Sunday, 8 May 2016

தொற்று நோய் உண்டா?



உணவுக்கலப்படத்தால் உயிரிழப்புகள் ஆயிரக்கணக்கில் ஏற்படுவதாக புள்ளி விவரங்கள் கூறிக்கொண்டிருக்கின்றன. இஸ்லாத்தை பொறுத்த வரை சின்னச் சின்ன சிரமம் கொடுப்பது கூட அவனை இஸ்லாத்தை விட்டுமே வெளியாக்கிவிடும், என்று எச்சரிக்கப்பட்டிருக்கிறது. 

தன்னுடைய கை மற்றும் நாவின் மூலம் (ஏற்படும் தீங்குகளை விட்டும்) சக முஸ்லிம்கள் பாதுகாப்பு பெற்றால் தான் அவர் உண்மை முஸ்லிமாக முடியும், என்றும் (யாரும் யாருக்கும்) தீங்கிழைப்பதோ பரஸ்பரம் ஒருவருக்கொருவர் சிரமம் கொடுப்பதோ கூடாது என்றும் நபி (ஸல்) அவர்கள் உபதேசித்துள்ளார்கள்.

இந்த நபி மொழியிலிருந்து ஏராளமான சட்டங்களை மார்க்க வல்லுணர்கள் கூறியுள்ளனர். எந்த ஒரு தனி நபரும் மற்றவர்களுடைய ஆரோக்கியத்திற்கு எந்தப் பங்கமும் ஏற்படுத்தக்கூடாது. (அல்லாஹ்வின் நாட்டப்படி) நோயாளியின் கிருமி மற்றவர்களுக்கு தொற்றும் விதமாக நடந்து கொள்ளக்கூடாது. அப்படிப்பட்ட நபர், ரொட்டி மாஸ்டராகவோ பொது சந்தையில் விற்பனையாளராகவோ இருக்கக்கூடாது. இது போன்ற விதிமுறைகளை இந்த நபி மொழி நமக்கு சொல்லித்தருகிறது.

நபி (ஸல்) அவர்களே தும்மினால் கூட உம்மத்தின் படிப்பினைக்காக கையையோ அல்லது துணியையோ வாயருகில் வைத்துக்கொள்வார்கள். தும்மலின் சப்தத்தை தாழ்த்திக் கொள்வார்கள்.(அபூதாவூத் 4374) நபி (ஸல்) அவர்ளுடைய எச்சிலை பரக்கத்தாக நினைக்கும் நபித்தோழர்கள் முன்னால் இருக்கும் போது கூட நபி (ஸல்) அவர்கள் தும்மல் நீர் யார் மேலும் பட்டு விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்திருக்கிறார்கள்.

காலரா, அம்மை போன்ற கொடிய நோய் ஓர் ஊரில் பரவலாக இருந்தால் அந்த ஊருக்கு நீங்கள் வராதீர்கள். நீங்ள் அந்த ஊரில் இருந்தால் அவ்வூரை விட்டும் வெளியேறாதீர்கள். என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். இந்த நபி மொழி,

ஒரு நோயாளி மற்றவர்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக எப்படி நடந்து கொள்ளவேண்டும், என்பது பற்றியும் மற்றவர்கள் எப்படி தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டும், என்பது பற்றியும் அழகான வழிகாட்டுதலை கொடுக்கிறது.

தொற்று நோயின் மீது ஈமான் கொள்ளக்கூடாது. எல்லாம் அல்லாஹ்வின் நாட்டப்படி தான் நடக்கிறது. இந்த உலகம் காரணங்களின் அடிப்படையில் இயங்குகிறது. எனவே நோய்க்கிருமி ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு சென்றுவிட்டால் அல்லாஹ்வின் நாட்டமிருந்தால் அவருக்கும் அதே நோய் வர வாய்ப்பிருக்கிறது. எனவே அந்த ஊருக்கு செல்லாமல் அந்த நோய் வராமல் தற்காத்துக் கொள்ளவேண்டும்.

இதனால் தொற்று நோயின் மீது ஈமான் கொள்வதை விட்டும் தப்பிக்க முடியும். ஜாஹிலிய்யா (மௌட்டீக) காலத்தில் இந்த விஞ்ஞான அறிவெல்லாம் கிடையாது. ஏகத்துவத்துக்கு முரணாக பல இணைவைப்பு கொள்கைகளை நம்பியிருந்தது போல் தொற்று வியாதியையும் நம்பியிருந்தனர். அந்த நம்பிக்கையை உடைத்தெறிவதற்காகவே தொற்று வியாதி என்பதே கிடையாது என்று நபி (ஸல்) வலியுறுத்தினார்கள்.

தற்காலத்திலும் அது போன்றதொரு நம்பிக்கை இருந்தால் தொற்று நோய் இல்லை என்று அழுத்தமாகச் சொல்லவேண்டும். வியாதி பாதித்த ஊரில் இருப்பவர் ஆரோக்கியமானவராக இருந்தாலும் அந்த ஊரை விட்டும் வெளியே செல்லவேண்டாம், என்று நபி (ஸல்) அறிவுறுத்தியிருப்பது தூர நோக்கு சிந்தனை மிக்கது என்பது மட்டுமல்ல; 19-ம் நூற்றாண்டின் கடைசியில் கண்டுபிடிக்கப்பட்ட நவீன மருத்துவக் கொள்கையை 6-ம் நூற்றாண்டிலேயே நபி (ஸல்) அவர்கள் உலகுக்கு அறிவித்துள்ளார்கள்.

அதாவது, நோயால் பாதிக்கப்பட்ட ஊரில் ஒருவர் வெளிப்படையாக ஆரோக்கியமாக தோன்றினாலும் அவருடைய உடலில் நோய்க்கிருமிகள் நுழைந்திருக்கலாம். ஆனால் மருத்துவ ஆய்வின் படி அவரிடமிருந்து நோய்க்கிருமிகள் மற்றவர்களுக்கு பரவ வாய்ப்பிருக்கிறது. அல்லது அவருக்கு சில நாட்களுக்குப் பின் நோயின் அறிகுறி தென்படலாம். சில நோய்க்கிருமிகள் இரண்டு நாட்களிலேயே உடலில் தாக்கத்தை ஏற்படுத்தும். இன்னும் சில நோய்க்கிருமிகள் ஆறு மாதங்களுக்குப் பிறகே  உடலில் தாக்கத்தை ஏற்படுத்தும். இவர், நாம் ஆரோக்கியமாகத்தானே இருக்கிறோம், என்று நினைத்து வெளியூருக்குச் சென்றால் நோயின்றி வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த ஊர் மக்களுக்கும் கிருமி பரவ காரணமாகிவிடுவார். (அல் அத்வா பைனத்திப்பி வஹதீஸி முஸ்தபா (ஸல்)) நோயால் பாதிக்கப்பட்ட ஒட்டகம் வைத்திருப்பவர் (ஒட்டகத்தை) ஆரோக்கியமான ஒட்டகம் இருக்கும் இடத்திற்கு கொண்டு வர வேண்டாம்என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (புகாரி) 

No comments:

Post a Comment