முஸ்லிம்கள் ஒரே இறைவனைக் கொண்டு விசுவாசம் கொண்டவர்கள்.
அவன் நாடியது மட்டுமே நடக்கும். அவனுடைய வல்லமைக்கு உட்பட்டே நடக்கும், என்பதன் மீதும் அழுத்தமான
ஆழமான நம்பிக்கை கொண்டவர்கள். எனவே, ஒரு புறம் அநியாயக்கார ஆட்சியாளர்களை விட்டும் அல்லாஹ்விடம்
பாதுகாப்பு தேடிக்கொண்டிருக்க வேண்டும். மறுபுறம், நம்முடைய மார்க்கப்பற்றை மழுங்காமல்
பார்த்துக்கொள்ள வேண்டும்.
பல சோதனைகளைக் கடந்து எழுந்து நிற்கக்கூடிய மார்க்கம்
இஸ்லாம். எதிரிகள் தொடுக்கும் எந்தத் தாக்குதலையும் சத்துணவாக எடுத்துக் கொண்டு சத்தியத்தை
பறைசாற்றிக் கொண்டிருக்கும் மார்க்கம் இஸ்லாம்.
இஸ்லாமியர்கள் என்ற காரணத்திற்காகவே கோடிக்கணக்கான முஸ்லிம்கள் கொல்லப்பட்ட
சரித்திரங்கள் உண்டு. ஆனாலும் இஸ்லாம் மடியவில்லை. முஸ்லிம்கள் ஈமான் எனும் இறைநம்பிக்கையையும்
இழக்கவில்லை.
இஸ்லாத்தின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலைப் போன்று வேறு
கொள்கையின் மீது தொடுக்கப்படிருந்தால் அவை வேரோடும் வேரடி மண்ணோடும் பிடுங்ப்பட்டு
எங்கோ தூக்கி எறியப்பட்டிருக்கும். யார் ஆட்சிக்கு
வந்தாலும் தங்களுடைய தேர்தல் அறிக்கையை முழுமையாக செயல்படுத்தியதாக சரித்திரம் கிடையாது.
வாக்கு வங்கிக்காக மட்டுமே தேர்தல் அறிக்கை பயன்படும்.
நாட்டில் பிரிவினையை ஏற்படுத்தும் எந்த திட்டத்தையும்
அவர்களால் கண்டிப்பாக செயல்படுத்த முடியாது. முஸ்லிம்களுக்கு முன்னால் முக்கியமாக எழுந்து
நிற்கும் பிரச்சினை பொதுசிவில் சட்டப் பிரச்சினை தான். இந்திய முஸ்லிம்கள் தங்களின்
உயிர் போனாலும் தங்களுடைய சட்டத்தை விட்டுக்கொடுக்கத் தயாரில்லை, என்பதை நிரூபித்த நிகழ்வுகளை
சரித்திரம் நெடுகக் காணமுடியும்.
முஸ்லிம்கள் தங்களுடைய தனியார் சட்டத்தை விட்டுக்கொடுப்பது
தங்களுயை ஈமானை - இஸ்லாத்தை விடுவதற்குச் சமம். பொதுசிவில் சட்டத்தினால் தேசிய ஒருமைப்பாட்டை
ஏற்படுத்துவதே நோக்கம், என்று சொல்வதெல்லாம் முழுப்பொய்.
முஸ்லிம்கள் 800 ஆண்டு காலமாக ஆட்சி செய்த ஸ்பெயினில்
முஸ்லிம்களின் தனித்தன்மையை அழிக்க அவர்கள் முதன் முதலில் கை வைத்தது முஸ்லிம்களின்
திருமண முறையில் தான். முதலில் இஸ்லாமிய முறைப்படி பதிவு செய்யப்பட்ட திருமணங்கள் மீண்டும்
அரசாங்கத்தில் பதிவு செய்யப்பட்டால் தான் அவை அங்கீகரிக்கப்படும், என்றார்கள். பின்னர்,
இஸ்லாமிய முறைப்படி
பதிவு செய்யப்பட்ட திருமணங்கள் செல்லாது. அரசாங்க முறைப்படி அரசாங்கத்தின் முன் பதிவு
செய்யப்பட்ட திருமணங்கள் தான் செல்லும், எனச் சட்டம் கொண்டுவந்தனர்.
ஸ்பெயினுடைய வரலாற்றை இந்தியாவிலும் எழுத வேண்டுமென்று
யாராவது கற்பனை செய்தால் அது கற்பனைக்கதையாக மட்டுமே இருக்கும். இந்நாட்டிற்காக இரத்தம்
சிந்தி விடுதலை வாங்கித்தந்த முஸ்லிம்களை இஸ்லாத்தின்படி வாழவிடாமல் தடுப்பதற்கு இந்நாட்டில்
எவனுக்கும் அதிகாரமில்லை, என்பதை மதப்பற்றும் தேசப்பற்றும் கொண்ட இந்நாட்டு முஸ்லிம்கள்
நிரூபிப்பார்கள்.
பொதுசிவில் சட்டத்தின் படி நம்முடைய குடும்ப உறவை அமைத்துக் கொண்டால்
நம்முடைய குடும்ப உறவு சின்னாபின்னமாகி விடும். நம்முடைய பொருளாதாரம் பொருளற்றதாகிவிடும்.
அரசு ரிஜிஸ்டரில் பதிவு செய்தால் மட்டுமே நிகாஹ் செல்லுபடியாகும், என்று சொல்லலாம்.
இதனால் மார்க்க முறைப்படி சாட்சிகளுடன் செய்த திருமண ஒப்பந்தம்
செல்லாததாகிவிடும். நம்முடைய திருமண ஒப்பந்தத்தை உறுதியான உடன்படிக்கை என்று குர்ஆன்
வருணிக்கிறது. அந்த உடன்படிக்கையை முறிப்பதற்கு யாருக்கும் அதிகாரமில்லை.
ஆனால் நாட்டுச்சட்டம் அதை திருமணமாகவே ஏற்றுக்கொள்ளாவிட்டால்
சட்டத்தைப் பயன்படுத்திக் கொண்டு அந்த பெண் வேறு ஆணை திருமணம் செய்து கொள்வார். ஏற்கனவே
திருமணம் செய்யப்பட்ட பெண் மற்றொரு திருமணம் செய்வது குர்ஆனில் பகிரங்கமாக தடை செய்யப்பட்டுள்ளது.
பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டால் மட்டும் போதுமானது,
என்று சட்டமாக்கபபட்டால்
காதல் திருமணம் அதிகமாகிவிடும். அதுமட்டுமல்ல, மார்க்க முறைப்படி இரண்டு சாட்சிகள்,
ஈஜாப் கபூல் எனும் ஒப்பந்த
நடைமுகைள் எதுவுமே இல்லாமலேயே கணவன் மனைவியாகி விடுவார்கள். ஆனால் இப்படி நடந்தால்
மார்ககச்சட்டப்படி நிகாஹ் நடந்ததாகவே கருதப்படாது.
இப்படிப்பட்ட
தம்பதிகள் அதிகமாகிவிட்டால் சமூகத்தில் விபச்சாரம் தான் பெருகும். திருமணமின்றி
குடும்பம் நடத்துவது விபச்சாரமில்லாம் வேறென்னவாக இருக்க முடியும்? அவ்வாறே தலாக் கொடுக்கும்
உரிமையை நீதிமன்றம் எடுத்துக்கொள்ளும்.
இஸ்லாம் அந்த அதிகாரத்தை நீதிமன்றத்துக்குக் கொடுக்கவில்லை.
கணவனுக்குத் தான் கொடுத்திருக்கிறது. கணவன் தலாக் கொடுக்காமலேயே இருவரையும் பிரித்து
வைத்தால் மணமுறிவு ஏற்படவே செய்யாது. இந்நிலையில் கணவன் மார்க்க முறைப்படி தலாக் கொடுத்துவிட்டால்
அந்த தலாக் செல்லுபடியாகிவிடும். இருவரும் பிரிந்துவிட வேண்டும். ஆனால், நீதிமன்றம் அந்த தலாக்கை செல்லாது
என்று கூறலாம். அப்படிப்பட்ட சூழ்நிலையில் கணவன், மனைவியாக இல்லாத நிலையிலேயே சேர்ந்து
வாழ வேண்டியதேற்படும். இதுவும் விபச்சாரம்.
பொது சிவில் சட்டம் இப்படி விபச்சாரத்திற்கு வழிவகுத்தால்
நஸப் எனும் குடும்ப உறவே சீர்கெட்டுவிடும். யாருக்கு யார் மகன்? என்று தெரியாது. தந்தை இல்லாத
பிள்ளைகள் அதிகரிப்பார்கள். தவறான உறவில் பிறந்தவன் தனக்கு தந்தையில்லாதவனை தந்தை என்று
சொல்ல வேண்டியதேற்படும். இப்படி உறவுமுறையை வீணடிப்பது மார்க்கத்தில் கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
யார் தெரிந்து கொண்டே தந்தையில்லாத ஒரு நபரை தன்னுடைய
தந்தை என்று வாதிடுகிறாரோ அவருக்கு சுவர்க்கம் ஹராம் - தடை செய்யப்பட்டுள்ளது,
என்று நபி (ஸல்) அவர்கள்
கூறினார்கள். (புகாரி) முஸ்லிம் ஷரீஃபுடைய மற்றொரு அறிவிப்பில் அவன் காஃபிராகி இறைநிராகரிப்பாளனாகி
விட்டான், என்றும்
கூறினார்கள்.
ஏனெனில், சொந்த உறவில் தான் ஜகாத், ஹஜ், திருமணம், வாரிசுரிமை உட்பட எல்லா சட்டமும் சம்மந்தப்படுகிறது.
சொந்த உறவு பேணப்படவில்லையானால் மார்க்கத்தின் பெரும்பாலான சட்டங்களின்படி செயல்பட
முடியாமல் போய்விடும். பொதுசிவில் சட்டத்தின் மூலம் நம்முடைய வாரிசுரிமை சட்டமும் பாதிக்கப்படலாம்.
இஸ்லாமிய வாரிசுரிமை சட்டத்தின் படி செயல்படுவது குடும்பத்தினர்களுடைய விருப்பத்திற்குட்பட்டதல்ல.
மற்ற சட்டங்களைப் போல் கட்டாயம் அமுல்படுத்தப்பட வேண்டியவை. அவரவர் விருப்பப்படி சொத்துக்களை
எடுத்துக் கொள்ளமுடியாது.
பாகப்பிரிவினையின் மூலம் கிடைக்கும் சொத்து மார்க்கம்
குறிப்பிட்ட அளவுப்படி முறையான பங்கீடாக இருந்தால் மட்டுமே அது ஹலால் (அனுமதிக்கப்பட்டது)
ஆகும். அதே சமயம் முறைகேடாகப் பங்கிட்டு அடுத்தவருக்குப் போக வேண்டிய பங்கு நமக்கு
வந்தால் அது பத்துப் பைசாவாக இருந்தாலும் ஹராம் (தடை செய்யப்பட்டது) தான்.
இதை நாம் விளையாட்டாக எடுத்துக் கொள்ளக்கூடாது. நம்முடன்
முடிவடையக் கூடிய பிரச்சினையல்ல இது. நம் மரணத்திற்குப் பின்பும் அந்த அந்த ஹராமான
பணம் அல்லது நிலம், வீடு போன்றவை தலைமுறை தலைமுறையாக வாரிசுதாரர்களைச் சுற்றிக் கொண்டிருக்கும் அபாயத்திற்கு
ஆளாக நேரிடும். அடுத்தவருடைய பூமியில் ஒரு சாண் அளவை அநியாயமாக எடுத்தாலும் மறுமை நாளில்
அவனுக்கு ஏழு பூமியால் மாலை போடப்படும், என்று நபி (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள். (புகாரி)
(எல்லாருடைய) வாரிசு சொத்துக்களையும் முழுமையாக நீங்களே
விழுங்கி விடுகிறீர்கள். மேலும் செல்வத்தின் மீது அளவு கடந்த ஆசை கொண்டுள்ளீர்கள்,
என்று முறைகேடாகச் சொத்துக்களை
அபகரித்துக் கொண்டவர்களை இழித்துப் பேசுகிறது இறைமறை. (89-19,29)
இதற்கு முன்னர் பல தடவை பொதுசிவில் சட்டத்தைக் கொண்டுவர
அரசு முயன்றது. 1963 ஆம் ஆண்டு முஸ்லிம் தனியார் சட்டத்தை மாற்றுவதைப் பற்றி ஆராய்வதற்கும் அதைச் செயல்படுத்தும்
வழிமுறைகளைக் கண்டறிவதற்கும் ஓர் ஆய்வுக்குழுவை நியமிக்க அரசு நாடியது.
ஆனால், முஸ்லிம்களின் ஏகோபித்த எதிர்ப்பினால் இவ்வாய்வுக்குழு
நியமிக்கப்படவில்லை. 1972 ஆம் ஆண்டில் வளர்ப்பு மகனுக்கு சொத்தில் பங்கு உண்டு,
என்ற மசோதாவை நிறைவேற்றி
அப்போதைய சட்ட அமைச்சர் மிஸ்டர் கோக்லே பொது சிவில் சட்டத்தை அமுல்படுத்த இது முதற்படி
என்று கூறினார். அச்சமயம், மும்பையில் ஏறத்தாழ ஒரு லட்சம் முஸ்லிம்கள் கூடிய மாநாடு நடைபெற்றது.
அப்து முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் நிறுவப்பட்டது. அந்த மசோதா அரசால் வாபஸ் பெறப்பட்டது.
முஸ்லிம்களின் ஒற்றுமை எனும் பேராயுதம் முஸ்லிம் பெர்ஸனல் லாவைக் காப்பாற்றியது.
No comments:
Post a Comment