Monday, 19 February 2018

இஸ்லாமியக் குடும்பவியல் சட்டங்களை நாம் பின்பற்றுகிறோமா?



முத்தலாக் தடைச் சட்டம் இந்திய இஸ்லாமிய அரசியலில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருப்பதை யாரும் அறியாமல் இருக்க முடியாது. சுதந்திய இந்தியாவில் மதசார்பற்ற இந்தியாவில் இஸ்லாமிய சட்டங்களை கறை படியாமல் பாதுகாப்பது ஒவ்வொரு இந்,திய முஸ்லிமின் மீதும் கட்டாயக் கடமையாகும். அதற்கான விழிப்புணர்வுகள் நாடெங்கும் பரவலாக ஏற்படுத்தப் பட்டுக் கொண்டிருக்கிறது.

அதே சமயம் இப்படிப்பட்ட சட்டங்கள் வருவதற்கான அடிப்படைக் காரணங்களில் முஸ்லிம் சமூகமும் அதன் செயல்பாடும் ஒரு முக்கிய காரணமாகும். தலாக் தொடர்பான மார்க்கத்தின் அருமையான வழிகாட்டல்களை சமூகம் நேரம் கொடுத்து கற்றுக் கொள்வதும் குறைவு. அதைச் செயல்படுத்துவதிலும் தேவையான அக்கரை இல்லை, என்றே சொல்ல வேண்டும்.

குடும்ப வாழ்க்கையின் ஆணும் பெண்ணும் எப்படி நடந்து கொண்டால் தங்களுடைய இல்வாழ்க்கையைத் தொடர்ந்து பயனிக்க முடியும்? என்பதைப் பற்றி திருமணத்திற்கு முன்பான கவுன்சிலிங் தொடர்பான விழிப்புணர்வு தமிழகத்தில்  இருந்தாலும் அது எல்.கே. ஜி. அளவில் தான் இருக்கிறதே தவிர பரவலாக இல்லை.

இஸ்லாமியத் திருமணம் எப்படி இருக்க வேண்டும்? அதில் கணவனுடைய பொறுப்பும் கடமையும் என்ன? என்பதை விட பெண்வீட்டார் செய்ய வேண்டிய சீர்வரிசைகளைப் பற்றியும் வரதட்சணை மற்றும் விருந்து வகைகள் பற்றியும் தான் அதிகமாகப் பேசப்படுகின்றன. மார்க்கம் காட்டித் தந்த நடைமுறைகளை விட்டுவிட்டு நாமாக சில நடைமுறைகளை மாற்றார்களிடமிருந்து காப்பியடித்து அதையை நம்மீது கட்டாயமாக்கிக் கொண்டிருக்கிறோம், என்பது கேவலமில்லையா?

விருந்தோம்பல் இஸ்லாத்தில் மிகவும் நன்மைக்குரிய காரியம். நபி (ஸல்) அவர்கள் நபியாக அனுப்பப் படுவதற்கு முன்பே மௌட்டீக காலத்திலும் அரபு மக்களிடம் விருந்து உபசரிக்கும் நல்ல பண்பாடு இருந்தது, என்று வரலாற்றாசிரியாகள் கூறுவர்.

அப்துல்லாஹிப்னு ஸலாம் (ரலி) அவர்கள் முதலில் யூதராக இருந்து பின்னர் இஸ்லாத்தைத் தழுவினார்கள். நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்த போது அப்துல்லாஹிப்னு ஸலாம் (ரலி) அவர்கள் நபியவர்களை காண்பதற்காக வந்தார்கள். நான் நபி (ஸல்) அவர்களின் முகத்தைப் பார்த்தவுடன் இது பொய்யருடைய முகமல்ல, என்று விளங்கிக் கொண்டேன், என்று கூறுகிறார்கள். நபி (ஸல்) அவர்கள் பேசியதில் முதல் பேச்சு, ஸலாமைப் பரப்புங்கள். உண்ண உணவளியுங்கள். மக்கள் நித்திரையில் இருக்கும்  போது தொழுங்கள். (அப்படியானால்) நீங்கள் நிம்மதியாக சுவனத்தில் நுழைவீர்கள், என்கிற உத்தரவுகள் தான், என்று அப்துல்லாஹிப்னு ஸலாம் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். (நூல்: திர்மிதீ)


விருந்தோம்பல் மிக நல்ல காரியம், என்பது தவறாக விளங்கப்பட்டு விடக்கூடாது. திருமணத்தில் விருந்துகளில் பல லட்சங்கள் செலவாகுவதும் அவற்றில் பெரும்பாலானவை பெண்வீட்டார் மட்டுமே செய்ய வேண்டும் என்பதும் மார்க்க ரீதியாக நல்ல காரியம் அல்ல, என்பது மட்டுமல்ல. தடை செய்யப்பட்டதும் கூட.

சாப்பாட்டுக்காக செலவு செய்யப்படும் பணம் ஹலாலாக சம்பாதிக்கப் பட்டிருந்தாலும் கூட விரக்தியிலும் கடன் பட்டும் வேறு வழியின்றி பல சிரமங்களுக்கு மத்தியில் வெறுப்புடன் நடத்தப்படும் விருந்துகளில் கலந்து கொண்டு சாப்பிடுவதால் அந்த உணவு ஹலாலா? ஹராமா? என்கிற சிந்தனை ஏற்பட்டுவிடும். எந்த மனிதருடைய செல்வமும் அவருடைய முழு மனதிருப்தியின்றி மற்றவர்களுக்கு ஹலால் ஆகாது, என்ற நபிமொழி எப்பொழுதும் நினைவில் இருக்க வேண்டும். ஹலால், ஹராம் பற்றி எந்த சிந்தனையும் இல்லையானால் அது போன்று மாபெரும் நஷ்டம் வேறெதுவும் இருக்க முடியாது.

நம்முடைய நடைமுறையில் உள்ள விருந்து வகைகளை கட்டாயம் சீர்த்திருத்தம் செய்யப் பட்டாக  வேண்டும். இன்று தண்ணீருக்குப் பஞ்சம். பொருளாதார நஷ்டம். அரசின் ஏகப்பட்ட வரிவிதிப்புகள் இவையனைத்தும் சேர்ந்து மக்களை ஒரு பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்க வைத்துள்ளது. இப்பொழுது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியிலிருந்து வெளியேறுவதற்கு சிக்கனத்தை மாபெரும் ஆயுதமாக எடுத்துக் கொண்டாக வேண்டிய கட்டாயத்தில் மக்கள் இருக்கின்றனர்.

வலீமா என்பது....
திருமண விருந்தில் வலீமா விருந்து தான் சுன்னத்தான விருந்தாகும். அந்த விருந்தைக்கூட நபி (ஸல்) அவர்கள் மிகவும் எளிமையாகவே நடத்தியிருக்கிறார்கள். சில சமயம் பயணத்தில் இருக்கும் போது தோழர்களிடம் இருக்கும் உணவுப் பொருட்களை ஒன்று சேர்த்து அதை எல்லாரும் சேர்ந்து சாப்பிடுவார்கள். அதுவே கூட வலீமாக விருந்தாகி விடும்.

ஆயிஷா (ரலி) அவர்களை நபி (ஸல்) அவர்கள் நிகாஹ் செய்த போது பால் தான் வலீமாவுடைய இடத்தில் இருந்தது. என்பதும் சரித்திரத்தில் காணக்கிடைக்கிறது. ஜைனப் (ரலி) அவர்களை நபி (ஸல்) அவாகள் நிகாஹ் செய்யும் போது ரொட்டியும் இறைச்சியுமாக வலீமா விருந்து வைத்தார்கள். நபியவர்கள் வலீமாவிலேயே இது தான் கூடுதலான விருந்து என்ற செய்தியும் சரித்திரத்தில் காணக்கிடைக்கிறது.

அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் திருமணம் செய்யும் போது ஒரு ஆட்டை அறுத்தாவது வலீமா விருந்து வையுங்கள், என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். எனவே வலீமா விருந்து என்பது நாம் நினைப்பது போன்று ஆயிரக்கணக்கான நபர்களை அழைத்து விருந்து கொடுக்க வேண்டுமென்று கிடையாது. நல்ல வசதியுள்ளவர்கள். பெருமை, பகட்டு ஆடம்பரம் இல்லாமல் நல்ல எண்ணத்தில் ஏழைகள், வறியவர்கள் உட்பட அதிகமானோருக்கு விருந்து கொடுத்தால் தவறு இல்லை தான். ஆனால், இன்று நடக்கும் எல்லா விருந்துகளும் அப்படித்தான் நடக்கிறது, என்று சொல்லிவிட முடியாது.

பெண் வீட்டார் விருந்து?
நாம் மேலே குறிப்பிட்ட வலீமா விருந்து என்பது மாப்பிள்ளை வீட்டார் வைக்க வேண்டிய விருந்தாகும். பெண்வீட்டார் விருந்து வைப்பது சுன்னத்தோ வாஜிபோ கிடையாது. ஆனால், இன்றைய நிலையைப் பார்த்தால் பெண்வீட்டார் தான் அதிகமான விருந்து வைககம்  நிலைக்கு ஆளாகிறார்கள். திருமணத்திற்கு முன்பும் திருமணத்தின் போதும் மட்டுமல்ல. திருமணத்திற்குப் பிறகும் குழந்தை பெறும் காலத்திலும் வகை வகையான பெயர்களில் விருந்து வகைகளை ஏற்பாடு செய்யும் நிர்பந்தம் பெண்வீட்டாருக்கு உண்டு.

திருமணத்திற்குப் பின் அவளுக்குத் தேவையான உணவு, உடை, இருப்பிடம் கொடுக்க வேண்டும். கணவன் மனைவிக்குத் தேவையான வசதி வாய்ப்புகளைச் செய்து கொடுப்பது அவனுடைய கடமை, என்பதற்கு எவ்வித ஆதாரமும் சொல்லத் தேவையில்லை. காலம் காலமாக இதுவே முழு உலகின் நடைமுறை.

அதே சமயம் குர்ஆன் மற்றும் நபிமொழிகளில் பல இடங்களில் மனைவிக்கு வாழ்வாதாரம் வழங்குவது பற்றி அல்லாஹ்வும் அவனுடைய இறைத்தூதரும் கூறியுள்ளனர். மனைவிக்கு செலவு செய்வது அவசியம், என்ற கருத்து நபிமொழிகளில் தெள்ளத் தெளிவாக உணர்த்தப்பட்டுள்ளது.

ஹஜ்ஜத்துல் விதாவின் இறுதி உரையில் பின்வருமாறு கூறினார்கள்: மனைவிமார்களுக்கு நல்ல விதத்தில் உணவளிப்பதும் உடை கொடுப்பதும் (ஆண்களாகிய) உங்களுடைய கடமையாகும். (அபூதாவூத்- 1907) முஆவியதுல் குஷைரீ (ரலி) அவர்கள் நபியவர்களிடம் மனைவியின் உரிமைகள் பற்றி கேட்டார்கள் அப்பொழுது நபி (ஸல்) அவர்கள் நீங்கள் சாப்பிடும் போது அவளுக்கும் சாப்பாடு கொடுக்க வேண்டும். நீங்கள் உடை உடுத்தும் போது அவளுக்கும் உடை கொடுக்க வேண்டும். (அபூதாவூத் - 2144)

மனைவிக்குரிய செலவினங்களில் அவளுடைய உணவு, இருபிடம் தவிர பல தேவைகளை மார்ககம் சொல்லித் தந்திருக்கிறது. சமையல் பாத்திரங்கள், திருகை, சாப்பிடும் தட்டு, டம்ளர் போன்ற வீட்டுச்சாமன்களைக் கொடுப்பதும் கணவனுடைய கடமை. அந்தப் பெண் மண் பாத்திரங்களைப் பயன்படுத்தாத வசதி வாய்ந்த இடத்துப் பெண்ணாக இருந்தால் பித்தளை, செம்புப் பாத்திரங்கள் வழங்கப் படவேண்டும். உயர் குடும்பத்துப் பெண்களுக்கு நடைமுறைக்குத் தோதுவாக செம்புப் பாத்திரங்களை வழங்குவது கட்டாயம் என்று இமாம் நவவீ (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார். (ரவ்ளா)

அப்படியானால் தற்காலத்தில் கேஸ் அடுப்பு, கரண்ட் அடுப்பு, மிக்ஸி, கிரைண்டர், வாஸிங் மெஷின், பிரீஸர், கட்டில், மெத்தை போன்ற பொருட்களை கணவன் மனைவிக்கு வாங்கிக் கொடுக்க வேண்டும். உணவும் உடையும் இருப்பிடமும் கணவன் தான் கொடுக்க வேண்டும். இவனுடைய செலவில் ஆடை வாங்கிக் கொண்டு போய் அதை அவளுக்கு உடுத்தித் தான் அழைத்து வர வேண்டும், என்பது மட்டுமல்ல, ஒரு ஆண் திருமணம் முடிக்கும் முன் மனைவிக்குத் தேவையான இந்த எல்லா சாமான்களையும் (வீட்டையும்) வாங்கி முடித்த பின் தான் திருமணத்திற்குத் தயாராக வேண்டும்.

கட்டில் மெத்தையை ஆண் வாங்க வேண்டும். மிக்ஸி, கிரைண்டர் போன்ற வீட்டுச்சாமான்களை ஆண் வாங்க வேண்டும். இந்த இடத்தில் தற்காலத்து நிலையை கொஞ்சம் சிந்திப்போம். கணவன் வாங்க வேண்டிய எல்லா பொருட்களையும் மனைவி தன்னுடைய வீட்டிலிருந்து கொண்டு வரவேண்டுமென்ற கட்டாய நிலையில் இருக்கிறாள். அதுவும் அவளுடைய சொந்த உபயோகத்திற்காக அல்ல; கணவனுடைய வீட்டு உபயோகத்திற்காக. வீட்டுச் சாமான்களை மட்டுமல்ல, கணவனுக்குத் தேவையான வாகனம் உள்ளிட்ட பொருட்களையும் பெண்வீட்டாரிடமே வாங்கிக் கொள்வதுஎவ்வளவு பெரிய வெட்கக்கேடு. இது போன்ற சீர்வரிசைப் பொருட்களை கட்டாயப் படுத்தி மாப்பிள்ளை வீட்டார் பெண்வீட்டாரிடம்  வாங்கிப் பெறுவது எவ்விதத்தில் ஹலாலாகப் போகிறது? என்று தெரிய வில்லை. ஹலால், ஹராம் பற்றிய சிந்தனை இல்லாதவர்களுக்கு எப்படி விளங்க வைப்பது?
பெண்வீட்டார் அவர்களாக விரும்பி முழு மனவிருப்பத்துடன் இவற்றை வாங்கிக் கொடுத்தால் அது ஹலாலாகி விடுமே! என்று சமாதானம் சொல்லிக் கொண்டாலும் அப்படியொரு விருப்பம் இருப்பதை எப்படி யார் முடிவு செய்வது? உண்மையிலேயே முழு மனவிருப்பத்துடன் வாங்கிக் கொடுத்திருந்தால் பரவாயில்லை.

அபூபக்ர் (ரலி) அவர்கள் தங்களுடைய மகள் அஸ்மா (ரலி) அவர்களுக்கு ஓர் அடிமையை அனுப்பி வைத்தார்கள். எனினும் இன்று சீர்வரிசைகள் முழு மனவிருப்பத்துடன் தான் செய்கிறார்கள் என்று சொல்லமுடியாது. வேறு வழியின்றி ஊர்ப் பழக்கத்தின் காரணமாக கடன் கொண்டாவது கட்டாயம் செய்தாக வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுவிடுகிறது. மாக்கம் கட்டாயமாக்காத ஒரு நடைமுறையை நாமாக ஏன் உருவாக்க வேணடும்? இஸ்லாம் பெண்ணுரிமையை நிறைவாக வழங்கியிருக்கிறது. நாம் தான் மாற்று மதக் கலாச்சாரத்தை நாட்டுப் பழக்கம், ஊர்ப்பழக்கம் போன்ற பெயர்களை வைத்து அதைக் கெடுத்து விட்டோம்.

இஸ்லாம் எல்லாத் துறையிலும் நமக்கு நிறைவான வழிகாட்டலைத் தந்திருக்கும் போது அதை விடுத்து மற்றவர்களிடமிருந்து காப்பியடித்த சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் பிரதானமாக ஆக்கிக் கொண்டால் நம்முடைய எதிரியிடமிருந்து ஆபத்து வருவதற்கு முன்பாக நாமே ஆபத்தை விலை கொடுத்து வாங்கியதாகாகதா? அரசாங்கத்திற்கு நாம் சொல்ல வேண்டியது நிறைய இருப்பது போல் இல்லை அதை விட அதிகமாகவே நமக்கு நாமே சொல்ல வேண்டியதும் இருக்கிறது.


No comments:

Post a Comment