திருமணத்திற்குப் பின் அவளுக்குத் தேவையான உணவு, உடை, இருப்பிடம் கொடுக்க வேண்டும்.
கணவன் மனைவிக்குத் தேவையான வசதி வாய்ப்புகளைச் செய்து கொடுப்பது அவனுடைய கடமை, என்பதற்கு எவ்வித ஆதாரமும் சொல்லத் தேவையில்லை. காலம் காலமாக
இதுவே முழு உலகின் நடைமுறை. அதே சமயம் குர்ஆன் மற்றும் நபிமொழிகளில் பல இடங்களில் மனைவிக்கு
வாழ்வாதாரம் வழங்குவது பற்றி அல்லாஹ்வும் அவனுடைய இறைத்தூதரும் கூறியுள்ளனர்.
அல்குர்ஆன்:
1. அல்லாஹ் அவர்களில்
சிலரை சிலரை விட மேன்மைப் படுத்தியிருப்பதாலும் ஆண்கள் தங்களுடைய செல்வத்திலிருந்து
செலவு செய்வதாலும் ஆண்கள் பெண்களை நன்கு நிர்வகிப்பவர்களாக இருக்கின்றனர். (4:34) அல்லாஹ் இந்த வசனத்தில் பெண்களை நல்ல விதத்தில் நிர்வகிப்பவர்கள்
ஆண்கள், என்று சொல்லிவிட்டு அதற்குரிய காரணமாக அவர்கள் மனைவிமார்களுக்கு
செலவு செய்கின்றனர், என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளான்.
இந்த வசனத்தில் தணவன் மனைவிக்கு செலவு செய்வதை ஒரு புதிய சட்டமாகச் சொல்லவில்லை, என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஆண், பெண்ணுக்கு செலவு செய்வதென்பது உலக நடைமுறையிலல் ஏற்கனவே இருக்கிறது.
மார்க்கத்தின் நிலைபாடும் அது தான், என்பதைத் தெரிவிப்பதுடன்
அதன் மூலம் கணவனுடைய தகுதியை இந்த வசனம் உறுதி செய்கிறது.
2. அவர்கள் (தலாக்
விடப்பட்ட பெண்கள்) கர்ப்பிணிகளாக இருந்தால் குழந்தை பெற்றெடுக்கும் வரை அவர்களுக்கு
செலவுக்கு (பணம்) கொடுங்கள். (65:6) 3. வசதியுள்ளவர் தம்
வசதிக்கேற்ப செலவு செய்யட்டும். எவருக்கு வாழ்வாதாரம் (அளந்து) குறைவாக வழங்கப்பட்டிருக்கிறதோ
அவர் அல்லாஹ் அவருக்கு வழங்கியதிலிருந்து செலவு செய்யட்டும். (65:7) 4. (பால் கொடுக்கும்) அந்தத் தாய்மார்களுக்கு நல்லமுறையில் உணவளிப்பதும்
உடை வழங்குவதும் யாருக்கு அந்தக் குழந்தை பிறந்திருக்கிறதோ அந்தத் தந்தைக்குரிய பொறுப்பாகும்.
(2:233)
அவள் கணவருடன் ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்கிறாள். இருவரும் சேர்ந்து
சாப்பிட்டுக்கொள்கிறார்கள், என்றால் அதுவே போதுமானது.
மனைவிக்கும் வருமானம் ஏதும் வந்தால் அது அவளுக்கே சொந்தமானது. அதைக் கணவன் கேட்கக்கூடாது.
உங்களில் சிலரை சிலரை விட எதைக்கொண்டு மேன்மைப் படுத்தியிருக்கிறானோ அதற்கு பேராசைப்
படாதீர்கள். ஆண்களுக்கு அவர்கள் சம்பாதித்ததில் பங்குண்டு. பெண்களுக்கு அவர்கள் சம்பாதித்ததில்
பங்குண்டு. அல்லாஹ்வின் அருட்கொடையை அவனிடமே கேளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் யாவற்றைப்
பற்றியும் அறிந்தவனாகவவே இருக்கிறான். (அல்குர்ஆன்- 4:32)
நபிமொழிகள்:
மனைவிக்கு செலவு செய்வது அவசியம், என்ற கருத்து நபிமொழிகளில் தெள்ளத் தெளிவாக உணர்த்தப்பட்டுள்ளது.
ஹஜ்ஜத்துல் விதாவின் இறுதி உரையில் பின்வருமாறு கூறினார்கள்: மனைவிமார்களுக்கு நல்ல
விதத்தில் உணவளிப்பதும் உடை கொடுப்பதும் (ஆண்களாகிய) உங்களுடைய கடமையாகும். (அபூதாவூத்-
1907) முஆவியதுல் குஷைரீ (ரலி) அவர்கள் நபியவர்களிடம் மனைவியின் உரிமைகள்
பற்றி கேட்டார்கள் அப்பொழுது நபி (ஸல்) அவர்கள் நீங்கள் சாப்பிடும் போது அவளுக்கும்
சாப்பாடு கொடுக்க வேண்டும். நீங்கள் உடை உடுத்தும் போது அவளுக்கும் உடை கொடுக்க வேண்டும்.
(அபூதாவூத் - 2144)
மனைவிக்கு உணவு உடை மட்டுமல்ல, அவளுக்குத் தேவையான சகல வசதிகளையும் கணவன் செய்து கொடுக்க வேண்டும்.
ஏனெனில், அலலாஹ் மனைவிமார்களிடத்தில் நல்ல விதமாக நடந்து கொள்ளும்படியாக
அல்லாஹ் உத்தரவிட்டுள்ளான். ... மனைவிமார்களிடத்தில் நல்ல முறையில் அழகிய விதத்தில்
நடந்து கொள்ளுங்கள்! (4:19)
மேலும் ஆண்களைப்பற்றி குர்ஆனரில் கவ்வாம் மிகச்சிறந்த முறையில் நன்கு நிர்வகிப்பவர்கள் என்று கூறுகிறான்.
எனவே, அவளுக்கு உணவு, உடை, இருப்பிடம் ஆகியவற்றை மட்டும் கொடுத்து விட்டு மற்ற தேவைகளை
புறந்தள்ளிவிடுவது அவனுடைய தகுதிக்கு அழகல்ல. ஒரு ஆண் தன்னுடைய குடும்பத்தை நிர்வகிப்பவன்.
அவனுடைய அந்தப் பொறுப்பு பற்றி அவன் கேள்வி கேட்கப்படுவான். ஒரு பெண் தன்னுடைய கணவனின்
வீட்டில் கண்காணிப்பவளாக இருக்கிறான். அவளுடைய பொறுப்பு பற்றியும் அவள் விசாரிக்கப்படுவாள், என்று நபி (ஸல்) கூறியுள்ளார்கள். (புகாரி)
வீட்டு நிர்வாகம் பெண்ணிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது.
அதற்கான அவசியத் தேவைகளை ஆணிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளது. எனவே மனைவிக்குத் தேவையான செலவினங்களை
கணவனே கொடுத்தாக வேண்டும்.
தேவைகள்:
மனைவிக்குரிய செலவினங்களில் அவளுடைய பல தேவைகள்
வரும். அவற்றில் ஒன்று உணவு. அந்தந்த ஊர்களின் நடைமுறைப் படி அவளுக்குத் தேவையான உணவை
வழங்க வேண்டும். இரண்டாவது அவளுக்குத் தேவையான உடை. சட்டப்படி வருடத்திற்கு இரண்டு
செட் துணி கொடுப்பது கட்டாயம். (அல்ஃபதாவல் ஹிந்திய்யா, துஹ்ஃபதுல் பாரி)
எனினும், வருடத்திற்கிடையில்
ஆடை கிழிந்து விட்டால் புதிய ஆடை வாங்கிக் கொடுப்பதே கணவனுடைய தகுதிக்கு ஏற்றது.
மனைவி கணவனின் சார்பாக ஏதாவது விருந்து சாப்பிட்டால்
அன்றைய உணவுக்கான செலவை கணவன் கொடுக்கத் தேவையில்லை. அந்த விருந்து மனைவியின் சார்பாக
இருக்குமேயானால் அந்த தினத்திற்கும் கணவன் செலவுக்கு பணம் கொடுத்தாக வேண்டும் என்கிற
அளவுக்கு ஃபிக்ஹ் நூற்களில் கூறப்பட்டுள்ளது.
(துஹ்ஃபதுல் பாரி)
மனைவி வசதியாக இருந்தாலும் அவளுடைய செலவினங்களுக்கு
கணவனே பொறுப்பு. அதே சமயம் அவள் பொருளாதார விஷயத்தில் கணவருக்கு உதவி செய்கிறாள். அல்லது
அவளாக விரும்பி கணவரிடமிருந்து வாங்கும் பணத்தை குறைத்துக் கொள்கிறாள், என்றால் அது அவளுடைய தாராள மனப்பான்மை. செலவு, உடை மற்றும் இருப்பிடங்களில் வசதிக் குறைவு இருந்தாலும் சட்டப்படி
நிர்பந்தப் படுத்தாமல் கணவருடன் சுமூகமாக நடந்து கொள்ள வேண்டும். இது குடும்ப நிம்மதி
நீடிப்பதற்கு ஏதுவாக இருக்கும்.
கணவருடைய சக்திக்கு மேல் எதையும் வற்புறுத்தக்கூடாது.
மனைவியுடைய விருப்பத்தை நிறைவேற்ற வேண்டுமென்ற பேரார்வத்தில் அவர் ஹராமான வழியில் சம்பாதிப்பதற்கு
தயாராகிவிடலாம். அந்தக்குற்றம் மனைவியையும் சாரும்.
தங்குமிடம்:
மனைவிக்கு தங்குமிடம் கொடுக்க வேண்டும் என்பதற்கு
எந்த ஆதாரமும் சொல்லத் தேவையில்லை. அல்லாஹ் தஆலா குர்ஆனில் ஆதம் (அலை) அவர்களுடைய சரித்திரத்தில்
உங்கள் இருவருக்கும் இப்லீஸ் விரோதி. அவன் உங்கள் இருவரையும் சுவனத்திலிருந்து வெளியாக்கிட
வேண்டாம், என்று இருவரையும் முன்னோக்கி கூறிவிட்டு அதற்குப் பிறகு உலகில்
சென்று உணவு உடை, இருப்பிடம் போன்றவற்றுக்காக கஷ்டப்பட நேரிடும்
என்று கூறும் போது இருவரையும் முன்னிலைப் படுத்திக் கூறாமல் (ஆதமே! அப்படி சுவனத்திலிருந்து
வெளியாகி விட்டால்) நீர் கஷ்டப்படுவீர். நிச்சயமாக இந்த சுவனத்தில் நீர் பசித்திருக்கமாட்டீர்.
ஆடையின்றி இருக்க மாட்டீர். மேலும் திட்டமாக நீர் அங்கே தண்ணீரின்றி தாகத்தில் வாடவும்
மாட்டீர். (தங்குமிடமின்றி) வெப்பத்தில் தகிக்கவும் மாட்டீர், என்று ஆதம் (அலை) அவர்களை மட்டுமே முன்னிலைப்படுத்திக் கூறப்பட்டுள்ளது.(தாஹா
- 117,118)
எனவே, உணவு, உடை, இருப்பிடம் போன்ற வசதிகளை
கணவனே மனைவிக்கு செய்து கொடுக்க வேண்டும், என்று விளங்கமுடிகிறது.
அதற்கான சிரமத்தை கணவனே சகிக்க வேண்டும். தலாக் விடப்பட்ட பெண்களைக் கூட கணவன் தன்னுடைய
வீட்டிலேயே இத்தா இருக்க ஏற்பாடு செய்ய வேண்டுமென்பதே குர்ஆனுடைய கட்டளை. (அத்தலாக்
அத்தியாயம், வசனம்: 6)
மனைவி தன்னுடைய வீட்டை கணவனுக்கு வாடக்ககு கொடுத்து
விட்டு தானும் கணவனுடன் சேர்ந்து குடியிருந்தால் கணவனிடம் வாடகை வாங்கிக் கொள்ளலாம்.
(ரத்துல் முஹ்தார்) மனைவியின் படுக்கை வசதிகளையும்
கணவனே செய்து கொடுக்க வேண்டும். நடைமுறைக்குத் தோதுவாக படுக்கை விரிப்புகள், தலையணை, போர்வை போன்றவற்றை வழங்க
வ்ணடும். (முக்னில் முஹ்தாஜ்) தேவைப்பட்டால் கட்டிலும் கொடுக்க வேண்டும்.
வீட்டுச் சாமான்கள்:
மேற்கூறப்பட்டவை தவிர சமையல் பாத்திரங்கள், திருகை, சாப்பிடும் தட்டு, டம்ளர் போன்ற வீட்டுச்சாமன்களைக் கொடுப்பதும் கணவனுடைய கடமை.
அந்தப் பெண் மண் பாத்திரங்களைப் பயன்படுத்தாத வசதி வாய்ந்த இடத்துப் பெண்ணாக இருந்தால்
பித்தளை, செம்புப் பாத்திரங்கள் வழங்கப் படவேண்டும். உயர் குடும்பத்துப்
பெண்களுக்கு நடைமுறைக்குத் தோதுவாக செம்புப் பாத்திரங்களை வழங்குவது கட்டாயம் என்று
இமாம் நவவீ (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார். (ரவ்ளா)
அப்படியானால் தற்காலத்தில் கேஸ் அடுப்பு, கரண்ட் அடுப்பு, மிக்ஸி, கிரைண்டர், வாஸிங் மெஷின், பிரீஸர், கட்டில், மெத்தை போன்ற பொருட்களை கணவன் மனைவிக்கு வாங்கிக் கொடுக்க வேண்டும்.
உணவும் உடையும் இருப்பிடமும் கணவன் தான் கொடுக்க வேண்டும். இவனுடைய செலவில் ஆடை வாங்கிக்
கொண்டு போய் அதை அவளுக்கு உடுத்தித் தான் அழைத்து வர வேண்டும், என்பது மட்டுமல்ல, ஒரு ஆண் திருமணம்
முடிக்கும் முன் மனைவிக்குத் தேவையான இந்த எல்லா சாமான்களையும் (வீட்டையும்) வாங்கி
முடித்த பின் தான் திருமணத்திற்குத் தயாராக வேண்டும்.
கட்டில் மெத்தையை ஆண் வாங்க வேண்டும். மிக்ஸி, கிரைண்டர் போன்ற வீட்டுச்சாமான்களை ஆண் வாங்க வேண்டும். இந்த
இடத்தில் தற்காலத்து நிலையை கொஞ்சம் சிந்திப்போம். கணவன் வாங்க வேண்டிய எல்லா பொருட்களையும்
மனைவி தன்னுடைய வீட்டிலிருந்து கொண்டு வரவேண்டுமென்ற கட்டாய நிலையில் இருக்கிறாள்.
அதுவும் அவளுடைய சொந்த உபயோகத்திற்காக அல்ல; கணவனுடைய வீட்டு
உபயோகத்திற்காக. வீட்டுச் சாமான்களை மட்டுமல்ல, கணவனுக்குத் தேவையான
வாகனம் உள்ளிட்ட பொருட்களையும் பெண்வீட்டாரிடமே வாங்கிக் கொள்வது எவ்வளவு பெரிய வெட்கக்கேடு.
இது போன்ற சீர்வரிசைப் பொருட்களை கட்டாயப் படுத்தி
மாப்பிள்ளை வீட்டார் பெண்வீட்டாரிடம் வாங்கிப்
பெறுவது எவ்விதத்தில் ஹலாலாகப் போகிறது? என்று தெரிய வில்லை.
ஹலால், ஹராம் பற்றிய சிந்தனை இல்லாதவர்களுக்கு எப்படி விளங்க வைப்பது?
பெண்வீட்டார் அவர்களாக விரும்பி முழு மனவிருப்பத்துடன்
இவற்றை வாங்கிக் கொடுத்தால் அது ஹலாலாகி விடுமே! என்று சமாதானம் சொல்லிக் கொண்டாலும்
அப்படியொரு விருப்பம் இருப்பதை எப்படி யார் முடிவு செய்வது? உண்மையிலேயே முழு மனவிருப்பத்துடன் வாங்கிக் கொடுத்திருந்தால்
பரவாயில்லை. அபூபக்ர் (ரலி) அவர்களுடைய தங்களுடைய மகள் அஸ்மா (ரலி) அவர்களுக்கு ஓர்
அடிமையை அனுப்பி வைத்தார்கள். எனினும் இன்று சீர்வரிசைகள் முழு மனவிருப்பத்துடன் தான்
செய்கிறார்கள் என்று சொல்லமுடியாது.
வேறு வழியின்றி ஊர்ப் பழக்கத்தின் காரணமாக கட்டாயம்
செய்தாக வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுவிடுகிறது. மாக்கம் கட்டாயமாக்காத ஒரு நடைமுறையை
நாமாக ஏன் உருவாக்க வேணடும்? இஸ்லாம் பெண்ணுரிமையை நிறைவாக
வழங்கியிருக்கிறது. நாம் தான் மாற்று மதக் கலாச்சாரத்தை நாட்டுப் பழக்கம், ஊர்ப்பழக்கம் போன்ற பெயர்களை வைத்து அதைக் கெடுத்து விட்டோம்.
இஸ்லாம் எல்லாத் துறையிலும் நமக்கு நிறைவான வழிகாட்டலைத் தந்திருக்கும் போது அதை விடுத்து
நம்முடைய ஊர்ச் சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் தூக்கிப் பிடித்தால் நம்மை நிறைவான
முஸ்லிம் என்று எப்படிச் சொல்ல முடியும்?
No comments:
Post a Comment