குறிப்பிட்ட கட்சிக்கு வாக்களிக்க வேண்டுமென்று கூறி தேர்தல்
பிரச்சாரம் செய்ய வரவில்லை, என்பதை முதலில் மனதில் இருத்திக் கொண்டு தொடர்ந்து படியுங்கள்.
தமிழக வரலாற்றில் இந்தத் தேர்தல் மற்ற தேர்தல்களைவிட முற்றிலும் மாறுபட்டதாக இருக்கிறது.
கூட்டணி அமைப்பது முதற்கொண்டு கட்சி ஆரம்பிப்பது வரை தேர்தல் நாள் நெருங்கும் வரை நடந்து
கொண்டு தான் இருக்கிறது. தங்களுக்கு மத்தியில் ஏற்படக்கூடிய சின்னச்சின்ன பிரச்சினையும்
கட்சியையும் இயக்கத்தையும் உடைத்து விடுகிறது.
ஒரு தலைமைக்குக் கட்டுப்படக் கூடிய தன்மை தொண்டர்களிடம்
இல்லையா? அல்லது
தொண்டர்களின் மனோநிலையைப் புரியாத சர்வாதிகாரப் போக்கு தலைமையிடம் இருக்கிறதா?
என்பது புரியவில்லை.
கட்சியை விட்டும் நீக்குவதும் புதிய கட்சி ஆரம்பிப்பதும் தொய்வில்லாமல் நடந்து கொண்டிருக்கிறது.
கட்டுக்கோப்பான கட்சி என்று கருதப்பட்ட கட்சியிலும் கூட பல சலசலப்புகள்.
ஒற்றுமையை ஓங்கி ஒலிக்கும் முஸ்லிம் இயக்கங்களும் கட்சிகளும்
கூட இதில் விதிவிலக்கல்ல. மாபெரும் ஒற்றுமையின் மூலம் உலகையே கட்டிப்போட்ட சரித்திரம்
இஸ்லாத்திற்கு சொந்தமானது, என்பதை மறந்து விட முடியாது, என்கிற அதே நேரத்தில் இன்று நாம் பிரிவினை
சரித்திரத்தை எழுத ஆரம்பித்திருக்கிறோமா? என்ற சேந்தேகமும் எழுகிறது. நேர்மையான ஆட்சியைத் தேர்ந்தெடுப்பதில் முஸ்லிம்கள்
மட்டுமல்ல, அனைத்து சமூகமும் ஏன் ஒன்று படக்கூடாது?!
ஒரு குறிப்பிட்ட பிரிவினர் அனைவரும் ஒன்றுபட்டு ஒருவருக்கு
முழு ஆதரவு தெரிவித்து விட்டால் அவர்கள் எளிதாக ஆட்சிக்கு வந்து விடலாம், என்று பரவலாக பேசப்படுகிறது.
முஸ்லிம்கள் அனைவரும ஒன்றிணைந்தால் அடுத்து ஆட்சிக்கு வருபவரை தீர்மானித்து விட முடியும்,
என்று கூறலாம். அல்லது
அரசு ஊழியர்கள் தான் அடுத்த ஆட்சியாளரைத் தீர்மானிக்க முடியும். மதுவிலக்கை ஆதரிப்பவர்கள்
தான் அடுத்த அரசைத் தீர்மானிக்க முடியும். பெண்கள் தான் அடுத்த அரசைத் தீர்மானிக்க
முடியும்.
இப்படியெல்லாம் சொல்வது நன்றாகத் தான் இருக்கிறது. ஆனால்,
அது நடக்குமா?
என்பது தான் கேள்விக்குறி.
எந்த பிரிவினரும் சமூகத்தினரும் ஒன்றுபடுவது என்பது இந்தக் காலத்தில் சாத்தியமற்றதாகவே
இருக்கிறது. அது மட்டுமல்ல. குறிப்பிட்ட கட்சிக்கு வாக்களிப்பதில் ஒன்றுபடாவிட்டால்
நோட்டாவில் (49 ஓ) ஓட்டு போடுவதிலாவது ஒன்று சேருங்கள், என்ற அறிவிப்பும் வாட்ஸப்பில் பரவிக்
கொண்டிருக்கிறது.
ஏனென்றால் நோட்டா 35 சதவீதத்துக்கும் மேல் பதிவாகியிருந்தால்
எந்தக் கட்சி வெற்றி பெற்றிருந்தாலும் அது செல்லாதாம். தற்போது தேர்தலில் போட்டியிட்ட
எந்த அரசியல் கட்சியும் மீண்டும் அரசியலில் ஈடுபடமுடியாதாம். கேட்பதற்கு நல்லா தான்
இருக்கிறது. எனினும், எந்த நல்ல காரியத்திலாவது இந்த சமூகம் ஒன்றுபட்டுவிட்டால் தான் இந்த தேசம் என்றைக்கோ
வல்லசாகியிருக்குமே! சமீப கால வரலாற்றைப் பார்க்கும் போது தமிழக மக்கள் இரண்டு விஷயத்தில்
ஒன்றுபட்டிருப்பதையும் பாராட்டாமல் இருக்க முடியாது. 1. ஒவ்வொரு தடவையும் ஆட்சியாளர்களை மாற்றிக்
கொண்டிருப்பது. 2. தொங்கு சட்டசபை ஏற்படாமல் பார்த்துக் கொள்வது.
இளைஞர்களின் கவனத்திற்கு
அவ்வாறே இன்று இளைய தலைமுறையினரின் வாக்குகள் அடுத்த ஆட்சியை
நிர்ணயிக்கும் சக்தி என்ற கருத்தையும் ஊடகங்கள் முன்வைக்கின்றன. தமிழக வாக்காளர்களில்,
18 முதல்,
49 வயதினர்,
3.98 கோடி பேர்,
இருக்கின்றனர். 50 முதல், 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள்,
1.81 கோடி பேர் இருக்கின்றனர்,
என்கிறது ஒரு புள்ளிவிபரம்.
அதை தக்கவைக்கும் விதமாக பள்ளி, கல்லுரி மாணவர்களுக்கு சைக்கிள், 'லேப் டாப்' உதவிகள், இளைஞர் பாசறை அமைப்பு ஆகியவற்றில்,
அரசியல் கட்சிகள் அதிககவனம்
செலுத்துகின்றன.
ஆனால், இளைஞர்கள் அனைவர்களும் அவ்வளவு சீக்கிரத்தில் ஒன்றுபட்டு
விடுவார்களா என்ன? இளைஞர்களுக்கு அனுபவம் ஏதும் இருக்காது. எனவே, எதிலும் அவர்களுக்கு சரியான முடிவான
கருத்தைத் தேர்ந்தெடுப்பது என்பது சிரமமான காரியம். எனினும், எதுவாக இருந்தாலும் ஏதாவது
ஒரு கருத்தை முன்வைப்பவர்கள் தான், இளைஞர்கள். இந்நிலையில் நாட்டின் நலன்கருதி சிறிது விவேகமாக
செயல்பட்டு நாட்டின் வரலாற்றைப் புரட்டிப் பார்த்து ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுக்கும்
விஷயத்தில் தூரநோக்குடன் செயல்பட்டால் நன்றாக இருக்கும். சினிமாவையோ கிரிக்கெட்டையோ
முன்னுதாரணமாக ஆக்கிக் கொள்ளக் கூடாது.
சினிமாவில் நடிப்பவர்கள் அனைவரும் நடப்பிலும் சாதிப்பார்கள்,
என்று சொல்லவும் முடியாது.
இன்றைய நடைமுறையில் அப்படி பார்க்கவும் முடியவில்லை. தேர்தல் சமயத்தில் மட்டும் வார்த்தை
ஜாலங்களை மாயாஜாலாமாக காட்டுபவர்களை நம்பிவிடக்கூடாது.
இதுவரை ஆட்சி செய்தவர்களை ஒதுக்கிவிட்டு புதிய நபர்களைத்
தேர்ந்தெடுக்கலாம், என்று நினைப்பவர்கள் அந்த நபர்கள் தங்களுடைய சுயவாழ்வில் எப்படி நடந்து கொண்டார்கள்,
என்பதையும் கவனிக்க
வேண்டும். தங்களுடைய கட்சியின் உள்நிர்வாகத்தில் எவ்வளவு திறமையாகச் செயல்படுகிறார்கள்?
என்பதையும் ஆராயலாம்.
ஒரு கட்சியை சிறப்பாக வழிநடத்திச் செல்பவர்கள் நாட்டையும் சிறப்பாக வழிநடத்திச் செல்வதற்கு
சாத்தியம் உண்டு. தன்னுடைய கட்சியைக் கூட முறையாக வழிநடத்தத் தெரியாதவர் நாடாளும் திறனைப்
பெற்றிருப்பார், என்று சொல்லிட முடியாது.
வேட்பாளரின் தகுதிகள்:
ஒரு வேட்பாளர்,
1. சேவை மனப்பான்மையுடன் உழைக்கக்கூடியவராக
இருக்க வேண்டும்.
2. எளிதில் தொடர்புகொள்ளத் தகுந்தவராக
இருக்க வேண்டும்.
3. நேர்மையும் உண்மையும் நிச்சயத் தகுதிகள்.
4. ஊழல் செய்யக் கூடாது; செய்யவும் அனுமதிக்கக் கூடாது.
5. தொழில்நுட்பங்கள் அறிந்தவராக இருக்க
வேண்டும்.
6. சாதி மத நிறுவனங்களோடு தொடர்பற்றவராக
இருக்க வேண்டும்.
7. எளிமை அவசியம்.
8. சுயமாக முன்னேறியவராக இருக்க வேண்டும்.
9. அதிரடியாகச் செயல்படுபவராக இருக்க
வேண்டும்.
10. விரைவாக முடிவு எடுக்கத் தெரிந்திருக்க
வேண்டும்.
என்பது இளைஞர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது,
என்று கூறும் ஊடகங்கள்
ஒரு வாக்காளருக்கு என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டுமென்பதையும் பட்டியலிட்டாக வேண்டும்.
வாக்காளர்களின் தகுதிகள்:
அரசியல் கட்சிகள் ஓட்டுக்காக பணம் கொடுத்தால் அதை வாங்குவதற்குத்
தயாராக இருக்கும் வாக்காளர்கள் இருக்கும் வரை அரசியல் எப்படி சுத்தமாகும். அவன் என்ன
சொந்த பணத்தையா கொடுக்கிறான்? கருப்புப் பணத்தைத் தான் கொடுக்கிறான். நம்முடைய வரிப்பணத்தைத்
தான் கொடுக்கிறான். அதை வாங்கினால் என்ன தவறு? என்ற வியாக்கியானம் வேறு. தேர்தல்
ஆணைய அதிகாரிகள் கோடிக்கணக்கில் பணத்தைப் பறிமுதல் செய்தாலும் ஆங்காங்கே பணம் கொடுத்ததற்கான
புகார்களும் பத்திரிக்கைகளில் வெளியாகத் தான் செய்கின்றன.
தமிழக முதல்வர்களின் பட்டியலில் காமராஜருக்குக் கிடைத்த
சிறப்பம்சம் யாருக்கும் கிடைத்திருக்க முடியாது. அவருடைய வாழ்க்கை எளிமை, நேர்மை, தூய்மை எனும் தாரக மந்திரத்தை
அடிப்படையாகக் கொண்டதாக இருந்தது. முதல்வராக இருந்த காலத்தில் சென்னையில் உள்ள தனது
வீட்டில் தனது தாயைக்கூட இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு மேலாகத் தங்க காமராஜர் அனுமதித்ததில்லை.
தனது சம்பளத்திலிருந்து மாதம் ரூ.120 கொடுத்து விருதுநகரில்தான் தனது தாயைத் தங்கவைத்திருந்தார்.
தன்னைச் சுற்றி தனது குடும்பத்தினர், உறவினர் இருக்கக் கூடாது என்பதில் மிகவும் கண்டிப்பாக
இருந்தார்.
எனினும் தற்காலத்தில் மோசமானவர்கள் மட்டுமே அரசியலில்
இருக்க முடியும் என்ற சூழ்நிலைய உருவாக்கிய ஊழல், லஞ்சம் போன்ற பொருளாதாரக்குற்றங்கள்
பற்றிய விழிப்புணர்வு எந்தஅளவுக்கு இருக்கிறது, என்று தெரியவில்லை. ஆட்சியாளர்கள்
நீதிமன்றத்தால் தண்டிக்கப்படும் போது கதறி அழும் வாக்காளர்கள் மட்டுமல்ல, தற்கொலைக்கு முயற்சிக்கும்
வாக்காளர்களும் இருக்கின்றனர். இதற்கு முன் ஆட்சி செய்தவர்களின் நிறைகுறைகள் எவ்விதத்திலும்
ஞாபகத்தில் வைக்காத மறதியில் வாடும் வாக்களர்களும் இருக்கின்றனர்.
மக்களை எதையும் எளிதில் மறக்கடிப்பதில் மீடியாக்கள் திறமையாக
பயன்படுத்தப்படுகின்றன. தேர்தல் அறிக்கையில் யாராவது இலவசங்களை அள்ளி வீசமாட்டார்களா?
என்று ஏங்கும் வாக்களர்களும்
இருக்கின்றனர். மீடியாக்கள் கூறும் கதைகளையும் கருத்துத் திணிப்பையும் மட்டுமே நம்பி
தொலைநோக்குப் பார்வையில்லாத வாக்காளர்களும் இருக்கின்றனர்.
சினிமா உருவாக்கும் பிம்பங்களை நிஜமென நம்பி குறுகிய கண்ணோட்டத்தில்
தேர்தலை அணுகும் வாக்காளர்களும் இருக்கின்றனர். மக்களை சீரியல், சினிமா, கிரிக்கெட் மாயையில் ஆழ்த்தி
மயக்கமுறச் செய்யும் ஊடகங்களுக்கு அரசியல்வாதிகள் கோடி நன்றிகள் சொல்வார்கள். வேட்பாளர்கள்
சுத்தமாக இருக்க வேண்டுமென்று நினைக்கும் வாக்காளர்களும் தங்களுடைய தகுதிகளை மறந்து
விடக்கூடாது.
இப்படி பல நிலைகளில் யோசிக்கும் போது முறையான நேர்மையான
ஆட்சியாளரைத் தேர்ந்தெடுப்பது தற்காலத்தில் அவ்வளவு சாதாரண காரியமல்ல, என்பதை உணரமுடிகிறது. அரசியலை
சுத்தப் படுத்துவதற்கு நீண்ட கால திட்டங்களுடன் செயல்படும் ஒரு சமூகம் களமிறங்கியாக
வேண்டுமென்பதை புரிந்து கொள்ள முடிகிறது. நல்லதோ கெட்டதோ ஏதாவது ஓர் அரசைத் தேர்ந்தெடுத்தாக
வேண்டுமென்ற கட்டாயத்தில் இருக்கிறோம், என்று சொல்வது காதில் விழுகிறது. எனினும், உங்களுடைய வாக்கு நீங்கள்
வழங்கும் சாட்சி என்பதை மனதில் கொண்டு நிதானமாக சிந்தித்து முடிவெடுப்பது உங்களுடைய
கடமை.
முன்மாதிரி அரசியல்:
இந்த இடத்தில் இஸ்லாமிய அரசியல் தொடர்பான சில செய்திகளையும்
மறந்துவிட முடியாது. இன்றைய உலக அரசியல் அதை எடுத்து நடக்குமேயானால் அரசியலைப் போன்று
புனிதம் வேறொன்று கிடையாது, என்று மக்களை நம்பவைத்துவிடும். தேர்தல் நடக்கும் சமயத்தில்
அரசியல்வாதிகள் மக்களைக் கவர்வதற்கு கவர்ச்சி கரமான திட்டங்களுடன் நம்மிடம் வருவார்கள்.
நபி (ஸல்) அவர்கள் இது போன்ற அரசியல் நடத்தியது கிடையாது. அதே சமயம் மக்களுடைய எல்லா
தேவைகளையும் தங்களுடைய பொறுப்பாக நினைத்து நிறைவு செய்து கொடுத்தார்கள்.
முஃமின்களில் - இறைநம்பிக்கையாளர்களில் யார் சொத்துக்களை
விட்டு மரணித்து விட்டாலும் அதை அவருடைய நெருங்கிய உறவினர்கள் எடுத்துக் கொள்ளட்டும்.அவர்
ஏதாவது கடனை விட்டுச் சென்று விட்டாலோ அல்லது பிள்ளைகளை விட்டு விட்டு மரணித்து விட்டாலோ
அந்த கடன் மற்றும் அனாதைப் பிள்ளைகளுக்கு நான் பொறுப்பாளன், என்று கூறினார்கள். (நூல்: புகாரீ
- 2224)
இது வாக்குகளுக்காக வேட்பாளர் கொடுக்கும் வாக்குறுதி போலக்
கிடையாது. தேர்தல் முடிந்து விட்டால் அவரைப் பார்ப்பதே கஷ்டமாகி விடும். நபியவர்களுக்கு
யாருடைய வாக்கும் தேவையில்லை. ஆனாலும் நபியவர்கள் வாக்கு மாறமாட்டார்கள். தேர்தல் நடத்தித்
தான் வெற்றி பெற வேண்டுமென்ற எந்த நிர்பந்தமும் அவர்களுக்கில்லை. ஆனாலும் நபியவர்கள்
மக்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பதை தங்களுடைய பொறுப்பாக எடுத்துக் கொண்டார்கள்.
பஷீர் இப்னு அக்ரபா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: உஹது
யுத்தம் நடந்த போது என்னுடைய தந்தை என்ன ஆனார்? என்று நபியவர்களிம் கேட்டேன். அதற்கு
நபியவர்கள் அவர் ஷஹிதாகி விட்டார். அல்லஹ்வுடைய ரஹ்மத் அவருக்கு கிடைக்கட்டும் என்று
கூறினார்கள். இதைக் கேட்ட நான் அழ ஆரம்பித்து விட்டேன். உடனே நபி (ஸல்) அவர்கள் என்னை
பிடித்து தலையைத் தடவிக்கொடுத்து ஆறுதல் படுத்தினார்கள். பின்னர் என்னை தங்களுடன் அழைத்துச்
சென்று, நான் உன்னுடைய தந்தையாகவும் ஆயிஷா
(ரலி) அவர்கள் உன்னுடைய தாயாகவும் இருப்பதை நீ விரும்பமாட்டாயா? என்று கேட்டார்கள். (மஜ்மவுஸ்ஸவாயித்) வாக்குறுதியோடு மட்டும் நிற்க வில்லை. அதை முழுமையாக
செயல்படுத்தியும் காட்டினார்கள், என்பதற்கு வரலாறே சான்று.
முன்மாதிரி ஆட்சியாளர்
இதற்கிடையே சில இஸ்லாத்தின் எதிரிகள் முஹம்மது (ஸல்) அவர்கள்
மக்காவில் இருக்கும் வரை நபியாக இருந்தார்கள். மதீனாவுக்கு சென்ற பின் நபி என்ற பாத்திரத்திலிருந்து
மன்னருக்கு மாறிவிட்டார்கள் என்று தூற்றுகின்றனர்.அதாவது மக்காவில் இருக்கும் வரை பண
பலமோ படை பலமோ இல்லையென்றும் மதீனாவுக்கு சென்ற
பின் எல்லா வகையான பலமும் வந்து விட்டதாக கருதுகின்றனர். (நூல் கரீபோங்கா வாலீ)
நபியவர்களின் வரலாற்றைப் படித்தவர்கள் இப்படிப் பேச மாட்டார்கள்.
உலகின் மற்ற பாதுஷாக்களுக்கும் இந்த மதீனாவின் மன்னருக்கும் மத்தியில் இருந்த வானம்,
பூமிக்கு மத்தியில்
உள்ள வித்தியாசம் ஒரு குருடனுக்குக் கூட தெரியும். நபி (ஸல்) அவர்களிடம் வெற்றியும்
செல்வமும் குவிந்த போதும் கூட மன்னர்களின் படாடோபங்களை அவர்களிடம் பார்க்க முடிந்ததா?
ஏன்? இப்பொழுதிருக்கும் ஜனநாயக
ஆட்சியானர்களிடம் இருக்கும் ஆடம்பரங்களாவது நபியவர்களிடம் இருந்ததா?
இந்த மதீனாவுடைய மன்னரின் வீட்டில் தொடர்ந்து அடுப்பு
எறியாமல் இருந்திருக்கிறதே! காட்டுங்கள் இப்படியொரு ஆட்சியாளரை. மன்னர்கள் எப்பொழுதாவது
பசியின் தாக்கத்தால் வயிற்றில் கற்களை கட்டியிருக்கிறார்களா? வீட்டு வேலை செய்து அதன் தடங்கள்
பதிந்த இளவரசியை மதீனாவைத் தவிர உலகில் எங்காவது காட்ட முடியுமா? குடும்பமே ஆட்சி செய்வதை வேண்டுமானால்
இன்று பார்க்கலாம். மதீனா மன்னரின் வீடு (அரச மாளிகை) இப்பொழுதும் இருககிறது. அதை அளந்து பார்த்துக் கொள்ள
முடியும். இது போன்ற சாதாரண இருப்பிடத்தை எந்த மன்னருக்காவது காட்ட முடியுமா?
இன்று பொதுமக்களுக்கு
மின்வெட்டு ஏற்படுகிறது.
அதே சமயம் ஒரு அரசியல்வாதி அந்தப் பகுதிக்கு வருகிறார்,
என்றால் அவர் அங்கிருந்து
செல்லும் வரை மின் வெட்டு இருக்காது. சாலை படுமோசமாக இருக்கும். அரசியல்வாதி அந்த வழியாக
வரப் போகிறாரென்றால் வேலை இரவு பகலாக நடக்கும்.
மனிதன் தான் கஷ்டப்பட்டாலும் தன்னுடைய குடும்பம் தனக்குப் பின் செல்வச் செழிப்பாக
இருக்க வேண்டும், என்றே விரும்புவான். அதுவும் அரசியல்வாதியாக இருந்தால் கேட்கவே தேவையில்லை.
ஆனால் இங்கு மதீனாவின் ஆட்சியாளர், யா அல்லாஹ்! முஹம்மது (ஸல்)
அவர்களுடைய குடும்பத்தினருக்கு வாழ்வதற்குப் போதுமான அளவுக்கு மட்டும் உணவளிப்பாயாக!
என்று துஆ செய்தார்கள். (முஸ்லிம் - 1747) சமுகத்தில் உள்ள எல்லா ஏழைகளுக்கும் ஜகாத்தில் பங்கு இருக்கிறது.
ஆனால் இங்கே மதீனாவின் மன்னருடைய குடும்பத்தினருக்கு ஸதகா ஹலால் ஆகாது - ஆகுமாகாது
என்று மன்னரே உத்தரவு பிறப்பிக்கிறார். இது போன்று ஒரு மன்னருடைய குடும்பத்தினரையாவது
காட்ட முடியுமா?
இந்த மன்னருடைய கஜானாவில் ஜகாத்தும் கனீமத்துப் பொருட்களும்
குவிந்து கிடக்கும். ஆனால், நபியவர்கள் அவற்றின் மூலம் எந்த ஆடம்பரமும் செய்தது கிடையாது.
அவற்றை தனக்கு சொந்தமாக்கியதும் கிடையாது. வஃபாத்தாகும் போது அவர்கள் விட்டுச் சென்ற
சொத்துக்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அதுவும் வாரிசுகளுக்கு கிடையாது. நபிமார்கள்
விட்டுச் சென்ற சொத்துக்களெல்லாம் (ஏழைகளுக்கு) ஸதகாவாகிவிடும் என்று முன்பே சொல்லிவிட்டார்கள்.
இன்றோ இதற்கு முன்போ இது போன்ற ஒரு ஆட்சியாளரை உலகின் எந்த மூலையிலாவது காட்ட முடியுமா?
உண்மை அவ்வாறிருக்க
மதீனாவுக்கு சென்ற பின் நபியாக இல்லாமல் மற்ற மன்னர்களில் ஒருவராக ஆகிவிட்டார் என்று
எப்படி சொல்ல முடியும்? (நூல்: கரீபோங்கா வாலீ)
No comments:
Post a Comment