Monday, 5 February 2018

இஸ்லாமிய குற்றவியல் சட்டம்




இஸ்லாமிய குற்றவியல் சட்டங்கள் குற்றங்களை வேரோடு பிடுங்கி எறியும் வகையிலானவை. திருட்டு, விபச்சாரம், அவதூறு பரப்புதல், வன்முறைத் தாக்குதல், கொலை போன்ற பெருங்குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகளை கூர்ஆன் நேரடியாக அறிவித்திருக்கிறது.  
கை வெட்டுதல், மாறுகால் மாறு கை வெட்டுதல் உட்பட பல தண்டனைகள் கூறப்பட்டுள்ளன. மற்ற குற்றங்களுக்கான தண்டனை விபரங்களை மார்க்கச் சட்ட நூற்களில் பல வால்யூம்களாக தொகுக்கப்பட்டுள்ளன. குற்றவியல் சட்டங்கள் கடுமையாக இருந்தால் தான் குற்றங்களைத் தடுக்க முடியும். குற்றத்தின் கடுமைக்கு தகுந்தவாறு இஸ்லாமிய குற்றவியல் சட்டம் அமைந்திருக்கிறது, என்பதில் சந்தேகமில்லை. அந்நூர் என்ற அத்தியாயத்தின் ஆரம்பத்தில் விபச்சாரத்தின் தண்டனை பற்றி விளக்கப்படுகிறது.
விபச்சாரம் ஒரு குற்றம் என்பதுடன் ஏகப்பட்ட குற்றங்களை தூண்டக்கூடியதாகவும் இருக்கிறது, என்பதற்கு ஆதாரம் சொல்லத் தேவையில்லை. அதில் தான் முழு மனித சமுதாயத்தின் அழிவும் புதைந்திருக்கிறது. தவறான நடத்தைக்கு இணங்காததற்காக எத்தனையோ பெண்கள் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப் படுகின்றனர். அல்லது தற்கொலை செய்து கொள்கின்றனர். விபச்சாரி, விபச்சாரகன் ஆகிய இருவரில் ஒவ்வொருவருக்கும் நூறு கசையடி கொடுங்கள். இவ்விருவரில் ஒவ்வொருவருக்கும் நூறு கசையடி கொடுங்கள். நீங்கள் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் விசுவாசங்கொண்டவர்களாக இருந்தால் அல்லாஹ்வின் மார்க்கத்(தில் விதிக்கப்பட்ட சட்டத்தை அமுல் செய்வ) தில் அவ்விருவருக்காக உங்களை (கொஞ்ம் கூட) இரக்கம் தொற்றிக்கொள்ள வேண்டாம். மேலும் அவ்விருவரின் வேதனையை விசுவாசிகளில் ஒரு சாரார் (நேரில் வந்து) பார்க்கவும். (அந்நூர் - 2)

பலாத்காரம்
ஆண் பெண் இருவரில் யார் இச்செயலில் ஈடுபட்டாலும் சரி. அவர்களுக்கு தண்டனையுண்டு. பெண்ணைக் குறித்து விபச்சாரி என்றே சொல்லப்பட்டிருக்கிறது. விபச்சாரம் செய்யப்பட்டவள் என்றோ கற்பழிக்கப்பட்டவள் என்றோ சொல்லப்பட்டவில்லை. ஏனெனில் அவள் எவ்வித நிர்பந்தமுமின்றி இச்செயலில் ஈடுபட்டால் தான் தண்டிக்கப்படுவாள்.
 உமர் (ரலி) அவர்களின் காலத்தில் ஒரு பெண் தூங்கிக் கொண்டிருக்கும் போது அந்தப் பெண்ணிடம் ஒருவன் பலாத்காரம் செய்துவிட்டான். உமர் (ரலி) அவர்கள் அந்தப் பெண்ணுக்கு தண்டனை வழங்கவில்லை. (முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா- 29093) திர்மிதீ ஷரீஃபிலும் விபச்சாரத்தில் நிர்பந்திக்கப் பட்ட பெண்ணுக்கு தண்டனை இல்லை என்பதை வலியுறுத்தும் ஒரு நபிமொழி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தண்டனை மனிதன் இயற்றிய சட்டமல்ல. அல்லாஹ்வால் இறக்கியருளப்பட்ட சட்டம். அதில் மனிதனுடைய மனோநிலை தலையிட்டால் சட்டம் தன் கடமையைச் செய்யத் தவறிவிடும். இந்த தண்டனையை நிறைவேற்றும் விஷயத்தில் எவ்விதத்திலும் கொஞ்சம் கூட இரக்கம் காட்டி விடக்கூடாது, என்பதை இவ்வசனம் கோடிட்டுக் காட்டுகிறது. நூறு அடியை 99 அடியாகக் குறைத்து விடும் அளவுக்கு லேசான இரக்கத்தைக் கூட வெளிப்படுத்தி விடக்கூடாது.

தண்டனையில் இரக்கம்:
இரக்க உணர்வு வரக்கூடாது, என்பது இதன் பொருளல்ல. அது மனிதனுடைய சுபாவம். அதற்கு மார்க்கம் அணை போடவில்லை. அவன் வேதனைப் படுவதைப் பார்த்து பரிவு ஏற்படும் போது அவனுடைய பாவமன்னிப்புக்காக துஆ செய்து கொள்ள வேண்டும். ஆனால், அந்த இரக்க உணர்வு முறைப்படியான தண்டனையை நிறைவாக நிறைவேற்றுவதை விட்டும் தடுத்து விடக்கூடாது. மனிதனுடைய இயற்கை சுபாவம் அல்லாஹ்வின் கட்டளையை தடுத்து நிறுத்தி விடுமேயானால் நாம் நம்முடைய சுபவாத்திற்கு அடிமையா? அல்லது அல்லாஹ்வுக்கு அடிமையா? என்று கேள்வி எழும். எனவே தான், கருணை உங்களைத் தொற்றிக் கொள்ள வேண்டாம், என்று கூறும் போது நீங்கள் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் உண்மை என்று நம்பயிருந்தால் உங்களுடைய சுபாவத்தை செயல்படுத்துவதை வெறுத்து இறைச்சட்டத்தை செயல்படுத்துங்கள், என்று கூறுகிறான். அல்லாஹ் ஒருவன் தான் சட்டமியற்றத் தகுதியானவன் என்று நம்பிக்கை கொண்ட பிறகு அதற்கு மாறு செய்தால் நம்முடைய ஈமானுக்குத் தான் அர்த்தமென்ன?  எந்த இடத்தில் எப்படி கருணை காட்ட வேண்டும், என்பது பற்றி அல்லாஹ் மிக அறிந்தவன். அவனுடைய சட்டம் எவ்விதத்திலும் இரக்க உணர்வுக்கு முரணாக இருக்காது. அடியார்களை விட அல்லாஹ் மிகவும் கருணை வாய்ந்தவன், என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
குற்றவாளியின் மீது இரக்கப்படுவது நிரபராதியின் மீது செய்யப்படும் மாபெரும் அநீதி. நீதி மன்றத்தில் குற்றம் ஆதாரப்பூர்வமாக உறுதியான பின்  தண்டிக்கப் படாமல் இருந்தால் அது குற்றவாளிகளுக்கு தைரியத்தை உண்டாக்கி விடாதா? எனவே தான் நபி (ஸல்) அவர்கள், தண்டனை - ஹத்து - (கொடுப்பதை) உங்களுக்கு மத்தியில் (இரகசியமாக) இருக்கும் போது மன்னித்து விடுங்கள். ஆனால் என்னிடம் அந்த ஹத்து -  தண்டனை உறுதியாக (ஆதாரப்பூர்வமாக) வந்தடைந்து விட்டால் (அதை நிறைவேற்றுவது) கட்டாயமாகிவிடும், என்று கூறினார்கள். (அபூதாவூத் - 4378; தஃப்ஸீரு இப்னு கதீர்)

தண்டனை கொடுப்பதன் மூலம் தான் குற்றவாளியின் மீதும் முழு சமுதாயத்தின்  மீதும் பரிவு காட்டியதாக அமையும். அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவர்கள் நோயாளியின் மீது தவறான இரக்க உணர்வு கொண்டு விட்டால் நோயாளி குணமடைய முடியுமா? ஒரு சமுதாயத்தின் சிகிச்சையே ஒரு குற்றவாளியைத் தண்டிப்பதில் புதைந்து கிடந்தால் அதை எப்பாடுபட்டாவது தோண்டி எடுக்காமால் இருக்க முடியுமா? ஆப்ரேஷன் செய்வது தான் மருத்துவர்களின் இரக்க உணர்வை வெளிப்படுத்தும். இப்பூவுலகில் நிறைவேற்றப்படும் தண்டனை - ஹத்து உலக மக்களுக்கு நாற்பது நாற்கள் மழை பொழிவதை விடச் சிறந்ததாகும் என்று நபிய (ஸல்) அவர்கள் கூறியதை இங்கு நினைவு கூர்வது பொருத்தமானது. (இப்னு மாஜா - 2538; 
வசனத்தின் இறுதியில் தண்டனை நிறைவேற்றப் படும்போது ஒரு கூட்டத்தினர் அதைப் பார்க்க வேண்டும், என்று கூறப்ப
ட்டுள்ளது. பார்ப்பவர்களுக்கு படிப்பினை கிடைக்கும். இந்தக் குற்றத்திற்கு மோசமான தண்டணை கிடைக்கும், என்ற உணர்வு ஏற்படும் போது பாவத்தை விடுமளவுக்கு இறையச்சம் இல்லாவிட்டாலும் தண்டனைக்குப் பயந்தாவது பாவத்தை விட்டுவிடலாம். ஆனால் இன்றைய ஆபாச உலகத்தில் சிந்தனையே சீர்குலைந்திருக்கும் சமயத்தில் இதை விளங்குவது கடினம் தான். தவறான அசிங்கமான ஒரு கலாச்சாரத்திற்காக மூளைச்சலவை செய்யப்படுவது தவறில்லை. ஒழுக்க மேன்மைக்காக மூளைச்சலவை செய்யப்பட்டால் மட்டும் தவறாகிவிடுமா? இஸ்லாமிய சட்டங்கள் மகா உண்மை என்றும் நேர்மையானது என்றும் நம்புவது தான் மார்க்க ரோஷத்தின் அடையாளம். இந்த தண்டனைக்குப் பிறகு அந்த குற்றவாளியை ஒரு வருடம் நாடு கடத்தப் படவேண்டும், என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். திருமணம் முடித்த பின் யாராவது விபச்சாரம் செய்தால் கல்லால் அடித்து கொலை செய்ய வேண்டும், என்றும் மார்க்கம் தெளிவு படுத்துகிறது. இந்தத் தவறு எக்காரணம் கொண்டும் சமூகத்தில் நடக்கக் கூடாது, என்பதற்காக இப்படி மிகக் கடுமையான தண்டனை அளிக்கப்படுகிறது. இன்று ஆபாசத்தை பரவலாக்க வேண்டுமென்று துடிக்கின்றனர். வெட்கத்தை வியாதியாகக் கருதும் சமுதாயத்தில் ஒழுக்கத்தின் துளியைக் கூட எதிர் பார்க்க முடியாது.               

ஒரு குற்றத்திற்கு கடுமையான தண்டனை கொடுக்காமல் விட்டுவிட்டால் பின்விளைவு கடுமையாக இருக்கும். பிறகு இந்நிலையை மாற்றுவதற்கு மிகவும் சிரமப்பட வேண்டும். தண்டனையை எளிதாக்கி விட்டு பிறகு கடுமையாக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படும். ரஷ்யாவுடைய சட்டவியல் இதற்கு மிகச் சிறந்த உதாரணம். (தஃப்ஸீரெ மாஜிதீ) இஸ்லாம் விபச்சாரத்திற்கு தண்டனை பற்றி மட்டும் பேசிவிட்டு வாய் மூடிவிடுவதில்லை. ஒரு சமூகத்தில் விபச்சாரத்தின் சிந்தனையே வராமல் இருப்பதற்கான முன்னேற்பாடுகளைப் பற்றி தெளிவாகப் போதிக்கிறது. மனிதனுடைய இயற்கையான இச்சையைத் தீர்ப்பதற்குத் தேவையான வடிகால்களை அமைத்துத் தருகிறது. விபச்சாரத்தின் கொடுமையான பின்விளைவுகளைக் கவனித்து கடுமையான தண்டனை கொடுக்காமல் இருக்க முடியாது, என்றே இஸ்லாம் உணர்கிறது. தண்டனை பற்றி குறைபேசுவதற்கு வெறும் தண்டனை மட்டுமே இஸ்லாத்தின் போதனை அல்ல என்பதை விளங்க வேண்டும். தண்டனை பற்றி யோசிப்பவர்கள் அந்தக் காரியத்தின் பின்விளைவுகள் மற்றும் அதை விட்டும் விலகுவதற்காக கூறப்பட்டிருக்கும் வழிமுறைகளுடன் சேர்த்தே பார்க்க வேண்டும். வெறும் தண்டனையை மட்டும் பார்த்து விட்டு எதையாவது சொல்லி விடக்கூடாது. இன்று விபச்சாரம் ஒரு கூடாச் செயல் அல்ல, என்கிற அளவுக்கு மூளைச்சலவை செய்யப்படுகிறது, என்பதை விட தன்னுடைய சகோதரி, தாய் போன்றவர்கள் மற்றவர்களால் இந்தத் தவறுக்கு உட்படுத்தப்படுவதைக் கூட பெரிதாக எடுத்துக் கொள்ளாத ஒரு சிந்தனை மேற்குலகால் உருவாக்கப்படுவது தான் வேதனையிலும் வேதனை.             

உறவு எதற்காக?:
இந்த உலகிற்கு மனித வளம் மிகமிக முக்கியமானது. விபச்சாரத்தின் மூலம் ஒன்று அந்த வளத்தை இழக்க நேரிடுகிறது. அல்லது சிதைந்து போகிறது. திருமணம் என்றால் ஒரு ஆணுக்கு குடும்பப் பொறுப்பு ஏற்படுகிறது. மனைவியின் செலவுக்கு பொறுப்பாக வேண்டும். குழந்தை பெற்றால் அதை வளர்க்கும் பொறுப்பு தன் மீது விழும். விபச்சாரத்தின் மூலம் மனிதன் இந்தப் பொறுப்புகளை உதறித்தள்ளவே விரும்புகிறான். ஆண், பெண்ணுடைய உறவு என்பது குழந்தைக்காகவும் குடும்ப உறவுக்காகவும் குடும்பப் பிணைப்புக்காகவும் தான். பிரியாணியை வாயில் வைத்து ருசித்து விட்டு எந்த அறிவாளியாவது துப்பிவிடுவானா? ஒவ்வொரு தடவையும் அப்படிச் செய்தால் இறுதியில் அது அவனுடைய உயிருக்கே ஆபத்தாக முடியாதா? குழந்தையை வெறுத்து உறவு கொள்பவன் ருசித்து விட்டு புசிக்காமல் இருப்பவனைப் போலத்தான். பொறுப்பின்றி சுகம் அனுபவிப்பதற்கு சட்டப்படியான அங்கீகாரம் கொடுக்கப்பட்டால் பேருந்து மற்றும் ரயில்களில் பயணச்சீட்டு இல்லாமல் பயணிப்பதற்கு ஏன் அங்கீகாரம் வழங்கக்கூடாது? 


தண்டனையின் தத்துவம்:
குற்றவாளிகளை பிடித்து பிடித்து தண்டனை கொடுத்துக் கொண்டிருப்பதற்கு வெறும் போலீஸ் வேலை பார்ப்பது மட்டும் இஸ்லாத்தின் வேலையில்லை. மனிதனைப் புனிதனாக்குவதற்குத் தேவையான தெளிவான போதனைகளைப் போதித்துக் கொண்டிருக்கிறது புனித மார்க்கம். மனிதனை பாவத்தை விட்டும் தடுபபதற்காக நிறைய வேலிகளை அமைத்திருக்கிறது இஸ்லாம். அந்த வேலிகளைத் தகர்த்தோ தாண்டியோ வந்து பெரும் குற்றம் புரிபவனுக்குத் தான் தண்டனை என்கிறது கருணையாளனின் சட்டம். குர்ஆன் பல இடங்களில் இறையச்சத்தைப் பற்றியும் நீடித்த நிலையான மறுமை வாழ்க்கை பற்றியும்  போதிக்கிறது. அந்நூர் அத்தியாயத்தின் ஆரம்பத்தில் கூட நீங்கள் நினைவில் வைக்கும் படியான உபதேசம் பெறவேண்டும், என்று வலியுறுத்திக் கூறுகிறது. ஏனெனில் இறையச்சம் தான் இறைநெறிக்கு முரணாக நடப்பதை விட்டும் தடுக்கிறது.

விபச்சாரத்தின் வாடை கூட சமூகத்தில நுகரப்படக்கூடாது, என்பதற்குத் தேவையான தெளிவான வழிகாட்டுதல்களை மார்க்கம் தெளிவு படுத்தத் தவறவில்லை. நிர்பந்த காரணமின்றி பெண்கள் வீட்டைவிட்டும் வெளியேறக்கூடாது. அப்படியே சென்றாலும் ஒரு முடி கூட வெளியே தெரியாமல் முழு உடலையும் மறைத்து பர்தா முறையில் தான் செல்ல வேண்டும். வெளியே செல்ல வேண்டிய தேவை ஏற்படக்கூடாது, என்பதற்காக பெண்களின் வாழ்வாதாரத்தை வழங்கும் பொறுப்பு ஆணின் மீது சுமத்தப்பட்டுள்ளது. ஆண்களும் பெண்களும் வெளியே செல்லும் போது பார்வையைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும். ஆண்கள் அந்நியப் பெண்களைப் பார்ப்பதோ பெண்கள் அந்நிய ஆண்களைப் பார்ப்பதோ கூடாது, என வன்மையாகக் கண்டிக்கப்பட்டுள்ளது. பெண்கள் தங்களுடைய அலங்காரத்தை அந்நிய ஆண்களுக்கு முன்னால் வெளிப்படுத்தக் கூடாது. ஆணும் பெண்ணும் தனித்திருக்கக் கூடாது. ஆண்களும் பெண்களும் ஹஜ்ஜுடைய காலத்தில் கூட கலந்து விடக்கூடாது. நம்முடைய நெருங்கிய சொந்தக்காரர் வீட்டுக்குச் சென்றாலும் முன் அனுமதி இல்லாமல் உள்ளே நுழைந்து விடக்கூடாது. அசிங்கமான பேச்சுக்களைப் பேசக்கூடாது. முறையான சாட்சிகள் இல்லாமல் விபச்சாரத்தைப் பற்றி வாய் திறக்கக் கூடாது.
சமூகத்தில் நல்ல வார்த்தை தான் காதில் விழ வேண்டும். நல்ல காட்சிகள் தான் கண்ணில் பட வேண்டும். மக்களிடையே அசிங்கம் பரவலாகக் கூடாது. பெண்களைக் கேலி செய்பவர் தண்டிக்கப் பட வேண்டும்.   மனிதனுக்கு இயற்கையிலேயே பெண்ணாசையை வைத்துத் தான் அல்லாஹ் படைத்திருக்கிறான். அந்த இச்சையைத் தீர்த்துக் கொள்வதற்காக ஆகுமான வடிகால்களை மார்க்கம் அமைத்துக் கொடுத்திருக்கிறது. திருமணம் முடித்துக் கொள்வதை இறைவணக்கத்தின் ஒரு பகுதியாக இணைக்கப் பட்டுள்ளது. ஒரு மனைவியின் மூலம் தேவைகள் நிறைவேற வில்லையானால் நான்கு பெண்களை மணமுடித்துக் கொள்வதற்கும் மார்க்கம் நிபந்தனையுடன் அனுமதிக்கிறது. திருமணம் முடித்த பின் கணவன் மனைவிக்கு மத்தியில் சேர்ந்து வாழமுடியாத இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டுவிட்டால் மனைவியை வைத்துக் கொண்டே கணவன் தவறான பாதையில் செல்லத் தேவையில்லை. அது போன்ற நிர்பந்த சமயத்தில் மட்டும் உறவை முறித்து விட்டு மறுமணம் செய்து கொள்ளலாம்.
திருமணத்தையும் மார்க்கம் எளிதாக்கியுள்ளது. ஒரு பெண் அவள் பெண்ணாக இருப்பதைத் தவிர அவளுடைய திருமணத்திற்கு வேறெந்த சுமையையும் மார்க்கம் அவள் மீது சுமத்த வில்லை. அவ்வாறே ஆணின் மீதும் அவனுடைய வசதிக்குத் தக்கவாறு மஹர் தொகை மற்றும் மனைவியின் செலவினத்தைத் தவிர வேறெந்த சுமையும் அவன் மீது சுமத்தப்படவில்லை. திருமணம் என்பது பெரிய திருவிழா அல்ல. எளிதாக நிறைவேற வேண்டிய காரியம். வரசட்சணை, சீர்வரிசை போன்றவற்றின் மூலம் இன்று குமர்கள் தேங்குவதால் தான் தவறான உறவுகள் மலிவாகிவிட்டன. இந்த போதனைகள் மூலம் தவறான உறவு என்பது சமூகத்தின் சிந்தனையில் கூட வரமுடியாது. இவ்வளவு வேலிகளையும் தாண்டி ஒருவன் விபச்சாரம் செய்கிறான். அதுவும் மறைவாக இல்லை. நான்கு பேர் பார்ப்பது போல் பகிரங்கமாக செய்து கொண்டிருக்கிறான். ஏனெனில் குர்ஆனில் கூற்ப்பட்ட தண்டனை கொடுக்க வேண்டுமானால் அவன் அந்த தவற்றை செய்திருப்பது எவ்வித சந்தேகத்திற்கிடமின்றி உறுதியாக வேண்டும். நான்கு பேர் நேரடியாகப் பார்த்திருக்க வேண்டும். அவன் விபச்சாரம் தான் செய்கிறான், என்பதைத் தெளிவாகப் பார்த்திருக்க வேண்டும். நான்கு பேரும் தாங்கள் பார்த்ததை அப்படியே தெளிவாக நீதிமன்றத்தில் சாட்சி பகர வேண்டும். நடுச்சந்தியில் வைத்து இந்த தவற்றைச் செய்கிறான், என்றால் ஒரு தனிப்பட்ட பெண்ணுடைய கற்புப் பிரச்சினை மட்டும் இல்லை. இது ஒரு சமூகத்தையே ஆபாசச் சாக்கடையில் மூழ்கடித்துவிடும். மேற்குலகின் இன்றைய ஆபாசக் கலாச்சாரத்தினால் இன்று உலகம் முழுவதும் ஆபாசச் சாக்கடை ஓடிக்கொண்டிருக்க வில்லையா?


இப்படிப்பட்ட சூழலில் இந்தக் காமக் கொடூரனை சும்மா விட்டு வைக்க முடியுமா? இவனுக்கு தண்டனை கொடுக்காவிட்டால் யார் வேண்டுமானாலும் இதில் ஈடுபடத் துணிந்து விடுவார். இஸ்லாத்தின் விரோதிகள் வெறும் தண்டனையை மட்டும் பார்க்கின்றனர். அந்த குற்றத்தின் மோசமான பின்விளைவையும் யோசிப்பதில்லை. ஆபாசத்தைத் தடுப்பதற்காக மார்க்கம் செய்திருக்கும் ஏற்பாட்டைப் பற்றியும் சிந்திப்பதில்லை. தண்டனையை இஸ்லாத்தின் பெயரால் குறை கூறுபவர்கள் வெறும் தண்டனையை மட்டும் பார்க்கக் கூடாது. தண்டனையுடன் சேர்ந்திருக்கும் எல்லா அம்சங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment