கடன் இல்லாமல் வாழ்க்கை இல்லை, என்ற அளவுக்கு மக்களின் நிலை மாறிவிட்டது. தொழில் தேடுபவர்களுக்கும்
கடன் தேவை. தொழில் நிறுவனங்களுக்கும் கடன் தேவை. கடன் கொடுப்பதற்கு வங்கிகள் தயாராக
இருக்கின்றன. ஆனால், வாங்கிய கடனை திருப்பிச் செலுத்துவதில் பெரும் சிக்கலே உருவாகிவிடுகிநது. வங்கித்
துறை முழுவதையும் இன்று ஆட்டிப்படைக்கும் மிகப்பெரிய அரக்கன் இந்த வாராக்கடன் தான்.
பொருளாதார வளர்ச்சியை தடுத்து நிறுத்தும் அளவுக்கு இந்த வாராக்கடன் வளர்ச்சியடைந்துள்ளது.
வாராக்கடன்:
சென்னையில் 6-5-2014 அன்று, பொதுத்துறை வங்கிகளில் வாராக்கடன் தொகை ரூ 5 இலட்சத்து ஐம்பதாயிரம் கோடியாக
அதிகரித்துவிட்டது, என்று அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது. கடந்த 2008 ஆம் ஆண்டு மார்ச் வரை ரூ
39 ஆயிரம் கோடியாக
இருந்த வாராக்கடன் தொகை, 2013 ஆம் ஆண்டில் ரூ 5 இலட்சத்து 50 ஆயிரம் கோடிக்கு மேல் சென்றுவிட்டது.
வங்கிக்கடனை திருப்பிச்செலுத்தாதவர்களின் பட்டியலில் 406 பெரும் தொழில் நிறுவனங்கள் இருப்பது
தான் ஆச்சரியம். (தி இந்து - மே.7 - 2014)
வங்கிகள் மட்டுமல்ல. தனிநபர்களிடத்தில் வாங்கிய கடன்களை திருப்பிச் செலுத்தாதவர்களின்
எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. பெரிய தொழில் நிறுவனங்கள் இழுத்தடிப்பது
போல் கடனை திருப்பிக்கொடுக்க வசதியுள்ளவர்களும் இழுத்தடிக்கிறார்கள், என்பதே பரவலான விமர்சனம்.
கடன் வழங்குவதற்கு நிறைய சிறப்புகள் உள்ளன. அவ்வாறே கடன் கொடுத்த பிறகு கடனை வசூலிப்பதிலும்
நலினமாக நடந்து கொள்ளவேண்டும், என்பதையும் மார்க்கம் வலியுறுத்துகிறது. இரண்டு தடவை கடன் கொடுத்தால்
ஒரு தடவை தர்மம் செய்த நன்மை கிடைக்கும், என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (இப்னுமாஜா) கொடுத்த
கடனை திரும்பப் பெறுவதில் நலினமாக நடந்து கொள்பவனை அல்லாஹ் சுவனத்தில் நுழைவிப்பான்,
என்றும் நபி (ஸல்) அவர்கள்
கூறினார்கள். (நஸயீ) ஆனால் இன்று வாங்கிய கடனை முறையாகத் திருப்பித் தராமல் ஒவ்வொரு
முறையும் தவணை கேட்டு வருடக்கணக்கில் இழுத்தடிப்பது பலருக்கு வாடிக்கையாகிவிட்டது.
ஆனால், அவர்களுடைய
வாழ்க்கையின் நடைமுறைகளைப் பார்த்தால் அந்த அளவுக்கு சிரமப்படுவதாகத் தெரியவில்லை.
கடன் கொடுப்பதிலும் சிரமப்படுப்படுபவர்களுக்கு அதிகப்படியான தவணை கொடுப்பதிலும் நபி
(ஸல்) அவர்கள் ஆர்வமூட்டியிருப்பதைப் போல் கடன் வாங்கிவிட்டு கண்டுகொள்ளாமல் இருப்பவர்கள்
பற்றியும் நபி (ஸல்) அவர்கள் கடுமையாக எச்சரித்துள்ளார்கள், என்பதை இவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
கடன் வாங்கலாமா?:
நபி (ஸல்) அவர்களும் நபித்தோழர்களும் கடன் வாங்கியிருக்கிறார்கள். பாராட்டத்தக்க
முறையில் அக்கடனை திருப்பிச் செலுத்தியிருக்கிறார்கள். உமர் (ரலி) அவர்கள் கலீஃபாவாக
இருக்கும் போது அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களிடம் கடன் வாங்கியிருக்கிறார்கள்.
(அல்அம்வால் லிஅபீ உபைத்)
அதற்காக எதற்கெடுத்தாலும் கடன் வாங்கிக் கொண்டிருக்கக்கூடாது. நபி (ஸல்) அவர்கள்
தங்களுடைய தொழுகையில் யா அல்லாஹ் நான் உன்னிடம் பாவத்திலிருந்தும் கடனிலிருந்தும் பாதுகாவல்
தேடுகிறேன், என்று துஆ செய்வார்கள். ஒருவர், அல்லாஹ்வின் தூதரே! கடனிலிருந்து இந்தஅளவு அதிகமாக பாதுகாவல்
தேடுகிறீர்களே? என்று கேட்டபோது நபி (ஸல்) அவர்கள், ஒரு மனிதன் கடனாளியாகிவிட்டால் பேசினால் பொய் பேசுவான்.
வாக்குறுதியளித்தால் மாறுசெய்வான், என்று கூறினார்கள். (புகாரி)
கடன் கொடுத்தவர் கடனைக் கேட்டால் பல தடவை பொய்யான காரணத்தை சொல்ல வேண்டியதேற்படும்.
ஒரு மாதத்தில் தருகிறேன், என்று சொல்லியே பல மாதங்களுக்கு இழுத்தடித்து வாக்குறுதியை மீற
வேண்டியதேற்படும். ஒரு கடன் முனாஃபிக் எனும் நயவஞ்சகனுடைய தன்மைகளை ஏற்படுத்திவிடுவது
எவ்வளவு ஆபத்தானது! ஒரு தடவை நபி (ஸல்) அவர்கள் உங்களை நீங்களே தற்கொலை செய்து கொள்ளாதீர்கள்!
என்று கூறினார்கள். அப்பொழுது எங்களை தற்கொலை செய்வது எப்படி? என்று கேட்கப்பட்டது. அதற்கு
நபி (ஸல்) அவர்கள் கடன் என்று பதிலளித்தார்கள். (முஸ்தத்ரக் லில்ஹாகிம் - 2216)
இன்று இந்த நபிமொழியை கண்கூடாகக் காண்கிறோம். கடன் வாங்கிவிட்டு அதைத் திருப்பிக்
கொடுக்க வழியின்றி ஏராளமானோர் தற்கொலை செய்து கொள்ளும் செய்திகளை அன்றாடம் ஊடகங்களின்
வாயிலாக அறிந்துகொண்டிருக்கிறோம். உங்களை கடன் வாங்கும் விஷயத்தில் எச்சரிக்கிறேன்.
ஏனெனில் அதன் ஆரம்பம் கவலையாக இருக்கும். அதன் இறுதி முடிவு ஒன்றுமில்லாமல் போண்டியாகிவிடுவதாகும்.,
என்று நபி (ஸல்) அவர்கள்
கூறினார்கள். (முவத்தா மாலிக் - 1262) இன்று வட்டிக்குக் கடன் வாங்கி வட்டியும் கட்டமுடியாமல்
கடனையும் அடைக்க முடியாமல் தங்களுடைய சொத்துக்களையெல்லாம் இழந்தவர்கள் ஏராளம். கடன்
வாங்குவதற்கான நிபந்தனைகள்:
1. வாழ்க்கயை சீராக நடத்த முடியாத நிர்பந்த சூழ்நிலையில் தான் கடன் வாங்க வேண்டும்.
கியாம நாளில் ஒருமனிதரிடம் நீ கடன் வாங்கி மக்களுடைய உரிமைகளை ஏன் வீணாக்கிவிட்டாய்
என்று கேட்கப்படும். அதற்கவர் நான் சாப்பிடுவதற்கோ குடிப்பதற்கோ வாங்கி வீணாக்கவில்லை.
எனினும், நெருப்பு
பிடித்து அல்லது திருட்டு போய் அல்லது (வியாபார) நஷ்டமாகி கஷ்டத்திற்குள்ளாகி விட்டதால்
தான் வாங்கினேன், என்று சொல்வார். அதற்கு அல்லாஹ் இன்று அந்தக் கடனை நான் நிறைவேற்றுவதற்கு மிகவும்
கடமைப் பட்டவனாக இருக்கிறேன், என்று கூறுவான். (முஸ்னத் அஹ்மத் - 1708)
விரும்பத்தகாத நோக்கத்திற்காக ஒருவர் கடன் வாங்கியிருக்கவில்லையானால் அவர் அந்தக்
கடனை நிறைவேற்றும் வரை அல்லாஹ் அவருடன் இருக்கிறான், என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(இப்னுமாஜா - 2409)
2. கடனைத் திருப்பிக் கொடுக்க வேண்டுமென்ற உறுதியான எண்ணம் இருக்க வேண்டும். யார்
திருப்பிக் கொடுக்கும் எண்ணத்தில் கடன் பெறுகிறாரோ அல்லாஹ் அந்தக்கடனை நிறைவேற்றச்
செய்துவிடுவான். யார் மக்களின் செல்வத்தை அழிக்கும் எண்ணத்தில் கடன் பெறுகிறாரோ அவரை
அல்லாஹ் அழிவுக்குள்ளாக்கி விடுகிறான், என்று நபி (ஸல்) கூறினார்கள். (புகாரி - 2212)
கடனை நிறைவேற்றும் எண்ணமில்லாமலேயே கடன் வாங்கிவிட்டு அதை திருப்பிக் கொடுக்காத
நிலையில் ஒருவன் இறந்துவிட்டால் அவன் திருடன் என்ற நிலையில் அல்லாஹ்வைச் சந்திப்பான்,
என்றும் நபி (ஸல்) அவர்கள்
எச்சரித்தார்கள். (மஜ்மவுஜவாயித்) 3. வாங்கிய கடனை இழுத்தடிக்காமல் உரிய நேரத்தில் திருப்பிக்
கொடுப்பதற்கான சக்தியும் சாத்தியமும் இருக்க வேண்டும். கடனை நிறைவேற்றுவதற்கான எந்த
வழியும் தெரியாமல் கடன் வாங்கக் கூடாது. நமக்கு தேவை இருப்பது என்பது உண்மை தான். அதற்காக
அடுத்தவருடைய செல்வத்தை அவரை ஏமாற்றி நாம் சாப்பிடுவதை எவ்வாறு அனுமதிக்க முடியும்?
நிறைவேற்றுவதற்கான வசதி
வாய்ப்பு இல்லாமல் கடன் சுமையை நம்பிக்கையுடன் சுமந்து கொள்ள பிரியப்பட மாட்டேன்,
என்று இப்னு அபீமூஸல்
அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறினார்கள். (முக்னீ - இப்னு குதாமா)
பெருங்குற்றம்:
வசதியிருந்தும் கடனை உரிய நேரத்தில் கொடுக்காமல் இழுத்தடிப்பது அநியாயம்,
என்று நபி (ஸல்) அவர்கள்
கூறினார்கள். (புகாரி). கடனை நிறைவேற்றாமல் மரணித்தவன் அவன் திருடனாக இருக்கும் நிலையில்
தான் அல்லாஹ்வைச் சந்திப்பான். ஒரு தீனார்
அல்லது ஒரு திர்ஹம் கடன் இருக்கும் நிலையில் ஒருவன் மரணித்து விட்டால் அவனுடைய நன்மைகளின்
மூலமாகவே அக்கடனுக்கு பகரம் வழங்கப்படும். ஏனெனில் மறுமையில் தீனார், திர்ஹம் என்பதே கிடையாது,
என்று நபி (ஸல்) அவர்கள்
கூறினார்கள். (இப்னுமாஜா -2405) ஒருவருடைய கடன் அவருடைய நன்மைகளையும்
தின்று விடும். யுத்தகளத்தில் போரிட்டு ஷஹாதத் எனும் வீரமரணம் அடைந்தாலும் கூட அவர்
சுவர்க்கம் செல்வதற்கு அந்தக்கடன் தடையாக இருக்கும், என்பதும் ஹதீஸின் வாயிலாக அறியமுடிகிறது.
எனவே தான் நபி (ஸல்) அவர்கள் கடன் வாங்கிவிட்டு நிறைவேற்றாமல் மரணித்தவருக்கு தொழ வைக்க
மறுத்துவிட்டார்கள். உங்களுடைய தோழருக்கு நீங்களே தொழுது கொள்ளுங்கள், என்று கூறிவிட்டார்கள். நிறைவேற்றப்படாத
கடன நபி (ஸல்) அவர்களின் துஆவைவிட்டும் தடுப்பதும் இஸ்லாத்திற்காக இரத்தம் சிந்தி மரணித்த
பின்பும் சுவனத்தில் நுழைவதற்கு அந்தக் கடன் வந்து குறுக்கே நிறுபதும் சாதாரணமான விஷயமல்ல.
எனவேதான், நபி
(ஸல்) அவர்கள் ஒரு தடவை தங்களுடைய தலையை வானத்தின் பக்கமாக உயர்த்தி நெற்றியில் கை
வைத்த வண்ணமாக சுப்ஹானல்லாஹ்! எவ்வளவு கடுமையான (தகவல்) இறங்கிவிட்டது! என்று கைசேதப்பட்டுக்
கூறினார்கள். நபியவர்களின் நிலையைப் பார்த்து விட்டு நாங்கள் பயந்து போனோம். அதற்கு
விளக்கம் கேட்பதற்குக் கூட தைரியம் வரவில்லை. மறுநாள் தான் நாங்கள் அதற்கு விளக்கம்
கேட்டோம், என்று
நபித்தோழர்கள் கூறினார்கள். அப்பொழுது நபி(ஸல்) அவர்கள், என்னுடைய உயிர் எவன் கைவசமுள்ளதோ அவன்
மீது ஆணையாக ஒரு மனிதரின் மீது கடன் இருக்கும் நிலையில் அவர் அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டு பிறகு உயிர்
கொடுக்கப்பட்டு மீண்டும கொல்லப்பட்டு பிறகு உயிர் கொடுக்கப்பட்டு மீண்டும் கொல்லப்பட்டாலும்
அவருடைய கடனை நிறைவேற்றப்படாத வரை அவர் சுவனத்தில் நுழைய மாட்டார், என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(நஸயீ- 4605)
தண்டனை:
கடன் கொடுத்தவர் வசதியில்லாதவரிடத்தில் நலினமாக நடந்து கொள்ள வேண்டுமென்பது போல்
வசதியிருந்தும் கடனை நிறைவேற்றாதவர் தண்டிக்கப்படவும் வேண்டும். 1. அவருடைய சாட்சி ஏற்றுக்கொள்ளப்
படாத அளவுக்கு அவரை ஃபாஸிக் எனும் பாவி - நேர்மையற்றவரின் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டும்.
2. அவருடைய கண்ணியத்திற்கு
மானம் மரியாதைக்கு பங்கம் விளைவிக்கலாம்
3. சிறைப்பிடிக்கலாம். 4. வெளியூர் பயணம் செல்வதை முடக்கலாம். (கர்ள் அவர் உஸ்கீ ஷரயீ
ஹைஸிய்யத்) வசதியுள்ளவர் கடனைத் தள்ளிப்போடுவது அவருடைய மானம் மரியாதையைக் குலைப்பதையும்
அவருக்கு தண்டனை வழங்குவதையும் ஆகுமாக்கிவிடும், என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அபூதாவூத்-3144) அவரை கடுமையாக ஏசலாம். மற்றவர்களிடத்தில் முறையீடு செய்யலாம். அவரை அநியாயக் காரன்
என்று சொல்லாம். அவனைத் தண்டிப்பது என்பது சிறையில் அடைத்து தண்டிக்க வேண்டுமென்பதை
ஹாஃபிழ் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள். (ஃபத்ஹுல் பாரீ) இமாம் ஷஅபீ (ரஹ்)
அவர்கள், கடன்
விஷயத்தில் சிறையில் அடைப்பது (அவனுக்கு தொல்லை கொடுப்பதாகாது. அது தான்) வாழ்க்கை.
(அது மற்றவர்களுடைய நிம்மதியான வாழ்க்கையை உறுதிப்படுத்தும்) என்று கூறினார்கள். முஸன்னஃப்
அப்துர் ரஜ்ஜாக் - 15312) முஆத் (ரலி) அவர்களுக்கு கடன் இருந்ததினால் நபி (ஸல்) அவர்கள்
அவருடைய செல்வத்தை உபயோகிப்பதை தடை செய்து அந்தக் கடனை நிறைவேற்றுதற்காக அந்த பொருட்களை
விற்றார்கள், (தாரகுத்னீ -4607)
சொத்து பங்கீட்டுக்கு முன்:
ஒருவர் கடன் வாங்கிய நிலையில் மரணித்துவிட்டால் அவருடைய சொத்துக்களை பங்கீடு செய்வதற்கு
முன் அந்தக் கடனை நிறைவேற்றவேண்டும், என்பது குர்ஆனுடைய சட்டம். கடனை நிறைவேற்றிய பின் சொத்து
மீதமிருந்தால் தான் வாரிசுகளுக்கு சொத்து கிடைக்கும். ஆனால் இன்று ஜனாஸா தொழுகை நடத்தும்
போது யாருக்காவது கடன் திருப்பித் தர வேண்டியிருந்தால் பெற்றுக் கொள்ளுங்கள்,
என்ற அறிவிப்பும் கூட
வெறும் சம்பிரதாயமாகிவிட்டது. உதவி:
கடன் வாங்கி நிறைவேற்றமுடியாதவர்களுக்கு ஜகாத்தின் மூலம்
உதவி செய்யலாம். அல்லாஹ் குர்ஆனில் ஜகாத் யாருக்கு வழங்க வேண்டுமென்ற பட்டியலில் கடனாளிகளையும்
கூறியுள்ளான். நபி (ஸல்) அவர்களுடைய காலத்தில் ஒருவர் கடன் வாங்கி நிறைவேற்ற முடியாத
நிலை ஏற்பட்ட போது மக்களிடம் அவருக்காக தர்மம் செய்யுங்கள், என்று கூறினார்கள். (முஸ்லிம்) இஸ்லாமிய
அரசாங்கம் இருந்தால் பைத்துல் மாலிலிருந்தும் கடனாளிகளுக்கு உதவி செய்யலாம். முஃமின்களிலிருந்து
யாராவது மரணித்து அவர் கடனை விட்டுச் சென்றால் அதை நிறைவேற்றுவதற்கு பொறுப்பெடுத்துக்
கொள்கிறேன். செல்வத்தை விட்டுச் சென்றால் அவருடைய வாரிசுகளுக்கு சேரும், என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
எனவே, கடனாளிகளுக்கு
உதவி செய்வதும் இஸ்லாமிய அரசாங்கத்தின் பொறுப்பாகும்.