் என்பத்றகாக எழுதப்படுகிறது: `தாடிமுடிகள் தான் ஆணை பெண்ணைவிட்டும் வேறுபடுத்திக் காட்டுகிறது. ஆண்களுடைய முகத்தின் அழகை மெருகூட்டுவதற்காகவே இறைவன் தாடியை உண்டாக்கியிருக்கிறான். தாடியை கேலி செய்பவர்கள் ஈஸா (அலை) அவர்களை கேலி செய்கிறார்கள். ஏனெனில் ஈஸா (அலை) அவர்களும் தாடி வைத்திருக்கிறார்கள்` என்று அமெரிக்க டாக்டர் சார்லஸ் ஹிவ்மர் கூறுகிறார். ஏழு தலைமுறை வரை தொடர்ந்து தாடி எடுக்கும் பழக்கம் இருந்தால் எட்டாவது தலைமுறையினர் இயற்கையாகவே தாடியில்லாதவர்களாக ஆகிவிடுவார்கள், என்று ஒரு ஐரோப்பிய அறிஞர் கூறுகிறார். (நூல்: நவ்ஜவான் தபாஹி கே தானே பர்)                                                                                                                                                                                                            

No comments:

Post a Comment