Tuesday, 17 April 2018

தலைப்பிறை பார்ப்பது எளிது!



ஷரீஅத்துடைய பல சட்டங்கள் காலத்தோடு சம்மந்தப்படுகின்றன, அவற்றில் சந்திரனின் கணக்குப்படியே கணக்கிட வேண்டும். அப்படியானால் ஒவ்வொரு மாதமும் தலைப்பிறை பார்ப்பதில் அதிக முக்கித்துவம் காட்ட வேண்டுமென்பதை புரிந்து கொள்ள முடிகிறது. ரமளான், இரு பெருநாட்கள் ஆகிய சமயத்தில் மட்டுமே தலைப்பிறை பற்றி பரவலாகப் பேசப்படுகிறது. மற்ற மாதங்களில் அதுபற்றி யாரும் கண்டு கொள்வதில்லை.

பல தடவை இலங்கையில் நமக்கு ஒரு நாள் முன்பாக பிறை பார்க்கப்பட்டு பெருநாளும் நோன்பும் அனுஷ்டிக்கப் பட்டிருகிறது. தகவல் தொழில் நுட்பம் வளர்ந்த இக்காலத்தில் பெரும்பாலும் மக்ரிப் தொழுகை முடிந்தவுடன் அங்கிருந்து பிறை பார்க்கப்பட்ட தகவல் வந்து விடுகிறது.  இலங்கை நமக்கு கிழக்கே இருக்கும் நாடாகும். கிழக்குப் பகுதியில் பிறை தென்பட்டால் மேற்குப் பகுதியில் இருப்பவர்கள் ஏற்று அமல் செய்ய வேண்டுமென்று நம்முடைய (ஷாஃபியீ) ஃபிக்ஹ் (சட்ட) நூற்களில் கூறப்பட்டுள்ளது.

ஏனெனில், கிழக்கில் பிறை பார்க்கப்பட்டால் மேற்கில் கண்டிப்பாக பிறை தென்பட்டிருக்க வேண்டுமென்பதே இயல்பு. இலங்கையில் ஒவ்வொரு மாதமும் கரையோரப் பகுதிகள் உட்பட நாட்டின் பல பாகங்களில்  பிறை பார்ப்பதற்கான பொறுப்பாளர்கள் நியமிக்கப் படுகிறார்கள். அதற்கான ஏற்பாடுகளும் நினைவூட்டல்களும் அறிவிப்புகளும் ஒவ்வொரு மாதமும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பிறை பார்க்கப்பட வேண்டிய நாளில் அதற்கான விசேஷ அறிவிப்புகள் சமூக வலைதளங்கள் மூலம் செய்யப்படுகின்றன.

பிறை தென்படாமல் போவதற்கு மேகமூட்டம் ஒன்று மட்டுமே காரணமாக இருந்தால் அதை நாம் ஒன்றும் செய்ய முடியாது. அதே சமயம், நம்முடைய பகுதிகளில் பிறை பார்ப்பதில் மக்கள் எந்த அளவுக்கு கவனம் செலுத்துகிறார்கள்? என்பதையும் யோசிக்க வேண்டும். அவ்வாறே ஒவ்வொரு மாதத்திலும் பிறை பார்ப்பதில் முக்கியத்துவம் காட்டப்படுகிறதா? என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.    

பொதுவாக (ரமளான், ஷவ்வால், துல்ஹஜ் ஆகிய மாதங்களில் மட்டும்) தலைப்பிறை பற்றி முடிவு செய்யும் போது நமக்கு அறிமுகமானவர்களிடம் போன் செய்து பிறைத் தகவல் பற்றி கேட்கிறோம். மற்றவர்களும் நம்மிடம் கேட்கிறார்கள். இதில் கேட்கப்படுபவர்கள் யாரும் பிறை பார்ப்தற்கான பொறுப்பாளர்களாக நியமிக்கப் பட்டவர்கள் அல்ல. ஏதாவது தகவல் வந்தால் அதன்படி முடிவு செய்து விடுகிறோம். ஒவ்வொரு ஊரிலும் குறிப்பாக கிராமங்களில் பிறை பார்ப்பதற்கான குழு அமைக்கப்பட்டிருக்க வேண்டும். நகரத்தை விட கிராமங்களில் புகை, தூசி குறைவு என்பதால் பிறை தென்படுவதற்கான வாய்ப்பு அங்கு அதிகமாக இருக்கும். எனவே கிராமப் பகுதிகளில் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

கட்டிடம், மரம் போன்ற எந்தத் தடையும் இல்லாத இடத்திலிருந்து பார்க்க வேண்டும். சந்திரன் எந்த நேரத்தில் மறையும், என்பது வினாடி உட்பட துல்லியமாக கணிதத்தின் மூலம் இன்று அறிந்து கொள்ள முடியும். நவீன வசதி கொண்ட மொபைல் போன்களில் (sunmooncal போன்ற) அதற்குரிய மென்பொருளை இன்ஸ்டால் செய்து அதன் மூலமே இதை அறிந்து கொள்ளலாம். அந்தந்த மாதத்தில் (வடமேற்கு, தென்மேற்கு, நேர்மேற்கு போன்ற) பிறை (மறையும் இடத்தையும்) தெரியும் இடத்தையும் முன்னரே அறிந்து கொள்ள வேண்டும். சந்திரன் மறையும் நேரம் வரை (குறிப்பாக பிறை தெரியும் இடத்தை) தொடர்ந்து பார்க்க வேண்டும். ஏனெனில் விண்ணில் இடையிடையேயுள்ள மேகம், தூசி போன்ற தடைகளால் வானம் தெளிவாக இருக்கும் ஒரு சிறிய இடத்தில் எந்த வினாடியும் பிறை தெரிந்து பிறகு மீண்டும் அடுத்திருக்கும் மேகத்திற்குள் சென்றுவிடலாம்.

இதற்கு முன்பு, குறிப்பிட்ட குறுகிய நேரத்தில் பிறை தெரிந்து விட்டு, பிறகு மேகத்தில் மறைந்த காட்சிகளை நாம் நேரடியாகவே கண்டிருக்கிறோம். ஆனால், இன்று நாம் பாங்கு சொல்லி மக்ரிப் தொழுது முடித்துவிட்டு அதற்குப் பிறகு சுன்னத்தும் தொழுது முடித்த பிறகு தான் பிறை பார்க்க முற்படுகிறோம். பிறை தெரியும் நேரத்தை இடத்தை அறிந்து பார்ப்பதை விடுத்த நாம் பார்கக வேண்டிய நேரத்திலும் நாம் பார்க்கும் திசையிலும் பிறை தெரிய வேண்டுமென்று நினைக்கிறோம். ஒவ்வொரு மாதமும் பெருநகரங்களில் மட்டுமல்ல, ஒவ்வொரு கிராமத்திலும் குறிப்பாக மேற்குக் கரையோரங்களில் - கடற்கரைப் பகுதிகளில் குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட இடத்தில் பிறை பார்ப்பதற்கு நியமிக்கப்பட்ட பொறுப்பாளர்கள் முன்னரே சென்று அதிமுக்கியத்துவம் கொடுத்து பிறை தென்படும் இடத்தைக் கூர்ந்து கவனிக்க வேண்டும்.

இப்படி தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாதமும் பிறைபார்த்து அதற்கான தகவல்களை உடனுக்குடன் பகிர்ந்து கொள்ளும் போது (தகவல் தொழில் நுட்பம் வளர்ந்த இந்த காலத்தில்) பரவலாக ஏற்படும் பிறைக் குழப்பத்தை ஓரளவு தவிர்த்துக் கொள்ள முடியும். ஆனால், நடைமுறையில் கடற்கரைப் பகுதிகளில் சென்று ஒவ்வொரு மாதமும் பிறை பார்ப்பதில் அதிக கவனம் செலுத்தப் படுவதில்லை. ஏன்? இருந்த இடத்தில் இருந்து கொண்டு கூட அதில் கவனம் செலுத்துவது மிகவும் குறைவு, என்றே சொல்ல வேண்டும். வானத்தில் பார்க்கப்பட வேண்டிய பிறையை நாம் வாட்ஸப்பில் தேடிக்கொண்டிருக்கிறோம், என்பதே நடப்பு உண்மை.

கடந்த (1438) துல்கஃதா மாதம் தமிழகத்தில் பரவலாக பிறை தென்படவில்லை, என்ற தகவலே வந்தது. என்று சொல்வதை விட பிறை தெரிந்தது, என்றோ தெரியவில்லை என்றோ அது தொடர்பான எந்தத் தகவலும் வரவில்லை. ஒவ்வொரு ஊரிலும் எவ்வளவு பேர் தலைப்பிறை பார்ப்பதற்கு முயற்சி செய்தார்கள், என்பது தெரியவில்லை. ஆனால், துல்கஃதா மாதத்தின் தலைப்பிறை பார்க்கப்பட வேண்டிய நாளான ஜூலை மாதம் 24 ஆம் தேதி திண்டுக்கல்லில் சூரியன் மறைவு 6 மணி 43 நிமிடங்களாகும். அன்று சந்திரன் மறைவு 7 மணி 40 நிமிடங்களாகும். சூரியன் மறைவுக்கும் சந்திரன் மறைவுக்கும் மத்தியில் ஏறத்தாழ ஒரு மணி நேரம் வித்தியாசம் இருந்துள்ளது. தமிழகத்தின் மற்ற ஊர்களில் ஒரு சில நிமிடங்கள் வித்தியாசமிருக்கும்.

 பிறை தெரிவதற்கான வாய்ப்பு மிகத் தெளிவாக இருந்தும் பரவலாக தமிழகத்தில் பிறை பார்க்கப்பட வில்லை. ளரஅடிடிஉயட  என்ற மென்பொருளிலும் பிறை புறக்கண்ணுக்கு எளிதாக தென்படும் என்ற தகவலே கொடுக்கப் பட்டிருந்தது. இந்நிலையில் அன்று திண்டுக்கல்லில் மக்ரிப் தொழுகை முடிந்த பின் வானம் தெளிவாக இருந்தது. பிறையும் மிகத் தெளிவாகத் தெரிந்தது. பிறை பார்த்தவர் திண்டுக்கல்லில் மற்றொருவருக்கும் அதே நேரத்தில் போன் மூலம் தகவல் கொடுத்து குறிப்பிட்ட இடத்தில் பிறை பார்க்குமாறு கூறியதை அடுத்தும் அவரும் அவ்விடத்தில் இருந்த வேறு சிலரும் துல்கஃத் தலைப்பிறையைத் தெளிவாக பார்த்துள்ளனர். அதன் பிறகு காரைக்காலிலும் (பாண்டிச்சேரி) பிறை பார்த்ததாக தகவல் கிடைத்தது. அதன் படி 25 ஆம் தேதி செவ்வாய் கிழமை துல்கஃதா பிறை ஒன்று என தமிழ்நாட்டில் மட்டுமல்ல. வடநாட்டிலும் அறிவிக்கப்பட்டது.

இந்தியா முழுவதற்கும் திண்டுக்கல்லில் பார்க்கப்பட்ட பிறை மூலமே முடிவு செய்யப்பட்டது, என்பதும் ஓர் அரிய செய்தி. ஏனில், தாருல் உலூம் தேவ்பந்த் - தாருல் இஃப்தாவிலிருந்து பிறை பார்த்தவரை போனில் அழைத்து பிறைத் தகவலை உறுதிப் படுத்திக் கொண்டார்கள்.  திண்டுக்கல்லிலும் கூட சிறிது நேரம் மறதியாக இருந்துவிட்டால் அந்தப் பிறை பார்க்கப் படாமல் போயிருக்கலாம். அந்த அளவுக்கு மிக மெல்லியதாகவும் அதுவும் அடிவானத்தில் தெரிந்தது. பரவலாக தமிழகத்தின் கிராமங்கள் உட்பட பல ஊர்களில் அன்று பிறை பார்ப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தால் கண்டிப்பாக தமிழகத்தின் ஏராளாமான இடங்களில் பிறை தெரிந்திருக்கும், இன்ஷாஅல்லாஹ். ஒரு மாதத்தில் நிகழும் அலட்சியம் அடுத்தடுத்த மாதங்களிலும் பிரதிபலிப்பை ஏற்படுத்திவிடும், என்பதை யார் தான் மறுக்க முடியும்?!

Night sky tools
நைட் ஸ்கை டூல்ஸ் என்ற மென்பொருளை உங்களுடைய மொபைலில் இன்ஸ்டால் செய்து கொண்டால் அதன் மூலம் பிறையை எந்தத் திசையில் பார்க்க வேண்டும், என்பதை துல்லியமாகத் தெரிந்து கொள்ள முடியும்.  நீங்கள் மொத்த வானிலும் பிறையை சிரமப்பட்டுத் தேட வேண்டியதில்லை. பிறை இந்த இடத்தில் இருக்கிறது, என்பதை மிகத் துல்லியமாக இந்த மென்பொருள் காட்டும்.
இந்த மென்பொருளில் உள்ளே சென்று ஜெனரல் - ஜ செலக்ட் செய்து ஸ்கை மேப் என்பதை அழுத்தினால் நான்கு சுவர்களுக்குள்ளே இருட்டறையில் உட்கார்ந்து கொண்டு மொத்த வானத்தையும் மொபைல் திரையில் பார்க்கலாம். சூரியன் உச்சத்தில் இருக்கும் போது உங்களுடைய அறைக்குள்ளே  இருந்தவாறு மொபைலை தலைக்கு மேல் வானத்தை நோக்கிக் காட்டினால் மொபைல் ஸ்கிரீனில் வானில் இருக்கும் சூரியன் தெளிவாகத் தெரியும். சூரியன் மட்டுமல்ல. நீங்கள் மொபைலை எந்தத் திசையில் வானத்தை நோக்கி காட்டுகிறீர்களோ அந்தத் திசையில் வானத்தில் இருக்கும் நட்சத்திரங்கள், சூரியன், சந்திரன் எதுவெல்லாம் இருக்கிறதோ அனைத்தையும் காட்டிவிடும்.

போனை உங்கள் மூடிய அறைக்குள் இருந்து கொண்டே வானை நோக்கிக் கட்டினால் போதும். நீங்கள் காமெராவில் போட்டோ எடுப்பது போன்று வானில் இருக்கும் ஒவ்வொரு நட்சத்திரங்களும், கோள்களும், ராசிகளும் அவற்றின் பெயர்களுடன் உங்கள் போனின் திரையில் தெரியும்.  தலைப்பிறை பார்க்கும் நாளில் சூரியன் மறைந்த பிறகு உங்கள் போனில் உள்ள நைட்ஸ்கை டூல்ஸ்  - ஜெனரல் - ஸ்கை மேப்பை ஓப்பன் செய்து மேற்கு வானத்தை நோக்கிக் காட்டினால் அடிவானத்திற்குக் கீழே மறைந்த சூரியனையும் காட்டும். அதற்கு மேல்பகுதியில் தலைப்பிறை எந்த இடத்தில் இருக்கிறது, என்பதையும் காட்டும்.

போனை விலக்கி விட்டு வானத்தில் அந்த இடத்தில் பிறையைத் தேடிக் கொள்ளலாம். வானம் முழுவதும் அலச வேண்டிய தேவையில்லை. பிறை நேர் மேற்கில் தெரியுமா? அல்லது மேற்கிலிருந்து தெற்காக சாய்ந்து தென்மேற்கில் தெரியுமா? அல்லது மேற்கிலிருந்து தெற்காக சாய்ந்து தென்மேற்கில் தெரியுமா? அல்லது மேற்கிலிருந்து வடக்காகச் சாய்ந்து வடமேற்கில் தெரியுமா? என்பதையும் இந்த மென்பொருள் தெளிவாகக் காட்டிவிடும்.

குறிப்பு: இந்த மென்பொருள் உங்கள் மொபைலில் இயங்குவதற்கு accelerometer வசதி மட்டும் இருந்தால் போதாது. உங்களுடையடைய மொபைலில் காம்பஸ் சென்ஸார் வசதி இருக்க வேண்டும். அந்த வசதி இல்லையானால் இந்த மென்பொருளைப் பயன்படுத்த முடியாது. கிப்லா காட்டி தொடர்பான எந்த மென்பொருளும் இயங்காது. உங்கள் மொபைலில் கிப்லா காம்பஸ் செயல்பட்டால் இந்த மென்பொருளும் இயங்கும்.

No comments:

Post a Comment