Sunday, 8 May 2016

மது ஒழிப்பு வாக்கு வங்கி




கடந்த வருடம் மதுவிலக்கை வலியுறுத்தி பலமுனைப் போரட்டம் நடந்ததை யாரும் மறந்திருக்க முடியாது. அப்பொழுதெல்லம் அரசியல் கட்சிகள் அதை வைத்தே அரசியல் நடத்திக் கொண்டிருந்தன. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை அமல்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்படும், போன்ற  வாக்குறுதிகளும் மனதில் இருக்கின்றன.

அந்த வகையில் தமிழகத்தில் இந்தத் தேர்தலின் மிகப் பெரிய அஸ்திரம் மதுவிலக்கு, என்று சொன்னால் மிகையாகாது. அவ்வாறே இந்தத் தேர்தலில் போட்டி போட்டுக்கொண்டு மதுவிலக்கு திட்டத்தை தேர்தல் அறிக்கையில் அரசியல் கட்சிகள் அறிவித்துள்ளன.

தேர்தல் அறிக்கையில்  வெளியிடுவதோடு நிறுத்திக் கொள்ளாமல், இன்று வரை மதுவிலக்கை அமுல்படுத்த முடியாமல் போனதற்கான தடைகற்கள் யாவை? அந்தத் தடைகளைத் தகர்த்தெறிந்து அரசின் வருமானத்திற்கான மாற்று வழிமுறைகளையும் வரிசைப் படுத்தி மது விலக்கை நடைமுறைப் படுத்துவதற்கான தீட்டப்பட்ட திட்டங்கள் என்னென்ன? என்பது பற்றியும் தெளிவாக வெளியிட வேண்டும்.

வெறும் வார்த்தை ஜாலங்கள் மட்டும் இல்லாமல் பரிபூரண மதுவிலக்கா? படிப்படியான மதுவிலக்கா? இரண்டில் எது என்றாலும் ஆட்சிக்கு வந்தபின் எந்தத் தேதியிலிருந்து மதுவிலக்கு அமல்படுத்தப்படும்? இவற்றுக்கான மாற்று வருவாய் திட்டங்கள் என்ன? டாஸ்மாக் பணியாளர்களுக்கு மாற்று வேலைவாய்ப்புத் திட்டங்கள் என்ன? குடிநோயாளிகளுக்கான மறு வாழ்வு திட்டங்கள் என்ன? என்று விரிவான செயல் திட்டங்களை உறுதியுடன் அறிவிக்க வேண்டும்.

பிரச்சார மேடைகளில் அவற்றை மக்களுக்கு முன்பாக தெளிவு படுத்த வேண்டும். ஒவ்வொரு கட்சிக்கும், யாரும் தன்னுடைய கூட்டணியை கூறுபோட்டு விடக்கூடாதே, என்ற அச்சத்தில் வினாடியை கழித்துக் கொண்டிருக்கும் நிலையில் இந்தத் திட்டங்களைப் பற்றி யோசிப்பதெற்கெல்லாம் எங்கே நேரம் இருக்கப் போகிறது? என்று கேட்பது காதில் விழுகிறது.

ஒரு மாநிலத்தை ஐந்து வருடம் ஆள்வதற்கான தெளிவான திட்டங்களையும் ஏற்படும் பிரச்சினைகளையும் அதற்கான தீர்வுகளையும் முறையாக பட்டியலிட்டு செயல்திட்டங்களை மக்கள் முன் வைத்து வாக்கு சேகரிப்பதை விட எதிரிகளை தாக்குவது மட்டுமே தேர்தல் பிரச்சாரமாகிவிட்ட காலம் இது.

மது விற்பனையும் தமிழகமும்:
நாடு சுதந்திரம் பெறும் முன், அரசின் வருவாயை அதிகப்படுத்த, சாராயம் மற்றும் கள்ளுக் கடைகளை ஆங்கிலேயர்கள் திறந்தனர். காந்தி தலைமையில் பெரும் எதிர்ப்பு கிளம்பியதால், 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, மது அருந்த அரசு, அனுமதி கொடுத்தது; அவர்கள் மட்டுமே குடிக்க வேண்டும். குறிப்பிட்ட சில இடங்களில் மட்டுமே, மதுக் கடைகள் இருந்தன.


ராஜாஜி தலைமையில், 1937ல், சென்னை மாகாண அரசு அமைந்ததும், மதுவிலக்கை அமல்படுத்தினார். இது, 1939ல், அவரது அரசு கலைக்கப்பட்டதும் முடிவுக்கு வந்தது.

தேர்தல் மூலம், ராஜாஜி முதல்வராக தேர்வு செய்யப்பட்ட பின், 1952ல், மீண்டும் மதுவிலக்கை அமல்படுத்தினார். வருவாய் இழப்பை ஈடுசெய்ய, 1 சதவீதம் கூடுதலாக விற்பனை வரி விதித்தார். 1971ல் முதல்வராக இருந்த கருணாநிதி மதுக் கடைகளை திறந்தார். 1974ல் அவரே மதுவிலக்கை அமல்படுத்தினார். 

1984ல், முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர்., கள்ளுக் கடை மற்றும் சாராயக் கடைகளை திறந்தார்.  1987 ஜனவரி, 1ம் தேதி முதல், இந்தியாவில் தயாரிக்கப்படும், அயல்நாட்டு மதுபான கடைகளை எம்.ஜி.ஆர்., திறந்தார். இந்த கடைகளை தனியார் ஏலம் எடுத்து நடத்தினர்.1991ல், வந்த அரசு, மதுவிலக்கை அமல்படுத்தியது. 2001ல் அதே அரசு மதுவிலக்கை ரத்து செய்தது.

15 சதவீத வாக்குவங்கி
தமிழகத்தின் வாக்காளர்கள் எண்ணிக்கை 5.79 கோடி. பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை 2.91 கோடி. தமிழகத்தில் ஏதோ ஓர் அளவில் மதுப்பழக்கத்திற்கு ஆளான குடிநோயாளிகளின் எண்ணிக்கை சுமார் 2 கோடி. குடிநோயாளிகளில் கணிசமானோர் தாங்கள் முழுமையாக விரும்பி மது அருந்துவதில்லை.

குடிநோயாளிகள் மது அருந்துவதை அவர்களின் குடும்பத்தினர் அனைவருமே விரும்புவதில்லை. இவர்கள் அனைவரும் மதுவிலக்கு எப்போது வரும்? யார் கொண்டு வருவார்கள்? என்று காத்திருக்கிறார்கள். இதன்படி பார்த்தால் மதுவிலக்கின் வாக்கு வங்கி மட்டும் சுமார் 15 சதவீதத்துக்கும் அதிகம், என்று கூறுகிறது, ஒரு புள்ளிவிவரம்.

ஏன்? மது அருந்தாதவர்களும் மதுவிலக்கை ஆதரிக்கத் தானே செய்வார்கள். அப்படிப் பார்த்தால் மதுவிலக்கை எதிர்ப்பவர்கள், அதன்மூலம் வருமானம் தேடும் அரசியல்வாதிகளும் தொழிலதிபர்களும் தவிர வேறு யாரும் இருக்க மாட்டார்கள்.

ஏன் தெரியுமா? மாநிலத்தின் மது விற்பனையின் மூலம் வரும் லாபம் அசுர வளர்ச்சியைக் கண்டிருக்கிறது. தமிழக வருவாயில் டாஸ்மாக் 2002-03 ஆம் ஆணடு 3,800 கோடியில் தொடங்கிய வருமானம் வருடத்திற்கு 2 சதவீத  வளர்ச்சியில் பயணித்து 2012-13ஆமு ஆண்டு  21,000 கோடியாக வளர்ச்சி அடைந்து நின்றது.

தற்சமயம் அதைவிடவும் பல ஆயிரம் கோடி அதிகரித்துவிட்டது. இப்படியெல்லாம் கணக்கிட்டுப் பார்த்தால் ஓர் அரசு, ஆளும் ஐந்து ஆண்டுகளில் ஒரு லட்சம் கோடிக்கும அதிகமான வருமானத்தை ஈட்டிக் கொள்கிறது. இந்த லாபத்தை வைத்து இலவச தொலைகாட்சி ,மின்விசிறி, மிக்ஸி, கிரைண்டர் போன்றவற்றை வழங்கி வாக்காளர்களின் போதை தெளிய விடாமல் பார்த்துக் கொள்கிறார்கள், அரசியல் வாதிகள். 

தமிழகத்தின் மக்கள் தொகை 72,147,030. இவ்வளவு பெரிய மக்கள் தொகையில் சொற்பமான சதவிகித மக்கள் மட்டுமே பயன்படுத்தும் மதுவினால் இவ்வளவு வருமானம் எனில் 100 சதவிகித மக்களும் பயன்படுத்தும் பொருட்களைத் தேர்ந்துடுத்து தமிழக அரசு டாஸ்மாக் போல் விற்பனை செய்யும் பட்சத்தில் மதுவினால் ஏற்படும் வருவாய் இழப்பினை ஈடுகட்ட முடியாதா என்ன?


தற்போது, தென் மாநில முதல்வர்களுக்கு முன்னோடியாக, கேரள முதல்வர், மதுவிலக்கை அமல்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். படிப்படியாக மதுக் கடைகளின் எண்ணிக்கை குறைக்கப்படுகிறது. இப்படிப்பட்ட சூழலில் பதவியேற்கும அரசு மதுவிலக்கை படிப்படியாக அமுல்படுத்தி மது இல்லாத மாநிலமாக தமிழ்நாடு உருவெடுத்தால் அது மாபெரும் சாதனையாகக் கருதப்படும், என்பதில் சந்தேகமில்லை. 

மதுவும் இஸ்லாமும்:
இஸ்லாம் மதுவைச் சாதாரணமாகத் தடை செய்யவில்லை. மதுவின் சிந்தனையே இல்லாமல் வாழும் விதத்தில் இஸ்லாத்தின் போதனைகள் அமைந்துள்ளன. இது தொடர்பாக வரும் இறை வசனங்கள் மதுவின் விகாரத்தை மனதில் அழுத்தமாகப் பதிய வைக்கின்றன. ஈமான் கொண்ட இறைவிசுவாசிகளே திட்டமாக மது, சூதாட்டம், பலிப்பீடங்கள், குறிபார்க்கும் அம்புகள் ஆகியவை அருவருக்கத்தக்க ஷைத்தானின் செயல்களாகும். எனவே, அவற்றைத் தவிர்த்துக்கொள்ளுங்கள். இதன் மூலம் நீங்கள் வெற்றி பெறலாம். (அல்குர்ஆன் 5:90) அல்லாஹ் மதுவை  இணைவைப்புடன் இணைத்து கூறுகிறான், என்றால் அது எவ்வளவு பெரிய கொடிய குற்றமாக இருக்கும்?!

மது ஈமானின் எதிரி:
இறைவிசுவாசியாக இருக்கும் நிலையில் யாரும் மது அருந்த மாட்டார், என்று நபி (ஸல்) அவர்கள் கூறி (புகாரி, முஸ்லிம்) மதுவும் ஈமானும் - இறைநம்பிக்கையும் ஒன்று சேரமுடியாது, என்று எச்சரித்திருப்பது சாதாரணமானதல்ல. இன்று முஸ்லிம்களிடத்தில் எந்த அளவுக்கு மது பரவலாகிவிட்டது, என்பது சொல்லித் தெரிய வேண்டிய ஒன்றல்ல. தொடர்ந்து மது அருந்திய நிலையில் மரணிப்பவன் ஒரு சிலைவணங்கியைப் போல் அல்லாஹ்வைச் சந்திப்பான், என்றும் (அஹ்மது)

அல்லாஹ்வையும் மறுமையையும் நம்பியவர் மது அருந்த வேண்டாம். அல்லாஹ்வையும் மறுமையையும் நம்பியவர் மது அருந்தும் சபையில் இருக்கவும் வேண்டாம் என்றும் நபி (ஸல்) அவர்கள் எச்சரித்திருக்கிறார்கள். (தப்ரானீ)     

போதையூட்டக்கூடிய ஒவ்வொரு பொருளும் விலக்கப்பட்டதே! (முஸ்லிம், அஹ்மது) எதை அதிகமாகக் குடித்தால் போதை ஏற்படுமோ அதைக் குறைவாகக் குடிப்பதும் ஹராம் தான், (அஹ்மது, அபூதாவூத்) என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

சாராயத்தின் சிந்தனையே ஏற்படக்கூடாது, என்பதற்காக ஆரம்பத்தில் சாராயத்திற்காக பயன்படுத்தப்படும் பாத்திரங்களையும் உபயோகிக்கக் கூடாது, என்று நபியவர்கள் தடை செய்தார்கள்.   இஸ்லாம் சாரயம் குடிப்பதைத்  தண்டனைக்குரிய குற்றமாகக் கருதுகிறது. சாரயம் குடிப்பது மட்டுமல்ல. அதைத் தயாரிப்பவன் அதைக் குடிக்கக் கொடுப்பவன், அதை எடுத்துச்செல்பவன், அவனிடமிருந்து பெற்றுக்கொள்பவன், அதை விற்பவன், வாங்குபவன், என சாராயம் தொடர்பான பலரையும் நபி (ஸல்) அவர்கள் சபித்திருக்கிறார்கள். (திர்மிதீ)

மனிதன் மதுவுடனான எல்லாத் தொடர்புகளையும் துண்டித்துக் கொள்ள வேண்டும், என்றே மார்க்கம் விரும்புகிறது.


ஹலால் பீர்:
இன்று வாலிபர்களில் சிலர் பீர் சாப்பிடுவதில் என்ன தவறு இருக்கிறது? அதில் போதை இல்லையே என்றெல்லாம் பேசி ஹலால் பீர் என்றும் கூட முத்திரை குத்தி விட்டனர். ஆனால், மதுவைப் பெயர் மாற்றி அதை ஹலாலாக்கி குடிக்கும் காலமும் வரும், என்று நபி (ஸல்) அவர்களின் முன்னறிவிப்பு முற்றிலும் பொருத்தமானது, என்ற நம்பிக்கைக்கு வலு சேர்க்கிறது, இந்த வாதம்.

எதை அதிகமாக சாப்பிட்டால் போதை வருமோ அதை குறைவாகச் சாப்பிடுவது ஹராம் தான், என்பதை நபிமொழிகளின் மூலம் அறியமுடிகிறது. போதை குறைவாக இருக்கும் போது அடிக்கடி மதுவருந்தி பழகியவர்களுக்கு அதன் மூலம் போதை ஏற்படவில்லை, என்பதற்காக அதில் போதைப் பொருளே இல்லை, என்று முடிவு செய்துவிட முடியுமா என்ன? கோதுமை, பார்லி போன்ற தானியங்களை லேசாக முளைவிட வைத்து அதில் இருக்கும் ஸ்டார்ச்சை எடுத்து புளிக்கச் செய்து பீர் தயாரிப்பார்கள்.

நான்கு முதல் எட்டு சதவீதம் ஆல்கஹால் இதில் உள்ளது. பிராந்தியில் நாற்பது சதவீதம் முதல் அறுபது சதவீதம் போதை தரும் ஆல்கஹால் இருக்கிறது. ரம்மில் 37 முதல் 55 சதவீதம் வரை ஆல்கஹால் உள்ளது. விஸ்கியில் 40 சதவீதம் வரை ஆல்கஹால் உள்ளது. ஒயினில 8 முதல் 16 சதவீதம் ஆல்கஹால் உள்ளது. பீரிலும் ஆல்கஹால் இருக்கும் போது அதை ஹலால் என்று சொல்வதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?


உற்சாகத்திற்காக மது:
யமன் நாட்டிலிருந்து வந்த ஒரு நபித்தோழர் ஒருவர் நாங்கள் குளிர்ப்பிரதேசத்தில் வாழ்கிறோம். அங்கு கடுமையாக உழைக்கவும் வேண்டியிருக்கிறது. இந்நிலையில் நாங்கள் (கோதுமையிலிருந்து தயாராகும்) ஒரு பானத்தைக் குடித்து எங்களுடைய கடுமையான வேலைகளுக்கும் எங்களுடைய நாட்டின் குளிருக்கும்  உற்சாகத்தைப் பெற்றுக்கொள்கிறோம், (இது கூடுமா?) என்று கேட்டார். அதற்கு நபியவர்கள், அது போதையூட்டக்கூடிய பானமா? என்று கேட்டார்கள். ஆம் என்று பதில் கூறவே அப்படியானால் அதை விட்டும் ஒதுங்கிக்கொள்ளுங்கள், என்று கூறினார்கள். (அபூதாவூத்)

இன்றும் கடுமையான உழைப்புக்கு மது அவசியம் என்றும் களைப்பைத் தீர்ப்பதற்கு மது அருந்துகிறோம், என்றும் சொல்பவர்கள் இந்த செய்தியைக் காதில் போட்டுக்கொள்ளட்டும். மது அருந்தாமல் வாகனம் ஓட்டுவது சாத்தியமில்லை, என்று சொல்பவர்களுக்கு இந்த நபிமொழி போதுமானதாக இல்லையானால் தண்டனைதான் ஒரே வழி.

ஒருமித்த கருத்தில் ஒன்றுபடுவோம்!




முஸ்லிம் பெர்ஸனல்லா பற்றி பலவாறாக நாட்டில் தொடர்ந்து சர்ச்சை நடந்து கொண்டிருக்கிறது. வழக்கறிஞர்கள் பொதுசிவில் சட்டத்தை வலியுறுத்தி கருத்து தெரிவிக்கின்றனர். நீதிமன்றங்கள் அதை அமுல்படுத்தக்கோரி ஆலோசனைகளை முன்வைத்துக் கொண்டிருக்கின்றன.

 இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் திருச்சியில் நடந்த தஃப்ஹிமூஷ் ஷரீஆ என்ற கருத்தரங்கம் முக்கியத்துவம் பெறுகிறது. இந்திய இஸ்லாமிக் ஃபிக்ஹ் அகாடமியின் செயலாளரும் ஹைதராபாத் ஜாமிஆ அல்மஃஹதுல் ஆலியின் நிறுவனருமான அல்லாமா காலித் ஸைஃபுல்லாஹ் ரஹ்மானீ அவர்கள் பெர்ஸனல்லா பற்றி மிகச் சிறந்த ஆய்வுரை நிகழ்த்தினார்கள். குறிப்பாக பலதாரமணம் பற்றி இஸ்லாத்தின் நிலைபாட்டை மற்ற மற்ற மதங்களுடன் ஒப்பீடு செய்து தெளிவான விளக்கம் கொடுத்தார்கள். அத்துடன் பலதாரமணம் தேவைக்குத் தோதுவாக வழங்கப்பட்ட அனுமதி தானே தவிர இஸ்லாம் அதை ஆர்வமூட்டி வலியுறுத்தவில்லை.


 யுத்த காலங்களில் லட்சக்கணக்கில் ஆண்கள் உயிரிழப்பதால் பல நாடுகளில் விதவைகளின் எண்ணிக்கை அதிமாகிக் கொண்டே இருப்பதின் புள்ளிவிவரங்களையும் பட்டியலிட்டார்கள். அதற்கும் மேலாக பலதாரமணத்தை அங்கீகரிக்க வில்லையானால் அல்லது பெண்களுக்கும் பல ஆண்களை திருமணம் செய்வதற்கு அனுமதி வழங்கினால் ஏற்படும் மோசமான பின்விளைவுகளையும் கலச்சார சீரழிவையும் பற்றி எடுத்துரைத்தார்கள். 


இஸ்லாமிய குடும்பவியல் சட்டங்கள் ஆகச்சிறந்தவை, என்பது இன்றைய உலகின் மோசமான கலாச்சார சீர்கேட்டை சீர்தூக்கிப் பார்த்தால் எளிதாக விளங்கிவிடும். அமெரிக்காவைச் சார்ந்த ஒரு பெண்மணி சிறுவயதிலேயே தன்னுடைய ஆண் குழந்தையைத் தத்து கொடுத்துள்ளார். முப்பத்திரண்டு வயதான அந்த மகனைக் கண்டபோது அவர்மீது காதல்வயப்பட்டு பழகியதோடு மட்டும் நிற்கவில்லை. தகாத உறவும் முடிந்த நிலையில் அந்த மகனையே திருமணம் செய்யப்போவதாக ஓர் அசிங்கமான அறிவிப்பையும் வெளியிட்டிருப்பது, கடந்த ஏப்ரல் மாதப் பத்திரிக்கைச் செய்தி.


கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பாக வியட்நாம் பெண் ஒருவருக்கு வெவ்வேறு ஆண்கள் மூலம் ஒரே நேரத்தில் கருத்தரித்து இரட்டை குழந்தைகளுக்கு தாய் ஆன சரித்திரம் மருத்துவ உலகில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது, என்ற தகவல் கடந்த மார்ச் மாத பத்திரிக்கைச் செய்தி. ஆனால், அந்த இரண்டு குழந்தைகளுக்கும் இடையே இமாலய வித்தியாசம் இருந்தது. பிறகு டிஎன்ஏ பரிசோதனை மூலம் ஒரு குழந்தை மட்டுமே அவளுடைய கணவருக்கு பிறந்தது, என்றும் மற்றொரு குழந்தை தவறான உறவு மூலம் வேறொரு ஆணுக்கு பிறந்தது, என்று உறுதி செய்யப்பட்டது. 


இத்தகைய சம்பவங்கள் உலகில் மிக மிக அபூர்வமாக நடைபெறக் கூடியது, என மருத்துவ நிபுணர்கள் ஆச்சர்யம் தெரிவித்துள்ளனர். பெண்கள், பல ஆண்களைத் திருமணம் செய்தால் என்ன? என்று வாதிடுபவர்கள் இந்நிகழ்வின் மோசமான பின்விளைவை சிந்தித்துப் பார்க்க வேண்டும். 


ஒரு பெண் பல ஆணுடன் உறவு கொண்டதால் இரண்டு வருடம் வரை அந்தக் குழந்தையின் தந்தை அல்லாத ஒரு நபரை தந்தையாக கருதப்பட்டிருக்கிறது. இரத்த உறவு இங்கே எவ்வளவு கேலிக்கூத்தாக ஆக்கப்பட்டிருக்கிறது, பாருங்களேன். கலாச்சார சீரழிவின் மொத்த உருவமாக இருக்கும் மேற்குலகுக்கு இது சர்வ சாதாரணமாக இருக்கலாம். ஆனால், இஸ்லாமியப் பார்வையில் இரத்த உறவு என்பது மிக முக்கியமானது. அவர்களில் யாராவது இறந்திருந்தால் அவர்களுடைய சொத்துக்களை பங்கீடு செய்வதில் எவ்வளவு மோசமான தவறுகள் நிகழ்ந்திருக்கும்?! 


இது போன்ற மோசமான விகாரமான பின்விளைவுகளை முன்வைத்துத் தான் ஒரு பெண், பல ஆண்களை திருமணம் செய்யக்கூடாது, என்று முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது.  இரத்த உறவு மிகமிக முக்கியமானது, என்பதால் ஒரு திருமண உறவின் மூலம் பிறந்த குழந்தைகளை டிஎன்ஏ பரிசோதனை மூலம் உறவுமுறையை மார்க்கத்தின் பார்வையில் மாற்றியமைக்கவும் முடியாது. அல்லாமா காலித் ஃபுல்லாஹ் ரஹ்மானீ அவர்கள் பலதாரமணம் தொடர்பாக விரிவான ஆய்வுரை நிகழ்த்திய பின் முஸ்லிம் தனியார் சட்டத்தின் ஒரு பகுதி தான பலதாரமாணம். 


இது போன்று எட்டு உட்பிரிவுகள் இருக்கின்றன. பெர்ஸனல்லாவின் கீழ் அந்த எட்டு தலைப்புகளும் தெளிவாக விவாதிக்கப் படவேண்டுமென்றால் காலை எட்டு மணியிலிருந்து இரவு பத்து மணி வரை பெர்ஸனல்லா தொடர்பாக மட்டுமே ஒரு கருத்தரங்கத்திற்கான ஏற்பாட்டை தமிழகத்தில் செய்ய வேண்டும், என்று கேட்டுக்கொண்டார்கள். 


உண்மையிலேயே பொது சிவில் சட்டம் தொடர்பான விவாதம் என்பது அவ்வளவு முக்கியமானது. நம்முடைய குடும்பவியல் என்பது நம்முடைய ஈமானுடன் தொடர்புடையது. முஸ்லிம் தனியார் சட்டத்தை நாம் விட்டுவிட்டால் நம்முடைய குடும்ப உறவும் சீரழிந்து விடும். அதன் மூலம் தந்தையில்லாத பிள்ளைகள் அதிகரித்துவிடுவார்கள். வாரிசுரிமைச் சட்டத்திற்கு பங்கம் ஏற்பட்டால் நம்முடைய பொருளாதாரம் முற்றிலும் ஹராமானதாகவும் சீர்குலைந்தும் போய்விடும். 



இது விஷயத்தில் முஸ்லிம்களும் அவர்களை வழிநடத்தும் மார்க்க அறிஞர்களும் முழுவிழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். இஸ்லாமிய சமுதாயம் தங்களுக்கிடையே சின்னச்சின்ன பிரச்சினைகளில் சண்டையிட்டுக் கொண்டு எதிரிகளின் பார்வையில் நாம் பலகீனமாகிப் போகாமல் இருப்பதற்கு மேற்கூறப்பட்ட யோசனையைச் செயல் படுத்துவதற்குத் தயாராக வேண்டும். 


நம்முடைய கருத்து வேறுபாடுகள் நமக்குள்ளேயே இருக்கட்டும். நமக்கு மத்தியில் ஒருமித்த கருத்துகொண்ட ஈமான் எனும் இறைநம்பிக்கையுடன் தொடர்புள்ள பெர்ஸனல்லா போன்ற விஷயத்தில் ஒன்றுபட்டு களமிறங்கி செயலாற்றினால் இந்தியாவில் ஸ்பெயினுடைய வரலாறு எழுதப்படுவதைத் தடுத்து நிறுத்த முடியும்.



எந்நூறு ஆண்டு காலம் முஸ்லிம்கள் ஆட்சி செய்த ஸ்பெயினில், வாழ்வதென்றால் கிருத்வனாக மட்டுமே வாழ வேண்டும், என்ற நிர்பந்தத்திற்கு ஆளான போது முஃப்தி உபைதுல்லாஹ் அஹ்மதுல் மக்ரிபீ அவர்கள் கி.பி. 1503 ஆம் ஆண்டு ஒரு வித்தியாசமான ஃபத்வாவை வெளியிட்டார். 


அதாவது, நிர்பந்த நிலையில் முஸ்லிம்கள் சர்ச்சுகளில் வைக்கப் பட்டிருக்கும் இயேசு மேரியுடைய சிலைகளுக்கு முன்னால் (மனதில் ஈமானை வைத்துக் கொண்டு) ஸஜ்தா செய்து கொள்ளலாம். சாராயம் குடித்துக் கொள்ளலாம். (சுகூத்தெ பக்தாத் ஸே.... ஸ்பெயின் - முஸ்லிம்களின் எழுச்சியும் வீழ்ச்சியும். பக்- 137) இந்நிலை இந்தியாவில் ஏற்படாமல் இருப்பதற்கு ஒட்டுமொத்த முஸ்லிம்களின் ஒற்றுமையும் களப்பணியும் அவசியம்.

இஸ்லாமிய அரசில் கருத்துச் சுதந்திரம்





முஆவியா (ரலி) அவர்கள் கலீஃபாவாக இருந்த சமயம், ஷாம் - சிரியா இஸ்லாமிய உலகின் தலைமையகமாக இருந்தது. ரோம் தேசத்துடன் அவ்வப்போது இஸ்லாமிய அரசுக்கு பிரச்சினை இருந்து வந்தது. சில சமயம் யுத்தமும் நடக்கும். ஒரு சமயம் முஆவியா (ரலி) அவர்கள் எதிரிகளுடன் போர் நிறுத்த உடன்படிக்கை செய்து கொண்டார்கள். 


இருதரப்பும் ஒப்பந்த காலம் முடியும் வரை யுத்தத்தில் ஈடுபடக்கூடாது, என்று உறுதியளிக்கப் பட்டது. இந்நிலையில், ஒப்பந்த காலம் முடிவதற்கு முன் யுத்தம் தானே செய்யக்கூடாது. யுத்தத்திற்கான நடவடிக்கைகயை மேற்கொள்ளலாமே!, என்ற சிந்தனை முஆவியா (ரலி) அவர்களுக்கு ஏற்பட்டது. இதன்படி எல்லைப்பகுதியில் படைகளை குவிக்க ஆரம்பித்தார்கள். அதற்கான ஆயத்தங்களை செய்ய ஆரம்பித்தார்கள். 

ஒப்பந்த காலம் முடிந்தவுடன் உடனடியாக எதிரிகளின் மீது தாக்குதல் தொடுத்தால் மிக எளிதாக வெற்றி பெற்று விடலாம், என்று திட்டமிட்டார்கள். இதனால், ஒப்பந்தத்தை மீறியவர்களாகவும் ஆக மாட்டோம். எதிரிகளின் அலட்சியத்தைப் பயன்படுத்தி நம்முடைய நோக்கத்தை சாதித்து விடலாம், என்று திட்டமிட்டார்கள். அவ்வாறே செய்யவும் செய்தார்கள். ஒப்பந்த காலம் முடிந்தவுடன் எதிரிகளின் மீது திடீர் தாக்குதல் தொடுத்தார்கள். இதை சற்றும் எதிர்பாராத எதிரிகள் செய்வதறியாது, திகைத்து நின்றார்கள். 

இஸ்லாமியப் படை மிக எளிதாக நாட்டுக்குள்ளே நுழைந்து தொடர் தாக்குதலின் மூலம் பல நகரங்களை வெற்றி கொண்டனர். இந்நிலையில், ஒரு குதிரை வீரர் அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர் - வாக்குறுதியை நிறைவேற்றுவது தான் முஸ்லிமின் அடையாளம். மோசடி செய்வதல்ல, என்று கூச்சலிட்டுக் கொண்டே பாய்ந்து வந்தார். மக்கள் அவரை உற்று நோக்கினார்கள். அவர் அம்ருபின் அபஸா (ரலி) . உடனே, முஆவியா (ரலி) அவர்கள் தொடர்ந்து முன்னேறுவதை நிறுத்திவிட்டு அவரிம் விபரம் கேட்டார்கள். 

அதற்கு அவர்கள், ஒரு சமுதாயத்துடன் உடன்படிக்கை ஏற்பட்டிருந்தால் ஒப்பந்த காலம் முடியும் வரை அதன் எந்த முடிச்சையும் அவிழ்க்கவும் கூடாது. அதை கடுமையாக்கவும் கூடாது, அல்லது எங்களுக்கும் உங்களுக்கும் மத்தியில் எந்த ஒப்பந்தமும் இல்லை, என்பதை பகிரங்கமாக அறிவித்துவிட வேண்டும். (அதற்குப் பிறகு தான் தாக்குதலுக்கான ஏற்பாடு செய்ய வேண்டும்) என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதை நான் கேட்டுள்ளேன், என்று கூறினார்கள். இந்த நபிமொழியைக் கேட்டவுடன் முஆவியா (ரலி) அவர்கள் உடனடியாக முன்னேறுவதையும் தாக்குதலையும் மட்டும் நிறுத்தவில்லை. ஏற்கனவே வெற்றிகொண்ட பகுதிகளையும் விட்டுவிட்டு வெளியேறிவிட்டார்கள். (நூல்: அபூதாவூத் - 2761) 

வெற்றிகொள்ளப்பட்ட நகரங்களை எதிரிகளிடம் ஒப்படைத்து விட்டு நாட்டைவிட்டும் வெளியேறிவிட்டார்கள். உலக சரித்திரத்தில் எந்த மதத்தினரும் இப்படி வெற்றி கொண்ட நகரங்களையும் விட்டு வெளியேறியதை வேறெங்கும் காண முடியாது. (நூல்: ஹதீஸ் கே இஸ்லாஹி மஸாமீன் 9/183)
அபூ முஸ்லிம் அல்கௌலானீ (ரஹ்) அவர்கள் ஒரு தடவை முஆவியா (ரலி) அவர்களிடம் வந்து அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹல் அஜீர் - வேலைக்காரரே! என்று அழைத்து ஸலாம் சொன்னார்கள். மக்களெல்லாம் அபூமுஸ்லிமிடம் வேலைக்காரர், என்ற சொல்லாதீர்கள். அமீர், என்று சொல்லுங்கள், என்று எச்சரிக்கை செய்தனர். எனினும், முஆவியா (ரலி) அவர்கள், அவரை விடுங்கள். அவர் சொல்வதைப் பற்றி அவர் மிக அறிந்தவர் தான், என்று கூறி தொடர்ந்து பேச அனுமதித்தார்கள். அபூமுஸ்லிம் கௌலானீ அவர்கள் முஆவியா (ரலி) அவர்களைப் பார்த்து, ஒருவர் ஒரு வேலையாளிடம் தன்னுடைய ஆடுகளை ஒப்படைத்து அவற்றை நல்ல முறையில் மேய்த்து அபரிமிதமான லாபத்தைக் கொண்டுவந்தால் அவருக்கு நற்கூலி கிடைக்கும். 

இல்லையானால் முதலாளி மிகுந்த கோபத்திற்குள்ளாகி விடுவார். நீங்களும் இப்படிப்பட்ட ஒரு கூலிக்காரரைப் போலத்தான், என்று (சற்று விரிவாகக்) கூறி தங்களுடைய உரையை முடித்தார்கள். இதைக் கேட்ட முஆவியா (ரலி) அவர்கள் கோபப்பட வில்லை. மாற்றமாக அபூமுஸ்லிம் அல்கௌலானியைப் புகழ்ந்தார்கள். (நூல்: ஸியரு அஃலாமிந் நுபலா, முக்தஸரு தாரிகி திமஷ்க்)

இந்த நிகழ்ச்சியின் மூலம் ஒரு பக்கம் முஆவியா (ரலி) அவர்களின் மார்க்கப்பற்றும் நபிப்பற்றும் விளங்குகிறது, என்றால் மற்றொரு பக்கம் ஆட்சியாளர்களிம் சுதந்திரமாக சத்தியத்தை எடுத்துச் சொல்லக்கூடிய தைரியத்தை மார்க்க அறிஞர்கள் பெற்றிருந்தார்கள், என்பதையும் ஆட்சியாளர்கள் மக்களுக்கு முழுமையான கருத்து சுதந்திரத்தை வழங்கியிருந்தார்கள், என்பதையும் விளங்க முடிகிறது. 

இது போன்ற பல நிகழ்வுகளை இஸ்லாமிய அரசியல் சரித்திரம் நெடுகிலும் காண முடியும்.  இஸ்ஸுத்தீன் இப்னு அப்திஸ்ஸலாம் அவர்களின் காலத்தில் தாதாரியினரை எதிர்த்து தாக்க அரசிடம் வசதியில்லாத போது மன்னர் வரிவிதிப்பது பற்றி உலமாக்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது இஸ்ஸுத்தீன் (ரஹ்) அவர்கள், தாராளமாக வரி விதிக்கலாம். 

ஆனால் பைத்துல்மால் காலியாக இருக்க வேண்டும், என்பது மட்டுமல்ல. உங்களிடம் முடங்கிக் கிடக்கும் விலையுயர்ந்த பொருட்களை விற்றுவிடுங்கள். அதன்பிறகு மக்களிடம் வரி வசூலிப்பது பற்றி பேசுங்கள், இராணுவ வீரர்களிடம் ஏகப்பட்ட செல்வங்களும் பெருமைப் படத்தக்க கருவிகளும் இருக்கும் போது பொதுமக்களிடம் வரிவிதிக்கக் கூடாது, என்று உறுதியாகக் கூறிவிட்டார்கள். இமாம் நவவீ (ரஹ்) அவர்களும் இவ்வாறே கூறினார்கள். மன்னர்களிடம் ஆயிரக்கணக்கில் அடிமைகள் இருக்கின்றனர். தங்க நகை, தங்க ஆடை என கோடிக்கணக்கில் செல்வம், ஆளும் வர்க்கத்திடம் தேங்கிக் கிடக்கும் வரை மக்கள் மீது வரி விதிக்கும் ஃபத்வா - சட்டத்தில் கையெழுத்திட மாட்டேன், என்று கையை விரித்துவிட்டார்கள். (நூல்: ஃபிக்ஹுஜ் ஜகாத்)
இதைப் படித்துவிட்டு இன்றைய ஆட்சியாளர்களையும் நிதானமாக சிந்தித்துப் பாருங்கள். 

தொற்று நோய் உண்டா?



உணவுக்கலப்படத்தால் உயிரிழப்புகள் ஆயிரக்கணக்கில் ஏற்படுவதாக புள்ளி விவரங்கள் கூறிக்கொண்டிருக்கின்றன. இஸ்லாத்தை பொறுத்த வரை சின்னச் சின்ன சிரமம் கொடுப்பது கூட அவனை இஸ்லாத்தை விட்டுமே வெளியாக்கிவிடும், என்று எச்சரிக்கப்பட்டிருக்கிறது. 

தன்னுடைய கை மற்றும் நாவின் மூலம் (ஏற்படும் தீங்குகளை விட்டும்) சக முஸ்லிம்கள் பாதுகாப்பு பெற்றால் தான் அவர் உண்மை முஸ்லிமாக முடியும், என்றும் (யாரும் யாருக்கும்) தீங்கிழைப்பதோ பரஸ்பரம் ஒருவருக்கொருவர் சிரமம் கொடுப்பதோ கூடாது என்றும் நபி (ஸல்) அவர்கள் உபதேசித்துள்ளார்கள்.

இந்த நபி மொழியிலிருந்து ஏராளமான சட்டங்களை மார்க்க வல்லுணர்கள் கூறியுள்ளனர். எந்த ஒரு தனி நபரும் மற்றவர்களுடைய ஆரோக்கியத்திற்கு எந்தப் பங்கமும் ஏற்படுத்தக்கூடாது. (அல்லாஹ்வின் நாட்டப்படி) நோயாளியின் கிருமி மற்றவர்களுக்கு தொற்றும் விதமாக நடந்து கொள்ளக்கூடாது. அப்படிப்பட்ட நபர், ரொட்டி மாஸ்டராகவோ பொது சந்தையில் விற்பனையாளராகவோ இருக்கக்கூடாது. இது போன்ற விதிமுறைகளை இந்த நபி மொழி நமக்கு சொல்லித்தருகிறது.

நபி (ஸல்) அவர்களே தும்மினால் கூட உம்மத்தின் படிப்பினைக்காக கையையோ அல்லது துணியையோ வாயருகில் வைத்துக்கொள்வார்கள். தும்மலின் சப்தத்தை தாழ்த்திக் கொள்வார்கள்.(அபூதாவூத் 4374) நபி (ஸல்) அவர்ளுடைய எச்சிலை பரக்கத்தாக நினைக்கும் நபித்தோழர்கள் முன்னால் இருக்கும் போது கூட நபி (ஸல்) அவர்கள் தும்மல் நீர் யார் மேலும் பட்டு விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்திருக்கிறார்கள்.

காலரா, அம்மை போன்ற கொடிய நோய் ஓர் ஊரில் பரவலாக இருந்தால் அந்த ஊருக்கு நீங்கள் வராதீர்கள். நீங்ள் அந்த ஊரில் இருந்தால் அவ்வூரை விட்டும் வெளியேறாதீர்கள். என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். இந்த நபி மொழி,

ஒரு நோயாளி மற்றவர்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக எப்படி நடந்து கொள்ளவேண்டும், என்பது பற்றியும் மற்றவர்கள் எப்படி தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டும், என்பது பற்றியும் அழகான வழிகாட்டுதலை கொடுக்கிறது.

தொற்று நோயின் மீது ஈமான் கொள்ளக்கூடாது. எல்லாம் அல்லாஹ்வின் நாட்டப்படி தான் நடக்கிறது. இந்த உலகம் காரணங்களின் அடிப்படையில் இயங்குகிறது. எனவே நோய்க்கிருமி ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு சென்றுவிட்டால் அல்லாஹ்வின் நாட்டமிருந்தால் அவருக்கும் அதே நோய் வர வாய்ப்பிருக்கிறது. எனவே அந்த ஊருக்கு செல்லாமல் அந்த நோய் வராமல் தற்காத்துக் கொள்ளவேண்டும்.

இதனால் தொற்று நோயின் மீது ஈமான் கொள்வதை விட்டும் தப்பிக்க முடியும். ஜாஹிலிய்யா (மௌட்டீக) காலத்தில் இந்த விஞ்ஞான அறிவெல்லாம் கிடையாது. ஏகத்துவத்துக்கு முரணாக பல இணைவைப்பு கொள்கைகளை நம்பியிருந்தது போல் தொற்று வியாதியையும் நம்பியிருந்தனர். அந்த நம்பிக்கையை உடைத்தெறிவதற்காகவே தொற்று வியாதி என்பதே கிடையாது என்று நபி (ஸல்) வலியுறுத்தினார்கள்.

தற்காலத்திலும் அது போன்றதொரு நம்பிக்கை இருந்தால் தொற்று நோய் இல்லை என்று அழுத்தமாகச் சொல்லவேண்டும். வியாதி பாதித்த ஊரில் இருப்பவர் ஆரோக்கியமானவராக இருந்தாலும் அந்த ஊரை விட்டும் வெளியே செல்லவேண்டாம், என்று நபி (ஸல்) அறிவுறுத்தியிருப்பது தூர நோக்கு சிந்தனை மிக்கது என்பது மட்டுமல்ல; 19-ம் நூற்றாண்டின் கடைசியில் கண்டுபிடிக்கப்பட்ட நவீன மருத்துவக் கொள்கையை 6-ம் நூற்றாண்டிலேயே நபி (ஸல்) அவர்கள் உலகுக்கு அறிவித்துள்ளார்கள்.

அதாவது, நோயால் பாதிக்கப்பட்ட ஊரில் ஒருவர் வெளிப்படையாக ஆரோக்கியமாக தோன்றினாலும் அவருடைய உடலில் நோய்க்கிருமிகள் நுழைந்திருக்கலாம். ஆனால் மருத்துவ ஆய்வின் படி அவரிடமிருந்து நோய்க்கிருமிகள் மற்றவர்களுக்கு பரவ வாய்ப்பிருக்கிறது. அல்லது அவருக்கு சில நாட்களுக்குப் பின் நோயின் அறிகுறி தென்படலாம். சில நோய்க்கிருமிகள் இரண்டு நாட்களிலேயே உடலில் தாக்கத்தை ஏற்படுத்தும். இன்னும் சில நோய்க்கிருமிகள் ஆறு மாதங்களுக்குப் பிறகே  உடலில் தாக்கத்தை ஏற்படுத்தும். இவர், நாம் ஆரோக்கியமாகத்தானே இருக்கிறோம், என்று நினைத்து வெளியூருக்குச் சென்றால் நோயின்றி வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த ஊர் மக்களுக்கும் கிருமி பரவ காரணமாகிவிடுவார். (அல் அத்வா பைனத்திப்பி வஹதீஸி முஸ்தபா (ஸல்)) நோயால் பாதிக்கப்பட்ட ஒட்டகம் வைத்திருப்பவர் (ஒட்டகத்தை) ஆரோக்கியமான ஒட்டகம் இருக்கும் இடத்திற்கு கொண்டு வர வேண்டாம்என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (புகாரி) 

யாரைத் தேர்ந்தெடுக்கலாம்?




குறிப்பிட்ட கட்சிக்கு வாக்களிக்க வேண்டுமென்று கூறி தேர்தல் பிரச்சாரம் செய்ய வரவில்லை, என்பதை முதலில் மனதில் இருத்திக் கொண்டு தொடர்ந்து படியுங்கள். தமிழக வரலாற்றில் இந்தத் தேர்தல் மற்ற தேர்தல்களைவிட முற்றிலும் மாறுபட்டதாக இருக்கிறது. கூட்டணி அமைப்பது முதற்கொண்டு கட்சி ஆரம்பிப்பது வரை தேர்தல் நாள் நெருங்கும் வரை நடந்து கொண்டு தான் இருக்கிறது. தங்களுக்கு மத்தியில் ஏற்படக்கூடிய சின்னச்சின்ன பிரச்சினையும் கட்சியையும் இயக்கத்தையும் உடைத்து விடுகிறது.

ஒரு தலைமைக்குக் கட்டுப்படக் கூடிய தன்மை தொண்டர்களிடம் இல்லையா? அல்லது தொண்டர்களின் மனோநிலையைப் புரியாத சர்வாதிகாரப் போக்கு தலைமையிடம் இருக்கிறதா? என்பது புரியவில்லை. கட்சியை விட்டும் நீக்குவதும் புதிய கட்சி ஆரம்பிப்பதும் தொய்வில்லாமல் நடந்து கொண்டிருக்கிறது. கட்டுக்கோப்பான கட்சி என்று கருதப்பட்ட கட்சியிலும் கூட பல சலசலப்புகள்.

ஒற்றுமையை ஓங்கி ஒலிக்கும் முஸ்லிம் இயக்கங்களும் கட்சிகளும் கூட இதில் விதிவிலக்கல்ல. மாபெரும் ஒற்றுமையின் மூலம் உலகையே கட்டிப்போட்ட சரித்திரம் இஸ்லாத்திற்கு சொந்தமானது, என்பதை மறந்து விட முடியாது, என்கிற அதே நேரத்தில் இன்று நாம் பிரிவினை சரித்திரத்தை எழுத ஆரம்பித்திருக்கிறோமா? என்ற சேந்தேகமும் எழுகிறது.  நேர்மையான ஆட்சியைத் தேர்ந்தெடுப்பதில் முஸ்லிம்கள் மட்டுமல்ல, அனைத்து சமூகமும் ஏன் ஒன்று படக்கூடாது?!
ஒரு குறிப்பிட்ட பிரிவினர் அனைவரும் ஒன்றுபட்டு ஒருவருக்கு முழு ஆதரவு தெரிவித்து விட்டால் அவர்கள் எளிதாக ஆட்சிக்கு வந்து விடலாம், என்று பரவலாக பேசப்படுகிறது. முஸ்லிம்கள் அனைவரும ஒன்றிணைந்தால் அடுத்து ஆட்சிக்கு வருபவரை தீர்மானித்து விட முடியும், என்று கூறலாம். அல்லது அரசு ஊழியர்கள் தான் அடுத்த ஆட்சியாளரைத் தீர்மானிக்க முடியும். மதுவிலக்கை ஆதரிப்பவர்கள் தான் அடுத்த அரசைத் தீர்மானிக்க முடியும். பெண்கள் தான் அடுத்த அரசைத் தீர்மானிக்க முடியும்.

இப்படியெல்லாம் சொல்வது நன்றாகத் தான் இருக்கிறது. ஆனால், அது நடக்குமா? என்பது தான் கேள்விக்குறி. எந்த பிரிவினரும் சமூகத்தினரும் ஒன்றுபடுவது என்பது இந்தக் காலத்தில் சாத்தியமற்றதாகவே இருக்கிறது. அது மட்டுமல்ல. குறிப்பிட்ட கட்சிக்கு வாக்களிப்பதில் ஒன்றுபடாவிட்டால் நோட்டாவில் (49 ஓ) ஓட்டு போடுவதிலாவது ஒன்று சேருங்கள், என்ற அறிவிப்பும் வாட்ஸப்பில் பரவிக் கொண்டிருக்கிறது.

ஏனென்றால் நோட்டா 35 சதவீதத்துக்கும் மேல் பதிவாகியிருந்தால் எந்தக் கட்சி வெற்றி பெற்றிருந்தாலும் அது செல்லாதாம். தற்போது தேர்தலில் போட்டியிட்ட எந்த அரசியல் கட்சியும் மீண்டும் அரசியலில் ஈடுபடமுடியாதாம். கேட்பதற்கு நல்லா தான் இருக்கிறது. எனினும், எந்த நல்ல காரியத்திலாவது இந்த சமூகம் ஒன்றுபட்டுவிட்டால் தான் இந்த தேசம் என்றைக்கோ வல்லசாகியிருக்குமே! சமீப கால வரலாற்றைப் பார்க்கும் போது தமிழக மக்கள் இரண்டு விஷயத்தில் ஒன்றுபட்டிருப்பதையும் பாராட்டாமல் இருக்க முடியாது. 1. ஒவ்வொரு தடவையும் ஆட்சியாளர்களை மாற்றிக் கொண்டிருப்பது. 2. தொங்கு சட்டசபை ஏற்படாமல் பார்த்துக் கொள்வது. 

இளைஞர்களின் கவனத்திற்கு
அவ்வாறே இன்று இளைய தலைமுறையினரின் வாக்குகள் அடுத்த ஆட்சியை நிர்ணயிக்கும் சக்தி என்ற கருத்தையும் ஊடகங்கள் முன்வைக்கின்றன. தமிழக வாக்காளர்களில், 18 முதல், 49 வயதினர், 3.98 கோடி பேர், இருக்கின்றனர். 50 முதல், 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள், 1.81 கோடி பேர் இருக்கின்றனர், என்கிறது ஒரு புள்ளிவிபரம். அதை தக்கவைக்கும் விதமாக பள்ளி, கல்லுரி மாணவர்களுக்கு சைக்கிள், 'லேப் டாப்' உதவிகள், இளைஞர் பாசறை அமைப்பு ஆகியவற்றில், அரசியல் கட்சிகள் அதிககவனம் செலுத்துகின்றன.

ஆனால், இளைஞர்கள் அனைவர்களும் அவ்வளவு சீக்கிரத்தில் ஒன்றுபட்டு விடுவார்களா என்ன? இளைஞர்களுக்கு அனுபவம் ஏதும் இருக்காது. எனவே, எதிலும் அவர்களுக்கு சரியான முடிவான கருத்தைத் தேர்ந்தெடுப்பது என்பது சிரமமான காரியம். எனினும், எதுவாக இருந்தாலும் ஏதாவது ஒரு கருத்தை முன்வைப்பவர்கள் தான், இளைஞர்கள். இந்நிலையில் நாட்டின் நலன்கருதி சிறிது விவேகமாக செயல்பட்டு நாட்டின் வரலாற்றைப் புரட்டிப் பார்த்து ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் விஷயத்தில் தூரநோக்குடன் செயல்பட்டால் நன்றாக இருக்கும். சினிமாவையோ கிரிக்கெட்டையோ முன்னுதாரணமாக ஆக்கிக் கொள்ளக் கூடாது.

சினிமாவில் நடிப்பவர்கள் அனைவரும் நடப்பிலும் சாதிப்பார்கள், என்று சொல்லவும் முடியாது. இன்றைய நடைமுறையில் அப்படி பார்க்கவும் முடியவில்லை. தேர்தல் சமயத்தில் மட்டும் வார்த்தை ஜாலங்களை மாயாஜாலாமாக காட்டுபவர்களை நம்பிவிடக்கூடாது.

இதுவரை ஆட்சி செய்தவர்களை ஒதுக்கிவிட்டு புதிய நபர்களைத் தேர்ந்தெடுக்கலாம், என்று நினைப்பவர்கள் அந்த நபர்கள் தங்களுடைய சுயவாழ்வில் எப்படி நடந்து கொண்டார்கள், என்பதையும் கவனிக்க வேண்டும். தங்களுடைய கட்சியின் உள்நிர்வாகத்தில் எவ்வளவு திறமையாகச் செயல்படுகிறார்கள்? என்பதையும் ஆராயலாம். ஒரு கட்சியை சிறப்பாக வழிநடத்திச் செல்பவர்கள் நாட்டையும் சிறப்பாக வழிநடத்திச் செல்வதற்கு சாத்தியம் உண்டு. தன்னுடைய கட்சியைக் கூட முறையாக வழிநடத்தத் தெரியாதவர் நாடாளும் திறனைப் பெற்றிருப்பார், என்று சொல்லிட முடியாது.

வேட்பாளரின் தகுதிகள்:

ஒரு வேட்பாளர்,
1. சேவை மனப்பான்மையுடன் உழைக்கக்கூடியவராக இருக்க வேண்டும்.
2. எளிதில் தொடர்புகொள்ளத் தகுந்தவராக இருக்க வேண்டும்.
3. நேர்மையும் உண்மையும் நிச்சயத் தகுதிகள்.
4. ஊழல் செய்யக் கூடாது; செய்யவும் அனுமதிக்கக் கூடாது.
5. தொழில்நுட்பங்கள் அறிந்தவராக இருக்க வேண்டும்.
6. சாதி மத நிறுவனங்களோடு தொடர்பற்றவராக இருக்க வேண்டும்.
7. எளிமை அவசியம்.
8. சுயமாக முன்னேறியவராக இருக்க வேண்டும்.
9. அதிரடியாகச் செயல்படுபவராக இருக்க வேண்டும்.
10. விரைவாக முடிவு எடுக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
என்பது இளைஞர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது, என்று கூறும் ஊடகங்கள் ஒரு வாக்காளருக்கு என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டுமென்பதையும் பட்டியலிட்டாக வேண்டும்.

வாக்காளர்களின் தகுதிகள்:
அரசியல் கட்சிகள் ஓட்டுக்காக பணம் கொடுத்தால் அதை வாங்குவதற்குத் தயாராக இருக்கும் வாக்காளர்கள் இருக்கும் வரை அரசியல் எப்படி சுத்தமாகும். அவன் என்ன சொந்த பணத்தையா கொடுக்கிறான்? கருப்புப் பணத்தைத் தான் கொடுக்கிறான். நம்முடைய வரிப்பணத்தைத் தான் கொடுக்கிறான். அதை வாங்கினால் என்ன தவறு? என்ற வியாக்கியானம் வேறு. தேர்தல் ஆணைய அதிகாரிகள் கோடிக்கணக்கில் பணத்தைப் பறிமுதல் செய்தாலும் ஆங்காங்கே பணம் கொடுத்ததற்கான புகார்களும் பத்திரிக்கைகளில் வெளியாகத் தான் செய்கின்றன.

தமிழக முதல்வர்களின் பட்டியலில் காமராஜருக்குக் கிடைத்த சிறப்பம்சம் யாருக்கும் கிடைத்திருக்க முடியாது. அவருடைய வாழ்க்கை எளிமை, நேர்மை, தூய்மை எனும் தாரக மந்திரத்தை அடிப்படையாகக் கொண்டதாக இருந்தது. முதல்வராக இருந்த காலத்தில் சென்னையில் உள்ள தனது வீட்டில் தனது தாயைக்கூட இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு மேலாகத் தங்க காமராஜர் அனுமதித்ததில்லை. தனது சம்பளத்திலிருந்து மாதம் ரூ.120 கொடுத்து விருதுநகரில்தான் தனது தாயைத் தங்கவைத்திருந்தார். தன்னைச் சுற்றி தனது குடும்பத்தினர், உறவினர் இருக்கக் கூடாது என்பதில் மிகவும் கண்டிப்பாக இருந்தார்.

எனினும் தற்காலத்தில் மோசமானவர்கள் மட்டுமே அரசியலில் இருக்க முடியும் என்ற சூழ்நிலைய உருவாக்கிய ஊழல், லஞ்சம் போன்ற பொருளாதாரக்குற்றங்கள் பற்றிய விழிப்புணர்வு எந்தஅளவுக்கு இருக்கிறது, என்று தெரியவில்லை. ஆட்சியாளர்கள் நீதிமன்றத்தால் தண்டிக்கப்படும் போது கதறி அழும் வாக்காளர்கள் மட்டுமல்ல, தற்கொலைக்கு முயற்சிக்கும் வாக்காளர்களும் இருக்கின்றனர். இதற்கு முன் ஆட்சி செய்தவர்களின் நிறைகுறைகள் எவ்விதத்திலும் ஞாபகத்தில் வைக்காத மறதியில் வாடும் வாக்களர்களும் இருக்கின்றனர்.

மக்களை எதையும் எளிதில் மறக்கடிப்பதில் மீடியாக்கள் திறமையாக பயன்படுத்தப்படுகின்றன. தேர்தல் அறிக்கையில் யாராவது இலவசங்களை அள்ளி வீசமாட்டார்களா? என்று ஏங்கும் வாக்களர்களும் இருக்கின்றனர். மீடியாக்கள் கூறும் கதைகளையும் கருத்துத் திணிப்பையும் மட்டுமே நம்பி தொலைநோக்குப் பார்வையில்லாத வாக்காளர்களும் இருக்கின்றனர்.

சினிமா உருவாக்கும் பிம்பங்களை நிஜமென நம்பி குறுகிய கண்ணோட்டத்தில் தேர்தலை அணுகும் வாக்காளர்களும் இருக்கின்றனர். மக்களை சீரியல், சினிமா, கிரிக்கெட் மாயையில் ஆழ்த்தி மயக்கமுறச் செய்யும் ஊடகங்களுக்கு அரசியல்வாதிகள் கோடி நன்றிகள் சொல்வார்கள். வேட்பாளர்கள் சுத்தமாக இருக்க வேண்டுமென்று நினைக்கும் வாக்காளர்களும் தங்களுடைய தகுதிகளை மறந்து விடக்கூடாது.

இப்படி பல நிலைகளில் யோசிக்கும் போது முறையான நேர்மையான ஆட்சியாளரைத் தேர்ந்தெடுப்பது தற்காலத்தில் அவ்வளவு சாதாரண காரியமல்ல, என்பதை உணரமுடிகிறது. அரசியலை சுத்தப் படுத்துவதற்கு நீண்ட கால திட்டங்களுடன் செயல்படும் ஒரு சமூகம் களமிறங்கியாக வேண்டுமென்பதை புரிந்து கொள்ள முடிகிறது. நல்லதோ கெட்டதோ ஏதாவது ஓர் அரசைத் தேர்ந்தெடுத்தாக வேண்டுமென்ற கட்டாயத்தில் இருக்கிறோம், என்று சொல்வது காதில் விழுகிறது. எனினும், உங்களுடைய வாக்கு நீங்கள் வழங்கும் சாட்சி என்பதை மனதில் கொண்டு நிதானமாக சிந்தித்து முடிவெடுப்பது உங்களுடைய கடமை.

முன்மாதிரி அரசியல்:
இந்த இடத்தில் இஸ்லாமிய அரசியல் தொடர்பான சில செய்திகளையும் மறந்துவிட முடியாது. இன்றைய உலக அரசியல் அதை எடுத்து நடக்குமேயானால் அரசியலைப் போன்று புனிதம் வேறொன்று கிடையாது, என்று மக்களை நம்பவைத்துவிடும். தேர்தல் நடக்கும் சமயத்தில் அரசியல்வாதிகள் மக்களைக் கவர்வதற்கு கவர்ச்சி கரமான திட்டங்களுடன் நம்மிடம் வருவார்கள். நபி (ஸல்) அவர்கள் இது போன்ற அரசியல் நடத்தியது கிடையாது. அதே சமயம் மக்களுடைய எல்லா தேவைகளையும் தங்களுடைய பொறுப்பாக நினைத்து நிறைவு செய்து கொடுத்தார்கள். 

முஃமின்களில் - இறைநம்பிக்கையாளர்களில் யார் சொத்துக்களை விட்டு மரணித்து விட்டாலும் அதை அவருடைய நெருங்கிய உறவினர்கள் எடுத்துக் கொள்ளட்டும்.அவர் ஏதாவது கடனை விட்டுச் சென்று விட்டாலோ அல்லது பிள்ளைகளை விட்டு விட்டு மரணித்து விட்டாலோ அந்த கடன் மற்றும் அனாதைப் பிள்ளைகளுக்கு நான் பொறுப்பாளன், என்று கூறினார்கள். (நூல்: புகாரீ -  2224)

இது வாக்குகளுக்காக வேட்பாளர் கொடுக்கும் வாக்குறுதி போலக் கிடையாது. தேர்தல் முடிந்து விட்டால் அவரைப் பார்ப்பதே கஷ்டமாகி விடும். நபியவர்களுக்கு யாருடைய வாக்கும் தேவையில்லை. ஆனாலும் நபியவர்கள் வாக்கு மாறமாட்டார்கள். தேர்தல் நடத்தித் தான் வெற்றி பெற வேண்டுமென்ற எந்த நிர்பந்தமும் அவர்களுக்கில்லை. ஆனாலும் நபியவர்கள் மக்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பதை தங்களுடைய பொறுப்பாக எடுத்துக் கொண்டார்கள்.

பஷீர் இப்னு அக்ரபா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: உஹது யுத்தம் நடந்த போது என்னுடைய தந்தை என்ன ஆனார்? என்று நபியவர்களிம் கேட்டேன். அதற்கு நபியவர்கள் அவர் ஷஹிதாகி விட்டார். அல்லஹ்வுடைய ரஹ்மத் அவருக்கு கிடைக்கட்டும் என்று கூறினார்கள். இதைக் கேட்ட நான் அழ ஆரம்பித்து விட்டேன். உடனே நபி (ஸல்) அவர்கள் என்னை பிடித்து தலையைத் தடவிக்கொடுத்து ஆறுதல் படுத்தினார்கள். பின்னர் என்னை தங்களுடன் அழைத்துச் சென்றுநான் உன்னுடைய தந்தையாகவும் ஆயிஷா (ரலி) அவர்கள் உன்னுடைய தாயாகவும் இருப்பதை நீ விரும்பமாட்டாயா? என்று கேட்டார்கள். (மஜ்மவுஸ்ஸவாயித்)   வாக்குறுதியோடு மட்டும் நிற்க வில்லை. அதை முழுமையாக செயல்படுத்தியும் காட்டினார்கள், என்பதற்கு வரலாறே சான்று. 

முன்மாதிரி ஆட்சியாளர்
இதற்கிடையே சில இஸ்லாத்தின் எதிரிகள் முஹம்மது (ஸல்) அவர்கள் மக்காவில் இருக்கும் வரை நபியாக இருந்தார்கள். மதீனாவுக்கு சென்ற பின் நபி என்ற பாத்திரத்திலிருந்து மன்னருக்கு மாறிவிட்டார்கள் என்று தூற்றுகின்றனர்.அதாவது மக்காவில் இருக்கும் வரை பண பலமோ படை பலமோ இல்லையென்றும்  மதீனாவுக்கு சென்ற பின் எல்லா வகையான பலமும் வந்து விட்டதாக கருதுகின்றனர். (நூல் கரீபோங்கா வாலீ)

நபியவர்களின் வரலாற்றைப் படித்தவர்கள் இப்படிப் பேச மாட்டார்கள். உலகின் மற்ற பாதுஷாக்களுக்கும் இந்த மதீனாவின் மன்னருக்கும் மத்தியில் இருந்த வானம், பூமிக்கு மத்தியில் உள்ள வித்தியாசம் ஒரு குருடனுக்குக் கூட தெரியும். நபி (ஸல்) அவர்களிடம் வெற்றியும் செல்வமும் குவிந்த போதும் கூட மன்னர்களின் படாடோபங்களை அவர்களிடம் பார்க்க முடிந்ததா? ஏன்? இப்பொழுதிருக்கும் ஜனநாயக ஆட்சியானர்களிடம் இருக்கும் ஆடம்பரங்களாவது நபியவர்களிடம் இருந்ததா?

இந்த மதீனாவுடைய மன்னரின் வீட்டில் தொடர்ந்து அடுப்பு எறியாமல் இருந்திருக்கிறதே! காட்டுங்கள் இப்படியொரு ஆட்சியாளரை. மன்னர்கள் எப்பொழுதாவது பசியின் தாக்கத்தால் வயிற்றில் கற்களை கட்டியிருக்கிறார்களா? வீட்டு வேலை செய்து அதன் தடங்கள் பதிந்த இளவரசியை மதீனாவைத் தவிர உலகில் எங்காவது காட்ட முடியுமா? குடும்பமே ஆட்சி செய்வதை வேண்டுமானால் இன்று பார்க்கலாம். மதீனா மன்னரின் வீடு (அரச மாளிகை)  இப்பொழுதும் இருககிறது. அதை அளந்து பார்த்துக் கொள்ள முடியும். இது போன்ற சாதாரண இருப்பிடத்தை எந்த மன்னருக்காவது காட்ட முடியுமா? இன்று பொதுமக்களுக்கு மின்வெட்டு ஏற்படுகிறது.

அதே சமயம் ஒரு அரசியல்வாதி அந்தப் பகுதிக்கு வருகிறார், என்றால் அவர் அங்கிருந்து செல்லும் வரை மின் வெட்டு இருக்காது. சாலை படுமோசமாக இருக்கும். அரசியல்வாதி அந்த வழியாக வரப் போகிறாரென்றால் வேலை இரவு பகலாக நடக்கும்.  மனிதன் தான் கஷ்டப்பட்டாலும் தன்னுடைய குடும்பம் தனக்குப் பின் செல்வச் செழிப்பாக இருக்க வேண்டும், என்றே விரும்புவான். அதுவும் அரசியல்வாதியாக இருந்தால் கேட்கவே தேவையில்லை.

ஆனால் இங்கு மதீனாவின் ஆட்சியாளர், யா அல்லாஹ்! முஹம்மது (ஸல்) அவர்களுடைய குடும்பத்தினருக்கு வாழ்வதற்குப் போதுமான அளவுக்கு மட்டும் உணவளிப்பாயாக! என்று துஆ செய்தார்கள். (முஸ்லிம் - 1747) சமுகத்தில் உள்ள எல்லா ஏழைகளுக்கும் ஜகாத்தில் பங்கு இருக்கிறது. ஆனால் இங்கே மதீனாவின் மன்னருடைய குடும்பத்தினருக்கு ஸதகா ஹலால் ஆகாது - ஆகுமாகாது என்று மன்னரே உத்தரவு பிறப்பிக்கிறார். இது போன்று ஒரு மன்னருடைய குடும்பத்தினரையாவது காட்ட முடியுமா?

இந்த மன்னருடைய கஜானாவில் ஜகாத்தும் கனீமத்துப் பொருட்களும் குவிந்து கிடக்கும். ஆனால், நபியவர்கள் அவற்றின் மூலம் எந்த ஆடம்பரமும் செய்தது கிடையாது. அவற்றை தனக்கு சொந்தமாக்கியதும் கிடையாது. வஃபாத்தாகும் போது அவர்கள் விட்டுச் சென்ற சொத்துக்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அதுவும் வாரிசுகளுக்கு கிடையாது. நபிமார்கள் விட்டுச் சென்ற சொத்துக்களெல்லாம் (ஏழைகளுக்கு) ஸதகாவாகிவிடும் என்று முன்பே சொல்லிவிட்டார்கள். இன்றோ இதற்கு முன்போ இது போன்ற ஒரு ஆட்சியாளரை உலகின் எந்த மூலையிலாவது காட்ட முடியுமா? உண்மை அவ்வாறிருக்க மதீனாவுக்கு சென்ற பின் நபியாக இல்லாமல் மற்ற மன்னர்களில் ஒருவராக ஆகிவிட்டார் என்று எப்படி சொல்ல முடியும்? (நூல்: கரீபோங்கா வாலீ)