நபி (ஸல்) அவர்களுடைய காலத்தில் தற்காலத்தைப் போன்று எந்த நவீன வளர்ச்சியும் கிடையாது. தகவல் தொழில்நுட்பத்திலும் விஞ்ஞான அறிவிலும் அடைந்திருக்கிற இந்த முன்னேற்றம் 1400 ஆண்டுகளுக்கு முன்பாக நினைத்துக் கூட பார்க்க முடியாததாக இருந்தது.
நபி (ஸல்) அவர்களுக்கு முன்பாக பல்லாயிரம் ஆண்டுகள் கடந்திருந்தாலும் நபி (ஸல்) அவர்களுக்குப் பிறகும் பல்லாயிரம் ஆண்டுகள் கடக்கவிருந்தும் ஈருலகத் தூதர் (ஸல்) அவர்கள் காலங்களில் சிறந்தது, என்னுடைய காலமே! என்று அழுத்தமாகக் கூறியதன் மூலம் சத்தியத்தை ஏற்று ஒழுக்கப் புரட்சி ஏற்படுத்துவதில் தான் பொற்காலம் பொதிந்திருக்கிறது, என்பதை உணர்த்தியிருக்கிறார்கள்.
நபி (ஸல்) அவர்களுடைய காலத்தில் விஞ்ஞான வளர்ச்சியோ மருத்துவ வளர்ச்சியோ இல்லை என்பது போன்று நபித்தோழர்கள் அனைவருக்கும் ஒரு ஜோடி ஆடை கூட இல்லாத நிலையில் பொருளாதார வசதியும் இருந்தது. அருளாதாரமோ நிரம்பி வழிந்தது. ஆனால், இன்று பொருளாதாரத்திலும் அறிவியல் துறையிலும் முன்னேறி விட்டதாலேயே பொற்காலம் என்று வாதிடுவது தான் வேடிக்கை.
அப்படிச் சொன்னால் மனிதர்களை விட மிருக இனத்தைத் தான் உயர்வாகக் கருத வேண்டும். பெரும்பாலான விஞ்ஞான உண்மைகள் மிருகங்களிடமிருந்தே காப்பியடிக்கப் படுகின்றன, என்பதை விட எத்தனை விஷயங்களில் மிருகம் மனிதனை விஞ்சி விடுகிறது. என்னதான் குளிர்ப்பிரதேசத்தில் வாழ்ந்து பழகியிருந்தாலும் குளிர்காலத்தில் மனிதன் அதற்கேற்ற ஆடைகளை அணிந்தே தீர வேண்டும்.
ஆனால், மிருகங்களுக்கு இந்நிலை கிடையாது. பொதுவாக உடலில் உள்ள வெப்பம் வெளியேற வேண்டுமென்றால் காது, கை, கால்கள் மூலம் தான் வெளியேற வேண்டும். துருவப் பிரதேச உயிரினங்களுக்கு அந்த உறுப்புகள் மிகவும் சின்னதாக அமைந்திருக்கும். வெப்பப் பகுதியில் வாழும் அதே உயிரினத்திற்கு அவ்வுறுப்புகள் பெரிதாக இருக்கும். உதாரணத்திற்கு துருவப் பகுதியில் வாழும் நரிகளின் காதுகள் சின்னதாகவும் பாலைவனப் பகுதிகளில் வாழும் நரிகளின் காதுகள் பெரிதாகவும் இருக்கும்.
பென்குயின்களின் தோலுக்கடியில் இருக்கும் அதிகப்படியான கொழுப்பே குளிரிலிருந்து அவற்றைக் காப்பாற்றுகிறது. உடல் வெப்பம் குறையாமல் இருக்கும் விதத்திலும் வெளியில் உள்ள குளிர்ச்சி உள்ளே செல்லாமல் இருக்கும் விதத்திலும் இரத்த ஓட்டமே வித்தியாசமாக இருப்பது தான் இறைப்படைப்பின் விந்தை. சீரான பொருளாதாரத்தின் தாரக மந்திரமான இறை நம்பிக்கைக்கு நபி (ஸல்) அவர்கள் பறவைகளை உதாரணம் காட்டியிருப்பது சிந்திக்கத் தூண்டுகிறது.
அல்லாஹ்வின் மீது முறைப்படி நம்பிக்கை வைத்தால் பறவைகளுக்கு உணவளிப்பது போல் உங்களுக்கு உணவளிப்பான். அவை காலையில் காலி வயிற்றுடன் செல்கின்றன. மாலையில் வயிறு நிரம்பிய நிலையில் திரும்பி வருகின்றன, என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். பறவைகள் சேமித்து வைப்பதுமில்லை. அதனால் பட்டினியால் சாவதுமில்லை. சேமித்து வைக்கும் எறும்பு கூட வெப்பமோ பனியோ தாக்காத விதத்தில் சேமிக்கத் தெரிந்திருக்கிறது. குளிர் சாதனப் பெட்டியெல்லாம் மனிதனுக்குத் தான் தேவைப்படுகிறது.
தென் அமெரிக்காவில் வாழும் பிரான்யா என்ற மீன் தண்ணீரின் அதிர்வுகளை வைத்து இரை இருக்கும் திசையை அறிந்து கொள்ளும். ஐந்து கி.மீ பரப்பளவில் இரத்தமோ மாமிசமோ இருந்தால் அதை உணர்ந்து கொள்ளும் திறன் சூறா மீனுக்கு உண்டு. இக்னியுமான் என்ற ஒரு வகைக் குளவி தன் குஞ்சுக்கு, பிறப்பதற்கு முன்பே இரை தேடி வைக்கிறது. வண்டு, சிலந்தி போன்றவற்றை எடுத்து, கொட்டி அவற்றை மயக்க நிலைக்குக் கொண்ட வருகிறது. சாகடிப்பதில்லை. மனிதனுக்குத் தான் ஆப்ரேஷன் செய்ய வேண்டுமென்றால் மயக்க மருந்து தேவைப்படுகிறது. பிறகு ஒரு குழி தோண்டி அவ்றறைப் போட்டு அதிலேயே முட்டையிட்டு விட்டு சென்றுவிடும். மயக்கம் தெளிவதற்கு முன் குஞ்சு வெளிவந்து விடும்.
எந்த எஞ்சினும் இல்லாமல் மணிக்கு 70 கி. மீ. வேகத்தில் சுறாமீன் பாய்ந்த செல்ல முடியும். நெடுஞ்சாலையோ காலண்டரோ இல்லாமல் குறிப்பிட்ட காலத்தில் பறவைகள் நாடுவிட்டு நாடு வலசை போகிறது. காலமும் தவறுவதில்லை. பாதையும் மாறுவதில்லை. கலங்கரை விளக்கமோ நெட்வொர் இணைப்புகளோ தேவைப்படுவதில்லை. பறவைகளைப் பார்த்து விமானம் செய்தான், தற்கால மனிதன்.
தானே கொன்று விட்ட சகோதரனின் உடலைக் கூட (ஹாபில், காபில) என்ன செய்வதென்று தெரியாமல் காகத்தைப் பார்த்து புதைக்கக் கற்றுக் கொண்டான் கற்கால மனிதன்.
இரண்டாம் உலகப் போரின் போது ஒரு ராணுவப் படை இந்திய எல்லையில் தங்கியிருந்தது. படைத் தளபதியின் முடி நரைத்துப் போயிருந்ததால் மருதாணி போட்டுக் கொள்வார். இதைப் பார்த்த ஒரு குரங்கி சில இலைகளை அவர் முன்னால் போட்டது. தளபதியும் அவற்றை தலையில் பூசிக் கொண்டார். அதன் மூலம் எல்லா நரை முடிகளும் உதிர்ந்து போய் வலுக்கைத் தலையாகி விட்டது. ஆனால், ஒரே வாரத்தில் கருகருவென் முடி வளர ஆரம்பித்தது. அந்தக் குரங்கு எந்த மருததுவக் கல்லூரியிலும் படிக்கவில்லை. இனிமாக கொடுக்கும் முறையை மருத்துவ நிபுணர் ஜாலீனூஸ் ஆரம்பத்தில் இரண்டு பறவைகளிடமிருந்து தான் கற்றுக் கொண்டார். (நூல்: அஜாயிபுல் ஹயவானாத் ஃபித்தஃவதி இலல்லாஹ்)
மனிதர்களின் வானிலை அறிவிப்பு ஒரு யூகம் தான். பல தடவை மழை பொழியும் என்று அறிவித்தும் பெய்யாமல் பொய்த்திருக்கிறது. அவ்வாறே பல சமயம் புயலின் சரியான தாக்கத்தைக் கூட வானிலை மையத்தால் கணிக்க முடியாமல் போய்விடுகுறது. சமீபத்தில் கன்னியாகுமரியைத் தாக்கிய ஓகி புயலின் கொடூரம் பற்றி சரியான முன்னறிவிப்பு செய்யவில்லை, என்ற புகாரும் வானிலை மையத்தின் மீது எழுந்தது, நினைவிருக்கலாம்.
ஆனால், தலையைத் தூக்கி வானத்தைப் பார்க்காத, பூமியோடு பூமியாக வாழும் எறும்புகளும் புழு பூச்சிகளும் வானிலை மாற்றத்தை முன்னரே அறிந்து முட்டைகளையும் உணவையும் இடம் மாற்றி விடும். அவற்றுக்கு எந்த வானிலை ஆய்வு மையமும் தேவைப்படுவதில்லை. பூகம்பம் ஏற்படும் நேரத்தை மனிதனால் கண்டுபிடிக்க முடியவில்லை. எனினும், மிருகங்கள் அதை முன்னரே அறிந்து விடுகின்றன. மண்ணறையில் நடக்கும் வேதனையை மிருகங்கள் கேட்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறியிருப்பதை இங்கு நினைவுகூரத் தக்கது.
சுனாமி ஏற்படுவதற்கு முன்பே அதைக் கண்டுபிடித்து சரியான முறையில் மனிதன் அறிவிக்க முடியவில்லை. பல தடவை சுனாமி எச்சரிக்கை கொடுத்தும் சுனாமி ஏற்படவில்லை. ஆனால், முன்னெச்சரிக்கை எதுவும் கொடுக்காத சமயத்தில் சுனாமி பயங்கர அழிவை ஏற்படுத்தியதை யாரும் அவ்வளவு சீக்கிரத்தில் மறந்து விட முடியாது. ஆனால், கடற்கரையோரங்களில் வாழும் உயிரினங்கள் முன்னரே அறிந்து அந்த ஆபத்துகளை அறிந்து கொள்கின்றன. மனிதன் தன்னுடைய விஞ்ஞான முன்னேற்த்தைப் பற்றி பெருமையடித்துக் கொண்டாலும் மிருகங்கள் தங்களைத் தற்காத்துக் கொள்ளும் அளவுக்குக் கூட மனிதன் தன்னைத் தற்காத்துக் கொள்ள முடிவதில்லை.
மனித குலத்தையே அழித்துவிடும் அபாயகரமான ஆயுதங்களை கண்டுபிடித்து வைத்திருப்பதைத் தான் தன்னுடைய முன்னேற்றமாக கருதிக் கொண்டிருக்கிறான், மனிதன். அறிவிலும் பொருளிலும மட்டும் முன்னேறிவிட்டதை புரட்சி என்றால் மனிதப் புரட்சியை விட மிருகப் புரட்சிக்குத் தான் முதலிடம்.
மனிதன் தன் உள்ளத்தைச் சீர்ப்படுத்தாத வரை சிகரத்தை எட்ட முடியாது. ஒழுக்கப் புரட்சியே புனிதமான புரட்சி. நபி (ஸல்) அவர்கள் மிக மோசமாக சீர்கெட்டிருந்த ஒரு சமுதாயத்தை மிகச்சிறந்த சமுதாயமாக மாற்றிவிட்டுத் தான் என்னுடைய காலம் பொற்காலம், என்று கூறினார்கள். இல்லையானால் மனிதனை நாம் அழகிய தோற்றத்தில் படைத்தோம். பின்னர், அவனை அதலபாதாளத்தில் தள்ளிவிட்டோம், என்று குர்ஆன் சொல்லும் இழிநிலைக்குத் தான் ஆளாக வேண்டும். பொற்காலம் என்று வாதிட்டுக் கொண்டே கற்காலத்தை நோக்கி நடைபோட நேரிடும்.