இன்று பெண்கள் பாதுகாப்புச் சட்டம் என்ற பெயரில் மசோதாக்கள் தாக்கல் செய்யப் படுகின்றன, என்றால் அதற்கு நாமும் நம்முடைய செயல்பாடுகளும் முக்கியக் காரணம் என்பதை மறுத்துவிட முடியாது. நம்முடைய மார்க்கம் கூறும் குடும்பவியல் சட்டங்களை முறையாகக் கற்றுக் கொள்ளவும் இல்லை. அதைச் செயல்படுத்துவதிலும் போதிய ஆர்வம் காட்டப் படுவதில்லை. விவாகரத்து பற்றியும் விவாகரத்து கொடுக்கும் முறை பற்றியும் இஸ்லாம் காட்டிய சிறப்பான வழிகாட்டுதலைப் போல் உலகின் வேறெந்த மதமும் காட்டியிருக்க முடியாது.
ஏதோ சிலர் செய்யும் தவறுக்காக ஒட்டுமொத்த இஸ்லாத்தையும் குறைகாண முடியாது. திருமண சபையில் தலாக் பற்றிப் பேசுவதை யாரும் விரும்புவதில்லை. எனினும் மணமகன் மற்ற விஷயங்கைளப் போல் கணவன், மனைவியுடைய உரிமைகள் மற்றும் கடமைகள் பற்றியும் தலாக் பற்றியும் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும். கற்றுக் கொள்ளப்பட வேண்டிய கல்வியில் ஹஜ்ஜையும் தலாக்கையும் ஒரே வரிசையில் தான் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் வைத்திருக்கிறார்கள்.
வாரிசுரிமைச் சட்டங்களையும் ஹஜ்ஜையும் தலாக்கையும் (அவற்றின் சட்டங்களை) கற்றுக்கொள்ளுங்கள். ஏனெனில் அவை உங்களுடைய மார்க்க விஷயங்களில் கட்டுப்பட்டவையாகும், என்று இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (அல்பைஹகீ)
சட்டத்தைப் படிக்காமல் முறை தவறி ஹஜ் செய்தால் அந்த ஹஜ் அல்லாஹ்விடம் அங்கீகாரம் பெற முடியாது. அவ்வாறே திருமணம் செய்யும் ஒவ்வொரு ஆணும் தலாக்கைப் பற்றியும் படிக்க வேண்டும். தலாக் கொடுப்பதற்காக அல்ல.
தலாக் கொடுக்காமல் இருப்பதற்கும் அப்படியே கொடுக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டால் முறைப்படியாக கொடுக்க வேண்டும், என்பதற்காக. ஹஜ் சரியாகச் செய்யவில்லையானால், அவனுடைய ஒரு கடமை பாழாகிவிடுகிறது. தலாக்கைப் படிக்காமல் முறை தவறி தலாக் கொடுப்பதால் அவன் இழிசொல்லுக்கு ஆளாகிறான், என்பது மட்டுமல்ல. அவனுடைய பிள்ளைகளைப் பாதிக்கிறது. ஆண், பெண் ஆகிய இரு குடும்பத்தையும் பாதிக்கிறது. ஏன்? முஸ்லிம் சமூகத்தையே பாதிக்கிறது.
அதைவிடவும் மேலாக இஸ்லாத்திற்க அவப்பெயரை ஏற்படுத்திக் கொடுக்கிறது. முஸ்லிம் சமூகத்தின் சிக்கல் சிரமங்களுக்கு தூவப்படும் விதையாகவும் முறையற்ற தலாக் மாறிப்போய்விட்டது, என்பதை யார் தான் மறுக்க முடியும்? ஒரு வியாபாரி, வியாபாரம் பற்றி தெரிந்து கொள்கிறார். விவசாயி, விவசாயம் பற்றி செரிந்து கொள்கிறார். வீடு கட்டுவதற்கு சிறந்த கட்டிடக்கலை நிபுணரை நாடுகிறோம். சிகிச்சை செய்தவற்கு சிறந்த மருத்துவரை அணுகுகிறோம். திருமணம் செய்பவர் தலாக் பற்றிய சட்டங்களை முறையாக அறிந்து கொள்வதற்கு ஏன் முயற்சிக்கக் கூடாது.
தலாக்கைப் படிப்பது முறையாகக் கொடுப்பதற்கு மட்டுமல்ல, தலாக்கை விட்டும் விலகிச் செல்வதற்கும் பயன்படும். தலாக் கொடுப்பதற்காகப் படிக்கச் சொல்லவில்லை. அப்படிப்பட்ட நிலையை வரவிடாமல் இருப்பதற்காகவே படிக்கவேண்டுமென்று சொல்லப்படுகிறது. தலாக் ஆகுமானதாக இருந்தாலும் அல்லாஹ்வுக்கு வெறுப்பானது. ஷைத்தானுக்கு விருப்பமானது, என்பது யாவரும் அறிந்ததே!
நிகாஹ், தலாக், இத்தா போன்றவற்றின் சட்டங்களைப் பற்றி குர்ஆன் போதிக்கும் முறையை சிந்தித்துப் படித்தால் நிர்பந்த நிலைதவிர வேறெந்த நிலையிலும் தலாக் நிகழக்கூடாது, என்பது தெளிவாக விளங்கும். கணவன் மனைவிக்கு மத்தியில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு தலாக் மட்டுமே தீர்வல்ல. முடிந்த வரை பிரச்சினையை சுமூகமாக தீர்த்து வைப்பதற்குத் தேயைன சிறந்த வழியைக் காட்டுகிறது குர்ஆன். நபி (ஸல்) அவர்களின் காலத்தில் குடும்பப் பிரச்சினையை நபியவர்களிடம் கூறி தீர்வு பெறும் நடைமுறை இருந்தது. அவ்வாறே நபித்தோழர்களின் காலத்திலும் உமர் (ரலி) அவர்களிடம் குடும்பப் பிரச்சினையைக் கூறி தலாக் விஷயத்தில் ஆலோசனை பெற்ற நிகழ்வுகளை சரித்திரத்தில் காணமுடியும்.
தலாக் கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் கூட உடனடியாக அதைப் பயன்படுத்தி விடாமல் நிதானமாக நடந்து கொண்டு ஆலிம்களிடம் அலோசனை மேற்கொள்ள வேண்டும். ஆலோசனையை விட்டுவிட்டு உடனடியாக தாலக் சொல்லிவிடும் நடைமுறையை முற்றாக மாற்றிவிட வேண்டும்.
அலி (ரலி) அவர்களுடைய ஆட்சி காலத்தில் கலீபாவிடத்தில் குடும்பப் பிரச்சினை தொடர்பாக பேசுவதற்காக ஒரு கூட்டமாக வந்தார்கள். கலீஃபா அவர்கள் கணவன், மனைவியுடைய குடும்பத்தினரிலிருந்து தலா ஒரு நபரை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தி முடிவு செய்யும்படி உத்தரவிட்டார்கள். (குல்தஸ்தயெ தஃபாஸீர்)
நபியே! நீங்கள் பெண்களை விவாகரத்து செய்வீர்களாயின் அவர்களின் இத்தா (காலத்தை நிர்ணயிக்க) வசதியாக விவாகரத்து செய்யுங்கள். மேலும் இத்தாவின் சரியாகக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள். மேலும் உங்களுடைய இறைவனாகிய அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். (இத்தா இருக்கும் காலத்,தில் அப்பெண்களை அவர்களின் இல்லங்களிலிருந்து நீங்களும் வெளியேற்ற வேண்டாம். அவர்களாகவும் வேளியேற வேண்டாம். அவர்கள் ஏதேனும் வெளிப்படையான - மானக்கேடான செயல்கள் செய்தாலே தவிர. இவை அல்லாஹ்,வின் மூலம் நிர்ணயிக்கிப்பட்ட வரம்புகளாகும். யாரேனும் அல்லாஹ்வின் வரம்புகளை மீறுவாராயின் திண்ணமாக அவர் தனக்குத் தானே அநீதி இழைத்துக்கொண்டவராவார். இதற்குப் பிறகு (ஒத்துப் போவதற்கான) ஏதேனும் சூழலை அல்லாஹ் உருவாக்கக் கூடும், என்பதை நீங்கள் அறிவதில்லை. (அல்குர்ஆன் - 65:1)
இந்த வசனத்தில் தலாக் கொடுக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டால் கூட எப்படி தலாக் கொடுக்க வேண்டும்? என்பது அழகான முறையில் விளக்கப் பட்டுள்ளது. இத்தாவுடைய காலத்திற்கு தோதுவாக தலாக் கொடுங்கள் என்ற வாசகத்திற்கு நபிமொழிகளில் அருமையான விளக்கம் கூறப்பட்டுள்ளது.
அதாவது தலாக் கொடுப்பதாக இருந்தால் மாதவிடாய் காலத்தில் கொடுக்கக் கூடாது. சுத்தமான பிறகே கொடுக்க வேண்டும். அந்த சுத்த காலத்திலும் உடலுறவு கொண்டிருக்கக் கூடாது. அப்படி உறவு கொண்டுவிட்டால் அடுத்த மாதவிடாய் காலம் வந்து அதிலிருந்து சுத்தமான பின் தான் கொடுக்க வேண்டும். சுத்த காலத்தில் தலாக் கொடுக்கும் போது ஒரு தலாக் மட்டுமே கொடுக்க வேண்டும். இதுவே மார்க்கம் சொல்லித் தருகிற விவாகரத்து முறையாகும்.
இந்த விளக்கத்தைச் சிந்தித்துப் பார்த்தால் முடிந்த வரை தலாக் கொடுக்கும் சிந்தனையை மாற்றுவதற்கான நிலையை ஏற்படுத்துவதில் மார்க்கம் முனைப்பு காட்டுவதை புரிந்து கொள்ள முடியும். பொதுவாக மாதவிடாய் காலத்தில் மனைவியின் மனோநிலை நல்ல நிலையில் இருக்காது. உடல் நிலை மாற்றம் மனநிலையிலும் மாற்றத்தை உண்டாக்கியிருக்கும். கணவனுக்கும் மாதவிடாய் காலத்தில் உடலுறவு கொள்ள முடியாது, என்பதால் சின்ன பிரச்சினையும் கூட கோபத்தையும் விபரீத சிந்தனையுயம் உண்டாக்கி விடும். மாதவிடாய் முடியும் வரை காத்திருப்பதால் வெறுப்பு மனநிலை மாறுவதற்கு சந்தர்ப்பம் அமையலாம்.
அசுத்த காலத்தில் உடலுறவு கொள்ளாமல் இருந்ததால் சுத்தமானவுடம் தன்னுடைய ஆசையைப் பூர்த்தி செய்வத்தில் காட்டும் ஆர்வம் முன்னர் ஏற்பட்டிருந்த பிரச்சினையை மறக்கச் செய்துவிடலாம். இதனால் விவாகரத்து தவிர்க்கப்பட்டுவிடும். சுத்த காலத்திலும் உடலுறவு கொள்ளாத நிலையிலேயே தலாக் கொடுக்க வேண்டுமென்று சொல்லப் பட்டிருப்பதும் ஆழ்ந்து கவனிக்கத் தக்கது. அவனுக்கு உறவிற்கான தேட்டமும் ஆசையும் இருக்கும் போது உடலுறவு கொள்ளாமலேயே தலாக் கொடுக்கிறான், என்றால் கண்டிப்பாக ஏதாவது நிர்பந்த காரணம் இருக்கவே செய்யும். உறவு கொண்டுவிட்டால் அடுத்த சுத்த காலத்தை எதிர்பார்த்திருக்க வேண்டும்.
ஏனெனில், உறவு கொண்டுவிட்டதால் அவனுடைய தேவை நிறைவேறிய நிலையில் வெறுப்பும் கோபமும் மிகைத்து விடலாம். உறவு கொண்டதால் குழந்தை உண்டாகி இருப்பதற்கான சாத்தியமும் இருக்கிறது. இந்நிலையில் தலாக் கொடுப்பதால் மனைவியின் இத்தா காலமும் குழந்தை பெற்றெடுக்கும் வரை நீண்டுவிடும். குழந்தை உண்டாகி விட்டால் கூட பிரச்சினைகள் மறந்து விடலாம். குழந்தையின் எதிர்காலம் கருதி கணவனும் மனைவியும் இணங்கிப் போய்விடலாம். இந்நிலையிலும் விவாகரத்து விலகிப் போய்விடும்.
எல்லாவற்றையும் மீறி மனைவியின் சுத்த காலத்தில் தலாக் கொடுக்க வேண்டிய நிர்பந்த நிலைக்கு வந்துவிட்டாலும் ஒரு தலாக் மட்டுமே கொடுக்க வேண்டும். நான் உனக்கு ஒரு தலாக் கொடுக்கிறேன், என்று மட்டும் சொல்லிவிட்டு நிறுத்திக் கொள்ள வேண்டும். வேறெதுவும் சொல்லிவிடக் கூடாது.
No comments:
Post a Comment